இன்னொரு குரல், பொருளாதாரம் 9 நிமிட வாசிப்பு

சாதிப்பாரா பிடிஆர்?

விபா
18 Mar 2022, 5:00 am
0

சமீபத்தில் 'இந்தியா டுடே' ஊடகக் குழுமத்தின் தமிழ்நாடு பற்றிய கருத்தரங்கில், அதன் மூத்த பத்திரிகையாளரான ராஜ் செங்கப்பா, தமிழ்நாடு நிதி அமைச்சரான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் பேட்டி கண்டார். அப்போது அவர் ஒரு கேள்வியை வீசினார். "நீங்கள் 2021ஆம் ஆண்டு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், தமிழ்நாட்டின் நிதிநிலை பற்றிய தரவுகளை வெளியிட்டுவிட்டு, `நாங்கள் அடுத்த தலைமுறைச் சீர்திருத்தம் கொண்டுவருவோம்` எனச் சொல்லியிருந்தீர்கள். இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள் எனச் சொல்ல முடியுமா?"  என்பதே அந்தக் கேள்வி.

2021ஆம் ஆண்டு, திமுக தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் வென்று ஆட்சியமைத்தபோது, அரசின் இரண்டாவது உயர்நிலையான நிதி அமைச்சர் பதவி யாருக்கு என்னும் கேள்விக்கு, யாரும் எதிர்பார்க்காத ஒரு பதிலை அளித்தார் முதல்வர் ஸ்டாலின். உலகில் மதிக்கப்படும் எம்.ஐ.டி. ஸ்லோன் கல்வி நிலையத்தில் மேலாண்மை பயின்று, பல காலம் உலகின் மிக முக்கியமான நிதி நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருந்த பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன்தான் அந்த பதில்.

பிடிஆர், 2016 சட்டமன்றத் தேர்தலில், மதுரை மத்தி தொகுதியில் வென்று, சட்டமன்ற உறுப்பினரானார். தமிழகத் தேர்தலில் பணம் செய்யும் சித்து விளையாட்டு ஒரு காவியச் சோகம். தேர்தல்களில் பணத்தின் திருவிளையாடல்களைக் கண்ட தமிழ்நாட்டில், வாக்குக்குப் பணம் தர மாட்டேன் எனச் சொல்லி தேர்தலில் போட்டியிட்டார். முதல் தேர்தலில், சுமார் 5000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றவுடன், தன் தொகுதியெங்கும், கிட்டத்தட்ட 30 இடங்களில் புகார்ப் பெட்டிகளை நிறுவினார். அந்தப் புகார்களைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெற்று, அவற்றின் மீது நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சிகளை முன்னெடுக்க அலுவலக உதவியாளர்களை நியமித்தார். ஒவ்வொரு ஆறு மாதம் முடிந்ததும், தான் தனது செயல்பாடுகளை ஒரு அறிக்கையாக அச்சிட்டு, தன் வாக்காளர்களிடையே விநியோகித்தார். ஆறு மாதங்களில், அவர் என்னென்ன செய்தார், வாக்காளர்களிடம் இருந்தது எத்தனை புகார்கள் வந்தன, அவற்றில் எத்தனை நிறைவேற்றப்பட்டன என்பது பற்றிய அறிக்கையைப் பொதுமக்கள் முன்பு வெளிப்படையாக முன்வைத்தார். 

பிடிஆர் 2016இல், பழனிவேல் ராஜனின் மகனாகப் போட்டியிட்டு 5000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார், 2021 தேர்தலில், தான் செய்த பணிகளை முன்வைத்து, போட்டியிட்டு 34000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.  உண்மையான உழைப்புக்கும், நேர்மைக்கும் தேர்தல் அரசியலில் இடம் உண்டு என்பதைத் தன் விழுமியங்கள் மூலமும் செயல்பாடுகள் மூலமும் நிரூபித்தார் அவர்.  

