கட்டுரை, அரசியல், நிர்வாகம் 8 நிமிட வாசிப்பு

தமிழக பட்ஜெட்: சொல்லும் செயலும்

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
20 Mar 2022, 5:00 am
1

இந்திய மாநிலங்களில், மக்கள் நலத் திட்டங்களைத் தொடர்ந்து முன்வைத்த மாநிலம் தமிழ்நாடு. நீதிக் கட்சி ஆட்சியில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில், குழந்தைகள் பள்ளிக்கு வருவதற்காக இலவசக் காலை உணவாகத் தொடங்கிய சிறு முயற்சி, பின்னர் காமராசர் காலத்தில் ஊரக ஏழை மாணவர்களுக்கான மதிய உணவாக மாறி, எம்.ஜி.ஆர் காலத்தில் அது அனைத்து மாணவர்களுக்கான சத்துணவாக மாறியது. அது பின்னர் 1993ஆம் ஆண்டு, நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில், ஒன்றிய அரசால் இந்தியாவெங்கும் எடுத்துச் செல்லப்பட்டது. 1969ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுகவின் ரூபாய்க்கு 3 படி அரிசித் திட்டம் முக்கியமானது. அண்ணாவின் மறைவுக்குப் பின் அதைச் செயல்படுத்த கருணாநிதி உருவாக்கிய பொது விநியோகக் கட்டமைப்பு பலம் பெற்று, 2 ரூபாய்க்கு அரிசி என மாறி, இறுதியில் ஜெயலலிதா காலத்தில் விலையில்லா அரிசியாக மாறியது. அதேபோல பள்ளி மாணவர்களுக்கான இலவசப் பாடப்புத்தங்கள், கணிணிகள், முத்துலட்சுமி ரெட்டி கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ உதவித் திட்டம் போன்றவை இன்று ஒன்றிய அரசு மற்றும் பல மாநில அரசுகளின் திட்டங்களாக மாறியுள்ளன. 

தமிழக ஆட்சியாளர்கள் இதேபோல தொழில் துறையை ஒரு முக்கியமான அங்கமாகக் கருதி, அதற்குத் தொடர்ந்து முக்கியத்துவத்தை வழங்கிவந்துள்ளனர். காமராசர் தொடங்கிய தொழிற்பேட்டைகள் தமிழ்நாட்டை ஒரு தொழில்துறை மாநிலமாக உருவாக்கும் அடித்தளமாக அமைந்தன. பின்னர், கருணாநிதி காலத்தில் அவை மேலும் வலுப்படுத்தப்பட்டன. மென்பொருள் தொழில் வளரத் தொடங்கிய காலத்தில், கருணாநிதி, முதலீடுகளை ஈர்க்க மாநிலங்களில் முதன்முறையாக மென்பொருள் கொள்கைகளை உருவாக்கினார். டைடல் பார்க் என்னும் மென்பொருள் பூங்காவையும் உருவாக்கினார். 1996ஆம் ஆண்டு தொடங்கிய ஸ்ரீபெரும்புதூர் வாகன உற்பத்தித் தொழிற்பேட்டை, தமிழகத்தை கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக உருவாக்கியது.

தமிழக அரசுகளின் மூன்றாவது அச்சு என்பது சமூக நீதி. 1915ஆம் ஆண்டில் தொடங்கிய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், பின்னர் அது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடாக மாறியது. அதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, இந்திய அரசியல் சட்டத்தை மாற்றும் அழுத்தம் தமிழகத்தில் எழுந்தது. அரசியல் சட்ட மாற்றத்துக்கான போராட்டங்களை பெரியார் நடத்தினார். தமிழக முதல்வர் காமராசர் அதை அரசின் வழியே முன்னெடுத்து, அரசியல் சட்டத் திருத்தத்துக்கு வழிகோலினார். அதன் பின்னர் சட்டநாதன் கமிட்டி, 69% இட ஒதுக்கீடு, அதற்கான அரசியல் சட்டப் பாதுகாப்பு என இட ஒதுக்கீட்டுக் கொள்கை வலுவாகத் தன்னை ஊன்றிக்கொண்ட ஒரு மாநிலமாக தமிழ்நாடு மாறியது.

இன்று தமிழ்நாட்டின் அரசியல், மக்கள் நலத் திட்டங்கள், தொழில் துறை ஆதரவுக் கொள்கைகள், சமூக நீதி என்னும் இந்த மூன்று அச்சுகளின் மீதுதான் நகர்கிறது என்பதை நாம் காண முடியும். திமுக பதவியேற்ற நாளில் இருந்தே, முதல்வர் மு.க.ஸ்டாலின் இதைப் பல இடங்களில் பேசிவந்ததைக் காண முடிகிறது.

