இன்றைய காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்களில் ஒரு பெரும் பிரச்சினை உண்டு. பொருளாதாரக் காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்த குடும்பங்களில், அடுத்த தலைமுறை, சூழல் காரணமாகத் தமிழ் பயிலாமல் போவது. தமிழ்நாட்டிலும், நகரங்களில் இந்தப் பிரச்சினை உண்டு. தனியார் ஆங்கிலப் பள்ளிகளிலும் தமிழ் புறக்கணிக்கப்படுவதால்.
வளர்ந்த பின்னர், சாதி, மத வழக்கங்களுக்குள் அடுத்த தலைமுறை திரும்பி வந்தாலும். மொழி அவர்களுக்கு அந்நியமாகவே நின்றுவிடுகிறது. பேசத் தெரிந்த பல லட்சம் குழந்தைகளுக்கு, எழுதப்படிக்கத் தெரிவதில்லை. அடுத்த தலைமுறைக்கு, பிறந்த மண்ணை, பண்பாட்டை எடுத்துச் சொல்ல வழி தெரியாமல் விழிக்கும் பல லட்சம் தமிழர்களுக்கான ஒரு வழியாக ‘ஸ்டோரீஸ் ஆஃப் த ட்ரூ’ (Stories of the True) என்னும் இந்தப் புத்தகத்தைச் சொல்லலாம்.
ஜெயமோகன் தமிழில் எழுதி, பெரும் வெற்றிபெற்ற, ‘அறம் – உண்மை மனிதர்களின் கதை’யின் ஆங்கில ஆக்கம். இந்தக் கதைகளை ஆங்கிலத்தில் எழுதியிருப்பவர் ப்ரியம்வதா. இவர் தனியார் முதலீட்டுத் துறையில் பணிபுரிந்துவருகிறார்.
ஜெயமோகன் படைப்புகளின் மொழி
20ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம் இந்தக் கதை வரிசை எனச் சொன்னால் அது ஓரளவு சரியாக இருக்கும். இலக்கியம் தவிர வேறெதுவும் தெரியாதவர், கானியல் வல்லுநர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து வாழ்வை வென்றெடுத்தவர், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, வாழ்வை வென்றெடுத்தும், பிறப்பின் இழிவை அழிக்க முடியாதவர், உயர்சாதியில் பிறந்தும், பெண்ணெனும் இழிவைக் கடக்க இயலாதாவர், மரபிசையும், பெண் மயக்கமும், மத்துறு தயிரெனக் காதலைக் கடக்கவியலாக் கவிமனமும், பொதுவாழ்வில் தென்படும் ட்ராஃபிக் ராமசாமிகளும், பசிக்கெனவே உணவைப் படைக்கும் பிரம்ம ராக்ஷதர்களும், பரமபிதாவின் உலகை ஸ்தாபிக்க வந்த கிறுக்கர்களும் என ரத்தமும் சதையுமாக நம் கண் முன்னே உலவும் இந்த உண்மை மனிதர்கள், தமிழ்ச்சமூகத்தின் பிரதிநிதிகளாக வந்து போகிறார்கள்.
தமிழில் இருந்து பல நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அசோகமித்திரனின் கதைகள் பலவுமே மிக அருமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நவீன இலக்கியத்தின் பிதாமகர்களில் ஒருவரான அசோகமித்திரனின் படைப்புகளின் மொழி, மிகவும் சிக்கனமானது. சுருங்கச் சொல்லி விரிவான பொருளை வாசகனின் மனதில் எழவைக்கும் மாடர்னிஸ எழுத்தின் மாஸ்டர். அவரிடம் மொழி என்பது இலக்கியத்தைச் சுமந்துவந்து கொடுத்துவிட்டு, சுமைக் கூலி வாங்கிச் செல்லும் ஒரு பணியாள். அந்தப் பணியாளுக்குப் பதிலாக இன்னொருவரும் அந்த வேலையை ஓரளவு எளிதாகச் செய்துவிட முடியும். அவரைத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படிப்பவர்கள் அடையும் உலகம் பெரிதாக மாறுபடாது.
