பேட்டி, பொருளாதாரம் 10 நிமிட வாசிப்பு

எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு இல்லை: அமர்த்யா சென் பேட்டி

08 Feb 2022, 5:00 am
0

ந்தியாவின் அரசியல் - பொருளாதாரப் போக்கு எது நோக்கிச் செல்கிறது? நோபல் விருது பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்யா சென் இன்றைய சூழலை எப்படிப் பார்க்கிறார்? ‘தி வயர்’ பத்திரிகைக்காக மிதாலி முகர்ஜிக்கு அவர் சமீபத்தில் அளித்த பிரத்யேகப் பேட்டி இது.

மறு சிந்தனை

“கடந்த பத்தாண்டுகளில் அரசியல் - பொருளாதாரத் துறைகளில் நிகழ்வுகள் எப்படி மாறின என்பதை இந்தியா சிந்திக்க வேண்டும். ஜனநாயக விழுமியங்களைக் கட்டமைப்பதற்கு எதிர்த்திசையில் அவை நகர்ந்துள்ளன. இதனால் ஜனநாயகம் வலுவிழந்திருக்கிறதே தவிர வலிமையடையவில்லை. தவறுகளைத் திருத்திக்கொள்ளும் அரசியல் நடைமுறைகள் இல்லாததால் பொருளாதார சமத்துவத்துக்கான முயற்சிகளே இல்லாமல், அவை தவறாகவே கையாளப்படுகின்றன.

சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டமானது தனிநபர் சுதந்திரத்துக்கு மிகவும் ஆபத்தான முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. குற்றமே இல்லாவிட்டாலும், நீதிமன்றங்களால் கண்டிப்பதற்கு ஏதும் இல்லையென்றாலும், தவறு செய்யக்கூடும் என்ற அனுமானத்தில்கூட ஒருவரைச் சிறையில் அடைக்க இச்சட்டம் வழிசெய்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் சமத்துவமின்மை தொடர்கிறது. ஜனநாயகப் பண்புகள் போதாமையினால் சமத்துவமின்மை அதிகரிக்கிறது. மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க அரசு ஆர்வம் காட்டுவது குறைவாக இருக்கிறது. 

கல்வி குறித்துக் கவலை

“கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருந்தொற்றுக் காரணமாக பள்ளிக்கூடங்கள் செயல்பாடு தேங்கியிருக்கிறது. இந்தக் குழந்தைகளின் எதிர்காலக் கல்வி குறித்து கவலையாக இருக்கிறது. இரண்டு ஆண்டுகள் வீணாகிவிட்டதே என்ற கவலை இல்லை. பெருந்தொற்று ஏற்படாத காலத்திலும் நம்முடைய கல்வி முறை குறைபாடுகளுடன்தான் இருந்தது. எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய இந்தியக் கல்வி முறை தவறிவிட்டது.

அரசின் கட்டளைக்கேற்ப இப்போது கல்வி இருக்கிறது. உண்மையான அறிவுத் தேடலைத் தொடர முடியாமல், வழக்கத்துக்கு மாறான குறைபாடுகள் தெரிகின்றன. கல்வித் துறையில் சுதந்திரம் அவசியம். தேசிய அணுகுமுறை சரியல்ல. கணிதத்தில் நாங்கள் சிறந்தவர்கள் என்ற பெருமிதம் மட்டும் போதாது. சுதந்திரச் சிந்தனையை ஊக்குவிக்கும் கல்வி முறை அவசியம். 

யுஏபிஏ

சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தை (யுஏபிஏ) மோடி அரசு மிகுதியாகப் பயன்படுத்துகிறது. பிரிட்டிஷ் ஆட்சியின்போது என்னுடைய மூதாதையர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தவறு செய்ததற்காக அல்ல, அவர்கள் தங்களுடைய ஆட்சிக்கு எதிராக எதையேனும் செய்துவிடக் கூடும் என்ற அச்சத்தில் அரசு தடுப்புக் காவல் சட்டப்படி கைதுசெய்தது.

சுதந்திர இந்தியாவில் இது தொடராது என்றே நம்பினேன். முதலில் காங்கிரஸ் அரசிலும், இப்போது மோடி அரசிலும் இத்தகைய கைதுகள் தொடர்கின்றன. இச்சட்டம் தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது என்பதால் மட்டுமல்ல, கல்வி என்றால் எப்படி இருக்க வேண்டும், ஜனநாயகம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதைத் தவறாகப் புரிந்துகொள்வதாலும் வரும் விளைவுகள்தான் இவை.

