கட்டுரை, அரசியல், விவசாயம் 6 நிமிட வாசிப்பு

மக்களிடமிருந்து விலகும் இந்திய வெகுஜன ஊடகங்கள்

யோகேந்திர யாதவ்
11 Oct 2021, 5:00 am
2

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகளைக் கார் ஏற்றிக் கொன்ற வன்முறைச் சம்பவங்களைச் செய்தியாக அளித்த விதம் காரணமாக, இந்தியாவின் வெகுஜன ஊடகங்கள் நடுநிலையானவை என்ற நம்பகத்தன்மை நொறுங்கிவிட்டது. இந்திய ஊடக அறத்தின் சவப்பெட்டி மீது அறையப்பட்ட ஆணி என்றுகூட இதைச் சொல்லலாம் - நிச்சயம் கடைசி ஆணி அல்ல. 

ஒரு ஆணிகூட அவற்றின் பத்திரிகை விற்பனையையோ, தொலைக்காட்சி சேனல்களுக்கு நேயர்கள் எண்ணிக்கையையோ நிச்சயம் குறைத்துவிடப்போவதில்லை. ஆனால், “நாங்கள் உண்மையைத்தான் பேசுகிறோம், உண்மையாக நடந்தவற்றைத்தான் கூறுகிறோம்” என்று ஊடகங்கள் செய்துவந்த பசப்பல் மீது ஆணி இறங்கியிருக்கிறது.  

செய்தி ஊடகம் நினைத்தால் ஒருவரை வாழவைக்கலாம் அல்லது வாழ்விழக்க வைக்கலாம் என்ற கருத்தை, டெல்லிக்கு அருகில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் தலைகீழாகப் புரட்டி போட்டுவிட்டது. விவசாயிகளின் கிளர்ச்சிக்கு ஊடகங்கள் களங்கம் கற்பிக்கும் முயற்சிக்குப் பதிலாக, விவசாயிகள் கிளர்ச்சி தொடர்பாக செய்திகளை வெளியிடும் விதம் காரணமாக ஊடகங்களே இப்போது களங்கப்பட்டு நிற்கின்றன.

என்ன நடந்தது, எப்படி வெளியிட்டார்கள்?

கொடூரமான இந்தச் சம்பவம் குறித்து வெகுஜன ஊடகங்கள் எப்படி எதிர்வினையாற்றின என்று பார்ப்போம். முதலில், இது ஒரு பெரிய நிகழ்ச்சியே அல்ல என்பதைப் போல மெத்தனமாகவே செயல்பட்டன. பிற்பகல் 3 மணிக்கு விவசாயிகள் மீது எஸ்யுவி என்றழைக்கப்படும் பெரிய கார் ஏறிக் கொன்றது. அப்போது உள்ளூர் செய்தித்தாள்களின் நிருபர்களும் தொலைக்காட்சி நிருபர்களும் அங்கே இருந்தனர். நம்பகமான செய்திகள் சில நிமிஷங்களுக்கெல்லாம் வரத் தொடங்கின; பிற்பகல் 3.30 மணிக்கு, இந்தக் கொடுஞ்செயலைச் செய்தது யார் என்று விவசாயிகள் அமைப்பான ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ (எஸ்கேஎம்) ஊடகங்களுக்குத் தகவல் தந்தது. இருந்தும் ‘ஏஎன்ஐ’யில் மாலை 5 மணி வரை இதைப் பற்றி செய்தி ஏதும் வரவில்லை.

என்ன நடந்தது என்பதை ஆளும் கட்சி திரிப்பதற்குப் போதிய அவகாசம் அளிக்கப்பட்டது. அதற்குப் பிறகு திசை திருப்பும் செய்தி வெளியானது. அங்கே திரண்ட விவசாயிகள் கார்கள் மீது கல்லெறிந்ததாகவும், அந்த இடத்திலிருந்து தப்பிப்பதற்காக வேகமாக வெளியேற முயன்ற கார் ஓட்டுநர் கல்லடி காரணமாக கூட்டத்தின் மீதே காரை வேகமாக ஓட்டியதாகவும் கதை புனையப்பட்டது. என்ன நடந்தது, எப்படி நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் மக்கள் குழம்பட்டும் என்ற நோக்கத்துடன் இப்படிச் செய்யப்பட்டது. 

திசை திருப்ப போதை விவகாரம்

இந்தச் செய்தி மக்களுக்குக் கிடைக்கும்போது அவர்களுடைய கவனத்தைத் திசை திருப்ப வேண்டும் என்பதற்காக, மும்பை அருகில் பாலிவுட் திரைப்பட நட்சத்திரத்தின் மகன் உல்லாசக் கப்பலில் நடந்த கேளிக்கை விருந்தில் போதை மருந்து உட்கொண்டதாக பிடிபட்ட செய்தி முக்கியம் தந்து ஒளிபரப்பப்பட்டது. இது லக்கிம்பூர் கேரியைக் கண்கள் பார்த்துவிடாமல், மும்பை அருகே செல்லட்டும் என்று திட்டமிட்டு செய்யப்பட்டது. இறுதியில், மோசடியான தலைப்புகள் மூலம் இந்தக் குற்றச் செயலே சிதைக்கப்பட்டது. 

