கட்டுரை, வாழ்வியல், விவசாயம், புத்தகங்கள் 10 நிமிட வாசிப்பு

செளந்தரம்: காளைகளுக்கான சண்டை

அபர்ணா கார்த்திகேயன்
16 Jan 2023, 5:00 am
0

சென்னை புத்தகக்காட்சியை ஒட்டி கவனம் ஈர்க்கும் புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது ‘அருஞ்சொல்’. அந்த வகையில் அபர்ணா கார்த்திகேயன் எழுதிய ‘ஒரு மணி நேரத்துக்கு ஒன்பது ரூபாய்’ நூலை இங்கு அறிமுகப்படுத்துகிறோம். புத்தகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்டுரை இங்கே!  

காளைகளைப் பிடித்துக்கொண்டுவர யாரும் முன்வரவில்லை. மூன்று காளைகள் மிகவும் மெலிதான கருவேலமரங்களின் நிழலில் மேய்ந்துகொண்டிருந்தன. அதில் பெரியதாக இருந்த ஒன்றின் பெயர் சிங்காரவேலன் — அதனுடைய நல்ல தோற்றத்திற்காக இந்தப் பெயர். இது சுமார் 6 அடி உயரம், வலுவான கழுத்து, பெரிய திமில், கூர்மையான கொம்புகளுடன் காட்சியளித்தது. 

அங்கிருந்த கால்நடைகளை முறுக்கேறிய கைகளுடனும் மீசையுடனும் இருந்த மூன்று பேர் பார்த்துக்கொண்டிருந்தனர். அதில் ஒருவர் சிவப்பு நிறத்தில் உடையணிந்திருந்த, காளைகளைப் பார்க்க ஆர்வமாக இருந்த தனது சிறுவயது மகளை அழைத்துக்கொண்டு வந்திருந்தார். ஆண்களின் கண்களில் பெருமை தெரிந்தது. கால்நடை வளர்ப்பவர்களும் விவசாயிகளுமான அவர்கள் இந்தக் காளைகள் சிறப்பான வகையைச் சேர்ந்தவை என்பதை அங்கீகரித்துக்கொண்டனர். 

அந்தச் சிறு பெண் சிங்காரவேலைனை தன்னிடத்தில் கூட்டிக்கொண்டு வரும்படி கேட்க, அதற்கு அந்தக் குழுவில் இருந்த 60 வயது மதிக்கத்தக்க ராமசாமி என்பவர் ‘என் மனைவி செளந்தரம் வரட்டும்’ எனக் கூறியதோடு, ‘அவளால் மட்டும்தான் இதைப் பிடிக்க முடியும்’ என்றும் கூறினார். சிங்காரவேலன் தனது கொம்புகளால் சகதியை வாரி இறைத்தது. ‘நான் அதன் பக்கத்தில் சென்றால் அது வம்பு செய்யும். ஆனால், அவள் வந்தால் எளிதாகப் பிடித்துவிடுவாள்’ என்றார். அந்தச் சிறுமியும் தலையாட்டிக்கொண்டு செளந்தரம் ராமசாமியின் வருகைக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள். இவர் கோயம்புத்தூருக்கு அருகில் இருக்கும் காங்கேயம் பகுதியில் காளைகளை வளர்த்து வரும் ஒரே பெண்மணி என்று அறியப்படுபவர். இவருடைய கிராமமான காத்தசாமி பாளையத்தில் மிகவும் பிரபலமானவர். 

மதிய வெப்பத்தில் நிழல் குறுகிவரும் வேளையில் ‘காளக்கார அம்மா’ என அந்தப் பகுதி மக்களால் அறியப்பட்ட செளந்தரம் வந்துசேர்ந்தார். சிறிய, மெல்லிய உடல்வாகு கொண்ட, தலையில் ரோஜாப் பூ வைத்திருந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க அவர் கருப்பு நிறத்தில் இருந்த காளையான ரஜினியை நோக்கித் தெம்போடு நடந்து சென்று, அதனுடைய வயிற்றுப் பகுதியையும் முகத்தையும் தடவிவிட்டுக்கொண்டே ‘கன்னுக்குட்டி’ என அழைத்துக்கொண்டு அதனுடைய கயிற்றைப் பிடித்துக்கொண்டு சென்றார். அதன் பின் அவர் சிங்காரவேலனை நோக்கிச் சென்று அதனுடைய பெரிய திமிலை அனைத்து புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்தபோது, ‘பெண்மணியும் காளையும்’ சிறந்த நண்பர்கள் என்பதை வெளிப்படுத்தியது. 

காங்கேயம் என்கிற பகுதியைச் சேர்ந்த வகை என்பதால் அந்தப் பெயரிலேயே அழைக்கப்படும் காளைகளைப் போலவே செளந்தரமும் அரிதானவர். பெண்கள் பொலி காளைகளை வளர்ப்பது மிகவும் அரிதான ஒன்றாகும். நான் அவரை நேர்காணல் செய்த காலகட்டமான 2015 முதல் 2018 வரை, இவர் 6 முதல் 12 காளைகளை வளர்த்துவந்தார். 

மேற்குத் தமிழகத்தில் கொங்கு பிராந்தியத்தைச் சேர்ந்த காங்கேயம் காளைகள் வியக்கத்தக்க வகையில் கவர்ச்சிகரமாக இருக்கும். உயர்ந்த திமில்கள், கம்பீரமான கொம்புகளைக் கொண்டிருக்கும் இவை, உயரமாகவும் வலுவானதாகவும் இருப்பதோடு வறட்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில் காய்ந்த புற்களைச் சாப்பிட்டும் வளரக் கூடியவை. கடந்த இரண்டு தசாப்தங்களாக நாட்டுப் பசுக்களையும் எருமைகளையும்விட அதிக பால் தரும் கலப்பின பசுக்கள், டிராக்டர்கள், ஆழ்துளைக் கிணறுகள் மீது விருப்பம் கொள்ள ஆரம்பித்ததால் இவற்றின் எண்ணிக்கை மோசமான அளவுக்குக் குறைய ஆரம்பித்திருக்கிறது.

ரேக்ளா மாட்டு வண்டிப் பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும் ஜல்லிக்கட்டில் அடக்கமுடியாத காளைகளை வளர்ப்பவர்களால் இவை தொடர்ந்து வாங்கப்பட்டுவந்தன. இவையிரண்டும் நாட்டு இனங்களை உள்ளடக்கிய பாரம்பரிய விளையாட்டுகள் ஆகும். 2014ம் ஆண்டு மே மாதம் இந்த விளையாட்டுகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால், நாட்டு இன கால்நடை வளர்ப்பு மீண்டும் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. 

இந்திய அரசாங்கத்தின்படி, நமது நாட்டில் 190 மில்லியன் கால்நடைகள் (எருமைகள் தவிர்த்து) இருக்கின்றன. இது அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்திலும் இருக்கும் கால்நடைகளின் எண்ணிக்கையைவிட அதிகமாகும். 2016-17ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த பால் உற்பத்தி ரூ.61,438 கோடி ஆகும். இதில் மாட்டிறைச்சி உற்பத்தி ரூ.25,332 கோடி ஆகும்.

இந்தப் புள்ளிவிவரங்கள் ஆரோக்கியமான, வளர்ந்துவரும் கால்நடைப் பொருளாதாரத்தைப் பற்றிக் கூறுகின்றன என்றால், அது முழுக் கதையின் ஒரு பகுதிதான். 2012ம் ஆண்டு நடத்தப்பட்ட கால்நடைகள் கணக்கெடுப்பு கவலையளிக்கக் கூடிய சில தரவுகளைக் கொண்டிருக்கிறது. 2007ஆம் ஆண்டிலிருந்து கால்நடைகளின் எண்ணிக்கை சுமார் 4 சதவிகிதம் குறைந்திருக்கிறது. ‘விலங்கு மரபணு வளங்களுக்கான தேசியப் பணியகம்’ (National Bureau of Animal Genetic Resources) Bos Indicus என்கிற துணை உயிரினத்தைச் சேர்ந்ததும் திமில் மற்றும் அதன் பின்புறத்தை வைத்தும் 37 வகையாக நாட்டு மாடுகளை அங்கீகரித்திருக்கிறது. இதன் எண்ணிக்கை சுமார் 9 சதவிகிதம் குறைந்து 38 மில்லியன் என்கிற அளவைத் தொட்டிருக்கிறது. இதில் நாட்டுக் காளைகளும் எருமைகளும் 19 சதவிகிதமாகும். ‘வெளிநாட்டின’ கால்நடைகள் அல்லது ஐரோப்பிய வம்சாவளி மாடுகளின் எண்ணிக்கையும் வெளிநாடு-உள்நாடு கலப்பின மாடுகளின் எண்ணிக்கையும்தான் 20 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. 

இன்றைக்கு கணக்கெடுப்பு நடத்தினால் நாட்டினக் கால்நடைகள் இருக்கும் சூழ்நிலை இதைவிட அபாயகரமான நிலையில்தான் இருக்கும். (2017ம் ஆண்டு நடைபெற வேண்டியது, ஆனால் 20வது கால்நடைகள் கணக்கெடுப்பு 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் ஆரம்பமானது. முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை).

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் காங்கேயம், புலிக்குளம், உம்பலாச்சேரி, பர்கூர், ஆலம்பாடி ஆகிய ஐந்தும் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நாட்டின வகை மாடுகள் ஆகும். 1996ம் ஆண்டு அதிகாரபூர்வ கணக்கின்படி, இதன் எண்ணிக்கை 5,00,000 ஆகும்.  ஆனால் 2013ம் ஆண்டு இன ஆய்வின்படி, இதன் எண்ணிக்கை 193,445 ஆகும். இன்றைக்கு, காங்கேயம் காளைகளின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் இருக்கும் எனப் பாதுகாவலர்கள் கணித்திருக்கிறார்கள். 

செளந்தரம் ராமசாமி

பாரம்பரியமாக, பெரும்பாலான விவசாயக் குடும்பங்கள் நாட்டினப் பசுக்களை வளர்க்கிறார்கள். அதனுடைய சாணம் உரமாகப் பயன்படுகிறது, கன்றுகளை ஈனுகிறது, குடும்பத்துக்குத் தேவையான பால் கொடுக்கிறது. தேவைப்பட்டால் உழுவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் இது நல்லதொரு பொருளாதாரத் தெரிவாகும். இனப் பெருக்கத்துக்குப் பொலிகாளைகளும் உழுவதற்கு, தண்ணீர் எடுப்பதற்கு, உரத்துக்கு எருதுகளும் (விதையடிக்கப்பட்ட எருதுகள், வழக்கமாக நாட்டினத்தைச் சேர்ந்தவை) பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இந்தப் பொருளாதாரம் பல நாட்டின வகைகளைப் பல நூறாண்டுகளாக நீடித்து இருக்கச் செய்திருக்கிறது. 

இயந்திரமயமாக்கலும் வேலை செய்வதற்கான பண்ணை விலங்குகளின் தேவையும் குறைந்துவருவதால், இந்தப் பொருளாதாரக் கணக்கு மாறியது. பசுக்கள் பிரதானமாக அவற்றின் பாலுக்காக மட்டுமே மதிப்பளிக்கப்பட்டது, இதனால் வெளிநாட்டின, கலப்பினப் பசுக்கள் மீது — இவை நன்றாகப் பால் கொடுக்கும், ஆனால் வயல் வேலைக்கு உதவாது — அதிக ஈடுபாடு ஏற்பட்டது.

ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்தவை ஜெர்ஸியும் ஹோல்ஸ்டீன் ஃப்ரீசியனும், இதோடு நாட்டினமும் சேர்ந்த உருவான கலப்பின மாடுகள் நாளொன்றுக்கு 12 லிட்டர், அல்லது அதற்கும் மேலாக பால் கொடுக்கும். ஆனால், நாட்டின மாடான காங்கேயம் சுமார் 3 லிட்டர்வரைதான் பால் கொடுக்கும். நாட்டின மாடுகளைப் பராமரிப்பதற்கான செலவு குறைவு. இதனுடைய உற்பத்திச் செலவு வெளிநாட்டினத்துக்கு ஆகும் செலவான லிட்டருக்கு 17 ரூபாயில் பாதிதான். வெளிநாட்டின மாடுகளுக்குப் பிரத்யேகமான உணவும் மருந்தும் கொடுக்க வேண்டியிருப்பதோடு, அதிக அக்கறையோடு பார்த்துக்கொள்ளவும் வேண்டும். நாட்டின மாடுகள் குறைவான அளவுக்கே பால் கொடுப்பதால் பாலின் மீது பேராசை கொண்டிருக்கும் சந்தையில் உடனடியாக ஆதாயத்தை எதிர்பார்க்க முடியாது. மத்திய அரசின் தரவு இதை நிரூபிக்கிறது. 2014-15ஆம் ஆண்டில் தேசிய அளவில் வெளிநாட்டின, கலப்பின மாடுகளிலிருந்து பெறப்படும் பாலின் அளவு சுமார் 55.61 சதவிகிதமாகும். தமிழ்நாட்டில் இது 90.98 சதவிகிதமாகும். ‘அரசு கால்நடை சார்ந்த துறையில் செய்த சேதத்தைவிட அதிக சேதம் ஏற்படுத்தியது மிகச் சில துறைகளாகத்தான் இருக்கும்’ என்கிறார் பி.சாய்நாத். மேலும் அவர், ‘அரசாங்க அறிவிப்பினால் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த வலுவான நாட்டினங்கள் அழிக்கப்பட்டன’ என்கிறார். 

"நாட்டின மாடுகள் அந்தந்த பகுதியின் பருவநிலைக்கு முற்றிலும் ஏற்றதும் பராமரிப்பதற்குக் குறைவான செலவு கொண்டதும் ஆகும். வெளிநாட்டின வகை மாடுகள் ஐரோப்பியப் பருவநிலைக்கும் அந்தக் கண்டத்திலிருக்கும் சில குளிர்ப் பிரதேசங்களுக்கும் ஏற்றதாக இருக்கக் கூடியதாகும். அவை யவத்மால் (மகாராஷ்டிரத்திலுள்ள மாவட்டம்) அல்லது இந்தியாவில் வேறு இடங்களில் இருக்கும் வெப்பத்தில் மிகவும் சிரமப்படும். அதுபோல அடிக்கடி நோய்க்கு ஆளாகக் கூடியதுமாகும். இந்த இன மாடுகளை வைத்திருந்தால் வீட்டிலேயே மிருகங்களுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவரையும் வைத்திருக்க வேண்டும் என்பது விவசாயிகளிடையே பரவலாக நிலவும் நகைச்சுவையாகும்."

இருந்தாலும் பல மாநிலங்களில், ‘1960,70,80களில் இந்த நாட்டினங்கள் அதற்கு ஊறுவிளைவிக்கும் புழுக்களைவிடச் ‘சற்றே நன்றாக’ கவனித்துக்கொள்ளப்பட்டன. அந்தப் பைத்தியக்காரத்தனத்தின் விளைவான வெளிப்பாட்டை நாம் இப்போது காண்கிறோம்.

1970களில் ஆரம்பமான இந்தியாவின் வெண்மைப் புரட்சி அல்லது ஆபரேஷன் ஃப்ளட் காலத்திலிருந்து இந்தியாவெங்கும் பால் கிடைப்பது அதிகரிக்க ஆரம்பித்ததோடு, கலப்பின வகையைச் சார்ந்திருந்ததினால் பற்றாக்குறை என்கிற நிலையிலிருந்து உபரி என்கிற நிலைக்கு மாற ஆரம்பித்தது. இந்திய தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின்படி, 1970ம் ஆண்டு 178 மில்லியன் கால்நடைகள் 20 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்தன. ஆனால் 2012ம் ஆண்டு 190 மில்லியன் கால்நடைகள் மூலம் 132 மில்லியன் டன் என்கிற அளவுக்கு பால் உற்பத்தி அதிகரித்தது. அதாவது, கால்நடை அதிகரிப்பு 7 சதவிகிதமாக இருந்தாலும் பால் உற்பத்தி 560 சதவிகிதம் அதிகரித்திருந்தது. இந்த உற்பத்தித் திறன் அதிகரிப்புக்கு முக்கியக் காரணம், நாட்டின மாடுகளுக்கு பதிலாக வெளிநாட்டின, கலப்பின மாடுகளுக்கு மாறியதோடு, இந்தப் போக்கு மாறாமல் இருப்பதற்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டதுமாகும். 

கேரளாவில் அரசாங்கத்தின் கொள்கையினால் வெச்சூர் என்கிற நாட்டின மாடு எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டது என்பதை சாய்நாத் உதாரணம் காட்டுகிறார். 1961ஆம் ஆண்டு அரசானது, ‘கேரள கால்நடை மேம்பாட்டுச் சட்டம்’ என்பதை அறிமுகப்படுத்தியது. இதன்படி, கலப்பின மாடுகள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் நன்கு வளர்ந்திருந்த நாட்டின மாடுகளுக்கு விதையடிப்பு (இனப்பெருக்க ஆற்றலழிப்பு) செய்ய வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டது. இது பல நாட்டின வகை மாடுகளின் எண்ணிக்கையை கடுமையாகக் குறைத்தது. இதில் உலகத்திலேயே மிகவும் குட்டையான, 90 செ.மீ உயரமே உள்ள வெச்சூர் வகை மாடும் அடங்கும். 

1980,90களில் திட்டமிட்ட முயற்சியின் மூலம் சோசம்மா ஐப் (Sosamma Iype) இந்த வெச்சூர் இன மாடுகளைப் பாதுகாக்க ஆரம்பித்தார். விலங்கு மரபியல் மற்றும் இனப்பெருக்கத் துறையில் வேலை பார்த்து ஓய்வுபெற்ற பேராசிரியையான ஐப், ‘வெச்சூர் கன்சர்வேஷன் ட்ரஸ்ட்’ என்கிற அமைப்பின் இயக்குநராக இருந்து வருகிறார். 

மிகவும் தீவிரமான விவசாயத்துக்கு மாறும்போது முதன் முதலாக ஏழைகள்தான் தங்களது கால்நடைகளை இழப்பார்கள் எனக் கூறும் ஐப், மேலும் ‘கால்நடையானது கிராமத்துச் சூழலின் ஒரு பகுதி. அதை இழக்கும்போது சூழலின் சமநிலையும் இழக்கப்படுகிறது. உணவுப் பாதுகாப்பும் இழக்கப்படுகிறது. முழுப் பொருளாதாரமும் பாதிப்புக்கு உள்ளாகும்... அதிகமாக பால் கொடுக்கும் பசு அதிக லாபம் தரக்கூடியதாக இருப்பதில்லை’ என்று விளக்கினார். ‘இது உள்ளீட்டு–வெளியீட்டு விகிதாச்சரத்தைப் பொறுத்திருக்கிறது.’ 

இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான நாட்டின வகை மாடுகள், தமிழ்நாட்டின் ஆலம்பாடிபோல, அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. இன்னும் இதற்கு எதிராக அதிகாரபூர்வமான பாரபட்சம் தொடர்கிறது. ‘இதிலிருக்கும் முரண்பாடு என்னவெனில், ஓங்கோல், சஹிவால், ரெட் சிந்தி, கான்ங்ரெஜ், கிர் வகை மாடுகள் மற்ற நாடுகளில் அந்த நாட்டு மாடுகளைப்போல நன்றாகவே வளர்கின்றன’ என்கிறார் ஐப்.

வளர்ப்புத் திட்டங்களை நன்றாகப் பின்பற்றுவதே இதற்குக் காரணமாகும். பாலுக்கு இல்லையென்றாலும் பிரதானமாக மாட்டிறைச்சிக்கு இந்திய மாட்டின வகைகளை பிரேசில் பெருமளவில் பயன்படுத்திவருகிறது. 

இந்தியாவின் பிரச்சினை உலகளவில் பிரதிபலிக்கிறது. ‘உலகளவில் ஆயிரக்கணக்கான மாட்டு வகைகள் இருக்கின்றன. ஆனால் ஹோல்ஸ்டீன், ஜெர்சிஸ், கெர்னிசிஸ், ஏர்ஷர்ஸ், ப்ரெளன் சுவிஸ் போன்ற குறிப்பிட்ட சில வகைகள் பிரபலமானவையாகும். இதில் ஹோல்ஸ்டீன் மிகவும் பிரபலம். இந்த வகை மாடு ஏற்கனவே 128 நாடுகளில் இருக்கிறது. இயல்பாகவே இந்த வகையான மாடுகள் நாட்டின மாடுகளை மாற்றுகின்றன’ என்கிறார் ஐப். 

இது மரபணு வகையைப் பொறுத்தவரை பெரும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. ‘உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் இனங்களின் விஷயத்தில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலான காளைகளே உபயோகப்படுத்தப்படுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும். செயற்கைக் கருத்தரிப்பு முறையின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் ஒரு காளையின் உறைந்த விந்து ஆயிரக்கணக்கான பசுக்களின் கருத்தரிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக, அந்தக் கன்றுகளிடத்தில் ஒரே மரபணு அதிக சதவிகிதத்தில் இருக்கும். இது ஓர் ஆரோக்கியமான சூழ்நிலை இல்லை’ என்கிறார் ஐப். 

குறைந்து வர ஆரம்பித்த மரபணுத் தொகுப்பு நாட்டின மாடுகளின் வளர்ச்சி எண்ணிக்கையைப் பாதித்ததோடு, பிறழ்வுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியில்லாமல் பலவீனமடைவதற்கும் வழி வகுத்தது. உலகளவில் வெப்ப நிலை அதிகரித்து, நீர் வளமும் குறையும்போது இவற்றிற்குப் புதிய வியாதிகள் வரும். ஒரே மாதிரியான தன்மை கொண்ட சில இனங்கள் நம்மைக் காப்பாற்றாது என ஐப் கணித்ததோடு இந்தியா அதனுடைய ஆய்வுக் கூடங்களில் ஒரு புதிய இனத்தைக்கூட உருவாக்கவில்லை எனச் சாடினார். 

பராமரிப்புச் செலவு அதிகம் தேவைப்படாத நாட்டின மாடுகள் வளர்ப்பிலிருந்து அதிகச் செலவாகும் வெளிநாட்டின மாடுகளை வளர்ப்பதற்கு விவசாயிகள் மாறும்போது, அவர்கள் அதிகமான நிதிச் சுமைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்று திருப்பூர் மாவட்டத்தில் குட்டப்பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் ‘சேனாபதி கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளை’யின் (Senaapathy Cattle Research Foundation) தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி கூறினார்.

காங்கேயம் இனத்தைச் சேர்ந்த மாடுகளுக்கு குறைவாகத்தான் தண்ணீர் தேவைப்படும். எனவே இதை காங்கேயம் போன்ற வறட்சியான பகுதிகளில் வளர்ப்பது பொருத்தமானதாக இருக்கும். வழக்கமாக மோசமான மேய்ச்சல் நிலம் எனக் கருதக்கூடிய நிலங்கள்கூட இதன் உணவுக்குப் போதும். வெளிநாட்டின வகை மாடுகள் வளர்ப்புக்கு மாறும்போது, அதற்குப் பொருத்தமான தீவன வளர்ப்பிற்காகப் பல்லுயிரியத்துக்கும் (biodiversity) நீர் வளங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் பிரத்யேகமாக நிலத்தைச் சுத்தம் செய்து அதைப் பராமரித்து வர வேண்டும்.

