கட்டுரை, அரசியல், கலாச்சாரம், வரலாறு, சர்வதேசம் 5 நிமிட வாசிப்பு

இஸ்ரேல்: இஸ்லாமும் பாலஸ்தீனமும்

கார்த்திக் வேலு
19 Oct 2023, 5:00 am
1

லகின் பெரிய விவகாரங்களில் ஒன்று இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல். இந்தப் பிரச்சினையின் ஆணி வேர் என்ன?  எப்போது இது ஆரம்பித்தது? எதை நோக்கி இது செல்லும்? இந்த விவகாரத்தைப் பின்னின்று இயக்கும் கரங்கள் எவை? இந்த வரலாற்றை ஐந்து அத்தியாயங்கள் கொண்ட தொடராக ‘அருஞ்சொல்’ வெளியிடுகிறது. ஒவ்வொரு கட்டுரையையும் தனித்த விஷயங்களில் கவனம் குவிக்கின்றன என்பதால், இந்தக் கட்டுரைகளைத் தனித்தும் வாசிக்கலாம்; தொடராகவும் வாசிக்கலாம். 

ன்று இருக்கும் பாலஸ்தீனத்தை உருவாக்கிய விசை கிழக்கே அரேபிய தீபகற்பத்தில் ஆரம்பிக்கிறது. அரேபிய பாலை நிலப்பகுதி பெரிதும் நாடோடி இனக் குழுக்களின் (Bedouins) நிலப்பரப்பாக இருந்தது. ஆங்காங்கே இருக்கும் பாலைவனச் சுனைகளைத் தவிர வேறெங்கும் நிலையான விவசாயம் செய்து பெருந்திரளாக ஓரிடத்தில் வாழும் வாய்ப்பற்றச் சூழல். 

எனவே, ரத்த உறவு கொண்ட நெருக்கமான இனக் குழுவாக (Clan) திரள்வதே அந்தச் சூழலுக்குப் பொருத்தமான சமூக அமைப்பாக இருந்தது. இந்த இனக் குழு அமைப்பு, அவற்றுக்கு இடையேயான உறவுகள், வழக்கங்கள், பூசல்கள் இவை அரேபிய சமூக, அரசியல் மற்றும் மத உருவாக்கத்தில் பெரும் செல்வாக்கை செலுத்தியது. 

இஸ்லாமின் விளைநிலம்

அரேபியாவில் இஸ்லாம் உருவாவதற்கு முன்னர் பல்வேறு பல்லிறை வழிபாட்டு முறைகள் புழக்கத்தில் இருந்தன. ஒவ்வொரு இனக் குழுவும் அவர்களுக்கான கடவுளைக் கொண்டிருந்தனர். நபிகளுக்கு முந்தைய காலகட்டத்தில் இன்று இஸ்லாமியரின் மிகப் புனிதமான இடமாகக் கருதப்படும் காபாவில் சிலை வழிபாடு நடந்திருக்கிறது. இஸ்லாம் உருவாவதற்கு முன்பே அரேபிய பகுதிக்கு யூதர்களும், கிறிஸ்துவர்களும் புலம்பெயர்ந்திருக்கிறார்கள்.

இந்தப் பின்னணியில்தான் ஏழாம் நூற்றாண்டு வாக்கில் இஸ்லாம் ஒரு புதிய மதமாக அரேபிய பகுதியில் உருவானது. இஸ்லாம் உருவாவதற்கு முன் அரேபிய பகுதிகளில் அரசு, தேசம் போன்ற கட்டமைப்புகள் பூரண பரிணாமம் கொண்டிருக்கவில்லை. பல்வேறு குடிகளுக்கு இடையே உள்ள குடும்ப உறவுகளும், குடி வழக்கங்களுமே எழுதப்படாத விதிகளாக இருந்தன. நிலையான குடிகள் வாழ்ந்த மெக்கா, மதீனா போன்ற நகர்நாடுகள் இருந்தாலும் ஒட்டுமொத்த மைய அரசு, மைய நிர்வாகம் அல்லது அதிகாரம் என்பது உருவாகவில்லை. 

