கட்டுரை 5 நிமிட வாசிப்பு

கங்கணா சொல்வதுபோல, பிச்சையாகத்தான் கிடைத்ததா சுதந்திரம்?

பாலசுப்ரமணியம் முத்துசாமி
16 Nov 2021, 5:00 am
4

ந்துத்துவத்தின் சினிமா முகமாக உருவெடுத்துவரும் கங்கணா ரனாவத், "இந்திய சுதந்திரம் 1947 ல் பிச்சையாகப் பெறப்பட்டது" எனத் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். உண்மையான சுதந்திரம் 2014-ல்தான் கிடைத்ததாம். அடுத்து இன்னுமொரு மராத்தி நடிகரும் இதை ஆமோதித்திருக்கிறார்.

இது இந்திய விடுதலைப் போரையும், உலக அரசியலுக்கு அகிம்சை வழிப் போர்முறையை அறிமுகப்படுத்திய காந்தியையும், அறப்போராட்ட முறைமையையும் இழிவுசெய்வதோடு, வரலாற்று அறியாமையையும் ஒருசேர வெளிப்படுத்துவதாகும்.

அகிம்சை வழியிலான காந்திய இயக்கம்  வன்முறையைத் தன் ஆயுதமாக எடுத்துப் போரிடவில்லை. ஆனால், தன் எதிரியான காலனி அரசின் வன்முறையை அசாத்தியமான துணிச்சல் மிக்க அறப் போராட்டங்களால் அது எதிர்கொண்டது. எண்ணற்ற உயிர்களையும், அளவிட முடியாத  தியாகத்தையும் கொடுத்துதான் இந்தியாவுக்கான சுதந்திரத்தை அது பெற்றது. 

ரிச்சர்ட் பார்லெட் க்ரெக் எழுதிய ‘அகிம்சையின் வலிமை’ நூலில் ஒரு பகுதி வருகிறது. உப்பு சத்தியாக்கிரகத்தை ஒட்டி, மும்பையில் நடந்த ஒரு போராட்டம் பற்றிய ‘சிகாகோ டெய்லி நியூஸ்’ பத்திரிகையில் 1930, ஜூன் 21 அன்று வெளியான செய்தி அது. இந்தியாவுக்கான அதன் செய்தியாளர் நெக்லே பார்ஸன் இதை எழுதியிருக்கிறார். நம் முன்னோர்களின் தியாகம் எவ்வளவு தீர்க்கமானது என்பதற்குச் சின்ன சான்று. 

|

பம்பாய் சத்தியாகிரகப் போராட்டம்

பம்பாய்: தங்கள் மீது மழைபோல் பொழியும் லத்தி அடிகள் மத்தியில் ரத்தம் கொட்டிய நிலையிலும், தங்களைக் காத்துக்கொள்ள, தங்கள் கிர்பான்களை (புனித வாள்) எடுக்காமல், அடிகளை வாங்கிக்கொண்டு அமைதியாக நின்ற வீரம் நிறைந்த சீக்கியர்கள்...

காங்கிரஸ் போராட்டக்காரார்களைத் தாக்க வரும் குதிரைப் படைக்கு முன்னால், விழுந்து மறித்த, தியாகத்தைக் குறிக்கும் ஆரஞ்சு நிற உடையணிந்த இளம் இந்துப் பெண்கள்...

சுயராஜ்ஜியக் கொடியை ஏந்திய பெண்களைச் சுற்றி, உறுதியாக, பின்வாங்கும் நோக்கம் எதுவுமின்றி, அமைதியாக அமர்ந்து மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் போராட்டக்காரர்கள்..

போராடுபவர்களுக்குக் காயம் ஏற்பட்டால், அவர்களை எடுத்துச் செல்ல ஸ்டெரெச்சர்களுடன் தயாராக இருந்த ஆம்புலன்ஸ் குழு...

பம்பாய் எஸ்ப்ளனேடு பகுதியில், கடலை நோக்கிய ஓர் அழகிய பூங்காவில், ஆறு நாட்களாக, மகாத்மா காந்தியின் தொண்டர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே, பெரும் போராட்டம் நடந்தது. மேலே சொல்லப்பட்டவை அங்கே நடந்த காட்சிகளில் சில.  

காவல் துறையின் தாக்குதல் நம்பவே முடியாத அளவுக்குக் கொடூரமாகவும், முட்டாள்தனமாகவும் இருந்தது. ஆனால், போராட்டக்காரர்கள் அதை அமைதியாக, மன உறுதியுடன் ஏதிர்கொண்ட விதம் வீரம் நிறைந்த ஒன்றாக இருந்தது.