2021, மே மாதம் பதவியேற்ற திமுக அரசு, தமிழக நிதிநிலையைப் பற்றிய ஒரு வெள்ளை அறிக்கையை ஆகஸ்ட் மாத முதல் வார இறுதியில் வெளியிட்டது. அந்தப் பத்திரிகையாளர் கூட்டத்தில்தான், பிடிஆர், அடுத்த தலைமுறைச் சீர்திருத்தம் என்னும் வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தார். ராஜ் செங்கப்பா சரியாக அதைப் பிடித்து, மேற்சொன்ன நிகழ்வில் அதற்கான விளக்கத்தைக் கேட்டார்.

பொதுவாக, மாநில அரசுகளின் நிதி அமைச்சர் என்னும் பணி, மிகக் குறுகலான சாத்தியங்கள் கொண்டது. அதற்குக் கிடைக்கும் ஊடகக் கவனமும் மிகக் குறைவு. மத்திய பட்ஜெட் என்பதை ஒரு தேவலோக நடனம்போல ஆங்கில ஊடகங்கள் ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கின்றன. அதற்கு முக்கியக் காரணம்,  மத்திய பட்ஜெட் நாட்டின் நிதிக் கொள்கைகளை வகுத்து வழிநடத்தும் அதிகாரம் கொண்டதாகவும், தொலைக்காட்சி பார்க்கும் மத்திய வர்க்கம் செலுத்தும் நேர்முக வரிகளை விதிக்கும் அதிகாரம் கொண்டதாகவும் உள்ளது என்பதேயாகும்.

மாநில பட்ஜெட்டுக்கு அந்தக் கவனமும் இல்லை; அவ்வளவு முக்கியத்துவமும் இல்லை. அதுவும் ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டு, விற்பனை வரிகளை விதிக்கும் அதிகாரங்களும் மாநில அரசுகளிடம் இருந்து பிடுக்கப்பட்டுவிட்ட பின்னர், மாநில நிதியமைச்சரின் அதிகாரங்கள் மேலும் குறைக்கப்பட்டுள்ளன. எரிபொருள், மது வணிகம், பத்திரப் பதிவு போன்ற சில துறைகளில் மட்டுமே இப்போது மாநில அரசுகளால் வரிகளை விதிக்க முடிகிறது. அதிலும், எரிபொருளுக்கான மத்திய செஸ்களை மிக அதிகரித்து, மாநில அரசுகள் எதுவும் செய்ய இயலாத வகைக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன.

இந்த பின்னணியில்தான் 'இந்தியா டுடே' ராஜ் செங்கப்பாவின் கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு மாநிலத்தின் நிதி அமைச்சர் அப்படி என்ன அடுத்த தலைமுறைச் சீர்திருத்தத்தைச் செய்துவிட முடியும்?

இதற்குப் பதிலளித்த பிடிஆர், தான் முன்னெடுத்த ஐந்து முக்கியமான செயல்பாடுகளை விவரித்தார்.

1. அரசின் நிதித் திட்டமிடலும், அதைச் செலவு செய்யும் முறைகளும் மிகவும் செயல் திறனற்ற வகையில் உள்ளன. எடுத்துக்காட்டாக, பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்களும், அதற்கான செலவுகளும், அடுத்த பட்ஜெட்டுக்கு முன்பு 'லேட்டஸ்ட் எஸ்டிமேட்' என முன்வைக்கப்படுகின்றன. ஆனால், ஆறு மாதங்கள் கழித்து, முழுமையான கணக்கு வழக்குகள் தாக்கல் செய்யப்படுகையில், பெரும் வேறுபாடுகள் உள்ளன (20-30% வரை). இனி வரும் காலங்களில், இந்த வேறுபாடுகள் 2%-3%-க்கு அதிகமாகாமல் குறைக்கப்படும். இதனால், அரசு, தன் அன்றாடச் செலவுகள் போக, முதலீடுகளில், சரியான அளவில் திட்டமிட்டு நிதியைச் செலவிட முடியும். சரியான முதலீடுகளே மாநிலத்திற்கு அதிக வருவாயை ஈட்டித்தரும்.

2. தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கான பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் இருக்கும் பல்வேறு முறைகளை, நிறுவனங்களை ஒன்றிணைத்து, தமிழ்நாடு குடிமைப்பணிச் சேவை நிறுவனத்தின் கீழ் கொண்டுவருதல்.