நாட்டின வகை மாடுகளுக்கு ஆகும் மேய்ச்சல் செலவில் ஏற்படக்கூடிய சேமிப்பையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், அதிலிருந்து கிடைக்கக்கூடிய ‘பால் விலைமதிப்பற்றது’ ஆகும் என்கிறார் கார்த்திகேயா. ‘பால் மூலம் கிடைக்கும் குறைந்த கால ஆதாயத்துக்காக’ வெளிநாட்டின மாடுகளின் வளர்ப்பானது ‘பல நாட்டின வகை மாடுகளை’ அழித்துவிட்டிருக்கிறது என்று அவர் மேலும் கூறினார். இந்த வருமானம் பின்னால் ஏற்படக்கூடிய நாட்டின வகை மாடுகளின் இழப்பு சோகத்திலிருந்து விடுபட விவசாயிகளுக்கு ஓர் ஆறுதலாக இருக்கிறது. இந்தியாவின் பல பகுதிகளுக்கும் இது பொருந்தும். உதாரணமாக, வெளிநாடு மற்றும் கலப்பின மாடுகளின் வளர்ப்பை 1970ன் பின்பகுதியிலும் 80களிலும் மாநில அரசு ஊக்குவிக்க ஆரம்பித்ததினால், ஒடிசாவின் காரியர் (Khariar) இன மாடுகள் அழிந்துபோயின. அரசியல் உந்துதலால் ஏற்பட்ட பசுவதை போன்ற தடைகளால் நன்கு நிறுவப்பட்டிருந்த கால்நடைப் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்பட்டது. 

நாட்டின மாடுகளுக்கு எதிராக மாநிலங்களின் பாரபட்சமான இந்தப் போக்கு இருந்தாலும் செளந்தரம் போன்ற தனிநபர்களும், சில தனியார் அமைப்புகளும் நாட்டின மாடுகளைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள். உதாரணமாக, 2015-16ம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு, பால்பண்ணை மற்றும் மீன்வளத்துறை வெளியிட்ட கொள்கை அறிக்கையின்படி அரசுக்குச் சொந்தமான வளர்ப்பு மையங்களில் இருக்கும் 250 காளைமாடுகளில் 178 மாடுகள் ஜெர்சி அல்லது ஜெர்சி கலப்பின வகையைச் சேர்ந்தவையாகும். இது தவிர, மாநிலத்தின் நாட்டின மாடுகளில் காங்கேயம் 4, புலிக்குளம் 2, பர்கூர் 1, உம்பலாச்சேரி 1 என 8 மாடுகள் மட்டுமே அங்கு இருந்தன. (இதற்குப் பின் வெளியான கொள்கைக் குறிப்புகளில் வளர்ப்புக் காளைமாடுகளின் எண்ணிக்கை இனரீதியாகக் கொடுக்கப்படவில்லை).

2018ம் ஆண்டின் மத்தியப் பகுதியில் செளந்தரத்தின் பண்ணை இதை மிஞ்சும் வகையில் 12 காங்கேயம் காளைகளையும் 6 கன்றுக்குட்டிகளையும் கொண்டிருந்தது. அதில் மயிலை என்பதற்குப் பொருத்தமாகக் கருப்பு வெள்ளை மாடுகள் இரண்டும், செவளை நான்கும், கருப்பு ஆறும் இருந்தன. இதோடு 7 பசுமாடுகளும் அவரிடம் இருந்தன. 

இருபது வருடங்களுக்கு முன்பே மிகவும் முன்னுணர்வுடன் செளந்தரமும் அவரது கணவர் ராமசாமியும் காங்கேய இன மாடுகளை வளர்க்க ஆரம்பித்தனர். அவர்கள் பசுக்களோடு ஆரம்பித்தார்கள். அதில் ஒன்று பார்வைக்கு அழகான ஓர் ஆண் கன்றை ஈனவும் அதைத் தங்களோடு வைத்துக்கொள்ளத் தீர்மானிக்க, அந்தக் கருப்பனோடு அவர்களுடைய பண்ணையும் பிறந்தது. 

காளை மாட்டின் அழகு உள்ளிட்ட அதிலிருக்கும் அம்சங்களைக் கவனமாகப் பார்த்து ஒவ்வொன்றாகத் தெரிவுசெய்தனர். இதை வாங்குவதற்காக டெம்போ ஒன்றை வாடகைக்கு எடுத்து கிராமப்புறங்கள், கால்நடைச் சந்தை எனப் பல இடங்களுக்குச் சென்று ஒவ்வொரு கன்றுக்குட்டிக்கும் ரூ.25,000 முதல் ரூ.40,000 வரை பணம் கொடுத்து வாங்கினர். வளர்ந்த காளைகளுக்கு நல்ல விலை கிடைக்கும். செளந்தரத்தின் பெரிய காளைமாடான சிங்காரவேலனுக்கு 2016ம் ஆண்டு ரூ.3 லட்சம் கேட்கப்பட்டது, ஆனால் அவர் அதை விற்கவில்லை. 

நான் அவருடைய வியாபார மாடல் குறித்துக் கேட்டதற்கு, ‘இது வியாபாரம் இல்லை’ என்று அழுத்தமாகக் கூறினார். மேலும் அவர், ‘இத நாங்க விரும்புறதோட, இந்த வகை மாடுகளை உயிரோடு வைத்திருக்கவும் விரும்புகிறோம். நாங்க பணம் சம்பாதிக்க விரும்பினா ஆடுகளை வளர்ப்போம்’ என்றார். 

தன் மகன்களுடைய வருமானம் இல்லையெனில் — ஒருவர் பொறியியலாளராகவும், இன்னொருவர் சென்னையில் நிதி சம்பந்தப்பட்ட துறையிலும் வேலை பார்த்துவருகிறார்கள் — இந்தக் கால்நடைப் பண்ணையை நிர்வகிக்க முடியாது என்றும், மேய்ச்சல் நிலத்துக்குக் கொடுக்கும் வாடகை தவிர்த்து ஒரு காளை மாட்டுக்குத் தினசரி ரூ.200 செலவாகிறது என்றும் செளந்தரம் கூறினார். இவர்கள் இருபத்தைந்து வகை தாவரங்கள் இருக்கும் முப்பது ஏக்கர் கொரங்காடு நிலத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள்.

இது கொங்குப் பகுதியின் சிறப்பாகும். அவர்களும் காய்கறிகள் விளைச்சல் செய்யும் தங்களுடைய நிலத்தை கால்நடைத் தீவனத்துக்குத் தேவையான சோளம், தானியங்கள் விளைவிக்கும் நிலமாக மாற்றிவிட்டனர். இப்போது அடிக்கடி ஏற்படுகிற வறட்சியினால் இவர்களது செலவுகளும் அதிகரிக்கின்றன. ‘மழை பெய்தது என்றால் கொரங்காடு முழுவதும் புற்களாலும் செடிகளாலும் நிரம்பியிருக்கும். இதில் காளைமாடுகள் சுதந்திரமாக நன்றாக மேயும். ஆனால் இப்போது? நாங்கள் அதற்குக் கால்நடைத் தீவனத்தோடு பருத்தியையும் கொடுக்க வேண்டியிருக்கிறது.’ இப்போது இவர்கள் நோய்த்தடுப்பு மருந்துக்கு மட்டும் பணம் செலவழிக்கத் தேவையில்லை. இவர்கள் வசிக்கும் கிராமத்துக்கு வரும் இளம் கால்நடை மருத்துவர் இவருடைய அனைத்துக் கால்நடைகளுக்கும் இலவசமாக ஊசிப் போட்டுவிட்டுச் செல்கிறார். 

செளந்தரத்தின் பண்ணையானது நிதிச்சுமை மட்டுமல்லாது, உடல் உழைப்பையும் அதிகம் வேண்டுவது ஆகும். இவருடைய ஒவ்வொரு நாளும் கால்நடைகளில் ஆரம்பித்து கால்நடைகளில் முடிவதாகவே இருக்கிறது. இவர் மாடுகளை மேய்ச்சலுக்காக காலையில் எட்டு மணிக்குக் கூட்டிச் செல்கிறார். அதன் பின் மதிய உணவு நேரத்தில் வீட்டுக்குத் திரும்பி மாடுகளுக்குத் தேவையான தண்ணீரையும் உணவையும் எடுத்துச்சென்று மாலையில் பசுக்களிலிருந்து பால் கறப்பதற்காக வீடு திரும்புகிறார். 

செளந்தரத்துக்குப் பிடித்த இன்னொரு விஷயம்: ரோஜாக்கள். அவர் தனது பின்னிய கூந்தலில் அலங்காரமாக வைத்திருக்கும் ரோஜா அவருடைய தோட்டத்தில் பூத்தது ஆகும். அவர் காதுகளில் அணிந்திருக்கும் எடை மிகுந்த காதணிக்கு முட்டுக்கொடுக்கும் வகையில் காதுமடலைச் சுற்றி ஒரு மெல்லிய செயின் இருந்தது. அவர் கழுத்தில் சங்கிலியும், கைகளில் வளையலும் அணிந்திருந்ததோடு பல நிறங்கள் கொண்ட சேலையை உடுத்தியிருந்தார். 

அவருடைய புதிய வீட்டில் வராந்தாவுக்குச் செல்லும் வழியிலிருக்கும் படிக்கட்டுகளில் உட்கார்ந்திருந்த எனக்கு டீ, பிஸ்கெட்டை செளந்தரம் கொடுத்தார். 2012ஆம் ஆண்டு கட்டப்பட்ட வீடு பிரகாசமாகவும் நவீன பாணியிலும் இருந்தது. மரத்திலான கதவுகள் நன்கு வார்னீஷ் செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டிருந்ததோடு வரவேற்பரையில் வசதியான பெரிய சோபாக்களும் போடப்பட்டிருந்தன. 

அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரும் — அவருடைய விதவை அம்மா உட்பட — காளைமாடுகளின் உயரம் மட்டும் திடகாத்திரம் குறித்து நாள்தோறும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அதை நன்கு வீரியமாக வைத்திருப்பதில் ஆர்வம் கொண்டிருந்தனர். பொலிகாளைகள் என்பதால் அவற்றின் தோற்றம் மிகவும் முக்கியமானதாக இருந்தது.

இந்தக் காளைகளைக் கவனித்துக்கொள்ளும் செளந்தரமோ மெலிவானவராக இருந்தார். அவருடைய வீட்டிற்கும் பல்வேறு இடங்களில் இருக்கும் மேய்ச்சல் நிலங்களுக்குமான தூரம் சுமார் அரை கிலோமீட்டரிலிருந்து சில கிலோமீட்டர்கள்வரை இருந்தது. அவையெல்லாம் சிறியவையாக இருந்ததோடு மேய்ச்சலுக்காகக் குத்தகைக்கு எடுத்திருந்தனர். அவர் தண்ணீரை ‘ஸ்கூட்டியில்’ எடுத்துச்சென்றாலும் காளை மாடுகளைக் கூட்டிவர தினமும் குறைந்தது இரண்டு முறை நடக்க வேண்டியிருந்தது. 

‘குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள்தான் இதைக் கவனித்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, இனப் பெருக்கத்திற்காக பசுக்கள் வரும்போது, இதுபோன்ற ஆபத்தான வேலைக்கு வேறு யாரும் வர மாட்டார்கள். அவர்கள் மாடுகளை அழைத்துச் செல்லவோ, அல்லது தண்ணீர் காட்டவோ மாட்டார்கள்.’

150 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்திலிருந்து இனப் பெருக்கத்துக்காக, சராசரியாக நாளொன்றுக்கு நான்கு அல்லது ஐந்து பசுக்கள் வருவதுண்டு. சில நாள்களில் ஒன்றுகூட வராது. இவருக்கு சமையல் செய்யக்கூட நேரம் கிடைப்பதில்லை என்பதால் அதை இவருடைய அம்மா பார்த்துக்கொள்வார். குடும்பம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்குக்கூட இவரால் போக முடிவதில்லை. ‘எதுவும் சொல்லாமல் பசுவோடு வந்து நிப்பாங்க. அதாவது நாம எப்போதும் வீட்டிலதான் இருக்கணுங்றது அவங்களோட எதிர்பார்ப்பா இருக்கு.’

