கட்டுரை, கலை, கலாச்சாரம், சமஸ் கட்டுரை, ஆளுமைகள், ரீவைண்ட் 4 நிமிட வாசிப்பு

தேனுகா: காலம் அள்ளிக்கொண்ட கலாரசிகர்

சமஸ் | Samas
24 Oct 2021, 5:00 am
5

ங்க ஊர் வேற; கோயில் வேற இல்லை. எங்க ஊர் சாமிக்குப் பேர் சுவாமிநாத சுவாமி. எங்க ஊர்ல வந்து 'சுவாமிநாதன் வீடு எது?'ன்னு கேட்டா, ஆளாளுக்கு ஒரு வீட்டைக் காட்டுவாங்க. ஒவ்வொரு வீட்டுக்கும் குறைஞ்சது ஒரு சுவாமிநாதனாவது இருப்பார். பிள்ளைகளைக் கூப்பிடும்போதுகூட 'குமார் முருகா', 'சீனிவாச முருகா'ன்னு முருகனைச் சேர்த்துதான் கூப்பிடுவோம். பெரும்பாலும் எல்லா வீட்டுக் கல்யாணங்களும் கோயில்லதான் நடக்கும். அதனால முகூர்த்த காலத்துல, ஒரே சமயத்துல எழுபது, எண்பது கல்யாணங்கள் நடக்குறதெல்லாம் இங்கே சர்வ சாதாரணம். ஊருக்கும் கோயிலுக்கும் எப்படி ஒரு உறவு பாத்தீங்களா? 

- சுவாமிமலையையும் முருகன் கோயிலையும் பற்றி மட்டும் அல்ல; தாராசுரம் ஐராதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர் பெருவுடையார் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் எதைப் பற்றியும் தேனுகாவால் பேச முடியும். அந்தக் கோயில்களின் வரலாறு, கட்டமைப்பு, ஓவியங்கள், சிற்பங்கள், கோயில் கலைகள், பிரத்யேக இசைக் கருவிகள் ஒவ்வொன்றைப் பற்றியும் அவரால் சொல்ல முடியும்.

வழூவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஐம்பொன் சிலையின் தாள, லய முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசிக்கொண்டே கஜசம்ஹாரமூர்த்தியின் ஆனந்த தாண்டவப் புராணத்துக்கு தேனுகாவால் செல்ல முடியும். தேவாரத்தில், கஜசம்ஹாரமூர்த்தியைக் கரி உரித்த சிவன் என வர்ணிக்கும் பாடலைப் பாட முடியும். அங்கிருந்து நேரே பின்நவீனத்துவக் கோட்பாட்டுக்குத் திரும்ப முடியும். ஃபிராய்டின் கோட்பாடுகள், ஆந்த்ரே பிரதோன் கவிதைகள், டாலி, மாக்ஸ், மெஸ்ஸான் ஓவியங்கள் என்று போக முடியும். அப்படியே நேரே நம்மூரில் நவீன ஓவியங்களுக்கு வந்து இங்கே அவற்றின் தாக்கத்தைப் பொருத்திப் பேச முடியும். தமிழ்ச் சமூகத்தின் அற்புதமான பண்பாட்டு ஆய்வாளர், கலை விமர்சகர் தேனுகா. இன்று இல்லை.

கோயில் கலை

நமக்குச் சாமி மேல நம்பிக்கை இருக்கோ, இல்லையோ நம்ம பண்பாட்டுல பல பொக்கிஷங்களைக் கோயில்லதான் புதைச்சு வெச்சிருக்கான். ஒவ்வொரு சிற்பத்துலேயும் முகம் தெரியாத சிற்பியோட எத்தனை நாள் தவம் இருக்கு? நூத்துக்கணக்கான வித்தை கெடக்குது அதுக்குள்ள. அட, அளவை எடுத்துக்குங்க. சிவன் சிலையா, தசதாளத்துல இருக்கும். அம்பாள் சிலையா நவதாளத்துல இருக்கும். தாராசுரம் கோயில் போனீங்கன்னா ஒரு தூணைப் பார்க்கவே ஒரு நாள் பத்தாது. அதுல விரல் அளவுல ஆயிரம் சிற்பங்களைச் செதுக்கிவெச்சிட்டு போயிருக்கான்.

ஸ்ரீரங்கத்துல பெருமாளை வீதியுலாவுக்குத் தூக்கிட்டு வரும்போது பாத்திருக்கீங்களா? அந்தக் கொண்டை, பூப்பின்னல் எதையுமே மத்த ஊரு சாமியோட ஒப்பிட முடியாது. வீதியுலாவுல நாம சாமியையும் வாகனத்தையும் பார்ப்போம். பல்லக்குத் தூக்குறவங்க நடையைக் கவனிங்க. அதை ஒரு கலையா கத்துவெச்சிருக்காங்கன்னு புரியும். கஜ நடையில சாமி வருதுன்னா கம்பீரமா யானை மாதிரி தூக்கிட்டு நடப்பாங்க. சர்ப்ப நடைல சாமி வருதுன்னா, சரசரன்னு பாம்பு மாதிரி அப்படித் தூக்கிட்டு ஓடிருவாங்க. கோயிலை ரசிக்குறதுக்கே நமக்கு ஒரு படிப்பு தேவைப்படுது. நம்மாளு என்னடான்னா, போற போக்குல கோயிலுக்குப் போறான். நேரா கருவறைக்கு ஓடுறான். அங்கேயும் எப்ப சாமி முகம் தெரியுதோ, அப்ப கண்ணை மூடி ஒரு கும்புடைப் போட்டுட்டு ஓடிக்கிட்டே இருக்கான்.”

