கட்டுரை, அரசியல், வரலாறு, சர்வதேசம் 5 நிமிட வாசிப்பு

பாலஸ்தீனம்: காலனியம் பற்ற வைத்த நெருப்பு

கார்த்திக் வேலு
20 Oct 2023, 5:00 am
0

லகின் பெரிய விவகாரங்களில் ஒன்று இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல். இந்தப் பிரச்சினையின் ஆணி வேர் என்ன?  எப்போது இது ஆரம்பித்தது? எதை நோக்கி இது செல்லும்? இந்த விவகாரத்தைப் பின்னின்று இயக்கும் கரங்கள் எவை? இந்த வரலாற்றை ஐந்து அத்தியாயங்கள் கொண்ட தொடராக ‘அருஞ்சொல்’ வெளியிடுகிறது. ஒவ்வொரு கட்டுரையையும் தனித்த விஷயங்களில் கவனம் குவிக்கின்றன என்பதால், இந்தக் கட்டுரைகளைத் தனித்தும் வாசிக்கலாம்; தொடராகவும் வாசிக்கலாம். 

தினைந்தாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தை ஐரோப்பாவின் இருண்ட காலம் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.  ஐரோப்பிய மக்கள்தொகையைப் பாதிக்குப் பாதி அழித்த பிளேக் நோய், பயனற்ற புனிதப் போர்கள், நிலப்பிரபுத்துவ உற்பத்தி அமைப்பின் கீழ் தடுமாறும் பொருளாதாரம் என்று நோய்மையான காலகட்டமாக அது இருந்தது.  இதற்குப் பிறகான 200-300 ஆண்டுகளின் காலகட்டம்தான் ஐரோப்பிய மறுமலர்ச்சி (Renaissance) காலமாக அடையாளப்படுத்தப்படுகிறது. 

கலை, இலக்கியம், கலாச்சாரம், அறிவியல், சிந்தனை எனப் பல துறைகளில் புதிய பாய்ச்சலை நிகழ்ந்தது. மைக்கல் ஏஞ்சலோ, டாவின்சி, ஷேக்ஸ்பியர், மில்டன், கலிலீயோ போன்ற ஆளுமைகள் எல்லாம் இந்தக் காலகட்டத்தவர்களே. 

வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் பசிலிகா உட்பட இன்று ஐரோப்பாவில் கம்பீரமாக நிற்கும் பல ரோமன் பாணி கட்டிடங்கள் இந்தக் காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவைதான்.  இந்த மறுமலர்ச்சி அலையின் இயல்பான அடுத்த கட்டமாக காலனியாதிக்கம் நிகழ்ந்தது. 

தேசியவாதத்தின் நிலைப்பாடு

அதிகாரத்தைக் கையாளும் இடத்திலிருந்து மதம் ஒரு அடி பின்னே நகர்ந்துகொள்ள, அந்த இடத்தை வணிகம், தொழில்நுட்பம், நிர்வாகம் போன்ற திறன்களைக் கொண்டிருந்த காலனியாதிக்கம் பிடித்துக்கொண்டது.  உலகெங்கிலும் காலனிகள் உருவாக்கப்பட்டு, அங்கிருந்த செல்வங்கள் சுரண்டி எடுக்கப்பட்டு ஐரோப்பாவில் கொண்டுவந்து கொட்டப்பட்டன. 

பதினேழாம் நூற்றாண்டு ஐரோப்பாவை ஒப்புநோக்க இந்தியாவும், இஸ்லாமிய அரசுகளும் செல்வச் செழிப்பு கொண்ட நாடுகளாக இருந்தன.  இருநூறு ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறியது. 1900 வாக்கில் ஐரோப்பா அசைக்க முடியாத பொருளியல் மற்றும் அரசியல் சக்தியாக மாறிவிட்டிருந்தது.

இந்தக் காலகட்டத்தில் பாலஸ்தீனம் உள்ளிட்ட லெவான்ட் பகுதியும் அரேபிய தீபகற்பமும் ஆட்டமன் (துருக்கி) பேரரசின் கீழ் இருந்தன.  இந்தக் காலகட்டத்தில் பாலஸ்தீனம் பெரும்பான்மை இஸ்லாமிய நாடாகவே இருந்தது. மக்கள்தொகையில் 8% மட்டுமே யூதர்களாக இருந்ததை ஆட்டமன் ஆவணங்கள் சுட்டுகின்றன. 

