கட்டுரை, ஆளுமைகள், உற்றுநோக்க ஒரு செய்தி 5 நிமிட வாசிப்பு

ஜீவா நினைவேந்தல்: ஆளுமைக்கு மரியாதை

17 Dec 2021, 5:00 am
0

காலமான ஓர் ஆளுமைக்கு, காலமெல்லாம் அவர் நினைவுகள் நீடிப்பதற்கான தொடக்க நிகழ்வை எப்படி  ஒருங்கிணைக்கலாம்? இதற்குப் பதில் சொல்வதுபோல இருந்தது மருத்துவர் வெ.ஜீவானந்தம் நினைவேந்தல் நிகழ்ச்சி.

தமிழ்நாட்டில் சென்னைக்கு வெளியே உள்ள நகரங்களில் வசிக்கும் ஆளுமைகள் வெளியே தெரிவதும், ஒட்டுமொத்தச் சமூகத்தால் அவர்கள் வரித்துக்கொள்ளப்படுவதும் அரிது. அது எந்தத் துறையாயினும் சரி, சென்னையில் இருந்தால் அவர்கள் தலை; சென்னைக்கு வெளியே இருந்தால் கிளை; இதுதான் நியதி.

பன்முக ஆளுமையான ஜீவானந்தம் சென்னையில் இருந்திருந்தால் அடைந்திருக்கக்கூடிய புகழ் வெளிச்சம் வேறாகவே இருந்திருக்கும். உறுதியாகச் சொந்த மண்ணில் வேரூன்றி, சுற்றுப்புறப் பிராந்தியத்தில் விழுது பரப்பிய ஆலமரமாக அவர் இருந்தார். அவர் சார்ந்த மருத்துவத் துறையிலேயே தமிழக அளவில் அவருக்கு ஒரு முக்கியத்துவம் இருந்தது. போதையடிமை மீட்பு மற்றும் மறுவாழ்வு சிகிச்சைத் துறையில் சென்னைக்கு வெளியே அமைந்த முதல் சிகிச்சையகம், ஈரோட்டில் அவர் அமைத்த 'நலந்தா' மருத்துவமனை. இது தவிர, கல்வி, சுற்றுச்சூழல், அரசியல், கூட்டுறவுப் பொருளியல் என்று வெவ்வேறு துறைகளில் அவர் கால் பதித்தார்.

திராவிடம், பொதுவுடமையியம், காந்தியம் மூன்றின் சேர்க்கையான இடதுசாரி செயல்பாட்டாளராக அவர் வெளிப்பட்டார். எஸ்.என். நகராஜன், கோவை ஞானி மரபின் வெளிப்பாட்டு வடிவம் அவர். தன்னுடைய 75 வயது வாழ்க்கையில், மூன்று தலைமுறையினருடன் ஒரே காலத்தில் வயது வேறுபாடின்றி பழகவும், இணைந்து செயல்படவும் ஜீவாவினால் முடிந்தது. 2021 மார்ச் மாதத்தில் மறைந்த ஜீவாவின் நினைவை அவர் விரும்பும் விதத்தில் விதைத்திட முடிவெடுத்தனர் அவர் குடும்பத்தினரும், நண்பர்களும்.

ஈரோடு நகரத்தின் மையத்தில் அவர் பணியாற்றிய ‘நலந்தா மருத்துவமனை’ கட்டிடத்தை அப்படியே அவர் நினைவகம் ஆக்கிடுவது; அதன் ஒரு பகுதி நூலகம், ஒரு பகுதி ஏழை எளியோருக்கான சிகிச்சை மையம், ஒரு பகுதி சமூகச் செயல்பாட்டாளர்கள் கூட்டம் நடத்த ஏதுவான அரங்கம் என்று திட்டமிட்டிருந்தார்கள். 

அடுத்து, ஜீவாவின் பெயரில் ‘பசுமை விருது’ நிறுவிடுவது; கல்வி, மருத்துவம், கலை, எழுத்து, சுற்றுச்சூழல், அரசியல் என்று ஜீவாவின் ஆர்வத் துறைகளில் சிறப்பாகச் செயல்படுவோருக்கு ஆண்டுதோறும் இந்த விருதை அளிப்பது; இதேபோல, ஜீவா பங்களித்த துறைகளில் செயல்படும் மக்கள் குழுக்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கும் உத்வேகச் சான்று அளித்திடுவது; இதோடு, ஜீவா ஆர்வத் துறைகள் சார்ந்த விழிப்புணர்வை இளையத் தலைமுறையினரிடம் கொண்டுசெல்ல கல்வி நிலையங்கள் - மாணவர்களுக்கு வருடந்தோறும் ஆயிரம் புத்தகங்களை வழங்கிடுவது என்று முடிவெடுத்தார்கள். இவற்றை எல்லாம் நிறைவேற்றும் நிகழ்வாகவே ‘ஜீவா நினைவேந்தல் நிகழ்ச்சி’ நடைபெற்றது.

