கட்டுரை 9 நிமிட வாசிப்பு

அமுல்: தொழில்நுட்ப முன்னோடி

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
03 Dec 2021, 5:00 am
1

அமுல். இன்று 75-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் ‘அமுல்’ பல வகைகளில் ஒரு முன்மாதிரி சாதனை நிறுவனம். ‘அமுல்’ வெற்றியே இந்தியாவெங்கும், வெண்மைப்புரட்சி என்னும் திட்டமாக உருவெடுத்தது. ‘ஆவின்’, ‘மில்மா’, ‘விஜயா’, ‘நந்தினி’, ‘வேர்கா’ என மாநிலம்தோறும் பால் கூட்டுறவு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, இன்று உலகின் மிகப் பெரும் பால் உற்பத்தியாளராக இந்தியா ஓங்கி வளர உதவியுள்ளது. இந்தியாவின் கோடிக்கணக்கான விவசாயிகளின் புன்னகை முகமாக உருவெடுத்திருக்கும் ‘அமுல்’ நிறுவனத்தின் இந்த வைரத் தருணத்தை இந்த வாரம் முழுவதும் கொண்டாடுகிறது ‘அருஞ்சொல்’. அதன் ஒரு பகுதியாகவே இந்தக் கட்டுரை வெளியாகிறது.

மெரிக்க அதிபர் பில் கிளிண்டன், 2000-ம் ஆண்டு இந்தியா வந்திருந்தார்.  வழக்கமாக வரும் வெளிநாட்டு அதிபர்கள் செய்வதுபோல, சில பல நிகழ்வுகளில் பங்கேற்று, தாஜ்மஹாலுக்கு முன் அமர்ந்து மனைவியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்றார்.

அங்கே மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம் ஒன்றுக்கு விஜயம் செய்தார். கொள்முதல் செய்யப்படும் பாலின் தரத்தைச் சோதிக்க அங்கே மின்னணுக் கருவி இருந்தது. பாலின் தரம் உடனுக்குடன் சோதிக்கப்பட்டு அதன் கொழுப்பு மற்றும் இதர தரவுகள் உடனே சொல்லப்பட்டது. கூட்டுறவுச் சங்கத்துக்கு அளிக்கப்படும் பாலுக்கான விலை, கொழுப்பின் அளவைக் கொண்டு மதிப்பிடப்பட்டு, அதற்கான பணம், வாரா வாரம் உற்பத்தியாளர்களின் வங்கிக் கணக்குக்கு நேரே செலுத்தப்பட்டுவிடப்படுவதாகச் சொன்னார்கள்.

மகளிர் மட்டும் திரைப்படத்தில் ஒரு நகைச்சுவைப் பாத்திரம், ‘டெக்னாலஜி இவ்வளவு வளந்துருச்சா?’ என வியந்துகொண்டே இருக்கும். அப்படி வியந்தார்  கிளிண்டன். அந்தச் செய்தியை வெளியிட்ட பத்திரிக்கைகளும் வியப்படைந்தன.

தொழில்நுட்பம் 

ஆனால், ‘அமுல்’ தேசிய பால் வள நிறுவனம் இரண்டையும் அறிந்திருக்கும் ஒருவருக்கு அது வியப்பாக இருக்காது. ஏனெனில், ‘அமுல்’ இன்றைய பெருவளர்ச்சியை அடைவதற்கும், இந்தியாவில் வெண்மைப் புரட்சி உருவாவதற்கும் பின்ணணியில், தொழில்நுட்பம் ஒரு முக்கியக் காரணியாக இருந்திருக்கிறது.

இந்தியா வெப்பமான நாடு. பால் உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் ஏழைகள். அவர்களுக்கே சரியான சுகாதாரமான வீடுகள் இல்லாதபோது, மாடுகளுக்கு எங்கே சுத்தமான தொழுவம் இருக்கும்? எனவே அவர்கள் கறந்து தரும் பாலில் நுண்ணுயிர்ச்சுமை மிக அதிகமாக இருக்கும். கறந்து சில மணிநேரங்களில், பால் கெட்டுப் போவது மிகச் சாதாரணம்.

1946-ம் ஆண்டு தொடங்கிய ‘அமுல்’ நிறுவனம் ஆனந்த் நகருக்கு அருகிலுள்ள கிராமங்களில் கொள்முதல் செய்து, மும்பை நகருக்கு அனுப்பத் தொடங்கியிருந்தது. தொடக்கத்தில் பால் கேன்களில் அனுப்பப்படும் பால் கெட்டுவிடாமல் இருப்பதற்காக, பாலை ‘பாஸ்ச்சுரைசிங்’ என்னும் முறையில் அதிலுள்ள நுண் கிருமிகளை அழிப்பார்கள். பின்னர் கேன்களின் அடைத்து அதைச் சுற்றி ஈரமான துணியைச் சுற்றி அனுப்பிக்கொண்டிருந்தனர்.