காலனியாதிக்கத்தின் ஒடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் ஓர் எதிர்வினையாக தேசியவாத கருதுகோள் காலனிய நாடுகளில் பெரும் விசையுடன் எழுந்துவந்தது. அதாவது புவியியல், வரலாறு, பண்பாடு, மொழி போன்ற விஷயங்களில் தங்களை ஒரு தேசமாக (Nation) உணரும் மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ள ஓர் அரசாக (state) இருக்க வேண்டும் என்பதே தேசியவாதத்தின் நிலைப்பாடு. இந்த நவீன தேசியவாத கருதுகோள் என்பதே முதலில் ஐரோப்பாவில் உதித்த விஷயம் என்பது இங்கு ஒரு நகைமுரண்.

ஆட்டமன் பேரரசில் இந்தக் கோரிக்கை இரண்டு தரப்பில் இருந்தும் உருவாகிவருகிறது. ஒருபுறம் அரபு இஸ்லாமியர்கள் அனைத்து அரபு இனங்களையும் உள்ளடக்கிய ஓர் அரபு நாடு வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதேசமயம் உலகெங்கிலும் யூதர்களிடம் தங்களுக்கு என ஒரு தாய்நாடு வேண்டும் என்ற எண்ணம் (Zionism) மேலும் வலுப்பெற ஆரம்பிக்கிறது. 

நெடுங்காலமாக பேச்சில் மட்டுமே இருந்துவந்த இந்தக் கோரிக்கையை, முதலாம் உலகப் போர், நிறைவேறக்கூடிய கோரிக்கைதான் என்ற நம்பிக்கையை அளித்தது. 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

இஸ்ரேல்: யூதர்களைப் புரிந்துகொள்ளல்

கார்த்திக் வேலு 17 Oct 2023

பிரிட்டனின் திரைமறைவு பேரம்

முதலாம் உலகப் போரில் இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், ரஷ்யா ஓரணியாகத் திரளவே, ஜெர்மனி, ஆஸ்திரிய, ஆட்டமன் அரசுகள் எதிரணியாக திரண்டன. துருக்கியில் இருந்து பிரிந்து தனி தேசம் அமைத்திட வேண்டும் என்ற அரபிகளின் ஆசையை பிரிட்டன் ஆதரிப்பதாக ஒப்புக்கொண்டது.

துருக்கியர்களும், அரேபியர்களும் இஸ்லாமை பின்பற்றுவோர்தான் என்றாலும் வெவ்வேறு மொழி, கலாச்சாரம் மற்றும் மரபுவழியைக் (ancestry) கொண்டவர்கள். இருவருக்குமான விலக்கம் இன்றுமே தொடர்கிறது,

மற்றொருபுறம் யூத தேசியவாதிகளிடமும் யூதர்களுக்கு என்று ஒரு தனிநாடு உருவாக உதவுவோம் (Balfore Declaration,1917)  என்று எழுத்துப்பூர்வமாக வாக்களித்த அதேவேளையில் அரபு தேசியவாதிகளுக்கு அனைத்து அரபு நிலங்களையும் (Henry McMohan Pledge, 1916) திரும்ப அளிப்போம் என்றும் வாக்களித்தது. 

இந்த ஆவணங்களின்படி இரண்டு தரப்புமே பாலஸ்தீனம் தங்கள் வசம்தான் வரும் என்று எதிர்பார்த்திருக்கும்போது, பிரிட்டன் திரைமறைவில் முற்றிலும் வேறொரு பேரத்தை நிகழ்த்தியது. தனது கூட்டாளியான ஃப்ரான்ஸுடன் சேர்ந்துகொண்டு எப்படிப் போரில் வென்ற ஆட்டோமன் நிலங்களைப் பங்கிட்டுக்கொள்வது என்று ரகசிய உடன்படிக்கை பேசியது. இதேதான் இந்தியாவிலும் நடந்தது. 

முதலாம் உலகப் போரில் இந்தியா பிரிட்டனின் சார்பாக போராடினால் இந்தியாவுக்குச் சுய நிர்ணய உரிமை அளிப்போம் என்று வாக்களித்தார்கள்.  போர் முடிந்த பிறகு அந்த வாக்கு காற்றில் பறந்தது.  அதற்குப் பதிலாக போராட்டங்களை முடக்கும் ரவ்லட் சட்டம் கொண்டுவந்து மக்களை இன்னும் நெருக்கினார்கள்.  அது ஜாலியன் வாலாபாக் படுகொலையில் முடிந்தது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

