கட்டுரை, அரசியல், இலக்கியம், சர்வதேசம் 5 நிமிட வாசிப்பு

பாலஸ்தீனம்: கடந்ததும் நடப்பதும்

ராமச்சந்திர குஹா
01 Feb 2024, 5:00 am
1

பெங்களூர் நகரின் பழைய புத்தகக் கடைகளில் புகுந்து ஆராய்ந்தபோது, ‘நவீன காலத்தில் நான் வாழ்ந்தபோது’ (When I Lived in Modern Times) என்ற ஆங்கில நாவல் கண்ணில் பட்டது. நாவலாசிரியர் லிண்டா கிராண்ட் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. இஸ்ரேலிய அரசு உருவாவதற்கு முன்னால், அந்தப் பிரதேசம் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்தபோது பாலஸ்தீனத்தில் கதை நடப்பதாக அந்த நாவல் எழுதப்பட்டிருந்தது. நாவலை வாசிக்க அதுவே போதுமானதாக இருந்தது.

பாலஸ்தீன விவகாரம் அன்றாடம் பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியாக வரும் இக்காலத்தில், அதன் முந்தைய காலம் பற்றிய தகவல்கள், உண்மைகளை ஓரளவு அறிய உதவும் என்று கருதியே வாங்கினேன்.

நாவல் என்னை ஏமாற்றிவிடவில்லை. பிரிட்டனில் பிறந்து வளர்ந்து, இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு புதிய யூத நாட்டுக்குத் தன்னால் என்ன செய்ய முடியும் என்ற ஆர்வத்தில் குடியேறிய எவிலின் செர்ட் என்ற பெண்ணின் கண்ணோட்டத்தில் நாவல் எழுதப்பட்டிருக்கிறது. எவிலின்தான் கதை சொல்லி. கிபுட்ஸ் என்று அழைக்கப்படும் யூதர்களின் விவசாயக் கூட்டுப்பண்ணையில் அவர் கதை தொடங்குகிறது.

சோஷலிஸக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட ஒரு ரஷ்ய யூதர் அந்தப் பண்ணையில் அனைவர் மீதும் செல்வாக்குள்ளவராக இருக்கிறார். பாலஸ்தீன பாலைவனத்தை, வேளாண்மை பூத்துக்குலுங்கும் சோலை வனமாக மாற்ற வேண்டும் என்ற தீவிரம் அவரைத் தொற்றிக்கொண்டிருந்தது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

பாலஸ்தீன வளம்

அவர் அங்கு குடியேறுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, அங்கு வாழும் பாலஸ்தீனர்கள் மீது அவருக்கு கோபமும் வெறுப்பும் ஏற்பட்டது. ‘இந்தப் பகுதியின் ஆட்சிப் பொறுப்பிலிருந்து பிரிட்டிஷார் விலகி, நாம் இதைக் கிருபையுடன் ஆளத் தொடங்கினால், பழங்குடிகளாக இன்னும் பழைய சிந்தனைகளிலேயே ஊறிக்கிடக்கும் இந்தப் பாலஸ்தீனர்கள் எழுச்சி பெற்று நவீன சிந்தனைக்கு மாறுவார்கள். அப்படி இல்லாவிட்டால் அவர்கள் இந்த இடத்தைவிட்டே போக நேரும். நிச்சயமாக அவர்களுக்கு நம்மைச் சுற்றி விரிந்து பரந்த இந்த அரபுப் பிரதேசத்தில் வாழ்வதற்கென்று இடமிருக்கும் அல்லவா? இந்த நிலங்களுக்கு நாம் அவர்களுக்குப் பணம் கொடுத்துத்தான் வாங்கியிருக்கிறோம், அவர்கள் நேரடியாக இல்லாவிட்டாலும் அவர்களை ஆளும், ஆண்டைகள் இந்த நிலங்களை நமக்கு விற்றிருக்கிறார்கள். நாம் அவர்களை ஏமாற்றிவிடவில்லை, நல்ல விலை கொடுத்துத்தான் வாங்கியிருக்கிறோம். இந்த இடத்தில் எதுவும் விளையாமல் இதைப் பாழடித்தது அவர்கள்தான் - நாம் அல்ல; அவர்கள் இங்கே எத்தனை ஆண்டுகளாக வாழ்ந்திருப்பார்கள், ஒரு நூற்றாண்டு இருக்குமா? எப்படி வைத்திருந்தார்கள் இந்த நிலத்தை – ஒரு புல் பூண்டுகூட விளையாமல்? இருபதே ஆண்டுகளில் இந்த பூமியை நாம் எப்படி மாற்றியிருக்கிறோம்? ஏன்? காரணம் நம்முடைய நம்பிக்கை - நாம் எதிர்காலம் தொடர்பாக நம்பிக்கையுடன் வாழ்கிறோம்’.