போராட்டத்தின் முதல் காட்சி, காலை ஆறு மணிக்கு, எஸ்ப்ளனேடுக்கு வெளியே, பூங்காவுக்கு எதிரே உள்ள காவல் நிலையத்தில் தொடங்குகிறது. தொப்பியும் சீருடையும் அணிந்த சில ஆங்கிலேயே சர்ஜென்ட்டுகளின் ஆணைக்கு அடிபணிந்து, பயமுறுத்தும் மூங்கில் லத்திகளுடன், மஞ்சள் தலைப்பாகை அணிந்த நூற்றுக்கும் மேற்பட்ட மராத்திக் காவலர்கள், வெறுங்கால்களில், பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

காலை 6:45 மணிக்கு, மரங்களடர்ந்த சாலையில், தொண்டர்களின் முதல் பகுதி, அணிவகுத்து வருகிறது. காக்கி உடையில், சட்டையில் செஞ்சிலுவைச் சின்னங்களை அணிந்து, முதலில் வரும், சிறுவர்களும் இளம் மருத்துவர்களும் அடங்கிய இந்தக் குழு, ஆம்புலன்ஸ் அணியாகும். அவர்கள், காத்திருக்கும் காவலர் படையைக் கடந்து சென்று, தங்கள் ஊர்திகளை நிறுத்தி விட்டு, ஸ்ட்ரெச்சர்களை வெளியே எடுத்துவைத்தார்கள். அந்தக் காட்சி, அறுவை சிகிச்சைக்காக, செவிலியரும், உதவியாளர்களும், அறுவை சிகிச்சை அறையைத் தயார் செய்வதுபோல இருந்தது.

சரியாக 7 மணிக்கு, வெள்ளை உடை அணிந்து, கைகளில், சிவப்பு, பச்சை, வெள்ளை நிறங்களில் பதாகைகளை ஏந்தி, போராட்டக்காரர்கள், ‘இந்தியா எங்கள் தாய்நாடு; சுயராஜ்யத்தை அடைந்தே தீருவோம்’ என்னும் பாடலைப் பாடிக்கொண்டு ஊர்வலமாக வரத் தொடங்கினார்கள். ஒவ்வொரு அணியையும், ஆரஞ்சு நிற உடை அணிந்த பெண்கள் குழு முன்னின்று வழிநடத்தியது. அவர்களில் பலர் கழுத்தில் மல்லிகை மாலைகளை அணிந்திருந்தார்கள். அவர்கள், காவலர்களைக் கடந்து சென்று, அங்கே ஆம்புலன்ஸ் அணி தயாராக வைத்திருந்த ஸ்ட்ரெச்சர்களுக்குப் பின்னால் சென்று அமைதியாக அணிவகுத்து நின்றார்கள்.

அதையடுத்து நடந்த நிகழ்ச்சிகள் என்னால், என்றுமே மறக்க முடியாதவை. வெள்ளை சர்ஜெண்டுகளால் வழிநடத்தப்பட்ட, மஞ்சள் தலைப்பாகை அணிந்த கரிய மராத்திக் காவலர்கள், அங்கே காத்துக்கொண்டிருந்த போராட்டக்காரர்களின் கூட்டத்தை நோக்கி நடக்கத் தொடங்கினர். கூட்டத்தை, நெருங்க நெருங்க, காவலர்கள் நடக்கும் வேகம் அதிகரித்தது. மரணத்துக்குத் தயாராக இருந்த போராட்டக்காரர்கள், வன்முறையினால் விளையப்போகும் விளைவுகளை எதிர்பார்த்து, மருண்ட விழிகளுடன் எதிர்வரும் காவலர் படையை நோக்கினார்கள். காவலர் படை தடியடியைத் தொடங்கியது.

சிலர் வீதிகளில் இறங்கி ஓடத் தொடங்கினார்கள். ஆனால், பெரும்பாலான போராட்டக்காரர்கள் அசையாமல் அங்கேயே நின்றார்கள். லத்திகள் மனித உடலில் இறங்கும் சத்தம் எங்கும் கேட்டது. கூட்டம் கலையத் தொடங்கியது. அடிபட்டுக் கீழே விழுந்த மனிதர்களின் பின்னால், ஆரஞ்சு உடையணிந்த பெண்கள் குழு மட்டும் அமைதியாக நின்றிருந்தது. 

காங்கிரஸ் ஆம்புலன்ஸ் குழுவின் மணிச்சத்தம் பலமாகக் கேட்டது. ஸ்ட்ரெச்சரை எடுத்துக் கொண்டு தொண்டர்கள், அங்குமிங்கும் ஓடினார்கள். லத்திகள் மனித உடலில் இறங்கும் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தது. 

