லக்கிம்பூர் கெரியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது ஒரு கேள்வி மட்டும் திரும்பத் திரும்ப என்னை அழைக்கழித்துக்கொண்டே இருந்தது: வன்முறையில் இறந்தவர்களை ‘நம்முடையவர்கள்’, ‘மற்றவர்கள்’ என்று பிரித்துப் பார்க்க வேண்டுமா?
ஒரு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வெவ்வேறு தரப்பினரை நாம் எப்படி அணுகுவது? நடந்த துயரம் எப்படிப்பட்டது என்பதையே அறியாமல் சுபம் மிஸ்ராவின் ஒரு வயது மகள் அந்தத் துக்க வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தது திரும்பத் திரும்ப என் சிந்தனையில் வந்துபோனது. அவருடைய மனைவியின் கண்களில் தெரிந்த சோகம், அவருடைய தந்தை என்னைப் பார்த்து வீசிய கேள்விகள் போன்றவையும் எனக்குள் எதிரொலித்துக்கொண்டேயிருந்தன.
லக்கிம்பூர் கெரியில் உள்ள திகுனியாவில் நடந்த இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்குச் சென்றேன். நான்கு விவசாயிகளுக்கும், பத்திரிகையாளருக்கும் ஈமக் கிரியைகள் நடந்தன. அங்கே பேசப்பட்ட அனல் வீசும் பேச்சுகளைவிட, அந்தச் சடங்குகளுடன் என்னால் அதிகம் ஒன்ற முடிந்தது. இப்படிப்பட்ட துக்க நிகழ்வுகளுக்குப் பல ஆண்டுகளாக சென்று பழகிய அனுபவம், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் வேதனை எப்படிப்பட்டது என்பதை அவர்களுடைய முகங்களிலிருந்தே அறியக் கற்றுத் தந்திருக்கிறது. அந்தத் துக்கங்கள் எனக்கும் நெருக்கமானவை.
அஞ்சலிக் கூட்டம் முடிவுக்கு வந்த பிறகு, இறந்த விவசாயிகளின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் அமைதியாக மேடையை விட்டு இறங்கினர். என்னுடைய வணக்கத்தை, வார்த்தை ஏதுமில்லாத வெற்றுப் பார்வைகள் எதிர்கொண்டன. சிலர் கைகளைக் கூப்பி வணங்கி விடைபெற்றனர். கார் ஏற்றிக் கொல்லப்பட்ட 19 வயது மகனின் தாய் என்ன சொல்வார் என்று இத்தருணங்களில் எதிர்பார்க்க முடியும்? அல்லது நீங்கள்தான் அவரிடம் என்ன வார்த்தைகளை ஆறுதலாகக் கூறிவிட முடியும்?
இப்படிப்பட்ட துர்சம்பவங்களைச் செய்தித்தாளில் வாசிப்பது, தொலைக்காட்சி நேரலையில் காண்பது ஒருவிதம் என்றால், பாதிக்கப்பட்டவர்களை நேருக்கு நேர் சந்திப்பது தனி விதம். கடந்த வாரம் நடந்த சம்பவத்தில் அவர்கள் அனைவருமே துக்கத்தில் குன்றிப்போனவர்களைப் போலத் தெரிந்தார்கள். பத்திரிகையாளர் சுமித் காஷ்யப்பின் குடும்பத்தினர், சீக்கியர்களுக்கான இறுதிச் சடங்கு நடக்கும் இடமாக அது இருந்ததால் சற்றே அச்சமுற்றவர்களைப் போலவும் காணப்பட்டார்கள்.
விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்ட அந்தக் காட்சியை நூறாவது முறையாக என் மனக்கண்ணில் கொண்டுவந்து பார்த்து, “அரசியல் அதிகாரத்துக்காக ஒரு மனிதன் இந்த அளவுக்கு மிருகத்தனமாக இன்னொரு மனிதனைத் துடிக்கத் துடிக்க கொல்ல முடியுமா?” என்று எனக்குள் கேட்டுக்கொண்டு கோபத்தில் துடித்தேன். இந்தச் சம்பவத்தோடு தொடர்புடையதாகப் பேசப்படும் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும், கைதுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானது என்ற எண்ணமே மேலும் வலுப்பட்டது.
