கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 10 நிமிட வாசிப்பு

வெறுப்பரசியல் என்னும் தொற்றுநோய்

அரவிந்தன்
11 Aug 2023, 5:00 am
0

தமிழகத்தின் அறிவுலகம் சமீபத்தில் இரு கூறாகப் பிளந்தது. இதற்குக் காரணமாக அமைந்தது, பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரியின் கைது. இந்தக் கைதுக்குக் கண்டனம் தெரிவித்தவர்கள், கைது சரியானது என்று சொன்னவர்கள் என்பதாக அறிவுலகின் கருத்துகள் பிரிந்து நின்றன.

பத்ரி முன்வைக்கும் கதையாடல்

அறிவுலகின் எதிர்வினைகளில் வெளிப்படும் போக்குகளைப் பார்ப்பதற்கு முன்பு பத்ரியின் பேச்சையும் கைது நடவடிக்கையையும் பார்த்துவிடுவோம்.

மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் கள யதார்த்தம் குறித்த ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்புகள் காலங்காலமாக முன்வைத்துவரும் கதையாடலை பத்ரி முன்வைத்தார். பழங்குடி இனக் குழுக்களுக்குள் இருக்கும் மத வேற்றுமைகளை முன்னிலைப்படுத்தி இப்பிரச்சினையை மதக் கண்ணோட்டத்தில் அணுக வேண்டுமென்று கூறும் பத்ரி, எல்லைக்கு வெளியிலிருந்துவரும் தூண்டுதல்கள், ராணுவம் / காவல் துறையின் சவால்கள், காங்கிரஸ் அரசுகள் செய்த தவறுகள் எனச் சுருதி பிசகாமல் இந்துத்துவக் கதையாடலை இசைக்கிறார்.

இடையிடையே ‘பொறுக்கித்தனம்’, ‘கலவரம் என்றால் கொலை நடக்கத்தான் செய்யும்’ என்றெல்லாம் சர்வ அலட்சியமாகச் சொற்களை இறைக்கிறார். பெரும்பான்மை வன்முறை பற்றிப் பேசுபவர்கள் சிறுபான்மை வன்முறை பற்றி ஏன் பேசுவதில்லை என்று கேட்கிறார். நீதிபதிக்கு என்ன தெரியும் என்றும் கேள்வி எழுப்புகிறார். பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிச் சொல்ல அனுதாபம் தொனிக்கும் ஒரு சொல்கூட அவரிடம் இல்லை.

மணிப்பூர் உள்ளிட்ட எல்லைப்புற மாநிலங்களின் எல்லாச் சிக்கல்களுக்கும் வித்திட்டவர் ஜவஹர்லால் நேரு. நீரூற்றி வளர்த்தது அரை நூற்றாண்டுக் காலக் காங்கிரஸ் ஆட்சி. உரம் தந்து உதவியது வெளிநாட்டு சக்திகள். தேசபக்தியை உயிர்மூச்சாகக் கொண்ட பாஜக சுயநல நோக்கம் சிறிதுமின்றி இப்போது இந்த இடியாப்பச் சிக்கல்களைத் தீர்க்கப் போராடிவருகிறது. பாஜகவின் பெருமுயற்சியால் பின்னடைவைச் சந்திக்கும் பிரிவினை சக்திகள் கலவரத்தைத் தூண்டுகின்றன. எனினும், பாஜக இந்த தர்ம யுத்தத்தில் வெல்லும். அதுவரை ஊடகங்களும் நீதிமன்றமும் அறிவுஜீவிகளும் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும். இதுதான் பத்ரியும் அவரைப் போன்றவர்களும் மணிப்பூர் முதலான பிரச்சினைகள் தொடர்பாக முன்வைக்கும் செய்தியின் சாரம். 

இந்தக் கருத்து எந்த அளவுக்குத் தட்டையானது, பெரும்பான்மைவாதத்தைத் தூக்கிப் பிடிப்பது, தேச நலனின் பெயரால் எல்லா அராஜகங்களையும் நியாயப்படுத்தக்கூடியது என்பவையெல்லாம் மிக வெளிப்படையானவை. 