வரலாற்றில், ஓவியத்தில், இசையில்… இப்படி ஒவ்வொன்றிலும் நுட்பமான ரசனையையும் தனிப் பார்வையையும் கொண்டவர் தேனுகா. ஒருமுறை ஓவியர் ஆதிமூலத்திடம் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார்: "தேனுகாவோட பார்வையை யாரோடேயும் ஒப்பிட முடியாது. நுண்கலை விமர்சனம்கிறது பொதுவா இங்கே மேலைநாட்டு பார்வையை உள்வாங்கிக்கிட்டு, அதையே அளவுகோலா வெச்சி பேசுறதாதான் இருக்கு. தேனுகாவோட அளவுகோல் இந்திய மரபுல உறைஞ்சிருக்கு."

சுவாமிமலை டு டெல்லி

மிகச் சாதாரணமான ஒரு குடும்பத்தில் பிறந்தவர் தேனுகா. அப்பா முருகையா பிள்ளை வைத்த பெயர் சீனிவாசன். தேனுகா ராகம் அவருக்குப் பிடித்தமானது. அதையே தன் எழுத்துலகப் பெயராக்கிக்கொண்டார்.

"எங்க குடும்பம் நாகஸ்வரக் குடும்பம். சுவாமிமலை முருகன் கோயில்ல ஆறு கால பூஜைக்கும் நாகஸ்வரம் வாசிக்கிறது குடும்ப சேவகம். போதாக்குறைக்கு, மதுரை சோமு, கோவிந்தராஜ பிள்ளை, சாமிநாதம் பிள்ளை, சுப்ரமணியம் பிள்ளைனு இசையுலக பிரம்மாக்கள் பலரோட சொந்த ஊர். கேட்கணுமா? காலையில பூபாளம், மத்தியானம் மத்தியமாவதி, சாயங்காலம் பூர்வீகல்யாணி, ராத்திரி நீலாம்பரின்னு சின்ன வயசுலேயே காதுக்குள்ள எல்லா ராகங்களும் புகுந்துகிடுச்சு. ஒருபக்கம் குடும்பச் சொத்தா இசை வாசனை ஒட்டிக்கிடுச்சு. இன்னொரு பக்கம் ஊர்ச் சொத்தா சிற்ப வாசனை ஒட்டிக்கிடுச்சு. ராமசாமி ஸ்தபதி, அண்ணாசாமி ஸ்தபதி, தேவசேனா ஸ்தபதி, மூர்த்தி ஸ்தபதி, வைத்தியநாத ஸ்தபதின்னு தலைசிறந்த சிற்பிகளுக்குப் பேர்போன ஊர் ஆச்சே? பின்னாடி கும்பகோணத்துக்குப் போனதுக்கு அப்புறம் ந.பிச்சமூர்த்தி, எம்.வி.வெங்கட்ராம், தி.ஜானகிராமன், மௌனி, கரிச்சான்குஞ்சுன்னு இலக்கியவாதிகளோட அறிமுகம் கிடைச்சுது. இப்படி நான் இருந்த மண்ணுதான் கலையோட வாசத்தை நம்ம மேலேயும் கொஞ்சூண்டு தூவி விட்டுட்டுன்னு நெனைக்கிறேன்."

இப்படியெல்லாம் எளிமையாகப் பேசினாலும், தேனுகா தமிழின் அரிதான கலை விமர்சகராக உருவெடுத்ததன் பின்னணியில், அபாரமான உழைப்பு இருந்தது. நாள் தவறாமல், கும்பகோணம் அரசு ஓவியக் கல்லூரி நூலகத்துக்குச் சென்று மணிக்கணக்கில் படிப்பதில் தொடங்கியது அந்த உழைப்பு. ஒருகட்டத்தில், சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி என்று ஊர் ஊராக அலைந்து ஓவிய - சிற்பக் கண்காட்சிகளில் பங்கேற்றார். "பித்து பிடிச்சு திரிஞ்சேன்னு சொல்லணும். சம்பாதியத்துல பெரும் பகுதி இப்படிப் புஸ்தகங்கள், கண்காட்சிகள், கலை இலக்கிய கூட்டங்கள்னே போய்டும். என் மனைவி தமிழ்ச்செல்வி ரொம்ப தங்கமானவங்க. புருஷன் தப்பா ஏதும் செய்யலைங்கிறதால, எல்லாத்தையும் அனுமதிச்சாங்க."