எதிர் பக்கத்தினரின் சோகம்
திகுனியாவைவிட்டுப் புறப்பட்டபோது, இந்தப் பயணம் முழுமையடையவில்லை என்றே எனக்குள் தோன்றிக்கொண்டே இருந்தது. இந்தச் சம்பவத்தில் இறந்த கார் ஓட்டுநர், பாஜகவின் இரண்டு தொண்டர்கள் தொடர்பில் ஒரு வாரமாக மற்றவர்களிடம் கேட்டுக்கொண்டேயிருந்தேன். இரண்டு வித மரணங்களையும் சமப்படுத்த முடியாது என்றாலும், ஒவ்வொரு மரணமும் ஏதோ ஒரு விதத்தில் அந்தந்தக் குடும்பங்களுக்குத் தாங்க முடியாத சோகத்தையும் இழப்பையும் ஏற்படுத்திவிடுகிறது.
என்னுடைய எண்ணங்களுக்கு நான் உண்மையாக மதிப்பளிப்பவனாக இருந்தால், இறந்த எதிர்த் தரப்பாரின் குடும்பங்களையும் பார்த்து ஆறுதல் கூறுவது கடமை என்று நினைத்தேன். என்னுடைய தோழர்கள் இதைக் கேட்டு முதலில் அச்சம் அடைந்தார்கள். “நீங்கள் அங்கே போனால் அவர்கள் கோபத்தில் பேசுவார்கள், வன்முறையில்கூட முடியலாம்” என்றார்கள். பிறகு நான் சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது என்று ஏற்றுக்கொண்டார்கள். அன்றைய தினம் கொல்லப்பட்ட பாஜக தொண்டர் சுபம் மிஸ்ராவின் வீடு லக்கிம்பூர் நகரின் மையப் பகுதியில் இருக்கிறது. அங்கே முதலில் சென்றோம்.
என்னைப் பார்த்தவுடனேயே அடையாளம் கண்டுகொண்டு, கண்களாலேயே என்னை வரவேற்றவரைப் பார்த்து, “நீங்கள் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவரா?” என்று கேட்டேன். வீட்டுக்கு வெளியில் நாற்காலியில் மற்றவர்களுடன் அவரும் அமர்ந்திருந்தார். “ஆமாம், நான்தான் சுபத்தின் தந்தை” என்றார். என்னைவிட வயதில் இளையவராக இருந்தார். ஒரு சில நிமிடங்கள், யார் என்ன பேசுவது என்ற தயக்கத்தால் அமைதியாகக் கழிந்தது. பிறகு இரு கரங்களையும் குவித்து, “மிகவும் சோகமான மரணம் இது” என்றேன்.
விவசாயிகளுக்காக நடந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியிலிருந்து நேராக வருகிறேன் என்பதை அவரிடம் கூறினேன். “எங்களைப் பார்க்க (விவசாயிகள் தரப்பிலிருந்து) முதலில் வந்திருப்பது நீங்கள்தான், வேறு யாரும் எங்களைப் பார்க்க வரவில்லை” என்றார் அவர். “பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் லக்கிம்பூர் கெரிக்கு வந்தார்கள், அவர்களைப் பார்த்துவிட்டுப் போய்விட்டார்கள். நாங்கள் எல்லாம் விவசாயிகள் இல்லையா? என்னிடமுள்ள நிலப்பத்திரங்களை வாங்கிப் பார்க்கிறீர்களா? இந்தக் கிராமத்தின் தலைவர் ஒரு சீக்கியர்தான். நாங்கள் என்ன அவர்களுடைய பகையாளிகளா? என்னுடைய மகன் செய்த குற்றம்தான் என்ன? இந்த ஊரில் என்னுடைய மகனைப் பற்றிக் கேட்டுப்பாருங்கள், அவருக்கு எதிராக யாராவது ஒரு வார்த்தை பேசினால் என்னிடம் வந்து சொல்லுங்கள்” என்றார்.
