ஆளுமைகள் 10 நிமிட வாசிப்பு

சாய்நாத்: இந்திய இதழியலின் மனசாட்சி

அபர்ணா கார்த்திகேயன்
24 Oct 2021, 5:00 am
3

1980, செப்டம்பர் 20. இந்தியாவின் முக்கியமான செய்தி நிறுவனங்களில் ஒன்றான ‘யூஎன்ஐ’யில் பணிக்குச் சேர்ந்தபோது, பத்திரிகைத் துறையில் ஒரு புதிய பாதையை உருவாக்கப்போகிறோம் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒரு புத்தகம், இரண்டு ஆவணப்படங்கள், மூன்று நிறுவனங்களில் பத்திரிகையாளராகப் பங்களிப்புகள், அங்கீகாரங்கள், ரமான் மகசேசே உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகள் எனப் பல மைல்கற்களைக் கடந்த பிறகு, எஞ்சியிருக்கும் வாழ்நாளில் என்றுமே முடிக்க முடியாத ஒரு பணியைத் தொடங்கினார். அது 83 கோடி ஊரக மக்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் பணி. அந்த மாமனிதரின் பெயர் பாலகும்மி சாய்நாத். 

ஜேஎன்யுவின் துடிப்பான மாணவப் பிரதிநிதி

ந்தியா விடுதலை பெற்ற பத்தாண்டுகள் கழித்துச் சென்னையில் பிறந்தார் சாய்நாத். விடுதலைப் போராட்ட வீரரும், (பின்னாளில் இந்திய ஜனாதிபதி) தொழிற்சங்கத்தலைவருமான வி.வி.கிரி அவரது தாத்தா. எனவே, குழந்தைப் பருவத்தில் விடுதலைப் போர் வரலாற்றுக் கதைகளைக் கேட்டு வளர்ந்தார். இளம் வயதிலேயே புத்தகங்கள் படித்தலும், எழுதுதலும் வழக்கமானது. மேடைப் பேச்சிலும் ஆர்வம் இருந்தது. சென்னை லயோலா கல்லூரியில் வரலாறு படித்து இளங்கலைப் பட்டம் பெற்றார். 

பின்னர் முதுகலை பயில தில்லியின் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கே, ரொமீலா தாப்பர், கே.என்.பணிக்கர், பிபன் சந்திரா, எஸ்.கோபால், ஹர்பன்ஸ் முக்யா எனப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்களிடம் கல்வி பயின்றார். சாய்நாத் தனது மாணவர் என்பதில் ரொமீலா தாப்பர் பெருமை கொள்கிறார்.

ஜேஎன்யுவில் பயின்ற காலத்தில், மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார் சாய்நாத். ‘ஆஸ்ட்ரிக்ஸ்’ நகைச்சுவைத் தொடரில் வரும் காலிஷ் கிராமம் போன்று வாதப் பிரதிவாதங்களுக்குப் பெயர் போன ‘கங்கா விடுதி’யின் மாணவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதுநிலை முடிந்து, அங்கேயே எம்ஃபில், பிஹெச்டி படிக்கத் தொடங்கினார்.  மாணவ அரசியல் காரணமாகச் சில காலம் கல்வி விலக்கம் செய்யப்பட்ட சாய்நாத், பிற்பாடு 2005-ம் ஆண்டு தொடங்கி ஐந்தாண்டுகள் அதே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகப் பணியாற்றியது ஒரு முக்கிய நிகழ்வு!

இதழியல் நோக்கி இடம் மாறிய கல்வி

முனைவர் படிப்புக்கான ஆய்வில் ஈடுபட்டிருந்த காலத்திலேயே, ‘யுஎன்ஐ’ செய்தி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார் சாய்நாத். அந்தக் காலகட்டத்தில்தான் ஈரான் - ஈராக் போர் தொடங்கியிருந்தது. பிஹெச்டி படிப்பதைவிடவும், செய்தி நிறுவனத்தின் பரபரப்பான பணிச்சூழல் அவருக்கு அதிகம் பிடித்திருந்தது. யுஎன்ஐ நிறுவனத்தில், ‘மயான ஷிஃப்ட்’ எனச் சொல்லப்படும் இரவு ஷிஃப்டில் பல மாதங்கள் பணிபுரிந்தார்.

