கட்டுரை, தொடர், ஆரோக்கியம், கல்வி, சர்வதேசம், தொழில் 5 நிமிட வாசிப்பு

தான்சானியா: கல்வியும் சுகாதாரமும்

பாலசுப்ரமணியம் முத்துசாமி
24 Sep 2023, 5:00 am
1

தான்சானியாவின் பள்ளிக்கல்வி நமது வழியில் இருந்து கொஞ்சம் மாறுபட்டது. ஆரம்பப் பள்ளிக்கல்வி 7 வயதில் தொடங்கி, முதல் 7 ஆண்டுகள் அளிக்கப்படுகிறது; அதன் பின்னர் 6 ஆண்டுகள் உயர்நிலைப் பள்ளி. அதன் பின்னர் பிள்ளைகள் கல்லூரிக்குச் செல்கிறார்கள்.

ஆரம்பக் கல்வி இலவசம் என்றாலும், புத்தகங்கள், சீருடைகள் முதலியவற்றைப் பெற்றோர்களே வாங்கிக் கொடுக்க  வேண்டும். கல்லூரிப் படிப்புக்காக ஏழைக் குழந்தைகளுக்கு கல்விக் கடன் கிடைக்கிறது. அந்தக் கடனைத் தருவதற்காக என்றே ஓர் அரசு நிறுவனம் உள்ளது.  ஆரம்பக் கல்வி ஸ்வாஹிலி மொழியிலும், உயர்நிலைக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி ஆங்கிலத்திலும் கற்பிக்கப்படுகிறது.  

இப்படியாக உணர்ந்துகொண்டேன்!

எனது நிறுவனத்துக்காக ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும்போதுதான் இந்தக் கல்வித் திட்டத்தின் போதாமைகளை உணர்ந்துகொள்ள நேர்ந்தது. கல்லூரிக் கல்வியின் தரம் வெகுவாக மேம்பட வேண்டியுள்ளது.

தொழிற்கல்வியைப் பற்றியோ கேட்கவே வேண்டாம். எங்களது தொழிற்சாலைகளுக்கான தொழில்நுட்ப ஊழியர்கள் கிடைப்பது பெரும் பிரச்சினை. எனவே, வேறு வழியில்லாமல், இந்தியாவில் இருந்து நல்ல நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்ட தொழில்நுட்ப ஊழியர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. அவர்களுக்குக் கீழே உள்ளூர் தொழிற்பயிற்சிப் பள்ளிகளில் படித்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி தருகிறோம். அவர்களும் இயந்திரங்களை இயக்கக் கற்றுக்கொள்கிறார்கள்.

ஆயினும், ‘இண்டஸ்ட்ரி 4.0’ என்னும் அடுத்த தலைமுறை இயந்திரங்களையும், தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஆர்வத்தோடு அணுகிக் கற்றுக்கொள்வதில் பெரும் சுணக்கம் இருப்பதை உணர முடிகிறது. அரசுடன் உரையாடும் ஒவ்வொரு முறையும் நாங்கள் வேண்டிக்கொள்வது எல்லாம் இந்த நாட்டுக்கு என ஓர் உலகத்தரம் வாய்ந்த பாலிடெக்னிக், ஒரு ஐடிஐ உருவாக்குங்கள். வருடம் 100 பேர் தயரானால்கூட போதும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறோம். அதேபோலத்தான் மேலாண் கல்வி நிறுவனங்கள் இல்லாமையும் பெரும் பிரச்சினை. 

கொஞ்சம் வசதி படைத்தவர்கள், தங்கள் குழந்தைகளை இந்தியா, சீனா, ஐரோப்பா நாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைக்கிறார்கள். அப்படிப் படித்துவரும் மாணவர்களுக்கு இந்தக் கண்டத்தில் வேலைவாய்ப்பும் பெரிதாகக் கிடைப்பதில்லை. காரணம், தான்சானியா போன்ற ஓரளவு வசதியான நாட்டில்கூட, தொழில் துறை மிகச் சிறியதாக இருப்பதால்தான். இது ‘கோழி முதலா…? முட்டை முதலா…?’ என்பது போலான பிரச்சினை.

கடந்த 8 ஆண்டுகளில், தெற்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பயணம் செய்ததில், உணர்ந்துகொண்டது ஒன்று.  கல்வியும், தொழிலும் ஒன்றையொன்று மிகவும் சார்ந்துள்ளன. இரண்டுமே ஒரே சீராக வளர வேண்டும். இல்லையெனில் பெரும் பிரச்சினை. தென் ஆப்பிரிக்கா, எகிப்து போன்ற விதிவிலக்கான நாடுகள் தவிர மற்ற நாடுகளில் உயர் கல்வியும், தொழில் கல்வியும் வெகு சுமார்.

