கட்டுரை, ஆளுமைகள் 9 நிமிட வாசிப்பு

அறிந்துகொள்ள வேண்டிய ஆளுமை: சச்சிதானந்த சின்ஹா

யோகேந்திர யாதவ்
09 Nov 2021, 5:00 am
1

ச்சிதானந்த சின்ஹாவைப் பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  நிச்சயம் இருக்காது என்று பந்தயம் கட்டுகிறேன். அப்படிக் கேள்விப்பட்டிருந்தால், அது அவருடைய பெயரைக் கொண்ட இன்னொருவராக இருக்கலாம்; அதாவது, இந்திய அரசமைப்பு நிர்ணய சபையில் இடம்பெற்றவராக இருக்கலாம்; அல்லது ஜெயப்பிரகாஷ் நாராயணின் உதவியாளராக இருந்தவராக இருக்கலாம்; அல்லது கல்வியாளராக இருக்கலாம்; நான் அறிமுகப்படுத்த விரும்பும் சச்சிதானந்தராக இருக்கவே முடியாது.

கூகுளில் தேடினால்கூட அவரைப் பற்றி ஒரு வரித் தகவல் மட்டுமே கிடைக்கலாம், அதுவும் அவர் எழுதிய புத்தகங்களைப் பட்டியலிட்டு, அமேசானில் தொடர்புகொள்ள வேண்டிய முகவரியுடன் இருக்கும். நீங்கள் கட்டாயம் சச்சிதானந்த சின்ஹாவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். இப்போது அவருக்கு வயது 93.

இரு நூற்றாண்டுகளுக்கான பாலம்

இரண்டு நூற்றாண்டுகளுக்கு சச்சிதானந்த சின்ஹா பாலமாக இருக்கிறார். இருபதாவது நூற்றாண்டின் சித்தாந்த விவாதங்களை, நம்முடைய காலத்துக்குக் கொண்டுவந்து தருகிறவர் அவர். கடந்த ஐம்பதாண்டுகளில் இரண்டு டஜன்களுக்கும் மேல் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

ஆங்கிலத்தில் பனிரெண்டும், இந்தியில் அதைவிட அதிகமாகவும் இருக்கும். அவருடைய படைப்புகளின் எல்லை, நடப்பு அரசியலிலிருந்து அழகியல் கலைகள் வரை தொடர்கிறது. பிஹாரின் வளர்ச்சியின்மையை விளக்குவதிலிருந்து, வர்ணாசிரமத்தின் ஆணி வேரைக் கண்டுபிடிப்பது வரை நீள்கிறது. நக்ஸலைட் இயக்கத்தின் சித்தாந்த அடிப்படைகளை விமர்சிப்பதில் தொடங்கி, சமத்துவக் கொள்கையை நம்முடைய தலைமுறைக்குத் தனி அறிக்கையாக எழுதித்தர வைக்கிறது. அவருடைய படைப்புகளிலிருந்து சிறந்தவற்றைத் தொகுத்து, எட்டு தொகுதிகளாக இந்தியில் கடந்த மாதம் வெளியிட்ட நிகழ்ச்சியானது, அவரை நினைவுபடுத்திக்கொள்ளவும் மறுவாசிப்புக்கு உள்படுத்தவும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.

உங்களுடைய தவறே அல்ல

சச்சிதானந்த சின்ஹாவை உங்களுக்குத் தெரியாது என்றால், அது உங்களுடைய தவறே அல்ல. சச்சிதானந்த சின்ஹா மிகப் பெரிய கல்வித் தகுதிகள் பெற்றவரல்ல - ஏன் – அவர் பட்டதாரிகூட இல்லை. அவர் எந்தக் கல்விக்கூடத்திலும் பணியாற்றியதும் இல்லை. அவருடைய வாழ்நாள் முழுவதும் அரசியல் தொண்டராகவே வாழ்ந்திருக்கிறார்.

சோஷலிஸ்ட் கட்சியிலும், பிறகு சமதா சங்கதான் அமைப்பிலும், அடுத்து சமாஜ்வாதி ஜன பரிஷத்திலும் இருந்தார். படிப்பதையும் எழுதுவதையுமே தனது அரசியல் செயல்பாடாக வைத்துக்கொண்டார்.

எப்படி பெரிய அரசியல் கட்சிகளிடமிருந்தும் சித்தாந்த கட்டுப்பெட்டிகளிடமிருந்தும் விலகியிருந்தாரோ, அப்படியே மிகப் பெரிய புத்தகப் பதிப்பாளர்களிடமிருந்தும் விலகியிருந்தார். தன்னையே கரைத்துக்கொள்ளும் விதமாக, கடந்த 35 ஆண்டுகளை பிஹார் கிராமம் ஒன்றில், சிறிய குடிலில் தங்கியிருக்கிறார். அவருடைய எழுத்து நடையும் அவருடைய வாழ்க்கையைப் போலவே எளிமையானது.