லிண்டா கிராண்ட் 

இந்த வரிகளைப் படித்ததும் யூத மெய்யியலாளர் மார்ட்டின் பீபர் மகாத்மா காந்திக்கு 1938இல் எழுதிய கடிதத்தில் இடம்பெற்ற வாசகங்களும் இதே கருத்தையே எதிரொலித்தது நினைவுக்கு வந்தது. நாவலில் வரும் கதாபாத்திரமான யூத இனப் பெருமை கொண்ட ரஷ்யரைப் போல அல்லாமல், யூதர்களும் அராபியர்களும் சமரசமாக வாழ வேண்டும் என்று மார்ட்டின் பீபர் நம்பினார். யூதர்கள் அராபியர்களுக்கு ஆசான்களாக இருந்து வழிகாட்ட வேண்டும் என்றார்.

பாலஸ்தீனத்தில் விவசாய சாகுபடி முறைகள் இன்னமும் கற்காலத்திலேயே இருப்பதாகக் குறை கூறிய அவர், அராபியர்களுக்கு நாகரிகம் கற்றுத் தரவும் எல்லா துறைகளிலும் அங்கு நவீனம் பின்பற்றப்பட்டு முன்னேற்றம் ஏற்படவும் யூதர்கள் அவசியம் என்றார். “பாலஸ்தீன மண்ணைக் கேளுங்கள் 1300 ஆண்டுகளாக அராபியர்கள் அது வளம் பெற என்ன செய்தார்கள், ஐம்பதாண்டுகளில் நாங்கள் என்ன செய்தோம் என்று; பாலஸ்தீன நில மகளின் பதிலே இந்த மண்ணுக்கு உரியவர்கள் யார் என்பதற்குச் சான்றிதழாக இருக்காதா?” என்று கேட்கிறார் பீபர்.

பாலஸ்தீனத்தில் வாழும் அராபியர்கள் உழைப்பதில், நவீனத் தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் தங்களைவிட ஆற்றல் குறைவான இனத்தவர் என்றே கருதினார். “இந்த நிலம் எங்களை அங்கீகரித்துவிட்டது. யூத விவசாயிகள் தங்களுடைய சகோதரர்களான அராபிய விவசாயிகளுக்கு நிலத்தை மேலும் தீவிரமாக சாகுபடிக்குத் தயார்செய்வது எப்படி என்று கற்றுத் தந்துகொண்டிருக்கிறார்கள். இதைப் போல மேலும் பலவற்றை அவர்களுக்குக் கற்றுத் தர விரும்புகிறோம்” என்றே காந்தியிடம் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் பீபர்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

விதிகளே இல்லாத போர்கள்

ப.சிதம்பரம் 30 Oct 2023

யாருக்கு அதிகாரம்

லிண்டா கிராண்டின் நாவலில் வரும் கதாபாத்திரம், கிபுட்ஸ் வாழ்க்கை முறையால் மிகவும் களைத்துவிடுகிறார்; ஜெர்மானிய பவ்ஹாஸ் கட்டிடக் கலை பாணியில் உருவாக்கப்பட்ட இஸ்ரேலியத் தலைநகரமான டெல் அவிவ் செல்ல விரும்புகிறார். யூதர்களே அதிகம் வாழும் குடியிருப்பில் அடுக்ககம் ஒன்றில் வாடகைக்குக் குடியேறுகிறார்.

பெர்லினிலிருந்து வந்து அங்கு குடியேறிய திருமதி லின்ஸ் என்பவருடன் சிநேகம் வைத்துக்கொள்கிறார். “நம்முடைய இந்த யூத நகரத்தில் உலகிலேயே மிகச் சிறப்பாக படித்த ஆண்களும் பெண்களும் வசிக்கின்றனர் என்று திருமதி லின்ஸ் பெருமைபடப் பேசுகிறார். “நம்முடன் அறிவியலாளர்கள், வரலாற்றாசிரியர்கள், இசைவாணர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் என்று அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்குகிறவர்கள் வாழ்கிறார்கள். தெருவில் நாம் பார்க்கும் அராபியர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள், தர்பூசணி விற்கத்தான் அவர்களுக்குத் தெரியும். கல்வியிலும் ஆற்றலிலும் அனுபவத்திலும் - யூத இனத்தைவிட பல மடங்கு கீழே இருக்கும் அராபியர்கள், பெரும்பான்மை சமூகமாக இருக்கிறார்கள் என்பதற்காக நம்மை ஆளவும் அதிகாரம் செலுத்தவும் விட்டுவிட முடியுமா” என்று கேட்கிறார் திருமதி லின்ஸ்.

