கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 10 நிமிட வாசிப்பு

காலம் மாறிப்போச்சு காங்கிரஸாரே!

பாலசுப்ரமணியம் முத்துசாமி
13 Jul 2022, 5:00 am
3

ப.சிதம்பரம் எழுத்தில் ‘அருஞ்சொல்’ தளத்தில் வெளியான ‘எங்கே அந்த அக்கறை மிக்க நடுத்தர வர்க்கம்’ கட்டுரையை வாசித்தபோது ஏராளமான எண்ணங்கள் எழுந்தன. ஒருகாலத்தில் நாட்டு நடப்புகளில் அக்கறை கொண்டு, விவாதங்களில் ஈடுபட்ட, பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்த மத்தியதர வர்க்கம் இப்போது ஏன் அமைதியானது என்று கேட்டு மனம் வருந்துகிறார் ப.சிதம்பரம். 

விடுதலைப் போராட்டக் காலத்தில், ஆங்கிலக் கல்வி பெற்ற மத்தியதர வர்க்கத்திலிருந்து பெருந்தலைவர்கள் உருவாகிவந்ததாக, தாரா சந்த் எழுதிய புத்தகத்தைக் குறிப்பிட்டு அவர் எழுதியிருந்தார். விடுதலைப் போராட்ட காலத்தில் உருவாகிவந்த பல இயக்கங்களையும் மத்தியதர வர்க்கமே முன்னின்று நடத்தியிருக்கிறது. கம்யூனிஸ, நக்சல்பாரி இயக்கங்களிலுமே இவ்வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் பங்கு முக்கியமானது. அதெல்லாம் சரிதான். ஆனால், இத்தகு நடுத்தர வர்க்கம் இன்று சமூக அக்கறை கொண்ட விஷயங்களில் ஈடுபடாமல், நெட் ஃப்ளிக்ஸ் பார்க்கப் போய்விட்டது என எழுதிய சிதம்பரம், அப்படி எழுதுவதற்குப் பதில் இவ்வர்க்கம் ஏன் அப்படிப் போனது என யோசித்திருக்கலாம். 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாம் கட்ட ஆட்சியில், ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ என்னும் பதாகையின் கீழ், 2011இல் தலைநகரில் பெருங்கூட்டம் திரண்டது. அந்தப் போராட்டங்களின் பின்னணி என்ன, எப்படியானதாகப் பயன்படுத்தப்பட்டன; அண்ணா ஹசாரேவுக்குப் பின்னே யார் இருந்தார்கள் என்பதெல்லாம் தனித்துப் பேசப்பட வேண்டியவை என்றாலும், மன்மோகன் சிங் அரசை வீழ்த்தும் ஆயுதமாக ஊழல் ஒழிப்பு எனும் கருவியைக் கூராக்கியது அந்தப் போராட்டம்தான். நடுத்தர வர்க்கம்தான் அதன் முன்னணியில் நின்றது. பின்னணியில் அரசியல் சக்திகள் திரண்டு நின்றன. ஆட்சி அகற்றப்பட்டது. நடுத்தர வர்க்க அரசியலின் புதிய வடிவமாகவே ஒரு கட்சி - ஆஆக - உருவானது.

வெறும் 10 ஆண்டுகளுக்குள் எப்படி நாட்டின் நடுத்தர வர்க்கம் இப்படிக் குற்றம் சாட்டப்படும் அளவுக்குச் செயலிழந்துபோனது? 

போராட்டங்களுக்கான நியாயங்கள் அற்றுப்போய்விடவில்லை. சிதம்பரம் சொல்வது உண்மைதான். ஒவ்வொரு நாளும் போராடத்தக்க சூழல்கள் இன்றைய ஆட்சியினரால் உருவாக்கப்படுகின்றன. மக்கள் சில சமயங்களில் கொந்தளிக்கவும்செய்கின்றனர். பாஜக ஆட்சி காலகட்டத்தை எடுத்துக்கொண்டால், கிட்டத்தட்ட 14 மாதங்கள் நடந்த விவசாயிகள் போராட்டம் சமகால வரலாற்றின் மிக நீண்ட போராட்டங்களுள் ஒன்று. 

ஆனாலும் நடுத்தர வர்க்கம் இன்று ஸ்தம்பித்திருக்கிறதுதான். ஏன்?

