அரசியல், உற்றுநோக்க ஒரு செய்தி 5 நிமிட வாசிப்பு

வீரப்பன் சகாக்களை விடுவிக்க முற்படுங்கள்

13 Jan 2022, 4:59 am
1

சிறைவாசிகளின் மறுவாழ்வு குறித்து நாம் ஆழ்ந்து யோசிக்கும் காலம் இது. எவர்  செய்த குற்றங்களையும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றாலும்கூட, சந்தர்ப்பவசத்தால் குற்றம் இழைந்துவிட்டவர்கள் ஒரு நெடுங்காலம் தண்டனையையும், அலைக்கழிப்பையும் அனுபவித்துவிட்ட பிறகும்கூட காலமெல்லாம் சிறையிலேயே வதைப்படுவதை ஒரு நாகரீகச் சமூகமாக நாம் ஏற்க முடியாது.

இந்த அடிப்படையில்தான் சமூகம் கொண்டாடும் நாட்களில், நன்னடத்தையின் அடிப்படையில் கருணைரீதியாக சிறைவாசிகள் விடுவிக்கப்படுவதும் நடக்கிறது.  ஆனால், இத்தகு விடுதலையிலும்கூட சாதி, மத, இன, கட்சிரீதியான பாரபட்சங்கள் நிலவுவது நம்முடைய சமூக அவலங்களில் ஒன்று. விடுதலைக்காக ஏங்கும் சிறைவாசிகளும், அவர்களது குடும்பத்தினரும் இரு சம்பவங்களை மேற்கோள் காட்டுவது வழக்கம். மதுரையில் வெட்டிக் கொல்லப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் லீலாவதி கொலைக் குற்றவாளிகளை 2008-ல் அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி விடுவித்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி. ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து தர்மபுரியில் பேருந்துடன் மூன்று கல்லூரி மாணவிகளை உயிரோடு எரித்துக் கொன்ற குற்றவாளிகளை, 2018-ல்  எம்ஜிஆர் நூற்றாண்டையொட்டி விடுவித்தார் அன்றைய முதல்வர் பழனிசாமி. ‘இவர்கள் மீதே கருணை காட்டும் அரசு, இஸ்லாமியர்கள் கோவை குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடுத்தப்பட்டு, பல ஆண்டுகளாக சிறைக்குள் வதைப்படுகிறார்கள். அவர்களை விடுவிப்பது தொடர்பிலும் பரிசீலிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை  எழுந்ததைத் தொடர்ந்து, அதைப் பரிசீலிக்க குழு ஒன்றை அமைத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

நல்லது. தமிழ்ச் சமூகமும், தமிழக அரசும்  கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. அது, வீரப்பனின் சகோதரர் மாதையன் மற்றும் இருவரது விடுதலைக் கோரிக்கை. வனங்களில் வாழ்வோர் மீதான அமைப்புசார் ஒடுக்குமுறைகளைக் குற்றவுணர்வோடு, சமூகம் மறுபரிசீலிக்கும் காலம் இது. சந்தர்ப்பவசத்தால் குற்றவாளிகளான இவர்களுடைய விடுதலையையும் தமிழக அரசு கனிவோடு பரிசீலிக்க வேண்டும். 

வீரப்பனின் சகோதரர் மாதையன் மற்றும் இருவர் விடுதலையை வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கூட்டறிக்கை ஒன்று அனுப்பப்பட்டிருக்கிறது. மக்கள் சிவில் உரிமைக் கழகம், மக்கள் கண்காணிப்பகம், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம், சோகோ அறக்கட்டளை ஆகியவை ஒருங்கிணைத்துள்ள இந்த கூட்டறிக்கையில், தொல்.திருமாவளவன், இரா.முத்தரசன், வேல்முருகன், ஜவாஹிருல்லா, நெல்லை முபாரக், கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், இரா.அதியமான், சுப.உதயகுமார் போன்ற அரசியலர்களும், மனித உரிமைப் போராளிகளும், கல்வியாளர்களும் கையெழுத்திட்டிருக்கின்றனர். உற்றுநோக்க வேண்டிய அந்த அறிக்கையை - இந்தச் செய்தியை 'அருஞ்சொல்' தன் வாசகர்கள் பார்வைக்கும் கொண்டுவருகிறது.