பத்ரி முன்வைத்த கருத்துகள் வரிக்கு வரி மறுக்கத்தக்கவை. அவருடைய தொனி கடும் ஆட்சேபத்திற்குரியது. அவருடைய பேச்சில் தொனிக்கும் மதவாதம் அபாயகரமானது. அவர் வாதங்களில் வெளிப்படும் அறிவுசார் ஆணவம் மேட்டுக்குடியினருக்கே உரியது. பத்ரியின் அதிரடிப் பேச்சு முழுவதுமே இப்படி உள்ளீடற்ற சொல்லணிகளும், தரக்குறைவான மேடைப் பேச்சின் குதர்க்கங்களும் அநாகரிகமான மொழியும் நிரம்பியது. அதை மறுக்கவும் எதிர்க்கவும் வேண்டும் என்பதில் துளியும் ஐயமில்லை.

கைது தேவையா?

ஆனால், இரு பிரிவினரிடையே பிளவைத் தூண்டிப் பகைமையை ஏற்படுத்தும் பேச்சுக்கு எதிரான சட்டப் பிரிவின் கீழ் அவர் மீது வழக்குத் தொடர்ந்தது சரிதான்; ஆனால், உடனடியாகக் கைதுசெய்திருப்பது சரியா என்பதுதான் கேள்வி.

பத்ரியின் பேச்சில் நீதிமன்ற அவமதிப்பு இருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும் அதிகாரமும் நீதிமன்றத்துக்குத்தான் உள்ளன. பத்ரியின் பேச்சில் அவதூறு இருக்கிறது என்றால் அதற்குக் குடிமைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்கலாம். குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுப்பதாக இருந்தாலும் கைது செய்து விசாரிக்க வேண்டிய தேவை எதுவும் இந்தப் பேச்சைப் பொறுத்தவரை இல்லை. பத்ரியைப் பிணையில் விடுதலை செய்த நீதிபதியும் கைதுசெய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே சொல்லியிருக்கிறார். 

கடந்த ஜூலை 31 அன்று உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள கருத்து இதன் தொடர்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. வரதட்சிணை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு ஜார்க்கண்ட் செஷன்ஸ் நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் முன்பிணை வழங்க மறுத்ததையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அவருக்குப் பிணை மறுக்கப்பட்ட தீர்ப்பை ரத்துசெய்த உச்ச நீதிமன்றம் கைது விஷயத்தில் அர்னேஷ் குமார் எதிர் பிஹார் அரசு வழக்கில் 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிக்காட்டுதலைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது. 

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி ஏழு ஆண்டுகளுக்குக் குறைவான சிறைத் தண்டனை வழங்கப்படக்கூடிய அல்லது அபராதத்துடனோ அல்லது அபராதம் இல்லாமலோ ஏழு ஆண்டுகள்வரை சிறைத் தண்டனையை நீட்டிக்கக்கூடிய ஒரு குற்றத்திற்காகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரைக் காவல் துறை அதிகாரி தன்னிச்சையாகக் கைதுசெய்ய முடியாது என அர்னேஷ் குமார் வழக்கின் தீர்ப்பின்போது வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. 

குற்றஞ்சாட்டப்பட்டவர் மேற்கொண்டு எந்தக் குற்றமும் செய்யாமல் தடுப்பது, வழக்கின் முறையான விசாரணைக்காக அவரைக் கைதுசெய்தாக வேண்டிய நிலை, குற்றஞ்சாட்டப்பட்டவர் தனக்கெதிரான ஆதாரங்கள், தடயங்களை எந்த விதத்திலேனும் சிதைத்துவிடுவதற்கான வாய்ப்பு, தேவைப்படும்போது அவரை நீதிமன்றத்தில் ஆஜர்செய்வதை உறுதிசெய்ய முடியாத நிலை ஆகிய சூழ்நிலைகளில் மட்டுமே கைதுசெய்ய வேண்டும் என்றும் அந்த வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

உயர் நீதிமன்றங்களும் மாநிலக் காவல் துறையின் தலைவர்களும் இதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சாரு மீதான தாக்குதல் தனி ஒருவர் மீதானதா?

ஆர்.காயத்ரி 26 Apr 2023

சுதந்திரத்தில் எல்லைகளை வரையறுப்பது யார்?