பெருந்தொற்றுக்காகப் பொது முடக்கத்தை அறிவித்த அரசு ஏன் இத்தகைய சூழல் ஏற்படும் என்று முதலில் சிந்திக்கவில்லை? இந்தப் பிரச்சினை ஏன் அதற்குப் பிறகும் அரசிடம் போதிய கவனத்தை ஈர்க்கவில்லை? ஏழைகளின் தவிப்பு முக்கியம் இல்லை என்று அரசு கருதியதால்தான் அரசியல் நடைமுறையில் அது உரிய இடம் பெறவில்லை. அப்படியானால் இங்கே ஜனநாயகம் இல்லை என்றே பொருள்.

மக்கள் இன்று சந்தித்துவரும் பிரச்சினைகளில் பெரும் பகுதிக்குக் காரணம் ஏழைகளைப் பற்றியும் அவர்களுடைய பிரச்சினைகள் குறித்தும் இந்த அரசுக்கு சிறிதுகூட அக்கறையே இல்லை என்பதால்தான். இப்படி நேர்வது ஜனநாயகக் கொள்கைக்கே ஆபத்தாக மாறும். ஏழைகளுடைய பிரச்சினைகள் மீது அரசின் கவனத்தைத் திருப்பவே முடியவில்லை. அரசின் கவனத்தைத் தங்கள் மீது திருப்பும் ஆற்றல் ஏழைகளுக்கு இல்லை. ஜனநாயகம் வலுவற்றதாக இருந்தால் இந்த நிலைமை மேலும் தீவிரமடையும். மிகவும் வலுவற்ற இந்த ஜனநாயக நடைமுறையைச் சரிசெய்ய முயற்சிகளை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும்.

ஜனநாயகத்தின் போக்கு

ஜனநாயக விழுமியங்களும் ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய நிறுவனங்களும் தங்களுடைய நிலையிலிருந்து சரிந்துகொண்டுவருகின்றன. பல கட்சிகளைக் கொண்ட ஜனநாயகம் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏன்?

ஒரே கட்சிக்கு நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை அல்லது அதற்கும் மேலும் இடம் கிடைத்துவிட்டால் - நீதித் துறையையும் பிற நிறுவனங்களையும் பின்னுக்குத் தள்ளிவிடும் அளவுக்கு அது நாடாளுமன்றத்திலேயே புதுப்புது சட்டங்களை இயற்றிவிட முடியும்.

அரசு நிர்வாகத்துக்கும் நீதித் துறைக்கும் ஜனநாயகம் எவ்வளவு இன்றியமையாதது என்று சிந்திக்க வேண்டும். தேவைக்கும் அதிகமான வலு ஆட்சியில் இருப்பவர்களுக்குக் கிடைத்துவிட்டால் ஆட்சித் துறை – நீதித் துறை – நிர்வாகத் துறை ஆகியவற்றுக்கு இடையே இருக்க வேண்டிய அதிகாரச் சமநிலை குலைந்துவிடும். அது எல்லாத் தீய விளைவுகளையும் ஏற்படுத்திவிடும். காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும்கூட ஜனநாயகத்தின் அங்கமான பல அமைப்புகள் (அரசு விதித்த) வரம்புக்கு உள்பட்டுத்தான் செயல்பட நேர்ந்தது.

சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் கவிதைகள்’ நூலுக்குத் தடை விதித்த முதல் நாடு இந்தியா. இதையெல்லாம் நாம் மறந்துவிட முடியாது. அதற்கும் முன்பாகக்கூட பல அநீதிகள் இழைக்கப்பட்டன என்றாலும் வலுவான மத்திய அரசு நிர்வாகம் செய்தபோது, பல நிறுவனங்கள் அரசால் கட்டுப்படுத்தப்பட்டன. அப்படி நேரும்போது சுதந்திரம் பாதிக்கப்படுகிறது, கல்வி பாதிக்கப்படுகிறது, அரசியல் – பொருளாதார அதிகாரங்களை மக்கள் கோருவதும் பாதிக்கப்படுகிறது.

சமூகப் படிநிலையில் கீழ்த்தட்டில் இருக்கிற பட்டியல் இனத்தவர்களும் பழங்குடிகளும் மிகவும் பயங்கரமான கட்டத்தைக் கடந்துகொண்டிருக்கிறார்கள். இதனால் அசமத்துவமும் அநீதியும் அதிகரிக்கின்றன. இதை மாற்றியாக வேண்டும். சில வகை சுதந்திரங்களை மீட்டாக வேண்டும்.

