சிறுகதை, கலை, இலக்கியம் 10 நிமிட வாசிப்பு

சாவிகள்

டிம் பார்க்ஸ்
17 Oct 2021, 5:00 am
2

னைவியிடமிருந்து பிரிந்து இஸபெல்லுடன் வாழத் தொடங்கி பல ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் வீட்டில் ரேச்சலுடன் இருப்பதாகக் கனவு கண்டான் டானியல். அவர்கள் மீண்டும் ஒன்றாக இருக்கிறார்கள். இஸபெல் அவனைப் பிரிந்துவிட்டாள் அல்லது அவன் ஒருபோதும் ரேச்சலைப் பிரிந்திருக்கவே இல்லை அல்லது ஒருவேளை இரண்டுமே. கனவில் இதனை அவன் உறுதியாக உணர்ந்தபோதிலும், கோமாவிலிருந்து விழித்துக்கொள்கிற ஒரு மனிதனைப் போல மிகவும் பதற்றமாகவும் இருந்தான். தான் உயிருடன் இருக்கிறோமா இல்லையா என்பதிலேயே ஒரு அநிச்சயம்.

இந்தக் கனவுகளில் எல்லாமே அவனது மனம் ஒரு சாவிக்கொத்தினைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்துவிடும். எங்கேயோ - ஒரு பையிலோ, சட்டைப்பையிலோ - ஒரு பழைய சாவிக்கொத்து இருக்கிறது. அந்தச் சாவிகள் ஒரு சிறிய வீட்டிற்கான சாவிகள் என அவனுக்குத் தோன்றியது. பயன்படுத்தவே இல்லாமல் பல ஆண்டுகளாக அவன் வாடகை செலுத்திக் கொண்டிருக்கும் ஒரு வீடு. ரேச்சலோ இஸபெல்லோ இல்லாமல் அவன் தனியாக இருக்க முடிகிற ஒரு வீடு. ஆனால், என்ன காரணத்தினாலோ அவனால் அந்தச் சாவிகளை அதன் நைந்துபோன தோல் வளையத்திலிருந்து பிரித்தெடுக்கவே முடியவில்லை. அவனால் எதையுமே செய்ய முடியவில்லை. 

சில மாறுபட்ட தருணங்களில், ஏன் தன்னிடம் இப்போது தொடர்பில் இல்லை என வினவுவதற்காக அவன் இஸபெல்லிற்கு அலைபேச முயற்சித்தான். ஆனால், தொடுதிரை அவனது விரல்களுக்கு ஒத்திசைய மறுத்துவிட்டது. அவனால் புரிந்துகொள்ள முடியாத விநோதமான குறியீடுகள் திரையில் தோன்றின. 

பிறகு விழித்துப் பார்த்தால், நன்றாக உறங்கிக்கொண்டிருக்கும் இஸபெல்லிற்கு அருகில் அவன் படுத்திருப்பதைக் காண்பான். அது அவனை மிக ஆசுவாசமாகவும் மகிழ்ச்சியாகவும் உணரச் செய்யும். 

ஆனால், ஓர் இரவில் டானியலின் கனவு வேறொரு வடிவத்தை எடுத்துக்கொண்டது. இம்முறை அவன் கனவிலிருந்து விழித்தபோது அருகில் இஸபெல்லிற்குப் பதிலாக ரேச்சல் படுத்துக்கொண்டிருப்பதைக் கண்டான்; அவர்களுக்கிடையேயான பிரச்சனைகள் எல்லாம் சரியாகியிருக்க, தங்களது நிம்மதியான முதுமைக்காலத்தில் ஒன்றாக இருந்தனர் அவர்கள்.  உடனடியாக இஸபெல்லை அழைப்பதற்காக அவன் தொலைபேசியைத் தேடினான். அவர்கள் எப்படிப் பிரிந்தார்கள்? 

காணாமல் போன சாவிகள் எங்கே? ஒருபோதும் தங்கியிருக்காத வீட்டிற்கு வாடகை செலுத்துவதென்பது பெரிய பைத்தியக்காரத்தனமாய் இருந்தது.