முஹம்மது நபியின் காலத்துக்குப் பிறகு இஸ்லாமியர்கள் தங்களை வழிநடத்தும் மதத் தலைமையையும், அரசியல் தலைமையையும் ஒற்றைத் தலைமையாக இருக்குமாறு அமைத்துக்கொண்டார்கள். இப்படி அமைந்த அரசுகளைக் ‘காலிஃபேட்’ (Caliphate) என்று குறிப்பிட்டார்கள். 

இவ்வாறான இஸ்லாமிய அடையாளத்தின் கீழ் ஒருங்கிணைந்த மத - அரசமைப்பு அரேபியர்களுக்குப் பெரும் வரப் பிரசாதமாக அமைந்தது. தங்களுக்குள்ளே தொடர்ந்து பூசலிட்டுக்கொண்டிருந்த பல்வேறு நாடோடிக் குடிகளை மிகக் குறைந்த காலத்தில் ஒரு தேசமாகவும் மதக் குழுவாகவும் திரட்ட இந்த அமைப்பு உதவியது.  பல்வேறு குலங்களைச் சார்ந்த வீரர்களைத் தேவைப்படும்போது திரட்டு அணுகுமுறையில் இருந்து காலிஃபேட்டுக்கு என்று நிலையான ராணுவம் உருவானது இவ்வகையான அரசியல் - மத ஒருங்கிணைப்பு, பிற ஆபிரகாமிய மதங்களை ஒப்புநோக்க இஸ்லாமியர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. 

ரோமப் பேரரசின் வீழ்ச்சியில் இருந்து இஸ்லாமிய ஆக்கிரமிப்பு வரையிலாக சுமார் 300 ஆண்டுகள் லெவான்ட் பகுதி பைசாண்டைன் பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. நிர்வாக வசதி கருதி அதை மூன்று பாலஸ்தீனப் பிராந்தியங்களாக பிரித்து அடையாளப்படுத்தியிருந்தார்கள். இந்தக் காலகட்டத்தில் பாலஸ்தீனத்தில் பெரும்பான்மை கிறிஸ்துவர்கள்தான்.

லெவான்ட் பகுதியில், ரோம ராஜ்ஜியத்துக்குப் பிறகு மீண்டும் யூத அரசு அமையவே இல்லை. பாலைவனக் காற்றில் தொடர்ந்து வடிவம் மாறும் மணற்குன்றுகளைப் போல, வரலாற்றின் போக்கில் அரசியல், சமூக, மத யதார்த்தங்கள் மாறிக்கொண்டே இருந்திருக்கின்றன.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

இஸ்ரேல்: யூதர்களைப் புரிந்துகொள்ளல்

கார்த்திக் வேலு 17 Oct 2023

காலிபேஃட் 

முதலில் அரேபிய தீபகற்பம் முழுதும் இஸ்லாமிய காலிஃபேட் அமைப்பின் அதிகாரத்தின்  கீழ் வந்தது.  காலிஃபேட்டின் படைகள் மேலும் மேற்கே நகர்ந்து  பைசாண்டைன் பேரரசின் கீழ் இருந்த லெவான்ட் பகுதிகளையும் (சிரியா, பாலஸ்தீனம், எகிப்து) தனதாக்கிக்கொண்டன. புனித நகரமான  ஜெருசலேம்  முதன்முறையாக அரேபியர் கைவசம் வந்தது. முஹம்மது நபிக்குப் பிறகான காலகட்டத்தில் - நான்கே ஆண்டுகளில் ஜெருசலேம் இஸ்லாமிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது என்பது எப்படிப் பார்த்தாலும் சூறாவளியான ஒரு நிகழ்வுதான்.

