கட்டுரை, கலாச்சாரம், கல்வி 7 நிமிட வாசிப்பு

சில்லுன்னு ஒரு முகாம்

பாஸ்கர் சக்தி
27 Jul 2022, 5:00 am
3

றிவொளி இயக்கம் தொண்ணூறுகளில் துவங்கி மிகவும் சிறப்பாக இயங்கிக்கொண்டிருந்த சமயம், எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ஒரு உரையாடலில் அதைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார். “சரியான விஷயங்களை அதிகாரத்தில் இருக்கும் சரியான மனிதர்களிடம் கொண்டு சேர்த்துவிட்டால் அதன் பிறகு நல்ல விஷயங்கள் நாம் எதிர்பார்த்திராத வேகத்தில் நடக்கும்என்று. அப்படி நிகழ்ந்ததுதான் இது.

சமீபத்தில் ஜூன் 03ஆம் தேதி துவங்கி 07ஆம் தேதிவரை உதகமண்டலத்தில் நடந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ‘புதியன விரும்பு’ எனும் கோடை புத்துணர்வு முகாமில் பங்கேற்று அது சிறப்பாக, மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்தபோது தமிழ்ச்செல்வன் அறிவொளி இயக்கம் குறித்து மேலே குறிப்பிட்ட அந்த வார்த்தைகள்தான் நினைவுக்கு வந்தன. 

மிகவும் நினைவுகூரத் தக்க சிறப்பான ஐந்து நாட்கள். சமூகத்தின் அடித்தட்டுப் பகுதியைச் சேர்ந்த, தொலைதூர கிராமங்களில் உள்ள சிறிய பள்ளிகளில் பயிலும், வெளியுலகம் பற்றிய புரிதலுக்கான வாய்ப்புகள் குறைந்த மாணவ, மாணவியர் 1,250 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்காக இந்த முகாம் நடத்தப்பட்டது.

ஆகச்சிறந்த முன்னெடுப்பு

இந்தத் தலைமுறை மாணவர்களுக்கான அழுத்தங்களும், சிக்கல்களும் பிரத்தியேகமானவை. முந்தைய தலைமுறை மீது இல்லாத அழுத்தங்களும், சோர்வும் நம் பிள்ளைகள் மீது திணிக்கப்படுகிறது. வீடு, வகுப்பறை, பாடங்கள் இவற்றைத் தாண்டி வெளியே இருக்கும் சமூகம் அவர்களுக்கு அறிமுகமாவது என்பது குறைவே. அப்படி அவர்களுக்கு அறிமுகமாகும் விஷயங்களும்கூட சினிமாவும், மொபைல் ஃபோன் வழியே அவர்கள் பார்க்கும் நேரக் கொலை ஆட்ட பாட்டங்களும் மட்டுமே என்றாகி இருக்கிறது.

மனதை மெல்ல நஞ்சாக்கும் காணொளிகள் அவர்களை சுலபமாக வந்தடைகின்றன. ஆரோக்கியமான பல விஷயங்கள் அவர்களுக்கு அறிமுகமாவதே இல்லை என்பதே இன்றைய துரதிர்ஷ்டவசமான சூழல். அவர்கள் இதுவரை அறிந்திடாத ருசியை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதாக புதியன விரும்பு முகாம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. தேனின் ருசியை இதுவரை அறிந்திராத ஒருவருக்கு அவரது நாவில் தடவப்பட்ட ஒரு தேன் துளியாக உதகமண்டல புத்துணர்வு முகாம் இருந்தது.

வளரிளம் பருவத்தினரின் உடல், மன ஆரோக்கியத்துக்கான கலை, இலக்கியம், கதை, கவிதை, நாடகம், இசை போன்ற விஷயங்கள் ஒருபுறம். பாலின சமத்துவம், வளரிளம் பருவத்தினர் எதிர்கொள்ளக்கூடிய மனச் சிக்கல்கள், உடல் நலம் பேணுதல், புத்தக வாசிப்பின் அவசியம், இன்றைய ஊடக உலகைப் புரிந்துகொள்ளுதல் போன்ற வாழ்க்கைக்கு இன்றியமையாத விஷயங்கள் குறித்த புரிதலை ஏற்படுத்தும் உரைகள், அந்தந்த துறை சார்ந்த ஆளுமைகள் வழியே அந்தப் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு அதுகுறித்த அறிவார்ந்த விவாதங்கள் பள்ளி  மாணவர்களிடையே நிகழ்வது என்பது இதுவரை நிகழ்ந்திராத ஒரு சிறப்பான முன்னுதாரணம்.