நேரு எனும் நல்லூழ்

இந்த 7 ஆண்டுகளின் முடிவில் நான் உணர்ந்ததெல்லாம் ஒன்றுதான். இந்தியாவின் முதலாவது பிரதமராக நேரு இருந்தது இந்தியாவின் நல்லூழ். நவீன உயர்கல்விக்கும், தொழில் துறைக்கும் அவர் இட்ட அஸ்திவாரமே நம்மை இன்று உலகளாவிய வணிகப் போர்களில் நம்மை காத்துவருகிறது.

இந்தியாவின் முதலாவது உயர் தொழில்நுட்பக் கல்லூரி ஐஐடி கரக்பூர், சுதந்திர இந்தியாவின் முதல் உயர்கல்வி நிறுவனம். அது உலகின் மிகச் சிறந்த கல்வி நிறுவனமான அமெரிக்காவின் மாசாசூஸெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் துணையோடு உருவாக்கப்பட்டது. அப்போது இந்தியா உணவுப் பற்றாக்குறையில் தவித்துக்கொண்டிருந்தது. உணவு தானியத்துக்காக உலகெலாம் கையேந்தி நின்றுகொண்டிருந்தது. ஆனாலும், நீண்ட கால நோக்கில் நாட்டுக்கு என்ன தேவையென்ற அறிதல் நம் தலைவர்களிடம் இருந்தது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

தொழில்நுட்பக் கல்வியில், பல தளங்களில் கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. மிக உயர் தளத்தில் ஐஐடிகள். அதற்கடுத்து பிராந்திய பொறியியல் கல்லூரிகள் (தற்போது தேசியத் தொழில்நுட்பக் கல்லூரிகள் என அழைக்கப்படுகின்றன). அதற்கடுத்த தளத்தில் மாநிலப் பொறியியல் கல்லூரிகள். அவற்றுக்குக் கீழே பாலிடெக்னிக்குகள், தொழில்நுட்பப் பயிற்சிப் பள்ளிகள் எனத் தொழில் துறையின் பல்வேறு தளங்களுக்குத் தேவையான பொறியாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்களை நாம் உருவாக்க முடிந்தது.

இந்திய விடுதலைக்கு முன்பே, இந்திய சமூகப் பொருளாதாரக் கட்டமைப்புக்கான திட்டமிடுதல் தொடங்கிவிட்டிருந்தன. 1938ஆம் ஆண்டு, இந்திய தேசியக் காங்கிரஸ் முதலாவது திட்டக் குழுவை உருவாக்கியது. அதன் பின்னர், மும்பையில் இருந்த தொழில்முனைவோர் பலர் இணைந்து ‘பாம்பே ப்ளான்’ (1945) உருவாக்கினார்கள்.

எப்படிப் பிறந்தது இந்தியப் பொதுத் துறை?

உலகில் இரண்டாம் போர் முடிவுக்கு வந்திருந்த அந்தக் காலத்தில் உலகம் முழுவதுமே அரசுகள் நாட்டின் நவீன தொழில்மயமாக்கும் கட்டமைப்புகளை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தன. ஆங்கிலேயேர்களால் வறுமைக்குத் தள்ளப்பட்டிருந்த நாட்டில், தொழில்முனைவோர்களிடம் பெரும் முதலீடுகள் இல்லை. எனவே, அவர்கள் கனரகத் தொழில்களில், அடிப்படைத் தொழில்களில் அரசை முதலீடு செய்யச் சொன்னார்கள். இந்தியப் பொதுத் துறை பிறந்ததன் பின்ணணி இதுதான். 

இதனால் விளைந்த நன்மை என்னவெனில், உலகில் எந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய அரசுடன் இணைந்து செயலாற்றுவது என்றாலும், பேர மேசையில் இந்திய அரசின் அதிகாரம் சற்றும் குறையாமல் இருந்தது. இதுவே தனியார் துறை என்றால், பன்னாட்டு நிறுவனங்களின் கை ஓங்கியிருக்கும். 