பசு வைத்திருக்கும் ஒருவருக்கு இனப்பெருக்க வேலைக்கான செலவு சுமார் ரூ.4,000 ஆகும். இதில் போக்குவரத்து, உணவு, பொலிகாளை வைத்திருக்கும் செளந்தரத்துக்கான ரூ.500 என அனைத்தும் அடங்கும். மற்றவர்களைவிட, தான் குறைவாகத்தான பணம் வாங்குவதாக அவர் குறிப்பிட்டார். செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்வதற்கு ரூ.200லிருந்து ரூ.300தான் ஆகும் என்றாலும், பசுமாடு வைத்திருப்பவர்கள் செளந்தரம் மாதிரி பொலிகாளைகளை வளர்ப்பவர்களைத் தேடிவந்து அவர்களுக்கு விருப்பமான காளையைத் தெரிவு செய்துகொள்கிறார்கள். மிகவும் அரிதான காரி, செவலை என இரண்டு வகையான காளைகளையும்கூட வளர்த்து வருகிறார். இதை மாடு வளர்ப்பவர்களும் பணக்கார விவசாயிகளும் விரும்புகிறார்கள். 

நாட்டின வகை மாடுகளைப் பாதுகாக்க இவர் எடுத்து வரும் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் 2010ம் ஆண்டு தேசியப் பல்லுயிரிய ஆணையமும் (National Biodiversity Authority), லைஃப் நெட்வொர்க்கும் (LIFE Network) இணைந்து அமைத்திருக்கும் விருதான ‘இனப் பாதுகாவலர் விருதை’ (Breed Saviour Award) இவருக்கு வழங்கிச் சிறப்பித்தன. ‘மாடுகளை வளர்ப்பதற்காக நான் சென்னை சென்று விருது பெற்றது குறித்து என் உறவினர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்’ எனக் கூறினார். இந்தத் தம்பதியர் இன்னும் அதிகமான பொலிகாளைகளை வளர்க்க வேண்டுமென்கிற நோக்கில் அதிகமான பசுக்களையும் வளர்க்க விரும்புகிறார்கள். 

செளந்தரம் என்னை அவர் வளர்க்கும் கால்நடைகள் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார். அவை மேய்ந்துகொண்டிருந்த நிலம் இவரது வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் இருந்தது. அந்த நிலமானது கடினமாகவும் பஞ்சு போன்றும் இருந்ததோடு கருவேல மரங்களில் குருவிகளும் மைனாக்களும் இருந்தன. மரங்களுக்குக் கீழ் அமைதியாக மேய்ந்துகொண்டிருந்த அவருடைய கம்பீரமான மாடுகளிடமிருந்து ஏற்ற இறக்கத்துடன் அதுவிடும் மூச்சுக் காற்று மட்டும் கேட்டது. அவர் அவற்றை மெதுவாகத் தட்டிக் கொடுக்க, அதில் ஒன்று தட்டிக்கொடுக்க லாவகமாக இருக்கும் பொருட்டு தனது முகத்தைச் சாய்த்துக் காண்பித்தது.

நகரத்தில் வசிப்பவர்கள் முதலீட்டுக்காக பங்குகளை வாங்குவதுபோலவே காங்கேயம் பகுதியைச் சேர்ந்தவர்கள் முதலீட்டுக்காக மாடுகளை வாங்குகிறார்கள் எனக் கூறிய செளந்தரம், ‘மேய்வதற்குத் தேவையான நிலம் வாடகைக்குக் கிடைப்பது கடினம்’ என்றதோடு, ஒரு பெண் ஏன் மாடு வளர்க்க வேண்டும் எனக் கேட்கும் மக்களும் அங்கு இருப்பதாகக் கூறினார். 

1950கள் வரை சுமார் 50 ஆண்டு காலம் கார்த்திகேயாவின் கொள்ளு தாத்தா ராவ் பகதூர் நல்லதம்பி சர்க்கரை மன்றாடியார் தனி ஆளாக காங்கேய வகை மாடுகளை தலைமுறை தலைமுறையாக வளர்த்து வந்ததோடு, அதற்கே உரிய குணாம்சங்களையும் — கம்பீரமான திமில், தலையில் கறுப்பு நிற அடையாளம், அகலமான, வளைந்த கொம்புகள் — மேம்படுத்தி அதற்கென ஓர் அடையாளத்தை உருவாக்கினார். இது தனியொருவரால் அவரது மந்தையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட அசாதாரணமான சாதனையாகும்.

கார்த்திகேயாவும் அவருடைய அப்பா சிவசேனாபதியும் சேர்ந்து 2008ம் ஆண்டு ‘சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளை’யை (Senaapathy Kangayam Cattle Research Foundation) ஆரம்பித்தார்கள். இந்த அமைப்பு ஆராய்ச்சியை மேற்கொள்வதோடு கால்நடைக் கண்காட்சிகளை நடத்துவது, நாட்டின வகை மாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அரசோடு இணைந்து உபயோகமான கொள்கைகளைப் பரவலாக்குவது, காங்கேயம் வகை காளைகளை வளர்ப்பது எனப் பல வேலைகளைச் செய்துவருகிறது.

இந்த அறக்கட்டளையின் பொக்கிஷமாக இருந்த காளையின் பெயர் புல்லி (Bulli). 2018ம் ஆண்டு இது சாகும்வரை வருடத்துக்கு சுமார் 200 கன்றுக்குட்டிகளை ஈனுவதற்குக் காரணமாக இருந்திருக்கிறது. இதில் தனிப்பட்டவர்கள் வளர்க்கும் பசுமாடுகளும் அடங்கும். இதற்கென்று இந்த அமைப்பு கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. சிறிய மற்றும் தனிப்பட்ட முறையில் மாடு வளர்ப்பவர்களுக்குமான பொருளாதாரம் குறித்து கார்த்திகேயா விளக்கினார். ‘நன்கு இளம் வயதில் இருக்கும்போது அவர்கள் காளைகளை நல்ல விலைக்கு விற்றுவிடுவார்கள். வழக்கமாக, ரூ.30,000-40,000 என்கிற விலையில் கன்றுக் குட்டியை வாங்குவார்கள். அது சுமார் இரண்டரை வயதை அடைந்தவுடன் அதை இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள். அதற்கு அவர்கள் ரூ.500 முதல் ரூ.2000 வரை கட்டணம் வசூலிப்பார்கள். இந்த வருமானம் காளைகளின் பராமரிப்புச் செலவுக்கு சரியாக இருக்கும். அதற்கு ஐந்து வயதாகும்போது அதை ரூ.2,00,000 லிருந்து ரூ.4,00,000 வரை விற்றுவிடுவார்கள். அதன்பின், அதில் பத்தில் ஒரு பங்கை புதிய கன்றுக் குட்டி ஒன்றை வாங்கப் பயன்படுத்துவார்கள். மீதமுள்ள பணத்தைக் குடும்பத்தினர் மூலதன செலவுக்குப் பயன்படுத்திக்கொள்வார்கள்.’

தனிப்பட்ட நபர்கள் எடுக்கும் பாதுகாப்பு முயற்சிகளால் — அவை முன்னோடியானதும் உன்னதமானதுமாக இருந்தாலும்கூட — கால்நடைச் சூழல் அமைப்பை நிலைநிறுத்த முடியாது. 

காளைகளைப் பெரிதாக மதிப்பதும், பெருமையாக நினைப்பதும் பிரதானமாக தமிழ்நாட்டில் இன்னும் நீடிக்கிறது. பெருமை என்பது மிகவும் பிரபலமான ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. ரேக்ளாவுக்கு காங்கேயம் காளைகளும், ஜல்லிக்கட்டுக்கு புலிக்குளம் காளைகளும் விருப்பத் தெரிவாக இருக்கின்றன. காங்கேயம் காளைகள் வேற்றினக் காளைகளைவிட மூன்றில் ஒரு மடங்கு உயரமாகவும், போட்டிகளின்போது எளிதாகப் பிடிக்கக்கூடிய வகையில் அதன் திமில்கள் அமைந்திருக்கின்றன. இருப்பினும், புலிக்குளம் இன மாடுகளின் வளர்ச்சிக்கு அதை வளர்ப்பவர்கள் காங்கேயம் இன மாடுகளைப் பயன்படுத்துகிறார்கள். 

தமிழ்நாட்டில் வரலாற்றுரீதியாகவே ஜல்லிக்கட்டு மகத்தான கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. இது கி.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி நான்காம் நூற்றாண்டுவரையிலான சங்க காலப் பாடல்களில் பரவலாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சமகாலத்தில், ஜல்லிக்கட்டு விளையாட்டு வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக கும்பலாக நிற்கும் மனிதர்களை நோக்கி அவிழ்த்துவிடப்படும். அப்போது அவர்கள் அதன் திமில் அல்லது கொம்பைப் பிடிக்க முயல்வார்கள், அப்படி பிடித்தபின் காளை மூன்று முறை சிலிர்க்கும்வரையோ, மூன்று முறை திருப்பும்வரையோ அல்லது 15 மீட்டர்கள் வரை ஓடும்வரையோ பிடித்திருக்க வேண்டும். அவ்வாறு வெற்றிகரமாகப் பிடித்திருப்பவர்களுக்கும், பிடிக்க முடியாமல் போகும் மாட்டு உரிமையாளர்களுக்கும் என இரு தரப்பினருக்கும் பரிசு வழங்கப்படும். மாடுகளின் உரிமையாளர்கள் ஒவ்வொரு பருவத்திலும் பல ஜல்லிகட்டுகளுக்கு அவர்களது மாடுகளைக் கூட்டிச் செல்வதால் ஒவ்வொரு வெற்றியின்போதும் உரிமையாளர்களுக்கும் அவர்களின் மாடுகளுக்கும் புகழ் அதிகரிக்கும்.

தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய ஜல்லிக்கட்டு நடக்கும் இடம் மதுரைக்கு அருகில் இருக்கும் அலங்காநல்லூர் ஆகும். இந்த ஊரின் பெயரைக் கேட்டாலே அந்த விளையாட்டுதான் நினைவுக்கு வரும் அளவுக்குப் பிரபலமானது. 2016ம் ஆண்டு ஓர் அமைதியான நண்பகல் வேளையில் நான் அங்கு சென்றபோது ஜல்லிக்கட்டு ஆர்வலர் சரவணக்குமார் பொங்கலின்போது நடைபெறும் அந்த விளையாட்டைப் பற்றி மிகவும் உற்சாகத்துடன் விளக்கிக் கூறினார். ‘ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் வெளிநாட்டினரும் வருவார்கள். அது ஒரு மிகப் பெரிய கொண்டாட்டமாக இருக்கும்’ என்றார். நடமாட்டமில்லாத அந்த நகரத்தின் சதுக்கத்திலிருந்த வாடிவாசலை — செங்கற்களால் கட்டப்பட்டிருந்த உயரமான சுவர்களைக் கொண்ட காளைகளைத் திறந்துவிடுவதற்கு முன்பாக அவை அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கொட்டடி — காண்பித்தார். வழக்கமாக கோவில்களில் காணப்படும் சிவப்பு, வெள்ளைப் பட்டைகளில் வண்ணம் தீட்டப்பட்டிருந்ததோடு சுவரின் ஒரு பக்கத்தில் பாய்ந்துவரும் காளை ஒன்றின் படமும் பெரிதாக வரையப்பட்டிருந்தது. காண்டிராக்டரும், கட்டடங்கள் கட்டுபவருமான சரவணன் அதற்கு அருகில் இருந்த வீடு ஒன்றைச் சுட்டிக்காட்டி இந்த விளையாட்டு நடக்கும் சமயத்தில் அங்கிருந்து பார்ப்பதற்காக அதை வாடகைக்கு விடுவதாகவும் கூறினார். 

