கட்டுரை, அரசியல், சர்வதேசம் 4 நிமிட வாசிப்பு

இந்தப் பேரவலத்தில் இஸ்ரேலின் பங்கு என்ன?

டேவிட் ஷுல்மன்
29 Oct 2023, 5:00 am
0

ஸ்ரேல் பல போர்களையும் சந்தித்து, தாக்குப்பிடித்து எழுந்துவந்திருக்கிறது. 1948ஆம் ஆண்டு நடந்த போரில் இஸ்ரேலின் யூத மக்கள்தொகையில் ஒரு சதவீதத்தினர் கொல்லப்பட்டனர். ஆனால், அது உட்பட இஸ்ரேல் எதிர்கொண்ட எந்தப் போருமே கடந்த சில வாரங்களாக நாம் கண்டுவரும் அளவுக்குக் கொடுரமானவையோ கோரமானவையோ அல்ல.

ஹமாஸ் தனது உண்மையான நிறத்தைக் காட்டிவிட்டது (அதில் துளியளவுகூட ஐயம் இருந்ததில்லை): கொலைவெறி பிடித்த பயங்கரவாத அமைப்பு அது; இஸ்லாமிய மரபையே மூர்க்கமான வகையில் கேலிக்கூத்தாக்கும் அமைப்பு; மிக மோசமான, கிறுக்குத்தனமான அடிப்படைவாதத்தால் உந்தப்பட்டவர்களால் நடத்தப்படுவது. ஒரே நாளில் 1,500 இஸ்ரேலியர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள்.

கொல்லப்பட்டவர்களில் குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள், ராணுவத்தினர், காவல் துறையினர் என்று எல்லாத் தரப்பினரும் அடங்குவார்கள். இதுதான் ஹமாஸின் இலக்கு, அந்த இலக்கை அடைவதில் ஹமாஸ் அமைப்பினர் தங்கள் கனவில்கூட நினைத்துப் பார்த்திராத வெற்றியை அடைந்திருக்கின்றனர். சொல்வதற்கு வேறென்ன மிச்சமிருக்கிறது?   

ஆக்கிரமிப்பு தேசியவாதம்

ஆனால், இந்தப் படுகொலைகள் நிகழ்வதற்கு இஸ்ரேல் எப்படி அனுமதித்தது என்பதைப் பற்றியும், இதற்கான பொறுப்பு யாருடையது என்பதைப் பற்றியும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. இஸ்ரேலியர்களின் சிந்தனை முறையையும், அரசின் கொள்கை உருவாக்கத்தையும் கடந்த பல தசாப்தங்களாக ஆக்கிரமித்துவந்த ஒட்டுமொத்த கோட்பாட்டுச் சட்டகமானது எவ்வளவு ஆபத்தானது, எவ்வளவு பொய்யானது என்பதெல்லாம் திரும்பத் திரும்ப அம்பலமாகியிருக்கிறது.

உயிர் வாழ்வதற்குத் தேவையான மிகக் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளை மட்டும் கொண்ட திறந்தவெளிச் சிறைகளில் 25 லட்சம் மக்களைப் பல ஆண்டுகளாக அடைத்துவைத்துவிட்டு அவர்கள் சாதுவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், தற்போதைய பிரச்சினையின் அடிப்படையாக இருப்பதோ மிக மிக மோசமான தார்மீகத் தோல்வி ஒன்றுதான். உண்மையில் இஸ்ரேல் என்னும் நாடு மிக மோசமான வகையில் ஒரு தற்கொலையை நோக்கிப் போய்விட்டிருக்கிறது.      

ஒரு பக்கம் என்னவென்றால், குடியேறிகளான அதிதீவிர தேசியவாதிகளும் யூத ஆதிக்க உணர்வாளர்களும் தங்கள் ஆக்கிரமிப்பு லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ளும் நோக்கத்தில் இஸ்ரேல் அரசை வெற்றிகரமாகக் கையகப்படுத்திக்கொண்டுவிட்டார்கள். இன்னொரு பக்கம் என்னவென்றால், நீதிமன்றம் உள்ளிட்ட இஸ்ரேல் ஜனநாயகத்தின் அடிப்படையான அமைப்புகளின் அதிகாரத்தை செல்லரிக்கச் செய்துவிட்ட ஒரு பிரதமரை நாங்கள் பெற்றிருக்கிறோம். அது மட்டுமல்லாமல் இஸ்ரேல் என்ற நாடு உருவானதிலிருந்தே அதன் அடிப்படைகளாக இருந்த பண்டைக் கால யூதர்களின் மனிதநேய விழுமியங்களுக்கு முழுமுற்றாக அவர் துரோகம் இழைத்துவிட்டார்.

