கட்டுரை, அரசியல் 10 நிமிட வாசிப்பு

மின் வாரிய நஷ்டக் கணக்குகளுக்கு யாரெல்லாம் காரணம்?

சா.காந்தி
06 Sep 2021, 12:00 am
0

மின் வாரியத்தின் கடன் ரூ.1,24,974 கோடி என்பதாகவும், அரசுக் கடனைச் சேர்த்தால் ரூ.1,34,119 கோடியாக உயரும் எனவும் ஆகஸ்டு 13 அன்று வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கை தெரிவிக்கிறது. வழங்கப்படும் மின்சாரத்தின் அடக்க விலைக்கும், வசூலிக்கப்படும் விலைக்குமான துண்டு விழும் இழப்பானது 2019 முதல் 2021 வரை ரூ.2.25, ரூ.2.14, ரூ.2.36 என உள்ளது எனவும் தெரிவிக்கிறது. இதன்படிக் கணக்கிட்டால் இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.50,988 கோடி இழப்பு என்றாகிறது. இதற்கிடையில், சென்னை வளர்ச்சி ஆய்வுக் குழுமத்தில் உரையாற்றிய தமிழ்நாடு நிதித் துறைச் செயலாளர், மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டியிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். மின் கட்டணம் உயரவிருக்கிறதா?

மின் வாரியத்தின் இழப்புக்கு அதிக விலையில் மின்சாரம் வாங்கப்பட்டதே காரணம் என்று சொல்லப்பட்டாலும், ‘அண்மைக் காலங்களில் சொந்த உற்பத்தியைக் காட்டிலும் மின் கொள்முதல் விலை குறைவாக உள்ளது’ என்று வெள்ளை அறிக்கை தெரிவிக்கிறது. இவையாவும், மின் கட்டணம் உயர்த்தப்படும் என்பதைச் சொல்வதாகத்தான் எடுத்துக்கொள்ள முடிகிறது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் மின் விநியோக நிறுவனங்களின் செயல்பாட்டை, கூட்டாட்சி அரசு ஆய்வுசெய்து தர நிர்ணயம் செய்கிறது. அதன்படி, 2019-20-க்கான தர நிர்ணயத்தை ஜூலை 2021-ல் வெளியிட்டுள்ளது. ‘ஐசிஆர்ஏ’ நிறுவனம்தான் இந்தத் தர நிர்ணயத்தைச் செய்துள்ளது. அது வெள்ளை அறிக்கை குறிப்பிடுவது போன்றே மின் இழப்பு குறைவாகவும், கட்டணம் வசூலிக்கும் காலம் விரைவாக இருப்பதாகவும் சொல்கிறது.

இதன் மூலம், வாரியத்தின் செயல்பாடுகள் சரியாக உள்ளதாகக் கொள்ள முடியும். என்றாலும், கடன் ரூ.1,08,338 கோடி எனவும், மின் வாரியம் கடன் வாங்கும் தகுதி ரூ.(-)58,156 கோடி எனவும் தெரிவிக்கிறது. மின்சாரத்தின் அடக்க விலைக்கும், வசூலிக்கப்படும் விலைக்குமான இடைவெளியானது யூனிட் ஒன்றுக்கு ரூ.0.74 என்றும் குறிப்பிடுகிறது. வெள்ளை அறிக்கையோ 2019-20-ல் இந்த இடைவெளி ரூ.2.14 என்று குறிப்பிடுகிறது; தோராயமாக மூன்று மடங்கு அதிகமாகச் சொல்கிறது. ‘ஐசிஆர்ஏ’ நிறுவனமும் நிதி அமைச்சரும் மின்சார வாரியத்திடமிருந்துதானே தகவல்களைப் பெற்றிருக்க முடியும்?

பிறகு, ஏன் இந்த வேறுபாடு?