 

விழாவின் தலைமை விருந்தினராக கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அழைக்கப்பட்டிருந்தார். உடல்நலக் குறைவால், வர முடியாமல்போன சூழலிலும், விருதாளர்களுக்கானச் சான்றிதழ்களில் தன் கையொப்பத்தை இட்டு அனுப்பியிருந்தார். கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் இல்லாத குறையை மேதா பட்கர் தீர்த்தார். நிகழ்வை கே.சந்துரு தொடங்கிவைத்தார். மார்க்கண்டன், ஜெயமோகன், வி.பி.குணசேகரன், சுப்புலட்சுமி ஜெகதீசன், சுப.உதயகுமார்  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றிருந்தனர். ஜீவாவின் நெருங்கிய நண்பர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து சேர, ஈரோட்டைச் சுற்றியுள்ள செயல்பாட்டாளர்களும், நண்பர்களும் குழும நல்ல கூட்டம் சித்தார்த்தா பள்ளியில் கூடியிருந்தது. ஜீவா மாற்றுக் கல்வியை யோசித்து ஆரம்பித்த பள்ளி இது.

முன்னதாக முதல் நிகழ்வாக நினைவகம் திறக்கப்பட்டது. அதன் பின்னர் நிகழ்வுகள் சித்தார்த்தா பள்ளியில் நடந்தன. அங்கே ஆரம்ப நிகழ்வாக ‘செயல் எனும் விடுதலை’ நூல் வெளியிடப்பட்டது. ஜீவாவின் நினைவை பகிர்ந்துகொள்ளும் வகையிலான 40+ ஆளுமைகளின் கட்டுரைகளை உள்ளடக்கிய நூல் இது. தொடர்ந்து, அடுத்தத் தலைமுறையினரைச் சென்றடையும் வகையில் சிறப்புப் பதிப்பாகக் கொண்டுவரப்பட்டிருந்த ஜே.சி.குமரப்பாவின் ‘தாய்மைப் பொருளாதாரம்’ நூல் அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. ஜீவா எல்லோருக்கும் பரிந்துரைக்கும் நூல் இது. தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

 

அடுத்து, நிகழ்வின் முக்கிய அம்சமான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆண்டின் விருதாளர்களாகக் கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, ‘அருஞ்சொல்’ ஆசிரியர் சமஸ், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் விஷ்ணுப்ரியா மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். ஜீவாவின் உருவச்சிலை, பாராட்டுச் சான்று மற்றும் ரூ.1 லட்சம் பணமுடிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய விருது இது. அடுத்து, மக்கள் குழுக்களுக்கு உத்வேகச் சான்றும், பணமுடிப்பும் வழங்கப்பட்டது. இரு வகைகளிலும் வழங்கப்பட்ட பணமுடிப்பு மட்டுமே ரூ.5 லட்சம் ஆகும்.

முழு ஏற்பாடுகளையும் குக்கூ குழுவினர் சிவராஜ் தலைமையில் முன்னெடுத்திருந்தனர். சித்தார்த்தா பள்ளியினரோடு கௌசிக் தலைமையிலான  நியதி அமைப்பினரும் இணைந்திருந்தனர். நிகழ்ச்சியின் ஒவ்வோர் அங்குலத்திலும் சூழலோடு இயைந்தவாறான ஏற்பாடுகளைக் காண முடிந்தது. ஜீவா ஓவியத்தைத் தத்ரூபமாக வரைந்திருந்தார் ஓவியர் சுந்தரம்; அதேபோல உயிரோட்டமிக்க சிலையை வடித்திருந்தார் சிற்பி சந்துரு. சின்னச் சின்ன விஷயங்களில்கூட சிறப்புக் கவனம் அளிக்கப்பட்டதற்கு, விருந்தினர்களைக் கவனிப்பதற்கு என்றே பணிக்கப்பட்டிருந்த பிரதீப், மதுமதி இருவரையும் குறிப்பிடலாம். கௌரவிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட கைத்தறி துண்டுகளை சிவகுருநாதனின் ‘நூற்பு’ பிரத்யேகமாக நூற்றிருந்தது. உள்ளடக்க ஞானத்தோடு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்காக சித்ரா பாலசுப்ரமணியம் சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தார். ஜீவா நினைவேந்தல் என்பது போக நண்பர்கள் கூடுகை நிகழ்வாகவும், வாசகர்கள் சந்திப்புக்கான நிகழ்வாகவும்கூட அந்த இடம் வியாபித்திருந்தது.