மேலும், ஜனநாயகத்துக்கு விரோதமான சட்டங்கள் மூலமாக நாட்டையே உள்நாட்டுப் போரின் விளிம்புக்கு நெதன்யாஹு தள்ளிவிட்டார். இட்டாமர் பென் க்விர் போன்ற வலதுசாரி அடிப்படைவாத கஹானிஸ்ட்டுகளுக்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை நெதன்யாஹு வழங்கியிருக்கிறார். பயங்கரமான குற்றவாளியான இட்டாமர் பென் க்விர் தற்போது அமைச்சராக இருக்கிறார். ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி உட்பட ஹரம்-அல்-சரீஃபைத் இஸ்ரேல் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென்று அவரைப் போன்றவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பிவருகிறார்கள்.

மத்தியகிழக்கு நாடுகளில் நிலவும் பிரச்சினைக்குரிய மோசமான சிந்தனைகளைப் போன்றதுதான் இதுவும்; இஸ்ரேலுக்குள் சில நாட்களுக்கு முன் புகுந்த ஹமாஸ் கொலைகாரர்களும் “அல்-அக்ஸாவைக் காப்பாற்றுவோம்” என்ற கோஷத்துடன்தான் எல்லையைக் கடந்தார்கள்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

ஹமாஸின் வெறியாட்டம்

தற்போதைய தீவிர வலதுசாரி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடந்த 9 மாதங்களாக நாம் காண்பது, இப்போது காசா எல்லையில் பூதாகரமாகியிருப்பது எல்லாம் வேறொன்றுமில்லை; உள்நாட்டுப் பிரச்சினைகளிலும், மிக மோசமான திமிரிலும், ஆழமான தார்மீக வீழ்ச்சியிலும் இஸ்ரேல் அரசு சிக்கிக்கொண்டு செயலிழந்ததன் விளைவுதான். ஹமாஸ் ஒரு பெரிய பயங்கரவாதத் தாக்குதலுக்காகத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது என்று எகிப்து எச்சரிக்கை விடுத்தது.

ஆனால், ஆளும் சித்தாந்தத்துக்கு விசுவாசமாக உள்ள ராணுவமும் உளவு அமைப்புகளும் அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தத் தவறிவிட்டன. மேற்குக் கரையின் ஆக்கிரமிப்பாளர்களுக்காகக் காவல் சேவை செய்வதிலேயே ராணுவம் பல ஆண்டுகளை வீணடித்துவிட்டது. காசா எல்லைதான் மிகக் குறைவான ராணுவ வீரர்கள் எல்லைக் காவல் செய்யும் (மிக முக்கியமான) சில இடங்களுள் ஒன்று.

தாக்குதல் தொடங்கியவுடன் பெரும்பாலான ராணுவ வீரர்களும் காவல் துறையினரும் தங்கள் தலைமை இடங்களிலும் நிலைகளிலும் கொல்லப்பட்டனர்; பலவீனமான நிலையில் இருந்தாலும் சிலர் மட்டுமே தாக்குப்பிடித்துச் சண்டையிட்டனர்; காசாவுக்கு அருகே தங்கள் நிலைகளைப் பலப்படுத்துவதற்கு ராணுவத்துக்குப் பல மணி நேரம் ஆகிவிட்டது. அதற்குள் நூற்றுக்கணக்கான ஹமாஸ் பயங்கரவாதிகள் எந்தத் தடையுமின்றித் தங்கள் ரத்தவெறியாட்டத்தை நிகழ்த்திவிட்டிருந்தார்கள்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

பாலஸ்தீனத்தை ஏன் கைவிடுகிறீர்கள்?

கார்த்திக் வேலு 21 Oct 2023

இது எல்லாமே 1973ஆம் ஆண்டின் யாம் கிப்பூர் போரை நினைவுபடுத்தியது வருத்தத்துக்குரியது. அந்தப் போரில் இஸ்ரேல் எதிர்பார்க்காத நேரத்தில் அதன் மீது எகிப்தும் சிரியாவும் போர் தொடுத்தன. அரசியல் தீர்வை நோக்கி எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை என்றால் நிச்சயம் போர் ஏற்படும் என்று அதற்கு முன்பு எகிப்து அதிபர் அன்வர் சாதத் எச்சரித்திருந்தார். அமைதி ஏற்பட வேண்டும் என்பதை உளப்பூர்வமாக விரும்பியவர் அவர்.

இஸ்ரேலின் தார்மீக வீழ்ச்சி       

திரும்பவும் அங்கேதான் வந்து நிற்கிறோம் நாம். இது ஏற்கெனவே நிகழ்ந்திருக்கிறதே என்பது போன்ற உணர்வு இஸ்ரேல் வரலாற்றுக்கு ஒன்றும் புதியதல்ல. இஸ்ரேல் உருவாக்கத்துக்கு முன்பிருந்தே அதைக் காணலாம். அப்போதும்கூட பாலஸ்தீனர்களின் உரிமைகளையோ பாலஸ்தீன மக்கள் இருக்கிறார்கள் என்பதையோ அப்போதைய ஸியோனிஸ்ட்டுகள் சற்றும் பொருட்படுத்தவே இல்லை.