இந்த முறை, நிஜத்தில், விழித்துக்கொண்டபோது அவன் இஸபெல்லிற்கு அருகில் படுத்திருந்தான் - ஆனால் அதிர்ந்திருந்தான். உடனே அவன் இஸபெல்லிடம் தன் கனவினைப் பற்றிச் சொல்லிவிட்டான். 

அவள் யோசித்தாள். ஒருவேளை, உனக்குள் ஏதோ ஒரு இடத்தில், நீ மீண்டும் ரேச்சலுடன் சேர்ந்திருக்க விரும்புகிறாயோ என்னவோ!

வாய்ப்பே இல்லை!

நான் ஒன்றும் உன்னைக் குற்றப்படுத்தவில்லை, டான். 

தான் எதுவும் சொல்லாமலேயே இருந்திருக்கலாமோ என்று யோசித்த அவன், இந்த விஷயத்தை இத்துடன் விட்டுவிட விரும்பினான். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு, ‘உன்னுடைய இந்தக் கனவுகளில் ரேச்சல் என்னவாக வருகிறாள், எப்படி இருக்கிறாள்?’ என வினவினாள் இஸபெல். 

டானியல் பெருமூச்செறிந்தான்.

‘ஒரு ஆர்வத்தினால் கேட்கிறேன், வேறொன்றுமில்லை’ எனத் தொடர்ந்தாள் அவள்.

அந்தக் கனவுகள் தெளிவற்றவையாக இருக்கின்றன என்றான் அவன். 

ஒரு மாதத்திற்குப் பிறகு அது மீண்டும் வந்தது. அதன் பிறகு ஏதோ ஒரு புதிரை விடுவிக்கப் பணிக்கப்பட்டதுபோல முழித்தே கிடந்தான் டானியல். அவனும் ரேச்சலும் ஒரு விலையுயர்ந்த வீட்டில் இருக்கிறார்கள்- அதில் இருக்கிற ஒரு பெரிய காற்றோட்டமான அறையை அவர்கள் ஒருபோதும் உபயோகித்ததாகவே தெரியவில்லை. சுவர்களில் வழிகிற நீரானது தரையில் ஒரு குளமாகப் பெருகுகிறது. ரேச்சல் ஒரு வெள்ளை இரவு-உடையில் மங்கலான உருவமாகத் தெரிகிறாள். அப்போதுதான் அவர்கள் கலவியை முடித்ததுபோல் இருக்கிறது. 

இந்தக் கனவுகளில் ரேச்சல் எப்படி இருக்கிறாள் என்கிற இஸபெல்லின் கேள்வியை நினைவுகூர்ந்த டானியல் அதற்கான பதிலைக் கூறுவதற்காக அவளைத் தேடினான்.  ஆனால் அவளோ, ஒரு அலமாரி முழுவதுமிருந்த பாத்திரம் துடைக்கும் துணிகளை அடுக்குவதிலேயே குறியாக இருந்தாள். அத்தோடு அவள் ஏதோ துக்கமாக இருப்பதுபோலவும் தோன்றியது; ஆனால், ஒரு தீவிரமான நோயிலிருந்து மீண்டதுபோன்ற உறுதியும் சேர்ந்தே வெளிப்பட்டது. லேசான கேலியும்கூட. 

அவனைப் பார்த்தால், ஏதோ கள்ளத்தனம் செய்கிற நகைப்பிற்குரிய சிறுவனைப் போல் இருந்தது அவளுக்கு. அவள் இப்படி அவனைக் குற்றப்படுத்தியதும் அவனது மனம் சாவிகளைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிட்டது. உடனடியாக உபயோகிக்கப்போவதில்லை என்னும் பொருட்களைப் பத்திரப்படுத்தியிருக்கும் ஏதோ ஒரு இடத்தில்தான் அவை இருக்க வேண்டும். சமையலறையின் ஏதேனும் ஒரு இழுப்பறையிலோ, ஏதேனும் ஒரு அலமாரியிலோ. இவ்விஷயத்தில் ரேச்சலுக்கான முக்கியத்துவம், அவள் ரேச்சல் என்பதால் இருந்தது. அவள் அவனது முன்னாள் மனைவி. முழங்கையை ஊன்றி எழுந்த டானியல், இஸபெல் அமைதியாகவும் கதகதப்பாகவும் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டான். 