புனித இடமான ஜெருசலேத்தில் இஸ்லாமிய மதத்தின் முத்திரையாக ‘டோம் ஆஃப் த ராக்’ (Dome of the Rock) எனப்படும் இஸ்லாமிய கும்மட்டத்தை அங்கு முன்னர் இடிக்கப்பட்ட யூத கோயிலின் சிதிகலங்களின் மேலே எழுப்புகிறார்கள்.  இன்று இஸ்ரேல் பிரச்சினையில் நாம் அடிக்கடி கேள்விப்படும் ‘அல் அக்ஸா’ மசூதியின் மத்தியில் இருக்கும் பொற்கூரை வேய்ந்த கும்மட்டம்தான் இது. மெக்கா மதீனாவுக்குப் பிறகு இஸ்லாமியர்களுக்கு மிகப் புனிதமாக இடமாக இது கருதப்படுகிறது.

இஸ்லாமிய அரசின் கீழ் பிற மதத்தினரிடம் மத வரி வசூலிக்கும் ‘ஜிசியா’ முறை அமலில் இருந்தது. என்றாலும், ஒப்புநோக்க பிற மதத்தினரைச் சகிப்புத்தன்மையுடனேயே நடத்தியிருக்கிறார்கள்.  இன்றிருக்கும் சூழலில் இதைப் சொல்வது முரண்நகையாக தோன்றலாம், ஆனால் இஸ்லாமிய காலிஃபேட் ஜெருசலேத்தைக் கைப்பற்றியது யூதர்களுக்கு அப்போது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகவே இருந்தது. ரோம மற்றும் பைசாண்டைன் அரசுகளின் காலகட்டத்தில் யூதர்கள் ஜெருசலேத்துக்கு உள்ளேயே வரக் கூடாது என்று கெடுபிடிகள் இருந்ததை நாம் இங்கு நினைவுகூரலாம்.

இஸ்ரேல் பகுதிக்கு பெருமளவு அரேபிய இஸ்லாமியர் குடியேற்றம் இந்தக் காலகட்டத்தில்தான் நிகழ்கிறது. இவர்களே பாலஸ்தீனத்தின் மையத் திரளான மக்களாக இன்றும் நீடிக்கிறார்கள். இந்தக் குடியேற்றங்கள் கிட்டத்தட்ட 1300 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவை. இதற்குள் ஐம்பது தலைமுறைகளாகவது கடந்திருக்கும். 

இந்தக் காலகட்டத்தில் இவர்கள் அங்கு ஏற்கெனவே இருந்துவந்த யூத, கிறிஸ்துவ, ரோம பண்பாடுகளோடு கலந்தும் உறவாடியும் தனித்துவமான கலாச்சார அடையாளத்தை அடைந்துவிட்டார்கள். அந்தப் பின்புலத்தில் இருந்தே பாலஸ்தீனம் இஸ்ரேலைப் போலவே தங்களுக்கான ஆதிநிலம் என்று உணர்கிறார்கள். எந்த வகையில் பார்த்தாலும் பாலஸ்தீனர்களும் அந்த மண்ணின் மைந்தர்கள்தான். 

இஸ்லாமிய காலிஃபேட் அதன் உச்சக்கட்டத்தில் கிட்டத்தட்ட ரோமப் பேரரசின் அளவுக்குப் பரந்து விரிந்திருந்தது.  இது முஹம்மது நபி அவர்கள் இறந்து நூறு ஆண்டுகளிலேயே நடந்த அதிசயம். இவ்விதமான அசுர வளர்ச்சியை எந்த மதமும் அதுவரை கொண்டிருக்கவில்லை. இந்த அசுர வளர்ச்சி ஏற்கெனவே பரவலாக கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய சமூகத்திற்கு அச்சம் அளிப்பதாக இருந்தது. கிறிஸ்துவர்கள் புனிதத் தலமான ஜெருசலேம் இஸ்லாமிய ஆளுகைக்குக் கீழ் போனது இதை மேலும் அதிகரித்தது. 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

புனிதப் போர் 

இஸ்லாமிய பரவல் குறித்த அச்சம் பதினோராம் நூற்றாண்டின் இறுதியில் உச்சத்தைத் தொட்டது போப் இரண்டாம் அர்பனின் வழிகாட்டலின் கீழ் மாபெரும் கிறிஸ்துவப் படை திரண்டது. ஜெருசலேமை நோக்கிய அவர்களின் பயணத்தை, புனிதப் பயணம் என்று சொல்லிக்கொண்டாலும் அது புனிதப் போர் என்ற போர்வையில் நிலங்களை அபகரிப்பதாகவே அமைந்தது.