3. அரசு நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்களின் செயல்திறன் மேம்பாட்டிற்கான பயிற்சிகளை அளித்தல். அண்ணா மேலான் கழகம், பணியாளர் பயிற்சிக் கழகம் எனப் பெயர் மாற்றப்பட்டு, கடந்த 5 மாதங்களில் 1000-க்கும் மேற்பட்டோருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில், இது அரசு அலுவலகச் செயல் திறன் மேம்பாட்டை, அணுகுமுறை மாற்றத்தைக் கொண்டுவரும்.

4. தணிக்கைத் துறைகளை ஒன்றிணைத்து, நிதியமைச்சகத்தின் கீழ் கொண்டுவருதல்.  தற்போதைய முறையில், ஒவ்வொரு துறையும்  தனது செயல்பாடுகளை தணிக்கை செய்ய, ஒரு தனிப் பிரிவை வைத்துள்ளது. சென்ற ஆட்சியில், பொதுத் தணிக்கைக் குழுவில் உறுப்பினராக இருந்த பிடிஆர், இந்தத் தணிக்கை முறை சரியல்ல என்பதை உணர்ந்து, எல்லாத் துறைகளையும், நிதியமைச்சகத்தின் கீழ் கொண்டுவந்துள்ளார். இது மிக முக்கியமான சீர்திருத்தமாகும். ஒவ்வொரு துறையும், தனது திட்டங்களுக்காக நிதித் தேவைகளைக் கேட்டு கோரிக்கைகள் வைக்கின்றன. அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, நிதி ஒதுக்கிய பின்னர், அவை சரியாகச் செலவு செய்யப்படுகின்றதா என்பதை நிதியமைச்சகம் கண்காணிக்கப்போகிறது என்பது மிக முக்கியமான மாற்றம். தனியார் நிறுவனங்களில், தணிக்கை என்பது நிதி மேலாண்மையின் கீழ் வரும் ஒரு முக்கியமான பொறுப்பு. 

இந்த மாற்றத்தின் மூலம், நிதி அமைச்சகம், மற்ற துறைகளின் நிதிச் செயல் திறனைக் கண்காணிக்க முடியும். மொத்த அரசின் நிதித் தணிக்கையும் ஒரே அமைப்பின் கீழ் வருவதால், பல்வேறு துறைகள் நிதியைச் செலவு செய்யும் திறனை சில அளவு கோல்களின் மூலம் ஒப்பிட முடியும்.  அரசின் செயல் திறனை, வழிமுறைகளை மாற்றும் வழிகளை எளிதாக வடிவமைக்க முடியும். இது முக்கியமான சீர்திருத்தமாகத் தோன்றுகிறது.

5. பொருளாதாரத்துக்கேற்ற வரி வசூல் என்னும் அலகில், கடந்த 6-7 வருடங்களில், 4 % குறைந்துள்ளது. இதனால், தமிழ்நாடு அரசுக்கு வருடம் 60-70 ஆயிரம் கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு சரி செய்யப்பட வேண்டும் எனச் சொல்லும் பிடிஆர், அது இந்த ஆண்டில் நிர்வாகச் செயல்திறன் காரணமாக ஓரளவு சரி செய்யப்பட்டுள்ளது என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.

இதில் முதல் நான்கு மாற்றங்களும், நிர்வாகச் சீர்திருத்தங்கள். இவற்றின் பலன் நீண்ட கால நோக்கில்தான் தெரியவரும். ஆனால், ஐந்தாவது முன்னெடுப்பின் பலன்கள் குறுகிய காலத்திலேயே தெரியவரும்.

உரையாடலில் மேலும், மின்சாரத் துறை மற்றும் போக்குவரத்துத் துறைகளில், தமிழ்நாடு சந்தித்து வரும் பேரிழப்பைச் சரி செய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்கப்போகிறீர்கள் என்னும் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டார் ராஜ் செங்கப்பா.