ஆண்டுதோறும் மின் வாரியம் தனது செயல்பாடு குறித்துப் புள்ளிவிவர அறிக்கையை வெளியிட்டுவருகிறது. கடைசியாகக் கிடைத்துள்ள 2018-19-க்கான அறிக்கையில் 2011-12 தொடங்கி 2018-19 வரை அடக்க விலைக்கும் வசூலிக்கும் விலைக்குமான இடைவெளியை வெளியிட்டுள்ளது. இதை வெள்ளை அறிக்கை குறிப்பிடும் இடைவெளியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இதில் எந்த இடத்திலும் ரூ.2 எட்டப்படவில்லை.

ஆண்டு 2015-16 2016-17 2017-18 2018-19
வெள்ளை அறிக்கை

0.98

0.93 1.78  2.25
புள்ளிவிவர வெளியீடு

0.72

0.52  0.90 1.02

(ஒரு யூனிட்க்கான விலையில் இடைவெளி: ரூபாய்க் கணக்கில்)

நடுவண் தொகுப்பு மின்சாரம் 2016-17-ல் யூனிட் ரூ.3.59 என்றும், 2017-18-ல் ரூ.4.02 என்றும் மின் வாரியத் தணிக்கை அறிக்கை சொல்கிறது. இதுவே தனியார் கொள்முதல் விலையைக் கீழே கொண்டுவந்துள்ளது. ஆக, உற்பத்தி, கொள்முதல், விற்பனை விலையில் மட்டும் மின் வாரியத்தின் இழப்பைச் சுருக்கிவிட முடியாது. அவ்வாறு செய்தால், முழுமையான தகவலாக அது இருக்காது.

பிற முக்கியமான காரணிகள்

மின் வாரிய வணிகத்தைத் தவிர்த்து மின் வாரியத்தின் கட்டமைப்பைப் பயன்படுத்திக்கொள்ள, தனியார் மின் உற்பத்தியாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது மின்சாரச் சட்டம். இதுதான் திறந்தவெளி நுழைவு உரிமை. இந்த உரிமையைப் பயன்படுத்தி, இரண்டு வழிகளில் மட்டும், மின் வாரியத்துக்குத் தனியார் மின் உற்பத்தியாளர்கள் ஏற்படுத்திய இழப்பு ரூ.35,000 கோடி எனக் கணக்கிட்டுள்ளோம்.

முதலாவதாக, காற்றாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள ‘பேங்கிங்’ என்ற சேமிப்பு வங்கிக் கணக்கு. மின்சாரத்தை மின்சாரமாகவே சேமித்து வைக்க முடியாது என்பது அறிவியல் உண்மை. புதுச்சேரியில் ஒரே ஒரு மெகாவாட் மின்சாரத்தைச் சேமிப்பதற்கு ரூ.15 கோடி செலவில் பேட்டரியை நிறுவி பரிசோதித்துவருகின்றனர். ஆனால், ஒழுங்குமுறை ஆணையமானது காற்றாலைகள் மழைக் காலத்தில் உற்பத்தி செய்யும் 8,550 மெகாவாட் மின்சாரத்தைச் சேமித்து வைத்திருந்து கோடை காலத்தில் அவர்களுக்குத் திருப்பித் தர உத்தரவிட்டுள்ளது.

மழைக் காலத்தில் நீர் மின்சாரம் அதிக அளவில் கிடைக்கும். அதன் விலையோ யூனிட் ஒரு ரூபாய்க்கும் கீழானது. இந்தக் காலத்தில் சந்தை விலையும் குறைவு; மின் தேவையும் குறையும். கோடையோ எதிர்மறையானது. மின் தேவை கடுமையாக உயரும்; சந்தை விலையும் உயரும். எனவே, சந்தைக் கொள்முதலை வாரியத்தால் தவிர்க்க முடியாது. வாங்கப்படும் நேரத்துக்கு ஏற்ப யூனிட் ரூ.5 முதல் ரூ.12 வரை சந்தை விலை இருக்கும்.