டானியலும் இஸபெல்லும் கிராமத்தினூடாக நீண்ட நடைக்குச் செல்வதை எப்போதும் விரும்புவர். அடுத்த வார இறுதியின் நடையில், இடையில் ஒரு மது விடுதியில் நின்ற அவர்கள், பியர் வாங்கிக்கொண்டு வெளியே இருந்த ஒரு பிளவு மேஜைக்குச் சென்றனர்.

தனது முன்னாள் காதலன் ஜெஃப் தன்னுடன் சமீபத்தில் தொடர்பில் இருப்பதாக இஸபெல் தெரிவித்தாள். அவளுக்குப் பிடிக்கக்கூடும் என அவன் கருதிய ஒரு அரசியல் கட்டுரைக்கான இணைப்புச் சுட்டியை அவன் அவளுக்கு அனுப்பியிருந்தான். ஊழலைப் பற்றி உரக்கப் பேசுவது. 

‘நீ பதில் அனுப்பினாயா?’ 

‘ஓரிரு வரிகள். நட்பிற்காக. ஆனால், அவனுடன் மீண்டும் சேர்வதைப் பற்றி நான் ஒருபோதும் கனவு காண்பதில்லை.’ 

‘அந்தக் கனவுகளை நான் ஒன்றும் வேண்டுமென்றே காணவில்லை’ என்றான் டானியல்.

‘நான் உன்னைக் குற்றப்படுத்துவதாகவே நீ எப்போதும் கற்பனை செய்துகொள்கிறாய். எல்லாவற்றையும் தாண்டி, அதற்கு ஒரு பொருள் இருக்கிறது - நீ ரேச்சலுடன் இருபது ஆண்டுகள் இருந்திருக்கிறாய். எனக்கு ஜெஃப்ஃபுடன் வெறும் இரண்டு ஆண்டுகள்தான் பழக்கம்.’ 

பியர் அருந்தி முடித்துவிட்டு அவர்கள் வீட்டிற்குக் கிளம்பினர். ஆனால், இந்த உரையாடல் இப்போது சூடாகவே 

ஆரம்பித்துவிட்டது; அதை எங்கேனும் நீட்டித்துத்தான் தீர வேண்டும்.

‘கனவுகளுக்கு ஏதோ பொருள் இருப்பதைப் போலவே நாம் பேசிக்கொண்டிருக்கிறோம், அதுதான் பிரச்சினை.’

‘அவை முற்றிலும் தொடர்பற்றவை எனில், உனக்கு ஏன் ஒரே கனவு திரும்பத் திரும்ப வருகிறது?’

‘எனக்கு வேறு பல கனவுகளும் வருவதுண்டு.’

‘ஆனால் நீ அவற்றைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்வதில்லையே!’ 

ஒருவேளை, இஸபெல் தன்னைப் பிரிந்துவிடக் கூடும் என அடியாழத்தில் தனக்கு இருக்கிற அச்சம்தான் இதற்குக் காரணமாக இருக்கக் கூடும் என்றான் டானியல்; அவள் மிகவும் இளையவள்.

தான் ஒருபோதும் அப்படிச் செய்ய மாட்டேன் என மறுத்தாள் இஸபெல். ‘ஆனால், ஒருவேளை நான் போய்விட்டால், நீ மீண்டும் ரேச்சலிடம் செல்வாயா?’

‘நிச்சயமாக இல்லை.’

‘பிறகு?’

‘தனியாக இருப்பேன்’.

