உற்றுநோக்க ஒரு செய்தி, உரைகள் 5 நிமிட வாசிப்பு

உங்களை எச்சரிக்க வந்திருக்கிறேன் - உமர் அப்துல்லா உரை

02 Mar 2022, 5:00 am
1

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ஆற்றிய உரையை முக்கியத்துவம் கருதி, ‘அருஞ்சொல்’ தன் வாசகர்களுக்கு இங்கே தருகிறது.

 

னாப் எம்.கே.ஸ்டாலின் ஜி, ஜனாப். விஜயன் ஜி, ஜனாப். ராகுல் காந்தி ஜி, ஜனாப். தேஜஸ்வி யாதவ் ஜி, ஜனாப். டி.ஆர்.பாலு ஜி, ஜனாப். துரைமுருகன் ஜி, கனிமொழி கருணாநிதி மற்றும் இங்கு கூடியிருக்கும் மக்கள் அனைவருக்கும் என் வணக்கம்.

கடுங்குளிர் பிரதேசமான காஷ்மீரிலிருந்து, தட்பவெப்பநிலையிலும் அன்பிலும் வரவேற்பிலும் கதகதப்புமிக்க சென்னைக்குக்கு இன்று வருகை தந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஸ்ரீநகரில் கடந்த இரு தினங்களாக தட்பவெப்பநிலை மைனஸ் 2 டிகிரி செல்சியஸாக இருந்தது. இன்று நான் சென்னையை வந்தபோது இங்கு தட்பவெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ். இப்போது என்னுடைய உணர்வை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். தட்பவெப்பநிலையைத் தாண்டி நான் இன்று இங்கு வந்திருப்பதற்குக் காரணம், உங்கள் அன்பும், குறிப்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அன்பும்தான்.

முதலில் நான் அவருடைய ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களில் ஒருவராக, நம்மில் ஒருவராக, தமிழ்நாட்டு மக்களில் ஒருவராக இருக்கும் ஒருவர் எழுதிய இந்தப் புத்தகத்துக்கு ‘உங்களில் ஒருவன்’ என்பது மிகவும் பொருத்தமான தலைப்புதான். புகழின் காரணமாகவோ, குடும்ப பாரம்பரியத்தின் காரணமாகவோ ஸ்டாலின் இந்த இடத்தை அடையவில்லை. கடின உழைப்பின் வழியாக, செயல்பாடுகளின் வழியாக இந்த இடத்துக்கு வந்தவர் அவர்.

ஸ்டாலின் ஜி, நீங்கள் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக எங்களில் ஒருவராக ஆகிவிடவில்லை. உங்கள் குடும்பம் உங்களுக்கான கதவைத் திறந்துவிட்டது. ஆனால், அது எப்போதும் திறந்திருக்கவில்லை. எங்களில் ஒருவராக, மக்களில் ஒருவராக நீங்கள் கருதப்படுவதற்குக் காரணம், மக்கள் தங்களை உங்களோடு அடையாளப்படுத்திக் கொண்டார்கள் என்பதுனால்தான். அது நீங்கள் செய்வதற்றுக்கு, உங்கள் போராட்டங்களுக்கு மக்கள் அளித்த பரிசு.

இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கும் மொழி எனக்குப் புரியாத ஒன்று. புத்தகத்தின் சில பகுதிகள் எனக்கு விளக்கப்பட்டன. 13 வயதிலேயே ஸ்டாலின் ஜி அரசியல் பயணம் தொடங்கியுள்ளது. நானும் தேஜஸ்வி ஜியும்தான்  இளம்வயதிலே அரசியலுக்கு வந்தவர்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால், ஸ்டாலின் ஜி 13 வயதிலேயே அரசியலுக்கு வந்தவர் என்பதை இந்தப் புத்தகம் மூலம் தெரிந்துகொண்டேன். அடிமட்டத்திலிருந்து அவரது பயணம் தொடங்கியிருக்கிறது.