 

கோயம்புத்தூர் மத்திய சிறையில் வீரப்பனின் சகோதரர் மாதையன் மற்றும் அவருடன் சேர்ந்து ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோர் 33 ஆண்டுகளுக்கும் மேலாகத் தண்டனைச் சிறைவாசிகளாக இருந்துவருகின்றனர். 

இது போன்ற நீண்ட சிறைவாசம் என்பது சிறைவாசிகளின் நலனுக்கும், அவர்களது குடும்பத்தாரின் நலனுக்கும் மட்டும் எதிரானது அல்ல. சிறைவாசிகளின் மறுவாழ்வு என்கிற அரசின் கண்ணோட்டத்திற்கும் முற்றிலும் எதிரானதாக உள்ளது. இந்த சிறைவாசிகளின் முன்விடுதலை குறித்து அவர்கள் தண்டனை பெற்ற, வழக்கினைக் காரணமாக வைத்து அறிவுரைக் குழுமம் மற்றும் இதர குழுமங்கள் பரிசீலிப்பதில்லை என்பது அதிர்ச்சிகரமாக உள்ளது. 

சிறைவாசிகளின் விடுதலை குறித்துத் தமிழகத்தின் சிறைத்துறை அவ்வப்போது வெளியிடுகின்ற அரசாணைகள் சில குற்றங்களுக்குத் தண்டணை பெற்றவர்கள் மட்டும் முன்விடுதலைக்கு (premature release) தகுதியானவர்கள் என்றும், மற்ற சில குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றவர்கள் முன்விடுதலைப் பரிசீலனைக்கே தகுதியற்றவர்கள் என்றும் காட்டப்படுகிற பாகுபாடு, இது போன்ற நீண்ட சிறைவாசங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளதை அறிய முடிகிறது.

இந்தச் சிறைவாசிகளின் முன் விடுதலை தொடர்பான இத்தகைய பாகுபாடு என்பது, சட்டத்திற்கும் நியாயத்திற்கும் எதிரானது மட்டுமல்லாமல், சிறைவாசிகள் மறுவாழ்வு பெறுகின்ற கண்ணோட்டத்திற்கும், மனித உரிமைக்கும் எதிரானதாக உள்ளது.

மேலும் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை என்பது அவர் சிறையில்வாடும் காலத்தின் அடிப்படையில் முடிவு செய்வதற்குப் பதிலாக, அவர் தண்டனை பெற்றுள்ள வழக்குப் பிரிவுகளின் அடிப்படையில் முடிவு செய்வதென்பது மனிதநேயத்தையும், சிறைவாசியின் விடுதலை குறித்தான நம்பிக்கையையும் தகர்ப்பதாக உள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 433ஏ, ஆயுள் தண்டனை என்பதைக் குறைந்த அளவு 14 ஆண்டுகள் என்றே வரையறுத்துள்ளது. தவிரவும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை, ஏற்கெனவே வழங்கியுள்ள சில தீர்ப்புகளில் சாதாரண ஆயுள் சிறைவாசிகளின் விடுதலையை 10 ஆண்டுகள் கழித்துப் பரிசீலிக்கலாம் என்றும், முன்விடுதலையைப் பரிசீலனைக்கு உட்படுத்த முடியாத பிரிவுகளில் தண்டனை பெற்ற ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலைக் குறித்து 14 ஆண்டுகள் கழித்துப் பரிசீலிக்க வேண்டும் என்றும் தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளன.

மேலும், வீரப்பனின் சகோதரர் மாதையன் சார்பாக முன்விடுதலை வேண்டி மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கடந்த 03.10.2017 அன்று உச்ச நீதிமன்றம் மாதையனுடைய முன்விடுதலைக் கோரிக்கையைப் பரிசீலித்து முடிவுசெய்திடத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும். அவருடைய விடுதலை என்பது இன்னும் சாத்தியமாகவில்லை.

சிறைத் துறை உயர் அதிகாரிகள்,  தமிழக அரசு அதிகாரிகள் முன்விடுதலை குறித்து வெளியிடுகின்ற அரசாணைகளில் சில குறிப்பிட்ட வழக்குகளில் தண்டனை பெற்ற ஆயுள் சிறைவாசிகளின் முன்விடுதலை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது வேதனையானது. இதனால், குறிப்பிட்ட சிறைவாசிகளின் மறுவாழ்வு மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வு என்பது தொடர்ந்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. 