முதலாம் புனிதப் போர் கிறிஸ்துவர்களுக்குச் சாதமாக அமைந்தது. ஜெருசேலத்தைக் கைபற்றினார்கள். ஜெருசலேம் கிறிஸ்துவ ராஜ்ஜியமாக மாறியது. ‘அல் அக்ஸா’, ‘டோம் ஆஃப் த ராக்’ (Dome of the Rock) போன்ற இஸ்லாமிய புனிதத் தலங்கள் கிறிஸ்துவ வழிபாடு நடக்கும் இடங்களாக மாறின.  கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் இவ்விதம் ஜெருசலேம் கிறிஸ்துவர்கள் கையில் இருந்தது.  சில ஆண்டுகள் இடைவெளியில் தொடர்ந்து இவ்வாறு பல கிறிஸ்துவ புனிதப் போர்கள் நடந்தன.  சுமார் 200 ஆண்டு இடைவெளியில் இவ்வாறாக 9 புனிதப் போர்கள் நடந்திருக்கின்றன.

அதன் பின் இஸ்லாமிய காலிஃபேட்டின் சார்பில் சலாதீன் கிறிஸ்துவ அக்கிரமிப்பாளர்களை வீழ்த்தி ஜெருசலேமை மீண்டும் இஸ்லாமிய ஆட்சியில் கீழ் கொண்டுவந்தார். ஆரம்பக் கட்டத்தில் ஜெருசலேமைக் காரணமாக வைத்து நடந்த இந்தப் புனிதப் போர்கள் பிற்காலத்தில் மிக நேரடியான இஸ்லாமிய ஆட்சியின் கீழ் உள்ள நிலத்தைக் கைப்பற்றும் குறிக்கோளை வைத்தே நடத்தப்பட்டன. 

இந்தப் புனிதப் போர்கள் மத நம்பிக்கை எப்படி ஓர் ஆயுதமாக பயன்படுத்த முடியும் என்பதை மிக அழுத்தமாக அடிக்கோடிட்டன.  கூடவே உலகளாவிய அரசியல் செல்வாக்கு என்பதை கிறிஸ்துவம், இஸ்லாம் என்று இரு எதிரெதிர் துருவங்களாக கட்டமைத்தது.  அந்தப் பிளவு இன்றுவரை தொடர்வதைப் பார்க்கிறோம்.

வெறுப்பும் அழிவும் 

ஒருபுறம் பாலஸ்தீனத்தில் மெல்ல இஸ்லாமிய வளர்ச்சி நடந்துகொண்டிருக்க ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கு ஏற்கெனவே புலம்பெயர்ந்து சிதறுண்ட யூதர்களை நோக்கி இன்னுமொரு புலப்பெயர்வும், அழிவும் அலையாக எழுந்துவந்தது.  14ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா முழுவதும் ‘கருப்பு மரணம்’ என்று சொல்லப்பட்ட கொடிய பிளேக் நோய் பரவியது. கொத்துக் கொத்தாக மக்கள் பூச்சிகளைப் போல செத்து விழுந்தார்கள். ஐரோப்பாவின் மக்கள்தொகையில் பாதியை இந்நோய் துடைத்து அழித்தது. 

