கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 7 நிமிட வாசிப்பு

எங்கே அந்த அக்கறை மிக்க நடுத்தர வர்க்கம்?

ப.சிதம்பரம்
11 Jul 2022, 5:00 am
3

ந்தியாவில் இப்போது நடுத்தர வர்க்கம் இருக்கிறதா என்று சில வேளைகளில் நான் சந்தேகப்படுகிறேன்; அரசமைப்புச் சட்டப்படியே எல்லாம் நடக்க வேண்டும் என்று அக்கறைப்படுகிற நடுத்தர வர்க்கம், நாட்டின் அனைத்துத் தரப்பு குறித்தும் கவலையும் அக்கறையும் உள்ள நடுத்தர வர்க்கம். அந்த விழுமியங்களுடன் பல தனி மனிதர்களை இப்போதும் பார்க்கிறேன். ஆனால், ஒரு வர்க்கமாக ஒருகாலத்தில் இருந்தவர்கள் இன்றைக்குக் கிட்டத்தட்ட ‘இல்லாதவர்களைப் போல’ அமைதியாகிவிட்டனர். 

சுதந்திரப் போராட்ட காலத்தைப் பார்ப்போம். பத்தொன்பதாவது நூற்றாண்டில் மிகச் சிலர்தான் பணக்காரர்கள். ஏனையவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகளே. மேற்கத்திய கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு – குறிப்பாக ஆங்கிலம் கற்றுத்தரப்பட்ட பிறகு, ஆங்கிலத்தில் பிற பாடங்கள் பயில்விக்கப்பட்ட பிறகு - படித்த இடைப்பட்ட வர்க்கத்தை மேற்கத்திய நீதியமைப்பு உருவாக்கியது, அதுவே நடுத்தர வர்க்கமானது.

இந்தியாவில் முதல் முறையாக ஆசிரியர்கள், ஆங்கில மருத்துவமுறை மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், அரசு ஊழியர்கள், ராணுவ அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் என்று அறிவுஜீவிகளான இடைப்பட்ட வர்க்கம் உருவானது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை தாங்கியவர்களில் மிகச் சிலரைத் தவிர்த்த அதிகம் பேர், இந்த நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்தவர்கள்தான்.

அதில் குறிப்பிடத்தக்கவர்கள் தாதாபாய் நௌரோஜி, கோபாலகிருஷ்ண கோகலே, லாலா லஜ்பத் ராய், பாலகங்காதர திலக், சித்தரஞ்சன் தாஸ், பாபு ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபபாய் படேல், அபுல் கலாம் ஆசாத், ராஜகோபாலாச்சாரி, கவிக்குயில் சரோஜினி நாயுடு, கேளப்பன், பொட்டி ஸ்ரீராமுலு. “வெகுஜன மக்களிடம் தேசிய உணர்வைத் தட்டி எழுப்பிய பெருமையும், தேசிய விடுதலை இயக்கத்தை வழிநடத்திய பெருமையும், அன்னிய ஆட்சியிடமிருந்து நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த பெருமையும் இந்திய நடுத்தர வர்க்கத்தைத்தான் சேர வேண்டும்” என்று டாக்டர் தாரா சந்த், தன்னுடைய ‘இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு’ நூலில் பதிவுசெய்திருக்கிறார்.

களத்தில் தலைமை தாங்கினர்

மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்றாலும் இந்தத் தலைவர்களின் அழைப்பையேற்று மக்கள் பெருந்திரளாகக் களத்தில் இறங்கினர். உழவர்களின் போராட்டமும் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டமும் சுதந்திரப் போராட்டத்துடன் சேர்ந்துகொண்டு - தடுத்து நிறுத்த முடியாத - மாபெரும் மக்கள் போராட்டங்களாக வடிவெடுத்தன. அன்றைய மத்தியதர வர்க்கத் தலைவர்கள், அவர்களைப் பின்பற்றிய மக்கள் ஆகியோருடைய தனித்துவம் எதுவென்றால் நாட்டு சுதந்திரத்தைத் தவிர வேறு எதையும் நாடாத அவர்களுடைய தன்னலமற்ற அர்ப்பணிப்புதான்.