கருத்துச் சுதந்திரம் என்பது நமக்குப் பிடிக்காத, நாம் தவறானது எனக் கருதும் கருத்துக்களையும் நம்மை ஆழமாகப் புண்படுத்தும் கருத்துகளையும் சொல்வதற்கான உரிமை என்பதை மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஒரு கருத்தை நச்சுக் கருத்து என்றும் பிளவுபடுத்தும் கருத்து என்றும் வகைப்படுத்தி, அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்றால் எந்தக் கருத்தையும் இந்த வரையறைகளுக்குள் கொண்டுவர யாரேனும் இருப்பார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த வரையறைகளைத் தங்கள் பார்வை சார்ந்து பயன்படுத்திக்கொள்வதற்கான ஒப்புதலை இந்த ஆதரவு கொடுத்துவிடும்.

இன்று நாம் ஏற்கவியலாத கருத்தைச் சொல்பவருக்கு எதிரான நடவடிக்கையை ஆதரித்தால், நாளை அதற்கு எதிரான கருத்தைச் சொல்பவருக்கு எதிராக இதே போன்ற நடவடிக்கை எடுக்கப்படும்போது அதை எதிர்ப்பதற்கான தார்மிக உரிமையை நாம் இழந்துவிடுவோம்.

ஒரு கருத்தை நச்சுக் கருத்து, சமூக விரோதப் பார்வை, சாதியக் கண்ணோட்டம், ஆணாதிக்க நோக்கு, தேச விரோதம் என்றெல்லாம் வரையறுப்பதில் பிரச்சினை இல்லை. அந்த வரையறைகளின் அடிப்படையில் கருத்து வெளிப்பாட்டை முடக்குவதுதான் பிரச்சினை.

சில கருத்துக்கள் மீது முத்திரை குத்தி அவற்றைக் கருத்துரிமையிலிருந்து விலக்கிவைப்பதற்கும் அதன் அடிப்படையில் ஒடுக்குதலுக்கும் இடையில் அதிகத் தொலைவு இல்லை. ஒரு கருத்தை எதிர்ப்பவர் அதிகாரத்தில் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பொறுத்து இந்த இடைவெளி குறைந்துவிடும். இத்தகைய செயல்பாடுகள் பாசிஸ அதிகாரத்துக்கு அல்லது அதிகாரத்தின் பாசிஸத்திற்கு இட்டுச்செல்லும். 

மனித உரிமைப் போராளிகள் பலருக்கும் எதிராக பாஜக அரசு அடக்குமுறைச் சட்டங்களை ஏவியபோது அவர்கள்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அவர்களுடைய கருத்துகளை அடிப்படையாகக் கொண்டவைதான் என்பதை இங்கே நினைவுபடுத்திக்கொள்வது நல்லது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

கருத்துரிமை தினம்!

பெருமாள்முருகன் 01 Jul 2023

வாட்டபவுட்ரி வம்புகள்

பத்ரியின் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவாகவும் அவருடைய கைதைக் கண்டித்தும் பேசுபவர்களிடம், அப்படியானால் அவருடைய கருத்தை நீங்கள் ஏற்கிறீர்களா என்னும் கேள்வியைச் சிலர் முன்வைக்கிறார்கள். மரண தண்டனை கூடாது என்று சொல்பவர்களிடம், அப்படியானால் அந்தக் குற்றவாளிகள் செய்த கொடுங்குற்றத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா எனக் கேட்பதற்கு ஒப்பானது இது. மரண தண்டனையை நீக்கும் கோரிக்கை நாகரிகச் சமுதாயத்தின் சிந்தனை வளர்ச்சியின் அடையாளம். அது தனிநபர்களைச் சார்ந்ததல்ல.

இதே தர்க்கம் கருத்துச் சுதந்திரத்துக்கும் பொருந்தும். ஒருவருடைய பேச்சின் ஒரு சொல்லைக்கூட நாம் ஏற்காமல் இருக்கலாம். ஆனால், அதன் அடிப்படையில் கருத்துரிமைத் தர்க்கத்தைப் புரட்டிப்போட முடியாது.

மரண தண்டனைக்கு எதிரான கோரிக்கையைப் போலவே கருத்துச் சுதந்திரத்திற்கான கோரிக்கையும் நாகரிகச் சமுதாயத்தின் பக்குவமான சிந்தனையின் அடையாளம். அது கருத்தாளர்களின் அரசியல் நிலைப்பாடுகள், செயல்பாடுகள் ஆகியவற்றைப் பொறுத்து மாற முடியாது. 