கோடையில் காற்றாலை உரிமையாளர்களான தொழில், வணிக நிறுவனங்கள் சந்தையில் மின்சாரம் வாங்குவது லாபமாக இருக்காது. ஆகவே, மின் வாரியத்தின் செலவில் ‘பேங்கிங்’ மூலம் வாங்கும். ரூ.3.10 விலையுள்ள மின்சாரமாகவே அவர்களுக்குக் கிடைத்துவிடும். மழைக் காலத்தில் இந்நிறுவனங்கள் சந்தைக் கொள்முதல் செய்துகொண்டு காற்றாலை உற்பத்தியை ‘பேங்கிங்’ மூலம் சேமித்து வைத்துக்கொள்ளலாம். இதை மக்கள் நலனைப் போற்ற வேண்டிய ஆணையமே பெருநிறுவனங்களுக்கு சாதகமாகக் கடந்த 15 ஆண்டுகளாக உத்தரவிட்டுவருகிறது.

புரியாத புதிர்

‘பேங்கிங்’ மூலம் ஆண்டுக்கு ரூ.1,905 கோடி இழப்பீடு வருவதாக ஆணையத்திடம் மின் வாரியமானது தொடர்ந்து முறையிடுகிறது. ஆனால், இழப்பீட்டுக்கான கணக்கைத் தரவில்லை என்று காரணம் காட்டி ‘பேங்கிங்’கைத் தொடர்ந்து வழங்கிவருகிறது ஆணையம். இழப்புக்கான கணக்கை வாரியம் ஏன் தரவில்லை என்பதும், இவ்வளவு பெரிய இழப்புக்கான கணக்கை, மக்கள் நலனைக் காக்க வேண்டிய ஆணையம் ஏன் வாரியத்தை வற்புறுத்திப் பெறவில்லை என்பதும் புரியாத புதிர். மாநில அரசுக்குக்கூட இல்லாத அதிகாரம் ஆணையத்துக்கு உண்டு. ஆனாலும், இந்த ‘பேங்கிங்’ வேடிக்கையை 15 ஆண்டுகளாக வாரியத்தை சாட்சி வைத்து ஆணையம் நடத்திவருகிறது. மாநில அரசு நினைத்தால் மின்சாரச் சட்டப்பிரிவு 108(1)-ன் கீழ் ‘பேங்கிங்’ நடைமுறையை ரத்துசெய்ய உத்தரவிட முடியும். மின்சாரச் சட்டம் அந்த அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கியுள்ளது என்பதை நினைவில்கொள்வோம்.

இரண்டாவது, ‘தன்பயன்’ என வெள்ளை அறிக்கை குறிப்பிடும் ‘சுய உற்பத்தியாளர்கள்’ பற்றியதாகும். ‘சுய உற்பத்தி’ குறித்து மிக எளிய வழியையே விதியாக வகுத்திருக்கிறது ஒன்றிய அரசு. இவ்விதியின் படி, ரூ.5 லட்சம் பங்கு முதலீடு செய்யும் நிறுவனமானது ரூ.100 கோடி முதலீடு உள்ள உற்பத்தி நிலையத்தின் ‘சுய உற்பத்தியாளர்’ ஆகிவிட முடியும். ‘சுய உற்பத்தியாளர்’ ஆனவுடன் ஆண்டுதோறும் ரூ.7.75 லட்சம் மின் கட்டண சர்சார்ஜிலிருந்து விலக்கு பெறுவதன் மூலம் லாபம் கிடைக்கும்.

‘சுய உற்பத்தியாளர்கள்’ மின் வாரியத்திடமிருந்து அல்லாமல் வேறு இடத்தில் மின்சாரம் வாங்கும்போது வாரியத்துக்குக் கட்ட வேண்டிய சர்சார்ஜைக் கட்ட வேண்டியதில்லை. இது ‘சுய உற்பத்தியாளர்’களுக்கு மட்டும் வழங்கப்படும் சலுகை. இந்த சர்சார்ஜ் யூனிட் ஒன்றுக்கு ரூ.1.67 என ஆணையமே நிர்ணயித்துள்ளது. காற்றாலைகள் உட்பட தமிழ்நாட்டில் 7,300 ‘சுய உற்பத்தியாளர்கள்’ இருப்பதாக வாரியம் சொல்கிறது. வெள்ளை அறிக்கையின் படியே, 2011-12-ல் ரூ.671.2 கோடி யூனிட் அளவுக்குப் பயனடைந்த இவர்கள் 2020-21-ல் ரூ.1,524.2 கோடி யூனிட் அளவுக்குப் பயனடைந்துள்ளனர்.