நியாயமற்ற முறையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அது அவருடைய ஆளுமையை உருவாக்கத்தில் பங்காற்றியுள்ளது. சமூக நீதி சார்ந்த அவரது பயணத்துக்கும், தமிழ்நாட்டு மக்களின் மேம்பாடு சார்ந்த அவரது நோக்கத்திலும், மாநிலத்தின் மூலைமுடுக்களுக்கும் வளர்ச்சி சென்றடைவதற்கும் அது பங்காற்றியுள்ளது. அவற்றின் விளைவுதான் திமுக உள்ளாட்சி தேர்தலில் பெற்றிருக்கும் வெற்றி. சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக மிகப் பெரிய வெற்றியை ஈட்டியிருக்கிறது. இந்தச் செய்தியை ஜம்மு காஷ்மீரில் உள்ள நாங்கள் படிக்கிறோம். வழக்கமாக, உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு இத்தகைய வெற்றி கிடைத்ததில்லை. ஆனால், முதல் தடவை உள்ளாட்சித் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. காரணம், திமுகவின் செயல்பாடுகளை, அது மக்களின் மேம்பாட்டுக்கு மேற்கொள்ளும் முயற்சிகளை மக்கள் பார்க்கிறார்கள். அதனால்தான், ஸ்டாலின் தன்னுடைய புத்தகத்துக்கு ‘உங்களில் ஒருவன்’ என்று தலைப்பிட்டுள்ளார் என்று நினைக்கிறேன்.

உண்மையில், அது மிகைப்படுத்தப்பட்ட தலைப்பு இல்லை. தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வாக்குகள் மூலம், நீங்கள் அவர்களில் ஒருவர், எங்களில் ஒருவர், மக்களில் ஒருவர் என்பதை உணர்த்தியிருக்கின்றனர்.

நீண்ட அரசியல் வரலாறு கொண்ட தலைவர் நீங்கள். எனவே, இந்த ஒரு புத்தகத்தோடு முடித்துவிடாமல், தொடர்ச்சியாக பல புத்தகங்கள் எழுதுவார் என்று நம்புகிறேன்.

நான் இன்று இங்கு வந்தற்கான மற்றொரு காரணம்.

இன்னல்கள் ஏற்படும்போதுதான் நம் நண்பர்களை அடையாளம் காண்கிறோம். ஒருபோதும் கற்பனை செய்திராத இன்னலான காலகட்டத்தை நான், என்னுடைய தந்தை உட்பட ஜம்மு காஷ்மீர் மக்கள் அனைவரும் எதிர்கொண்டோம். 2019, 5 ஆகஸ்ட்  அன்று காஷ்மீருக்கு நடந்த விஷயத்தை நாங்கள் ஒருபோதும் கற்பனைசெய்ததுகூட கிடையாது. அப்போதுதான் எங்கள் நண்பர்கள் யார் என்பதை நாங்கள் அடையாளம் கண்டோம். அதுவரையில் எங்களுடைய நண்பர்களாக நாங்கள் நினைத்திருந்தவர்கள், அமைதியாக இருந்தார்கள். 

ஜம்மு காஷ்மீருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தவர்கள் அமைதி காத்தார்கள். தனிப்பட்ட முறையில் நெருக்கமான உறவில் இருந்த பலரும், அமைதி காத்தார்கள். அமைதி காத்தது மட்டுமில்லை, அவர்கள் ஐம்மு –காஷ்மீருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஆதரவு அளித்தார்கள். ஆனால், ஜாம்மு-காஷ்மீரிலிருந்து பெருந்தொலைவில் உள்ள தமிழ்நாட்டில் ஸ்டாலினும், அவரது கட்சியைச் சார்ந்தவர்களும், தமிழ்நாட்டு மக்களும் காஷ்மீருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தனர். நாங்கள் சிறைவைக்கப்பட்டதை, ஐம்மு காஷ்மீரில் அரசமைப்புச் சட்டம் மீறப்பட்டதை அவர்கள் கண்டித்தார்கள். அந்த ஆதரவை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். அதன் காரணமாகவும்தான் இன்று நான் இங்கு வந்திருக்கிறேன். உங்கள் ஆதரவுக்கு தனிப்பட்டரீதியிலாக, என்னுடைய தந்தை சார்பாக மட்டுமல்ல, ஜம்மு காஷ்மீர் மக்கள் சார்பாகவும் ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன்.

