லக்கிம்பூர் கெரி வன்முறை தொடர்பான ‘புதிய தலைமுறை’ விவாதத்தில், “போராட்டம் என்றாலே, அது வன்முறையாகத்தான் முடிகிறது. வன்முறையில்லாமல் போராட்டம் நடத்த காந்தியாலேயே முடியாது” என்பதான கருத்துகளை முன்வைத்திருந்தார் பத்ரி. அதற்கு மறுப்புத் தெரிவித்து ‘அருஞ்சொல்’லில் நான் எழுதிய கட்டுரைக்கு மறுவினையாக, மீண்டும் தன் தரப்பை வலியுறுத்தி முகநூலில் எழுதியிருந்தார். அதுவும் ‘அருஞ்சொல்’லில் வெளியாகியிருந்தது.
இந்த மறுவினையில் பத்ரி முன்வைக்கும் வாதங்களிலும் பல சிக்கல்கள் உள்ளன. இத்தகைய அபாயகரமான பார்வை பலரையும் சென்றடைவதால் அதுகுறித்து விவாதிப்பது அவசியம் ஆகிறது.
லக்கிம்பூர் கெரி வன்முறை விவாதத்தில், எடுத்தவுடனேயே முன்ஜாமீன் போட்டுக்கொள்கிறார் பத்ரி. “நான் போராளி அல்ல. எனக்கு சோர்ஸ்கள் கிடையாது. எனவே நான் இதைப் பற்றி எதுவும் சொல்லப்போவதில்லை” என்கிறார். அடுத்த நிமிடத்திலேயே, “இதில் இறந்துபோன 9 பேர் பல தரப்புகளைச் சார்ந்தவர்கள். இந்தப் போராட்டம் நாட்டுக்கு நல்லதல்ல” எனும் நிலைப்பாட்டை எடுக்கிறார்.
லக்கிம்பூர் கெரி வன்முறை ஒரு பிரச்சினையின் வெளிப்பாடு. அது ஏன் வெளிப்படுகிறது என ஆராய்வதே அறிவுஜீவிகளின் கடமை ஆகும். ஆனால், “பிரச்சினை என்னவெனப் பேசமாட்டேன். ஆனால், அதில் வெளிப்படும் வன்முறை நாட்டுக்கு நல்லதல்ல” என்று ஒருவர் பேசுவாரேயானால், அது என்ன மாதிரியான வாதம்? “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இயந்திரத்தில் சத்தம் வருகிறது. நான் இயந்திரத்தின் தொழில்நுட்பப் பிரச்சினையைப் பற்றிப் பேசப்போவதில்லை. ஆனால், அதிலிருந்து வரும் சத்தம் நாராசமாக இருக்கிறது. காது வலிக்கிறது” எனச் சொல்வதற்கு ஒப்பானது இது.
இந்த வாதங்களின் வழியாக, பத்ரி மிகக் கவனமாக ஒன்றைத் தவிர்த்துத் தாண்டிப் போகிறார் - அது அரசு நடத்தும் வன்முறை. ஹரியானா முதல்வர், உழவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடும் வகையில் பேசியது, ஒன்றிய அமைச்சர் அஸிஷ் மிஸ்ரா, உழவர்கள் போராட்டத்தை எப்படி அடக்க வேண்டும் என்று பேசியது போன்றவற்றை மிகக் கவனமாகத் தவிர்த்துவிட்டு, “உத்தர பிரதேசத்தில் அமைச்சர் வரப்போகும் பாதையை மறித்தல், மோசமான சம்பவம் ஒன்று நடந்து, அதில் சில தோழர்களைக் காவு கொடுத்த பின், கல்லால் அடித்துச் சிலரைக் கொலைசெய்த” எனத் தன் வாதத்தைச் ஜோடிக்கிறார்.
பாதையில் நடந்து சென்றுகொண்டிருக்கும் மக்கள் மீது கார் வேண்டும் என்றே மோதியது உலகமே பார்த்த விஷயம். ஆனால், அதற்குப் போராட்டக்காரர்கள்தான் காரணம் என வாதிடுவது, ‘என்ன விலை கொடுத்தேனும் தன் தரப்பைக் காப்பேன்’ என்னும் தேர்ந்த வழக்குரைஞரின் வாதமே அன்றி வேறில்லை.