சில நிமிட அமைதிக்குப் பின்னர், போராட்டக்காரர்களின் அடுத்த அணி பதாகைகளை ஏந்தி வரத் தொடங்கியது. மராத்தியக் காவலர் படை அவர்களை எதிர்நோக்கி அணிவகுத்து நடக்கத் தொடங்கியது. மீண்டும் மோதல் தொடங்கியது. பயந்த சிலர் சிதறி ஓட, பெரும்பாலான மனிதர்கள், காவலர்களின் லத்தியடிகளை எதிர்ப்பின்றி, வாங்கிச் சரிந்தார்கள். அவர்களின் பின்னே, ஆரஞ்சு நிற உடையணிந்த பெண்கள், இந்திய சுயராஜ்யக் கொடியை ஏந்தியபடி, அமைதியாக நின்றார்கள்.

இன்னொருபுரம், ஒரு சிறு குழுவினர் வெளியேற மறுத்து, தங்கள் தலைகளைக் குனிந்துகொண்டு அமைதியாக, மயங்கி விழும் வரை, காவலர்களின் லத்தி அடிகளை வாங்கிக்கொண்டிருந்தார்கள். அப்படி விழும் போராட்டக்காரர்களை எடுத்துச் செல்ல சில அடிகள் தொலைவில் ஸ்ட்ரெச்சர்கள் காத்திருந்தன.

அடுத்ததாக, 50 பேர் கொண்ட ஒரு சீக்கியக் குழு வந்தது. சீக்கியர்கள் போர் மரபினர். அவர்கள் தம் தலைமுடியைப் பெண்கள்போல நீளமாக வளர்த்து, அதை முடிந்து, அதன் மீது தலைப்பாகை கட்டியிருப்பார்கள். இவர்களில்  அகாலிகள் என்னும் பிரிவைச் சார்ந்தவர்கள்  கிர்பான் என்னும் புனித வாளை ஏந்திய வண்ணம் வந்தனர்.

அவர்களுடன் 15 சீக்கியப் பெண்களும் வந்தனர். அவர்கள் பருத்திக் கால் சராய்களை அணிந்து, அதன் மீது இந்துப் பெண்களைப் போலவே ஆரஞ்சு நிறச் சேலையை உடுத்தியிருந்தனர். ஆண் சீக்கிய வீரர்களைப் போலவே கிர்பான்  ஏந்தி வந்தனர். அழகான அந்த சீக்கியப் பெண்கள், இந்துப் பெண்களைப் போல உரக்கப் பேசாத மென்மையான குரலை உடையவர்களாக இருந்தனர். ஆபத்தை விரும்பி வருவதுபோலப் புன்னகையுடன் வந்தனர். 

அதில் ஒரு பெண், தன்னிடம் இருந்த குழந்தையைக் காவலரை நோக்கி உயர்த்தி, 'வந்து பார்' எனச் சவால் விட்டார். இது போன்ற போராட்டங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது ஆபத்தானது என நான் சொன்னது அவருக்கு மொழிபெயர்க்கப்பட்டது. அதைக் கேட்ட அவர் சிரித்தார்.

பஞ்சாப் மாநிலத்தின் பல பகுதிகளிலும் இருந்தது போராடும் மக்களின் பிரதிநிதிகளாக வந்திருந்த சீக்கியர்கள், ‘புனித வாளான கிர்பானைத் தற்காத்துக்கொள்ளப் பயன்படுத்த மாட்டோம். ஒருபோதும் போராட்டக்களத்தை விட்டு வெளியேறவும் மாட்டோம்’ எனச் சூளுரைத்தார்கள். ‘ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.. மரணம் வந்தால், ஏற்றுக்கொள்வோம்’ என்னும் அவர்களின் போர்க்குரல், இந்துக்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தது. காவலர்கள், சீக்கியர்களைத் தாக்கத் தயங்கினார்கள்.  தயவுசெய்து போராட்டக்களத்தை விட்டு வெளியேறிவிடுங்கள் என சீக்கியப் பெண்களைக் கேட்டுக்கொண்டார்கள். முடியாது என மறுத்த சீக்கியப் பெண்கள், ‘அவர்களுடனே சாவோம்’ எனப் பதிலுரைத்தார்கள். 

குதிரை மீதமர்ந்து, களத்தில், போராட்ட வீரர்களின் தலைகளைக் கண்மண் தெரியாமல் அடித்து உடைத்து முன்னேறிய காவலர் படை, நடுவே நீல நிறத் தலைப்பாகைகளை அணிந்த சீக்கியர் குழுவைக் கண்டு திகைத்து நின்றது. ‘சீக்கியர்கள் வீரமிகுந்தவர்கள்; அவர்களை எப்படித் தாக்குவது?' காவலர்கள் குரலில் இருந்தது பயமல்ல, மரியாதை!