இந்திய இரும்புத் துறை, மருந்து உற்பத்தி, கனரக இயந்திரங்கள் உற்பத்தி, வேளாண்மைக்கான ட்ராக்டர்கள், கடிகாரம் எனப் பல துறைகளில், பொதுத் துறை நிறுவனங்கள் வழியே அன்றைய நவீன தொழில்நுட்பம் இந்தியாவில் நுழைந்தது. 1971ஆம் ஆண்டில், இந்தியாவின் மருத்துவக் காப்புரிமை விதிகள் மற்ற நாடுகளில் காப்புரிமை பெற்ற அடிப்படை மருந்துகளை இந்தியாவிலேயே எவரும் தயாரிக்கும் வண்ணம், பொருள் காப்புரிமை (Product Patent) என்னும் வழியில் இருந்து, உற்பத்தி முறைக் காப்புரிமை (Process Patent) என மாற்றப்பட்டது.

இது இந்திய மருந்து உற்பத்தித் துறைக்குக் கிடைத்த மாபெரும் வரப் பிரசாதமாக அமைந்தது. டாக்டர் ரெட்டிஸ், ரான்பாக்ஸி என்னும் இந்திய நிறுவனங்கள் உருவாகின. இன்று உலகில் அடிப்படை மருந்துகள் (Bulk drugs) துறையில் இந்தியா உலகில் முன்னணி உற்பத்தி நாடாக மாறியதற்கு இந்தப் பொதுநலத் திட்ட அணுகுமுறை முக்கியக் காரணம்.

இதில் 1960களில், உருவாகிவரும் பொதுத் துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களை நிர்வகிக்கும் நிர்வாகிகளை உருவாக்க வேண்டும் என்னும் நோக்கில், அமெரிக்காவின் எம்ஐடி ஸ்லோன் கல்லூரி மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களின் உதவியோடு கல்கத்தாவிலும், அகமதாபாத்திலும் இந்திய மேலாண்மை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. 

தான்சானியாவின் வெளிநாட்டவர்கள்

உணவுத் தன்னிறைவை அடைய இந்தியாவிலேயே வேளாண் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டன. இந்திய வேளாண்மைக் கழகங்கள் மற்றும் மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் இதில் பெரும் பங்காற்றின. தன்னிறைவை நோக்கிய தொழில்நுட்பங்களை இந்தியாவிலேயே உருவாக்க வேண்டும் என்னும் அரசின் முனைப்பினால் மட்டுமே இவை நிகழ்ந்தன என்றுதான் சொல்ல வேண்டும்.

தொடக்கக் காலத்தில் பல்வேறு வளர்ந்த நாடுகளில் இருந்து தொழில்நுட்பங்களை, இயந்திரங்களை நாம் இறக்குமதி செய்திருந்தாலும், காலப்போக்கில் அவை இந்தியாவிலேயே உற்பத்திசெய்யப்பட்டன.

இந்த ஒட்டுமொத்த அணுகுமுறையினால், உலகின் தொழில்நுட்பங்கள் இந்தியாவில் மிக விரைவில் அறிமுகமாயின. அவற்றை உணர்ந்து இயக்கும் பொறியாளர்கள், தொழில்நுட்பர்கள், மேலாளர்கள் இந்தியாவிலேயே உருவாகிவந்தார்கள்.

விடுதலை பெற்ற 25 ஆண்டுகளில், இந்தியத் தொழில்துறை இந்தியத் தொழில்முனைவோர்களின், நிர்வாகிகளின் கைகளில் வந்துவிட்டன.  இந்தியக் கல்வியில் உயர் அறிவியல் கல்வியும், ஆராய்ச்சியும், துறைகளின் வளர்நுனி ஆராய்ச்சிகளும் நடைபெறுவதில்லை என்பது இந்தியக் கல்வித் துறையின் போதாமையாக இருந்தாலும், உலக அரங்கில் போட்டியிடத் தேவையான அடிப்படை தொழில் / மேலாண் / மருத்துவக் கல்வி கிடைக்கிறது.

ஆனால், ஆப்பிரிக்காவில் இது இல்லாததால், வெளிநாட்டவர்களைப் பணிக்கு வைக்க நேரிடுகிறது. எடுத்துக்காட்டாக, நுகர்பொருள் உற்பத்தித் துறையின் மிக முக்கியமான தேவை, ப்ளாஸ்டிக் குப்பிகள், மூடிகள், ட்யூப்கள் தயாரிப்பது. அதற்கு தொழில்நுட்பர்களைத் தயாரிக்க, மத்திய ப்ளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (Central Institute of Plastic Engineering and Technology) என்னும் நிறுவனம் இந்தியாவின் பல நகரங்களில் உள்ளது.

