கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, சமஸ், ஆளுமைகள் 3 நிமிட வாசிப்பு

எங்கே இருக்கிறார் பிரபாகரன்?

சமஸ் | Samas
15 Mar 2023, 5:00 am
2

ட்டுமொத்தமாக ஒரு சமூகம் மூச்சுத்திணறிக்கொண்டிருந்தது.

உயிலங்குளம், தம்பனை, பறப்பாங்கண்டல், கிளிநொச்சி, நாகர்கோவில், முகமாலை, வெள்ளாங்குளம், மன்னார், புதுக்குடியிருப்பு…

இப்படி தமிழர்கள்வாழ் ஒவ்வொரு பகுதியும் ராணுவச் சூறையாடல் படங்களோடு வீழ்ந்த ஊர்களாக ஊடகங்களில் அறிவிக்கப்படும்போதெல்லாம் உலகம் எங்கும் இருந்த தமிழர்கள் நிலைகுலைந்தார்கள்.

இலங்கை ராணுவம் 2009 ஜனவரி 1 அன்று விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகரமாகக் கருதப்பட்ட கிளிநொச்சியைக் கைபற்றியதாக அறிவித்தது தொடங்கி 2009 மே 18 அன்று முழு வெற்றியை அறிவித்தது வரையிலான ஐந்தரை மாதங்கள் தமிழ்நாட்டிலும் பலருடைய மனப்பிறழ்வுக்கான காலகட்டமாகவே இருந்தது.

இலங்கையில் சமவுரிமைக்காக மூன்று தசாப்தங்கள் நீடித்த போர் முடிவுக்கு வந்தபோது முன்னர் இருந்த உரிமைகளையும் பறிகொடுத்து நின்றது தமிழ்ச் சமூகம். ஆயிரக்கணக்கானோர் போரில் உயிரிழந்திருந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் சொந்த நாட்டிலேயே அகதிகளாய், நடைபிணங்களாய்ப் பரிதவித்து நின்றிருந்தனர். தமிழர்கள் பகுதிகள் ஒவ்வொன்றும் இலங்கை ராணுவத்தின் வெடிகுண்டு தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு சின்னாபின்னமாகி இருந்தது. தமிழ்ச் சமூகத்தின் நிலங்கள் ராணுவ வசம் ஆகியிருந்தன. தமிழ் பிரதேசத்தின் மீது சிங்களமயமாக்கல் ஏவப்பட்டது.

இவ்வளவு கொடுமைகளையும் பின்னின்று நிகழ்த்திக்கொண்டிருந்த இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்‌ஷ, அன்றைய பாதுகாப்புத் துறைச் செயலரும் பின்னாள் அதிபருமான கோத்தபய ராஜபக்‌ஷ, ராணுவத் தளபதி சரத் பொன்சேகா; பின்னின்று உதவிய இந்தியா உள்ளிட்ட பன்னாட்டு அரசுகளோடு சேர்த்து, அதுவரை இல்லாத அளவுக்கு விடுதலைப் புலிகள் மீதும் அதன் தலைவர் பிரபாகரன் மீதும் தமிழ் மக்களின் கோபம் கனன்றது.

ராஜபக்‌ஷ ஒரு கொடுங்கோலர் என்றால் பிரபாகரனும் சளைத்தவர் இல்லை. தன்னுடைய அமைப்பின் முழு பலங்களையும் பலவீனங்களையும் அவர் மட்டுமே அறிந்திருந்தார். போரில் உயிர் பிழைத்தோர் பலரும் சொன்னபடி, களத்தில் நின்ற புலிகள் பலருமே ஏதோ ஒரு பெரிய திட்டம் பிரபாகரன் கையில் இருந்ததாகத்தான் நினைத்து ஏமாந்திருந்தார்கள். நந்திக்கடல் பகுதியில் ஒரு சின்ன பிரதேசத்துக்குள் முற்றிலுமாகச் சுற்றி வளைக்கப்பட்ட சூழலிலும்கூட தன்னைச் சுற்றியுள்ளோரை இப்படி நம்ப வைக்க பிரபாகரனால் முடிந்தது.