சாய்நாத்தின் முதல் கட்டுரையே மறக்க முடியாததாக அமைந்தது. அதைக் குப்பைத் தொட்டியில் கண்டெடுத்தேன் என்று பின்னாளில் நினைவுகூர்ந்தார் அவர். அப்போது கல்வித் துறையைப் பற்றிய ஒரு தேசிய ஆய்வறிக்கை யுஎன்ஐக்கு வந்தது. அத்துடன் இணைக்கப்பட்டிருந்த பத்திரிகைக் குறிப்பை மட்டும் படித்த, அவருடன் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் அதைத் தூக்கிக் கடாசி விட்டிருந்தார். குப்பைத் தொட்டியிலிருந்து யதேச்சையாக அதை மீட்டெடுத்த சாய்நாத், அதிலுள்ள தரவுகளை ஆழ்ந்து வாசித்து, முக்கியமான பத்திரிகைச் செய்திக் கட்டுரையாக மாற்றி எழுதினார். 

அடுத்த நாள், நாட்டின் பல முக்கியப் பத்திரிகைகளின் முன்பக்கத்தில், ‘யுஎன்ஐயின் கட்டுரை’ ஆக அது வெளியாகியது. பின்னர் அதுவே அவரது வழிமுறையாக உருவெடுத்தது. பத்திரிகைப் பொதுப் புத்தி அலட்சியப்படுத்தும் பரபரப்பில்லாத, ஆனால், சமூகத்தின் முக்கியமான பிரச்சினைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருதலே சாய்நாத் பாணி எனப் பரிணமித்தது.

இப்படியாகப் பத்திரிகைப் பணியில் மூழ்கிய அவர், விரைவிலேயே படிப்பைத் துறந்தார். படித்து டாக்டர் பட்டம் வாங்க முடியவில்லை எனினும், பின்னாளில், பத்திரிகைத் துறைப் பங்களிப்புக்காக, கனடாவின் ஆல்பெர்ட்டா மற்றும் செயின்ட் ஃப்ரான்சிஸ் சேவியர் பல்கலைக்கழகங்கள் வழியே, கௌரவ டாக்டர் பட்டங்கள் அவரை வந்தடைந்தன.

விழித்தெழுந்த எளிய மக்களின் குரல்

சாய்நாத்தின் இரண்டாவது வேலை, மும்பையில் வெளியாகி வந்த ‘ப்ளிட்ஸ்’ பத்திரிக்கையில் அமைந்தது. அதன் ஆசிரியர் கராஞ்சியா, புகழ்பெற்ற பத்திரிகையாசிரியர். ‘முன் கோபி உதவி ஆசிரியர்’ என சாய்நாத்தை அவர் குறிப்பிடுவார். கராஞ்சியா மறைந்தபோது, ‘சிறிய மனிதர்களின் வாழ்க்கையில் இருந்தது பெரும் கதைகளை உருவாக்கி, ஒரு தலைமுறைக்குப் பயிற்றுவித்தவர்’ என ‘தி இந்து’வுக்கு எழுதிய அஞ்சலிக் குறிப்பில் அவரைப் பற்றிக் குறிப்பிட்டார் சாய்நாத்.

1990-ல் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ குழுமத்தின் நிதி நல்கை (fellowship) சாய்நாத்துக்குக் கிடைத்தது. அதைப் பயன்படுத்தி, தினமும் சந்திக்கும் சாதாரண மனிதர்களின் அசாதாரணமான வாழ்க்கைக் கதைகளை எழுத அவர் திட்டமிட்டார்.  இந்தியாவின் ஏழ்மையான 10 மாவட்டங்களில், 16 வகையான போக்குவரத்து வாகனங்களில், 1 லட்சம் கி.மீ. தொலைவு பயணித்து, 84 சாதாரண மனிதர்களின் அசாதாரண வாழ்க்கைக் கதைகளை எழுதி வெளியிட்டார்.