இவை தவிர யோகா, நடைப் பயிற்சி, ஊரைச் சுற்றிப் பார்த்தல் ஆகிய உற்சாகமூட்டும் புத்துணர்வு நடவடிக்கைகள் ஒருபுறம். விஞ்ஞானத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி, இதுவரை அவர்கள் வெறும் கண்களால் வேடிக்கை பார்த்த நிலவையும், நட்சத்திரங்களையும், கிரகங்களையும், பெரிய தொலைநோக்கிகளைக் கொண்டுவந்து பள்ளி வளாகத்தில் அமைத்து, மாணவர்களை அதன்மூலம் விண்வெளியின் அற்புதங்களைப் பார்க்கச் செய்து, அவை குறித்த விளக்கங்களை அளித்து, அவர்கள் கேட்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து ஓர் அருமையான அனுபவத்தை வழங்கியது வான் நோக்கும் குழு.

மேலும், ஸ்லைட் ஷோ மற்றும் காணொளிக் காட்சிகள் வழியே இன்றைய விஞ்ஞான வளர்ச்சி குறித்து விளக்கி, மாணவர்களின் அறிவியல் பார்வையை மேம்படுத்தும் விதமான அமர்வுகளும் நடந்தன. 

ஐந்து மையங்கள்

ஊட்டி, குன்னூர், கேத்தி ஆகிய ஊர்களில் தனித்தனியே ஐந்து மையங்கள். ஒவ்வொரு மையத்துக்கும் 250 பேர் வீதம் 1,250 மாணவ, மாணவியர், வெவ்வேறு இடங்களில் இருந்து அவர்களை வரவழைத்து, ஒவ்வொருவருக்கும்  ஒரு சிறிய பையில் தேவையான உபகரணங்கள், குளிருக்கு இதமான டி-ஷர்ட்டுகள், ஷுக்கள் ஆகியவற்றை வழங்கி, அனைவருக்கும் உணவு தங்குமிடம் எல்லாம் சிறப்பாக ஏற்பாடு செய்து, ஒரு சிறு சுணக்கமோ, சிக்கலோ இல்லாமல் நடத்தி முடிப்பது உண்மையிலேயே மலைப்பான காரியம். சிறப்பான சாதனை.

இதனைச் சாதித்துக்காட்டியது அரசின் கல்வித் துறை. தேவையான பிற துறைகளை இணைத்துக்கொண்டு சிறப்பாக ஒருங்கிணைந்து செயல்பட்டு இதனை நிகழ்த்தியது. இந்த முகாமை வெற்றிகரமாக ஆக்கியதில் அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், துறைசார் வல்லுனர்கள் துவங்கி துப்புரவுப் பணியாளர்கள் வரையிலும் அனைவருக்கும் சீரிய பங்கு உண்டு. 

       

இந்த முகாமில் குன்னூர் செயின்ட் ஆன்டனிஸ் மேல்நிலைப் பள்ளியின் பொறுப்பாளராகவும், அத்துடன் சிறுகதைகள், குறும்படங்கள், மீடியா ஆகியவற்றுக்கான ‘ரிசோர்ஸ் பர்ச’னாகவும் (Resource person) நான் இருந்தேன். சிறுகதைகள், இலக்கியம் ஆகியவற்றை அவற்றில் ஆர்வமுள்ள ஐந்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து ஐந்து நாட்களும் அவர்களோடு கதைகள் பற்றியும், இலக்கியம் பற்றியும், எழுத்தாளர்கள் குறித்தும் பேசி, அவர்களையும் பேச வைத்து, கொஞ்சம் எழுதவும் வைத்தேன். இன்றைய சூழலில் மீடியாவின் தன்மை எத்தகையதாக இருக்கிறது என்பதையும், அவற்றை எப்படி புரிந்துகொண்டு கையாள்வது என்பது குறித்தும் உரைகள் நிகழ்த்தினேன்.

அந்த ஐந்து நாட்களும் கொஞ்சம்கூட உடலிலோ மனதிலோ சோர்வு ஏற்படாமல் உற்சாகமும், மகிழ்ச்சியுமாக இருக்க முடிந்தது. அதற்கு காரணம் மாணவர்கள். நுரைத்துப் பொங்கும் புது வெள்ளம்போல அவர்கள் உற்சாகமாக இருந்தார்கள். அதனை நமக்கும் கொடுத்தார்கள்.