ஆனால், கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் எதிலுமே இந்தக் கல்வி பயிற்றுவிக்கப்படுவதில்லை. எனவே, இந்தத் துறையை நிர்வகிக்க, வெளிநாடுகளில் இருந்து தொழில்நுட்பர்களைப் பணியமர்த்த வேண்டியுள்ளது. இப்படிப் பல துறைகளில், இன்றுமே உயர் தொழில்நுட்ப, மேலாண் பதவிகளில் வெளிநாட்டு நிர்வாகிகள் இருந்துவருகிறார்கள் (நான் உள்பட). ஆனால், இந்தியாவில் இதுபோன்ற பதவிகளில், இந்திய நிறுவனங்களில் இந்தியர் அல்லாதவர்களைக் காண முடியாது.  

அது நேரமோ, பணமோ...

அறிவுக்குச் செலவிட தயங்காதீர்கள்.
இது உங்கள் ஆளுமை, சமூகம் இரண்டின் வளர்ச்சிக்குமானது!

ஆப்பிரிக்காவின் துரதிருஷ்டம் எது?

இந்தியா சிறந்த நிர்வாகிகளை உருவாக்கி, பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய அனுப்பியுள்ளது. எடுத்துக்காட்டாக, யூனிலீவர் என்னும் பன்னாட்டு நிறுவனத்தில், இந்தியாவில் படித்த பல இந்தியர்கள் உலகெங்கும் உயர் பதவிகளில் உள்ளனர். மிகத் துரதிருஷ்டவசமாக, காந்தி, நேரு, படேல், இந்திரா காந்தி போன்ற தீர்க்கதரிசன, ஒட்டுமொத்த அணுகுமுறை கொண்ட தலைவர்கள் ஆப்பிரிக்காவில் இல்லை. அது மட்டுமல்லாமல், சிறு சிறு நாடுகளாகப் பிரிந்து, மக்களாட்சி முறை மலராத பல நாடுகள் இருந்ததும் ஒரு முக்கியக் காரணம்.

விளைவாக, இன்றும் சில விதிவிலக்குகளைத் தவிர், பெரும்பாலான நாடுகள், வேளாண்மையை மட்டுமே நம்பியுள்ளன. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், தங்களுக்குத் தேவையான தொழில்நுட்பங்களை, நுகர்பொருட்களை உலகமெங்கும் இருந்து இறக்குமதி செய்யும் நிலையில் பெரும்பாலான நாடுகள் உள்ளன. மாறாக, ஆப்பிரிக்காவில் இருந்து கனிமங்கள் மற்றும் வேளாண் பொருட்களே ஏற்றுமதியாகின்றன.

உலகத்துக்கான கச்சாப் பொருட்களை சந்தை விலைக்கு ஏற்றுமதி செய்துவிட்டு, உற்பத்தி செய்த நுகர்பொருட்களை அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யும் அவல நிலையே ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் உள்ளது. இதனால், இந்த நாடுகள், உலக வர்த்தகத் தளங்களில், தொழில்நுட்பத் தளங்களில் போட்டியிட முடியாமல் போகிறது.

இவற்றின் பொருளாதாரங்கள் தொடர்ந்து பலவீனமாகி, டாலருக்கு எதிரான இந்த நாடுகளின் கரன்சிகள் தொடர்ந்து மதிப்புக் குறைந்துவருகின்றன. பல நாடுகள் பன்னாட்டு நிறுவனங்கள் அளிக்கும் நிதி உதவியை நம்பியுள்ளன. போதாதற்கு சீனா, கடன் தருகிறேன் எனப் பல ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரக் கட்டமைப்புகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் காண முடிகிறது. மொத்த ஆப்பிரிக்க கண்டமே ஒருவிதமான பொருளாதார காலனியாதிக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.

வேண்டும் நெடிய பயணம்!

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள், 54 நாடுகளாகப் பிரிந்து நிற்கும் ஆப்பிரிக்கா, ஒரே நாடாக இருந்தால், அது கிட்டத்தட்ட இந்தியா போன்ற பெரும் பொருளாதாரமாக இருக்கும். உலகின் மிகப் பெரும் நதிகளில் இரண்டும், மிகப் பெரும் ஏரிகளில் மூன்றும் இங்கே உள்ளன. காங்கோ போன்ற நாட்டில் இருக்கும் கனிம வளம் அளவிட முடியாதது. இந்தியாவைவிடப் பல மடங்கு அதிகம். நைஜீரியா உலகின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு. கச்சா எண்ணெயைத் தோண்டியெடுத்து ஏற்றுமதி செய்துவிட்டு, பெட்ரோலியம், டீசலை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறது.