பிரிட்டனின் குறிக்கோள்

பிரிட்டனுக்கு மத்திய கிழக்கை ஆளுவதைவிட தனது காலனியான இந்தியாவுக்குத் தங்கு தடையின்றி கப்பல் போக்குவரத்து நடப்பதை உறுதிசெய்வது மிக முக்கியமான குறிக்கோளாக இருந்தது இருந்தது.  அதற்கு சூயஸ் கால்வாய் வழி போக்குவரத்து இன்றியமையாததாக இருந்தது. சூயஸ் கால்வாய் வழி தடைபட்டால் இந்தியாவில் இருந்து இங்கிலாந்து போகும் தூரம் கிட்டத்தட்ட 9000 கிமீ அதிகரிக்கும், அதற்காகவே அது முதலில் எகிப்தை ஆட்டோமன் கட்டுப்பாட்டில் இருந்து தனது கட்டுப்பாட்டுக்குக் (Protectorate) கொண்டுவந்தது. 

எனவே, பிரிட்டனின் முதன்மையான குறிக்கோள் சூயஸ் கால்வாயைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்தல், அந்த வழியில் இருக்கும் துறைமுகங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்தல், மற்றும் எண்ணெய் வளம் கொண்ட பகுதிகளைத் (ஈராக்) தனதாக்கிக்கொள்ளல். இன்று உலகெங்கும் பரவி இருக்கும் ‘பீபி – பிரிட்டிஷ் பெட்ரோலியம்’ (BP - British Petroleum) நிறுவனம் உருவானதே ஈராக்கில்தான் என்பதில் இதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

அரபுத் தரப்பும், யூதத் தரப்பும் இந்தக் காலனியாதிக்க நாடுகளில் சுயநலப் போக்கில் குழப்படிகள் வந்துவிடும் என்று அஞ்சி அவர்களே நேரடியாக சந்தித்து ஓர் உடன்படிக்கை (Faisal-Weizmann Agreement) செய்துகொண்டனர். இந்த உடன்படிக்கையின்படி பாலஸ்தீனம் யூதர்களின் நாடாக இருக்கும் அது தவிர பிற அனைத்து இடங்களும் அரபு நாடாக இருக்கும்.

இரு நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்பை நல்கும் என்றிருந்தது. கண்களில் ஒத்திக்கொள்ளலாம் போலிருக்கும் உடன்படிக்கை இது. இந்த ஆவணத்தின்படி மட்டும் பிரிட்டன் நடந்திருந்தால், வாக்களித்ததுபோலவே அவரவருக்கு அவரவர் இடத்தை அளித்துவிட்டிருந்தால் இன்று இந்தப் பிரச்சினையின் வீரியம் வெகுவாக குறைந்திருக்கும். யூதர்களும் அரபிகளும் எப்படியோ ஓர் அரசியல் உடன்படிக்கைக்கு வந்திருப்பார்கள்.

மேண்டேட்

இதில் விதி அதன் போக்கில் நகர்ந்தது. முதலாம் உலகப் போருக்குப் பிறகு வென்ற நாடுகளை என்ன செய்வது என்று விவாதிக்க நடந்த பாரிஸ் அமைதி மாநாட்டில் எந்தப் பகுதி யார் அதிகாரத்தின் கீழ் வரும் என்பதைப் போரில் வென்ற நாடுகளே முடிவுசெய்தனர். இதில் அரபுத் தரப்போ, யூதர்கள் தரப்போ கருத்தில் கொள்ளப்படவில்லை. அதன்படி பாலஸ்தீனம், ஈராக், ஜோர்டன் பகுதிகள் பிரிட்டனின் கீழ் வந்தது (எண்ணெய் கிணறுகள், துறைமுகங்கள்) சிரியா, லெபனான் பகுதிகள் ஃபிரெஞ்சு நாட்டின் கீழ் வந்தது (ஃப்ரான்ஸுக்குச் சிரியாவுடன் ஏற்கெனவே நீண்ட வணிகப் பாரம்பரியம் உண்டு).

காலனியாதிக்க அரசுகள் போருக்கும் பின்னான இந்தத் தொடர் ஆக்கிரமிப்பை ‘மேண்டேட்’ (Mandate) என்று சொல்லிக்கொண்டார்கள். அதாவது, இந்தப் பகுதிகளை நாங்கள் ஆளவில்லை மாறாக இந்தப் பிரச்சினைகள் முடியும் வரை ஒரு ‘டிரஸ்டி’ போல நிர்வகிக்கிறோம் என்ற அணுகுமுறையை முன்வைத்தார்கள். அப்படி டிரஸ்டி என்ற பேரிலேயே பிரிட்டன் முப்பது ஆண்டுகாலம் தனது காலனியாதிக்கத்தை நீட்டித்துக்கொண்டது.  அதாவது, இந்தியா சுதந்திரம் பெறும் அவர்கள் கையைவிட்டுப் போகும் வரை. 