அவர் எழுதிய பயணக்கதைகளில் மிகவும் ஆர்வமூட்டக் கூடியது, பஞ்சாபிலிருந்து தங்கள் சொந்த ஊர் செல்லும் புலம்பெயர் பிஹாரி தொழிலாளர்கள், அவரை ரயிலில், ‘சூப்பர் டாப் கிளா’ஸில் அழைத்துச் சென்ற கதை. தொழிலாளர்களுடன் பயணிக்க திட்டமிட்டு, பயணச்சீட்டு வாங்குவதற்காக சாய்நாத் ரயில் நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தார். கூட்டமாக ரயில் நிலையம் வந்த தொழிலாளர்கள், “இது பொதுமக்களின் போக்குவரத்து வாகனம்... இதுக்கு எதற்கு டிக்கெட்?” எனச் சொல்லிவிட்டு, அவரை ரயிலின் கூரையில் ஏற்றிவிட்டனர்.

தாழ்வான கூரை கொண்ட குகைகள், பாலங்கள் வருகையில், அவர்கள் அபாயச் சங்கிலியைப் பிடித்து அவர்கள் ரயிலை நிறுத்திவிடுவார்கள். பின்னர் கடந்ததும், மீண்டும் கூரை மேல் ஏறிப் பயணம். “இப்படி லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கிறார்கள்.. இன்றுவரை” என்கிறார் சாய்நாத்.

வறட்சியின் மீதான அதிகார வர்க்க நேசம்

இந்தப் பயணம் வழியே சாய்நாத் எழுதிய கட்டுரைகள், இந்திய ஊரகச் சமூகத்தைப் பற்றிய மிக முக்கியமான புத்தகமாக உருவெடுத்தது. புத்தகத்தின் தலைப்பு, ‘ஒரு நல்ல வறட்சியை எல்லோரும் நேசிக்கிறார்கள்’ (Everyone Loves a Good Drought). பத்திரிகைத் துறையின் செவ்வியல் படைப்பு எனப் போற்றப்படும் இப்புத்தகம், நூறு பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கப்படுகிறது. ‘பெங்குயின் செவ்வியல் பதிப்பு’ உள்பட, 51 முறை இப்புத்தகம் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. 11 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது (தமிழில்: பாரதி புத்தகாலயம் வெளியீடு). 

இப்புத்தகத்தில் தமிழகம், பிஹார் மற்றும் பல மாநிலங்களில் வசிக்கும் சாதாரண மனிதர்களைப் பற்றிய பல முக்கியமான கட்டுரைகள் உள்ளன. ‘கடின மலைகள்’ என்னும் தலைப்பில் பிஹாரில் உள்ள கொட்டா என்னும் ஊரில் வசிக்கும் மலைவாழ்ப் பெண்களின் கதை அவற்றுள் மிக முக்கியமானது. மலைகளில் ஏறி, தங்கள் உடல் எடையைவிட அதிக பாரம் கொண்ட விறகுச் சுமையைச் சேகரித்து, செங்குத்தாக மேலும் கீழுமாகச் செல்லும் பாதையில் 30-31 கி.மீ. தொலைவு சுமந்து சென்று, வெறும் 8-9 ரூபாய்க்கு விற்றுவரும் அசாதாரண வாழ்க்கை அவர்களுடையது, இந்தக் கட்டுரை, ‘20 நூற்றாண்டின் இணையற்ற பத்திரிகைக் கட்டுரை’ என்று ‘ஆர்ட்ஃப்ரண்ட்’ (Ordfront) நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இது எழுதப்பட்ட கதையும் சுவாரஸ்யமானதுதான். ராமநாதபுரத்தில் பயணிக்கையில், காலில் ஏற்பட்ட காயத்துக்குப் போடப்பட்ட கால் கட்டுடன் இந்தக் கட்டுரைக்காக, விந்தி விந்தி அந்தப் பெண்களுடன் நடந்து செல்கிறார் சாய்நாத். அந்தப் பெண்கள் மிகவும் கூச்ச ஸ்பாவம் உடையவர்கள், எனவே சாய்நாத்துடன் ஆரம்பத்தில் அவர்கள் பேசவேயில்லை.

