தலையங்கம், சினிமா, அரசியல், கலாச்சாரம், இலக்கியம் 5 நிமிட வாசிப்பு

கருத்துச் சுதந்திரத்தை அணுக இரு பாதைகள் இல்லை

ஆசிரியர்
11 May 2023, 5:00 am
4

ருத்துரிமை என்ற பெயரில் நாம் சிந்திக்கும் உரிமையையே பேசுகிறோம். சிந்தனைக்கான வெளிப்பாட்டு வெளிதான் பல ஆயிரம் உயிரினங்கள் மத்தியில் மனித குலத்துக்கு மேலான ஓர் இடத்தை உருவாக்கி இருக்கிறது. சிந்தனையை வெளிப்படுத்தும் பேச்சு, எழுத்து, கலை வெளிப்பாடுகளுக்கான சுதந்திரத்தை ஜனநாயகத்தின் தாய் என்றே சொல்லலாம். கருத்துரிமையை அணுகுவதில் ஜனநாயக சக்திகளுக்கு இரு வேறு பாதைகள் இல்லை. சமூகத்துக்கு ஒரு கருத்து நல்லதா, கெட்டதா; நமக்குப் பிடிக்கிறதா,  பிடிக்கவில்லையா என்ற கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு, கருத்துச் சுதந்திரத்தின் எல்லையைக் குறுக்கும் எந்த நடவடிக்கையும் ஜன விரோத நடவடிக்கையே ஆகும். 

தமிழ்நாட்டில் ஒரே சமயத்தில் இரண்டு விஷயங்கள் கருத்துச் சுதந்திரம் சார்ந்த விவாதத்தை உருவாக்கியிருக்கின்றன. துரதிஷ்டவசமாக, இரண்டு விஷயங்களிலும் சமூகம் இரண்டாகப் பிளந்து நிற்கிறது. 

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த இந்த ஒன்பது ஆண்டுகளில் கருத்துத் தளத்தை முழுமையாக ஆக்கிரமிக்கும் எல்லா நடவடிக்கைகளையும் இந்துத்துவ சக்திகள் மேற்கொண்டிருக்கின்றன. வெறுப்பு அரசியலைப் பரப்புதலும், சமூகத்தில் பிளவுகளை ஆழப்படுத்துவதன் மூலம் மத அரசியலை விரிவுபடுத்துதலும் இந்துத்துவ சக்திகளின் முக்கியமான செயல்பாடுகளில் ஒன்றாக இருக்கிறது. கலை வடிவங்களில் பல கோடி மக்களைச் சென்றடையக் கூடிய திரைத் துறை இயல்பாக அவர்களுடைய களங்களில் ஒன்றாக இருக்கிறது. 

இந்த வரிசையில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் சென்ற ஆண்டு பெரும் வெறுப்பு அலையை ஏந்தியபடி வெளிவந்தது. இந்த ஆண்டு ‘தி கேரளா ஸ்டோரி’ அந்த வேலைத்திட்டத்தோடு வந்திருக்கிறது. முஸ்லிம் இளைஞர்களால் திட்டமிட்டு காதலில் வீழ்த்தப்படும் இந்து இளம்பெண்கள், திருமணத்தின் பெயரால் மதம் மாற்றப்பட்டு, அதன் தொடர்ச்சியாக பயங்கரவாத நடவடிக்கைகளில் கொலைக் கருவிகளாக ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கும் படம் இது. 

சென்ற ஒன்பது ஆண்டுகளாகவே பாஜகவின் பெரும்பான்மைவாதச் செயல்பாடுகளால், பல்வேறு நிலைகளிலும் கடும் மன அழுத்தத்தையும் அடையாள அடுக்குமுறையையும் எதிர்கொண்டுவரும் இந்திய முஸ்லிம்கள் இத்தகைய விஷப் பிரச்சாரங்களால் சீண்டப்படுவதும், கடும் மன நெருக்கடிக்குள் தள்ளப்படுவதும் இயல்பானது. சொல்லப்போனால் முஸ்லிம்களை இப்படிச் சீண்டி அவர்களை எதிர்வினை நோக்கித் தள்ளுவதையே இத்தகைய திரைப்படங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. 