மும்பைக்கு 200 லிட்டர் அனுப்பத் தொடங்கிய ‘அமுல்’, பால் தேவை அதிகமாக அதிகமாக 6 ஆண்டுகளில் தினமும் 20 ஆயிரம் லிட்டருக்கும் அதிகமாகக் கொள்முதல் செய்து அனுப்பும் அவசியம் வந்தபோது, தேவையான நவீனத் தொழில்நுட்ப இயந்திரங்களை வாங்கி நிறுவிக்கொண்டது. ஆனந்த் நகரில் இருந்து குளிரூட்டப்பட்ட ரயில் வேகன்கள் வழியே மும்பைக்கு கெட்டுவிடாமல் பால் அனுப்ப முடிந்தது.

ஆனாலும், அவர்களால் தீர்க்கப்பட முடியாத ஒரு பிரச்சினை இருந்தது. குளிர்காலத்தில் அதிகமாக உற்பத்தியாகும் பாலை, அவர்களால் முழுவதுமாகக் கொள்முதல்செய்ய முடியவில்லை. இதனால், உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் கல்வி நிதிக் குழுமம் – யுனிசெஃப் (UNICEF), இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பால் பவுடர் உற்பத்திசெய்யும் இயந்திரம் வாங்குவதற்கு உதவ முன்வந்தது. குளிர்காலத்தில் அதிகமாகக் கொள்முதல் செய்யப்படும் பாலை, பவுடராக மாற்றி சேமித்துக்கொள்ள முடியும். பின்னர் தேவைப்படும்போது மீண்டும் பாலாக மாற்றிக்கொள்ளலாம்.

எருமைப் பால் பவுடர்

இதிலும் ஒரு பிரச்சினை இருந்தது. குஜராத்தும், மராத்தியமும் இணைந்த அன்றைய மும்பை மாகாணத்தின் பால் கமிஷனர் குரோடி, எருமைப் பாலிலிருந்து பவுடர் தயாரிப்பது சாத்தியமே இல்லை எனச் சொல்லி அதற்கு அனுமதி மறுத்துக்கொண்டிருந்தார். நியூஸிலாந்து நாட்டின் பால் தொழில்நுட்ப நிபுணர்கள் அவருக்கு அப்படிச் சொல்லியிருந்தார்கள். ‘அமுல்’ மேலாளர்களுக்கும், குரோடிக்கும் இதனால் பெரும் கருத்து மோதல் ஏற்பட்டிருந்தது.

பிரச்சினை பெரியதாகி, மும்பையில் பால்துறை அமைச்சர் தின்கர்ராவ் தேசாய் அலுவலகம் வரை சென்றது. யுனிசெஃப் நிர்வாகிகளுடன், குரியனும், மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் அவருடன் படித்த டாலயாவும் உடன் சென்றிருந்தனர். பல மணி நேர விவாதத்தில் முடிவு எட்டப்படாமல், மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. உணவுக்காக வெளியே வந்தவர்கள் கண்ணில், எதிரில் இருந்த எல் & டி நிறுவனம் கண்ணில்பட்டது. அதைக் கவனித்த டாலயா, உற்சாகத்துடன், “எல்&டி நிறுவனம் மும்பையில் பால் பவுடர் இயந்திரம் தயாரிக்கத் தொடங்கியிருப்பதாகப் படித்திருக்கிறேன் – வா, சென்று பேசிப்பார்க்கலாம்!” எனக் குரியனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார். அங்கிருந்து விற்பனை மேலாளரிடம், “நாங்கள் பால் பவுடர் தயாரிக்கும் இயந்திரத்தை வாங்க விரும்புகிறோம்!” எனச் சொன்னார் டாலயா. “அந்த இயந்திரம் அந்தேரியில் ஒரு வேதிப் பொருள் தொழிற்சாலைக்கு விற்கப்பட்டுவிட்டது” எனச் சொன்னார் விற்பனை மேலாளர். “அந்த நிறுவனத்துடன் பேசி, நாளைக்கு மட்டும் நாங்கள் ஒரு சோதனை செய்ய அனுமதி கொடுக்க முடியுமா? அப்படிச் செய்தால், நாங்கள் உங்களிடம் இருந்தது இயந்திரம் வாங்கிக்கொள்வோம்!” என்றார் டாலயா. எல்&டி மேலாளர் ஒத்துக்கொண்டார்.