பிடிஆரும் தமிழ்நாட்டின் இந்த மூன்று கொள்கைகளின் தனித்துவத்தை, அதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்கை, வரலாற்றுப் பின்னணியைத் தொடர்ந்து ஊடகங்களில், குறிப்பாக தேசிய ஆங்கில ஊடகங்களில் பேசிவந்தார். எல்லாம் சரி, இதுவரை சில விஷயங்களில் திட்டமிட்டும், சில விஷயங்களில் தற்செயலாகவும் இணைந்து உருவாக்கிக்கொண்ட பொருளியல் போக்குக்கு 'திராவிட மாதிரி' என்று பெயர் சூட்டி, அதற்குத் திட்டவட்டமான ஓர் உள்ளடக்கத்தைத் தமிழக அரசு கொடுக்க முனையும் இந்நாட்களில், அது கொண்டுவந்திருக்கும் 2022 நிதிநிலை அறிக்கையில் எந்த அளவுக்கு இந்த மூன்று அச்சுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றன?

நாம் இப்படி சில காரணிகளைப் பிரித்துக்கொண்டால் மேற்படி கேள்விக்கு எளிதாகப் பதில் தேட முடியும் என்று எண்ணுகிறேன்.

  1.  முதன்மைப் பொருளாதார வளர்ச்சி
  2.  பொருளாதார வளர்ச்சி, முதலீடு மற்றும் வேலை வாய்ப்பு
  3.  ஒடுக்கப்பட்டவர்களுக்கான சமூகப் பொருளாதார அதிகாரப் பகிர்வு
  4.  கல்வி மூலம் பெண்களுக்கான உரிமைகளை நிலைநாட்டல்
  5.  சமூகப் பாதுகாப்பு அமைப்புகளின் வலுவாக்கம்
  6.  அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வறுமை ஒழிப்பு
  7.  சுற்றுச் சூழல் நீடித்து நிலைக்கும் மேம்பாடு

எல்லாத் தளங்களிலும் சமூக நீதி என்னும் முக்கியக் குறிக்கோள்களை   முன்வைத்து இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறது அரசுக் குறிப்பு.

மக்கள் நலத் திட்டங்களை, இலவசங்கள் என அருவெறுப்பாகப் பார்க்கும் வட இந்திய ஆங்கில ஊடகப் பார்வையைக் கடுமையாக மறுக்கும் பிடிஆர், உலகின் மிக மேம்பட்ட சமூகங்கள் பலவும் மிகவும் வலுவான மக்கள் நலக் கொள்கைகளையும், சுதந்திரச் சந்தைப் பொருளாதாரக் கொள்கையையும் ஓன்றாக இணைத்துச் செல்பவை என வாதிடுகிறார். ஸ்வீடன், டென்மார்க், நார்வே போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளை உதாரணமாக முன்வைக்கிறார்.

திராவிட சித்தாந்தத்தின் முத்தாய்ப்பான திட்டம் என மூவலூர் ராமாமிருதம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தைச் சொல்லலாம். வெளிப் பார்வைக்கு இது திருமண உதவித் திட்டம் எனத் தோன்றினாலும், உண்மையில், இது உண்மையில் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகத் தோன்றிய திட்டம். பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு 25000 ரூபாயும், 12 ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு 50000 ரூபாயும், டிகிரி / டிப்ளமா படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும் திருமண உதவியாக வழங்கப்படுதல் அவர்கள் அந்தப் படிப்பை முடிக்க ஒரு தூண்டுதலாக இருக்கும் என்னும் நோக்கில் தொடங்கப்பட்டது. அது இன்று மங்கிப்போன ஒரு திட்டம். இன்று தமிழகத்தில் 50% மாணவர்கள், கல்லூரிப் படிப்புக்குச் செல்கிறார்கள். எனவே பத்தாம் வகுப்பு / 12 ஆம் வகுப்பு வரை பெண்கள் படிக்க வேண்டும் என இருந்த அலகு உயர்ந்துவிட்டது.

இந்த நிதிநிலை அறிக்கையில், அந்தத் திட்டம் மறுசீரமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 6-12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்ற பெண்களுக்கு, அவர்கள் கல்லூரி படித்து முடிக்கும் காலம் வரையில், மாதம் ரூபாய் ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என அந்தத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது.