இந்த நோய் பரவலுக்குக் காரணம் யூதர்களே, மேலும் கிறிஸ்துவர்களை அழிக்க, இஸ்லாமியர்களின் உத்தரவின் பேரில் குடிநீர் கிணறுகளில் விஷம் கலக்கிறார்கள் போன்ற வதந்திகள் வேகமாகப் பரவின.  இன்றைய வாட்ஸப் வதந்திகளுக்குச் சற்றும் சளைக்காத புரளிகள்.  யூத வெறுப்பு என்பது புதிய உச்சங்களைத் தொட்டது.  யூதர்களில் உடமைகள் அழிக்கப்பட்டன, தங்கள் வாழ்விடங்களைவிட்டு துரத்தப்பட்டனர். பலர் கொலையும் செய்யப்பட்டனர்.

பதினைந்தாம் நூற்றாண்டு வாக்கில் பிரான்ஸ், போர்ச்சுகல், ஸ்பெயின் போன்ற நாடுகள் அதிகாரப்பூர்வமாகவே யூதர்கள் கிறிஸ்துவத்துக்கு மதம் மாற வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணைகள் பிறப்பித்தன.  முதலில் மனிதர்கள் மதத்தை வடிவமைக்கிறார்கள், பின் மதம் மனிதர்களை வடிவமைக்க ஆரம்பிக்கிறது.  

இப்படி மீண்டும் வெளியேறிய யூதர்களுக்கு துருக்கியைச் சார்ந்த ஆட்டமன் பேரரசு அடைக்கலம் அளித்தது.  வரலாற்றில் இந்தப் புள்ளி வரை யூதர்களை ஓரளவு நல்லபடியாக நடத்தியது இஸ்லாமிய அரசுகளே என்பதைக் காணலாம்.  ஆச்சரியகரமாக ஐரோப்பாவில் யூதர்களுக்கு இன்னுமொரு அடைக்கலம் கிடைத்தது.  போலாந்து மற்றும் லித்துவேனிய நாடுகள் இணைந்த கூட்டமைப்பு யூதர்களை உவந்து ஏற்றுக்கொண்டது.  அவர்களுக்கு நிலம் வாங்கவும், மத வழக்கங்களைப் பின்பற்றவும் அனுமதி வழங்கியது. 

இந்தக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் யூதர்கள் போலாந்துக்குப் புலம்பெயர்ந்தார்கள்.  16, 17ஆம் நூற்றாண்டுகள் யூதர்கள் வரலாற்றின்  பொற்காலமாகப் பார்க்கப்படுகின்றன.

இதுவும் அதிக நாள் நீடிக்கவில்லை. பதினெட்டாம் நூற்றாண்டில் போலாந்துக்கும் உக்ரைனுக்கும் (உக்ரைன் அப்போது ரஷ்யாவின் பகுதி) நடந்த போரில் முன்னூறுக்கும் மேற்பட்ட யூத சமூகங்கள் அழிக்கப்பட்டன, ஆயிரக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டனர்.  இந்த யூத அழிப்பை ரஷ்ய மொழியில் ‘போக்ரோம்’ (Pogrom) என்கின்றனர்.  யூத அழிப்பைச் சுட்ட முதன்முதலாக பயன்பட்ட இந்தச் சொல்தான் இன்று உலகம் முழுதும் இன அழித்தொழிப்பைச் சுட்டும் பொதுவான சொல்லாக பயன்படுத்தப்படுகிறது.

சென்ற இடமெல்லாம் ஏதாவது ஒரு வகையில் ஒடுக்குமுறையும் வெறுப்பு அவர்களைத் தொடர்ந்துகொண்டே வந்திருக்கிறது.  வரலாற்றில் ஏதோ ஒரு காரணத்தின் பொருட்டு உருவாகும் வெறுப்பு, பின் காரணங்களே இல்லாமல் நுரை போல பெருகிறது.

அமெரிக்கா னும் கனவுலகம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் புத்துலகமான அமெரிக்கா, உலகெங்கிலும் புதிய வாழ்வைத் தேடி வருபவர்களுக்கு ஒரு கனவுலகமாக இருந்தது.  ஐரோப்பாவில் இருந்து பெருமளவு மக்கள் அமெரிக்காவுக்குக் குடியேறினார்கள்.  யூதர்களுக்கு இது கடவுளே அளித்த வாய்ப்பாக வந்து சேர்ந்தது.  1920 வரையான காலகட்டத்தில் உலகெங்கிலும் இருந்து கிட்டத்தட்ட 25 லட்சம் யூதர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். 