மதிய உணவுக்குப் பின் கூடிய கூட்டத்தில், நாளைக் காலை அந்தேரியில், எருமைப்பாலில் இருந்தது பவுடர் தயாரிக்க முடியும் என நாங்கள் நிருபிக்கிறோம் எனச் சொன்னார் குரியன். அடுத்த நாள் காலையில், அந்தேரி தொழிற்சாலையில், எருமைப்பாலிலிருந்து பவுடர் தயாரிக்க முடியும் என நிறுவினார் டாக்டர் குரியன். “ஆனால், இதை மீண்டும் பாலாக மாற்ற முடியுமா?” என சந்தேகம் எழுப்பினார் குரோடி.

பவுடரை நீரில் கலந்து மீண்டும் பாலாக்கிக் காட்டினார் குரியன். “சுவை அப்படியே இருக்குமா?” என இன்னொரு சந்தேகம் குரோடிக்கு. அதைக் குடித்துப் பார்த்த அமைச்சர், “நல்லா இருக்கு” எனச் சான்றளித்தார். இப்படியாகப் பஞ்சாயத்து முடிந்தது.

பால் பதனிடும் நிலையம்

குளிர் காலத்தில் வரும் அதிக உற்பத்தி முழுவதும் கொள்முதல்செய்யப்பட்டு பால் பவுடராக மாற்றப்பட்டு, கிடங்குகளில் வைக்கப்பட்டு, கோடை காலத்தில் பால் பற்றாக்குறை சமயத்தில், பவுடர் மீண்டும் பாலாக மாற்றப்படும் வணிக முறை அமலுக்கு வந்தது. ஆனந்த் பால் உற்பத்தியாளர்களின் பெரும் பிரச்சினை தீர்க்கப்பட்டது. எருமைப் பாலிலிருந்தது பவுடர் தயாரிக்க முடியாது என உலகின் முன்னேறிய நாடுகளின் தொழில்நுட்ப அறிஞர்களின் கருத்து பொய்யாக்கப்பட்டது.

பால் பவுடர் தயாரிக்கும் இயந்திரத்துடன் கூடிய, புதிய பால் பதனிடும் நிலையத்தை நிறுவ அமுல் நிறுவனம் முடிவு செய்தது. யுனிசெஃப் மற்றும் நியுசிலாந்து அரசு மானியங்களுடன், 48 லட்சம் செலவில் திட்டமிடப்பட்டது. ஒரே ஆண்டில் கட்டி முடித்துவிடுவோம் என முடிவெடுத்துச் செயல்படுத்தினார்கள் குரியனும், டாலயாவும்.

ஆசியாவிலேயே மிகப் பெரும் கொள்ளளவு கொண்ட அமுலின் பால்பதனிடும் ஆலை, ஒரே ஆண்டில் உருவானது. 1955-ம் ஆண்டு, அக்டோபர் 31-ம் தேதி, சர்தார் வல்லப் பாய் படேலின் பிறந்த நாளன்று, அவரது சகா ஜவஹர்லால் நேருவால் திறந்துவைக்கப்பட்டது.

நேருவிடம் குரியனை அறிமுகப்படுத்திய மொரார்ஜி தேசாய், “எருமைப் பாலில் இருந்தது பவுடர் தயாரிக்க முடியாது எனச் சொன்னார்கள்; ஓராண்டில் பால் பதனிடும் நிலையத்தை உருவாக்க முடியாது என்றும் சொன்னார்கள். ஆனால், குரியன் இரண்டையும் பொய்யாக்கி, இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார்” என்றார். “முடியாது” என முன்வைக்கப்படும் தடைகளை உடைத்துச் செய்யப்படுவதே சாதனை! “உங்களைப் போன்றவர்கள் நாட்டில் இருப்பதை எண்ணிப் பெருமைப்படுகிறேன் குரியன்” எனச் சொல்லி அவரைத் தழுவிக்கொண்டார் நேரு.

சில ஆண்டுகள் கழித்து, செறிவூட்டப்பட்ட பால் தயாரிப்புக்கான தொழில்நுட்பத்தை ஒரு பன்னாட்டு நிறுவனம் இந்தியாவுக்குக் கொண்டு வரப் பெரும் தாமதம் செய்தபோது, குரியனும், டாலயாவும் இணைந்து, அதை உற்பத்தி செய்யும் இயந்திரங்களையும் இந்தியாவிலேயே வடிவமைத்துக்கொண்டார்கள். ‘அமுல்’ வளர்ந்து, அதன் அடுத்தகட்டமாக டாக்டர் குரியன் தலைமையில், தேசிய பால் வள வாரியம் தொடங்கப்பட்டது.