நிச்சயமாக, இத்தகைய வெறுப்புத் திரைப்படங்களுக்கு எதிர்வினை ஆற்றப்பட வேண்டும். அந்த எதிர்வினைகள் கருத்துத் தளத்தில் நடக்க வேண்டும். முஸ்லிம்கள் அல்லாதோர், குறிப்பாக மத நல்லிணக்கத்தை விரும்பும் இந்து அறிவுஜீவிகள் இந்த எதிர்வினையாற்றலில் முன்னணியில் நிற்க வேண்டும். அதுவே அறம். முஸ்லிம்களும் இத்தகைய எதிர்வினைகளில் பங்கேற்றுதான் ஆக வேண்டும்; கருத்துத் தளத்தில் அது நிகழ வேண்டும். படம் உருவாக்கும் சப்தத்தைவிட எதிர்ப்புகள் உண்டாக்கும் சப்தமானது படத்துக்குக் கூடுதல் விளம்பரமாகிவிடாமல் பார்த்துக்கொள்வது இதில் முக்கியமானதாகும். 

துரதிருஷ்டவசமாக, இந்திய முஸ்லிம் அமைப்புகள் அரசியல் தளத்தில் இந்தப் படத்துக்கு எதிர்வினையாற்ற தலைப்பட்டனர். தங்களுக்கு இணக்கமான கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில், படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை அவர்கள் அரசுக்குக் கொடுத்தனர். சில மாநிலங்களில் அதற்கேற்ப அரசுகள் நடந்துகொள்ளவும் முனைந்தன. வங்கத்தில் படத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அரசு நேரடியாக எதுவும் செய்யவில்லை என்றாலும், திரையரங்க உரிமையாளர்கள் பொது அமைதியின் பெயரால் திரையீட்டை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தனர். அரசின் கண்ணசைவின்றி இது நடந்திருக்கும் என்று எவரும் நம்ப மாட்டார்கள். நேர் எதிராக பாஜக ஆளும் மாநிலங்களில் இந்தப் படத்துக்கு வரிவிலக்கு அறிவிக்கப்பட்டு, படத் திரையிடல் ஊக்குவிக்கப்பட்டது. எப்படியும் படக் குழுவினரால் உருவாக்க முடியாத தேசிய அளவிலான கவனத்தை எதிர்ப்புகள் உருவாக்கிவிட்டன என்றே சொல்ல வேண்டும். எனில், பாஜக தன்னுடைய உத்தியில் வெல்கிறது. 

கருத்துரிமையைக் குறுக்கி முடக்கிவரும் பாஜகவுக்கான எதிரணியில் இருக்கும் எவருக்குமான அடிப்படைக் கடப்பாடு, கருத்துரிமை பாதுகாப்பில் முன்னே நிற்பது ஆகும். இந்த இடம் தார்மிகமானது. கருத்தைக் கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர தடையால் இல்லை. இந்த விஷயத்தில் முஸ்லிம் அமைப்புகளின் நகர்வு தவறானது ஆகும். முற்போக்குத் தளத்தில் செயல்படும் ஜனநாயக சக்திகள் தாமாக ஒரு பின்னடைவை இதன் மூலம் உருவாக்கிக்கொண்டன.  

அடுத்த விவகாரம், சென்னையில் ‘நீலம் பண்பாட்டு மையம்’ சமீபத்தில் ஒருங்கிணைத்த இலக்கிய நிகழ்வில் வாசிக்கப்பட்ட ஒரு கவிதைக்காக அந்தக் கவிதையை எழுதிய கவிஞர் மீது ஏவப்பட்ட தமிழகக் காவல் துறையின் நடவடிக்கை. கவிஞர் விடுதலை சிகப்பி எனும் விக்னேஷ்வரன் இந்த இலக்கிய நிகழ்வில், மலக்குழி மரணங்களை மையப்படுத்தும் கவிதையை வாசித்திருக்கிறார். கடவுளர்களின் பெயர்களையும் உள்ளடக்கியிருந்த அந்தக் கவிதை பரிபூரணமான படைப்புச் சுதந்திரத்தின் எல்லைக்குள், ஒரு கவிஞரின் வலியை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது. கழிவுகளை அள்ளும் பணியில் மனிதர்கள் இன்றும் ஈடுபடுத்தப்படுவதும் குறைந்தபட்ச பாதுகாப்பு உபகரணங்கள்கூட கொடுக்கப்படாமல் இப்படி மலக்குழியில் இறங்குவோர் உயிரிழப்பதும் நம் சமூகத்தில் தொடர் செய்திகள்.