நாட்டிலேயே அதிக பிரதிகள் விற்பனையாகும் ‘தைனிக் ஜாக்ரண்’ இப்படியான தலைப்பில் செய்தி வெளியிட்டது. “உத்தர்பிரதேஷ் மே அராஜக் கிசானோ கா உபத்ரவ், 6 கி ஜான் கயி”. அராஜகத்தில் ஈடுபட்ட விவசாயிகளால், உத்தரப் பிரதேசத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர் என்பது தமிழாக்கம். அரசு ஆதரவு சேனல்கள் இதை அப்படியே பின்பாட்டாகப் பாடின.

இதை அப்படியே எதிரொலிக்காமல் உண்மையை உரைத்த குரல்களும் உண்டு. அவை பெரும்பாலும் இணையதளங்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றிலிருந்து வந்தன. ஒரு சில வெகுஜன ஊடகங்கள் உண்மையான குற்றவாளியை அடையாளம் காண்பதில் துணிச்சலுடன் உறுதியாக நின்றன. ஆனால், பெரும்பாலான அல்லது ஒட்டுமொத்த ஊடகங்களின் பிம்பத்துக்கு நேரிட்டுவிட்ட களங்கத்தை அவற்றால் துடைத்துவிட முடியாது.

ஊடகங்கள் ஏன் இப்படிச் செய்தன?

ஜனநாயகம் நிலவுவதாக சொல்லப்படும் நாட்டில், பெரும்பாலான செய்தி ஊடகங்கள் தனியாரிடம், சுதந்திரமாகத்தான் செயல்படுகின்றன, செய்திகளுக்குத் தணிக்கைகளும் கிடையாது, அப்படியிருக்க ஏன் இப்படிச் செயல்படுகின்றன? 

இன்றைய இந்தியாவில் ஊடகங்கள் ‘செய்தித் தணிக்கை’ என்று எதுவுமே இல்லாமல் அரசு, ஆளுங்கட்சி, அதன் கூட்டாளிகள் எப்படி ஊடகங்களைத் தங்களுடைய எண்ணப் போக்குக்கு ஏற்பச் செய்திகளை வெளியிட வைக்க, நான்கு வழிகளை வைத்திருக்கிறார்கள் என்று நான் அறிந்ததைக் கூற அனுமதிக்குமாறு கோருகிறேன். 

வர்த்தக ஆதாயம், சித்தாந்த ஆதாயம், தனிப்பட்ட முறையில் உறவாடுவதனால் கிடைக்கும் ஆதாயம், உணர்ந்து செயல்படுவதால் ஏற்படும் ஆதாயம் என்ற இதை ‘டீலர்ஷிப்’, ‘பார்ட்டிசான்ஷிப்’, ‘ரிலேஷன்ஷிப்’, ‘சென்சார்ஷிப்’ என்று ஆங்கிலத்தில் வகைப்படுத்தலாம்.

அரசு எப்படிக் கட்டுப்படுத்துகிறது? 

பத்திரிகை அல்லது ஊடகத்துக்குத் தேவைப்படும் அரசு விளம்பரங்களை விடுவிப்பது, செய்தித்தாள் ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் சலுகை காட்டுவது, நிறுவனத்தின் பங்கு மதிப்புகளை உயர்த்திக் காட்ட உடந்தையாக இருப்பது, செய்தி ஊடகங்களை நடத்தும் முதலாளிகளின் பிற தொழில்களின் முதலீடு, விற்பனை போன்றவற்றுக்கு உதவுவது இப்படி வரிசைப்படுத்த ஆரம்பிக்கலாம்.

அரசிடம் உள்ள ஆயுதங்களான அமல்பிரிவு இயக்குநரகம் (இ.டி.), வருமான வரித்துறை (ஐ.டி.) ஆகியவற்றைக் கொண்டு திடீர் சோதனைகளை நடத்துவது அல்லது நடத்தாமல் இருப்பது, வியாபாரத்துக்கு வங்கிகள் மூலம் கிடைக்க வேண்டிய கடனைத் தரவிடாமல் இழுத்தடிப்பது அல்லது விரைவாக கிடைக்க உதவுவது, இணையதளம் உள்ளிட்ட தகவல் தொடர்புகளை எளிதாகவும் வலுவாகவும் கிடைக்கச் செய்வது அல்லது தடுப்பது, இட்டுக்கட்டிய குற்றச்சாட்டுகளின்பேரில் கைதுசெய்வது அல்லது கைதாகாமல் பார்த்துக்கொள்வது ஆகிவற்றையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.  சமீப காலங்களில் ‘தைனிக் பாஸ்கர்’, ‘தி குவின்ட்’, ‘நியூஸ்க்ளிக்’ நிறுவனங்களுக்கு என்ன நடந்தது என்பது கண் முன்னே உள்ள உதாரணங்கள். 

