கட்டுரை, சமஸ் கட்டுரை, சமஸ் 2 நிமிட வாசிப்பு
பத்திரிகையாளர்களுக்கு யார் எஜமானர்?
படம்: இஸ்க்ரா
கோவைக்கு வரலாற்று ஆய்வாளர் ஒருவரை சந்திக்க அவசர நிமித்தமாக வந்திருந்தேன். சந்திப்பு முடிந்ததும் அவர் வீட்டிலிருந்து வெளியே வந்து ரயில் நிலையத்துக்கு செல்ல டாக்ஸியை அழைக்க செல்லில் முயற்சித்துக்கொண்டிருந்தேன்.
சாலையை வண்டியில் கடந்த ஒருவர் சட்டென வட்டமடித்து என்னிடம் வந்து வண்டியை நிறுத்தினார்.
“ஐயா நீங்க சமஸ்தானே?
“ஆமாம் ஐயா...”
“ஆஹா உங்களை இங்கே சந்திப்பேன் என்று கொஞ்சமும் நினைக்கவில்லையே!” என்றவர் “வண்டிக்காக நிற்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் நான் உங்களை கொண்டுவந்து விடலாமா?” என்றார்.
நான் நின்றிருந்த இடத்துக்கும், ரயில் நிலையத்துக்கும் இடையே ஆறேழு கிமீ இருக்க வேண்டும். அவரும் அவசரமாக வேற எங்கோ சென்றுகொண்டிருப்பவராகத் தெரிந்தார். ஆகையால் சிரமம் வேண்டாம் என்று தவிர்க்க முற்பட்டேன்.
எனக்கு எந்தச் சிரமமும் இல்லை என்றவர் என்னை வண்டியில் ஏற்றிக்கொண்டு வண்டியை நிறுத்திய இடம் கிராண்ட் கபே. “நீங்கள் இங்கே அவசியம் சாப்பிட வேண்டும். ரயில்வே நிலையத்துக்கு அருகில் உள்ள, வயிற்றுக்குப் பிரச்சினை தராத உணவகம் இது. உங்கள என் வீட்டுக்கு அழைத்துச் சென்று உபசரிக்க வேண்டும். ஆனால், அவசரமாக நீங்கள் பயணப்படுவதால் நாம் இங்கே வந்திருக்கிறோம்” என்று சொல்லி எவ்வளவோ மறுத்தவனை உணவகத்துக்குள் அழைத்துச் சென்றுவிட்டார்.
ஏற்கெனவே ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள வேறொரு உணவகத்தில் இளம் நண்பர் இஸ்க்ராவை உணவருந்த அழைத்திருந்தேன். “தயவுசெய்து என் அழைப்பை நீங்கள் புறக்கணிக்கக் கூடாது” என்றவர் “அந்த நண்பரையும் நம்மோடு உணவருந்த அழைப்போம்” என்று பிடிவாதமாக நின்று சாதித்தார்.
அவர் பெயர் வீரப்பன். சிவகங்கையிலிருந்து வந்து கோவையில் நிலைத்திருக்கிறார். பேசும்போது அவருடைய சொந்த ஊர், தொழில், குடும்பம், சமூகம் சார்ந்த பார்வைகள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டவர் புறப்படும்போது, “இனி கோவைக்கு வரும்போது உங்களுக்கு இங்கே தங்க ஒரு வீடு இருக்கிறது என்று மனதில் கொள்ளுங்கள். உங்கள் பணிக்கு வாழ்த்துகள்” என்று விடை கொடுத்தார்.
என்ன அன்பு இது... எப்படி இந்த உறவு நெருக்கம் ஏற்படுகிறது? திரும்பத் திரும்ப உணர்த்தப்படும் விஷயம் ஒன்றுதான்: ஒரு பத்திரிகையாளன் முதலும் முடிவுமாக உண்மைக்கே விசுவாசமாக இருக்க வேண்டும்; மக்களே அவனது எஜமானர்கள். சமரசம் இன்றி நேர்மையாக தங்கள் குரலைப் பிரதிபலிப்பதாக ஒரு பத்திரிகையாளரைப் பார்க்கும்போது மக்கள் தங்களில் ஒருவராக அவரை வரித்துக்கொள்கிறார்கள். அப்படி நிற்கவில்லை என்றால் பத்திரிகையாளரை மட்டும் இல்லை; பத்திரிகைகளையும் தூக்கி தூர வீசுகிறார்கள்!
2
1
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
VIJAYAKUMAR 2 years ago
Beautiful.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.