1990-களுக்குப் பிறகு, தனியார் பள்ளிகள் பெருகிய பின்னர், அரசுப் பள்ளிகள் ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் ஏழைகளுக்கான புகலிடமாக மாறிப்போயுள்ளது. கரோனாவுக்குப் பின்னரான காலத்தில், கீழ் மத்திய வர்க்க மக்களில் பெரும்பாலானோர், தனியார் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல், அரசுப் பள்ளிகளுக்கு மாறியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ஆசுவாசம் அளிக்கும் திட்டமாக இது தோன்றுகிறது.  இதனால், கல்லூரி செல்லும் பெண்களின் சதவீதம் மிக நிச்சயமாக அதிகரிக்கும்.  அவர்கள் திறன் உயர்ந்து, பொருளாதாரத் தன்னிறைவை அடைவார்கள். கல்லூரி செல்லும் பெண்களின் திருமண வயது அதிகரிக்கும். ஆரோக்கியமான வயதில் பெண்கள் குழந்தை பெறுவார்கள். குழந்தை இறப்பு சதவீதமும், மகப்பேறு காலத்தில் பெண்கள் இறக்கும் சதவீதமும் வெகுவாகக் குறையும். சரியான வகையில் செயல்படுத்தப்பட்டால், வருங்காலத்துக்கான பெரும் சமூக முதலீடாக இது அமையும்.

இத்துடன் சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இலவசப் பேருந்து வசதி, மகளிர் நலத்தில், நல்வாழ்வில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஒன்று.

உலகில் பாலினச் சமத்துவம் சரி செய்யப்பட்டால், அது உலகப் பொருளாதாரத்தை 12 ட்ரில்லியன் டாலராக உயர்த்தும் என உலகப் புகழ்பெற்ற மெக்கின்ஸி ஆலோசனை நிறுவனத்தின் ஆய்வு ஒன்று சொல்கிறது. (இந்தியப் பொருளாதாரத்தின் அளவு 2.6 ட்ரில்லியன் டாலர்) எனவே, அரசுகள் தங்கள் நிதி முதலீட்டுக்குச் சிறந்த லாபம் பெற வேண்டுமெனில், பெண்கள் நலனில் முதலீடு செய்வதே மிகச் சிறந்த வழி என்கிறார், வெறும் பாதக் கல்லூரி என்னும் உலகப் புகழ் பெற்ற தன்னார்வல நிறுவனத்தின் முக்கிய மேலாண் அதிகாரி மேகன் ஃபலோன்.

இந்த நிதிநிலை அறிக்கையின் இன்னொரு முக்கியமான முன்னெடுப்பு விளிம்பு நிலையில் வாழும் ஆதிவாசிமக்களுக்கான வீடுகள் அமைக்க 50 கோடி நிதி ஒதுக்கல் என்பது மிக முக்கியமான திட்டமாகும். பெரும்பாலும் அரசின் திட்டங்களில் பங்கு பெற்றுப் பயன்பெறாதவர்கள் என இவர்களைச் சொல்ல முடியும்.  சரியாக முன்னெடுக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகளில், அவர்கள் அனைவருக்கும் இலவச வீடுகளை வழங்கி விட முடியும்.

ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் புதிய தொழில்கள் தொடங்க ஒதுக்கப்பட்ட 30 கோடி நிதி மிக முக்கியமான முன்னெடுப்பாகும். ஒடுக்கப்பட்ட மக்களின் நிலைமைக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று அவர்கள் பொருளாதார சக்திகள் அல்ல என்பதே. தலித்களின் தொழில்களுக்கு ஒதுக்கப்பட்ட இந்தத் தொகை குறைவானதே. வரும் ஆண்டுகளில் இது பல மடங்கு அதிகரிக்கப்பட வேண்டிய ஒன்று.

அரசின் கொள்முதலில் 5% தலித் தொழில் முனைவோரிடம் இருந்தது வாங்கப்பட வேண்டும் என்னும் கொள்கையும் வரவேற்கத்தக்கதே. இது தவறாக உபயோகப்படுத்தப்படாமல் செயல்படுத்தப்பட வேண்டும். இதை மிக முக்கியமாக ஊழல் தடுப்பு நிறுவனம் மூலம் அரசு நேரடியாகக் கண்காணித்து உண்மையான பயனாளிகளுக்குப் பலன் சென்று சேரும் வகையில் செயல்படுத்த வேண்டும்.