இப்படி, அரசின் கை அடிப்பதும் - அணைப்பதும் மோடி ஆட்சியில்தான் தொடங்கியது என்றும் நாம் கூறிவிட முடியாது. காங்கிரஸ் ஆட்சியிலும் இதற்கு ஏராளமான முன்மாதிரிகள் உள்ளன. மாநில அரசுகளும் இதற்கு விதிவிலக்கு இல்லை. மோடி அரசில் அடிக்கும் கை பலமாக இருக்கிறது, மேலும், அதை ஒரு கலையாகவே அது பழகியும்விட்டது.

அரசுடன் நகமும் சதையுமாக உறவு கொள்வதென்பது, ஊடகம் தோன்றிய காலத்திலிருந்தே நடப்பதுதான். இந்த அரசில் எது சிறப்பு என்றால் - ஒவ்வொரு ஊடகமாக அதன் ஆசிரியர், நிருபர், கட்டுரையாளர், பகுதி நேர நிருபர் என்று அனைவரையும் தனித்தனியாகவே கண்காணித்து உரிய நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள். ஒரு எழுத்தாளரையோ நிருபரையோ ஆசிரியரையோ குறிவைத்துவிட்டார்கள் என்றால், அவர்களுடைய கண் ஜாடைக்கு ஏற்ப, அவர்கள் டிரால் செய்யப்படுகிறார்கள். இது செய்தி ஊடகத்தில் உள்ள அனைவரையும் அச்சத்தில் உறைய வைக்கிறது.

இதில் கண்ணுக்குத் தெரியாமல் நடப்பது எதுவென்றால், தணிக்கையாக இல்லாமல், நிறுவனமே பார்த்து - இதை வெளியிடுவது ஆளும் கட்சிக்கு எதிராகப் போய்விடும், இது மக்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்படும் - என்றெல்லாம் தீர்மானிக்கப்பட்டு தகவல்கள் அல்லது தரவுகள் மறைக்கப்படுவது அல்லது வேறு விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவது என்று நடக்கிறது. தணிக்கை என்ற சென்சார்ஷிப்பைவிட, ஊடக நிர்வாகம் தானாகவே உணர்ந்து செய்தியை வெளியிடாமல் இருப்பது அல்லது திரிப்பது என்பது நேரடித் தணிக்கையைவிட மிகவும் ஆபத்தானது. இந்த சுய தணிக்கைதான் நம்முடைய எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களின் சுதந்திரமான நடையைக் கட்டுப்படுத்தும் அம்சமாகிக்கொண்டிருக்கிறது.

ஆபத்தான தொடர்பறுப்பு

சாதாரண விவசாயிகளோ, விவசாயத் தொண்டர்களோ ஊடகங்கள் செய்வதை இப்படியெல்லாம் பகுத்துப் பார்ப்பதில்லை. ஆனால், பத்திரிகையில் இறுதியாக என்ன அச்சாகிறது என்பதைப் படித்து, இடையில் என்ன நடந்திருக்கும் என்று புரிந்துகொள்கிறார்கள். ‘கோடி மீடியா’ என்பது ஏதோ சில வட்டாரங்களில் மட்டுமான வசைச் சொல் அல்ல. இப்போது போராட்டங்களின்போது விவசாயிகள் பரவலாக இதைப் பேசுகின்றனர். கிராமங்களில் விவசாயிகள் மட்டுமல்ல - விவசாயிகள் அல்லாதவர்களும் இதைத் தெரிந்துவைத்துள்ளனர். விரைவிலேயே இது ஊடகத் துறைக்கு பெரிய நெருக்கடியாக உருவெடுக்கும். முழுமையாக அவை செல்வாக்கு இழந்துபோகும்.

அடுத்தடுத்து ஏதாவது போராட்டங்களை நடத்துவதையே வாழ்க்கையை நடத்துவதற்கான வழியாகக் கொண்டிருக்கும் என்னுடைய சகாக்கள் (அந்தோலன் ஜீவிகள்) இதைக் கொண்டாடக் கூடும். அவர்களுடைய எதிர்வினையைப் புரிந்துகொள்கிறேன். உங்களால் ஊடகங்களை உண்மை பேச வைக்க முடியாவிட்டால், அடுத்த வாய்ப்பு அவை சொல்வதை நம்புவதற்கில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடுவதுதான். இதைப் பற்றியும் பல காரணங்களுக்காக நான் கவலைப்படுகிறேன். 