இந்தக் கனவுகளின்போது தன் மனதில் தோன்றுகிற அந்தக் கற்பனை வீட்டைப் பற்றி யோசித்தான் டானியல் - அந்தச் சாவிகளால் திறக்க முடிகிற இடம். கிழக்கு புறநகர்ப்பகுதியில் இருக்கும் ஒரு தரைத்தள ஓரறை வீட்டினை அவன் மங்கலாக நினைவுகூர்ந்தான். காயம்பட்ட ஒரு விலங்கு ஒளிந்துகொள்ளக்கூடிய ஓர் இடம்.  ரேச்சலைப் பிரிந்த பிறகு அவன் பல வீடுகளைப் பார்த்திருந்தான் - ஆனால் அவை அனைத்துமே தூசியாகவும் துயரமாகவும் காட்சியளித்தன.

‘இது உளவியல் சார்ந்ததல்ல என்று எனக்கு சிலசமயம் தோன்றுகிறது இஸபெல்’ என்றான் அவன். ‘அரைகுறையாய்க் கரைந்து தேங்கிய சில பழைய அனுபவங்கள் மூளையின் பாதையை அடைத்துக்கொண்டிருக்கின்றன, நாம் அவற்றில் கொஞ்சம் ‘Mr. Muscle’ ஊற்ற வேண்டும்.’

இஸபெல் சிரித்தாள். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அவளது தோழி ஹிலாரி வீட்டிற்கு வந்தபோது, ‘prosecco’ ஊற்றிய அவள், ‘டான் தன் முன்னாள் மனைவியிடம் மீண்டும் செல்வதாக கனவுகள் காண்கிறான்’ என ஹிலாரியிடம் கூறினாள். 

சிரித்தபடியே, ‘ஒ-ஓ!’ என்றாள் ஹிலாரி. ஒரு ஆய்வாளருக்கான நேரம் வந்துவிட்டது.

இதைப் பற்றிய பேச்சு எழுந்ததும் டானியல் மிகவும் சங்கடமாக உணர்ந்தான். அவன் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. நான் என் மனநல ஆலோசகரிடமிருந்து விலகி வெகு காலமாகிறது, மீண்டும் அவரிடம் செல்கிற விருப்பம் எதுவுமில்லை எனத் தெரிவித்த டானியல், ‘நான் மிகத் திருப்தியான மகிழ்ச்சியான மனிதன்’ எனவும் அறிவித்தான்.

‘பிறகு ஏன் நீ இதைப் பற்றிச் சொன்னாய்?’

‘சொல்லியிருக்கக்கூடாதென்றுதான் இப்போது நினைக்கிறேன்.’

கண்களை உயர்த்தி மேஜையைத் தாண்டிப் பார்த்தாள் இஸபெல். ‘இல்லை, நீ செய்தது சரிதான். என்னிடம் சொல்லாமல் நீ தனியாக எதைப் பற்றியாவது கவலைப்பட்டுக்கொண்டிருப்பதை நான் விரும்ப மாட்டேன்.’

‘ஒருவேளை, உங்களுக்கு ஒரு பிரச்சனை தேவைப்பட்டிருந்திருக்கிறது. நீங்கள் அந்த அளவிற்கு அதீத மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள்போல’ என அபிப்ராயப்பட்டாள் ஹிலாரி.

‘சரிதான்போல!’ என ஒப்புக்கொண்டான் டானியல். 