இவை தவிர கல்வி, ஊரகத் துறை, சமூக நலத்துறைகளுக்கான நிதி, இந்த ஆண்டைக் காட்டிலும் 7500 கோடி அதிக ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளது வரவேற்கத்தக்க அம்சமாகும். இந்த முதலீடுகள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்திற்கு செல்பவை. அந்த அளவில் அவை உதவக் கூடியவையே. அடுத்து வரும் கட்டுரையில் கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில் துறை முன்னெடுப்புக்களைக் காண்போம்.

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


3

2

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Sakthivel   2 years ago

வேலைவாய்ப்பு, தற்சார்பு பொருளாதாரம் மற்ற எந்த முன்யெடுப்புகளும் இல்லை.. ரோடுக்கு , பாலத்துக்கும் அதிக அளவில் பணம் செலவிடப்படுகிறது.. மிக பின்தங்கிய நாடுகளான ஆப்பிரிக்காவில் கூட ஒரு ரோடு 30 ஆண்டுகள் எப்படி மாறும் என்றளவில் திட்டமிடப்படுகிறது , ஆனால் இங்கு நன்றாக இருக்கும் ரோடுகள் இடிக்கப்பட்டு புதிதாக ஒன்று கட்டப்படுகிறது. எந்த ஒரு நிறுவனமும் நிர்வகிக்கும் செலவினங்களை மொத்த வருமானத்தில் ஒற்றை இலக்கிலே வைத்துயிருக்கிறார்கள் ஆனால் இங்கு அதித செலவினங்கள் நிர்வாக செலவாகவே போய்விடுகிறது. சாராயம் போன்ற அரசுக்கு நஷ்டமும், மக்களுக்கு தீங்கும் தரும் திட்டங்கள், அரசியல் பினாமிகளின் கருப்பு பணத்திற்காக அப்படியே வைத்து வேடிக்கை பார்க்கிறோம். முறையற்ற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு என்ன செய்கிறோம். அரசு நிறுவனங்களை அரசின் டெண்டர்களில் பங்கேற்க அரசியல் பினாமி கம்பெனிகளில் தடையேற்படுகிறது. கிரிஸ்டி என்ற நிறுவனம் இலவச அரிசி, சத்துணவு முட்டை பொது விநியோகத்தில் 15000 கோடி கொள்ளையடிக்கிறது. அரசு மாறினாலும் இந்த மாப்யா கம்பெனிகள் அழிவதில்லை. அதில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் இன்றும் உயர் பதிவிகளில் இருக்கிறார்கள். தவறுகளை களையும் உலகதரம்வாய்ந்த ஆடிட் நிறுவனங்களை வைத்து தணிக்கை செய்தால் தெரிந்துவிடும் அரசின் சொல்லும் செயலும். ஒவ்வொரு அரசு ஊழியரைக்கும் அப்ரைசல் வைத்து பார்த்தால் தெரியும். சென்னையில் ஒரு RTO இருவருடம் இருக்க சில கோடிகள் கேட்கிறார்கள். அன்றாட கஞ்சிக்கு அலைபவனிடம் பட்டாக்கு - 10000 இதெல்லாம் களையமுற்படாமல் நீங்கள் எந்த புள்ளிவிபரம் வைத்து எதைசொன்னாலும் அது ஒரு வெற்றுக்கூச்சல் மட்டுமே.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அரசுடைமைபாராசூட் தேங்காய் எண்ணெய்கோர்பசெவின் கல்லறை வாசகம்பாலசுப்ரமணியன்தமிழ் ஒன்றே போதும்கலைஞர் தெற்கிலிருந்து ஒரு சூரியன்சமையல் எண்ணெயில் கலப்படமா?பச்சுங்கா பல்கலைக்கழகம்சுகந்த மஜும்தார்சமூகப் பிரதிநித்துவம்ஓய்வுபெற்ற அதிகாரிகள்கன்னடம்நாகூர்வின்னி அண்ட் நெல்சன்2ஜிகருத்துஏ.ஏ.தாம்சன்மூன்றாவது மக்களவைத் தேர்தல்சிறுநீரகப் பாதிப்பு370ஆம் அரசியல் சட்டப் பிரிவு நீக்கம்விழுமியங்களும் நடைமுறைகளும்தாளித்தல்வே.வசந்திதேவிவயோதிக தம்பதிஅண்ணாவின் கடைசிக் கடிதம்ஆண்டிகள்மனிதர்கள் மீது மரணம் இடும் முத்திரைகாட்டுத் தீஅ அ அ: ஜெயமோகன் பேட்டிபசுமை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!