ஊடகங்கள் மீது இப்படியொரு கண்ணோட்டம் படிந்துவிட்டால் அது நேர்மையான ஊடகத்தையும் பத்திரிகையாளரையும்கூட சந்தேகக் கண் கொண்டே பார்க்கச் சொல்லும். பத்திரிகையின் சுதந்திரத்தைப் பராமரிக்கும் இந்தக் கலை, இந்த ஆட்சியோடு ஓய்ந்துவிடாது. அடுத்து வரும் ஆட்சியாளர்கள் இதை அவசர அவசரமாக மறந்துவிட விரும்ப மாட்டார்கள். எல்லாவற்றையும்விட முக்கியம், பொதுஜன எண்ணத்துக்கும் வெகு மக்களின் செய்தி ஊடகத்துக்கும் தொடர்பு அறுந்துவிட்டால் - அதைவிட மோசமான செய்தி ஜனநாயகத்துக்கு வேறில்லை!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.








பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   3 years ago

ஊடகங்களின்மீது மக்கள் நம்பிக்கையிழக்கத்துவங்கி பலகாலமாகிறது; சந்தாதாரர்கள் இல்லாமல் தவிக்கும் நேர்மையான ஊடகங்களையும் காண வருத்தமாயிருக்கிறது. இது ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரைதானே?! மொழிபெயர்ப்பாளர் பெயர் குறிப்பிடப்பட்டால் நலம்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Seyed Bukhari   3 years ago

இது ஊடகம் குறித்த ஒரு வலைதள ஊடகத்தின் செய்தி.ஊடகம் என்றால் அதில் நம்ப ஒன்றுமில்லை அல்லது நம்பிக்கை கொள்ள ஒன்றுமில்லை என்பது இந்தியாவிலுள்ள சாமானியனின் எண்ணம்.சினிமா சார்ந்த கிசுகிசுவையும் நடிகைகளின் அரைகுறை ஆடையையும் அதிகம் ரசிக்க தான் ஊடகங்கள் மிகையாக பயன்பட்டிருக்கின்றன்.இதை தாண்டி ஊடகங்களில் செய்தியை தேடுபவர்களில் இருவகை உண்டு.ஒன்று பாதிக்கப்பட்டவர்கள் .மற்றொன்று பாதிப்பை உருவாக்கியவர்கள்/பரிகாரம் தேடுபவர்கள்.இந்தியாவில் ஊடகங்களால் பலியான சமுகங்களும் துறைகளும் தளங்களும் தனிமனிதர்களும் கொஞ்சமல்ல.இன்று விரிந்து கிடக்கும் வலைதளத்தின் பகிர்மானங்களால் சிற்சில அச்சத்தை ஊடகத்துறையில் உருவாக்கியிருக்க வாய்ப்புண்டு.ஆயினும் ஊடகம் என்பது மக்கள் பக்கம் பாதிக்கப்பட்டோரின் குரலாக ஒலித்தது மிகமிக குறைவு.இந்நிலையில் என் போன்ற வாசகர்களின் ஆதங்கம் எல்லாம் ஊடகமும் ஊடகவியலும் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.அப்பொழுது தான் ஊடகத்தை நடத்துவோரும் ஊடகவியலாளர்களும் நல்லவர்களாக வல்லவர்களாக மக்களுக்கான குரலாக மாறும்.இல்லையேல் ஊடகம் என்பது என்றும் எப்பொழுதும் கானல் நீரே!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

பகுஜன் சமாஜ்பி.ஏ.கிருஷ்ணன் சாவர்க்கர்சர்க்கரை நோய்சமச்சீரின்மைஎன்சிஇஆர்டிஅக்னிவீர்மைக்ரேன்justice chandruவாக்குரிமையும் சமத்துவமும்துணை மானியம்முன்பருவக் கல்விசந்தோஷ் சரவணன் கட்டுரைஅந்தரங்கச் சுத்தம்இலக்கிய வட்டம்புதிய தலைமுறைIndian Farm Crisis - The Third Optionஜென்கின்ஸ் சால்ட் ஒர்க்ஸ்உடல் உறுப்பு தானத் திட்டம் சீரமைக்கப்படுமா?விடுதலைப் போராட்டங்கள்சர்வதேச மொழிதி.ஜ.ரங்கநாதன்நார்சிஸ்ட்விசிலூதிகளுக்கான பாதுகாப்பு என்னஇந்து கடவுளர்கள்குஜராத் சாயல்குற்ற விசாரணைமுறைச் சட்டம்மனக்குழப்பம்பெரும்பான்மையோகியை வீழ்த்துவது எளிதல்ல!குடியுரிமை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!