ஆனால், கனவு மீண்டும் வந்தது. அவனும் ரேச்சலும் ஓர் அழகான அறையில் இருந்தனர். முழுவதும் ஒளியாக இருந்த அந்த அறையில், ஸோஃபாவிற்கும் பியானோவிற்கும் இடையில், முழுக்கப் பூக்களால் நிரம்பிய ஒரு குளமும் இருந்தது. சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து ரேச்சல் எதையோ தைத்துக்கொண்டிருந்தாள். செய்வதற்கு எதுவும் இல்லாமல், பளீர் பச்சை நிற களைச்செடிகளால் திணறிக்கொண்டிருந்த குளத்தினுள் வெறித்துக்கொண்டிருக்கிறான் அவன். சிறிய பூச்சிகள் அதன் மேலே படபடத்துக்கொண்டிருந்தன. ‘வேண்டுமானால், நீ அவளை இரவுணவிற்கு வரவழைக்கலாம்’ எனத் தெளிவான குரலில் கூறினாள் ரேச்சல். ‘யாரை அழைப்பது?’ என வினவுகிறான் அவன். ‘யாரையாய் இருக்கும்’ என வினவிக்கொண்டே சிரிக்கிறாள் அவள். ‘உன் சமீபத்திய தொடுப்பைத்தான்!’ டானியலுக்கு விதிர்த்துவிட்டது. ‘நீ என்ன செய்கிறாய் என்பதைப் பற்றி எனக்கென்ன அக்கறை?’ தொடர்ந்தாள் ரேச்சல். ‘என்னை விட்டுச் செல்வதற்கான தைரியம் உனக்கு ஒருபோதும் வராது.’ 

வியர்த்துப்போய் எழுந்த டானியல், இதைப்பற்றி எதுவும் சொல்லக் கூடாதென முடிவெடுத்துக்கொண்டான். ‘தொடுப்பு’ என்பது நிச்சயம் ஒரு அவமரியாதை. ஏற்கனவே இந்தக் கனவுகள் போதுமான பிரச்சனையை உண்டாக்கிவிட்டன. 

என்றாலும், அந்த வாரத்தின் பிற்பகுதியில் இஸபெல் காரைக் கொண்டுசென்று ஒரு தடுப்பில் மோதியதில் அது பஞ்சராகியது. காரின் டிக்கியிலிருந்து மாற்று டயரை எடுத்த டானியல் அதனடியிலிருந்த கறுப்புத் தோல் வளையத்தில் மாட்டப்பட்டிருந்த சாவிக் கொத்தினைக் கண்டான். அது படகு க்ளப்பிற்கு அருகிலிருக்கும் அவனது ஒரு பழைய வீட்டிற்கான சாவிக்கொத்து - வெளி வாயில் சாவி ஒன்று, பாதுகாப்புப் பெட்டகத்திற்கான சாவி ஒன்று, துடுப்புகளை வைக்கும் அலமாரிக்கான சாவி ஒன்று. ‘படகு வலிப்பதென்றால் எனக்கு எவ்வளவு பிரியம்!’ என நினைத்துக்கொண்டான். 

முதன்முறையாக, தனது கனவுகளைப் பற்றி சிந்திப்பதை விடுத்து கடந்த காலத்தைப் பற்றி நேரடியாகச் சிந்தித்தான் டானியல். ரேச்சலும் அவனும் பிரிந்து ஏழு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அப்படி ஒரு முடிவினை அவர்கள் ஏன் எடுக்க வேண்டி இருந்ததென எத்தனை சிந்தித்தும் அவனால் நினைவுகூர முடியவில்லை என்பதைக் கண்டான். 

அப்போது அவன் இஸபெல்லை அறிந்திருக்கவில்லை. பல சச்சரவுகளும் துரோகங்களும் அவர்களுக்கிடையே நிகழ்ந்திருந்தனதான்; ஆனால், அவன் ஏன் அப்படி வெளியேறினான் என்பதை அவை எவற்றாலும் விளக்க முடியவில்லை. 

கடந்த காலமே ஒரு கனவுதான் என எண்ணிக்கொண்டான் டானியல்.  அதிலிருந்து அர்த்தங்களைக் கண்டறிவதற்கு வழியே இல்லை. என்றாலும், அந்தத் திருமணம் முடிவிற்கு வந்ததற்கு முந்தைய கோடைகாலத்தை அவனால் நினைவுகூர முடிந்தது.