பிறகு மீண்டும் என் பக்கம் திரும்பிச் சொன்னார், “உங்களிடமிருந்து மேலும் நல்ல சமிக்ஞைகளை எதிர்பார்த்தேன். அன்றைக்கு எங்களுடைய மகன் உள்பட மற்றவர்களின் மரணம் குறித்துக் கேட்டதற்கு, விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத், ‘வினைக்கு அது எதிர்வினை’ என்றார். நீங்கள் அப்போது அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தீர்கள். அப்படிச் சொல்வது தவறு என்று அவரை நீங்கள் திருத்தியிருக்கலாம்” என்றார். “நான் சொன்னேன், ஆனால் அதை ஊடகங்கள் வெளியிடவில்லை” என்று பதில் அளித்தேன்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவருடன் இருந்தேன். தன்னுடைய மகன் அப்பாவி என்றும் வெளியூரைச் சேர்ந்த விவசாயிகள்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்றும் குற்றஞ்சாட்டினார். அது எதிர்பார்க்கக் கூடியதுதான். தன்னுடைய சட்டைப் பையிலிருந்து, காவல் துறைக்கு எழுதப்பட்ட புகார் கடிதத்தைக் காட்டினார். அதில் என்னுடைய நண்பர் தேஜீந்தர் சிங் விர்க் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அந்தக் குற்றச்சாட்டின் பெரும் பகுதி எனக்கு உடன்பாடானதல்ல என்பது வெளிப்படை.
சோகத்தில் ஆழ்ந்திருக்கும் தந்தையிடம் அந்தப் புகார்கள் சரியல்ல என்று அந்த நேரத்தில் வாதிடுவது இரக்கமற்ற செயல் மட்டுமல்ல, அர்த்தமற்றதும்கூட. இந்த நேரத்தில் அவர் விவசாயியா இல்லையா என்பது முக்கியம் இல்லை; அவர் பாதிக்கப்பட்டவர் என்பதே அவருக்கு ஆறுதல் கூறப் போதுமானது. அவருடைய மகனுக்கு இப்படிப்பட்ட மரணம் நேரிட்டிருக்க வேண்டாம் என்பதே என் கருத்து.
அந்த காரிலிருந்த சுபம் மிஸ்ராவும் மற்றவர்களும் சதிகாரர்களா, நல்லவர்களா என்று நமக்குத் தெரியாது. சுபம் அந்த வாகனத்தை ஓட்டவும் இல்லை, யாரையும் துப்பாக்கியால் சுடவும் இல்லை என்பது மட்டும் தெரியும். உண்மையான குற்றவாளிகள் செயலைச் செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்கள், ஆத்திரக்காரக் கும்பலிடம் சுபம் சிக்கிக்கொண்டார். ‘உடனிருந்ததால் வரும் ஆபத்து’ என்று இதைக் கூறுவார்கள். உடன் இருந்ததால் சுபம் மிஸ்ராவின் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பு எப்படிப்பட்டது என்று அந்த வீட்டுக்குள் பார்த்தபோது தெரிந்தது. நான்கு தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபட முயற்சித்தார்கள். சுபம் மிஸ்ராவின் பாட்டி, அம்மா, ஊமையாகிவிட்ட அவருடைய மனைவி, நடந்தது எதுவுமே தெரியாத அந்த ஒரு வயதுப் பெண் குழந்தை.
சோகத்தைவிட கட்சி விசுவாசம் பெரிது
பாஜக தொண்டரின் வீட்டுக்குச் சென்றதால் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் குற்றம் பற்றிய என்னுடைய கண்ணோட்டம் நீர்த்துவிட்டதா? ஒரு இம்மியளவும் குறைந்துவிடவில்லை. நடந்த சம்பவத்தை மூடி மறைக்க மத்திய அரசும் உத்தர பிரதேச அரசும் நடத்திய நாடகங்களால் ஏற்பட்ட கோபம் தணிந்துவிட்டதா? நிச்சயம் இல்லை. இப்படிப்பட்ட தருணங்களில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், யாருக்காக அனுதாபப்பட வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியதா? ஆமாம். அதை நான் என்னுடைய சுட்டுரையிலும் (ட்விட்டர்) கோடிட்டுக் காட்டியிருந்தேன். அதை வரவேற்று சிலரும், கண்டித்துப் பலரும் பதிவிட்டார்கள்.
பலர் என்னை நம்ப மறுத்தார்கள்; சந்தேகப்பட்டார்கள். “விவசாயிகள் இயக்கத்தில் நீங்கள் யார் பக்கம் நிற்கிறீர்கள்?” என்றே பலர் கேட்டனர். அரசியல் அல்லது இயக்கம் சார்ந்த நிகழ்வுகளில் இப்படியொரு நிலையை நான் சந்திப்பது இது முதல் முறை கிடையாது.