இவருடைய செவளை, காரி மாடுகள் பல ஜல்லிக்கட்டுகளில் கலந்துகொண்டு இவருக்கு மிக்ஸி, ஃப்ரிட்ஜ், கட்டில், சிடி ப்ளேயர், ஃபேன் ஆகியவற்றை ஜெயித்துக்கொடுத்திருக்கிறது. ‘ஒரு முறை எனக்கு ஆட்டுக்குட்டிகூட பரிசாகக் கிடைத்தது’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். ஜல்லிக்கட்டின் மூலம் கிடைக்கும் பரிசுகள் பெருமைக்குத்தான். ‘உங்களுக்கு சைக்கிள் பரிசாகக் கிடைக்கலாம். அதன் விலை ரூ.3,000தான். ஆனால் நாங்களோ காளைமாட்டுக்கு அதைவிட அதிகமாகச் செலவு செய்கிறோம்’ என்றார். ஒவ்வொரு முறை ஜல்லிக்கட்டு வெற்றிக்குப் பிறகு டான்ஸ் குழுவோடு இவர் தன்னுடைய மாடுகளையும் பரிசுப் பொருட்களையும் ஊர்வலமாக அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 

ஜல்லிக்கட்டு சார்ந்த பொருளாதாரம் குறித்து ஜல்லிக்கட்டு பாதுகாப்புப் பேரவையின் தலைவரும் மதுரையில் தொழில் செய்து வருபவருமான பி.ராஜசேகரன், ‘ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் இலவசம். பரிசுப் பொருட்கள் விலை மதிப்பு குறைந்தவை. காளைமாடுகளை வளர்ப்பதற்கு ஆகும் செலவுக்கு பரிசுப் பொருட்களாகக் கிடைக்கும் கிரைண்டர், மிக்ஸி, அலமாரி போன்றவையெல்லாம் ஈடாகாது. ஆனால் இந்த வழியில் — ஒரு வேளை இதுதான் ஒரே வழியோ — தான் கூலித் தொழிலாளிகள் அல்லது நிலமற்ற பெண்கள் பணம் சம்பாதிக்க முடியும். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு ஆண் கன்றுக்குட்டியை வளர்ப்பதுதான். யாராவது புதியவர்கள் அதை அணுகினால் தரையைத் தேய்த்து, கொண்டைத் தலையை ஆட்டி முட்டவரும் கன்றுகளுக்கான விலை அதிகமாக இருக்கும்.’ பத்து ஆடுகள் வளர்ப்பதைவிட ஓர் ஆண் கன்றை வளர்ப்பதன் மூலம் பத்து மடங்கு பணம் சம்பாதிக்க முடியும். 

பணமாகவும் பொருளாகவும் கிடைக்கும் பரிசுகளைவிட, இதன் மூலம் கிடைக்கும் பிரபல்யம், கெளரவம் போன்ற காரணங்கள்தான் செலவு அதிகம் ஆனாலும் நாட்டின வகை மாடுகளை வளர்க்க ஆயிரக்கணக்கானவர்களை ஊக்குவிக்கிறது. ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்படும் மாடு ஒன்றுக்கான தினசரி பராமரிப்பு மற்றும் சாப்பாட்டுச் செலவு குறைந்தபட்சம் ரூ.500 வரை ஆகும் என நான் கேள்விப்பட்டேன். 

ஜல்லிக்கட்டின் மூலம் மாடுகளிடம் இயற்கையிலேயே இருக்கும் பயந்த சுபாவத்தை மாடு வளர்ப்பவர்கள் தங்கள் ஆதாயத்துக்கு உபயோகித்துக்கொள்கிறார்கள் என்றும், மாடுபிடி களத்துக்கு மாடுகளைத் திறந்து விடுமுன் அதற்குக் கோபமூட்டிவிடுகிறார்கள் என்றும் கூறி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டுமென்று விலங்கு உரிமை ஆர்வலர்கள் கடந்த பத்தாண்டுகளாக அழுத்தம் கொடுத்துவந்தார்கள். அவர்களின் குற்றச்சாட்டுக்கு காணொலிக் காட்சிகளும் சான்றுகளும் இருப்பதாகக் கூறிவந்தனர். அதில் மாடுகளை அடிப்பதும், கம்புகளையும் அரிவாளையும் கொண்டு குத்துவதும், வாலை இழுப்பதும் முறுக்குவதும், அதனுடைய கண்களிலும் மூக்குகளிலும் தொந்தரவு தரக்கூடிய பொருட்களை வைத்துத் தேய்ப்பதும், வலுக்கட்டாயமாக மாடுகளுக்கு மது ஊற்றிவிடுவதும் அதில் பதிவுசெய்யப்பட்டிருந்தது.

2016ம் ஆண்டு மாடு வளர்ப்பவர்களிடமும் உரிமையாளர்களிடமும் நான் பேசியபோது அவர்கள் இதைக் கடுமையாக மறுத்தனர். தங்களுக்கு தாங்கள் வளர்க்கும் காளைகள் மீது அன்பு இருப்பதாகவும் அதற்கு ஒருபோதும் தீங்கு இழைப்பதில்லை என்றும் கூறினார்கள். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு என்ன நிபந்தனை விதித்தாலும் அதற்குக் கட்டுப்படுவதாக அவர்கள் கூறினார்கள். 

தமிழக அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில், ஜல்லிக்கட்டையும் ரேக்ளாவையும் ஆதரிப்பது என்பது ஒரு அரசியல் பொறுப்பாக ஆகியிருந்தது. இது பற்றி திருச்சியில் இயங்கிவரும் சமூக விலக்கு மற்றும் உள்ளடங்கல் கொள்கை ஆய்வு மையத்தில் (Centre for Study of Social Exclusion and Inclusive Policy) அரசியல் விமர்சகராக இருக்கும் பி.ராமஜெயம், ‘சமூக ஓட்டுகள் இதில் பிணையாக இருக்கின்றன’ என்றார். ‘ரேக்ளா விளையாட்டில் மேற்கு மாவட்டங்களில் இருக்கும் கவுண்டர் சமூகத்தினரும், ஜல்லிக்கட்டில் தென் மாவட்டங்களில் இருக்கும் தேவர் சமூகத்தினரும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.’ அவர்களுக்கு இடையில், மேற்குறிப்பிட்ட பகுதிகளில், தமிழகச் சட்டப்பேரவைக்கான 234 தொகுதிகளில் சுமார் 60 தொகுதிகள் இருக்கின்றன என ராமஜெயம் மேலும் விளக்கினார்.

2017ம் ஆண்டு ஜனவரி மாதம் காளை மாடுகள் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வாயிலாக சுமார் ஒருவார காலம் ஸ்தம்பிக்க வைத்தன. மெரினா கடற்கரையில் ஓர் அசாதரணமான சூழல் ஏற்பட்டது. நகர்ப்புறத்தில் இருப்பவர்கள் பலரும் பார்க்காத கிராமப்புற விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நகர்ப்புறத்தில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் ஆதரவு தெரிவித்துப் போராட்டம் நடத்தினார்கள். அந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத மாநில மத்திய அரசுகளை எதிர்த்து மிகவும் அமைதியாக நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் தங்களது கைகளில் தட்டிகள் ஏந்திக் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்தின் வீரியமானது அதுவரை சென்னையைக் கண்டுகொள்ளாத தேசிய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.

இறுதியில் போராட்டம் வெற்றி பெற்றது, ஜனவரி 21ம் தேதி பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும் பின்பற்றவும் உதவும் வகையிலும், காளைமாடுகளின் நாட்டின வகைகள் தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் மாநில அரசு விலங்குகள் வதை தேசியச் சட்டத்தில் திருத்தம் செய்ததன் மூலமாக ஜல்லிக்கட்டும் ரேக்ளா விளையாட்டும் மீண்டும் அனுமதிக்கப்பட்டன.

ஜல்லிக்கட்டில் பிரதானமாகப் பயன்படுத்தப்படும் காங்கேயம், புலிக்குளம் காளைமாடுகளின் எதிர்காலம் ஜல்லிக்கட்டு தடையால் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் இருந்தது. இந்த வகைக் காளைமாடுகள் இல்லாதபட்சத்தில் எத்தனை பசு மாடுகள் இருந்தாலும் இந்த வகையான மாடுகள் கூடிய சீக்கிரமே இல்லாது போய்விடும்.

மூன்று வருடத் தடை என்பது ஒரு முக்கியப் புள்ளியாக இருந்ததோடு ஏற்கனவே குறைந்துவிட்ட நாட்டினக் கால்நடையின் பொருளாதாரத்தையும் அழித்துவிட்டிருந்தது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, காங்கேயம் வகை மாடுகளை வாங்குவதும் விற்பதும் கண்ணபுரத்தின் கால்நடைக் கொட்டடியில்தான் நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் மாரியம்மன் திருவிழாவையொட்டி திருச்சி-கோயம்புத்தூர் நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் ஒரு கிலோ மீட்டர் தூர அளவுக்கு இது இருக்கும். நாளொன்று சுமார் லட்சம் பேர் இந்தக் காளைமாடுகளின் கண்காட்சிக்கு வருவார்களென்றும், அதில் பெரும்பாலானவர்கள் கால்நடைகளுடன் அங்கேயே தங்கி விடுவார்களென்றும் இதன் அமைப்பாளர்கள் கூறினர்.

அங்கு அவர்கள் சவுக்குக் கம்புகளை ஊன்றிப் பனைமர இலைகளை வேய்ந்து தற்காலிகக் கொட்டகைகளை அமைத்து அங்கேயே தங்கிவிடுவதும் உண்டு. அந்தத் தற்காலிகக் கொட்டகையிலே அவர்கள் வியாபாரத்தை மேற்கொள்வதுண்டு. மாடுகளை வாங்க நினைப்பவர்களுக்கு விலையைச் சொல்ல வெள்ளைத் துண்டால் மூடப்பட்ட பணத்தை எண்ணுவார்கள், விலை எதிர்பார்த்த அளவுக்கு இல்லையெனில் தலையை அசைப்பார்கள். 

பாரம்பரியமாக, பெரும்பாலான கால்நடைக் கண்காட்சிகள் / சந்தைகள் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணபுரம், அந்தியூர் தேர்த் திருவிழாவின்போது நடைபெறும் என கார்த்திகேயா விளக்கினார். ‘கோவிலைச் சுற்றிப் பெரிய மரத் தேரின் தேரோட்டம் நடைபெறும்போது பக்தர்கள், கால்நடை வளர்ப்பவர்கள், விற்பனையாளர்கள், வணிகர்கள் எனப் பலரும் அங்கு வருவார்கள்.’ ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டு இரண்டு கோடை முடிந்தபின், நான் 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கண்ணபுரத்துக்குச் சென்றிருந்தேன். 

நெடுஞ்சாலையிலிருந்து லாரிகள் உள்ளே நுழைந்ததும் அதிலிருந்து கால்நடைகள் கீழே இறக்கப்பட்டன. லாரிக்கு உள்ளே அதன் தளத்தில் கால்நடைகளின் குளம்புகளுக்கு மிருதுவாக இருக்க வேண்டுமென்பதற்காகவும், உணவுக்காகவும் வைக்கோல் போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாடும் நேர்த்தியாகக் கீழே இறங்கும்போது, தூசி ஒரு புகைமூட்டம் போல எழுந்தது. பொலிகாளைகள் மிகவும் தொந்தரவுக்குள்ளானவை போலவும், விதையடிக்கப்பட்ட எருதுகளும் பசுக்களும் அமைதியாகவும் இருந்தன. 

குறிப்பாக ஜோடி காளைகளின் சீரான, அழகான தோற்றம் கண்ணபுரத்தின் சிறப்பாகும் — இதற்காக அங்கிருக்கும் வியாபாரிகள் பெருமை கொள்வதுண்டு. ஜோடி காளைகளில் ஒரு காளையைவிட இன்னொரு காளைக்கு கழுத்து வட்டமாக, நன்றாக இருப்பது குறித்து கவலைப்படாத சிறு விவசாயிகள் அந்தியூருக்குச் செல்வார்கள். 