எல்லாவற்றையும் காப்பாற்றிக்கொள்ளும் ஒரு முயற்சியாக, ரேச்சலை தன்னுடன் படகு வலிக்க அழைத்திருந்தான் அவன். இரண்டு முறை அவர்கள் ஏரியில் அதனை முயற்சித்தார்கள். நதியைவிட ஏரி சுலபமாக இருந்தது. அந்தப்  பிரயாணங்கள் நம்பிக்கையளிப்பவையாக இருந்தன. அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அதன் பிறகு அவள் அங்கே வருவதற்கு மறுத்துவிட்டாள். ‘படகு வலிப்பதில் நீ திறமைசாலியாக இருக்கிறாய், ஆனால் எனக்கு அது தெரியவில்லை!’ என்று அதற்குக் காரணம் கூறினாள் அவள். 

டானியல் இதைப் பற்றியே ஒரு வாரத்திற்கு யோசித்துக்கொண்டிருந்தான். வசந்தகாலம் வந்துகொண்டிருந்தது, இவை அதன் மிதமான ஆரம்ப நாட்கள். ‘அடுத்த வாரம் படகு வலிக்கச் செல்லலாமா?’ என இஸபெல்லிடம் கோரினான் டானியல். 

‘வானிலையும் சாதகமாக இருந்தால் நாம் ஒரு சுற்றுலாவிற்கும் செல்லலாம்.’ 

‘நல்ல யோசனை’ என்றவள், முகத்தைச் சுளித்தபடி, ‘ஆனால் நீதான் எனக்குக் கற்றுத்தர வேண்டும்’ என்றாள். 

கண்டிப்பாக என்றான் அவன். அது ஒன்றும் அவ்வளவு சிரமமானதல்ல. 

சிறிது நேர யோசனைக்குப் பிறகு அவன் அந்தச் சாவிகளை குப்பைத் தொட்டிக்குள் எறிந்தான். என்றாலும், அந்த நைந்த தோல் வளையத்தை மட்டும் கடந்த காலத்தின் நினைவாக வைத்துக்கொண்டான்! 

© ‘தி நியு யார்க்கர்’

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
டிம் பார்க்ஸ்

டிம் பார்க்ஸ், பிரிட்டிஷ் எழுத்தாளர், இலக்கியப் பேராசிரியர்.

தமிழில்: இல.சுபத்ரா







பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Banu   3 years ago

தமிழ்நாட்டு களமும், கதைப் பொருளும் அல்லாத கதையை மொழிப்பெயர்ப்பதும், வாசகர் வாசிப்பைத் துண்டிக்காமல் தொடரச் செய்வதும் சவாலானப் பணி... அருமை சகோதரி... தங்கள் பணித்தொடர வாழ்த்துகள்.... நாங்களும் தங்களுடன் படகு வலிக்க வரவே விரும்புகிறோம்...

Reply 6 0

Login / Create an account to add a comment / reply.

Satheesh Kumar   3 years ago

It is so satisfying. Peers out some of my nostalgic feel. The translator has done her job very well. Especially "thoduppu" vaarthai prayogam was very well!

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

கூகுள் பேதங்கம் திரையரங்கம்ஜனசங்கம்சிறுபான்மைச் சமூகம்வருமானம்ஹூட்டுமக்களாட்சிக்கு நன்மை உதயநிதிகளின் தலைமை200வது பிரிவுகுடும்ப வருமானம்அல்காரிதம்விஜயேந்திரர்தானியங்கித் துறைபொய்கள்இந்து மகா சபாஅரசியல் கள விதிகள்கலாச்சாரம்ராஜன் குறை கிருஷ்ணன் உதயநிதி ஸ்டாலின் கட்டுரைபொதுவாழ்க்கைகல்வெட்டுகள்ரசாயன உரம்சிறுபான்மைதிமுக தலைவர்மலையாளிகள்சிறுநீர்ப் பாதையில் கல்கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி: ‘ஈ-தினா’ கணிப்புகட்டுரைகள்வி.ராம்கோபால் ராவ் கட்டுரைசமஸ் - சேதுராமன்டென்மார்க்உமர் அப்துல்லா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!