தமிழ்நாடு போன்ற சமூகநீதி பேசும், நாட்டிலேயே நகரமயமாக்கலும் தொழில்மயமாக்கலும் விரிந்திருக்கும் ஒரு மாநிலம் இன்னமும் கழிவகற்றப் பணிகளை இயந்திரமயமாக்காமல் வைத்திருப்பது சமூக அவலம். அரசு மட்டும் அல்லாது, ஒட்டுமொத்தச் சமூகத்துக்குமே இது வெட்கக்கேடு. தலித்துகளின் மீதே இந்தச் சுமை பெருமளவி சுமத்தப்பட்டிருக்கிறது என்பது வெளிப்படை. எல்லோர் கண்களுக்கு முன்பும் நடக்கும் இந்தக் கொடுமைக்கு எதிராக எவரிடமிருந்து எத்தகைய காட்டமான எதிர்வினைகள் வந்தாலும் நம் சமூகம் அதற்கு முகம் கொடுக்கத்தான் வேண்டும். தன்னுடைய மலத்தை சக மனிதர்களைக் கொண்டு அள்ள வைக்கும் கொடுமையை வெட்கமின்றிப் பகிரங்கமாகச் செய்யும் ஒரு சமூகத்துக்கு, ஒருவேளை அந்த விமர்சனங்களில் சுடுசொற்கள் இடம்பெற்றாலும், அதைச் சுட்டிக்காட்டுவார் மீது கோபப்படுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? 

இந்து மதத்தை விமர்சிக்கிறார், இந்துக்களைப் புண்படுத்திவிட்டார் என்று இந்து அமைப்பினர் கொடுத்த புகாரின்பேரில் கவிஞர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. படைப்புச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்பதைத் தாண்டி ஜனநாயக விரோதச் செயல்பாடாகவுமே இது பார்க்கப்பட வேண்டும். தமிழக முதல்வர் கையில் காவல் துறை இருக்கும் சூழலில் அரசின் பார்வையோடும் இணைத்தே இத்தகைய நடவடிக்கைகள் பார்க்கப்படும். மதத்தையும் கடவுளர்களையும் விமர்சிப்பதை ஒரு பெருமரபாகக் கொண்டது நம்முடைய தமிழ்நாடு என்பதை மறந்துவிடக் கூடாது.

தமிழக அரசு மேற்கொண்ட இரு நடவடிக்கைகளுமே மத அமைப்புகளின் அழுத்தத்துக்கு அரசு பணிகிறதா என்ற கேள்வியை உண்டாக்குகிறது. ஒருபோதும் இந்த அரசு ஜனநாயகர்களின் நம்பிக்கையை இழக்கக் கூடாது. கருத்துரிமை தொடர்பான விவகாரங்களில் தமிழகக் காவல் துறைக்கு உரிய வழிக்காட்டுதலை முதல்வர் காட்ட வேண்டும். கருத்துச் சுதந்திரமானது ஜனநாயகத்தின் சுவாசப் பாதை. அதில் எந்த நியாயத்தின் அடிப்படையிலும் தடை என்ற பேச்சுக்கே இடமே இல்லை!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