நேரு போன்ற ஒரு பெருந்தலைவர் உருவாகி எழுந்து மொத்த ஆப்பிரிக்காவையும் ஓர் அலகாக இணைத்து, இங்கிருக்கும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி, கல்வியை மேம்படுத்தி, ஆப்பிரிக்காவில் நவீனத் தொழில்நுட்பத் தொழில்களை உருவாக்கினால் ஒழிய ஆப்பிரிக்கக் கண்டம் மற்ற கண்டங்களுடன் சமநிலையில் இயங்குவது சாத்தியமில்லை எனத் தோன்றுகிறது. நினைக்கும்தோறும் வருத்தமளிக்கும் நிலை.

ஆனாலும் ஆங்காங்கே நம்பிக்கைக் கீற்றுகளும் தென்படுகின்றன என்பதையும் சொல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக, 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு, தான்சானியா கச்சா முந்திரிப் பருப்பு ஏற்றுமதியை முழுதாக நிறுத்திவிட்டு, பதப்படுத்தப்பட்ட முந்திரியை மட்டுமே ஏற்றுமதி செய்யும் எனக் கொள்கை முடிவெடுத்திருக்கிறது. அதேபோல, இந்த ஆண்டு மெட்ராஸ் ஐஐடி, தனது முதல் கிளையை ஸான்ஸிபார் தீவுகளில் ஏற்படுத்தியிருக்கிறது.

தரமான உயர் நவீனக் கல்வியை தான்சானியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் கொண்டுவரும் முதல் முயற்சி. அடுத்த 10-15 ஆண்டுகளில், இது மிக முக்கியமான நேர்நிலை விளைவுகளை ஏற்படுத்தும் என நம்புகிறேன். இதுபோன்ற முன்னெடுப்புகள் எல்லா துறைகளிலும் மிக வேகமாக நிகழ வேண்டும். முன்னேறிய நாடுகளின் மேசையில், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடம் இருக்க வேண்டும்.

ஸான்ஸிபாரில் மெட்ராஸ் ஐஐடி இயங்கப்போகும் தாற்காலிக வளாகம்

அதேபோல மருத்துவத் துறையிலும் தான்சானியா போக வேண்டிய தூரம் அதிகம்.  தரமான அடிப்படை மருத்துவ வசதிகள் ஊரகப் பகுதிகளில் கிடைப்பது கடினம்.  டார் எஸ் ஸலாம் போன்ற நகரங்களில் நவீன மருத்துவமனைகள் உள்ளன. டார் எஸ் ஸலாம் நகரின் முய்ம்பிலி பொது மருத்துவமனை மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்படும் ஒன்று. இதுதான் இந்த நாட்டின் எய்ம்ஸ். இருந்தாலும், உயர் நவீன சிகிச்சைகளுக்கு தான்சானியர்கள் தென் ஆப்பிரிக்கா அல்லது இந்தியா செல்ல வேண்டிய நிலைதான் உள்ளது. 

(தொடரும்…)

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

தான்சானியாவின் பிரதான நகரங்கள்
தான்சானியா: முக்கியத் தலங்களும், நகரங்களும்
தான்சானியா: பார்க்க வேண்டிய இடங்கள்
தான்சானியா: அரசியலும், புவியியலும்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


2

1

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஒரே தேசம் – ஒரே தேர்தல்உறக்க மூச்சின்மைகண்களைத் திறந்த கண்காட்சிகள்வெற்றியாளர்கள்பன்முகத்தன்மைமனிதச் சமூகம்சேதம்சத்துக் குறைவுநூபுர் சர்மாகோட்பாடுகள் காம்யுதேசிய அரசியல்உபி தேர்தல்ஏழைகளின் உணர்வுகளுடன் விளையாடும் பைஜூஸ்!ஹரியாணாஅமுத காலம்சண்முகநாதன் பேட்டிஎம்.ஜி.ஆர்பன்னி சோமாட்டுப் பால்இந்திய வம்சாவளிபொதுப் போக்குவரத்துஅருஞ்சொல் மாயாவதிஉள்கட்டமைப்புநான்கு சாதியினர்என்.கோபாலசுவாமி பேட்டிதமிழ் இலக்கிய மரபுதுயரம் எதிர் சமத்துவம்தம்பிக்கு கடிதம்ஜெ.சிவசண்முகம் பிள்ளை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!