ஆனால், ஜெயமோகனின் படைப்புகளில், மொழியும், பண்பாடும் வகிக்கும் இடம் மிகப் பெரிது. அவரது படைப்புகளில், அவை சயாமீஸ் இரட்டையர்கள் போலவே ரத்தமும், சதையுமாய் ஒட்டிக்கொண்டு வருபவை. என்ன திறன் கொண்டு அவற்றை இன்னொரு மொழி / பண்பாட்டுக்காரருக்கு அந்தப் படைப்புகளை, அதன் கவிச்சி வாசத்தை, அவரின் அடுக்களைச் சுவையைக் கடத்திவிட முடியும்?
நெம்பக் கஷ்டம்!
ஆனால், அவரது படைப்புகளில் ஓரளவு எளிமையானதும், உலகளாவிய வரைதளமும் கொண்டது 'அறம்' கதைகள் எனலாம். மொழிபெயர்ப்புக்கு ஏதுவானவை. இந்தப் புத்தகத்திலேயேகூட, ஆங்கில மொழிமாற்றம் செய்த ப்ரியம்வதாவுக்கு அந்த சவால் இருந்திருக்கிறது. ‘அறம்’ என்னும் வார்த்தைக்கான மிகத் துல்லியமான ஆங்கில வார்த்தை என்ன? ‘ரைட்டீயஸ்னெஸ்’ (Righteousness) என்று அவர் எழுதியிருக்கிறார். ஆயினும், முழுமை பெறவில்லை. ‘அறம்’ என்னும் தலைப்பை, ‘ஸ்டோரீஸ் ஆஃப் த ட்ரூ’ (Stories of the True) என மொழிபெயர்த்து இருக்கிறார். ‘ட்ரூ’ (True) என முடியும் அந்தத் தலைப்பின் கவியழகு சொக்க வைக்கும் ஒன்று.
‘அறம்’ என்னும் முதல் கதையில், அறம், அறம் பாடுதல் என அந்த வார்த்தை நெசவாளியின் கையில் உள்ள நெசவுக் கருவி போல, வலதும் இடதும் சென்றொரு கதையைப் பின்னி நம் கண் முன்னே உலவவிடுகின்றது.
கதையின் நாயகன் கோபத்தில், தான் ஒரு புலவன் என்னும் இறுமாப்பில் ஓரிடத்தில் ‘அறம்’ பாடிவிடுகிறான்,
‘செட்டி குலமறுத்து செம்மண்ணின் மேடாக்கி,
எட்டி எழுக வென்றறம்’
இந்தக் கதையைப் படிக்கையில், எழுத்தாளன் எழுதிய அறப் பாடலை எப்படி மொழிபெயர்த்திருக்கிறார் பார்ப்போம் என ஒரு சந்தேகத்தோடுதான் படித்தேன்,
‘… Clan of the Chettis be slain
And as mounds of Red sand, heaped
O Rightousness, rise and reign’
சபாஷ்!
பின்னர் அவனே, கோபம் தணிந்து, செட்டியாரின் மனைவியின் வேண்டுகோளுக்குப் பணிந்து,
‘மெட்டி ஒளிசிதற மெய்யெல்லாம் பொன்விரிய
செட்டி குலவிளக்கு செய்த தவம்’
எனப் போற்றும் வரிகளை எழுதுகிறான். அவ்வரிகளை ப்ரியம்வதா,
‘Toe ring dazzling, the body radiant as gold,
The beacon of the Chettis sat in penance…’
என மொழிமாற்றம் செய்கிறார். இதுதான் மொழிபெயர்ப்பு! ஆங்கிலம் மட்டுமே தெரிந்த ஒருவருக்கு, ஒரு தமிழ்ப் புலவனின் சாபத்தையும் கருணையையும் ஓரளவு சரியான பின்ணணியில் சரியாக மொழிமாற்றித் தருவது.
கதைகள் எப்படிப்பட்டவை?