அன்றாட வாழ்க்கைப்பாட்டுக்கான சிரமங்களே மக்களை நிலைக்குலைய வைக்கும் சூழலில், அவர்களிடம் உருவாகும் அதிருப்தியுணர்வுக்கு ஓர் எதிர்ப்பு வடிவம் கொடுக்க எதிர்க்கட்சிகளே முன்னணியில் நிற்க வேண்டும். இன்று எதிர்க்கட்சிகள் செயலிழந்து நிற்கின்றன. ‘தான் கோபப்பட்டு ஆகப்போவது என்ன?’ என்ற ஆற்றாமையிலேயேதான் பலர் சமூகவலைதளங்களோடு தங்களை முடக்கிக்கொள்கிறார்கள். காங்கிரஸ்தான் இதற்குப் பிரதான பொறுப்பேற்க வேண்டும்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ‘மத்திய தர வர்க்கம்’ மாறிக்கொண்டே இருக்கிறது. அதன் நிறம் மாறுகிறது. 1950களின் மத்திய தர வர்க்கமும், 2020களின் மத்திய தர வர்க்கமும் ஒரே சமூகப் பின்னணியைக் கொண்டது அல்ல. அவர்களுடைய முன்னுரிமைகளும், பிரச்சினைகளும் ஒன்றல்ல. எந்தத் தரப்பும் இன்று தங்கள் சாதிய வர்க்க நலன்களைக் கவனத்தில் கொள்ளவே செய்வார்கள்.

இதை காங்கிரஸ் புரிந்துகொள்ளத் தவறிவிட்டது. புரிந்துகொண்டிருந்தால்,  பொருளாதாரரீதியிலான 10% இடஒதுக்கீட்டை எப்படி பாஜகவோடு சேர்ந்து ஆதரித்திருப்பார்கள்?

காங்கிரஸ் இன்றைக்கு எந்தெந்தப் பிரச்சினைகளை முன்வைத்துப் போராடுகிறது? இந்தப் போராட்டங்களில் எவ்வளவு தீர்க்கத்தையும், உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது?

சமூகநீதி இன்றைய அரசியலின் முக்கியமான அம்சமாக உருவெடுத்திருக்கிறது.

மத்திய அரசின் 91 செயலர்களில், 88 பேர் உயர் சாதியினர் என்பது மிக முக்கியமான ஒரு பிரச்சினை. ஏனென்றால், நாட்டின் ஒவ்வொரு கொள்கை வகுப்பிலும் இவர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர். இவர்களுடைய பார்வைகள், முன்னுரிமைகள் 135 கோடி மக்களின் வாழ்வில் தாக்கம் செலுத்துகின்றன. இந்தப் பிரச்சினையை காங்கிரஸ் பேசுகிறதா? இதற்கு எதிராகப் போராடும் உத்தியோ, நீடித்த போராட்டத் திட்டமோ காங்கிரஸிடம் உள்ளதா?

பொதுத் துறைகள் நாசமாக்கப்படுவதைப் பேசுகிறது காங்கிரஸ். பொதுத் துறை நிறுவனங்கள், உயர்கல்வி நிறுவனங்களைக் கட்டியெழுப்பிய நேரு ‘இந்தியாவின் நவீன கோயில்’களாக அவற்றைப் பார்த்தார். சுதந்திர இந்தியாவுக்கு அவை பெரும் பங்களிப்பை வழங்கின. எல்லாம் சரி. ஆனால், 75 ஆண்டுகள் கழித்து பொதுத் துறை சார்ந்து இன்று பேசப்படும் விஷயம் என்ன? அதன் கர்ப்பக்கிருகங்களில், மத்தியதர வர்க்க / உயர் சாதியினரே அதிகம் நுழைந்து பயன் பெற்றார்கள். 75 ஆண்டுகள் கழிந்தும் அங்கே உயர் நிர்வாகங்களில் இன்னும் ஒடுக்கப்பட்ட மக்கள் நுழைய முடியாத நிலை. இதை காங்கிரஸ் பேசுகிறதா?