கார்த்திகேயாவின் மாமாவும் கண்காட்சி அமைப்பாளருமான ஆர்.பி. பழனிக்குமார், ‘தினசரி சுமார் ஒரு லட்சம் பேர் கண்ணபுரம் தேருக்கு வருவார்கள்’ என்றார். ‘அக்கம்பக்கத்திலிருக்கும் மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் தஞ்சாவூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய மாவட்டங்களிலிருந்தும் மக்கள் வருவார்கள்.’ டிராக்டர்கள் உபயோகப்படுத்தப்படாதவரை ஒவ்வொரு வீட்டினரும் விவசாய வேலைக்கென காளைமாட்டை வாங்குவார்கள். 

காலை நேரத்தில் வாயில் வேப்பங்குச்சியை வைத்துப் பல் தேய்த்துக்கொண்டே மக்கள் நடந்துசெல்வார்கள். உள்ளூர்ச் சாப்பாடான திணைக் கஞ்சியோடு ஊறுகாயும் சிறு மிளகாயும் அங்கிருக்கும் உணவுக் கடைகளில் விற்கும். பல வெள்ளை வேட்டிகளுக்கு மத்தியில் சில பெண்களும் தென்பட்டார்கள். பெண் கன்றுக் குட்டிகளைக் காண முடியவில்லை. ஏனென்றால், அவை எருதுகள். எருமைகள், எருது கன்றுகள்போல விற்கப்படுவதில்லை. 

காலை பதினோரு மணி, கண்கூசும் அளவுக்குச் சூரிய ஒளி, எங்கும் உஷ்ணம் பரவியிருந்தது. ஏப்ரல் மாதத்தில் வழக்கமாக இருப்பதைவிட உஷ்ணம் அதிகமாக இருந்ததை, மரங்களின் நிழலில்கூட உணர முடிந்தது. ஆண்கள் தங்களுடைய துண்டைத் தலைப்பாகையைப் போலக் கட்டிக் கொண்டிருந்ததோடு வேட்டியையும் கைலியையும் முழங்காலுக்கு மேல் மடித்துக் கட்டியிருந்தனர். அவர்கள் நிழல் இருக்கும் இடம் தேடி தண்ணீர் லாரிக்கு அருகிலோ, அல்லது குடிசையின் கீழோ உட்கார்ந்திருந்தனர். ஆனால் காளைமாடுகள் தளராமல் ‘பெருமிதத்துடன்’ நின்று தம் வலுவைப் பறைசாற்றின. அவை தண்ணீர் குடித்தன, உணவை அசைபோட்டன, ஈக்களை அவற்றின் வால்களால் விரட்டியடித்தன. 

செளந்தரமும் ராமசாமியும் ஒவ்வொரு வருடமும் இந்தச் சந்தைக்கு செல்வார்கள். அந்தக் குறிப்பிட்ட ஆண்டில் அவர்கள் இரண்டு காளைகளை ரூ.1.3 லட்சத்துக்கு விற்றனர். ‘ரேக்ளா, ஜல்லிக்கட்டு இருந்திருக்குமேயானால் இவற்றிற்கு எளிதாக ரூ.2 லட்சம் கிடைத்திருக்கும். கன்றுக்குட்டிகளை நாங்கள் ரூ.60,000க்கு வாங்கினோம். இன்றைக்கு அதன் விலை அதில் பாதிதான்’ என்றனர். 

நான் சந்தித்த மற்ற மாடு வளர்ப்பவர்களும் இந்த விளையாட்டுத் தடையினால் விலையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பைப் பற்றி கூறினார்கள். கோயம்புத்தூரைச் சேர்ந்த 32 வயதான அன்பழகன் மணி அவருடைய பெரிய, அழகான, சிறந்த கொம்புகளுடனும் செதுக்கப்பட்டது போன்ற முகப் பொலிவுடனும், காங்கேயம் காளைகளுக்கு முன்னுதாரணம் போலவும் இருந்த தனது இரண்டு காளைமாடுகளுக்கு அருகில் தரையில் உட்கார்ந்திருந்தார். அந்தப் பக்கம் சென்றவர்கள் எல்லாம் அந்த மாடுகளை நின்று பார்த்து சிவனின் வாகனமான நந்திபோல இருக்கிறது என்று புகழ்ந்து பேசிவிட்டுச் சென்றனர். ஆனால் மணி மகிழ்ச்சியாக இல்லை. ‘தடை மட்டும் நீக்கப்பட்டால் இவை எனக்கு ரூ.2.5 லட்சத்தைப் பெற்றுத் தரும். இப்போது? இந்த ஜோடிக்கு ரூ.1.3 லட்சம்கூட என்னால் கேட்க முடியாது!’ என்றார். 

நாற்பத்து ஆறு ஆண்டுகளாக கண்ணபுரத்துக்கு வந்துகொண்டிருக்கும் வேலூர் மாவட்டம் தொட்டிபாளையத்தைச் சேர்ந்த கே.சி. துரைசாமி, ‘ஜல்லிக்கட்டின் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எங்களை மிகவும் பாதித்திருக்கிறது. ரேக்ளா ஆரம்பிப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்து நாங்கள் மாடுகளுக்கு மாப்பிள்ளை சாப்பாடு கொடுக்க ஆரம்பித்துவிடுவோம். ரேக்ளா நடப்பது ஒரு பத்து நிமிடம்தான். ஆனால் விலங்கு நல ஆர்வலர்கள் அதற்குத் தடை வாங்கிவிட்டார்கள்’ என்றார். பந்தயத்துக்குப் பிறகு இந்த மாடுகள் கைமாறிவிடும். மலைப் பகுதிகளில் சிறிய அளவில் நிலம் வைத்திருப்பவர்கள் இதை வாங்குவார்கள். ‘சமமில்லாத நிலத்தை உழுவதற்கு இந்தக் காளைகள் உபயோகப்படுத்தப்படும். காளை மாடுகளுக்கு வயதானால் அது ரப்பர் டயர் வண்டி இழுக்கப் பயன்படுத்தப்படும். இப்படியாக இது சார்ந்த முழுமையான அமைப்புநிலை வழக்கத்தில் இருந்துவருகிறது.’

1990களின் முற்பகுதியில் இந்தச் சந்தையில் பல்லாயிரக்கணக்கான கால்நடைகளின் தலைகளைப் பார்க்க முடியும். அதற்குப் பிறகு அந்தப் பிராந்தியத்தில் விவசாயம் சார்ந்த எல்லாச் செயல்பாடுகளும் இயந்திரமயமாக்கப்பட்டதால் கால்நடைகளின் எண்ணிக்கை ஐம்பது சதவீதத்துக்கும் குறைவாகிவிட்டது. தடை இருந்த சமயத்தில் இந்த நிலை மேலும் மோசமானது. இன்றைக்கு இங்கே 5,000 மாடுகள்தான் இருக்கின்றன’ என்று துரைசாமி கூறினார். 

தடை இருந்த நேரத்தில் பெருமளவிலான நாட்டின மாடுகள் இறைச்சிக்காக வெட்டுமிடத்துக்கு அனுப்பப்பட்டன என்று சிவ கணேஷ் என்கிற வணிகரின் ஆதரவில் இயங்கிவருபவரும் கோயம்புத்தூர் புறநகரில் இருக்கும் வெள்ளியங்கிரி கோசாலாவில் தன்னார்வலராக இருப்பவருமான விக்ரம் துரைராஜ் தெரிவித்தார். பசுக்களைப் போலல்லாமல் காளைகளும் எருமை மாடுகளும் ‘இறைச்சிக்காகக் கொல்வதற்கு ஏற்றது’ என்கிற சான்றிதழ் பெற்ற பிறகு வெட்டுமிடத்துக்கு அனுப்பப்படும். இந்த மாதிரியான மாடுகள் பெரும்பாலும் பத்து வயதுக்கு மேலானவையாக இருக்கும், அல்லது வயல் வேலைகளுக்கு உதவாதவையாக இருக்கும். துரைராஜும் அவரது குழுவினரும் விவசாயிகளிடமிருந்தும், மாடு வளர்ப்பவர்களிடமிருந்தும், இனி லாபம் கிடைக்காது என எண்ணிய ஏழைத் தொழிலாளர்களிடமிருந்தும் காளைகளை வாங்குவதற்காகச் சென்றார்கள்.

மிகவும் இளம் பிராயத்தில் இருக்கும் காளைகளைக்கூடக் குறைந்த விலைக்கு விற்கும் ஒரு இக்கட்டான நிலையில் மக்கள் இருந்தார்கள். ‘விவசாயிகள் அதை ரூ.15,000 விற்றால், நாங்கள் அவர்களுக்கு ரூ.20,000 கொடுத்ததோடு அதைப் பார்ப்பதற்கு எங்களுடைய கோசாலாவுக்கு எப்போது வேண்டுமென்றாலும் வரலாம் எனவும் கூறினோம். இறைச்சிக்காக ரூ.15,000க்கு மாட்டை விற்கும் விவாசாயிக்கு இந்தப் பரிவர்த்தனை லாபமான ஒன்றாகும்.’

2016ம் ஆண்டு மே மாதம் இந்தக் கோசாலாவில் இருந்த 1900 மாடுகளில் 231 மாடுகள் முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சாம்பியன்கள். அது ஒவ்வொன்றும் ரூ.50,000 கொடுத்து வாங்கப்பட்டது. ‘வேறெந்த கோசாலாவும் இதை வாங்க முன் வந்திருக்காது. ஏனெனில், இதைப் பராமரிப்பது மிகவும் கஷ்டமானது’ என்றார் துரைராஜ். வெள்ளியங்கிரியில், இவற்றின் மீது அக்கறை செலுத்துவதற்கு ஏற்கனவே ஜல்லிக்கட்டு சம்பந்தமாக வேலை செய்த கால்நடை மருத்துவர்களும் காப்பாளர்களும் இருக்கிறார்கள். 

‘நாங்கள் மாடுகளை இனவிருத்தி செய்யப் போவதில்லை. நாங்கள் மாட்டிறைச்சிக்கு எதிரானவர்களும் இல்லை. நாங்கள் பரிந்துரைப்பது என்னவெனில், வெட்டப்படும் இடத்துக்கு மாடுகளை அமைதியாக அழைத்துச் செல்லுங்கள் என்பதுதான்’ என்று துரைராஜ் விளக்கிக் கூறினார்.

மேலும் அவர், இப்போது மாடுகளை வெட்டுவது குறித்த விதிமுறைகள் தொடர்ந்து மீறப்பட்டு வருகின்றன. ‘கர்ப்பமாக இருக்கும் பசுக்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன. ஏனெனில், கன்றுக்குட்டியின் தோலுக்கு விலை அதிகம். அதோடு அனுமதிக்கப்பட்ட ஆறு மாடுகளுக்கு பதிலாக ட்ரக்கில் முப்பது மாடுகளை ஏற்றிச் செல்கிறார்கள். கன்றுக்குட்டியின் இறைச்சிக்கு அதிக கிராக்கி இருக்கிறது. நேற்று, 3 அல்லது 4 மாதங்களே ஆன 22 கன்றுக்குட்டிகளை ஒரு ட்ரக்கில் ஏற்றிச் சென்றபோது அந்த ட்ரக் பிடிக்கப்பட்டது’ என்று சொல்லிவிட்டு அந்தப் படத்தை அவருடைய போனில் காண்பித்தார். 