1970களின் கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பழக்கமான ஒரு சித்திரம் ஒன்று உண்டு. கறுப்பாக, களையாக, வாயில் சூயிங்கம் மென்றுகொண்டே, பரதநாட்டியம் பயின்ற பெண்மணியைப் போல இடுப்பை ஒசித்து, ஒரு அலட்சிய பாவத்துடன் நடந்து வரும் ஒரு அரக்கனின் சித்திரம். அவர் பெயர் விவியன் அலெக்ஸாண்டர் ரிச்சர்ட்ஸ் என்னும் விவியன் ரிச்சர்ட்ஸ். கிரிக்கெட் உலகத்தில், அவருக்கான இடத்தை அவரே எடுத்துக்கொண்டார். மற்றவர்கள் வியப்பில் பார்த்து நின்றார்கள். வணங்கான் நாடாரும் அப்படித்தான். ஒரு அடிமைச் சூழலில் இருந்தது, தன் சுய திறனால், தன் நாடும், தலைவர்களும் கொடுத்த உதவியைப் பயன்படுத்தி எழுந்து நின்று கர்ஜித்த ஒரு மாமனிதனின் வெற்றிக் கதை.
ஆனால், அதே அளவு திறன் கொண்ட இன்னொருவன், ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த ஒரே காரணத்தால், எழுந்து நின்றுமே, அவனது பிறப்பின் இழிவை அவன் வாழும் காலம் முழுதும் முயன்றும் துடைத்தெறிய முடியவில்லை. நூறு நாற்காலிகள் கதையின் இறுதியில், வாசகர் மனதில் அழியாமல் நிற்கும் கேள்வி இதுதான். ஒரு நாடார், பெரிய மனிதனாகிவிட முடிகிறது. ஆனால், ஒரு நாயாடி ஏன் நாயாடி என்னும் இடத்தில் இருந்து எழுந்து, சமூகத்துடன் ஒன்ற முடியவில்லை என்னும் கேள்விக்கு இன்றுமே பதிலில்லை.
இந்தக் கதைத் தொகுப்பில், மிக முக்கியமான கதை என்பது, டாக்டர் கே என்னும் கிருஷ்ணமூர்த்தியின் கதைதான். ‘யானை டாக்டர்’ எனத் தலைப்பிடப்பட்ட இந்தக் கதை, இந்த நூற்றாண்டின், மிகச் சிறந்த சூழல் இலக்கியம் எனச் சொன்னால், அது மிகையாகாது. அதேபோலத்தான், ‘சோற்றுக்கணக்கு’ என்னும் கெத்தேல் சாகிப்பின் கதை. இந்தக் கதைகளெல்லாம் உண்மை எனச் சொன்னால், இன்றைய சமூகம் நம்பத் தயங்கும் என்பதுதான் உண்மை.
‘மயில் கழுத்து’ கதையில், பாலு இசையில் தோய்ந்து உயர்ந்து மயங்கும் தருணத்தை ஜெயமோகன் நுட்பமாக எழுதியிருப்பார். அங்கு ப்ரியம்வதா நன்றாக மொழிபெயர்த்திருந்தாலும், தமிழின் ஒருமையும், உச்சமும் கூடி வராமல் போயிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
குறைகள் எனப் பெரிதாகச் சொல்ல விஷயங்கள் இல்லை என்பதே அல்ல மொழிபெயர்ப்புதான். மொழிமாற்றத்தில், சிறு சிறு நுட்பங்கள் தொலைந்துவிட்டிருக்கின்றன. அறம் சிறுகதையின் ‘கோலப்டீய்…’ தருணம்போல. ஆனால், அறம் வரிசைக் கதைகளின் அடிப்படைகளும், அழகும் பெரும்பாலும் கூடி வந்திருக்கின்றன. அதுதான் முக்கியம்.
மொழிபெயர்ப்புக் கலையைப் பற்றிப் பேசுகையில், மிகப் பிரபலமான இந்திய ஆங்கில எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான ஜெர்ரி பின்டோ, ‘மொழிபெயர்ப்பு என்பது, உப்பால் செய்யப்பட்ட படகில் அமர்ந்துகொண்டு, நதியின் குறுக்கே பயணம் செய்வதைப் போன்றதாகும். பயணத்தின்போது, உப்பு கரைவதுபோல, பல நுட்பங்கள் கரையத்தான் செய்யும். ஆனால், மறுகரையில் உப்பு இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்’ என்கிறார்.