இன்று இந்தியாவில் தனியார் துறையைவிட அதிக வேலைவாய்ப்புகளைத் தரும் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் பணி மிகவும் வேகமாக நடக்கிறது. இதைத் தொடங்கிவைத்துப் புண்ணியம் தேடிக்கொண்டது காங்கிரஸ். லாபமே ஈட்டாத பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவது சரி. ஆனால், லாபமீட்டும் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவது எந்த வகையில் சரி? பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கும்போது, அத்துடன் ஒடுக்கப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு அழிந்துபோகிறது என்னும் உபவிளைவைக் காங்கிரஸ் என்றேனும் புரிந்துகொள்ள முயன்றதா? 

விடுதலை பெற்ற காலத்தில், உணவுப் பஞ்சத்தைத் தீர்க்க, வேளாண்மைக்கான பாசனக் கட்டமைப்புகள், ஆராய்ச்சி நிலையங்கள், விளைபொருளுக்கு ஆதார விலை, உற்பத்திக் கொள்முதல் போன்ற திட்டங்களைக் காங்கிரஸ் தீட்டியது. அதனால் உற்பத்தி உயர்ந்தது. இந்தியா பஞ்சத்திலிருந்து மீண்டது. அரசு நிர்வாக அமைப்பில் பணிபுரிந்த அலுவலர்கள், ஆராய்ச்சியாளர்கள் அனைவருக்கும் அதற்கான ஊதியமும் ஓய்வூதியமும் பெற்றார்கள். ஆனால், உழைத்து உற்பத்தி செய்து, உணவுப் பஞ்சம் தீர்த்த உழவர்கள் இன்றும் தங்கள் உழைப்புக்கான சரியான லாபம் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இந்த நிலை சராசரியாக 2.5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் இந்தியாவில் மட்டுமல்ல, சராசரியாக 440 ஏக்கர் வைத்திருக்கும் அமெரிக்காவிலும்தான். வேளாண்மையில் லாபமின்மை இன்று இந்தியாவின் 50% மக்களைப் பாதிக்கிறது. இந்தப் பிரச்சினையை எந்த அளவுக்கு உள்வாங்கியிருக்கிறது காங்கிரஸ்? இதற்கென என்ன நீடித்த போராட்டத் திட்டத்தை வைத்திருக்கிறது காங்கிரஸ்?

ஜிஎஸ்டி என்றொரு வரிவிதிப்புமுறையைக் கொண்டுவந்தார்கள். அதன் நடைமுறை விதிகளினால், சிறு / குறு தொழில்கள் பாதிக்கப்படுகின்றன என அத்தொழில்முனைவர்கள் புகார் சொன்னார்கள். இந்தியாவில், அந்தத் தொழில்களே வேளாண்மைக்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்புகளைத் தரும் துறை. இதில் உள்ள வேலைவாய்ப்புகள் பெரும்பாலும் உடல் உழைப்பினால் செய்ய வேண்டியவை. இதில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் ஏழைகளும் ஒடுக்கப்பட்டவர்களும். ஜிஎஸ்டியில் உள்ள குளறுபடிகளை காங்கிரஸ் எதிர்க்கிறது. சரி. ஆனால், தன்னுடைய எதிர்ப்புக்கு அது கொடுத்திருக்கும் உருவம் என்ன?

துப்பாக்கிகள், பீரங்கிகளுக்கு எதிராக சத்தியாக்கிரகம் என்னும் மாற்றுப் போராட்ட முறையை காந்தி முன்வைத்தார். ஆனால், ஒவ்வொரு போராட்டத்தின் போதும் தன் உயிரையே பணயம் வைத்துத்தான் போராடினார். பிரிவினைக்கலவரங்களில் தனியொரு மனிதராக போர்க்களத்தில் நின்றார். ஒரு ராணுவப்படை செய்ய முடியாததை, தனியொரு மனிதனாக நின்று சாதித்தார். ஆனால், காங்கிரஸ் அவரின் அடையாளங்களை (கதர், உண்ணாவிரதம்) மட்டும் எடுத்துக்கொண்டு, அப்போராட்டங்களின் நோக்கங்களை, தீவிரத்தை விட்டுவிட்டது.

பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து ஒரு நாள் பெட்ரோல் பங்குகளின் முன்பு நின்று குரல் எழுப்பி, கைதாகி, மாலை விடுதலையாவதல்ல காந்தியின் போராட்ட முறை. உண்மையான ஈடுபாடும் நோக்கங்களும் இருக்கையில், போராட்டங்கள் வெல்லும் வாய்ப்புகள் அதிகம் என்பதற்கு அண்மையில் வெற்றிபெற்ற உழவர் சத்தியாக்கிரகமே சாட்சி.