டெல் அவிவ் நகரில், ‘இர்குன்’ என்ற ஆயுதமேந்திய யூத வன்முறை கும்பலைச் சேர்ந்த ஓர் இளைஞனுடன் எவிலினுக்கு நட்பு ஏற்படுகிறது. அதற்குப் பிறகு கிங் டேவிட் ஹோட்டலில் இர்குன் கும்பல் நடத்திய வெடிகுண்டு வீச்சில் அப்பாவி யூதர்கள் பலரும் இறந்தது குறித்து அந்த இளைஞன் கவலையே படவில்லை, அங்கிருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளைக் கொல்லத்தான் வெடிகுண்டு வீசப்பட்டது, ஆனால் யூதர்களும் பலர் உடன் இறந்தனர்.

இதற்காக எவிலின் அந்த இளைஞனைக் கடிந்துகொள்கிறார். “இங்கே பார் எவிலின், வெடிகுண்டுகளைப் போல மாற்றத்தைக் கொண்டுவரும் சாதனம் ஏதுமில்லை. ஒரு நகரத்தைப் புதிதாக உருவாக்க வேண்டுமென்றால் அதைக் குண்டுவீச்சுக்கு இரையாக்கினால் போதும். எல்லாமே இடிந்து தரை மட்டமான பிறகு இடிபாடுகளை அள்ளிக் கொட்டிவிட்டு மீண்டும் புதிதாக வசதிபோல கட்டிக்கொள்ளலாம், குண்டு வீசப்பட்ட இடத்தில் உன் கற்பனைக்கேற்ப மாற்றங்களைக் கொண்டுவரலாம்” என்கிறான்.

மோதல்களின் கற்பனைக் காட்சிகள்

பாலஸ்தீனத்தில் ஓராண்டு இருந்த பிறகு மீண்டும் இங்கிலாந்துக்கு வந்து யூத இசைவாணரைத் திருமணம் செய்துகொண்டு இரு குழந்தைகளுக்குத் தாயாகிறாள் எவிலின். சில பத்தாண்டுகளுக்குப் பிறகு கணவர் இறந்துவிடுகிறார், மீண்டும் டெல் அவிவ் சென்று தன் இறுதிக் காலத்தை அங்கேயே கழிக்க முடிவெடுக்கிறார். முன்னர் அவருடைய பக்கத்து வீட்டில் குடியிருந்த திருமதி லின்ஸ் அங்கேயே வாழ்கிறார். இஸ்ரேலிய அரசும் இஸ்ரேலிய ராணுவமும் பாலஸ்தீனர்களை ஒடுக்குவதற்கு எதிராக அவர் பிரச்சாரம் செய்கிறார்.

இஸ்ரேலிய அரசு மற்றும் ராணுவத்தினரின் அட்டூழியங்கள் குறித்து லின்ஸ் கூறும்போது, எவிலினால் தாங்க முடியவில்லை, இப்படியெல்லாம் யாராவது செய்வார்களா என்ற கோபமே ஏற்படுகிறது, அதுவும் யூதர்கள் இப்படிச் செய்யவே கூடாது என்கிறாள். இதேபோன்ற கொடூரச் செயல்களைச் செய்யக்கூடியவர்கள்தான் பாலஸ்தீனர்கள் என்றாலும், சித்திரவதைகளால் மனிதர்களை மேம்படுத்திவிட முடியாது, ‘பிரிமோ லெவி’ (இத்தாலிய யூத எழுத்தாளர், விஞ்ஞானி) விதி விலக்கு என்கிறாள் எவிலின். 

புத்தகத்தின் கடைசி பாரா, லின்ஸும் எவிலினும் பார்த்த ஒரு நாடகத்துடன் முடிகிறது. ‘காசாவில் நம்முடைய ராணுவ வீரர்கள் செய்த அட்டூழியம்’ என்பது நாடகத்தின் தலைப்பு. அந்தப் பாராவின் அடுத்த வாக்கியம், ‘ஒரு காபிக் கடை மீது ஹமாஸ் குண்டு வீசுகிறது, அருகில் இருக்கும் ஜன்னல்கள் வழியாக கடையிலிருந்து கேக் துண்டுகள் சிதறி விழுகின்றன’ என்கிறது.