மண்டையை உடைக்கும் சொல் பிரயோகங்களையோ, நவீனமான மொழி நடையையோ, பளிச்சென்று மனதில் பதியும் வண்ணம் மின்னல் வாக்கியங்களையோ, அதிர்ச்சி தரும் ஒரு வரி சொற்கோவைகளையோ, தனக்கென்று தனிப் பாணி எழுத்து வகையையோ கொண்டிருக்க மாட்டார். அவருடைய பணிகளுக்காக தர முன்வந்த விருதுகளை வாங்க மறுத்துவிட்டார். ஒருவருடைய சிந்தனைகளை அவருடைய புறத்தோற்றத்தைக் கொண்டே அளவிடும் உலகில், எல்லோராலும் மறக்கப்படுவதையும் கண்ணில் படாமல் ஒதுங்கியிருப்பதையுமே விரும்பினார்.

சச்சிதானந்தரிடம் கற்றவை

சச்சிதானந்த சின்ஹாவைப் பார்த்ததே என்னுடைய அதிருஷ்டம்தான். அது 1981. தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மதிய உணவுக்குப் பிறகு, சமதா யுவஜன் சபா (எஸ்ஒய்எஸ்) ஏற்பாடுசெய்திருந்த நிகழ்ச்சியில்தான் அவரைச் சந்தித்தேன். எஸ்ஒய்எஸ் என்பது காந்திய சோஷலிசத்தைப் பயிற்றுவிக்கும் இளைஞர் அமைப்பாகும், அதில் உறுப்பினராக இருந்தேன். தர்க்கரீதியிலான சிந்தனை - எந்தவித வார்த்தை அலங்காரங்களும் இல்லாமல் பேச முடிந்த ஞானம் அவருடையது - என்னுடைய தந்தையாரைப் போலவே.

அடுத்த பத்தாண்டுகள் அவர் நடத்திய பல்வேறு பயிற்சி வட்டங்களிலும் முகாம்களிலும் கலந்துகொண்டேன். அப்போது நடந்துகொண்டிருந்த அரசியல் நிகழ்ச்சிகள் முதல் சித்தாந்த – மெய்யியல் விவாதங்கள் வரை பலவற்றையும் அவர் சமதா சங்கதானைச் சேர்ந்த எங்களுக்கு விளக்கிவந்தார். அவரிடமிருந்து (கிஷன் பட்டநாயக், அசோக் சேக்சாரியாவிடமிருந்தும்) பலவற்றைக் கற்றுக்கொண்டது எனக்குக் கிடைத்த பெரிய பேறாகும் – அதற்கான தகுதிகள் போதிய அளவில் என்னிடம் இல்லாதபோதும்.

துறவி போன்ற வாழ்க்கை

புதுதில்லியில் சாகேத் என்ற பகுதியில், அவர் வசித்த ஒற்றை அறை குடியிருப்புக்கு போனது நினைவில் இருக்கிறது. ஒரு அறைதான் என்றாலும், அவர் வைத்திருந்த உடைமைகளுக்கு அதுவே பெரிது என்று தோன்ற வைத்தது. ஓர் ஆள் படுப்பதற்கான சிறிய கட்டில், எழுதுவதற்கு ஒரு மேஜை, சமைத்துச் சாப்பிட ஒரு கெரசின் ஸ்டவ் இவ்வளவுதான் அங்கிருந்தன. அப்போதும் இப்போதும் துறவியைப் போலத்தான் வாழ்கிறார் சச்சிதானந்த சின்ஹா.

சித்தாந்த கட்டுப்பெட்டிகளின் வரையறைகள் என்னவாக இருந்தாலும், கல்விப்புலத்தில் புதிய மோஸ்தர்கள் சிந்தனைகளை எப்படி வடிவமைத்தாலும், அவருக்கிருந்த ஒருமுகமான சிந்தனை இருபதாவது நூற்றாண்டில் நிலவிய சித்தாந்த சச்சரவுகளால் நிலைகுலையாமல் தெள்ளிய நீரோடை போல வெளிப்பட்டுக்கொண்டே வந்தது.