தொலைக்காட்சி விவாதத்தில், “வன்முறையில்லாத போராட்டம் காந்தியினால்கூட சாத்தியமில்லை” எனச் சொன்ன பத்ரி, “லக்கிம்பூர் நிகழ்வில் போராட்டக்காரர்கள் காந்திய வழியில் போராடியிருக்க வேண்டும்” எனச் சொல்லியிருப்பதுதான் ஆகச் சிறந்த நகைச்சுவை. ஓர் அரசியலர், மக்கள் மீது கார் ஏற்றிக் கொல்வாராம்... அங்கே குழுமியிருந்த உழவர்கள் காந்திய முறைப்படி, அந்த வன்முறையைத் தாங்கிக்கொண்டிருக்க வேண்டுமாம். அதாவது காரை ஏற்றிக் கொல்பவனைப் பற்றி ஒரு கண்டனம் இல்லை. பதில் வன்முறையில் (அது தவறு, கண்டிக்கப்பட வேண்டியது, நான் உளமாரக் கண்டிக்கிறேன்) ஈடுபட்டவர்களுக்கு மட்டும் அறிவுரை!
ஆணிவேரைப் பேசலாமா?
மக்களாட்சியில் மக்கள்தாம் எஜமானர்கள். ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் அவர்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டிருப்பவர்கள். மன்னராட்சி முறையில்தாம், மன்னர் என்பவர் கடவுள். அவர் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர் எனும் மனநிலை இருக்கும். நாம் எந்த நூற்றாண்டில் இருக்கிறோம் என்பதையே ஒருவேளை மறந்துவிட்டாரோ பத்ரி என்று தோன்றுகிறது.
மிக முக்கியமாக இந்தப் பிரச்சினையின் ஆணிவேரைப் பற்றிப் பத்ரி பேசப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில், அங்கே தரவுகள், அவரது அரசியல் நிலைக்கு ஆதரவாக இல்லை. அதனாலென்ன... நாம் பேசுவோம். பத்ரி கண்ணை மூடிக்கொண்டால், உலகம் இருண்டுவிடாது அல்லவா?
கடந்த பல ஆண்டுகளாக, உழவர் போராட்டங்கள் நாட்டின் பல பகுதிகளில் நிகழ்ந்துவருகின்றன. 2018-ல் 40 ஆயிரம் உழவர்கள் மராத்திய நகரம் நாசிக்கிலிருந்து மும்பை வரை, 180 கி.மீ. பாத யாத்திரை சென்றார்கள். ஒரு ஞாயிறு மாலை மும்பை நகரின் எல்லையை அடைந்தார்கள். அடுத்த நாள், மராத்தியப் பள்ளியிறுதி பொதுத் தேர்வு நடக்கவிருந்தது. பகலெல்லாம் நடந்து களைத்திருந்தாலும், அடுத்த நாள் பகலில் அவர்கள் மீண்டும் சாலையில் நடந்து செல்லும்பட்சத்தில், நகரில் போக்குவரத்து பாதிக்கப்படும்; அது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இடையூறாக இருக்கும் என உணர்ந்து, களைப்பைப் பொருட்படுத்தாமல், அன்றிரவே நடைப்பயணத்தைத் தொடர்ந்து தங்கள் போராட்ட மைதானத்தை அடைந்தார்கள்.
பொதுமக்கள் சாலைக்கு வந்து, போராட்டக்காரார்களுக்கு நீரும் உணவும் வழங்கினார்கள். பத்திரிகைகள் அதைப் பாராட்டிச் செய்திகளை வெளியிட்டன. இது அரசு அனுமதி பெற்று முறையாக நடந்த உழவர் போராட்டம். அரசுப் பிரதிநிதிகளும், உழவர் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களது கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாகச் சொன்னார்கள். ஆனால், கோரிக்கைகள் எதுவுமே இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.
அன்று மராத்திய உழவர்கள் வைத்த கோரிக்கைகளில் முக்கியமானது, டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அறிக்கையின்படி வேளாண் உற்பத்திக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலை கொடுக்க வேண்டும் என்பதாகும்.