2016-ல் இட ஒதுக்கீடு கோரி ஜாட் இன மக்கள் போராட்டம் நடத்தியபோது பெருமளவில் நடந்த கலவரம், தீயிடலுக்குப் பிறகு ஜஜ்ஜார் என்ற ஊருக்குச் சென்றிருந்தேன். எங்களுடைய குழுவினர் மட்டும்தான், பாதிக்கப்பட்ட இரு தரப்பு மக்களையும் சந்தித்தனர். போராட்டக்காரர்கள் வன்முறையை அவிழ்த்துவிட்ட சைனி மொஹல்லாவுக்கும் சென்றோம், போராட்டத்தை எதிர்ப்பவர்கள் சேதப்படுத்திய சர் சோட்டுராம் தர்மசாலா பகுதிக்கும் சென்றோம். அங்கே சோட்டுராமின் சிலைக்கு அவமதிப்பையும் செய்திருந்தார்கள். அன்றைய தினம் இரண்டு ஹரியாணா அமைச்சர்களும் வந்தார்கள், அவரவர் சாதியில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துவிட்டு எதிர்த் தரப்பைப் பார்க்காமலேயே திரும்பினர்.
இப்படி கட்சி சார்ந்து செயல்படுவது நம்முடைய சித்தாந்தங்களிலேயே ஊறியிருக்கிறது. அசாமில் நடக்கும் குடியுரிமைப் பிரச்சினை இதற்கு நல்ல உதாரணம். நம்முடைய சுதந்திரச் சிந்தனையாளர்கள், மதச்சார்பற்ற முற்போக்காளர்கள், புலம்பெயர்ந்த வங்காளிகளை - பெரும்பாலும் முஸ்லிம்கள் - மட்டும் பாதிக்கப்பட்டவர்களாக எப்போதும் சித்தரிக்கின்றனர். அவர்கள் அப்படிச் செய்வது சரியாகக்கூட இருக்கலாம். தங்களுடைய சொந்த நிலத்திலேயே அனாதரவாக விடப்பட்டதாக நினைக்கும் அஹோம்கள் - பெரும்பாலும் இந்துக்கள் - பார்க்கப்படாமலேயே அவர்களால் புறக்கணிக்கப்படுகின்றனர்.
கிராமப்புறங்களில் நிலமற்ற விவசாயிகள்தான் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் என்று கருதுகின்றனர். இதுவும் தவறான கண்ணோட்டம். இதனால் விவசாயத் துறையில் அமைப்புரீதியாக நடக்கும் சுரண்டல்களைப் பார்க்க அவர்கள் தவறுகின்றனர். சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்களை எல்லாம் ‘குலக்குகள்’ (பண்ணையார்கள்) என்று பொதுமைப்படுத்தி, அவர்களை வர்க்க எதிரிகளாக அடையாளப்படுத்துகின்றனர். பாதிக்கப்பட்டவர்களிலேயே ஒரு தரப்பை, இன்னொரு தரப்புக்கு எதிராக நிறுத்தும் நிலை இது.
பாதிக்கப்பட்டவர்களை, நம்மவர்கள் - அவர்களுடையவர்கள், உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் - போலியாக பாதிக்கப்பட்டவர்கள் என்று வகைப்படுத்திக் கொள்கிறோம். நம்முடைய பொதுவாழ்வில் ஆழமாக வேரூன்றிவிட்ட தீமையான அணுகுமுறை இது.