இந்த ‘சுய உற்பத்தியாளர்’களில் கிட்டத்தட்ட சரிபாதி நிறுவனங்கள், அரசின் எளிய விதிகளைக்கூட கடைப்பிடிக்காதவர்களே. இதைச் சரிசெய்தாலே ஆண்டுக்கு ரூ.5,400 கோடி வருவாய் கூடும். 2007-ல் இதுபோன்ற ஒரு நிறுவனத்தை ஆராய்ந்து, வாரியத்துக்கு வர வேண்டிய ரூ.123 கோடிக்காக ஆணையத்தில் வழக்கு தொடுத்தோம். ஆனால், வாரியமே எங்கள் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டி மனு செய்தது.

தொடர் முறையீட்டுக்குப் பிறகு விதியைச் சரிபார்க்க 2014-ல் வாரியம் முயன்றது. ஒரு ‘சுய உற்பத்தியாளர்’கூட சட்டப்படித் தங்களை ‘சுய உற்பத்தியாளர்’ என நிலைநிறுத்த ஒப்புக்கொள்ளவில்லை. நீதிமன்ற வழக்கு, மேல்முறையீடு எனத் தொடர்ந்து, இறுதியில் ஆணையத்தை வழிகாட்டும் நெறிமுறையை வெளியிடவும் அதை வாரியம் செயல்படுத்தவும் 09.10.2018-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை ஆணையம் செயல்படுத்தத் தொடங்கியபோது ஆணையத்தின் மீது ‘சுய உற்பத்தியாளர்கள்’ பொய்யான ‘நீதிமன்ற அவமதிப்பு’ வழக்கைத் தொடுத்தனர். காலம் நீண்டுகொண்டே போனது. விதி கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறதா என்பதைச் சரிபார்க்கவே இத்தனை பாடு!

ஒருவழியாக, 28.01.2020 அன்று வழிகாட்டும் நெறியை ஆணையம் வெளியிட்டது. ஆனால், வாரியம் அதைச் செயல்படுத்த தாமதம் காட்டியது. வேறு வழியின்றி 10.03.2020 அன்று செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய பிறகே நடவடிக்கை தொடங்கியது. எனினும், இந்தப் பிரச்சினையைக் கையாண்டுவந்த அதிகாரிகள் 2014-லிருந்து மாற்றப்பட்டு இப்போது மூன்றாவாது அதிகாரியிடம் தரப்பட்டுள்ளது.

தொடரும் விதிமீறல்கள்

வழிகாட்டும் நெறியைத் தீர்ப்பாயத்தின் 07.06.2021 தீர்ப்பின் மூலம் ‘சுய உற்பத்தியாளர்கள்’ நீர்த்துப்போகச் செய்துள்ளனர். 2014-லிருந்து இவர்களிடமிருந்து வாரியத்துக்கு வர வேண்டிய தொகை ரூ.15,000 கோடி. இவ்வளவு பெரிய தொகையை இவர்களிடமிருந்து வசூலிப்பது எளிதானதல்ல. தமிழ்நாடு போன்றே மற்ற மாநிலங்களும் தீர்ப்பாயத்தின் உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கான உச்ச நீதிமன்ற மேல்முறையீடு தொடர வேண்டி 18.06.2021-ல் முதல்வருக்கு எழுதினோம். 03.08.2021 அன்று ‘பேங்கிங்’ குறித்தான எங்கள் வழக்குரையின்போது இந்த மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெற்றுவிட்டதாக ஆணையத்திடம் வாரியம் தெரிவித்தது. மேல் விளக்கங்கள் கேட்டு வாரியத்துக்கு எழுதிய கடிதங்களுக்கு எந்தப் பதிலும் இல்லை. மீண்டும் முதல்வரிடம் 18.08.2021 அன்று முறையிட்டுள்ளோம்.