சுவாமிநாதன் குழு எதற்காக அமைக்கப்பட்டது?
டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன், பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்களுள் ஒருவர். அவர் தலைமையில், நவம்பர் 2004-ல் ஒரு குழு ஒன்றிய அரசால் அமைக்கப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர்கள் மேம்பாட்டை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில், வேளாண் திட்டங்களைத் தீட்டுமாறு அக்குழு கேட்டுக்கொள்ளப்பட்டது. நான்கு ஆண்டுகளில், 5 அறிக்கைகளைக் கொடுத்தது அக்குழு. அதில் ஒன்றுதான், வேளாண் உற்பத்திக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை என்பதாகும்.
உழவர்களின் உற்பத்திச் செலவுகளை மொத்தமாகக் கணக்கிட்டு, அதனுடன் 50%ஐ சேர்த்து உழவர்களுக்கு விலையாகக் கொடுக்க வேண்டும் என்றொரு திட்டத்தை சமர்ப்பித்தது. அன்றைய பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, சுவாமிநாதன் குழு அறிக்கையைச் செயல்படுத்துவோம் எனப் பொதுக்கூட்டங்களில் முழங்கினார். பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் இந்த வாக்குறுதி இருந்தது.
ஆனால், நடந்ததோ வேறு. உழவர்களுக்கு அறிவிக்கப்பட்ட விலை, உழவர்கள் எதிர்ப்பார்த்த சுவாமிநாதன் குழு பரிந்துரைத்த விலையல்ல. அதைவிடக் குறைவு. ஆனால், அதுதான் சுவாமிநாதன் குழு சொன்ன விலை என்கிறது அரசு. உழவர் பிரச்சினை இங்கிருந்து தொடங்குகிறது.
இதற்கிடையில், மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்தது அரசு. எதிர்க்கட்சிகள், இந்தச் சட்டங்கள் ஒரு சிறப்புக் குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தன. அரசு சம்மதிக்கவில்லை. மக்களவையில், ஆளுங்கட்சிக்கு உள்ள பெரும்பான்மை காரணமாகச் சட்டம் நிறைவேறியது. ஆனால், மேலவையில் ஆளுங்கட்சிக்குப் பெரும்பான்மை இல்லை. எனவே, எதிர்க்கட்சிகள் ஓட்டெடுப்பை வலியுறுத்தின. துணை ஜனாதிபதியோ, இச்சட்டங்கள் குரல் வாக்கெடுப்பு முறையில் வென்றதாக அறிவித்தார். இதுபற்றிய இரு தரப்புச் சர்ச்சைகள் இருந்தாலும், வாக்குச் சீட்டு மூலம் வாக்கெடுப்பு நிகழ்ந்திருந்தால், அரசுத் தரப்பு தோற்றிருக்கும் சாத்தியங்களே இருந்தன.
இந்தச் சட்டங்களை எதிர்த்து, உடனடியாகப் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் குரல்கள் எழுந்தன. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தது, ஷிரோமணி அகாலி தளம், ராஷ்ட்ரிய லோக் தந்த்ரிக் பார்ட்டி இரு கட்சிகளும் வெளியேறின.
இந்தச் சட்டங்களை ஏன் சில மாநிலங்கள் மட்டும் எதிர்க்கின்றன?
1. விடுதலை பெற்ற காலத்தில், இந்தியா உணவுப் பற்றாக்குறையால் தவித்தது. எனவே, உணவு தானிய உற்பத்திக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்தது.
2. குறைந்தபட்ச விலையை நிர்ணயித்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம். மத்திய பிரதேசம் போன்ற முக்கியமான விவசாய மாநிலங்களில், அரசு உணவுக் கழகம் பெருமளவில் தானியங்களைக் கொள்முதல் செய்தது. கொள்முதல் செய்யப்பட்ட தானியங்கள், ஏழைகளுக்குப் பொது விநியோக முறை வழியாக குறைந்த விலையிலோ /இலவசமாகவோ வழங்கப்பட்டன.