ஜனநாயக நடைமுறை சில அதிகாரங்களைக் கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் தன்னுடைய கடமையைச் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன. ஒரு கட்சியின் வசதிக்கேற்ப தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்படுகின்றன. இதுகுறித்து நாம் கவலைப்பட்டாக வேண்டும். இவை எல்லாவற்றுக்குமே ஜனநாயகம்தான் மையம். பொருளாதாரம், கல்வி, சமூக நீதி அனைத்துக்குமே ஜனநாயகம் அவசியம். ஆனால் இப்போதைய சூழலோ சீர்கெட்டுவருகிறது.

விவசாயிகள் கிளர்ச்சி

நாட்டுக்கு வலுவான அரசியல் தலைமையும் அவசியம்; அதேவேளையில் மக்களுடைய கருத்துகளைத் தயங்காமல் எடுத்துரைக்க விவசாயிகள் கிளர்ச்சி போன்ற போராட்டங்களும் அவசியம். பிரச்சினை ஏற்பட்டால் அது ஏன், எங்கே, எப்படித் தோன்றியது என்று விசாரித்து அதைத் தீர்க்க முற்பட வேண்டும். எப்படிப்பட்ட நடவடிக்கை, எங்கிருந்து அது வரவேண்டும் என்ற கேள்விகளும் எழும். இப்படிப்பட்ட சூழல்களில் நீதித் துறை அந்தத் தலைமையை ஏற்றால் நல்லது. சில சமயங்களில் அதைச் செய்கிறது. பெரும்பாலான சமயங்களில் அது எதுவும் செய்யாமல் இருக்கிறது.

பொதுப் போராட்டம் மூலம் அரசின் நடவடிக்கைகளைத் திருத்த முடியும். ஆனால், நாம் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யத் தவறுகிறோம். சிலரை நம்மால் திருத்தவே முடியாது. பேரினவாதத் தலைவர், சிறுபான்மை மக்களை ஒடுக்குகிறார் என்றால் மிகவும் துரதிருஷ்டவசமானது. ஆனால், அப்படிப்பட்ட குறுகிய பேரினவாதப் நோக்கு நீடிக்க நாம் அனுமதிக்கக் கூடாது. அதைப் பேரினவாதம் என்றும் சொல்லிவிட முடியாது, இந்தியப் பெரும்பான்மைச் சமூகம், மற்றவர்களை ஒடுக்குகிற சமூகமாக என்றுமே இருந்ததில்லை. இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் எந்தவித சிக்கலுமின்றி சேர்ந்தே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். காந்தியும் தாகூரும் கூறியபடி சமத்துவம், சம நீதி ஆகிய கொள்கைகளைக் கடைப்பிடிக்குமாறு பெரும்பான்மைச் சமூகத்தை வழிநடத்த முடியும்.

காந்தியின் தலைமை

நல்ல தலைமையும் அவசியம். வெவ்வேறு காரணங்களுக்காக பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்த இந்தியர்களை, சுதந்திரத்துக்காகப் போராடுமாறு ஒருங்கிணைத்தார் காந்தி. நல்ல தலைமைக்கான தேவை எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். மக்கள் உங்களுடைய அழைப்பை ஏற்கவில்லையென்றாலும் தாகூர் கூறியபடி, தன்னந்தனியாக பயணப்பட தயாராக வேண்டும். அதற்கும் முன்னால் சரியான திசையில் வழிநடத்த நல்ல தலைமையை நாம் உருவாக்க வேண்டும்.

விவசாயிகளும் கிராமவாசிகளும் அரசின் சட்டங்களுக்கு எதிராகத் திரண்டதோடல்லாமல் தங்களை நன்கு ஒருங்கிணைத்துக்கொண்டனர். இதற்கு ஜனநாயக நடைமுறைகளே தடையாக மாறும் என்றால் பொருளாதாரச் சமத்துவத்துக்கு அது மிகப் பெரிய ஆபத்தாக மாறிவிடும்.