‘சுய உற்பத்தியாளர்கள்’ ஒவ்வொருவரும் உற்பத்தித் திட்டம் பற்றி முதல் நாள் அன்றே தர வேண்டும் என்பது ஆணையம் வகுத்த விதி. இதைப் பற்றி வாரியமும் கவலைப்படவில்லை, ஆணையமும் கவலைப்படவில்லை. இந்த விதியை நடைமுறைப்படுத்தினாலே வாரியத்துக்கு ஆண்டு வருவாய் ரூ.5,400 கோடி கூடும். அரசு தர வேண்டிய மின்சார மானியத்தில் ரூ.1,420 கோடியும் மிஞ்சும்.

இவ்வளவு சிக்கல்கள் இருக்கும் பின்னணியில், மின்சாரக் கட்டண உயர்வுக்கு சாதகமாகக் கருத்து தெரிவித்துள்ள நிதிச் செயலாளர், மூடிக்கிடந்த தனியார் மின் உற்பத்தி நிலையத்துக்கு — எந்தச் சட்ட நிபந்தனையும் இல்லாத நிலையிலும் —  ரூ.2,340 கோடியைத் தர முடிவெடுத்த மின் வாரியக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார் என்பதும் பெரும் நகைமுரண். இது சொல்லும் செய்தி ஒன்றுதான்: மின் கட்டண உயர்வு காத்திருக்கிறது!

(நம்முடைய ‘அருஞ்சொல்’ ஊடகத்துக்கான பணிகள் 2021 ஆகஸ்ட் 22 அன்று தொடங்கின. தனிமனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற காந்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அடியெடுத்து வைத்ததன் வழியாகப் பொதுவாழ்வை நோக்கித் தன் பாதையைத் திருப்பிக்கொண்ட நாள்; நேட்டா இந்திய காங்கிரஸ் தொடங்கப்பட்ட நாள்; அதுவே காந்தியால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பொது அமைப்பு; கூடவே, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நாளும்கூட. காந்தியையும் தமிழையும் இணைக்கும் புள்ளியான அந்த நாளிலிருந்து நாம் பணிகளைத் தொடங்கினோம். 1921 செப்டம்பர் 22 அன்று மதுரையில் தன்னுடைய ஆடையை எளியவர்களின் அடையாளமான வேட்டி, துண்டாக மாற்றிக்கொண்டார் காந்தி. காந்தியின் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்றானது அவருடைய ஆடை. தமிழ்நாட்டையும் காந்தியையும் பிணைக்கும் இந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவில் நம்முடைய இணையதளம் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு மாதத்தில் வெளியானவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அவற்றில் ஒன்று இது.)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.







பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரதிநிதித்துவம்நில எல்லைச் சட்டம்காளைகளுக்கான சண்டைபி.ஏ.கிருஷ்ணன்வரிகடவுள் ஏன் சைவரானார்?மூன்றாவது மகன்மூன்றாவது முறை பிரதமர்சர்வதேச நட்புறவுபெகாசஸ்பிட்டா லிம்ஜரோன்ரெட்வாழ்வியல் முறைகோகலேஉங்கள் மொபைல் எண்ணின் விலை எவ்வளவு தெரியுமா?அறிவுப் பகிர்வுகள்தேர்தல் பத்திரம்கல்யாணச் சாப்பாடுபன்மைத்துவ அரசியல்தன் வரலாறுகீர்த்தனை இலக்கியம்மயிர்தான் பிரச்சினையா? – 2: அன்பைக் கூட்டுவோம்ஐக்கிய நாடுகள் சபைதமிழ்நாட்டில் காந்திசோழர் இன்றுசுசுகி நிறுவனம்பொறியாளர் மு.இராமநாதன்அரசுகளுக்கிடையிலான அணையம்அடக்கம் அவசியம்ஆல்-ரவுண்டர்வரி நிர்வாக முறை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!