7

3





பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

Raja   2 years ago

50 வருட திராவிட ஆட்சி  இந்த மரணங்களுக்கு பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும் தான். ஆனால் கட்டுரை கருத்து சுதந்திரத்தை பற்றியது. தலைப்பே அதுதான். ஒரு சமூக அவலத்தை பற்றிய தனது மன குமுறலை ஒருவர் தன் பாணியில் எழுதினால் என்ன தவறு? இதை எழுது அதை எழுதாதே என்று சொல்ல இந்த நாடு ஒன்றும் சீனா அல்ல.  கவிதை எழுதிய ஒருவரை நீ இப்படித்தான் எழுத வேண்டும் என்று கூறுவது, நான் சாதா ஹிந்து இனிமேல் சங்கி ஆவேன் என்றெல்லாம் இங்கு ஒருவர் பொங்குவது முற்றிலும் முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுகிறது. இங்கு ஒன்று தவறு என்றால் உடனே அந்த பக்கம் தாவுவேன்; அது புதைகுழியாக இருந்தாலும் என்பதை போல. மதம் எப்போதும் இல்லாத வகையில் இப்போது தினசரி வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துவது பயங்கரமானது. தினமலர் வெளியிட்டால் என்ன தவறு? உடனே சமஸை குறை சொல்வதா? தினமலரையும் வெளியிட வைத்ததற்காக சமஸை உண்மையில் பாராட்ட வேண்டும்!

Reply 2 2

Periasamy   2 years ago

...கக்கூஸ் கவிஞரின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து சுதந்திரம் பேசும் சமஸ் கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழக அரசு நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்காமல் கொல்லைப்புறம் வழியாக திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டி இருப்பது குறித்து எந்த கண்டனத்தையும் பதிவு செய்யவில்லை...

Reply 0 2

Login / Create an account to add a comment / reply.

P.Saravanan   2 years ago

If a 'Saadha' Hindu's reaction towards a fair commentary on a Police case could be so severe and lowly, one can imagine the hatred and bitterness of a Sangi's reaction!.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Periasamy   2 years ago

உங்கள் திருநீரை அழித்து விடுங்கள் சமஸ்.. மிக அபத்தமான பிதற்றலான கட்டுரை.. மலக்குழி மரணத்திற்கு 50 வருடம் ஆட்சி செய்த திராவிட மாடல் அரசியல்வாதிகளை கேள்வி கேட்டு கவிதை எழுத தெம்பும் திராணியும் இல்லாத கோழை இந்துமத கடவுள்களை கொச்சை படுத்தி இருக்கிறார். அதற்கு சமஸ் போன்ற நடுநிலைவாதிகள் ஒத்து ஊதுகிறார்கள். என்னை போன்ற சாதா இந்துவையும் சங்கி ஆக்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். விடுதலை கறுப்பியின் மனமும் கவிதையும் சமஸின் கட்டுரையும் மலத்திற்கு ஒப்பானதே...கக்கூஸ் கவிஞரின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து சுதந்திரம் பேசும் சமஸ் கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழக அரசு நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்காமல் கொல்லைப்புறம் வழியாக திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டி இருப்பது குறித்து எந்த கண்டனத்தையும் பதிவு செய்யவில்லை... தயவு செய்து உங்கள் திருநீரை அழித்து விட்டு கருப்புசட்டை அணிந்து கொள்ளுங்கள்..

Reply 6 8

Login / Create an account to add a comment / reply.

கணினி அறிவியல்என்எஸ்ஓதமிழ் வைணவர்கள்பெல் பாட்டம்கோலார் தங்க வயல்செலன்ஸ்கி மாரி!வாசகர்கள்சிற்றரசர்கள்உணவு மானியம்98வது தலைவர்பிரதமர்ஆழி செந்தில்நாதன் கட்டுரைபெருங்குடிகடலோரப் பகுதிஅருஞ்சொல் நாராயண குருஉயிரிப் பன்மைத்துவம்அம்பேத்கர் ரவிக்குமார் கட்டுரைநீதிபதி சந்துருமார்க்கேஸ் மற்றும் ஜெயகாந்தன்இந்த வேலையும் சம்பளமும் நிச்சயம்தானா?ராமசந்திரா குஹா கட்டுரைசி.பி.கிருஷ்ணன்இந்தியா - பங்களாதேஷ்அடையாளக் குறியீடுகள்பொது முடக்கம்ஆதியோகிசர்வாதிகாரம் பெற சட்டம் இயற்றுவதுஇஸ்ரேலியர்கள்சில்லுன்னு ஒரு முகாம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!