நாங்கள் நெடுந்தொலைவில் உள்ள மிகச் சிறிய பிராந்தியம். நாங்கள் மிகச் சிறிய அரசியல் கட்சி. ஆனால், உங்களுக்கு எங்கள் உதவி தேவைப்படும் சமயங்களில், உங்களுக்கு நாங்கள் குரல் கொடுக்க வேண்டிய சமயங்களில், உங்களுக்கு எங்கள் ஆதரவு தேவைப்படும் சமயங்களில் நாங்கள் உங்களோடு தோளோடு தோள் நிற்போம்.

நாம் தற்போது முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். இந்தியா எனும் கருத்து பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நாம் விரும்புவதைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை, சுதந்திரம் இனி நமக்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. மதத்தைப் பின்பற்றுவதா, வேண்டாமா என்று முடிவுசெய்யும் சுதந்திரம் இனி நம்மிடம் இல்லை. மதத்தைப் பின்பற்றுவதாக இருந்தால் எவ்வளவு அளவுக்குப் பின்பற்றுவது என்று இன்று நமக்குச் சொல்லப்பட்டுகிறது.

நான் விரும்புவதைத் தேர்வுசெய்வது என்னுடைய உரிமை. என்னுடைய சுதந்திரம். ஒரு இந்துவாக நான் காவி அணிவதா, வேண்டாமா, திலகமிடலாமா, வேண்டாமா என்பதை நான் முடிவுசெய்வதாக இருக்க வேண்டும். அது என்னுடைய உரிமை என்று நம்புகிறேன். ஒரு சீக்கியராக நான் தலைப்பாகை அணிவதா, வேண்டாமா என்பது என்னுடைய உரிமை என்று நம்புகிறேன். ஒரு முஸ்லீமாக நான் தாடி வைப்பதா, வேண்டாமா, தொப்பி அணிவதா, வேண்டாமா, புர்கா அணிவதா, வேண்டாமா, ஹிஜாப் அணிவதா, வேண்டாமா என்பதைத் தேர்வுசெய்வது என்னுடைய உரிமை. அது எனக்கும் என் கடவுளுக்கும் இடையிலான விஷயம். இன்று நாம் இந்தியா என்று அழைக்கும் நாட்டில் இந்த உரிமை, இந்தச் சுதந்திரம் மறுக்கப்படுகிறது.

நான் எந்த மொழியில் பேசுவது, நான் எந்த ஆடை அணிவது, எந்த உணவை உண்பது என்பதை தேர்வுசெய்யும் உரிமை, சுதந்திரம்தான் இந்தியா எனும் கருத்தாக்கம் என்று நான் நம்புகிறேன். இந்தியாவின் பன்முகத்தன்மைதான் இந்தியா என்று நினைக்கிறேன்.

இன்று அந்தத் தேர்வு என்னிடமிருந்து பறிக்கப்படுகிறது. இந்தியா எனும்  கருத்து என்னிடமிருந்து பறிக்கப்படுகிறது. இந்தியாவைக்  கட்டமைக்கும் கருத்தை நாம் பாதுகாத்தாக வேண்டும். இந்தியா மிகப் பெரிய நாடு. இங்கு ஒற்றைத்தன்மையிலான கருத்தியல் திணிக்கப்படுகிறது.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை ஆளுவதற்கான நடைமுறையும் தற்போது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நம் அரசமைப்பின்படி இந்தியா ஒரு கூட்டாட்சி ஒன்றியம். ஆனால், தற்போது மாநிலங்களின் அதிகாரம் தொடந்து தாக்குதலுக்கு உள்ளாகிறது. இந்த நிலை தொடரும்பட்சத்தில் நாளை தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய தலைமைச் செயலரைக்கூட சுயமாக தேர்வுசெய்ய முடியாத நிலை ஏற்படும். கேரள முதல்வருக்குத் தலைமைச் செயலாராக யார் இருக்க வேண்டும் என்பதை டெல்லி முடிவுசெய்யும் நிலை ஏற்படும். இதுதான் கூட்டாட்சியா? இதுதான் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மரியாதையா? இப்படித்தான் நாம் இந்தியா வலுப்படுத்தப்போகிறோமா?