 

முக்கியமான விஷயம், இவ்வளவையும் முன்னின்று செய்தவர் ஜீவாவின் தங்கை ஜெயபாரதி. அவருடைய மகன்கள் நவ்ரோஜ், நரேந்திரன். ஜீவா பணியாற்றிவந்த ‘நலந்தா மருத்துவமனை’ இவர்களுக்குச் சொந்தமான கட்டிடம். ஜெயபாரதியின் இரு மகன்களும், தம்முடைய தாய்மாமன் நினைவாக அவர் முன்னெடுத்த  செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கான கூடுகை மையமாக அது செயல்பட வேண்டும் என்று எண்ணி ‘ஜீவா நினைவு அறக்கட்டளை’யின் வழி சமூகத்துக்கு அதைக் கையளித்திருந்தனர். அது விருதோ, உத்வேகச் சான்றோ எதுவாயினும் அதற்குரிய மதிப்புடன் திகழ ஒரு கண்ணியமான தொகை அதோடு அளிக்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டவர்களும் இவர்களே. 

சில கோடி ரூபாய் மதிப்புடைய நினைவகமும், ஆண்டுதோறும் சில லட்சங்கள் மதிப்புடைய நற்பணிகளும் இனி ஜீவாவினுடைய பெயரால் செயல்படும். 

ரொம்பப் பெரிய தனவந்தர்கள் இல்லை. சற்றே வசதியான குடும்பம், அவ்வளவுதான். ஆனால், தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் ஆளுமையின் மதிப்பையும், அவருடைய முக்கியத்துவத்தையும் அவர்கள் உளமாற உணர்ந்திருந்தனர். அதுதான் இந்நற்செயல்களுக்கான உத்வேகமாக உருக்கொண்டிருக்கிறது. “ஜீவா நினைவைப் போற்றும் வகையில் அவர் ஈடுபாடு காட்டிய, ஒவ்வொரு விஷயத்திலும் காரியங்கள் தொடர எங்களால் ஆனதைச் செய்திருக்கிறோம். இது ஜீவாவின் நினைவகமாக மட்டுமல்லாமல், அவர் விட்டுச்சென்ற பணிகளுக்கான உயிரகமாகவும் இருக்க வேண்டும்” என்றார் அவர் தங்கை ஜெயபாரதி.

இனி ஜீவா உயிரகத்தில் வாழ்வார்! 


1

2

1
அதிகம் வாசிக்கப்பட்டவை

பாலு மகேந்திராஷங்கர்ராமசுப்ரமணியன்பொதுவுடைமைஜப்பான்சம்பா சாகுபடிஅல்சர் துளைசமூக – அரசியல் விவகாரம்dam safety billநீங்கள் சாப்பிடுவது சரியா?லாஸ் ஏஞ்சல்ஸ்நவீனத் தொழில்நுட்பம்சென்னை வெள்ளம்தொடர் தோல்விஅற்புதம் அம்மாள்அறிவொளி இயக்க முன்னோடிஆ.சிவசுப்பிரமணியன் சமஸ் பேட்டிபொதுவான குறைந்தபட்ச நிறுவன வரி விதிப்புஆப்பிள் ஆப் ஸ்டோர்இந்தியர்களின் ஆங்கிலம்பா.வெங்கடேசன்தொழுகை அறை சர்ச்சைஅதிமுககோவை ஞானி சமஸ்பாரத் சாது சமாஜ்பிசியோதெரபிஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்ரெங்கையா முருகன்பொருளாதாரக் கொள்கை மறுசீரமைப்புக்கு இதுவே நேரம்காந்தியின் ஹிந்த் சுயராஜ் – சில மூலக்கூறுகள்புஷ்பா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!