3. தானிய உற்பத்தி, 5 கோடி டன்னில் இருந்தது 30 கோடி டன்னாக உயர்ந்தது. இந்தியா பஞ்சங்களில் இருந்தது தப்பி, உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைந்தது.
4. ஆனாலும், வேளாண்மையானது மற்ற துறைகளைப் போல லாபம் கொண்டதாக மாறவில்லை. வேறு வழியின்றி செய்யப்படும் தொழிலாகத்தான் இன்றும் உள்ளது.
இங்குதான், பாஜக அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்டங்கள் வழியே, இத்துறையில் தனியார் துறை நுழையலாம் எனும் அச்சம் உழவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்ச விலை முறையும், அரசு கொள்முதலும் நிறுத்தப்படும் எனவும் அஞ்சுகிறார்கள். குறைந்தபட்ச விலை முறை நிறுத்தப்படாது எனச் சொன்னாலும், அரசு கொள்முதல் தொடரும் என்று உழவர்களுக்கு எழுத்து வடிவில் உறுதி தர ஒன்றிய அரசு தயங்குகிறது.
குறைந்தபட்ச விலைமுறை + அரசு கொள்முதல் என இருக்கும் அரசுத் திட்டம் கைவிடப்பட்டால், விலை வீழ்ச்சி ஏற்படும். பஞ்சாப் மாநிலத்தில் நெல்லை கிலோ 19.40 ரூபாய்க்கு அரசு கொள்முதல் செய்கிறது. ஆனால், கொள்முதல் இல்லாத பிஹாரில், நெல் விலை கிலோ 10 ரூபாய்க்கும் குறைவாக இருக்கிறது. அரசு கொள்முதல் நின்றால் என்ன நடக்கும் என்ற உழவர்களின் அச்சத்துக்கு இதுவே காரணம்.
அரசு கொள்முதல் ஆதரவு பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேச மாநிலங்களில் அதிகம் என்பதால், கொள்முதல் நிறுத்தப்பட்டால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இம்மாநில உழவர்களே. எனவேதான் அவர்கள் எதிர்க்கிறார்கள். இம்மாநிலங்கள் டெல்லிக்கு அருகில் இருப்பதால், மிகச் சடுதியில் டெல்லியை அடைந்து விடுகிறார்கள்.
இதுவரை 11 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துவிட்டன. ஆனால், தீர்வு எட்டப்படவில்லை. தனியார் துறை வேளாண் வணிகச் சங்கிலியில் பங்கெடுத்தால், பெரும் நன்மைகள் விளையும் என அரசுத் தரப்பு சொல்கிறது. ஆனால், உலகின் மிக முன்னேறிய நாடுகளிலுமே, தனியார் துறைப் பங்கெடுப்பினால் பெரும் நன்மைகள் விளைந்தது எனச் சொல்ல எந்த ஆதாரமும் இல்லை. முன்னேறிய நாடுகளில், இந்தியாவைவிடப் பல மடங்கு அதிக மானியங்களை உழவர்களுக்குக் கொடுக்கிறார்கள்.
இந்த அளவுப் பெரும் சிக்கல்களைக் கொண்ட பிரச்சினையை, இந்தியாவின் பாதி மக்கள்தொகையைப் பாதிக்கும் பிரச்சினையை, இவை நியாயமானவையா இல்லையா எனப் பேசப்போவதில்லை பத்ரி. ஆனால், இந்தப் பிரச்சினையை முன்வைத்துப் போராடும் உழவர்கள் மீது திணிக்கப்பட்ட வன்முறைக்கு எதிரான அவர்களுடைய எதிர்வினையை மட்டும் விமர்சிப்பேன் என்கிறார். அபத்தம் இல்லையா இது!
பிரச்சினைக்குத் தீர்வு
நான் முதல் கட்டுரையில் எழுதியதுபோல, அரசுடன் முரண்படுதல், போராட்டம் நடத்துதல் போன்றவை அரசமைப்புச் சட்டம் பொதுமக்களுக்கு அளித்துள்ள அடிப்படை உரிமை. ஆனால், அதைச் சட்டமன்றம் / பாராளுமன்றம் மற்றும் நீதிமன்றங்களுக்குள் நடக்கும் ஒரு விஷயம் மட்டுமே எனச் சுருக்குவது, மையப்படுத்தப்பட்ட எதேச்சதிகார அரசியலுக்கு அளிக்கும் ஆதரவாகவே அமையும். அந்த அரசியல், சிறுபான்மையாக இருக்கும் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும்.