தன்னைச் சுற்றியுள்ளோருக்கு என்ன நேரும் என்பதை முன்கூட்டி உணர்ந்தவராக இருந்த பிரபாகரன் தன்னுடைய அமைப்பின் பலகீனத்துக்கு முகம் கொடுத்து, முன்கூட்டி போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு முடிவை எடுத்திருந்தால் பல்லாயிரம் மக்களின் இன்னல்களைத் தவிர்த்திருக்க முடியும். வெள்ளைக்கொடி சரண் முடிவை விடுதலைப் புலிகள் அமைப்பு சிந்தித்தபோது காலம் கடந்திருந்தது. எல்லாப் போர் நெறிகளையும் நசுக்கியபடி இலங்கை ராணுவம் முன்னகர்ந்தது.

கடைசி நாட்களில் பிரபாகரன் மனிதக்கேடயங்களாகத் தம் மக்களை நிறுத்தினார். சில நாள் பயிற்சியோடு சிறார் கையில்கூட துப்பாக்கிகள் திணிக்கப்பட்டிருந்தன. இவ்வளவு பெரிய ரத்தச் சகதியில் மக்களைக் கொண்டுபோய்விட்டார்களே என்று எண்ணாதவர்கள் இல்லை. போரின் உச்சமும் முடிவுமாக ‘பிரபாகரன் மரணம்’ என்ற செய்தியோடு, நந்திக்கடல் பகுதியில் பிளக்கப்பட்ட தலையுடன் ஒரு சடலம் தொலைக்காட்சியில் காட்டப்பட்டபோது, அவரிடமிருந்து பிரிந்து சென்றவரான கருணா அந்தச் சடலம் பிரபாகரனுடையதுதான் என்று உறுதிபடுத்தினார்.

மொத்தத் துயரும் உடைத்துக்கொண்டு சீறிப்பாயக் கண்ணீர் விட்டது தமிழ்ச் சமூகம். “எவ்வளவோ தவறுகள் இழைத்திருந்தாலும், தன் மக்களுக்காக மக்களில் ஒருவராக நின்றார்; களத்திலே கலங்காமல் நின்று மடிந்தார் பிரபாகரன்.” இந்த வார்த்தைகள் வரலாற்றில் நின்றன. மரணம் பிரபாகரனுக்குப் பெரிய விடுதலையைத் தந்தது என்றே சொல்ல வேண்டும்.

போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பின் போக்கைக் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கினாலும், ஒரு போர் தியாகிக்கான இடத்தில் பிரபாகரனை அது அமர்த்தியது. அதேசமயம், பிரபாகரனின் அரசியலை அவருக்கான இடத்திலிருந்து தூர பிரித்து வைத்தது. இன்றைக்கு பிரபாகரன் ஒரு தொன்மம். அதுதான் தமிழ்ச் சமூகத்தில் பிரபாகரன் இருக்கும் இடம்.

இலங்கைப் போர் முடிந்த வேகத்தில் அந்த நாட்டின் அரசியலில் அதிவேக மாற்றங்கள் நடந்தன. விடுதலைப் புலிகள் கை கோத்து வீழ்த்திய இலங்கை அதிபருக்கும் இலங்கை ராணுவத் தளபதிக்கும் இடையில் உண்டான பகை அதன் உச்சம். ஃபொன்சேகாவைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் ராஜபக்‌ஷ. சிறையிலிருந்து வெளியே வந்த ஃபொன்சேகா தேர்தலில் ராஜபக்‌ஷவை எதிர்த்து நின்றார். விடுதலையான உடன் ஃபொன்சேகாவை நான் பேட்டி கண்டேன். இலங்கைக்கு வெளியே பொன்சேகா அப்படி அளித்த முதல் பேட்டி அது. ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளியான அந்த நீண்ட உரையாடலில், பிரபாகரன் மரணம் தொடர்பான கேள்விக்கு ஃபொன்சேகா உறுதியான குரலில் பதில் அளித்தார், “ஒரே உண்மைதான், பிரபாகரன் உயிரோடு இல்லை!”