இன்று உலகில் உள்ள யூதர்களில் ஏறக்குறைய பாதிப் பேர் அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.  ஒருவகையில் அமெரிக்கா யூதர்களின் மற்றுமொரு ‘பிராமிஸ்டு லேண்ட்’ (Promised Land)ஆக மாறிவிட்டிருக்கிறது.  வரலாற்றில் யூதர்களுக்கு நிகழ்ந்த மிகப் பெரும் திருப்புமுனையாக இதைச் சொல்லலாம். 

இந்தக் காலகட்டத்தில்தான் தங்களுக்குத் தனியே ஒரு நாடு வேண்டும் என்ற எண்ணம் யூதர்களிடம் வலுப்பெற ஆரம்பிக்கிறது. இந்தக் கோரிக்கைக்கு மேற்கத்திய நாடுகளின் பரவலான ஆதரவும் கிடைக்கிறது. 

இருபதாம் நூற்றாண்டின் மனசாட்சி காலங்காலமாக ஒவ்வொரு நாடாக துரத்தி அடிக்கப்பட்ட யூதர்களுக்குத் தனி நாடு எனும் கோரிக்கை நியாயமானதே என்று கருதியது.  புதிய இஸ்ரேல் உருவானபோது அதை அமெரிக்கா, ரஷ்யா என்ற இரண்டு துருவங்களும் உடனடியாக அதை அங்கீகரித்தன. பெரும் உத்வேகத்துடன் புதிய உலகில் அடியெடுத்துவைத்தது இஸ்ரேல்!

(தொடந்து பேசுவோம்) 

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

இஸ்ரேல்: யூதர்களைப் புரிந்துகொள்ளல்
இஸ்ரேல்: கிறிஸ்துவத்தின் எழுச்சியும் யூதத்தின் சரிவும்
உக்ரைன்: நியாயங்களும் நிலைப்பாடுகளும்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கார்த்திக் வேலு

கார்த்திக் வேலு, எழுத்தாளர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசிக்கிறார். அரசுத் திட்டங்கள், வெளியுறவுத் துறை விவகாரங்கள் தொடர்பில் எழுதுகிறார். தொடர்புக்கு: writerkayvee@gmail.com


3

1





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Thiruvasagam   11 months ago

This article is awesome & informative, totally unbiased. As this so good, it wouldn't widespread attention. That's unfortunate. Still the writer shouldn't get fed-up. Kudos!

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

அண்ணனின் தூண்டிலைத் திருடிய அப்பாகரண் பாஷின் கட்டுரைஆண் பெண் உறவுச்சிக்கல்தம்பிக்கு கடிதம்ஊடகத் துறைகும்பல்தொழில்உயிரியல்ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்சஞ்சய் மிஸ்ரா: வெட்கமற்ற முன்னெடுப்புபிரேசில் பயங்கரவாதம்!அடக்கமான மனிதரின் மிதமான கணிப்புஅபயாசந்தையில் சுவிசேஷம்வரதட்சணைஅக்னி பாதைபாஜக உள்ளுக்குள் எதிர்கொள்ளும் எதிர்க்குரல்கள்அரசியல் தலைவர்அடுத்த தொகுப்புஅஜீத் பவார்ரத்தவெறிஎதிர்க் குரல்கள்மைக்ரேன்உலகமயமாக்கப்பட்ட வையகம்உறுதியான எதிரிடம்இளபுவ முகிலன் பேட்டிபிடிஆர் அருஞ்சொல் தமிழ்நாடு நவ் பேட்டிமோடியின் உத்தரவாதம்உயிர்மை நேயமே நம் சிந்தனை மரபு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!