1988-ல் இன்றைய உழவர் போராட்டக் குழுத் தலைவர்களுள் ஒருவரான ராகேஷ் திகாயத்தின் தந்தை மகேந்திர சிங் திக்காயத் 5 லட்சம் உழவர்களுடன், டெல்லியை முற்றுகையிட்டார். முதலில் கடுமையாக நடந்துகொண்ட அரசு, ஒரு வார காலத்தில் உழவர் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினைக்குத் தீர்வு கண்டது.
இன்றைய அரசோ போராடுபவர்களை இடைத்தரகர்கள் என்றது. பின்னர் காலிஸ்தானிகள் என்றது. கிட்டத்தட்ட 10 மாதங்களாகப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவராமல் இழுத்தடித்துக்கொண்டிருக்கிறது. அது எதிர்த் தரப்பைக் களைப்படைய வைக்கும் ஒரு மலிவான தந்திரம் மட்டுமே. ஆளும் அரசின் இரண்டாம் நிலைத் தலைவர்கள், உழவர்கள் மீது வன்முறையை ஏவும் வகையில் பேசிவருகிறார்கள். பிரதமர், இப்படி ஒரு போராட்டம் நடப்பதாகவே வெளிப்படுத்திக்கொள்ளவில்லை.
இறுதியாக, உழவர்கள் போராடும் இடத்துக்கு அருகே, நடந்த ஒரு கொலைச் செயலை உழவர் போராட்டத்துடன் இணைத்து இப்போது ஒரு முகநூல் பதிவை எழுதியிருக்கிறார் பத்ரி. “சில சீக்கியர்களின் கைவண்ணத்தால் விவசாயிகளின் அகிம்சைப் போராட்டம், அதன் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக அறிவுஜீவிகள் தொடர்ந்து தங்கள் ஆதரவைத் தர வேண்டுமாய்க் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!” என்கிறது அந்தப் பதிவு.
உங்கள் வாதங்களின் ஆழம் இவ்வளவுதானா பத்ரி?
1
பின்னூட்டம் (3)
Login / Create an account to add a comment / reply.
Seyed Bukhari 3 years ago
போராட்டங்களையும் போராடுபவர்களையும் கொச்சைப்படுத்துவோர் இல்லையென்றால் போராட்டத்தில் சுவராஸ்யம் இருக்காது. போராடுபவர்கள் தங்களை சீர்தூக்கி பார்த்துக் கொள்ள இதுபோன்ற போராட்டத்திற்கு எதிரான அர்த்தமற்ற விமர்சனங்கள் அவசியம்.மண்டல் கமிஷனுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் வேடிக்கை பார்த்த ஒருவரை எரித்துக் கொன்றவர்களின் அணியை சேர்ந்தவர் பத்ரி. அவரை பொறுத்தவரை அரசும் அரசோடு கூடிக்குலாவும் அதிகாரமும் கற்பிக்கப்படும் கடவுளர்களின் அம்சம்.எதிர்க்கபடக் கூடாத ஏகாந்தம்.மன்னர் ஆட்சியில் ஒரு ராஜா என்றால்.ஜனநாயகத்தில் அதுவே நூற்றுக்கணக்கில் எண்ணிக்கையில் அடங்க மறுக்கிறது.இதற்கான சான்று தான் ஆஸிஸ் மிஷ்ரா!அமைச்சர் பதவியை விட்டும் இன்றுவரை விலக்கப்படவில்லை.அமைச்சர்களின் வழியை மறித்து போராடுதல் என்பதை பெருங்குற்றமாக கருதும் பத்ரியின் மனநிலையும் இவ்வகையானதே.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
Ganeshram Palanisamy 3 years ago