சரி அப்படித்தான் ஒரு டிரஸ்டியாக இருந்து பிரச்சினைகளுக்கு ஒரு சுமூகமான தீர்வை உருவாக்கினார்களா என்றால் அதுவும் இல்லை. பிரிட்டன் பாலஸ்தீன நிர்வாகத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பேல்ஃபோர் அறிக்கையின்படி உலகெங்கிலும் உள்ள இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனத்தில் குடியேற வழிவகுத்தது.  ஆனால், பாலஸ்தீனத்தில் வாழும் இஸ்லாமியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்று நிர்ணயித்தது. 

எண்பது சதவிகிதத்துக்கும் மேல் இஸ்லாமியர் வாழும் பாலஸ்தீனப் பகுதியில் அமையவிருக்கும் அரசில் தங்களுக்கு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை  இருக்காது என்ற சாத்தியம் இஸ்லாமியர்களிடம் பெரும் அதிருப்தியை உருவாக்கிறது. யூதர்களுக்கும் இஸ்லாமியர்களும் இடையே முதன்முறையாக அது நேரடி மோதலாக வெடித்தது. 

வெடித்த குற்ற உணர்வு

பிரிட்டனுக்குப் பாலஸ்தீன ‘மேண்டேட்’ (Mandate) கிடைத்தபோது அங்குள்ள மக்கள்தொகையில்  யூதர்கள் வெறும் 5%தான்.  ஆனால், அடுத்த இருபது ஆண்டுகளில் அது 30%ஆக அதிகரித்தது.  பாலஸ்தீன அரபிகளிடம் இது பெரும் அதிருப்தியை உருவாக்கியது.  தனி நாடு கிடைக்கவில்லை, இருக்கும் நாட்டிலும் பெருமளவு யூதக் குடியேற்றம், அவர்களுக்கான நிலம், பிற வசதிகள் என்று ஒரு தொடர் பதற்றத்தை உருவாக்கியது.

யூதக் குடியேற்றத்தைப் பிரிட்டன் மிகவும் பொறுப்பற்றுக் கையாண்டது. அதனால், இஸ்லாமியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே தொடர் மோதல்கள் உருவாகின.

தன் தவறை உணர்ந்த பிரிட்டன் யூதக் குடியேற்றத்தின் மீது கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்தது.  பாலஸ்தீனத்துக்குள் வரும் யூதர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.  இந்தக் குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய இஸ்ரேலிய குழுக்கள் வன்முறையில் இறங்கினர். அதற்குள் இரண்டாம் உலகப் போர்  ஆரம்பித்துவிட இவை அனைத்தைக் காட்டிலும் பெருங்கொடுமை அரங்கேறியது. 

ஹிட்லரின் கீழ் யூதர்கள் கொத்துக் கொத்தாக கொன்று ஒழிக்கப்பட்டனர். அமெரிக்கப் படைகள் தலையிட்டு ஹிட்லரை முடக்குவதற்குள் 60 லட்சம் யூதர்கள் அழிக்கப்பட்டிருந்தனர்.  மனிதன் இவ்வளவு கொடூரமானவனா என்று வரும் தலைமுறைகள் தொடர்ந்து கேள்வி எழுப்பிக்கொள்ளும் வண்ணம் நம் வரலாற்றில் மாபெரும் இன அழித்தொழிப்பு நடந்தேறியது.  இது ஒட்டுமொத்த ஐரோப்பியக் குற்ற உணர்வாக வடிவெடுத்தது. 

இந்த அழிவுக்குத் தப்பிவந்த யூதர்களை ஏற்பதைத் தவிர பாலஸ்தீனத்துக்கு வேறு வழி இருக்கவில்லை.  மீண்டும் யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் மோதல்கள் வெடித்தன.  நிலமை கைக்கு மீறிப்போவதை உணர்ந்த பிரிட்டன், பாலஸ்தீனத்தின் சிக்கை அவிழ்க்கும் வேலையைப் புதிதாக உருவாகியிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் (UN) கைகளில் ஒப்படைத்துவிட்டது. 

