கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு
ராகுல் யாத்திரையால் பதற்றம் குறைந்ததா?
ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள ‘பாரத ஒற்றுமை நடைப்பயணம்’ (பாரத் ஜோடோ யாத்ரா) வகுப்புக் கலவர பதற்ற மனநிலையைக் குறைந்திருக்கிறதா? இந்தக் கேள்வியைச் சிறிய நடுக்கத்தோடுதான் கேட்டுக்கொள்கிறேன்; நீண்ட காலமாகவே எதையும் தரவுகளுடன் பேசுவதையும் ஆராய்வதையுமே வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ‘காரண – காரிய விளைவு’ கோணத்தில் இதற்கு ஆதாரங்கள் உண்டா என்றும் விசாரித்துப் பார்த்தேன். இந்தக் கேள்விக்கு விடைகள் ஏதும் வலிமையான ஆதாரங்களாகக் கிடைத்துவிடவில்லை. அதிலும் இவ்வளவு குறுகிய காலத்தில் - நிச்சயம் இல்லை.
இருப்பினும் இப்படிக் கேட்பது சரிதான், ஏனென்றால் அரசியல் அரங்கில் இது முக்கியமான நிகழ்வு. மிகச் சிறிய அளவிலாவது இந்த நடைப்பயணத்தால் சமூகங்களுக்கிடையே பதற்றம் குறைந்துவருகிறது என்றால் - ஆதரிக்கவும் கொண்டாடவும் இது முக்கியமான தருணம். அரசியல் என்றாலே தீமைதான் என்ற எண்ணமே மேலோங்கியுள்ள நிலையில், இந்தப் பயணத்தால் பதற்ற உணர்வு குறைந்துவருகிறது என்றாலே போதும், அரசியல் மூலம் ஆக்கப்பூர்வமாகவும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தலாம்.
நான் சொல்லவருவது இதுதான்; இந்த நடைப்பயணத்தால் வகுப்புக் கலவர பதற்றம் குறைந்துவிட்டதா என்று கேள்விதான் கேட்கிறேன், இறுதி பதில் எதையும் நான் அளிக்கவில்லை. சமூக அறிவியல் பாடங்களில் சொல்வதைப் போல, நான் சொல்வது ஒரு கருத்துதான், அந்தக் கருத்து சரியா, தவறா என்பது பதில்களிலிருந்து ஆராயப்பட வேண்டும். திட்டமிட்டு, முன்கூட்டியே ஆள்களையும் நாள்களையும் தேர்வுசெய்து தூண்டிவிட்டு, வன்செயல்களிலும் கலவரங்களிலும் வெறுப்புணர்வுப் பேச்சுகளிலும் ஈடுபடுவது குறித்து நான் பேசவில்லை. இந்த வேலைகளைச் செய்கிறவர்கள் உள்நோக்கம் கொண்டவர்கள்; திட்டமிட்டு அதை நிறைவேற்றுவதில்லை என்று கூறினாலும் - வெறுப்பரசியலின் மூலகர்த்தாக்கள் அவர்கள்தான், அவர்களுடைய கருத்துகளை எதிர்த்துத்தான் இந்த யாத்திரை.
அவர்களிடையே திடீரென மனமாற்றம் ஏற்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கவில்லை, அதுவும் இந்த நடைப்பயணம் (யாத்திரை) அதற்குக் காரணமாக இருந்துவிடும் என்றும் கருதவில்லை. காவல் நிலையங்களில் புகார் செய்யப்படாமல், பத்திரிகைகளில் செய்தியாக வராமல் இருக்கும் அன்றாட பதற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கை குறித்தே பேசுகிறேன். பரஸ்பர பகைமை, அவநம்பிக்கை, அவமதிப்பு, சிறிய விஷயத்துக்குக்கூட கோபம் கொப்பளிக்க சூடான வார்த்தைப் பரிமாற்றங்கள் என்றெல்லாம் அவை வெவ்வேறு வடிவங்களில் சமுதாயத்தில் நிலவுகின்றன.
மதவெறியைத் தூண்டும் பேச்சுகளிலும் செயல்களிலுமிருந்து சாமானிய மக்கள் விலகிநிற்பது குறித்துத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். நடைப்பயணம் சென்ற ஊர்கள் அல்லது பிரதேசங்கள் பற்றி மட்டும் நான் கேட்கவில்லை, இந்த நடைப்பயணம் தொடர்பான தகவல்கள் பரவிய பிற இடங்கள் குறித்தும் அறிய விரும்புகிறேன். வகுப்புவாத பதற்றத்தை ஏனைய பகுதிகளிலும் அது தணித்திருக்கிறதா என்று கேட்க விரும்புகிறேன்.