மத்தியதர வர்க்கம் தலைமை தாங்கி நடத்திய சுதந்திரப் போராட்ட இயக்கம் நாட்டில் நடந்த ஒவ்வொரு சம்பவத்தையும் உணர்ச்சிப் பெருக்குடனேயே பின் தொடர்ந்தது. தொலைக்காட்சி, இணையதளம் என்ற இக்கால தகவல்தொடர்பு வசதிகள் ஏதுமில்லாத அந்தக் காலத்தில், தேசம் பற்றிய செய்திகள் வெகு வேகமாக மக்களிடையே பரவின. பிஹாரின் சம்பாரனில் நடந்த சத்தியாகிரகம், ஜாலியன்வாலாபாக்கில் ஜெனரல் டயர் நிகழ்த்திய படுகொலை, பூரண சுயராஜ்யம் அடைந்தே தீருவோம் என்று காங்கிரஸ் மாநாட்டில் இயற்றப்பட்ட உறுதிமிக்கத் தீர்மானம், பிரிட்டிஷ் அரசின் உப்பு வரிச்  சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க குஜராத் மாநிலத்தில் தண்டி என்ற இடம் நோக்கி காந்தி தலைமையில் நடந்த உப்பு சத்தியாகிரகம், பகத்சிங் - ராஜகுரு - சுகதேவ் என்ற தன்னலமற்ற விடுதலைப் போராட்ட வீரர்களை பிரிட்டிஷ் அரசு இரக்கமின்றி தூக்கில் போட்ட கொடுமைக்கு எதிரான எதிர்ப்புணர்வு, வெள்ளையனே வெளியேறு என்ற அறைகூவலுடன் காந்திஜி தொடங்கிய இயக்கம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்துக்கு போரில் கிடைத்த வெற்றி என்று ஒவ்வொரு நிகழ்வும் நாட்டு மக்களிடையே மின்னல் வேகத்தில் பரவி, அரசை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யும் ஆற்றலைப் பெருக்கின. இப்படி சுதந்திரப் போராட்டத்தின்போது நாட்டுக்கு ஊக்க சக்தியையும் தலைமையையும் தந்து வழிநடத்தியது மத்தியதர வர்க்கம்.

இல்லாத தலைமை!

மத்தியதர வர்க்கம் இன்றைக்கு இருந்தும், நாட்டின் முக்கிய நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றாமல் ஒதுங்கி நின்று மவுனம் சாதிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. நாட்டில் நடக்கும் எந்த நிகழ்ச்சியும், தாங்களாகவே ஒதுங்கி நிற்கும் மத்தியதர வர்க்கத்தை உசுப்பிவிட்டதாகத் தெரியவில்லை. இடைவிடாமல் உயர்ந்துகொண்டே வரும் விலைவாசி, மக்களின் வாங்கும் சக்தியை முறிக்கும் வரிச்சுமை, பெருமளவிலான வேலையில்லாத் திண்டாட்டம், கோவிட் பெருந்தொற்றின்போது கையறு நிலையில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் 2020இல் உள்நாட்டிலேயே அகதிகளாக அலைக்கழிக்கப்பட்ட அவலம், கோவிட் காய்ச்சல் பரவலால் சிகிச்சையும் கவனிப்பும் இன்றி லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்த பரிதாபம், காவல் துறையினரும் மத்தியப் புலனாய்வு அமைப்புகளும் கையாளும் அளவுக்கதிகமான அத்துமீறல்கள், அப்பட்டமாக மீறப்படும் மனித உரிமைகள், வெறுப்பைத் தூண்டும் பேச்சுகள், போலியான செய்திகள், முஸ்லிம்களையும் கிறிஸ்துவர்களையும் அரசியல் அதிகாரத்திலிருந்து திட்டமிட்டு ஒதுக்கும் போக்கு, அரசியல் சட்டத்தை அதிர்ச்சி தரும் வகையில் மீறும் நடவடிக்கைகள், மக்களை அச்சுறுத்தி ஒடுக்கும் சட்டங்கள், அரசமைப்புச் சட்டம் உருவாக்கிய நிறுவனங்களின் ஒடுக்குதல்கள், தேர்தலில் கிடைத்த வெற்றிக்கு மாறாக பிற கட்சி ஆட்சிகளைக் கவிழ்த்து மாற்றுவது, சீன எல்லையில் நடைபெறும் தொடர் மோதல்கள் – என்று எதுவுமே இந்திய நடுத்தர வர்க்கத்தை இப்போது பாதிப்பதைப் போலத் தெரியவில்லை.

சமீபத்திய சில நிகழ்வுகளை உதாரணங்களுடன் விளக்குகிறேன். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் பதவியை நானா படோல் 2021 பிப்ரவரியில் ராஜிநாமா செய்தார். பேரவைத் தலைவரை ரகசிய வாக்கெடுப்பு மூலம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பேரவை விதிகள் கூறுகின்றன. வெளிப்படையான வாக்களிப்பு மூலம் பேரவைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று விதிகள் பேரவையால் மாற்றப்பட்டன.

மகாராஷ்டிர ஆளுநராகப் பதவி வகிப்பவர் உத்தராகண்டில் முதல்வராக இருந்தவர், பாஜகவைச் சேர்ந்தவர். பேரவைத் தலைவர் தேர்தலுக்கான தேதியை மட்டுமே நிர்ணயிக்க வேண்டிய ஆளுநர், ‘பேரவைத் தலைவர் தேர்தல் தொடர்பான விதி மாற்றம் சர்ச்சைக்குள்ளாகிவிட்டதால் தேர்தலை நடத்த முடியாது’ என்று தடுத்துக்கொண்டே இருந்தார். இப்படி 17 மாதங்கள் தடுத்ததால் பேரவைத் தலைவர் இல்லாமல் துணைத் தலைவர் மூலம் பேரவை நடந்தது.