இதற்கு அப்பாற்பட்ட உண்மை என்று ஒரு விஷயம் தொடர்ந்து பேசப்பட்டுவருகிறது. “பிரபாகரன் தப்பிவிட்டார்; அவர் உரிய சமயத்தில் தோன்றுவார்!”

இப்படிப் பேசும் அபிலாஷையும் உரிமையும் யாருக்கோ இருக்கக் கூடாதா என்ன? தங்களுக்கு நெருக்கமான மனிதர்களின் மறைவை அங்கீகரிக்க முடியாமல் தம்மோடு அவர்கள் உயிர் வாழ்வதான பாவனையில் வாழும் எவ்வளவோ பேர் இந்த பூமியில் இருக்கின்றனர். தமிழ்நாட்டின் முதுபெரும் தமிழ் தேசியத் தலைவர்களில் ஒருவரான பழ.நெடுமாறனுக்கும் அப்படி ஓர் உரிமை இருக்கலாம். இவர்களைப் போன்றவர்கள் தம்முடைய நம்பிக்கைகளைத் தம்மோடு வைத்துக்கொள்ளும் வரை பொதுச் சமூகத்துக்குப் பிரச்சினை ஏதும் இல்லை. இந்த நம்பிக்கையைப் பொதுச் சமூகத்தின் நம்பிக்கையாகவும் மாற்ற முனையும்போதுதான் சிக்கல் உருவெடுக்கிறது. இது பிரபாகரனையும்கூட கீழ்மைக்குள் தள்ளுவதே ஆகும்.

நெடுமாறனுக்கு மூன்று கேள்விகள்:

1. பிரபாகரனும் அவருடைய குடும்பத்தினரும்  உயிரோடு இருக்கிறார்கள் என்றால், ஏன் உயிரோடு இருக்கிறார்கள்; ஊரையெல்லாம் கொலைக்களத்தில் தள்ளிவிட்டு அவர்கள் மட்டும் தப்பித்தது எந்த வகை அறம்?

2. பிரபாகரன் உயிரோடு இருந்துவிட்டேகூட போகட்டும்; ஒருவேளை உயிரோடு இருந்தால் இப்போது 70 வயதை நெருங்கிவிட்டிருக்கும் அந்த முதியவர் வெளிப்பட்ட உடனேயே இலங்கை / இந்திய / சர்வதேச காவல் படையால் கைதுசெய்யப்படக்கூடும். விடுதலைப் புலிகள் மீதான அச்சமும் தமிழ் மக்கள் மீதான அசூயையும் மீண்டும் புதுப்பிக்கப்பட இது வழிவகுக்கும். இலங்கையில் முன்பு வீழ்த்தப்பட்டிருந்த ராஜபக்‌ஷ குடும்பத்தினர் எப்படி ஈஸ்டர் குண்டுவெடிப்புகளுக்குப் பின் உருவாக்கப்பட்ட அச்சத்தின் பெயரால், பெரும் தேர்தல் வெற்றியின் வழியாக உயிர்த்தெழுந்தார்களோ அப்படி இப்போது இப்போதைய வீழ்ச்சியிலிருந்து மீண்டும் பிரபாகரன் வழி உயிர்த்தெழுவார்கள்; மீண்டும் சிங்களப் பேரினவியம் தலை தூக்கும். இதனால் தமிழ்ச் சமூகம் அடையப்போகும் நன்மை என்ன?