விதிமுறைகளை மிகவும் வலுவாக நிறைவேற்ற வேண்டுமென்பதில் விருப்பம் கொண்ட துரைராஜ், ‘ஒவ்வொரு இறைச்சிக் கூடத்தையும் நம்மால் கண்காணிக்க முடியாது’ என்பதையும் ஒப்புக்கொண்டார். இவருக்கு விலங்குகள் மேல் அனுதாபம் இருந்தாலும்கூட விலங்குகளைக் கொல்வது, அல்லது இறைச்சிக்காக வெட்டுவது ஆகியவற்றிற்கு முழுவதுமாகத் தடை விதிப்பதை இவர் ஒத்துக்கொள்ளவில்லை. ஒவ்வொரு விலங்கையும் பராமரிக்க தினசரி நூறு ரூபாய் செலவாகிறது. ஜல்லிக்கட்டு மாடுகளைப் பராமரிக்க இதைவிடப் பல மடங்கு செலவாகிறது. எனவே பொருளாதார ரீதியாக உதவாத, நாடு முழுவதுமுள்ள இந்த விலங்குகளைப் பராமரிக்க வேண்டுமென அரசு சொல்வது எப்படிச் சரியாகும்?’ 

இந்திய அரசியல்வாதிகளும் கொள்கை வகுப்பவர்களும் இந்தப் பிரச்சினை குறித்து ஆலோசித்ததாகத் தெரியவில்லை. பெரும்பாலான மாநில அரசுகள் கால்நடைகளைக் கொல்வதற்கு தடை விதித்திருக்கிறது. தேசிய அளவில் கால்நடைகளைக் கொல்வதற்கும் மாட்டு இறைச்சி நுகர்வுக்கும் தடை விதிக்க வேண்டுமென்கிற கோரிக்கை வலுப் பெற்றிருக்கிறது. 

கொல்வதற்காகவே மாடுகள் வளர்ப்பதைத் தடைசெய்வது தமிழ்நாட்டில் 1958ம் ஆண்டிலிருந்து அமலில் இருந்து வருவதால், ஆண் கன்றுக் குட்டிகளுக்கான கிராக்கி நன்கு குறைந்துவிட்டது. அதோடு பசுக்களைக் கொல்வது முழுவதுமாக மாநிலத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது. 

கார்த்திகேயா மிகவும் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார். ‘நாட்டின வகை மாடுகள் சார்ந்த பொருளாதாரம் சாத்தியமாக இருக்க வேண்டுமெனில், அது சார்ந்த தடைகளை நீக்க வேண்டும். விவசாயிகளும் கால்நடை வளர்ப்பவர்களும் உபயோகமில்லாத கால்நடைகளை இறைச்சிக் கூடங்களுக்கு விற்க அனுமதிக்கப்பட வேண்டும். அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அவர்கள் இளங்கன்றுகள் மீது முதலீடு செய்வார்கள். வலுவான ஆண் கன்றுகள் வளர்ப்பதால் நல்ல ஆதாயம் கிடைக்கும். வெகுசிலரால் மட்டுமே உணர்ச்சிபூர்வமான (செண்டிமெண்டல்) காரணங்களுக்காகக் கால்நடைகளை வளர்க்க முடியும்.

கால்நடை வதைக்கு எதிராகப் போராடும் இந்துத்துவச் செயற்பாட்டாளர்களுக்கும், ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு எதிராகப் போராடும் விலங்குகள் உரிமைக்கான செயற்பாட்டாளர்களுக்கும் இதுகுறித்த சரியான புரிதல் இல்லை. கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டுமென்று போராடும் இரண்டு லாபிகளாலும் நாட்டின மாடுகளின் எதிர்காலம் ஆபத்துக்குள்ளாகும். இது தமிழ்நாட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா மட்டுமல்லாமல் மஹாராஷ்டிராவில் நடக்கும் காளை வண்டிப் பந்தயம், ஆந்திராவில் நடைபெறும் ‘ஸ்டோன் புல்லிங்’ விளையாட்டு ஆகியவையும் சம்பந்தப்பட்டதாகும். கேரளா, கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் நல்ல நாட்டின மாடு வகைகள் குறி வைக்கப்படுகின்றன’ எனக் கூறினார். 

‘பசுக்கள் பற்றியோ, பொருளாதாரத்தில் அவற்றின் பங்கு என்ன என்பது பற்றியோ தெரியாதவர்களிடமிருந்து இந்த மாதிரியான பைத்தியக்காரத்தனமான கருத்தியல் வருகிறது’ என்கிறார் சாய்நாத். பாரம்பரியமான கால்நடைப் பொருளாதாரத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களின் குறுக்கீடுகளால் ஏற்படக்கூடிய விளைவுகளை அவர் விவரிக்கிறார். ‘கால்நடைகளுக்கான சந்தை வீழ்ச்சியடைந்துவிட்டது. கால்நடைகள் உபயோகமில்லாமல் போய்விட்டால் என்ன செய்வது என்று தெரியாததால் விவசாயிகள் கால்நடைகளை வாங்குவதும் குறைந்து வருகிறது. மிகவும் வறட்சியான பகுதிகளில் கால்நடைகள் வைத்திருக்கும் விவசாயிகள் — அவர்களின் குடும்பத்தினருக்கே உணவு அளிக்கச் சிரமப்படும் நிலையில் இருக்கும்போது — பசுக்களை இறைச்சிக்கூடத்துக்கு அனுப்ப முடியாத நிலையில் அவை இறப்பதைத்தான் பார்க்கிறார்கள். இந்த யோசனையானது அனைவரையும் காயப்படுத்துவதாக இருந்தது, குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினரை. கால்நடைகளை வைத்திருக்கும் மராத்தா மற்றும் இதர இந்து சமூகத்தினரும் தங்களிடம் இருக்கும் பசுக்களை விற்க முடியாமல் இருந்தனர். கால்நடைச் சந்தையோடு தொடர்புகொண்டிருந்த இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும் விலை வீழ்ச்சியடைந்ததால் பாதிக்கப்பட்டனர். கோலாப்பூரில் காலணிகள் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் தலித் இனத்தினரும் தோல் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டனர். ஒட்டு மொத்தமாக, இது ஒரு பேரழிவாகும்.’

ஒரு வலுவான, திறந்த மாட்டிறைச்சித் தொழில் துறையில் நாட்டின மாடுகளைப் பாலுக்காக மட்டும் வைத்திருக்காமல் அதற்கு மேலான பயன்பாட்டுக்கும் வைத்திருக்கும் வகையில் ஊக்குவித்து ஆதரவு கொடுக்க வேண்டும். ஆனால் அரசியல் சூழல் அதை அனுமதிக்காது. இதற்கிடையில், இப்போதிருக்கும் பால் சந்தை நாட்டின வகை மாடுகள் வளர்ப்பை அவ்வளவாக ஊக்குவிப்பதில்லை. 

நாட்டினப் பசுக்களின் பாலுக்கான கொள்முதல் விலையை அதிகரிப்பது என்கிற சாத்தியமான ஒரு முன்னெடுப்பை கார்த்திகேயா ஆலோசனையாகக் கூறினார். இந்தியாவில் இருக்கும் அனைத்து நாட்டினப் பசுக்களும், எருமைகளும் A2 என்கிற பால் வகையைக் கொடுக்கிறது. இதில் இருக்கும் புரோட்டீன் கலப்பின மாடுகள் கொடுக்கும் A1 என்கிற பால் வகையில் இருப்பதைவிட வேறுபட்டது. இந்தப் பாலில் இருக்கும் ஆரோக்கிய நலன்களைவிட A2 பால் வகையில் அதிகம் இருப்பதாக அதன் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் இது முழுவதுமாக நிரூபிக்கப்படவில்லை. சில நாடுகளில் A2 வகைப் பால் அதிக விலைக்கு விற்கப்படுவதோடு உலகளவில் இதற்கான கிராக்கியும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில், அரசு நிர்ணயித்திருக்கும் கொள்முதல் விலை பால் வகைகளை A1, A2 எனப் பிரித்துப் பார்ப்பதில்லை. எந்தவகைப் பாலாக இருந்தாலும் தமிழ்நாட்டில் இயங்கிவரும் அதிகாரபூர்வ பால் திட்ட அமைப்பு விவசாயிகளுக்கு லிட்டருக்கு ரூ.24-ரூ.28 வரைதான் கொடுத்து வருகிறது. 

தமிழ்நாட்டில் கால்நடை வளர்ப்பவர்களில் சிலர் A2 ரகப் பாலை நேரடியாக நுகர்வோர்களுக்கு லிட்டர் 100 ரூபாய் என விற்று வருகிறார்கள். இந்த ரகப் பாலை வாங்குவதற்கு ‘காத்திருப்புப் பட்டியல்’ இருப்பதாகக் கண்ணபுரத்தில் என்னிடம் சொன்னார்கள். கடந்த வருடம் கர்நாடாகவில் மாநிலப் பால் கூட்டுறவு அமைப்பானது பரீட்சார்த்த முறையில் இந்த ரகப் பாலை அதிக விலையில் விற்று வந்தது. ஆனால் அதற்கென எடுக்கப்பட்ட முயற்சிகள் சாத்தியமான சந்தைக்கு வழிவகுக்கும் என எல்லோரும் சமாதனமடையவில்லை. சரவணனுக்கு இதில் நம்பிக்கையில்லை. ‘சென்னை அல்லது பெங்களூரில் உள்ளவர்கள் விலையில் வேறுபாடு இருந்தாலும் வாங்குவார்கள். ஆனால் அதோ அங்கே உட்கார்ந்திருப்பவரிடம் (மரநிழலில் உட்கார்ந்திருக்கும் ஒரு பெரியவரை நோக்கி கையைக் காட்டி) போய் ‘இது A2 வகைப் பால், எனக்கு லிட்டருக்கு 70 ரூபாய் கொடுங்கள் எனக் கேட்டால் அவர் என்ன சொல்வார் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?’

நாட்டின வகை மாடுகள் வளர்ப்பை ஊக்குவிப்பதற்கு தமிழக அரசு இப்போது அதிகமாக முயன்று வருகிறது. காங்கேயத்திலும் பர்கூரிலும் மாடுகள் வளர்ப்பு மையங்களை நிறுவுவதோடு மாநில அரசின் கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை, மீன் வளர்ப்புத் துறையில் 2018-19 கொள்கைக் குறிப்பில், ‘கலப்பின மாடுகள் வளர்ப்புக்கும், கலப்பில்லாத தூய்மையான மாடுகள் வளர்ப்பிற்கும் தேவையான நாட்டினக் காளைக் கன்றுக்குட்டிகளை உற்பத்தி செய்வதற்காக ராஜஸ்தானைச் சேர்ந்த 50 தர்பார்க்கர் வகைப் பசுக்கள் வாங்கப்பட்டு, அவை செட்டிநாட்டில் இருக்கும் மாவட்டக் கால்நடைப் பண்ணையில் பராமரிக்கப்படும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த முயற்சிகள் என்னதான் ஊக்குப்படுத்துவதாக இருந்தாலும் — வெற்றிகரமான ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கான விளைவு — நாட்டின வகை மாடுகளுக்குச் சந்தை இல்லாதபோது, அவற்றை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்கள் தொடர்ந்து வளர்க்க வேண்டும் என்பதற்கான காரணம் எதுவுமில்லை. 

‘பொருளாதார ரீதியில் ஏதேனும் ஆதாயம் இருந்தால் மாடுகளின் மீது மக்கள் அக்கறை செலுத்துவார்கள். ஆடுகள் அல்லது எருமைகளைப் பாதுகாக்கும் என்.ஜி.ஓக்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சந்தை இருந்தால் அதுவே இதன்மேல் அக்கறை கொள்ள வைக்கும்’ என்று கார்த்திகேயா கூறினார். 