ஓரிடத்தில் ஆறு குறுக்கிட, அவர்கள் தத்தம் தலைச் சுமையை இறக்கி வைத்துவிட்டுக் குளிக்க முடிவெடுக்கிறார்கள். அவர்களைத் தனிமையில் விட்டுவிட்டுச் சற்றுத் தொலைவு சென்று சாய்நாத்துடன் சென்ற நண்பர் குளிக்கத் தொடங்குகிறார். காலில் கட்டு இருப்பதால், குளிக்கத் தயங்கிய சாய்நாத், முகம் மட்டும் கழுவிக்கொள்ளலாம் என நீருக்கருகில் சென்று, தோளில் மாட்டியிருந்த காமிராவைப் பத்திரப்படுத்திக் கொண்டு, ஜாக்கிரதையாகக் குனிகிறார். ஆனால், அவர் நின்றிருந்த பாறையின் பாசி வழுக்கிவிட, நீரில் விழுகிறார். காமிரா நீரில் மூழ்கிவிடாமல் ஒரு கையை மட்டும் நீரின் பரப்புக்கு வெளியே நீட்டிக்கொண்டு அவர் தவித்த காட்சியைக் கண்டு அந்தப் பெண்கள் வாய்விட்டுச் சிரிக்கிறார்கள்.. சூழல் இளக, அப்பெண்கள் சாய்நாத்துடன் பேசத் தொடங்கி, பின்னர் வழி முழுவதும் பேசிக்கொண்டே வருகிறார்கள். 

இந்தக் கட்டுரையை எழுதும் நான், அவர் தன் பத்திரிக்கைப் பணியைத் தொடங்கிய 33ம் ஆண்டில் சந்தித்தேன். அதற்கு இரண்டு மாதம் முன்பு, அவர் கட்டுரை ஒன்றைப் படித்துவிட்டு, விசிறியாக மாறி மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். வழக்கமான வேளாண் கட்டுரைகளானவை ஆண் விவசாயிகளை முன்வைத்து எழுதப்பட்டிருக்கும். ஆனால், சாய்நாத்தின் அந்தக் கட்டுரை, லீலாபாய் என்னும் பெண் விவசாயியை முன்வைத்து எழுதப்பட்டிருந்தது என்னை ஈர்த்தது. எளிமையான கட்டுரை.  ஆனால், என்னை ஆழ்ந்து சிந்திக்க வைத்தது.  

என் மின்னஞ்சலுக்கு அவர் பதில் எழுதியிருந்தார்.  அதில், “நானும் நண்பர்களும் இணைந்து, ‘பரி’ (PARI - People’s Archive of Rural India- ஊரக இந்திய மக்களின் வாழ்க்கை ஆவணம்) என்னும் புதிய முன்னெடுப்பைச் செய்யவிருக்கிறோம்.. நீங்கள் அதில் பங்குகொண்டால் மகிழ்வேன்” என எழுதியிருந்தார்.

என் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட மின்னஞ்சல் அது.

சாய்நாத்தின் ‘பரி’, சமூகம் அதுவரை கண்டிராத மக்களைக் காணுதலையும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களைக் கேட்பதையும் மாற்றியமைத்தது எனச் சொன்னால், அது மிகையல்ல. பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வந்து, உலகுடன் இந்தியா இணைந்த இக்காலத்தில், இக்குரல்களும், அவர்களது பிரச்சினைகளும் கேட்கப்படுவது மிக முக்கியமானதாகிறது. 

1991 தொடங்கிய அடுத்த இரு தசாப்தங்களில், ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 2000 விவசாயிகள், விவசாயத்தைவிட்டு வெளியேறுகிறார்கள் என ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் ஊரகச் செய்தியாசிரியராக இருந்த காலத்தில் சாய்நாத் உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டினார். 

தொடர்ந்து கீழிறங்கிக்கொண்டிருக்கும் நிலத்தடி நீர்மட்டம், தாங்கவியலாத சாதிய, பாலியல் வன்கொடுமைகள் போன்றவை காரணமாக வேறு வழியின்றிப் புலம்பெயர்ந்து செல்லும் விளிம்புநிலை மனிதர்கள், 1995 முதல் 2018 வரை நிகழ்ந்த 3.5 லட்சம் விவசாயிகள் தற்கொலைகள்.. இந்த அவலங்களின் காரணங்களை ஆராய்ந்து சமூகத்தின் முன்பு மிக வலுவாக வைத்தார் சாய்நாத். அக்கால அரசுகள் பல மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுக்க இந்த முயற்சிகள் ஒரு முக்கியத் தூண்டுதலாக இருந்தன.