பாஜக ஆதரவுடன் சிவசேனைத் தலைமையிலான மகாராஷ்டிர விகாஸ் அகாடி அரசைக் கவிழ்த்த ஏக்நாத் ஷிண்டே 2022 ஜூன் 30இல் முதல்வராகப் பதவியேற்றார். புதிய சட்டப்பேரவைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க தேதி வழங்குமாறு ஆளுநரை அவர் கேட்டுக்கொண்டார். ‘வெளிப்படையான வாக்கெடுப்பு’ மூலம் ஜூலை 4இல் புதிய பேரவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பேரவைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான விதிகள் தொடர்பாக ஆளுநர் எழுப்பிய ஆட்சேபமும் மாயமாக மறைந்துவிட்டது.

மிகச் சில பத்திரிகைகளில் இதைக் கண்டித்து தலையங்கம் எழுதப்பட்டதே தவிர மக்களிடமிருந்து பெருத்த எதிர்ப்போ, கண்டனமோ எழவில்லை. மகாராஷ்டிர மக்களிடமிருந்து குறிப்பாக படித்த மத்தியதர வர்க்கத்திடமிருந்து ஆளுநரின் கேள்விக்குரிய செயல்பாடுகள் குறித்து கோபாவேசமான எதிர்வினைகள் எதுவுமே இல்லை. 17 மாதங்களாக பேரவைக்குத் தலைவரே இல்லை என்பது தொடர்பாக யாரும் கவலைப்படவும் இல்லை, இந்திய அரசமைப்புச் சட்டம் என்ற புத்தகம் குறித்தும் அக்கறை காட்டவில்லை. அமெரிக்காவிலோ, பிரிட்டனிலோ இப்படி பேரவைத் தலைவர் இல்லாமல் அந்தப் பதவி காலியாக இருக்கும்படி விட்டுவைத்திருப்பது குறித்து உங்களால் கற்பனை செய்ய முடியுமா?

இதோ இந்னோர் உதாரணம். பொது சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) பேரவையின் 47வது கூட்டம் சமீபத்தில் நடந்தது. பாஜகவின் ஆதிக்கம் இதில் அதிகம். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு தானியம், மீன், பன்னீர், தேன், வெல்லம், கோதுமை மாவு, உறையவைக்கப்படாத இறைச்சி, மீன், பொரி உள்ளிட்டவற்றுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது.

அச்சிட, எழுத, வரைய உதவும் பேனா மை, கத்திகள், கரண்டிகள், முள்கரண்டிகள், காகிதக் கத்திகள், பென்சில் சீவிகள், எல்இடி விளக்குகள் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி 12%லிருந்து 18%ஆக உயர்த்தப்பட்டது.

அன்றாட அறை வாடகை 1,000 ரூபாயாக இருந்தால் வரி கிடையாது என்ற நிலையை மாற்றி ஹோட்டல்களில் ரூம் வாடகை ஒரு நாளைக்கு ரூ.1,000 என்றால் 12% வரி செலுத்த வேண்டும் என்று விதிக்கப்பட்டது. மொத்தவிலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்க விகிதம் 15.88%ஆகவும் நுகர்வோர் விலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்க விகிதம் 7.04%ஆகவும் இருக்கும்போது இப்படி வரி விதிப்பும் உயர்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குடியிருப்போர் நலச் சங்கங்கள், அரிமா சங்கங்கள், மகளிர் அமைப்புகள், தொழில் வர்த்தக சபைகள், தொழிற்சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகள் என்று எதுவுமே இந்த வரி உயர்வு குறித்து கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. காந்தி ஏன் உப்புச் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார் என்பது சில பேருக்காவது நினைவிலிருக்கும் என்று நம்புகிறேன்.

சுயமான தனியொதுங்கல்

காலையில் செய்தித்தாள் வாசிப்பது இப்போது வெறும் சடங்காகிவிட்டது. நெட்ஃபிளிக்ஸில் மூழ்கிவிடுகிறார்கள், ஐபிஎல் கிரிக்கெட்டில் பொழுதைப் போக்குகிறார்கள். நாட்டில் என்ன நடக்கிறது என்கிற அக்கறை இல்லாமல் மத்தியதர வர்க்கத்தினர் தாங்களாகவே ஒதுங்கிவிட்டதைப் போலத் தோன்றுகிறது. விவசாயிகள் தங்களுடைய வாழ்வாதாரத்துக்காகப் போராடுகிறார்கள். ராணுவத்தில் சேர வேண்டும் என்ற லட்சியம் கொண்ட ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களுடைய லட்சியம் சிதைக்கப்படுவது கண்டு போராடுகிறார்கள்.

பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், தன்னார்வத் தொண்டர்கள் சிறு எண்ணிக்கையில் போராடுகின்றனர். இந்தப் போராட்டங்களின் முடிவுகள்தான் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகின்றன என்பதையாவது நடுத்தர வர்க்கம் உணர்ந்திருக்குமா என்று வியப்படைகிறேன்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

4

1

பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Niladharan Ayyappan   2 years ago

மையப்பிரச்சினைகளிலிருந்து மக்களை திசைதிருப்பும் பல்வேறு அம்சங்கள் இந்த நவபொருளாதாரச்சூழலில் நிறைந்திருக்கின்றன.(நீங்கள் கூறியதைப் போல நெட்பிளிக்ஸ் ஓர் உதாரணம்) மக்களை அரசாங்கமும் பிரதான விவகாரங்களிலிருந்து திசைதிருப்பும் பல்வேறு வேலைகளை திட்டமிட்டுச் செய்கிறது. இன்றைய மத்திய வர்க்கம் 'எவ்வளவு அடித்தாலும் தாங்கும்' மந்தவர்க்கமாக மாறியதற்கு இவைகளே காரணம். மக்களிடம் எந்த ஒரு கிளர்ச்சியும் தீடீரென தோன்றிவிடுவதில்லை. மக்கள் மனங்களில் கிளர்ச்சிக்கான கனல் மூட்டப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இது கனல் கனிந்து தீயாகும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும். கேள்வி என்னவென்றால்.. கனலை வைத்து ஊதி ஊதி தீ செய்யவேண்டிய காங்கிரஸ் அதைச் செய்கிறதா? மத்தியவர்க்கத்தின் மந்தத்தன்மையை உங்கள் அரசியல் நடவடிக்கைகளால் தட்டி எழுப்பியிருக்க வேண்டாமா? இன்றைய காங்கிரஸ் கட்டமைப்பு ரீதியாகவும் சித்தாந்தரீதியாகவும் மிகவும் பலவீனப்பட்டிருக்கிறது. இது காங்கிரசின் பலவீனமட்டுமல்ல; இந்திய ஜனநாயகத்தின் பலவீனம். கழுகினைப்போல் வலிநிறைந்த இரண்டாம் பிறப்பிற்கு காங்கிரஸ் தன்னை உட்படுத்திக்கொள்ளவில்லை என்றால், காங்கிரஸையும் இந்திய ஜனநாயகத்தையும் யாராலும் காப்பாற்ற முடியாது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Jothibasu   2 years ago

ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்து. ஆனால் ஓர் தேசிய எதிர்கட்சியாக காங்கிரஸ் இதனை வருடங்களில் எந்த போராட்டத்தை அகில இந்திய ரீதியில் முன்னெடுத்தது. பல நேரங்களில் பெயரளவில் அறிக்கை மட்டும் எதிர் கட்சியின் கடமை என்பது சரியா.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

Thiruvasagam   2 years ago

“காலையில் செய்தித்தாள் வாசிப்பது இப்போது வெறும் சடங்காகிவிட்டது. நெட்ஃபிளிக்ஸில் மூழ்கிவிடுகிறார்கள்“ - இதை அருஞ்சொல்லில் வெளியிடுவதற்கு பதில் நேரடியாக கார்த்தி சிதம்பரத்திடம் சொல்லிவிடலாம்..!

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

தகவல் தொழில்நுட்பம்மீண்டும் கறுப்பு நாள்கரும்பு சாகுபடிடாக்டர் தேரணிராஜன்மனிதச் சமூகம்கூட்டணியாட்சிபீட்டர் அல்ஃபோன்ஸ் அருஞ்சொல் தமிழ்நாடு நவ்சூர்யாஜன்பத்மல்லிகார்ஜுன் கார்கேசுயமோகித்தன்மைமத்திய பல்கலைக்கழகங்கள்பேராசிரியர்1232 கி.மீ.இரும்புகண்களைத் திறந்த கண்காட்சிகள்புறக்கணிப்புமதச்சார்பற்ற அரசாங்கம்மனுராஜ் சண்முகசுந்தரம் கட்டுரைஒளிசமூகப் பிளவுநாடாளுமன்றம்மோதானிபாலினச் சமத்துவம்அப்துல் வாஹித் கட்டுரைஆய்வாளன்பூக்கள் குலுங்கும் கனவுஆணின் விந்தணு பூஜ்ஜியத்துக்குப் போய்விடுமா?சிலருக்கு மட்டுமே இது மகிழ்ச்சியான புத்தாண்டு!இந்திய ஜனநாயகம்!

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!