பத்ரியின் கைதுக்கு ஆதரவாகப் பேசிய எவருக்குமே நீதிமன்றத்தில் குற்றவாளி என்ற தீர்ப்பைப் பெற்று அவரைச் சிறைக்கு அனுப்ப முடியும் என்ற நம்பிக்கை இல்லை. விசாரணையே தண்டனையாக வேண்டும் என்றே விரும்புகிறார்கள். சட்டத்தின் அணுகுமுறைக்கு முற்றிலும் எதிரான இந்த மனநிலையை எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் போன்ற கருத்து சுதந்திரத்தை மூலதனமாக வைத்துச் செயல்படும் பிரிவினரே கைகொண்டிருப்பது விபரீதமான போக்கு.

எழுத்தாளர்கள், இதழாளர்கள் கருத்துச் சுதந்திரத்திற்காகப் பல விதங்களிலும் களமிறங்கிப் போராடுபவர்கள். எதிர்வினைகள்  எல்லாச் சமயங்களிலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதில்லை. சமூக வலைதளப் பதிவு, கட்டுரை, தலையங்கம், அறிக்கை, பொது அறிக்கையில் கையெழுத்திடுதல், சமூக வலைதளங்களில் எழுதுதல் தாங்கள் பொறுப்பில் இருக்கும் இதழ்களில் கண்டனக் குரல்களுக்கு இடமளித்தல், பாதிக்கப்பட்டவருக்கு உறுதுணையாக இருத்தல் எனப் பல விதங்களில் எதிர்வினைகள் இருக்க முடியும். தவிர, மனித உரிமை சார்ந்து பணிபுரியும் அரசு சாரா நிறுவனங்களைப் போல ஒவ்வொரு எழுத்தாளரும் எல்லாக் கைதுகளுக்கும் எதிர்வினை ஆற்றிக்கொண்டிருக்க இயலாது. 

வெறுப்பரசியலுக்கு எது மாற்று?

வெறுப்பரசியலுக்கு எதிராகச் செயல்படுபவர்களாகத் தங்களை முன்னிறுத்திக்கொள்பவர்கள் பலர் பத்ரியின் கைதை ஆதரிப்பவர்களாகவும், இந்தக் கைதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டவர்கள் மீது வெறுப்பைக் கக்குபவர்களாகவும் இந்த சமயத்தில் வெளிப்பட்டதைப் பார்க்க முடிந்தது.

காவல் துறையினர் ‘அபாயகரமான ரவுடி’களைப் போலி மோதல்களில் கொலைசெய்யும்போது பொதுமக்கள் மத்தியில் அதற்கான ஆதரவுக் குரல்கள் எழும். அதுபோன்ற குரல்கள் பத்ரி கைதின்போது அறிவாளர்கள் மத்தியிலிருந்து எழுந்தது வருத்தத்திற்குரியது.

எத்தகைய ரவுடிகளையும் காவல் துறையினர் கொலைசெய்வது மனித உரிமைகளுக்கும் அரசியல் சட்டத்திற்கும் எதிரானது என்பதை மனித உரிமைப் போராளிகளும் அரசியல் கருத்தாளர்களும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள். இவர்கள் குற்றங்களை ஆதரிப்பவர்கள் அல்லர். குற்றங்களுக்குச் சட்ட விரோதமான தண்டனை வழங்கப்படுவதை எதிர்ப்பவர்கள். மாற்றுக் கருத்தாளர்கள் மீது அதிகாரம் பாயும்போதும் அந்த நடவடிக்கையைச் சட்டம், பொது நீதி ஆகியவற்றின் அடிப்படையில்தான் அணுக வேண்டுமே தவிர இன்னார் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது.

பாஜகவும் பிறகும்: வேறுபாட்டின் முக்கியத்துவம்

மாற்றுக் கருத்தாளர்களையும் ஆழ்ந்த ஆய்வுகள், முறையான தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அறிவுபூர்வமான பார்வைகளை முன்வைப்பவர்களையும் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களையும் மனித உரிமைகளுக்காகக் களமிறங்கிப் போராடுபவர்களையும் ஒடுக்குவதற்காக பாஜக அரசு அடக்குமுறைச் சட்டங்களைப் பயன்படுத்திவருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். அவர்களில் சிலர் பல ஆண்டுகளாகச் சிறையில் வாடுகிறார்கள். கருத்துக் களத்தில் எதிரிகள் மீது இத்தகைய ஒடுக்குமுறையைப் பிரயோகிப்பதில் பாஜக சிறிதளவும் தயக்கமோ கூச்சமோ கொள்வதில்லை.