அரசுப் பள்ளி மாணவர்கள் பற்றி, அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்த சில விஷயங்களைப் பெரிதுபடுத்தி, ஒட்டுமொத்தமாக அவர்கள் மீது ஒரு மோசமான சித்திரத்தை ஏற்படுத்தும் காரியத்தை சில ஊடகங்கள் செய்தன. அவை விதிவிலக்குகளாக இருக்கலாம். ஆனால், எங்கள் மாணவ சமூகம் அப்படியானதல்ல என்று முகாமுக்கு வந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நிரூபித்தனர். ஒரு சிறிய ஒழுங்கீனம்கூட இல்லாமல், எப்போதும் குதூகலத்துடனும், ஆர்வத்துடனும் எல்லாவற்றிலும் பங்கேற்று அத்தனை பிள்ளைகளும் எங்களை பெருமிதப்படுத்தினர் .

ஒவ்வொரு துறைசார் ஆளுமைகளும், பேசிய பின்னர் மாணவர்கள் அவர்களோடு உரையாடினர், புதிதாக அறிமுகம் செய்கிற ஒரு விஷயத்தைக்கூட உடனடியாகப் புரிந்து, கிரகித்துக்கொண்டு அவை சார்ந்த, மிகவும் அறிவுப்பூர்வமானக் கேள்விகளை மாணவர்களில் பலர் கேட்டனர். உண்மையிலேயே பிரமிப்பாகவும், மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

தன்னம்பிக்கை விதை

கீதா இளங்கோவன், அவர் இயக்கிய ‘மாதவிடாய்’ எனும் படத்தை மாணவ மாணவியர் மத்தியில் திரையிட்டார். மாதவிடாய் குறித்த நம் சமூகத்தின் குழப்பமான, சிக்கலான பார்வையை விலக்கி அந்த விஷயத்தின் மீது தெளிவான பார்வையை முன்வைக்கும் படம் அது. அதனை பதின்வயதில் இருக்கும் மாணவ, மாணவியர் ஒன்றாக அமர்ந்து பார்த்தனர். படம் முடிந்ததும் தங்களுக்குத் தோன்றிய கேள்விகளையும், சந்தேகங்களையும் கேட்டுத் தெளிந்துகொண்டனர்.

அந்த நிகழ்வின்போது ஒரு மாணவன் எழுந்து சொன்னான், “ஒருமுறை நாஃப்கின் வாங்கி வரச் சொன்ன என் சகோதரியை அறியாமை காரணமாக நான் கிண்டல் செய்திருக்கிறேன். இப்போது அது எவ்வளவு பெரிய தவறு என்று நான் உணர்கிறேன். எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது” என்று மனம் நெகிழ்ந்து சொன்னான்.

எனது மனம் நெகிழ்ந்து போனது, இது எவ்வளவு வரவேற்கத் தகுந்த சூழல்?” என்கிற மகிழ்ச்சி மனதில் தோன்றியது. இத்தனை நாள் இந்தப் புரிதல்கள் வாய்க்கப் பெறாத மாணவர்களுக்கு, பெண்களை தங்களது சக ஜீவன்களாக, தோழிகளாகப் பார்க்கக்கூடிய பக்குவத்தை அந்த அமர்வு கண் முன்னே நிகழ்த்தியது. இதுபோன்ற பல அருமையான தருணங்கள்.  

இளம் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அவர்களுடன் உரையாடி தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். மிகவும் சகஜமாக அவர்கள் தங்களது பலவீனங்களையும், அதை எப்படி எதிர்கொண்டு வென்றோம் என்பது பற்றியும் பேசப்பேச மாணவர்கள் மனதில் இருந்த தயக்கங்கள் உடைந்ததை, அவர்களிடம் பெரும் தன்னம்பிக்கை உருவாகியிருப்பதை உணர முடிந்தது. 

அப்படியான ஒரு நிகழ்வு முடிந்ததும் ஒரு மாணவி என்னிடம் பேசினாள், “நாங்க ஷெட்யூல்ட் ட்ரைப் சார். எங்கப்பாவுக்கு தொழில் பன்றி வளர்க்கிறது. நான்தான் முதல்ல ஸ்கூலுக்கு வந்திருக்கேன். நல்லாப் படிச்சு நல்ல நிலைமைக்கு வருவேன் சார்” என்றார். இதைச் சொல்கையில் அந்த மாணவியிடம் நான் கண்ட தன்னம்பிக்கையும், முகத்தில் இருந்த ஒளியும் என்னை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நம்பிக்கையைத் தருவதுதானே கல்வியின் பிரதான நோக்கமாக இருக்க முடியும். அந்த முகாமுக்கு வந்திருந்த பிள்ளைகளில் கிட்டத்தட்ட அனைவருக்குமே இந்த நம்பிக்கையையும். பல புதிய விஷயங்களின் அறிமுகத்தையும் கொடுத்ததுதான் புதியன விரும்பு முகாமின் வெற்றி.  