கடினமான உண்மைகளும் தார்மிகச் சிக்கல்களும்
பாதிக்கப்பட்டவர்களில் நம்முடையவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதில் பல நன்மைகள் இருக்கின்றன. நம்முடைய வாழ்க்கை அதற்குப் பிறகு எளிதாகிவிடுகிறது. நம்முடைய அமைப்பு சார்ந்து, சாதி சார்ந்து, தொழில் சார்ந்து - பாதிக்கப்பட்டவர்களை இனம் காண்பது எளிதான உத்தி. இதற்குப் பிறகு நாம் பாதிப்பு தொடர்பில் அதிகம் சிந்திக்க வேண்டாம். ஒரு பக்கத்திலிருந்து பார்த்து சொல்லிவிடக் கூடிய உண்மைகள் தயாராக அணிவகுத்துவிடும். தார்மிகரீதியில் குழப்பம் ஏதும் வராது. எது சரி - எது தப்பு என்பது கறுப்பு வெள்ளையாக பிரித்து அலசப்பட்டுவிடும். அத்துடன் அரசியலில் எதிரி யார் என்பது தெளிவாக அடையாளம் காண்பது உத்திகளை வகுத்துச் செயல்பட உதவிகரமாக இருக்கும். ஆதரவாளர்களுக்குத் தெளிவான கட்டளைகளைப் பிறப்பிக்கலாம், போராட்டத்துக்குத் தேவைப்படும் ஆற்றலை சேமிக்கலாம், மக்களை அணி திரட்டலாம். தலைவர்கள் ஒரு நிலையை எடுத்து அறிவித்துவிட்டால், தொண்டர்கள் அதைப் பற்றி குழம்பத் தேவையில்லை, அவர்களுடைய மூளைக்கும் இதயத்துக்கும் ஓய்வு கொடுத்துவிடலாம்.
பிரச்சினை என்னவென்றால் இப்படி ஒரு தரப்பாகச் சிந்திப்பதும் செயல்படுவதும் குருட்டு அரசியலுக்கே நம்மை இட்டுச் செல்லும். சில நேரங்களுக்கு இது நன்றாகச் செயல்படும், வெற்றிகளைக்கூடத் தரும், இறுதியில் நம்மை மீள முடியாத பிரச்சினைகளில் ஆழ்த்திவிடும். நெருடலான உண்மைகளைப் பற்றிப் பேசாமல் ஜமுக்காளத்துக்கு அடியில் பெருக்கித் தள்ளி மூடப் பழகினால், உங்களுக்கு அடுத்து வருகிறவர்கள் அடுத்த கட்டத்துக்குப் போய் ஜமக்காளமே இல்லாமலாக்கிவிடுவார்கள். உங்களுக்கு வசதியாக கறுப்பு - வெள்ளையாக தார்மிக கட்டமைப்புகளை உருவாக்கினால், அவற்றை எந்த நேரத்திலும் மற்றவர்களால் அப்படியே புரட்டிப்போடவும் முடியும். எதிரிகளை அடையாளம் காண அரசியலைப் பயன்படுத்தினால், வேறு சிலர் புதிய எதிரிகளை அடையாளம் காண அதையே பயன்படுத்துவார்கள்.
பதில் சொல்வதற்கு கடினமான உண்மைகளுக்கும் தார்மிகச் சிக்கல்களுக்கும் எதிராக நாம் எப்படி இனி கூட்டாக செயல்திட்டம் வகுக்கப் போகிறோம்? இந்தக் கேள்வியுடன்தான் லக்கிம்பூரிலிருந்து திரும்பினேன்.
தமிழில்: வ.ரங்காசாரி
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
Abdul azeez 3 years ago
மனிதர்களின் வேதனைகளையும் வலி களையும் தேடி சென்று ஆறுதல் சொல்லிய மனதுக்கு நன்றிகள்
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
சே.நா. விசயராகவன், காரைக்குடி 3 years ago
யோகேந்திர யாதவின் கட்டுரையைத் தமிழில் படித்தேன். திகைத்துப் போனேன். திணறடிப் பட்டேன். எல்லோருக்கும் உயிர் ஒக்கும் என்ற அறநீதியை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார். கட்டுரை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். ஊடகங்கள் மூடி மறைத்துத் தவிர்த்துவிட்டபோதும், வெளிச்சமிட்ட அருஞ்சொல்லுக்கு நன்றி. உலக நாகரிகம் கைக்குக் கை, பல்லுக்குப் பல் என்ற மோசஸின் சிந்தனையிலிருந்து, இயேசுவின் "இன்னொரு கன்னத்தைக் காட்டு" என்ற நாகரிகத்துக்கு மேம்பட்டது. "அறிவினான் ஆவது உண்டோ பிறிதின்நோய் தன்நோய்போல் போற்றாக் கடை." "கருத்தின்னா செய்தவர்கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றோர் கோன்" - வள்ளுவர் கற்பித்த நாகரிகம். தலைவர் ராகேசு திகைத்திற்கு இவற்றைக் கற்பித்தோர் யாருமில்லை போலும். நாடு முழுமைக்கும் அன்பின் பெருமையை நாகரிகத்தைக் கற்பிக்க காந்தியா மீண்டும் வருவார்?
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.