கலை, கவிதை

தூல சூட்சும சந்நிதி

ஷங்கர்ராமசுப்ரமணியன்
26 Sep 2021, 6:00 am
0

கோயில் வாசல்களில்
உலர்ந்த புல்வெளித் திடல்களில்
பஜார் மைதானங்களில்
வந்து நிற்கிறது
ஈக்களை விரட்டச் சுழல்கிறது 
கம்பீரக் கூந்தல் வால்
குதிரையே குதிரையே
எழில் பொங்கிப் பிரவகிக்கும் குதிரையே
உயிர் சமைக்கப்படும் கருப்பைச் சட்டியில்
திரளும் உபரிதான்
உன் அழகா
கலையா
கடவுளா
சுட்டி பீலி குச்சம்
சூடாமணி சிக்குதாகு
சாமரை
வல்லிசை
பல்பிடிக் கண்டிகை
சுருள் திருகு
சேணப்பறி
அங்கவடி
நூபுரப்புட்டில்
பசும்பாழி
சிலம்பு
தாழ்
தண்டை
தலை முதல் கால் வரை
நெற்றி முதல் பிருஷ்டம் வரை
நீ அணியும் அணிகள்
கோபுரங்களில் கோயில் சிலைகளில்
இன்று
எச்சங்கள் ஒச்சங்கள்
குதிரையே குதிரையே
இத்தனை அணிகளையும் பூட்டிய பிறகு
குதிரை அங்கே இருந்ததா
குதிரை இல்லை 
குதிரை இல்லை
குதிரை இல்லை

கிழக்குக் கோபுரத்துக்குள்
நுழைந்து
நந்தியை
நினைவில் இப்போது
தாண்டினாலும்
தலைக்குள் கேட்கத் தொடங்கிவிடுகிறது
தவிலும் நாயனமும்
இசைப்பவர் வேண்டாம்
கருவியும் வேண்டாம்
இன்னும் வெளிச்சம் நுழையாத
இருள்மூலைகளில்
அதன் எதிரொலிகள் பெருமூச்சுகள் கேட்கின்றன
ஒடுக்கிய குதிரைகள்போல்
கொடிமரம் தாண்டிக் கருவறைக்குள்
செல்லும் நுழைவாயிலின்
பக்கவாட்டு மேடையின் மூலையில்
தவிலும் நாதஸ்வரமும் பம்பையும்
புழங்காத நாட்களில் அழுக்குத் துணிகள் சுற்றி
எண்ணெய் மக்கி நெடியடிக்கும் 
சுவரில் தொங்கும்.
உச்சிகாலப் பூஜை வேளையில்
சந்தடி இல்லாத நேரத்தில்
கோயிலுக்குள் புகுவோம் சிறுவர்கள் நாங்கள்
தவிலும் பம்பையும் தொங்கும் மேடையில்
துள்ளி ஏறி
தவிலைத் தப்தப்பென்று அடித்துவிட்டு
அரவமில்லாத மண்டபத்தைத் துடித்தெழுப்பி
பறந்து ஓடுவோம்
ஆமாம்
இன்னமும்
கோயிலின் நடுவில் 
தன் ஆதங்கத்தை 
நூற்றாண்டுகள் அடக்கப்பட்ட பைத்தியத்தை 
ஒலிக்காமல்
இருக்கிறது அந்த வாத்தியம்
கைகளைக் கொண்டு விடுதலை செய்ய முடியாது. 
உள்ளே வா
சந்தடி இல்லாத உச்சிகால வேளையில்
விளையாட்டாக
நுழையும் சிறுவர்களைப் போல உள்ளே வா
உள் ஒடுக்கி
அமர்ந்திருக்கிறது 
தவிலும் பறையும் பம்பையும்
உள்ளே வா
கைகளைக் கொண்டு 
சிலைக்குள் இருக்கும்
குதிரையை
விடுதலை செய்ய முடியுமா
உள்ளே வா.

(பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு...)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஷங்கர்ராமசுப்ரமணியன்

ஷங்கர்ராமசுப்ரமணியன், தமிழ்க் கவிஞர். கட்டுரையாளர், பத்திரிகையாளர். ‘ஆயிரம் சந்தோஷ இலைகள்’, ‘படைத்தவன் மற்றும் எனது வளர்ப்பு மீன்கள்’ உள்ளிட்ட பல்வேறு நூல்களின் ஆசிரியர்.


1

2





பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

புன்மை புத்தி மனுஷ்யபுத்திரன்மொழிவாரி மாநிலங்கள்நவதாராளமயத்தால் அதானிக் குழுமம் அசுர வளர்ச்சி!சீர்திருத்த நாடகம்கொள்கைதலித் இயக்கங்கள்டிம் பார்க்ஸ்நேரடி வரி வருவாய்தமிழ்ப் பண்பாடுபுலன் விசாரணைதளவாய்ப்பேட்டைஎருதுகள்சாஸ்திரங்கள்தார்மீகம்அறிவியல் முலாம்ப.சிதம்பரம் கட்டுரைராஜாஜிஎன்.கோபாலசுவாமிநவதாராளமயக் கொள்கைsamas oh channel interviewதுணைவேந்தர்காலமானார்ராமசந்திர குஹாதேக்கம்சிந்திக்கச் சொன்னவர் பெரியார்இல.சுபத்ராஅமலாக்கத் துறைகோடை காலம்அண்ணாவின் வலியுறுத்தல்புரிந்துணர்வு ஒப்பந்தம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!