இந்த நாவல் 1990களில் எழுதப்பட்டிருக்கிறது. ஆஸ்லோ நகரில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் தோல்வியில் முடிந்தன, மேற்குக் கரையில் யூதக் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது, பாலஸ்தீனர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் அதிகரித்தன என்ற பின்னணியில் நாவல் வெளியாகியிருக்கிறது. எனவே, 1940களில் இந்த மோதல்கள் எப்படித் தொடங்கின என்று கற்பனையாக ஒரு காட்சியைச் சித்தரித்திருக்கிறார் லிண்டா கிராண்ட். இருவருக்குமான மோதல் கொடூரமான கட்டத்தை அடைந்துவிட்ட வேளையில், இந்த நாவலைப் படிப்பது உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.

தங்களைவிடத் தாழ்ந்த நிலையில் இருக்கும் அராபியர்களிடம் பச்சாத்தாபத்துடன் நடந்துகொள்வதாகக் கருதும் போக்கும், இஸ்ரேலிய வலதுசாரிகளின் வன்செயல்களை நியாயப்படுத்தும் பேச்சுகளும், இஸ்ரேலிய அரசு உருவான காலத்திலிருந்தே தொடங்குகின்றன. அதேசமயம், பிற இனங்கள் அனுபவித்திராத கொடுமைகளை யூதர்கள் அனுபவித்ததையும் நூல் விவரிக்கிறது. ஐரோப்பாவில் நிலவிய யூத விரோத உணர்வு, விஷவாயு மூலம் யூதர்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்ற ஹிட்லரின் வதை முகாம்கள், இஸ்ரேல் என்ற நாடு உருவானதும் அதை அழிக்க அதைச் சூழ்ந்திருந்த அரபு நாடுகள் நடத்திய கூட்டுப் படையெடுப்பு ஆகியவற்றையும் நூல் தொட்டுச் செல்கிறது.

புதிதாக உருவான இஸ்ரேல் மட்டுமே தங்களுக்குப் பாதுகாப்பான நாடு என்று நம்புவதால் அதை உயிரைக் கொடுத்தாவது காக்க வேண்டும் என்று யூதர்கள் நினைப்பதை நூல் உணர்த்துகிறது.

மோதல்களுக்கு யார் பொறுப்பு?

நாவலைப் படித்து முடித்ததும், பிரிட்டிஷ் இலக்கிய உலகில் அவரை எந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்று அறிய கூகுளில் தேடினேன். சமீப காலமாக நடந்துவரும் தாக்குதல்கள் தொடர்பாக கடந்த நவம்பரில்கூட கவலையுடன் அவர் எழுதிய கட்டுரையையும் படித்தேன். பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகப் பேசும் பிரபல பிரிட்டிஷ் எழுத்தாளர்கள், கலைஞர்களில் ஒருவர்கூட, இஸ்ரேலிய குடிமக்களை ஹமாஸ் தீவிரவாதிகள் கொன்றது குறித்தும் கொடுமைகள் செய்தது குறித்தும் கண்டித்துப் பேசவில்லையே என்று கோபத்தைவிட வருத்தம் தோயவே கட்டுரையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஹமாஸ் இயக்கத்தவர் செய்த பயங்கர அட்டூழியங்கள் குறித்தும் அதற்குப் பதிலடியாக நேதன்யாகு அரசு செய்த தாக்குதல்கள் குறித்தும், காசா நகரம் மீது குண்டுகளை வீசியதுடன் மக்களுக்கு உணவு, குடிநீர், மின்சாரம் கிடைக்காமல் துண்டித்தது குறித்தும் கண்டித்து தனது மன உளைச்சலைப் பதிவுசெய்திருக்கிறார். இஸ்ரேலிய வலதுசாரிகளின் எல்லையற்ற எதிர்ப்புணர்வுக்கும், ஹமாஸ் இயக்கத்தவர் எல்லாவற்றையும் நாசமாக்கிவிட வேண்டும் என்று விரும்புவதற்கும் இடைப்பட்ட நிலையைக் கண்டு சமாதானப்படுத்த பிரிட்டிஷ் வாழ் யூதர்களால் அரசியல் தீர்வு காண முடியவில்லையே என்று வருந்துகிறார். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வே இல்லை போலிருக்கிறது என்று விரக்தியாகப் பேசுகிறார்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வாய்ப்பு என்று ஏதேனும் இருந்தால் அதற்கான நடவடிக்கையை யூதரோ அராபியரோ அல்ல, இதைத் தோற்றுவித்த நாடுகள்தான் எடுக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன். ஒரு பிரிட்டிஷ் அதிகாரி கூறுவதாக நாவலில் ஒரு காட்சி வருகிறது: “தீர்வுக்காக அராபியர்களை நாடலாம் என்றால் அவர்களுக்கென்று வலுவான தலைமையோ அமைப்போ இல்லை; இதனாலேயே யூதர்களால் அவர்களை அடக்க முடிகிறது; நிலம் அராபியர்களுக்குச் சொந்தம், யூதர்கள் அங்கே சொந்த நலனுக்காகவே இருக்கின்றனர், அங்கே நம்மவர்கள் (யூதர்கள்) தொடர்ந்து வசிப்பது ஐரோப்பியர்களின் நலன்களுக்கு உகந்தாகவே இருக்கும்.”