இந்தக் கதைகளைப் படிக்கும், தமிழ்ச்சமூகத்தின் 21ஆம் நூற்றாண்டுக் குழந்தைகள், தங்கள் மூதாதையர் மீது, பெருமிதம் கொள்வார்கள். தமிழ்ச்சமூகம் பற்றிய சரியானதொரு சித்திரத்தை அறிந்துகொள்வார்கள்.
நம்மிடம் எழும் கேள்வி…
பழங்காலத் தமிழகத்தை, தமிழறியா நம் நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டுமெனில், ஏ.கே.ராமனுஜன் மொழிபெயர்த்த கணியன் பூங்குன்றனின் கவிதையைச் சொல்லலாம்.
‘Our precious lives follow their destined course,
Like rafts following the course of a mighty river
Clattering over rocks after a downpour
from lightning slashed skies’,
We aren’t impressed by the mighty;
Even more, we don’t scorn the lowly too.’
அதேபோல, சென்ற நூற்றாண்டின் தமிழ்ச்சமூகம் பற்றிய அறிமுகம் வேண்டுமெனில், ஜெயமோகனின் ‘அறம்’ கதைகளைச் சொல்லலாம்.
நம்மில் பலரும், பொருள் தேடலின் ஒரு பகுதியாக, உலகின் பல்வேறு பூகோளப்பகுதிகளில் வசிக்கிறோம். அந்த ஊர் மனிதர்களைச் சந்திக்கிறோம். அவர்களுடன் உரையாடுகையில், தவறாமல் நம் முன் எழும் கேள்வி, ‘நாம் யார்? நம் மொழியையும், கலாச்சாரத்தையும் பற்றி இவர்களுக்கு ஒரு சரியான அறிமுகத்தை எப்படித் தர முடியும்?’ என்பதுதான்.
கவலையின்றி, நாம் செய்ய வேண்டியதெல்லாம், ‘ஸ்டோரீஸ் ஆஃப் த ட்ரூ’ (Stories of the True) புத்தகத்தின் ஒரு பிரதியை அவர்கள் கைகளில் கொடுத்துவிட வேண்டியதுதான். மற்றவற்றை தமிழன்னை பார்த்துக்கொள்ளுவாள்!
இந்தத் தொடருக்கு அடுத்ததாக, ‘வெண்கடல்’ என்னும் தலைப்பில் இன்னும் நுட்பமான, அற்புதமான கதைகளை எழுதியிருக்கிறார் ஜெயமோகன். அவற்றையும் மொழிமாற்றம் செய்யுங்கள் ப்ரியம்வதா.
அறம் எழுக!
நூல்: ஸ்டோரீஸ் ஆஃப் த ட்ரூ (Stories of the True)
ஆசிரியர்: ஜெயமோகன்
ஆங்கிலத்தில்: ப்ரியம்வதா
பக்கங்கள்: 290
விலை: 799
பதிப்பகம்: ஜக்கர்நாட்
4
1
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Ravichandran Somu 2 years ago
Excellent article !!! ”அறம்” நான் படித்த மிகச் சிறந்த சிறுகதைகள் !!! நான் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்தால் முழுமையாக படித்து விட்டுதான் அடுத்த புத்தகத்தை படிப்பேன். ஆனால், “அறம்” கதைகளை என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. அவ்வளவு கனமான, உணர்ச்சிபூர்வமான உண்மைக் கதைகள். “நூறு நாற்காலிகள்” படிக்கும் போதே அழுதேன் !!! பாதிக்கு மேல் படிக்க முடியாமல் மூடி வைத்து விட்டேன். இரண்டு மாதங்கள் கழித்துதான் மீதி பாதி கதைகளை படித்தேன். ஜெயமோகனின் மொழி அபாரமானது !!! Going to order “Stories of the True” for my children
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.