காங்கிரஸ் உண்மையிலேயே நாட்டுக்கு எதுவும் செய்ய வேண்டுமெனில், இன்று முதலாளித்துவ ஊடகங்களில், குளிர்பதன அறைகளில் அமர்ந்து வெற்றுப் பரபரப்பு விவாதங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணடிக்காமல், இந்த மக்கள் வாழும் தளங்களுக்குச் சென்று, அவர்களுடன் இணைந்துகொள்ள வேண்டும். அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் வழிகளை, தீர்வுகளை அவர்களின் பங்களிப்புடன் உருவாக்க முயல வேண்டும். 

கேரளாவின் அரசியல், 1957இல் காங்கிரஸ் என்னும் நிலப்பிரபுத்துவ நிர்வாக அமைப்பிடம் இருந்து, அதன் வெளியில் இருந்து எழுந்த மக்கள் சக்திகளிடம் சென்றது. 1967இல், தமிழ்நாட்டில் அது மீண்டும் நடந்தது. 2024இல் ஒட்டுமொத்த நாட்டுக்கும் அதுவே நடக்க வேண்டும். 

அரசியல் என்பது சாதாரண மக்களின் இயக்கமாக மாற வேண்டும். அதில் ஒடுக்கப்பட்டவர்கள், உழவர்கள், சிறுதொழில் செய்பவர்கள் மற்றும் பெண்களின் பிரதிநிதிகள் இருக்க வேண்டும்.

இந்த ஆண்டு அக்டோபர் 2 அன்று ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒரு நடைபயணத்தைத் தொடங்கவிருக்கிறார். இது காந்திய வழி. ஆனால், இதை வெறும் ஊடக வெளிச்சத்துக்காகச் செய்யாமல், அவர் ஒவ்வோர் ஊரிலும் ஒடுக்கப்பட்டவர்களுடன், இளைஞர்களுடன், உழவர்களுடன், பெண்களுடன் உரையாட வேண்டும். ஒவ்வோர் ஊரிலும், புதிய நூறு பேருடன் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும். 

இன்று ஊடகம் என்பது தனிநபர்களின் களம். ஒடுக்கப்பட்டவர்கள், உழவர்கள், பெண்கள், சிறு தொழில்முனைவோர் தரப்பிலிருந்து, மக்களின் பிரச்சினைகளைப் பேசும், முன்னெடுக்கும் இந்த நூறு பேர் நாளைய தேர்தலின் தளகர்த்தர்களாக மாற வேண்டும். அவர்களின் பங்களிப்பு தேர்தலுடன் நின்றுவிடாமல், தேர்தலுக்கு பின்பும் தொடர்வதாக இருக்க வேண்டும்

ஒவ்வொரு மாநிலத்திலும், அம்மாநிலத்தின் மக்களின் மொழியில் உரையாடும் உள்ளூர் காங்கிரஸ் இளைஞர் தலைவர் இதன் பொறுப்பாளராக வேண்டும். அவர் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தை உள்வாங்கியவராக, பதவியின் பின்னால் செல்லாதவராக இருத்தல் அவசியம். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொருவர் இப்படி இருப்பார்கள். ‘பாரத் ஜோடொ யாத்ரா’ என இந்தியைத் தமிழில் எழுதினால், மக்கள் அதனுடன் அடையாளப்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.  

இப்படி அடுத்த 1.5 ஆண்டுகள், 500 நாட்கள், 5,000 மணிநேரங்களை காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தி, செறிவாகச் செலவிட்டு, ஒரு புதிய தொடர்புச் சங்கிலியை உருவாக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட தளங்களில் இருந்தது புதிய மத்தியதர வர்க்கத்தை உருவாக்க வேண்டும்.