சர்வதேச அங்கீகாரமும், தனித்துவப் பயணமும்

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிகப் புகழ்பெற்ற, ‘ரமான் மகசேசே’, விருதை வழங்கிய குழு, சாய்நாத்தின் இந்தப் பங்களிப்பை அங்கீகரித்தது. ‘இந்தியச் சமூக மனநிலைக்குள், ஊரக ஏழைகளின் அவல வாழ்க்கைக் கதைகளை மீட்டெடுத்து வலுவாக முன்னிறுத்திய சாய்நாத்தின் ஆழ்ந்த அர்ப்பணிப்புக்காக 2007-ம் ஆண்டின் ‘ரமான் மகசேசே’ விருது வழங்கப்படுகிறது’ என்று அது அறிவித்தது. அதையடுத்து, பல்வேறு விருதுகள் அவரைத் தேடி வந்தன. மிக அண்மையில், ஜப்பான் நாட்டின், ‘ஃபுகுவோகா விருது’ அவருக்கு வழங்கப்பட்டது.  ‘ஏழ்மையிலுள்ள வேளாண் கிராமங்கள், ஊரக மக்களின் குரல்கள், அவர்களின் அவல வாழ்க்கையின் நிதர்சனம் முதலியவற்றைக் கதைகள் வழியே அர்ப்பணிப்புணர்வுடன் வெளிக்கொணர்ந்த பத்திரிக்கையாளர்’  என அவருக்கு அளிக்கப்பட்ட விருதுச் சான்றிதழ் சொல்கிறது.

சாய்நாத் நடத்திவரும், ‘பரி’  தன்னுடைய இணையதளம் (www.ruralindiaonline.org) வழியாக தொடர்ந்து இப்பணியைச் செய்துவருகிறது. இத்தளத்தில், ஊரக இந்தியா தொடர்பிலான கட்டுரைகள், நூல்கள் அடங்கிய இணைய நூலகம், கல்விக்கெனவே இயங்கும் தனித்துவமான இணையதளம், இந்திய உப கண்டத்தின் மனித முக வேறுபாடுகளை ஆவணப்படுத்தும் புகைப்படங்கள், காணொலிகள், கால நிலை மாற்றம், பாலினச் சமத்துவம், கலாச்சாரம், விவசாயிகள் போராட்டம் போன்ற பலதரப்பட்ட விஷயங்களையும் கூர்மையான அலசும் கட்டுரைகள் முதலியன உள்ளன. 

விடுதலைப் போராட்ட வரலாற்றின் இறுதிக்கண்ணியாக இன்றும் உயிருடன் இருக்கும் விடுதலைப் போராட்ட வீரர்களின் கதைகளை உள்ளடக்கிய ‘விடுதலைப் போரின் காலாட்படை வீரர்கள்’ என்னும் பகுதி தன் மனதுக்கு மிகவும் நெருக்கமானது எனக் குறிப்பிடுகிறார் சாய்நாத்.

இவற்றுக்கு மேலாக, வேளாண் துறைச் சிக்கலின் மீது மிகக் கூர்மையான கவனத்தைச் செலுத்திவருகிறது இந்நிறுவனம். நிறுவனத்தின் இணைய தளத்தில் வெளியாகும் கட்டுரைகள், தமிழ் உள்பட 13 மொழிகளில் வெளியாகின்றன. இதில் பங்களிப்பவர்கள் அனைவரும் தொழில்முறைப் பத்திரிகையாளர்கள் அல்ல. மாணவர்கள், மருத்துவர்கள், இல்லத்தரசிகள், ஒடுக்கப்பட்டோர் எனப் பல தளங்களில் இருப்பவர்கள், தங்கள் கதைகளின் வழியே பங்களிப்பை நிகழ்த்துகிறார்கள். இக்கட்டுரையாளராகிய நான் உள்பட அனைவருமே, சாய்நாத்தின் பங்களிப்பால் உத்வேகம் பெற்றவர்களே. 