‘ஜல்லிக்கட்டு, ரேக்ளா மீதான தடை நீக்கப்பட்டவுடன் காங்கேயம் காளைகளின் விலை சுமார் 100 சதவீதம் அதிகரித்தது’ என்று கார்த்திகேயா கூறினார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தினால் நாட்டினக் காளைகளுக்கு மட்டுமல்லாமல் காங்கேயம் பசுமாடுகளுக்கான கிராக்கியும் அதிகரித்தது. இதைக் குறிப்பிடுவதற்கு மாடு வளர்ப்பவர்களும், விவசாயிகளும் ‘வெறியார்வம்’ (craze) என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். விலங்கு நல அமைப்புகள் ஜல்லிக்கட்டுச் சட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிட்டாலும், ‘முன்பைவிட இந்திய அரசும் உச்ச நீதிமன்றமும் மிகவும் உணர்வுப்பூர்வமாகச் செயல்பட்டனர்’ என்றார் கார்த்திகேயா. இதனால் ஏற்பட்ட ஆதாயங்களில் சிறிது 2016-17ம் ஆண்டு ஏற்பட்ட மோசமான வறட்சியால் பாதிக்கப்பட்டது. 2018, 2019ம் ஆண்டுகளில் கண்ணபுரம் சந்தை வெற்றிகரமாக நடைபெற்றது, ஆனால் போதிய அளவுக்குத் தண்ணீர் அல்லது உணவு இல்லாததால் விற்பனை பாதிக்கப்பட்டது. இருப்பினும், இந்தப் போராட்டம் ஏற்படுத்திய விழிப்புணர்வால் தமிழ்நாட்டுக்கு முக்கியமான நாட்டின வகைக் காளை மாடுகளை மக்கள் வாங்குவார்கள் என்று கார்த்திகேயா நம்புகிறார். 

செளந்தரத்துக்குக் காங்கேயம் காளைகள் மிகவும் பிரியத்துக்குரியவை. ‘என்னுடைய மகன்களைப்போல நான் என் மாடுகளை நேசிக்கிறேன்’ என்று கம்பீரமாக இருந்த சிங்காரவேலனைப் பிடித்துக்கொண்டே கூறினார். சிங்காரவேலன் ‘நல்ல பிள்ளை’ போல நின்றுகொண்டிருந்தது. இந்தத் தம்பதியரின் கவனமான வளர்ப்பு விலங்குகளின் பயமுறுத்தல்களை நீக்கியிருக்கிறது. ‘இதற்கெல்லாம் நான்கு பற்கள் வந்தவுடன், விதையடிக்கப்படாத காளை மாடுகள் மிகவும் மூர்க்கமாக ஆகிவிடும்’ என்று ஒரு மாட்டுடைய வயதைத் தெரிந்துகொள்வது எப்படி என்பதை ராமசாமி விவரித்தார். ‘நாங்கள் அது பணிவுடன் இருப்பதற்குப் பயிற்சி கொடுக்கிறோம். இல்லையெனில், அதை யாராலும் கையாள முடியாது.’

செளந்தரம் அவருடைய புகைப்படங்கள் அடங்கிய ஆல்பத்தைப் பெருமையுடன் காண்பித்தார். கடந்த காலங்களில் அவர் வேலை செய்வது போலிருந்த புகைப்படங்கள் அதில் இருந்தன. அதில் பல புகைப்படங்களில் செல்ல நாய்க்குட்டியின் கயிற்றை மென்மையாகப் பிடித்திருப்பதுபோல அவர் மாடுகளின் கயிற்றைப் பிடித்திருந்தார். பசுக்கள் இனச்சேர்க்கை செய்வதை இவர் கண்காணிப்பது போன்ற புகைப்படங்களும் இருந்தன. அவர் சேலையை மடித்துக் கட்டி, தலைமுடியை இறுக்கி ‘பன்’ கொண்டையாகப் போட்டிருந்ததோடு அங்கு வந்த பசுவை தனது நீண்ட, மெல்லிய கைகளால் பிடிப்பது போன்ற புகைப்படமும், காளையின் அருகில் மூக்கணாங்கயிற்றைப் பிடித்துக்கொண்டிருக்க, அது பசுவோடு இனச்சேர்க்கை செய்துகொண்டிருந்த புகைப்படமும் அதில் இருந்தன. ‘எனது காளைகளுக்கு எல்லா நேரத்திலும் நான் அருகிலேயே இருக்க வேண்டும்.’

ஏனென்றால், இது அசாதாரணமானது. பன்னிரண்டு காளைமாடுகளை வளர்ப்பவர் செளந்தரம் — இவரது பண்ணையைப் பார்க்க தினசரி மக்கள் வருகிறார்கள். ‘பொள்ளாச்சி, கோயம்புத்தூர், ஈரோடு, திருச்செங்கோடு, மதுரை ஆகிய ஊர்களிலிருந்து வருபவர்கள் இதை எப்படி வளர்ப்பது என்று எங்களைக் கேட்பதோடு காளைமாடுகளோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.’

மாடு வளர்ப்பவர்கள் அனைவரும் செய்வதில்லை என்றாலும்கூட செளந்தரமும் ராமசாமியும் அவர்களுடைய மாடுகளுக்குப் பெயர் வைத்திருந்தனர். ஒவ்வொரு மாட்டின் பெயருக்குப் பின்னாலும் காரணம் இருக்கிறது என்று அவர் சிரித்துக்கொண்டே கூறினார். ‘ஒரு மாடு கொஞ்சம் ஸ்டண்ட், ஷோ-ஆப் எல்லாம் பண்றதால அதுக்கு சினிமா நடிகர் ரஜினி பேர் வச்சோம். பார்ப்பவர்களைக் கவரக்கூடியது என்பதால் இன்னொரு மாட்டுக்கு சிங்காரவேலன். ஆனா, இது கொஞ்சம் மொரண்டு பண்ணக்கூடியது. கோபக்கார மாடாக இருந்தாலும் ரொம்ப வீரமானது. அமைதியாவும் பெருந்தன்மையாவும் இருக்கிற ஒரு மாட்டுக்குச் சாமி பேரான ஸ்ரீனிவாசன். இதை யார் வேண்டுமானாலும் பிடிக்கலாம், தடவிக் கொடுக்கலாம். நடராஜனோட நடை நேர்த்தியாக, கம்பீரமா இருக்கும், ஆனா யாரையும் சிரமப்படுத்தாது. வளையனூர் இப்போ அந்தமான்ல இருக்கு. அது செவலக் காளை.’

மாடுகள் ஈனும் காளைக் கன்றுகளை செளந்தரம் நன்கு கவனித்துக் கொள்வதன் மூலம் அவருக்கு விருப்பமான காளை மாட்டு வகைகளைப் பராமரித்து வருகிறார். சிங்காரவேலனின் இரண்டு வயது ‘மகன்’ முரட்டுக் காளை. இது காளையை அடக்குபவராக ரஜினி நடித்து வெளிவந்த திரைப்படத்தின் பெயராகும். பசுக்களோடு இனச்சேர்க்கை செய்வதற்கு முரட்டுக் காளைக்கு ஏகப்பட்ட கிராக்கி. இதுபோல நடராஜன், ஸ்ரீனிவாசன், ரஜினி ஆகியவற்றின் காளைக் கன்றுகளும் இவருடைய பண்ணையில் இருக்கின்றன.

இரட்டைக் கன்றுகளை பிரசவித்துக்கொடுப்பதில் இவருடைய காளைகள் பிரபலம் என்று மகிழ்ச்சியுடன் கூறினார். ‘சமீபத்தில ஒரு பசு ரெண்டு பசுங்கன்னு போட்டுச்சு. அத வளர்க்கிறவங்க போன் பண்ணி இந்த விஷயத்தை எங்ககிட்ட சொன்னாங்க’ என்றார். 

செளந்தரத்தின் பண்ணையில் நாங்கள் நின்று அவருடைய மாடுகள் மேய்வதைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அவரிடம், ‘உங்களுக்குப் பிடிச்ச மாடு எது?’ என்று கேட்க அவர், ‘எனக்கு எல்லா மாடுகளுமே பிடிக்கும்’ என்றார். எது வலுவான மாடு எனக் கேட்க, அவர் ‘எல்லா மாடுகளுமே வலுவானதுதான். நான் விசில் அடிச்சா எல்லா மாடுகளுமே வந்துரும்’ என்று சொல்லிவிட்டு தனது இரண்டு விரல்களை வாயில் வைத்து விசில் அடிக்க, அது என்னையும் பறவைகளையும் திடுக்குறச் செய்தாலும் மாடுகள் எல்லாம் பார்த்தன. அவர் மீண்டும் விசிலடித்தார். அவை தலையைத் தொங்கவிட்டுக்கொண்டு மீண்டும் மேய ஆரம்பித்தன. அவர் விளையாட்டாகச் சண்டையிட்டுக்கொண்டிருந்த இரண்டு மாடுகளை நோக்கிச் சென்று ஒன்றுக்கொன்று பின்னிக்கொண்டிருந்த கொம்புகளை எடுத்துவிட்டுவிட்டு, அதில் ஒரு மாட்டைத் தடவிக் கொடுத்தார். 

ஒரு மாடு அவர்களுடைய பசுவின் இனச்சேர்க்கைக்கே பயன்படுத்தப்பட்டது. செளந்தரத்தின் மூத்த மகன் கனகராஜ் அவனுடைய அப்பா பசுவைப் பிடித்துக்கொள்ள உதவினான். செளந்தரம் சிறிய காளையைக் கொண்டு வந்தார். அது பசுவின் பின்பக்கம் சென்று முகர்ந்து பார்த்தவுடன் ஒரு அதிரடியான நகர்வில் தனது முன்னங்கால்களைக் கொண்டு பசுவை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு வேகமாக, ஆற்றலுடன் இனச்சேர்க்கை செய்தது. 

செளந்தரம் வயலிலிருந்து மாடுகளை அழைத்துக்கொண்டு வரும்போது அவை அவருக்குப் பின்னால், பள்ளிப் பிள்ளைகளைப் போல பவ்யமாக எதையாவது மென்றுகொண்டு நடந்துவரும். இந்தப் பரந்தவெளிக்கு உரிமையாளர்களான மெல்லிய உடல்கொண்ட இந்தப் பெண்ணும் அவருடைய காளைமாடுகளும் சாலையைக் கடந்து செல்வதற்காக அது வழியாகச் செல்லும் பஸ்களும், கார்களும், லாரிகளும் நின்றன!

 

நூல்: ஒரு மணிநேரத்துக்கு ஒன்பது ரூபாய்
ஆசிரியர்: அபர்ணா கார்த்திகேயன்
தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்
பக்கம்: 360
விலை: 450
வெளியீடு: சீர்மை பதிப்பகம்
தொடர்புக்கு: www.seermai.com
செல்: 8072123326 / seermainoolveli@gmail.com

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
அபர்ணா கார்த்திகேயன்

அபர்ணா கார்த்திகேயன், பத்திரிகையாளர். ‘பரி’ நிறுவனத்தின் முதுநிலை ஆய்வாளர். 'நைன் ருபிஸ் அன் ஹவர்' (Nine rupees an hour), 'வோஃப்' (woof) நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

1

1





அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

காந்தி கிணறுமம்தாமனுஸ்மிருதிசண்முகம் செட்டிஎம்பிபிஎஸ்ஜெயமோகன் கட்டுரைநாடாளுமன்றத் தொகுதிகள்சிறுபான்மை சமூக மாற்றமும்!தனியார் முதலீடுபாலஸ்தீனத்தை ஏன் கைவிடுகிறீர்கள்?ஸரமாகோவின் உலகம்இலவசத் திட்டங்கள்ரஷ்யாகூட்டத்தொடர்பாம்புவகுப்புக் கலவரங்கள்தமிழர் மருத்துவம் ஒரு வரலாற்றுப் பார்வைபயங்கரவியம்காமராஜர்தொழில்நுட்பக் கல்விஇர்மாமகளிர் இடஒதுக்கீடு எனும் கேலிக்கூத்து!ஆ.சிவசுப்பிரமணியன் புத்தகம்ஒரே நாடுசமஸ் - ஜெயமோகன்கால் டாக்ஸிஎண்ணிக்கைஸ்டார்ட் அப்விழுமியங்களும் நடைமுறைகளும்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!