வீரப்பனின் சகோதரர் மாதையன் மற்றும் அவருடன் சேர்ந்து ஆண்டியப்பன்,  பெருமாள் ஆகியோர் சுமார் 75 வயதை நெருங்கிய முதியவர்களாக இருந்து வருகிற நிலையில் உடலாலும், மனதாலும் பல்வேறு துயரங்களுக்கு ஆட்பட்டுள்ளனர். இவர்களின் குடும்பங்களில் இவர்களுடைய மகன் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் இறந்து, குடும்பங்கள் நிர்க்கதியான அவலநிலையில் இருந்து வருகின்றனர். அவர்களின் எஞ்சிய ஒரு சில ஆண்டுகளையாவது மீதமுள்ள உறவுகளோடு கழித்திடப் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர்.

முழுக்க மனிதநேயக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலும், இரக்க குணத்தின் அடிப்படையிலும், மன்னிக்கும் அரசமைப்பு அதிகாரத்தைக் தமிழக அரசு பயன்படுத்த வேண்டும் எனும் எதிர்பார்ப்போடு சிறையில் வாடிவருகின்றனர்.

சிறைவாசிகள் தங்களது தண்டனையைக் கழிக்கின்ற ஒவ்வொரு நாளும், என்றாவது ஒருநாள் நாம் விடுதலை ஆவோம் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில்தான் காலத்தைக் கடத்திவருகின்றனர். அந்த நம்பிக்கை நிறைவேறாத சூழ்நிலையில், நீண்ட ஆயுள் சிறைவாசியின் மனநிலை என்பது பெருத்த பாதிப்புக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாகும் என்பதை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கனிவுடன் பரிசீலித்து, இவர்களுக்கு உரிய விரைவில் விடுதலை வழங்கிட வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.

- இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

1

1





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Umamaheswari   2 years ago

இங்கு குற்றங்களுக்கான வரையறைகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சமூகத்தில் எத்தனையோ குற்றங்கள் செய்து சுதந்திரமாக வாழும் அரசியல் சார்ந்த நபர்களைப் பார்க்க முடிகிறது. சமீப காலங்களில் பெண் குழந்தைகள் , பெண்கள் மீதான வன்முறை செய்யும் நபர்கள் , மக்கள் வரிப்பணத்தை ஊழல் செய்யும் அரசியல் நபர்கள், சமூக நீதியை , சமத்துவத்தைக் குழி தோண்டி புதைக்கும் துறை ரீதியாக உருவாகும் போலிகள் இப்படி ஏராளமான குற்றவாளிகள் சாதாரணமாக சமூகத்தில் வலம் வருகின்றனர். ஆகவே சட்டங்களில் குற்றங்களுக்கான வரையறைகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் .. இங்கு அருஞ்சொல் வழியாக வெளியிட்டிருக்கும் கோரிக்கைக்கு அரசு செவி கொடுக்க வேண்டும் . உமாமகேஸ்வரி ,சென்னை

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பாலியல் வண்புணர்வுபுதிய நாடாளுமன்றக் கட்டிடம்யூனியன் பிரதேசம்உலக எழுத்தாளர் கி.ரா.சுய தம்பட்டம்தாராளமயம்பொதுச் செயலாளர்ஜி.முராரிபேராசிரியர்ஹரித்துவார் வெறுப்புப் பேச்சுபுலம்பெயர் தொழிலாளர்கள் அச்சத்துடனா?சுண்ணாம்பு செங்கல் நாட்டுச் சர்க்கரை கலவை40 சதவீத சர்க்கார்தேர்தல் ஏற்ற இறக்கங்கள்டிராம்ப் கதாபாத்திரம்பொதுத் துறைஎதிர்வினைக்கு எதிர்வினைநவீன இந்திய சிற்பிகள்திருக்கோவிலூர்ஒழுக்கவாதியாக ஒளிர்ந்த ஐன்ஸ்டீன்ராமஜன்ம பூமிமத்திய பிரதேச தேர்தல்வேத மரபுசர்வபள்ளி ராதாகிருஷ்ணன்சமஸ் கலைஞர்திராவிடப் பேரொளிராஜாசாதிகள்திருமஞ்சன தரிசனம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!