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சி சமயபுரம் எஸ்ஆர்வி பள்ளியில் இதுபோன்ற ஒரு கோடைகால பயிற்சி முகாம் “வெளிக்காற்று உள்ளே வரட்டும்” என்கிற தலைப்பில் நடந்துவருகிறது. அதனை ஞாநி, முதல்வர் துளசிதாசன், எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்த நானும் அதில் தொடர்ந்து பங்களித்துவருகிறேன்.

ஆனால், இந்த முகாம் ஒரு மெகா நிகழ்வு. இந்தியாவிலேயே இப்படி ஒரு முகாம் நடந்ததில்லை என்று கேள்விப்பட்டேன்.  நம் தமிழ்நாட்டை நினைத்து பெருமையாக இருந்தது. இப்படி ஒரு முகாமை நடத்த வேண்டும் என்று நினைத்து, பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, அதனை ஒரு மலை வாசஸ்தலத்தின் அழகிய சூழலில் இத்தனை செம்மையாகவும், நேர்த்தியாகவும் நடத்தி முடிக்க காரணமாக இருந்த தமிழக முதல்வர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், கல்வித் துறை செயலர், மற்றும் அதிகாரிகள் அனைவரையும் மனதாரப் பாராட்டுகிறேன்.

பாஸ்கர் சக்தி

பாஸ்கர் சக்தி, எழுத்தாளர். திரைக்கதையாசிரியர். கல்விச் செயல்பாட்டாளர். ‘கனக துர்கா’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: bhaskarwriter@gmail.com


2

4

பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

வைகை சுரேஷ்   11 months ago

கேத்தி வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்று நலக்கல்வி வழங்கி , கொலகம்பை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய காலத்தில் சேலாஸ், தூதுர்மட்டம் என ஆனைப்பள்ளம் என பணியாற்றிய சுவையான நினைவுகள் திரும்புகிறது. மகிழ்ச்சியாக உள்ளது எமது மண்ணின் மைந்தரே. வாழ்த்துகள் பல.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Nelson Arockiam S   11 months ago

மாணவ சமுதாயத்தின் மீது அனைவரும் அக்கறையோடு செயல்பட வேண்டிய முக்கியமான தருணத்தில் இருக்கிறோம்… அந்த வகையில் இந்த “புதியன விரும்பு” நிகழ்வை எண்ணி பெருமை அடைகிறோம். தொடரட்டும்…

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Kodeeshwaran kandasamy   11 months ago

நம்பிக்கை அளிக்கும் முயற்சி. இதை தொடர்ந்து சமூக ஊடங்களில் இயங்கி வந்த போதும் இத்தகைய நிகழ்வை கடந்து வரவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இன்றைய மாணவசமூகமும் பெற்றொரும் எதிர்கொள்ளும் சவால்களை கடந்து வரவும், அவர்கள் மீதான விமர்சனங்களுக்கான தீர்வாகவும் அமையக்கூடிய இத்தகைய பெரும் சந்தர்ப்பங்களை வெகுசன ஊடகங்கள் வெகுசன சமூங்களுக்கு அடையாடம் காட்ட வேண்டும். ஆசிரியருக்கும் கட்டுரையாளருக்கும் நன்றி

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

இளையராஜாதசைகள்புதிய பொறுப்புகள்பள்ளி நிர்வாகம்இரவிச்சந்திரன்தேசிய மாநாட்டுக் கட்சிபண்பாட்டு வரலாறுதிருக்குறள்குதிநாண் தட்டைச்சதைத செவன் மூன்ஸ் ஆஃப் மாலி அல்மெய்டாகரோனா இடைவெளிபி.எஸ்.மூஞ்சிஅருஞ்சொல் சுகுமாரன்நம்பகத்தன்மை இல்லாமைரெட் ஜெயன்ட் மூவிஸ்செளந்தரம் ராமசாமிவிவசாயி படுகொலைதிமுகநிலக்கரி தட்டுப்பாடுசுவாரசியமான காலத்தில் வாழ்வீர்களாகதாளித்தல்செயல் தலைவர்பாமயன்கே. ஆறுமுகநயினார் கட்டுரைஉலகச் சூழலைப் புறக்கணித்த பட்ஜெட் உரைசாதனைச் சிற்பிவிடுதலைஜூலியன் அசாஞ்சேகனவு விமானம்புத்தகத் திருவிழா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!