கலா போஷகர்

பொதுவாகவே, காவிரி மண்ணைச் சேர்ந்தவர்கள் கலையை போஷிக்கக் கூடியவர்கள் என்ற பெயர் உண்டு. தேனுகாவிடம் அந்தப் பண்பு உச்சத்தில் இருந்தது. படைப்பாளிகளை அழைத்து வந்து கூட்டம் போடுவது, அப்படி வருபவர்களுக்கான எல்லாச் செலவுகளையும் ஏற்றுக்கொள்வது, நலிந்த கலைஞர்கள் பலருக்கும் தன்னாலான உதவிகளைச் செய்வது இவற்றையெல்லாம் தன் வாழ்வின் ஒரு பகுதியாகவே வைத்திருந்தார். கலைஞர்களை ஊக்குவித்தார். தான் கற்ற கலையை அவர் சொந்த வாழ்க்கைக்குப் பயன்படுத்திக்கொண்டார் என்றால், அது அவருடைய வீட்டையும் 'ரீத்வெல்ட்' நாற்காலியையும் உருவாக்க மட்டுமே என்று சொல்லலாம்.

தேனுகாவின் முதல் நூல் 'வண்ணங்கள் வடிவங்கள்' வெளியானபோது, டெல்லியிலிருந்த க.நா.சு., ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில், "தமிழ்ப் பாலையில் ஒரு பசுஞ்சோலை" என்று நெகிழ்ந்து எழுதினார். தொடர்ந்து பல்வேறு பத்திரிகைகளிலும் கட்டுரைகள், இடையிடையே நூல்கள், நெருங்கியவர்கள் அழைக்கும் கூட்டங்கள் என அவர் இயங்கினாலும், இவற்றையெல்லாம் தாண்டி அபார சக்தி கொண்டவை அவருடைய நேரடியான உரையாடல்கள். அவருக்குள் புதைந்து கிடந்த வரலாற்றையும் கலைஞானத்தையும் அவைதான் வெளியே எடுத்து வந்தன. அதைப் பாகுபாடு இல்லாமல் பள்ளிக் குழந்தைகள் முதல் எல்லோரிடமும் பகிர்ந்துகொண்டார்.

நம்முடைய சூழலின் துரதிருஷ்ட இயல்புக்கேற்ப தேனுகா பேசியதில் ஆயிரத்தில் ஒரு பங்கேனும் பதிவுசெய்யப்படவில்லை. "பாஷை நமக்குப் புடிப்படலை; இதுலேர்ந்து விடுபட்டு வேற ஒரு ரூபத்துக்கு - ஓவியத்துல அரூபத்தைக் கற்பனை செஞ்சு பாருங்க, அப்படி பாஷையில போகணும்னு நெனைக்கிறேன்" என்பார். மரணம் அந்த அபாஷைக்குத்தான் அவரைக் கொண்டுசென்றதா என்று தெரியவில்லை!

அக்டோபர், 2014, ‘தி இந்து’

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


2

1





பின்னூட்டம் (5)

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   2 years ago

I am sharing what I have read about Thenuka from social angle. This part of his life was a struggle against ignominy of our Indian social structure. Born in the caste, considered to be one of the lowest in the caste hierarchy, he encountered ill-treatment on various occasions and in an incident, out of frustration, he refused to take food, for having been asked to sit in the backyard of the house in which a function was going on and that too he went there as a member of the musical team. He was a man with a sense of self-respect to the core. He did not allow anybody to override him on this score.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Parasara Devaraj   3 years ago

அருமை.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

சூ.ம.ஜெயசீலன்   3 years ago

முற்றிலும் புதிய தகவல்! நன்றி சமஸ்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Abdul azeez   3 years ago

அருமை . தேனுகா அவர்களையும் , ரசிப்பின் அருமைக ளையும் தெரிந்து கொண்டேன். நன்றிகள்

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

ASHOKKUMAR P   3 years ago

அருமையான சுவாரஸ்யமான முறையில் அமைந்த கட்டுரை. தேடுதலைத் தூண்டும் பதிவுகள். ஆழ்ந்த இரங்கல்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

கனகசபைதமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்துக்குரியதுமனித உரிமைஇளவேனில்உலக சினிமாமகளிர் இடஒதுக்கீடுதிட்டமிடலுக்கான கருவிஒரேயொரு முகம்ஆசிரியர்களும் கையூட்டும்: ஓர் எதிர்வினைநிலக்கரிடிராகன்ரஷ்யன்370வது பிரிவு சாதி அழிந்துவிடுமா?அரபு நாடுகள்அருஞ்சொல் மாயாவதிகதவுகளில் கசியும் உண்மைபழஞ்சொற்கள்ஏற்பாடுசெய்யப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டம்அண்ணா சாலை விபத்து: பொறியியலும் பாதுகாப்பும்வேலையில் பரிமளிப்புபிராமணியம்உரை மரபுசட்டத் திருத்தம்இலங்கைtherkilirundhu oru suriyanசித்தராமய்யா அருஞ்சொல்ஆல்கஹால்பதட்டத்தின் வெளிப்பாடுதான் பாஜகவின் இந்தப் பேச்சுகஎளிமை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!