சிறிது நேரத் தயக்கத்துக்குப் பிறகு, சீக்கியர்களைக் களத்தைவிட்டு வெளியேற்றியாக வேண்டும் என முடிவெடுத்த காவலர்கள், சீக்கியப் பெண்களைத் தவிர்த்து, அங்கே நின்றிருந்த ஆண்களைத் தாக்கத் தொடங்கினார்கள்.  சீக்கியர்களின் குழுத் தலைவர் அடிகளை வாங்கத் தொடங்கியிருந்தார். நான் அவரிடம் இருந்து ஐந்து அடிகளே தள்ளியிருந்தேன். அவர் கொஞ்சம் உயரம் குறைவானவர், ஆனால், கட்டுமஸ்தான உடல் கொண்டவர்.

காவலர்கள் அடிக்கத் தொடங்கினர். அவர் அசையாமல் நேராக நின்றார். தலைப்பாகை தட்டிவிடப்பட்டது. நீண்ட கருங்கூந்தல் அவிழ்ந்து வீழ்ந்தது. கண்களை மூடிக்கொண்டார். அமைதியாக அடிகளை வாங்கிக்கொண்டேயிருந்தார். ஒருகட்டத்தில் சரிந்து விழுந்தார். 

மற்ற சீக்கியர்கள் அவரைப் பாதுகாக்க முயலவில்லை. மாறாக போர்க்குரல் எழுப்பிக்கொண்டே, அவர் வாயில் வழிந்த ரத்தத்தைத் துடைத்தார்கள். இந்துச் சகோதரர்கள், அவர் கண்களைச் சுற்றியிருந்த காயங்களின் மீது வைக்க ஐஸ் கட்டிகளை எடுத்துக்கொண்டு ஓடினார்கள்.  அந்தச் சீக்கியர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். மேலும் அடிகளை வாங்கிட எழுந்து நின்றார். 

காவலர்கள் திகைத்துப் போய் அடிப்பதை நிறுத்திவிட்டார்கள். 'எதிர்த்து, மரம்போல நிற்பவனை எவ்வளவு நேரம்தான் அடித்துக் கொண்டேயிருப்பது?’

பாலசுப்ரமணியம் முத்துசாமி

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.1

பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

V NEELAKANDAN   10 months ago

அற்புதமான எதிர்வினை. ஆங்கிலேயக் காவலர்களைப் போல முரட்டுத்தனத்திற்கு --இழிவுபடுத்தலும் வரலாற்று அறியாமையையும் வெளிப்படுத்திய அபத்தத்திற்கு -- சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் பொறுமையோடு சுதந்திரப் போராட்டத்தின் ஒரு சிறு காட்சியை விரிவாக எடுத்துக் கூறியிருந்தார். அந்தத் தியாகிகளை மீண்டும் வணங்குவதன் மூலம் கட்டுரையைப் பாராட்டுகிறேன்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Seetha   11 months ago

Unfortunately the right wing, the left wing , and Periyarists have one thing in common , denouncing Gandhi and the importance of independence .

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அப்துல் காதிர்   11 months ago

முழு கட்டுரையா அல்லது இன்னும் தொடருமா?... முழுமையாக முடிவுறாதது போன்று தோன்றுகிறதே

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

V R BALAKRISHNAN   11 months ago

கங்கனா போன்ற அரைவேக்காடு அடிவருடிக்களை இங்கே ஒதுக்கி புறக்கனிக்காமல் பதில் சொல்வது அருஞ்சொல்லையும் அவர்கள் தரத்திற்கு தாழ்த்திவிடும்!

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஐந்து மையங்கள்நடிகைகளின் காதல்காலவெளியில் காந்திஏன்?காலை உணவுதலைவலி – தப்பிப்பது எப்படி?பாலசுப்ரமணியம் முத்துசாமி அருஞ்சொல் கட்டுரைசிதம்பரம் கட்டுரைகொலீஜியம்சாதி ஆதிக்கம்உயர் ரத்த அழுத்தம்malcolm adiseshiahகுதிகால் வலிஈரான் - ஈராக்கோவை ஞானி சமஸ்மாதவ் காட்கில்பாரத ரத்னாஎஸ்.எஸ்.ஆர். பேட்டிஒன்றிய நிதிநிலை அறிக்கைமன்னிப்புக் கடிதங்கள்பரக் அகர்வால் நியமனம்சிக்கனமான நுகர்வுஓடிபிகாந்திய வழியில் அமுல்தர்மசக்கரம்சுயமான தனியொதுங்கல்நெல் கோதுமைமகேஸ் பொய்யாமொழிகுடலைக் காப்போம்!பி.ஏ.கிருஷ்ணன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!