பாஜகவுக்கு எதிரான விமர்சனங்களில் அக்கட்சியின் இந்தப் போக்குக்கு எதிரான விமர்சனம் முக்கிய இடம் வகிக்கிறது. கருத்து நிலையின் மீதான பாஜக அரசின் ஒடுக்குமுறைப் போக்கு கடுமையானதாக இருக்கிறது. எதிர்க் கருத்தாளர்களைக் கைதுசெய்வதற்காகப் பொய்யான தடயங்களை உருவாக்கவும் பாஜக அரசு தயங்குவதில்லை. தேச விரோதம், சமூக விரோதம், அமைதியைக் குலைத்தல், வன்முறையைத் தூண்டுதல், பிரிவினை எண்ணங்களைத் தூண்டுதல் முதலான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே பாஜக இத்தகைய செயல்பாடுகளை மேற்கொண்டுவருகிறது. இந்தக் குற்றச்சாட்டுக்களைப் பாசிஸம், மத வெறி ஆகியவற்றால் பதிலீடு செய்து அதே நடவடிக்கைகளை மேற்கொள்ள முனைவது ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்றதல்ல.  

பத்ரியின் கைது தேவையற்றது என்றாலும் கைதுக்குப் பிறகு தமிழக அரசு நடந்துகொண்ட விதம் பாராட்டத்தக்கது. பத்ரியைப் பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்துத் தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை. மத்திய அரசு கைதுசெய்த ஸ்டான் ஸ்வாமிக்குப் பிணை மறுக்கப்பட்டது. பொய்யானது எனப் பின்னர் அம்பலமான ஒரு சான்றின் அடிப்படையிலேயே அவருக்குப் பிணை மறுக்கப்பட்டது.

கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டபோதும் அவரைப் பிணையில் விடுதலை செய்ய அரசு முன்வரவில்லை. தன்னால் இயன்றதையெல்லாம் செய்து அவருடைய விடுதலையைத் தடுத்து நிறுத்தியது. உடல்நலம் மேலும் மோசமாகி அவர் சிறையிலேயே மரணமடைந்தார்.

திமுக அரசோ பாஜக அரசைப் போல நடந்துகொள்ளவில்லை. பொய்ச்சான்றுகளை ஜோடித்துப் பிணைக்கு எதிராகப் போராடவில்லை. நீதிமன்றத்தின் செயல்பாட்டில் தேவையற்ற குறுக்கீடு எதையும் செய்யவில்லை என்பது இங்கே ஓர் ஆறுதல். 

இந்திய அரசியல் களத்தில் பல்வேறு கருத்து நிலைகள் இருந்தாலும் பாஜக முன்வைக்கும் ஒற்றைப்படைத்தன்மை கொண்ட தேசியம், மத அடையாளத்தின் அடிப்படையில் தேசியத்தை வரையறுத்தல், அதே அடிப்படையில் ‘எதிரி’களையும் ‘துரோகி’களையும் கட்டமைத்தல் ஆகியவற்றால் பாஜக ‘தனித்து’ நிற்கிறது. இந்தத் ‘தனித்தன்மை’தான் மாற்றுக் கருத்தாளர்களைக் கருத்துக்காகவே சட்டரீதியாகத் துன்புறுத்தும் பாஜகவின் இயல்பாகப் பரிணமிக்கிறது.

பாஜகவுக்குப் பதிலடி கொடுக்கும் முனைப்பில் அல்லது பாஜகவின் அசுர வலிமையால் ஏற்படும் வருத்தத்தால் பாஜகவின் எதிர்ப்பாளர்களும் பாஜகவைப் போல மாற முனைவது விபரீதமானது. மாற்றுக் கருத்தின் மீதான சகிப்பின்மை பாஜகவின் இயல்பு. பாஜகவை எதிர்ப்பவர்கள் பாஜகவின் இந்த இயல்பை வரித்துக்கொள்வது நாகரிக விழுமியங்களுக்குக் கிடைக்கும் தோல்வி; உண்மையில் பாஜகவின் வெற்றி. 

தமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவரான மகேந்திரனின் ‘உதிரிப் பூக்கள்’ படத்தின் இறுதிக் காட்சியில் எதிர்மறைக் கதாபாத்திரமான விஜயனுக்கு ஊரே கூடி ‘மரண தண்டனை’ வழங்கும். ஊராரின் முடிவின்படி நீரில் மூழ்கி இறக்கும் அவர் முழுமையாக மூழ்குவதற்கு முன் இப்படிச் சொல்வார்: “உங்க எல்லாரையும் என்னைப் போலவே மாத்தினதுதான் நான் செஞ்ச தப்புலயே பெரிய தப்பு.” 

மனித உரிமைகள், ஜனநாயக விழுமியங்கள், அனைத்து நிலைகளிலும் சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை முன்வைத்துச் செயல்பட்டுவரும் அறிவுஜீவிகளும் செயல்பாட்டாளர்களும் எழுத்தாளர்களும் மோடியின் தலைமையிலான பாஜகவின் மீதுள்ள நியாயமான கசப்புணர்வின் விளைவாக பாஜகவின் குணங்களை வரித்துக்கொள்வதைப் பார்க்கும்போது இந்தக் காட்சிதான் நினைவுக்கு வருகிறது.

தன்னைக் காட்டிலும் பல விதங்களிலும் நியாயமாக நடந்துகொள்ளும் ஊராரின் எதிர்மறையான மாற்றத்தைக் கண்டு ‘உதிரிப் பூக்கள்’ வில்லன் வருத்தப்படுவார். ஆனால், பாஜக வருத்தப்படாது. தன்னுடைய அரசியலுக்குக் கிடைத்த அங்கீகாரமாக அதை எண்ணி மகிழும்.  

கருத்துரிமை சார்ந்த விழுமியங்கள் தனிநபர்களுக்கும் கருத்து நிலைகளுக்கும் அப்பாற்பட்டது என்பதை எந்த நிலையிலும் நிறுவுவதே பாசிஸ அதிகாரத்துக்கு எதிரான போராட்டத்திற்கு வலு சேர்க்கும். 

 

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துச் சுதந்திரத்தை அணுக இரு பாதைகள் இல்லை
சாரு மீதான தாக்குதல் தனி ஒருவர் மீதானதா?
உங்கள் வாதங்களின் ஆழம் இவ்வளவுதானா பத்ரி?
போராட்டம் என்றாலே வன்முறையா: பத்ரிக்கு ஒரு மறுப்பு
கருத்துரிமை தினம்!

அரவிந்தன்

அரவிந்தன், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். ‘இந்தியா டுடே’, ‘காலச்சுவடு’, ‘தி இந்து’ தமிழ், ‘மின்னம்பலம்’, ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ குழுமத்தின் தமிழ் இணையதளமான ‘சமயம்’ ஆகிய ஊடகங்களில் ஆசிரியர் இலாகாவில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியவர். தற்போது ‘காலச்சுவடு பதிப்பக’த்தின் பதிப்பாசிரியராகப் பணியாற்றுகிறார்.


4

1

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

2002: இந்தத் தழும்புகள் மறையவே மறையாதுபாகிஸ்தான் வெற்றிக்குக் கொண்டாட்டம்தொன்மக் கதைப.சிதம்பரம்பதின்பருவத்தினர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் என்னமனநிலைஉயர்கல்விப் பாடத்திட்டத்தில் பன்மைத்துவம் அழிகிறதாஉட்டோப்பியாகலைஞர் கோட்டம்பட்டினி குறியீட்டு எண்மானுடவியல்காவிரி டெல்டாபத்திரிகாதிபர் மனுஷ்காங்கிரஸ்காரர்குஞ்சுஞ்சுஹிலாரிஅச்சுத்திசை மாறுமியக்கம்கல்வியும்ராஜாஜிஉபி அரசியல்சீன கம்யூனிஸ்ட் கட்சிஅந்தரங்க மிரட்டல்கு.அழகிரிசாமிசெரிமானமின்மைகலாச்சாரம்குடும்ப விலங்குஅறிவியலுக்கு பாரத ரத்னாஇடதுசாரிகளுக்கு எதிர்ப்புமெய்நிகர் நாணயம்ஊடகர் கலைஞர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!