ஐக்கிய நாடுகள் சபையும் பாலஸ்தீனத்தை இரண்டு நாடுகளாகப் பிரிக்க முடிவெடுத்தது (Resolution 181)  – யூதர்களுக்கு இஸ்ரேல் , அரபிகளுக்குப் பாலஸ்தீனம் என்று.  இந்த முடிவை யூதர்கள் ஏற்றார்கள், ஆனால் அரபிகள் சார்பில் இது ஏற்கப்படவில்லை. 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

இஸ்ரேல்: இஸ்லாமும் பாலஸ்தீனமும்

கார்த்திக் வேலு 19 Oct 2023

சிக்கலான வரலாறு

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தத் திட்டம் ஏற்கப்பட்டதுமே பாலஸ்தீன யூதக் குழுக்களுக்கு இடையே உள்நாட்டுக் கலவரம் வெடித்தது.  சீக்கிரமே பிரிட்டனும் நாட்டைவிட்டு வெளியேறியது (1948).  பிரிட்டன் வெளியேறிய அடுத்த நாளே ஐக்கிய நாடுகள் சபை வகுத்த திட்டத்தின்படி இஸ்ரேல் தனக்கு அளிக்கப்பட்ட பகுதிகளைக் கையகப்படுத்திக்கொண்டு புதிய நாடாக அறிவித்துக்கொண்டது.  இந்த முடிவை ஏற்காத அரபு நாடுகள் அனைத்தும் இஸ்ரேலைத் தாக்க ஆரம்பித்தன. 

அன்று ஆரம்பித்த அரபு, இஸ்ரேல் தேசங்களுக்கான மோதல் போகப்போக அதிகரித்தபடிதான் போனது. யூதர்களுக்கு இது சுதந்திரப் போர், ஆனால் பாலஸ்தீனியர்களுக்கு இது பேரழிவு (Al-Nakba).  கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பாலஸ்தீன அகதிகள் சுற்றியுள்ள நாடுகளைக்கு அடைக்கலம் புகுந்தார்கள்.

இதுவரை நாம் கண்ட இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் சுருக்கமான வரலாறே எவ்வளவு சிக்கலானது என்று பார்த்தோம், ஆனால் அதை வெறும் காலனியாதிக்க தந்திரமாக பிரிட்டன் கருதியது சற்றும் பொறுப்பற்ற செயல். மூன்று குதிரைகளுக்கு ஒரே கேரட்டைக் காட்டி தனக்கு வேண்டிய காரியத்தை முடித்துக்கொண்டது.  துப்பாக்கி எங்கிருந்தோ வந்திருக்கலாம் தோட்டாவும் எங்கிருந்தோ வந்திருக்கலாம், ஆனால் அதைச் சுண்டிய விரல்கள் பிரிட்டனின் விரல்களே. 

இரண்டு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும் அறையில் ஒரு அடுப்பைப் பற்றவைத்துவிட்டு, விளையாடிக்கொண்டிருங்கள் நான் போய்வருகிறேன் என்று நழுவிட்டது. இப்போது அவர்கள் நெருப்போடு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

(தொடர்ந்து பேசுவோம்)

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

இஸ்ரேல்: யூதர்களைப் புரிந்துகொள்ளல்
இஸ்ரேல்: கிறிஸ்துவத்தின் எழுச்சியும் யூதத்தின் சரிவும்
இஸ்ரேல்: இஸ்லாமும் பாலஸ்தீனமும்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கார்த்திக் வேலு

கார்த்திக் வேலு, எழுத்தாளர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசிக்கிறார். அரசுத் திட்டங்கள், வெளியுறவுத் துறை விவகாரங்கள் தொடர்பில் எழுதுகிறார். தொடர்புக்கு: writerkayvee@gmail.com


6


தேசீய உணர்ச்சிசிறப்புச் சட்டம்நிதியமைச்சரிடம் நாடு என்ன எதிர்பார்க்கிறது?தெற்கு ஆசியாஅறிவுஜீவிகுழந்தைமொழிப்பாடம்சாப்பாட்டுப் புராணம்பஞ்சாப்ஜெய் கிசான் ஆந்தோலன்அஸ்ஸாம்மரிக்கோமதம்கால மாற்றத்தை ஏற்க வேண்டும்: நூலகர் தியாகராஜன் பேடமனோகராஇந்தி பேசும் மாநிலங்கள்மாற்றமில்லாத வளர்ச்சிவிஸ்வேஷ் சுந்தர் கட்டுரைதிருபுவன் தாஸ் படேல்கேரள இடதுசாரிகளுக்கு இழப்பு ஏன்?‘கல்கி’ இதழ்டாலா டாலாதணிக்கைக் குழுவினோத் துவாபஞ்சாபி உணவகம்கோர்பசெவ்: வரலாற்றில் ஓர் அவல நாயகர்Suriyaநார்சிஸம்எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்முரண்பாடு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!