“பல நூறு கிலோ மீட்டர் பயணித்து, 800 வார்த்தைகளில் ஒருவரின் கதையை எழுதுகையில், முன்னிறுத்தப்பட வேண்டியவர்கள் அவர்கள்தாமே ஒழிய, நீங்களல்ல” என்பது, பல ஆண்டுகள் முன்பு சாய்நாத் எனக்குச் சொன்ன அறிவுரை.  இதுவே, சாய்நாத் கல்லூரிகளில் கற்பிக்கும் இதழியல், ‘பரி’க்காக எழுதுபவர்களுக்கான நெறிமுறை, மேலும், ‘பரி’யின் கொள்கை முழக்கம் என்றும் சுருக்கமாகச் சொல்லலாம்!

சாய்நாத் எழுதிய ‘ஒரு நல்ல வறட்சியை எல்லோரும் நேசிக்கிறார்கள்’ புத்தகம், இந்தியாவின் முக்கியமான இதழியல் நூல்களில் ஒன்று. தமிழில் ஆர்.செம்மலர் மொழிபெயர்த்திருக்கும் இந்நூலை ‘பாரதி புத்தகாலயம்’ வெளியிட்டிருக்கிறது.  558 பக்கங்கள். விலை ரூ.550/- செல்பேசி வழி வாங்க: 8778073949. இணையத்தின் வழி வாங்க: https://thamizhbooks.com/product/oru-nalla-varatchiyai-ellorum-nesikirarkal/

  இந்த நூலுக்கு எஸ்.அகத்தியலிங்கம் ஓர் அறிமுகவுரை எழுதியிருக்கிறார்: கீழ்க்காணும் இணைப்பில் அதை வாசிக்கலாம்: https://bookday.in/p-sainath-in-oru-nalla-varatchiyai-ellorum-nesikirarkal-book-review/ 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
அபர்ணா கார்த்திகேயன்

அபர்ணா கார்த்திகேயன், பத்திரிகையாளர். ‘பரி’ நிறுவனத்தின் முதுநிலை ஆய்வாளர். 'நைன் ருபிஸ் அன் ஹவர்' (Nine rupees an hour), 'வோஃப்' (woof) நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: பாலசுப்ரமணியம் முத்துசாமிபின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

janakiraman.V   3 years ago

அருஞ்.சொல் கட்டுரைகளின் மைல்கல் கட்டுரை...திரு.சாய்நாத் உழைப்பை தமிழ் உலகுக்கு அறியபடுத்திய தங்கள் குழுவினர்க்கு மனமார்ந்த வாழ்த்துகள்.....

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

Karpaga Sundaram   3 years ago

Wonderful article, thank you

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

சூ.ம.ஜெயசீலன்   3 years ago

மிக அருமையான கட்டுரை! ஓர் ஆளுமை கருவாகி, உருவாகி, கலங்கரை தீபமாக ஒளிர்வதைப் பார்க்க முடிந்தது! கட்டுரையின் கடைசியில் குறிப்பிட்டிருப்பது போலவே, இக்கட்டுரையின் உள்ளடக்கம் அமைந்துள்ளது: சாய்நாத் பற்றிய கட்டுரையில் அவர் முன்னிலைப்படுத்தப்படவில்லை… எளிய மக்களே தெரிகிறார்கள்! எளிய மொழிபெயர்ப்பு… வாழ்த்துகள்!

Reply 6 1

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

கல்விச் சீர்த்திருத்தங்கள்தில்லைகாந்தி கிணறுநிதிநிலை அறிக்கை 2023-24சமஸ் அண்ணாகல்வெட்டுகள்ரீங்காரம்ஜேம்ஸ் பால்ட்வின் பேட்டிபேராசிரியர்தேசிய நுழைவுத் தேர்வுசமஸ் அருஞ்சொல்பொதுவெளிகள்பருவநிலை மாற்றம்ஊழல் குற்றச்சாட்டுகள்சமூகக் கல்விஎஸ்.வி.ராஜதுரை கட்டுரைதமிழ்ப் புத்தாண்டு அண்ணாபதினெட்டாம் பெருக்குவிடுதலைப் போராட்டங்கள்கடவுளின் விரல்ஈராயிரம் குழவிகளை எப்படி அணுகப்போகிறோம்?காதல் - செக்ஸ்g.kuppusamyதென் இந்தியர் கடமைகுழந்தை பிறப்புஅழிவுக்கே விழிஞ்சம் திட்டம்!தொங்கு பாலம்பொறியியல்வர்ண பகுப்பு ஜாதியமானது எப்படி?பிரியங்கா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!