SBI ஒரு 85% இந்துமத ஊழியர்களை கொண்ட இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனம். இந்நிறுவனம் ஒருவருக்கு 500ரூ அதிகமாக(?) கட்டணம் வாங்கிவிட்டது. கோபமடைந்த வாடிக்கையாளர் SBIயின் credit cardஐ இரண்டு துண்டுகளாக வெட்டி அதை வீடியோ எடுத்துப்போட்டார். அவ்வளவு ஆத்திரம். ஆனால் சோற்றில் மண் அள்ளிப் போட்டாலும் அமைதியாக வேண்டுகோள் வைக்கவேண்டும் இவர்கள் அறிவுரை கூறுவார்கள். அந்த ஒருவரின் பெயர் SV sekar
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Saran Viveka 3 years ago
ஞாநி கூட தீவிரமா விவாதிச்சு அவரை கேள்வி கேட்கும் போது, சட்டுன்னு நிறுத்தி “இது புத்திசாலிதனமான கேள்வியா இல்ல நேர்மையான கேள்வியா, சரன்?” என்று கேட்பார். எந்த நோக்கத்தில் கேட்டேனோ அதை சொல்வேன், சரி ந்னுட்டு அதற்க்கு பதில் சொல்வார். நேர்மைன்னு சொன்னா பதில் ஒரு விதமாகவும், புத்திசாலிதனம் என்று சொன்னால் பதில் வேறு விதமாகவும் இருக்கும். (இங்கு புத்திசாலிதனம் என்றால் எதிராளியை மடக்கும் தர்க்கம் மட்டும்தான், அதில் நீதி , நியாயம் ஏதும் இருக்காது) பத்ரியின் முந்தய பதிவை பார்க்கும்போது அதுதான் தோன்றியது “ஜோடித்தல்”. வார்தைகளை எப்படி போட்டு ஒரு பதிலை சொல்கிறோமோ அப்படியே படிப்பவனும் எடுத்துக்கொள்வான், அவனுகென்று எந்த புத்திம் இல்லை என்ற மன உறுதியில் இருந்து வரும் தர்க்கமுறை. 😀 “காரை ஏற்றியவர்களை எளிதாக கடந்து சென்றுவிட்டு, கல்லால் அடித்து கொன்றார்கள் என்று அரேபிய கற்கால முறை போல சொல்வது. “காந்திய போராட்டம் என்றால் காரை ஏற்றி கொன்னாலும் அடித்தாலும் அப்படியே வாங்கிக்கொண்டே இருக்க வேண்டும்” என்று நம்மை கேட்கிறார்கள். புத்திசாலிதனம்தான். ஒத்துக்க வேண்டியதுதான். 😀... ச்சே... எவ்வளவு காந்தியவாதிகள் நம்மிடையே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று புலகாங்கிதம் அடைந்தேன். ஒரு பெரிய நீண்ட கால போராட்டத்தில் 95% .... 95% காலம் அது சாத்வீகமாக தொடர்ந்தாலும்... இவர்கள் கண் அந்த 5% சதவீதத்துக்காகவே காத்துக்கொண்டிருக்கும் போல... அது நடந்தால் சந்தோசம் கிழர்ந்தெழும்.... 95% காந்திய வழியில் நன்றாக நடந்தாலும் மீதி 5% சுட்டிகாட்டி அதை கீழிறக்குவார்கள். அந்த 95% சார்ந்து எந்த நல்வார்தைகளும் இவகளிடம் இருக்காது. அவர் வார்தைகளையே பாருங்கள், /ஒரு சில விவசாயிகள் ஏற்கவில்லை/ /ஒரு சில பகுதிகளில் மட்டும்தான் போராட்டம் நடந்தது//. நல்லவேளை இந்திய சுதந்திர போராட்டம் நடந்தபோது இவர்கள் பிறக்கவில்லை, இல்லையெனில் அதில் பங்கு கொண்ட இந்தியர்கள் சதவீதத்தை வைத்து எவ்வளவு சிறப்பான ஆட்சியை ஆங்கிலேயர்கள் கொடுத்துக்கொண்டிருந்தார்கள் என்று நாம் அறிந்துகொண்டிருப்போம்...
Reply 15 0
Login / Create an account to add a comment / reply.