காங்கிரஸின் அனுதாபிகளான பழைய மத்தியதர வர்க்கம், தன் சுயநலத்தைப் பார்த்துக்கொள்ளும் குழுவாக மாறி வெகு காலமாகிறது. அவர்கள் இனி காங்கிரஸின் பக்கம் வரமாட்டார்கள். அவர்களை காங்கிரஸின் சித்தாந்த எதிரிகள் கவர்ந்து சென்றுவிட்டார்கள். ஆக, உருவாகியிருக்கும், உருவாகவிருக்கும் புதிய மத்திய தர வர்க்கத்தோடு உரையாட காங்கிரஸ் தயாராக வேண்டும்!

 

தொடர்புடைய கட்டுரை: 
‘எங்கே அந்த அக்கறை மிக்க நடுத்தர வர்க்கம்’

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


5

1





பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

சொ. சங்கரபாண்டி   2 years ago

மிகச்சரியான பதிலை அளித்திருக்கிறீர்கள். பாரதீய சனதாவின் இன்றைய அனைத்து மக்களுக்கெதிரான வல்லாதிக்க நடவடிக்கைகள் அனைத்துக்கும் காங்கிரசுதான் தொடக்கப்புள்ளி! அறவழிப் போராட்டங்களை காங்கிரசு மதித்ததுண்டா? கூடங்குளம் மக்கள் இரண்டாண்டுகளாய் நடத்திய போராட்டம் மிகவும் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடந்த அறவழிப்போராட்டம். அவர்களுடைய கோரிக்கைகள் முழுமையாக ஏற்கப்படக்கூடியவையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அம்மக்களை மிகக்கீழ்த்தரமான வழிகளில் ஒடுக்கியது காங்கிரசு அரசு. அம்மக்களின் மேல் போடப்பட்ட பொய் வழக்குகளும், ஏவப்பட்ட காவல்துறை வன்முறைகளும் காங்கிரசு எத்தனை வன்முறைக் கட்சியெனப் புரியவைத்தது. சுப உதயகுமாரனுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருவதாக நாடாளுமன்றத்திலேயே பொய் சொன்னார் மன்மோகன்சிங். அவர் மேலிருந்த அனைத்து மதிப்பீடுகளும் சரிந்தன. இதே ப. சிதம்பரத்தின் கயமைத்தனத்தால்தான் உதயகுமாரனுடைய கடவுச்சீட்டு பறிக்கப்பட்டு இன்னும் திருப்பியளிக்கப்படவில்லை, வங்கிக்கணக்கு முடக்கப்பட்டு இன்றுவரை எச்சான்றுகளுமின்றி தண்டிக்கப்பட்டிருக்கிறார். அப்துல்கலாம் போன்ற நல்லவர்கள் கூட பொய்ப்பரப்புரைகளை மேற்கொள்ளப் பயன்படுத்தப்பட்டனர். இப்பொழுது நீலிக்கண்ணீர் வடிக்கிறாரா சிதம்பரம்?

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

MANIKANDAN KARMEGAM   2 years ago

காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்ல..பிஜேபி சித்தாந்தத்தை எதிர்க்கும் அனைத்து கட்சி தலைவர்களும் இதை கடைப்பிடிக்க வேண்டும்

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அ.பி   2 years ago

அருமையான கட்டுரை. என் உள்ள குமுறல்களை அப்படியே எழுதி விட்டீர்கள்

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

தீவிரவாதம்ஜெஇஇதமிழ் வம்சாவளிபுதுமடம் ஜாபர் அலி கட்டுரைநபர்வாரி வருமானம்முதல் கட்டம்: ‘இந்தியா’ அணிக்கே ஆதாயம்குஜராத்திஇபிஎஸ்சைபர்திருநாவுக்கரசர் சமஸ் பேட்டிசுதந்திரப் போராட்ட இயக்கம்ஜனநாயகப் பண்புகருப்பு எம்ஜிஆர்மயிர்தான் பிரச்சினையா?நடுவர் மன்றம்மாங்கனித் திருவிழாபிடிஆர் மதுரை பேட்டிhindu samasகையால் மனிதக் கழிவகற்றுவோர்உண்மைகள்சாதனை நிறுவனம் அமுல்நீதிமன்ற அலுவல் மொழிஅருணா ராய் கட்டுரைபுள்ளி விவரங்கள்பெரும்பான்மைவாதத்தின் பெருமிதம்அரசியல் பிரதிநிதித்துவம்புலன் விசாரணைஉள் மூலம்ஆளுங்கட்சிகர்த்தாதபுரம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!