மிதமானது முதல் வலுவானது வரை
இந்தக் கோணத்தில் சிந்திக்குமாறு என்னைத் தூண்டியது ‘ஏக்தா பரிஷத்’ என்ற அமைப்பின் சக நடைப்பயணியான புஷ்பராக்; நவம்பர் மாத இறுதியில் மத்திய பிரதேசத்தின் பெரிய கிராமமொன்றில் (அல்லது சிறிய நகரம்) யாத்ரிகர்கள் அனைவரும் தங்கினோம். இந்த யாத்திரை தொடங்குவதற்கு முன்னதாகவே இதைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த முஸ்லிம் குடும்பங்களில் சிலரைச் சந்தித்துப் பேசிவிட்டு என்னிடம் வந்தார் புஷ்பராக். பாரத இணைப்பு யாத்திரையை ராகுல் தொடங்கிவிட்டார் என்று செய்தித்தாள்கள் மூலம் அறிந்தது முதலே தங்களுடைய கிராமத்தில் வகுப்புவாத பதற்றம் தணிந்துவிட்டதாக அவர்கள் கூறினார்களாம்; இதே கருத்தை வேறு பல ஊர்களிலும் தன்னிடம் தெரிவித்தனர் என்றார் புஷ்பராக்.
என்னால் நம்ப முடியவில்லை. இப்படியெல்லாம் முகத்துக்கு நேராகக் கூறப்படும் செய்திகளை உண்மையென்றே எடுத்துக்கொள்ளும் பலவீனம் எங்களைப் போன்ற சமூகத் தொண்டர்களுக்கு உண்டு. இதை அவரிடம் கூறினேன். சாமானியர்கள் மட்டுமல்ல, காவல் துறை உயர் அதிகாரிகளும் இவ்வாறே தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார் புஷ்பராக். அவர்களுக்குக் கிடைத்த உளவுத் துறை தகவல்கள் - வகுப்புக் கலவர மோதல்கள் குறைந்துள்ளன, மக்களிடையே பதற்றம் இல்லை - என்று தெரிவித்தனவாம். இதைச் சொன்ன அவர், “உடனே இதை உங்கள் கட்டுரையில் எழுதிவிடாதீர்கள், வெறுப்பரசியலால் லாபம் அடைந்துவருகிறவர்கள், பதற்றத்தைத் தூண்டும் வேலையில் இறங்கிவிடுவார்கள்” என்றார்.
கர்நாடகத்தில் எங்களுடைய யாத்திரை மக்களுடைய வரவேற்பால் வெற்றிகரமாக முடிந்த பிறகு, அங்கு மதவாத வெறுப்பரசியல் விசிறிவிடப்பட்டிருப்பதாக என்னுடைய நண்பர்கள் பலர் தகவல்களை அனுப்பிக்கொண்டிருக்கின்றனர். அதைப் பற்றியும் வெவ்வேறு மாநிலங்களின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள நண்பர்களிடம் கேட்டு தகவல்களைத் திரட்டிக்கொண்டிருக்கிறேன். அந்த பதில்கள், மிதமானது முதல் மிகவும் வலுவானது வரையில் இருக்கின்றன.
இந்த யாத்திரையால் பதற்றம் குறைந்திருக்கிறது என்றே பெரும்பாலானவர்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம் வகுப்பு மோதல்கள் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்துவிடவில்லை, ஊடகங்களிலும் விஷம் தோய்ந்த பிரச்சாரங்கள் ஓய்ந்துவிடவில்லை. வெறுப்பரசியலைத் தூண்டுகிறவர்களை அவ்வளவு எளிதாக மனம் மாற்றிவிட முடியும் என்று நினைக்கவில்லை. இந்த நடைப்பயணம் சாமானிய மக்களுடைய வாழ்க்கையில் எந்தவிதமான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்று அறிய விரும்புகிறேன், அவ்வளவே.
வெறுப்புக்கு இடையே அன்பு
நல்லதொரு கருத்தியலானது இரண்டு மாறிலிகளுக்கு இடையில் இருக்கும் உறவு குறித்துப் பேசுவதோடு நிறுத்திவிடக் கூடாது. அப்படியொரு உறவை ஏன் எதிர்பா்க்கிறோம் என்பதையும் கூற வேண்டும். அதற்கு என்னுடைய பதில் இது: பாரத் ஜோடோ யாத்திரை, மதவெறி வெறுப்பை ஓரளவுக்கு நீர்த்துப்போக வைத்தது, காரணம் வகுப்புவாத உணர்வுக்கு எதிராக அது பெரிய சக்தியை உருவாக்கியதால் அல்ல; யாத்திரை சென்ற தொலைவும் மிகச் சிறியது என்பதால், தேசிய அளவில் பெரிய அலையை ஏற்படுத்திவிடவில்லை.
வகுப்பு மோதல்கள் இனி உருவானால் அதைத் தடுப்பதற்கோ, தணிப்பதற்கோ தன்னார்வத் தொண்டர்கள் படையையும் இந்த யாத்திரை உருவாக்கிவிடவில்லை. யாத்திரை செய்ததெல்லாம், வகுப்பு ஒற்றுமையைப் பேண வேண்டிய அவசியத்தைச் சொன்னதுதான், இந்தச் செய்தியே ஓரளவுக்குப் பதற்றத்தைத் தணித்திருக்கிறது. இணைப்பு யாத்திரை என்ற சொல்லே நாட்டை ஒற்றுமையாக வைத்திருப்பதன் அவசியத்தையும் ஒருமைப்பாட்டு உணர்வையும் மக்களுக்கு ஊட்டியது.