ஐம்மு - காஷ்மீரில் தொடங்கியது அங்கோடு முடியப்போவதில்லை. ஐம்மு - காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நாளை ஏனைய பிராந்தியங்களிலும் மேற்கொள்ளப்படும். எங்களுக்கு என்ன நடந்தது என்று சொல்வதற்கு நான் இங்கு வரவில்லை. இனி, இந்தியாவில் என்னவெல்லாம் செய்யப்படலாம் என்பதை எச்சரிப்பதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். 

என்னுடைய மாநிலம் மக்களின் ஒப்புதல் இல்லாமல் இரண்டாகப்  பிரிக்கப்பட்டு ஒன்றியப் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. மக்கள் இதை விரும்புகிறார்களா, இல்லையா என்று கேட்கப்படவில்லை. இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக இப்போதுதான் ஒரு மாநிலம் ஒன்றியப் பிரதேசமாக அந்தஸ்து குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் மக்களின் ஒப்புதல் இல்லாமல். 

ஐம்மு, காஷ்மீரில் ஆளுநர் சட்டமன்றத்தின் அதிகாரத்தை மட்டும் கைப்பற்றவில்லை; அங்கு என்ன செய்ய வேண்டும் என்ற முடியும்செய்யும் அதிகாரத்தையும் கைப்பற்றியுள்ளார்.  இதையே நாளைக்குத் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கு அவர்கள் செய்ய மாட்டார்கள் என்று என்ன உத்தரவாதம்? நாளை தமிழ்நாட்டிலும் ஆளுநர் ஆட்சி கொண்டுவரப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஆளுநர் ஆட்சியைக் கொண்டுவந்து தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்க மாட்டார்கள் என்று என்ன உத்தரவாதம்?

வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியா எனும் கருத்தாக்கம். இந்தியா என்பது அதன் வேற்றுமையால் இணைக்கப்படுகிறது என்பதை நம்பும் ஒத்த சிந்தனை கொண்ட கட்சிகள் இணைந்து இந்தியாவைப் பாதுகாக்கச் செயலாற்ற வேண்டும் என்பதுதான் ஐம்மு காஷ்மீரிலிருந்து நான் கொண்டுவந்திருக்கும் செய்தி.

ஐம்மு காஷ்மீரில் ஆரம்பிக்கப்பட்ட்து, ஜம்மு காஷ்மீரோடு முடிவுறப்போவதில்லை. நாம் மேற்கொள்வது உரிமைக்கான போராட்டம், நீதிக்கான போராட்டம், சமத்துவத்துக்கான போராட்டம். நாம் மேற்கொள்ளும் போராட்டம் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை எதிர்த்து அல்ல; அதன் ஒட்டுமொத்த அமைப்பையே எதிர்த்து! தேஜஸ்வி யாதவ் அவருடைய உரையில், எப்படி இந்தியாவில் அமைப்புகளின் சுயாதீனம் அழிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார். நாம் மேற்கொள்ளும் போராட்டம் எளிதானது அல்ல. அதனால்தான் இன்றைய நிகழ்வை முக்கியமான வாய்ப்பாகக் கருதுகிறேன்.

நாம் எதை நம்புகிறோம், நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை உறுதிபடுத்துவதற்கான வாய்ப்பாக இந்நிகழ்வைக் கருதி ஐம்மு காஷ்மீரிலிருந்து சென்னைக்கு வந்துள்ளேன்.