மின்சாரத் துறையின் நஷ்டங்களை அந்தந்த ஆண்டு பட்ஜெட்டிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும் என்னும் நெறிமுறையின் காரணமாக, அதைச் சந்தித்தே ஆக வேண்டும் எனச் சொன்ன பிடிஆர், அடுத்த இரண்டாண்டுகளில், தமிழ்நாடு மின்சார வாரியச் செயல்பாடுகளில், அடிப்படை மாற்றங்கள் வரும் எனப் பதிலளித்தார். போக்குவரத்துத் துறைச் செயல்பாடுகளில், முழுவதுமாக வாடகைக்கு எடுக்கப்படும் மின்சாரப் பேருந்துகள் என்னும் நவீன முயற்சி தொடங்க உள்ளது எனச் சொல்லியிருக்கிறார். இந்தப் பதில்கள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்று தமிழக நிதிநிலை உள்ள சூழலில் ஒரு நிதியமைச்சரின் முன்னுள்ள பெரும் சவால், போக்குவரத்துத் துறை மற்றும் மின் வாரியம் சார்ந்திருக்கும் கடன்கள். அவை தொடர்பான சீர்திருத்தங்கள்!

ஆனாலும், இந்தக் கருத்தரங்கு உரையாடல் வழியே, மாநில அரசின் நிதியமைச்சர், தன் பொறுப்பின் சாத்தியங்களையும், எல்லைகளையும் உணர்ந்த ஒரு நிர்வாகி என்னும் சித்திரம் மேலும் வலுப்பெற்றுள்ளது. பிரச்சினைகளையும், அதன் தீவிரத்தையும் உணர்ந்துள்ள ஒருவராகவே பிடிஆர் வெளிப்படுகிறார். ஆனால், தனக்குள்ள குறுகிய அதிகாரங்களைக் கொண்டு ஒரு மாநில நிதியமைச்சரால் என்ன சாதிக்க முடியும் என்ற கேள்விக்கு ப்ட்ஜெட் வழியாகவே அவர் பதில் சொல்ல வேண்டும்.

மார்ச் 18ஆம் தேதி, தமிழ்நாடு பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட உள்ளது. கடந்த 9 மாத கால ஆட்சியில், பிடிஆர் நிதி நிர்வாகத்தின் பலன்கள் என்ன என்பதை இந்த பட்ஜெட் காட்டிவிடும். "இந்த 9 மாதங்களில், பல நிதி நிர்வாகச் சிக்கல்களைத் தீர்த்து, ஓட்டைகளை அடைத்திருக்கிறோம். இந்தச் செயல்பாடு, தமிழகத்தில் தொழில்துறையில் முதலீடு செய்பவர்களுக்கு மேலும் நம்பிக்கை தருவதாக அமையும்" என்கிறார் பிடிஆர். தொழில்முறை சார்ந்த பின்னணியிலிருந்து வந்தவர் என்பதால் எல்லோருமே ஆர்வத்தோடு இந்த நிதிநிலை அறிக்கையைக் கவனிக்கின்றனர்.

நிதி வருவாயும் கூட்டப்பட வேண்டும்; மக்களுக்கான நலத் திட்டங்களும் சுருங்கக் கூடாது. அப்படி நடந்தால் அதை சாமர்த்தியசாலியின் வெளிப்பாடாக நாம் கருதலாம். பார்ப்போம்!

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

2

2





அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

காங்கிரஸ் - இடதுசாரிகள் ஒற்றுமைதன்னம்பிக்கை விதைவீரப்பன் சகோதரர்சமஸ் - குமுதம்அரசியல் பண்பாடுவறுமைபக்கிரி பிள்ளைஇடிaruncholஜார்டன் பீட்டர்சன் கட்டுரை திட்டங்களும்எனாமல்500 மெகாவாட்அதீதத் தலையீடுகள்சாஸ்த்ரீய இசைஜெய்பீம்கே.சி.வேணுகோபால்உயர்ஜாதியினர்வறிய மாநிலங்கள்காகித தட்டுப்பாடுஇனவாதம்வான் கடிகாரம்அமெரிக்கச் சிறைட்விட்டர் சிஇஓ பரக் அகர்வால்சுய தம்பட்டப் பொருளாதாரம்!தொழில் பரவலாக்கல்நிகழ்நேரப் பதிவுகள்கட்டுப்படாத மதவெறிசட்டப்பேரவை பொதுத் தேர்தல்திபெத்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!