வெறுப்பரசியலைக் கண்டித்து ராகுல் காந்தி நேரடியாகவே பேசினார்; ஆனால், பாஜக அல்லாத பிற பெரிய கட்சிகளின் தலைவர்களில் பலர் யாத்திரையில் பங்கேற்காமல் சமதொலைவில் விலகியே நின்றனர் என்பதால் – அன்பு செலுத்த வேண்டும் என்று ராகுல் பேசியது அனைவராலும் ஏற்கப்பட்டது. “வெறுப்பையே விற்கும் பெரிய கடைவீதியில், அன்பை விற்க நான் சிறிய கடையைத் திறந்திருக்கிறேன்” என்று ராகுல் பேசியது நீண்ட காலத்துக்கு மக்களுடைய மனங்களிலேயே தங்கியிருக்கும்.
வெறுப்புதான் வேகமாகப் பரவும் என்றில்லை, அன்பும் பரவக்கூடியதுதான். தில்லி மாநகரின் வட கிழக்குப் பகுதியை யாத்திரை கடந்து சென்றபோது இதே சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன். ஜாஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் தொடங்கி ஷிவ் விஹார் வரையில் – 2020இல் மிக மோசமான வகுப்புக் கலவரம் நடந்த பகுதி வழியாகத்தான் நடந்துசென்றோம்.
சாலையின் இரு மருங்கிலும் இரண்டு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் திரண்டு நின்றனர். ‘சாரே ஜஹான் சே அச்சா…’ என்ற பாடல் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருந்தது. அதைக் கேட்டு கண்களில் கண்ணீர் துளிர்த்தது எனக்கு மட்டுமல்ல, அங்கிருந்த பலருக்கும்தான். முஸ்லிம்களுடைய முகங்களில் அன்பும் அமைதியும் தவழ்ந்தது. மிகவும் உற்சாகமாக வரவேற்றனர். அந்த வட்டார இந்துக்களும் கணிசமாக வந்திருந்தனர்.
‘முஸ்லிம்கள் அல்லாதவர்களுடைய வாக்குகளைக் காங்கிரஸ் கட்சியால் அதிக அளவில் ஈர்க்க முடியும் என்றால், முஸ்லிம்களும் மீண்டும் காங்கிரஸை ஆதரிக்கத் தொடங்கிவிடுவார்கள்’ என்று அரசியல் விமர்சகர்கள் பத்திரிகைகளில் அதைப் பற்றி எழுதினர். முஸ்லிம்களின் முகங்களையே ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். இந்தப் பகுதியில் அதிக எண்ணிக்கையில் வசிப்பதால் இப்படி அச்சமோ, பதற்றமோ இல்லாமல் இருக்கிறார்களா அல்லது ஒற்றுமை யாத்திரைக்கு முன்னால் இருக்கிறோம் என்ற உணர்வா என்று அறிய முற்பட்டேன். இப்படிப் பார்க்க நினைப்பதும் என்னுடைய மனதின் தனிக் கற்பனையா?
(வகுப்பு மோதல்களால் ஏற்படும்) “ரத்தக் கறைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிடும், ஆனால் அதற்கு பல ஆண்டுகள் பருவமழை தேவைப்படும்” என்று ஃபைஸ் அகமது ஃபைஸ் எழுதிய கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன. நீதியின் சாயல்கூட இல்லாமல் ரத்தக் கறைகளைப் போக்கிவிட முடியுமா? ரத்தக் கறைகளுக்குக் காரணம் வெறுப்பு, வெறுப்புக்குக் காரணம் வார்த்தைகள் என்றால் – அதே வார்த்தைகள் ஏன் அன்பை வளர்க்கும் விதத்தில் பேசப்படக் கூடாது? இந்த எண்ணம் அப்பாவித்தனமான நம்பிக்கையா? இது அப்படிப்பட்டதாகக்கூட இருக்கட்டும்; வேறொரு கருத்தியல் மூலம் இதை யாரும் மறுக்கும்வரை, இந்த எண்ணம் ஏற்படுத்தியுள்ள சுகானுபவத்திலேயே மூழ்கியிருக்க என்னை அனுமதியுங்கள்.
தொடர்புடைய கட்டுரைகள்
ராகுல் நடை சாதித்தது என்ன?
வீதி வேடிக்கையா ராகுலின் பாத யாத்திரை?
காங்கிரஸ் அழிய வேண்டும் என்று ஏன் எழுதினேன்?
தெற்கு மேலே: தேவை புதிய கற்பனை
தமிழில்: வ.ரங்காசாரி
1
3
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.