தேசிய பால் வள வாரியம், 'அமுல்' போன்ற பால் உற்பத்திக்கூட்டுறவு நிறுவனங்களைப் பல மாநிலங்களில் தொடங்கியது. வெண்மைப் புரட்சி என அழைக்கப்பட்ட அந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது, நாட்டின் முக்கியமான பால்ச் சந்தைகளான பெருநகரங்களுக்கு, கொள்முதல் தளங்களிலிருந்து பாலை லாரி டேங்கர்கள் மூலமாகவும், ரயில் வேகன்கள் மூலமாகவும் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. தேசிய பால் வள நிறுவனம், இந்திய பால் தொழில் இயந்திர உற்பத்தி நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி, இந்த டேங்கர்களை வடிவமைத்து உற்பத்தி செய்யத் தொடங்கியது.

பேக்கிங் வசதி

ஐடிஎம்சி என அழைக்கப்படும் இந்த நிறுவனம் 1978-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் பால் பதனிடும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான தரமான இயந்திரங்கள், உதிரிப் பாகங்கள் முதலிவற்றை உற்பத்திசெய்துவருகிறது. பாலை 'பாக்' செய்து விநியோகம் செய்யத் தேவையான ப்ளாஸ்டிக் ஃபிலிம்களும் இங்கே உற்பத்திசெய்யப்படுகின்றன.

மேலை நாடுகளில் இருந்தது உருவான தொழில்நுட்பத் தயாரிப்புகளான ‘டெட்ரா பேக்’ போன்ற நிறுவனங்களுடன் தொழில்நுட்ப / வணிக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொண்டு, அவற்றை இந்தியாவில் தயாரிக்கத் தொடங்கியது ஐடிஎம்சி. தேசிய பால் வள நிறுவனத்தின் செயல்பாடுகளில், தொழில்நுட்பம் என்பது மிக முக்கியமான பலமாக இருந்தது.

இதன் பின்ணணியில் குரியன், டாலயா என்னும் இரண்டு வலுவான தொழில்நுட்ப நிபுணர்கள் இருந்தனர். அது மட்டுமல்லாமல், தேசிய பால் வள நிறுவனம் என்பது வழக்கமான ஐஏஎஸ் அதிகாரிகளால் நடத்தப்படும் அரசுத் துறைபோலல்லாமல் தொடக்கத்தில் இருந்தே பால் துறை மற்றும் மேலாண்மைத் துறை நிபுணர்களால் இயக்கப்பட்டுவந்தது. வெண்மைப் புரட்சியின் வெற்றிக்கான முக்கியமான கூறுகளில் அதுவும்  ஒன்று எனலாம்.  அதை எப்படிக் குரியன் சாதித்தார்?

(நாளை பேசுவோம்…)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


1






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   3 years ago

கடைசிப்பத்தியை மத்திய, மாநில அரசுகள் அனைத்தும் குறைந்தபட்சம் நூறு முறையாவது படிக்கவேண்டும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

ராசேந்திரன்: உயர்த்திப் பிடிக்கவேண்டிய உயிர்க்கொடசமஸ் வி.பி. சிங்மஹாராஷ்டிரம்பிறகு…மோகன் பாகவத்சந்திர கிருஷ்ணா கட்டுரைகுக்கீ திருடன்தி அதர் சைட் ஆஃப் சைலன்ஸ்ஊழியர் சங்கங்களின் இழிநிலைகரோனா இடைவெளிபாத பாதிப்பு6வது அட்டவணைமுட்டம்மனிதவளம்பெலகாவிஅரசியல் அறிவியல்பசுமை கட்டிடங்கள்ஐ.ஏ.எஸ்.சென்செக்ஸ்இது சாதி ஒதுக்கீடு!நீலம் பண்பாட்டு மையம்ஆஸ்டியோபோரோசிஸ்நடவடிக்கைமத்திய நல்வாழ்வுத் துறையின் செயலர்ஆர்டிஐ சட்டம்அறங்காவலர்தலைமைநயத்தக்க நாகரிகம்வியக்க வைக்கும் ஹரப்ப நகரம் ‘பனவாலி’ஆளுநரைப் பதவி நீக்க முடியுமா?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!