சச்சிதானந்த சின்ஹாவின் சோஷலிஸம் ஒரு புனித நூலோடு, ஒரு தலைவரோடு பிணைத்துக் கட்டப்பட்டதல்ல. ஜெயப்பிரகாஷ் நாராயண், ஆச்சார்ய நரேந்திர தேவா, ராம் மனோகர் லோஹியா போன்றவர்களிடமிருந்த இந்திய பாணி சோஷலிஸ சிந்தனை மரபில் வந்தவர் என்பது அவருக்குப் பெரிதும் கைகொடுத்தது.

சோஷலிஸம் பற்றிய பழமைவாத சிந்தனைகளை, அவர் தனது முதல் பெரிய புத்தகமான ‘சோஷலிஸமும் அதிகாரமும்’ என்ற நூலில் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்குகிறார். அவருடைய சமகால சோஷலிஸ்ட்டுகளைவிட கார்ல் மார்க்ஸின் சிந்தனைகளுக்கு அவர் அதிக மரியாதை தந்திருக்கிறார். அதே வேளையில், நாட்டின் வளர்ச்சிக்காக, மார்க்ஸும் மார்க்ஸியர்களும் கனரகத் தொழில் துறையிலும், பெருநகரங்களிலும், மூலதனம் அதிகம் தேவைப்படும் தொழில்நுட்பத்திலும் வைக்கும் நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கிறார்.

இவையெல்லாம் புரட்சிக்கான கூறுகள் அல்ல; அரசியல், பொருளாதார வலிமை ஓரிடத்தில் குவிவதற்கான ஏற்பாடுகள் என்கிறார். அதனால்தான் சோவியத் ரஷ்யா உடைந்து நொறுங்கி, சிறுசிறு நாடுகளாகச் சிதறிவிட்டது, சீனத்தில் அரசே முன்னெடுக்கும் அரச முதலாளித்துவம் தலைதூக்கியது என்கிறார் சச்சிதானந்த சின்ஹா.

அவருடைய தன்னிகரற்ற பார்வை, அரசியல் சித்தாந்தங்களையும் தாண்டிச் சென்றது. ‘சாதிய அடுக்குமுறை: புனைவும் யதார்த்தமும்’ என்கிற அவருடைய புத்தகத்தில் பிறப்பு அடிப்படையிலான சாதி எப்போதும் மாறாதது என்று சுவடிகள் அடிப்படையில் தொடர்ந்து கற்பிக்கப்பட்டுவந்த தர்ம சாத்திரங்களுக்கு எதிர்வாதம் புரிந்தார். பொருளாதார வளம் குறித்தும் பிஹார் போன்ற மாநிலங்களின் பின்தங்கிய நிலைமை குறித்தும் அதுவரை கூறப்பட்டு வந்த விளக்கங்களை தன்னுடைய ‘உள்நாட்டு காலனி’ என்ற புத்தகத்தில் சிறப்பாக விவாதித்திருக்கிறார்.

பிஹாரில் அப்போது ஜார்க்கண்ட் பகுதியும் சேர்ந்திருந்தது. உள்நாட்டு காலனியான பிஹாரிலிருந்து இயற்கை வளங்களைச் சுரண்டும் முதலாளித்துவ பாணி உற்பத்தி முறையால்தான், பிஹார் வளர முடியாமல் பின்தங்கியது என்பதை விளக்குகிறார். நாடு முழுவதையும் காங்கிரஸ் மட்டுமே ஏகபோகமாக ஆண்ட காலத்தில், இரட்டைக் கட்சி முறை நமக்குத் தேவையில்லை என்று பலரும் வாதிட்டபோது, இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் பல கட்சிகளைக் கொண்ட, அதிகாரப் பகிர்வுக்கு இடம் தரும் கூட்டணியாட்சி முறையே வளர்ச்சிக்கு நல்லது என்று வாதாடினார்.

பெரும்பாலான அரசியல் சிந்தனையாளர்கள் கருதியதைப் போல கலையை பிரச்சாரத்துக்கான கருவியாக அவர் பார்க்கவில்லை. மனிதர்கள் வன்முறையாளர்களாக மாறிவிடாமலிருக்க கலைதான் உற்ற வடிகால் என்று அழகியல் குறித்து எழுதிய கட்டுரைகளில் வலியுறுத்தியிருக்கிறார்.