எல்லாவற்றுக்கும் ஒரேயொரு தீர்வு இருக்கிறது என்று கூற மாட்டேன். ஜனநாயகப் பண்புகளின் பற்றாக்குறையும், நியாயமான முடிவுகளை எடுக்க முடியாத ஆற்றல் குறைவும் நிலவுகிறது. இவை இரண்டும் இன்றைய பல பிரச்சினைகளுக்குக் காரணங்களாக இருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளில் பல பிரிட்டிஷ் சாம்ராஜ்ய காலத்திலும் ஏற்பட்டன. அவர்களுடைய தவறுகளையே நாம் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறோம்.

எதிர்காலம் நன்றாக இருக்கும்

இந்தியாவின் எதிர்காலம் நன்றாகவே இருக்கும் என்று நம்புகிறேன். இந்தியாவின் வெவ்வேறு குழுக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வல்லமை உள்ளவை. அசோகர் இவற்றைக் கல்வெட்டுகளில் வடித்துள்ளார். ரோமாபுரியில் ஹெரட்டிக்ஸை தீயிட்டுக் கொளுத்தினார்கள், எல்லா மதங்கள் தொடர்பாகவும் சமத்துவமான பார்வை வேண்டும் என்று அக்பரால் இங்கே பேச முடிந்திருக்கிறது. ஒரு சமூகத்தினர் வெறுக்கப்படுவதாக இங்கே பேசப்படுகிறது. அப்படியானால் நீதித் துறை தலையிட்டு அதைச் சரி செய்வது அவசியம். எதிர்க்கட்சிகள் அதைப் பற்றி நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொருளாதாரம், செல்வம், வருமானம் ஆகியவற்றில் மட்டும் சமத்துவ நிலை அல்ல, அரசியல் – சமூக அதிகாரத்திலும் அனைவருக்கும் சம பங்கும் உரிமைகளும் அவசியம். எந்த ஒரு பிரிவையும் வெறுத்து ஒதுக்கும் போக்கு கூடாது. கடந்த காலத்தில் நிகழ்ந்த நல்லவற்றுக்காகப் பெருமைப்படும் உரிமை இந்தியாவுக்கு இருக்கிறது. இப்போது பெருமைப்படத்தக்க செயல்களைச் செய்யாமல் நம்முடைய வரலாற்றுக்கோ, நாட்டுக்கோ விசுவாசமாக இருக்கத் தவறுகிறோம்.

என்னுடைய நாட்டைப் பற்றி பெருமைப்படுவதால்தான் இந்திய பாஸ்போர்ட்டை இன்னமும் வைத்திருக்கிறேன். அது மட்டுமல்ல; எதை இவ்வளவு காலம் ஆதரித்தோமோ, எதற்காக நம்மால் இணைந்து நிற்க முடியுமோ அந்த லட்சியங்களுக்காகத்தான் இப்போதும் பாடுபடுகிறோம். அந்தப் பெருமையைக் குப்பையில் போடும் வகையில் ஒரு பிரிவினரை இழிவுபடுத்தும் போக்கு நிலவினால் நான் எதிர்த்துப் போராடத்தான் வேண்டும். 

வயது 88 ஆகி உடல் தளர்ந்துவிட்டாலும் இந்த நிலையை எதிர்த்து நிற்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் மட்டுமல்ல; அனைத்து இந்தியர்களும் இதை எதிர்த்தாக வேண்டும். அசாதாரணமான அரிய பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரர்களான நம் அனைவருடைய பொறுப்பும், கடமையும் இத்தகைய ஓரவஞ்சனைகளை எதிர்த்து நிற்பதாகும்.” 

©The Wire

தமிழில்: வ.ரங்காசாரி

6


அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

குடியரசுத் தலைவர் தேர்தல்இந்து மதம்எழுதல்தைவான்பசுமைப் புரட்சிமாநிலத் தலைநகரம்பேரிசிடினிப்சமஸ் ஓஹெச் பேட்டிநக்ஸலைட்தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல்பாலியல்அகரம் அறக்கட்டளைஅதானி: காற்றடைத்த பலூன்விலைவாசிஜாட்டுகள்டாடாtamilnadu nowஅப்பாவுவின் யோசனை ஜனநாயகத்துக்கு முக்கியமானதுமாஸ்சமஸ் - நல்லகண்ணுசிவசங்கர் பேட்டிஇந்து முன்னணிபெருந்தொற்றுஃபேட்டி லிவர்குதிகால் வலிஊழல் குற்றச்சாட்டுகள்ஊர்மாற்றம்ஓய்வூதியக் காப்பீடுஉத்தர பிரதேச மாதிரிதகவல் தொடர்புத் துறை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!