தமிழ்நாட்டுடனான எங்கள் உறவை மீண்டும் ஒருமுறை சொல்லி என் உரையை முடித்துக்கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாட்டுக்கும் எங்களுக்குமான உறவு தலைமுறை கடந்தது. நான் இங்கு இருப்பது புதிது அல்ல. என்னுடைய தந்தையிடமிருந்து அல்ல, என்னுடைய தாத்தாவிலிருந்து இந்த உறவு தொடங்குகிறது. எங்கள் குடும்பத்துக்கும் தமிழ்நாடு அரசுக்கும் நெருங்கிய உறவு இருந்திருக்கிறது. என்னுடைய தாத்தா இங்குதான் சிறை வைக்கப்பட்டார்.

நாம் நம்பும் இந்தியாவின் கருத்தாக்கத்தை வரும் தலைமுறைக்குக் கடத்த வேண்டும். ஸ்டாலினும், அவரது சகாக்களும், தமிழ்நாடும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் கருத்துக்கு வலிமைப்படுத்த, அதற்கு ஆதரவாக முன்களத்தில் நிற்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

மீண்டும் ஒரு முறை ஸ்டாலின் புத்தக வெளியீட்டுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுவாக காஷ்மீரிலிருந்து வருபவர்கள் காஷ்மீர் சால்வையை அன்பளிப்பாக அளிப்பார்கள். சால்வை குளிர் பிரதேசத்துக்கானது. தமிழ்நாடு குளிர்ப் பிரதேசம் அல்ல. எனில், ஜம்மு காஷ்மீர் மக்கள் சார்பாக ஸ்டாலினின் பிறந்த நாளுக்கு சால்வை கொடுப்பதில் அர்த்தம் இல்லை. அந்த சால்வை  பிரிக்கப்படாமலேயே இருந்துவிடும். எனவே, எங்கள் அன்பின் வெளிப்பாடாக ஒரு சிறிய தரை விரிப்பைக் கொண்டுவந்துள்ளேன். ஸ்டாலினை ஜம்மு காஷ்மீருக்கு அழைக்கிறேன். அங்கு இப்படியான நிகழ்வை ஏற்பாடு செய்ய விரும்புகிறேன். நன்றி!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

3

4





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

P.Saravanan   3 years ago

பொது வெளியில் பேசப்பட்ட உரையை அருஞ்சொல் வெளியிட்டிருப்பது அருஞ்சொல்லின் தனித்தன்மையின் வெளிப்பாடு.. எதை எங்கே எப்படி உபயோகப்படுத்துவது என்பதை முழுவதுமாக அறிந்தவர் ஆசிரியர் சமஸ் என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? அருமையான , உணர்வுபூர்வமான பேச்சு.. தவிர்க்கக்கூடாத உரையை, நேரில் கேட்க முடியாதவர்களுக்கான வாய்ப்பாக அருஞ்சொல் வெளியிட்டிருப்பதற்கு நன்றிகள். அன்புடன், நவகை ப.சரவணன்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

ஆன்ம வறுமைஆர்.சீனிவாசன் கட்டுரைசில ஊகங்கள்வெறுப்புப் பிரச்சாரம்பிரதமர் வேட்பாளர்சமத்துவம்கொள்முதல்ராஜன் குறை பி.ஏ.கிருஷ்ணன்கலாக்ஷேத்ராமூலக்கூறுகளின் இணைந்த கைகள் வாங்கித்தந்த நோபல்!மாற்றம் வேண்டும்தினமணிவீழ்ச்சியும் காரணங்களும்உதயநிதிசெங்கோல்வெளிச் சந்தைவசந்திதேவிஅய்யனார்கணினி அறிவியல்காந்தி துணையின்றி சமூக விடுதலை சாத்தியமா?பக்கிரி பிள்ளையும்வாழ்வின் நிச்சயமின்மைசமத்துவபுரங்கள்பின்தங்கிய பகுதிபற்றாக்குறை ஏன்?சுபாஷ் சந்திர போஸ்கால் வீக்கம்பாலஸ்தீனம்: கடந்ததும் நடப்பதும்இருளும் நாட்கள்ஜான் யூன் கட்டுரை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!