இந்திய அறிவுலகின் தோல்வி

கல்விப்புல நிபுணர்களின் சிந்தனைகள் ஆதிக்கம் செலுத்தும் உலகில், சுயநலநோக்கில் எழுதுபவராகவும், எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைக்கும் கற்றுக்குட்டியாகவும்தான் சச்சிதானந்தர் பார்க்கப்படுவார். பிரச்சினை அவரிடமல்ல, நம்மிடம்தான். பத்தொன்பதாவது நூற்றாண்டில் தொடங்கி கடந்த 150 ஆண்டுகளில் தோன்றிய நவீன இந்திய சமூக, அரசியல் சிந்தனையாளர்களின் கடைசி அணியில் உயிரோடு இருப்பவர் அவர். அவர் காலத்தில் பொங்கிப் பிரவாகித்த அறிவுலகச் சிந்தனைகளும் சர்ச்சைகளும்தான் இந்திய குடியரசுக்கான அடித்தளங்களாகின.

ஐரோப்பாவில் உருவானதைப் போல சமூக – அரசியல் சிந்தனைகள் இந்தியப் பல்கலைக்கழகங்களிலோ, கல்விக்கூடங்களிலோ உருவாகவில்லை. நம்முடைய சிந்தனையாளர்கள் களத்தில் அவற்றைப் பயன்படுத்திப் பார்த்தவர்கள், அவர்களே சமூக, அரசியல் தொண்டர்கள். அவர்களே மிகப் பெரிய கேள்விகளைக் கேட்டு மிகவும் துணிச்சலான பதில்களைக் கூறியவர்கள். நம்முடைய பின்னணியிலேயே வேர்கொண்டு, நவீன உலகத்தின் பிரச்சினைகளுக்கு, தாங்கள் நிர்ணயித்த வரம்புகளுக்குள்ளேயே நம்முடைய மொழியிலேயே தீர்வுகளையும் சொன்னவர்கள்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, இந்த மரபு திடீரென்று மரணித்துவிட்டது. சமூக, அரசியல் சித்தாந்தங்களுக்கு வடிவம் தரும் வேலையை சமூக அறிவியல், மானுடவியல் துறை நிபுணர்கள் ஏற்றனர். அவர்கள் மேற்கத்திய நாடுகளில் உள்ள தங்களைப் போன்ற நிபுணர்களுடன் இணைந்து இப்பணியைச் செய்துவிடலாம் என்று நம்பிக்கை கொண்டனர். இந்த மாற்றம்தான் இந்தியாவுக்கு பெரிய தோல்விகளைத் தந்தது.

நமக்கான அரசியலையும் கொள்கைகளையும் வடிவமைக்க முடியாமல் போனது.  இந்திய அரசியல், சமூக சிந்தனை மரபில்வந்த, ராம் மனோகர் லோகியா 1967-ல் மறைந்த பிறகு கல்வித் துறைக்கு அப்பால் ஓர் அறிஞரை நம்மால் அடையாளம் காட்ட முடியாமல் போய்விட்டது. இந்த வகையில் கிஷன் பட்நாயக், தரம்பால், ஆர்.பி. சராஃப் – ஆம், சச்சிதானந்த சின்ஹா ஆகியோரைத்தான் என்னால் சிந்திக்க முடிகிறது.

நமக்கான குடியரசை நாம் மீட்க வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நினைவூட்டுகிறார் சச்சிதானந்த சின்ஹா!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி







பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

கூட்டணி அரசுதான் சிறந்தது என்பதை , நான் 3-4 வருடங்களாக பல தளங்களில் எழுதியுள்ளேன். மேலும் கடந்த 30-35 வருடங்களில் கூட்டணி அரசுகள் ஆட்சியிலிருந்த காலத்திலேயே , நாடு முன்னேறிய விகிதம் சற்று அதிகமாகவே இருந்தது.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

அடிமைத்தனம்காந்தி எழுத்துகள் தொகுப்புஇந்திரா நூயி அருஞ்சொல்பஞ்சவர்ணம்இமையம் சமஸ்ஜின்னாநர்வாவெறுப்பு அரசியல்வளரிளம் பருவம்தொன்மக் கதைஅஜித் சிங்பிரணாய் ராய்பிரிவு 348(2)உயிர்மை நேயமே நம் சிந்தனை மரபுவருடங்கள்பொதுச் செயலாளர்நினைவேற்றல்பார்டர் அண்ட் பௌண்டரீஸ்நகரமைப்பு முறைதி அதர் சைட் ஆஃப் சைலன்ஸ்காலம் மாறுகிறதுஎன்ஐஏவிலைவாசிசாருவுக்கு விஷ்ணுபுரம் விருதுசத்தியமங்கலம் திருமூர்த்தி: முன்னோடி இயற்கை உழவர்கல்கிசட்டப்பூர்வ உரிமைநிதி பற்றாக்குறைதிராவிட இயக்க இதழ்கள் புறக்கணிக்கப்பட்டனவா?அந்தமான் சிறை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!