3. இந்தியாவுக்கு பிரபாகரன் அனுசரணையாக இருப்பார் என்று பேசுகிறீர்களே; அப்படியென்றால், புலிகளையும் பிரபாகரனையும் வீழ்த்தியதில் இந்தியாவுக்குப் பங்கு இல்லையா; இலங்கைக்குள் சிங்களர்களோடு முரண்பட்டு இந்தியாவுக்கு அடியாட்களாகச் செயல்படும் முடிவைத் தமிழர்கள் எடுக்க வேண்டும் என்பது எந்த வகையான வியூக தந்திரம்?  

இப்போது, ‘பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்; விரைவில் வெளிப்படுவார்’ என்று நெடுமாறன் வெளியிட்டிருக்கும் அறிவிப்பானது இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் வாழ்வில் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் தற்போது உருவாகியிருக்கும் சிறு வெளிச்ச நட்சத்திரத்தின் மீதும் வீசப்படும் சாணி.

பெரும் பொருளாதார வீழ்ச்சியைக் கண்டிருக்கும் இலங்கைச் சமூகம் இனரீதியிலான துவேஷத்தின் காட்டத்தை இப்போதுதான் குறைத்தபடி தங்களுடைய பொது எதிரியை அடையாளம் காணும் நிலைக்கு நகர்கிறது. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்படி, “இலங்கையில் உள்ள மாகாணங்களுக்குக் காணி அதிகாரம், போலீஸ் அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்களை அரசமைப்புச் சட்டப்படி அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற இன்றைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் சமீபத்திய அறிவிப்பு இப்போதைக்கு நிறைவேற்றப்படும் சாத்தியம் இல்லை என்றாலும், அதை நோக்கிய ஒரு சின்ன நகர்வு என்று சொல்லலாம். மீண்டும் பிரபாகரன் என்ற பேச்சின் மூலம் எல்லாவற்றையும் நாசமாக்க முற்பட்டிருக்கிறார் நெடுமாறன்.

நெடுமாறன் ஒரு விஷயத்தை உணர வேண்டும். மக்கள் தலைவர்களின் உண்மையான இருப்பும் மறைவும் அவர்கள் உடல் சார்ந்த இயக்கத்தில் இல்லை. அப்படிப் பார்த்தால் பிரபாகரன் இறந்துவிட்டார்; தொன்மத்தில் வாழும் பிரபாகரனுடைய இருப்பைத்தான் நெடுமாறன் தாக்கிக்கொண்டிருக்கிறார்!

- பிப்ரவரி, 2023, ‘குமுதம்’

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


6

6

1




பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   1 year ago

இங்கே யாருக்கும் வெட்கமில்லை, B-team ஆக இருப்பதில்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Vidhya sankari    1 year ago

நன்றாகச் சொன்னீர்கள். திரு. பழ. நெடுமாறன் அறிவிப்பை அறிந்ததும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு இதனா‌ல் பிரச்சனை வருமே என்று தான் தோன்றியது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

இலக்கியம்மாற்றம் விரும்பிகளுக்கும்தேர்தல் கணிப்புஅவட்டைஜாமீன் மனு நீடூழி வாழ்க குடியரசு!துப்புரவுப் பணிஅமைதியின் உறைவிடம்சச்சின் பைலட்தங்கம் தென்னரசுபிளே ஸ்டோர்அப்துல் மஜீத்: ஆயிரத்தில் ஒருவர்சமஸ் - உதயநிதிகாஷ்மீர் 370குக்கிசிறுநீர்ப்பை இறக்கம்பாப் மார்லிசாதி உணர்வுமைக்ரேன்நீராணிக்கம்நிர்மலா சீதாராமன்ப்ரிமேசனரிமுதலாளிகள்கூட்டுத் தலைமைஆம்பர் கோட்டைதெலங்கானாஜிஎஸ்டிகூட்டத்தொடர்சட்டமன்ற உறுப்பினர்அரசு மருத்துவமனை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!