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

பாலஸ்தீனத்தை ஏன் கைவிடுகிறீர்கள்?

கார்த்திக் வேலு 21 Oct 2023

யூதர்களுக்குப் பாலஸ்தீனத்தில் தேசிய இல்லம் உருவாக்கப்படும் என்று பால்ஃபோர் பிரகடனம் 1917இல் உறுதியளித்தது. இஸ்ரேல் தோன்றுவதற்கான பெரிய உத்வேகத்தை பிரிட்டிஷ் அரசுதான் முதலில் இப்படி அளித்தது. யூதர்களைத் தொடர்ந்து அழித்தும் சித்திரவதை செய்தும் தங்களுக்கென்று சுதந்திரமான நாடு தேவை என்ற உணர்வை யூதர்களிடையே ஜெர்மனி உருவாக்கியது. இஸ்ரேல் என்ற நாடு உருவான பிறகு அதிலும் குறிப்பாக 1967 போருக்குப் பிறகு யூதர்களுக்கு ஊக்குவிப்பாக ராணுவ, நிதி உதவிகளை வரம்பில்லாமல் அளிக்கத் தொடங்கியது அமெரிக்கா.

யூதர்களின் குடியிருப்பை அதிகரித்துக்கொண்டே செல்லும் இஸ்ரேலிய அரசின் செயல்களைக் கண்டுகொள்ளாமல் – அதேசமயம் – இஸ்ரேலைக் கண்டித்தோ அறிவுறுத்தும் வகையிலோ ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்படும் தீர்மானங்களை தனது ரத்து அதிகாரம் மூலம் (வீட்டோ) நிராகரித்தும் வருகிறது. பாலஸ்தீனத்தில் மோதல்களைத் தடுக்கவும் தீர்க்கவும் முடியாமல் தொடர்ந்து நீடிக்கும் நிலைக்கு யூதர்கள் அராபியர்களைவிட பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளே பொறுப்பு.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

விதிகளே இல்லாத போர்கள்
இந்தப் பேரவலத்தில் இஸ்ரேலின் பங்கு என்ன?
இஸ்ரேல் - பாலஸ்தீனம்.. அடுத்தது என்ன? தாரிக் பகோனி பேட்டி
பாலஸ்தீனத்தை ஏன் கைவிடுகிறீர்கள்?
பாலஸ்தீனம்: காலனியம் பற்ற வைத்த நெருப்பு
இஸ்ரேல்: இஸ்லாமும் பாலஸ்தீனமும்
இஸ்ரேல்: கிறிஸ்துவத்தின் எழுச்சியும் யூதத்தின் சரிவும்
இஸ்ரேல்: யூதர்களைப் புரிந்துகொள்ளல்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

4






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

அ.பி   8 months ago

வார்த்தைகள் /மொழிபெயர்ப்பு சற்று கடினமாக உள்ளது. எளிமையாக்கி இருக்கலாம்.. மற்றபடி அருமை.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

பண்டைய வரலாறுபோக்குவரத்துபாஜகவைத் தோற்கடிக்க மாய மந்திரம் தேவையில்லைதீமைவிடுதலைப் புலிகள்அறிவியலாளர்களின் அறிக்கைபொது விநியோகத் திட்டம்வேலைப் பட்டியல்துறை நிபுணர்கள்jawaharlal nehru tamilMinimum Support priceமாயக்கோட்டையின் கடவுள்தமிழுணர்வுவழிபாடுஅறம் போதித்தல்நவீன சீனாஎம்.என்.ஸ்ரீனிவாஸ்கருணாநிதி சமஸ்பாண்டியர்கள்மொழிவாரி மாநிலங்கள்ஆரோக்கிய பிளேட்இந்தியத்தன்மைசந்தேகங்களும்!மதுவிலக்குமுதலீடுகளைத் தடுப்பது எது?எம்.எஸ்.ஸ்வாமிநாதன்ஏர்லைன்ஸ்முதல் பதிப்பாளர்பல்லின் நிறம்சொவேட்டோ எழுச்சி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!