நெதன்யாஹு, பாலஸ்தீன தேசிய இயக்கத்தை எளிதில் அழித்துவிட முடியும் என்றும் பாலஸ்தீனர்களை ஒடுக்கியோ ஆக்கிரமித்தோ, ஒருவேளை நாட்டிலிருந்து வெளியேற்றியோவிடலாம் என்று நம்பும் முதல் நபரும் இல்லை, கடைசி நபராக இருக்கப்போவதும் இல்லை. ஆனால், பாலஸ்தீனப் பிரச்சினைக்குச் சரியான தீர்வோ, ஆக்கிரமிப்புக்கு முடிவுகட்டும் நடவடிக்கையோ இல்லாமல் அமைதி என்ற பேச்சுக்கே இடமில்லை.

தனது தவறான லட்சியத்துக்கும் அதனால் ஏற்படப்போகும் நீண்ட கால விளைவுகளுக்கும் நெதன்யாஹுதான் முழுப் பொறுப்பு. ஏற்பட்டுள்ள நாசமும் தார்மீக வீழ்ச்சியும் இஸ்ரேலை அழிவை நோக்கித் தள்ளிவிட்டிருக்கின்றன. இதுதான் தன்னுடைய ஒரே சாதனை என்பதை ஒப்புக்கொள்ளும் நேர்மை நெதன்யாஹுவிடம் கிடையாது. 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

இஸ்ரேல்: இஸ்லாமும் பாலஸ்தீனமும்

கார்த்திக் வேலு 19 Oct 2023

ஹமாஸை அழிப்பதற்காக காசாவில் ஊடுருவப்போகிறது இஸ்ரேல். இதை ராணுவரீதியிலும், ஒரு அரசு என்கிற முறையிலும் இஸ்ரேல் திட்டமிட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும் அல்-கொய்தாவுக்கும் எதிராக அமெரிக்கா வெற்றிகரமாக மேற்கொண்ட நடவடிக்கைகளைப் போன்றது இது. ஹமாஸும் அந்த அமைப்புகளைப் போன்றே படுபயங்கரமானதுதான். ஹமாஸை அழிப்பதில் இஸ்ரேல் வெற்றிபெறுமா என்று சொல்ல முடியாது. ஆனால், மிகப் பெரிய போர் ஒன்று, குறிப்பாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புடன், வெடிப்பதற்கான சாத்தியங்கள் உண்டு என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியான சூழலை உருவாக்குவதற்காக பாலஸ்தீன தேசிய இயக்கத்துடனும் சமாதானம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஞானம் இஸ்ரேலுக்கு எப்போதாவது ஏற்படுமா? அது குறித்த நம்பிக்கை எனக்குக் கொஞ்சமாவது இருக்கத்தான் செய்கிறது; ஆனால், அதை என் வாழ்நாளுக்குள் காண்பேனா என்பதுதான் தெரியவில்லை.

- 'Déjà Vu in Israel', The New York Review of Books, October 11, 2023. Copyright @ 2023 David Shulman

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

இஸ்ரேல்: யூதர்களைப் புரிந்துகொள்ளல்
இஸ்ரேல்: கிறிஸ்துவத்தின் எழுச்சியும் யூதத்தின் சரிவும்
இஸ்ரேல்: இஸ்லாமும் பாலஸ்தீனமும்
பாலஸ்தீனம்: காலனியம் பற்ற வைத்த நெருப்பு
பாலஸ்தீனத்தை ஏன் கைவிடுகிறீர்கள்?
இஸ்ரேல் - பாலஸ்தீனம்.. அடுத்தது என்ன? தாரிக் பகோனி பேட்டி

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
டேவிட் ஷுல்மன்

டேவிட் ஷுல்மன், இஸ்ரேலிய அறிஞர். ‘Tamil: A Biography’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதிச் செயல்பாட்டாளர்.

தமிழில்: ஆசை

2


வாழ்வியல்ஜே.பி.நட்டாகருத்து வேறுபாடுகள்ராஜன் குறை கிருஷ்ணன் உதயநிதி ஸ்டாலின் கட்டுரைமருந்துஇத்தாலிசங்கிகள்வளர்ச்சிக்கு அல்லவழக்கொழிந்து போன வர்ண தர்மமும்கே.அண்ணாமலைதேர்தல் வரலாறுயூதர்கள்பட்டியல்வழிபாட்டுத் தலம் அல்லஒகேனக்கல்ட்ரம்ப்பூதம்பாடிசாவர்க்கரின் இந்து மதச் சீர்திருத்த எண்ணங்கள்குப்பைசுளுக்கிகாந்தி எழுத்துகள் தொகுப்புதன்பாத்கல்வி: ஒரு முடிவில்லா பயணம்திட்ட அனுமதிதேர்தல் நிதி நன்கொடைப் பத்திரம்சாதிவெறிஐஏஎஸ் பணிவிதிகளில் திருத்தம்ஆவணம்மணவை முஸ்தபா: இறுதி மூச்சுவரை தமிழ்ப் பற்றாளர்!ஸ்மிருதி இராணி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!