சென்னையில் நடந்த 'துக்ளக்' ஆண்டு விழாவில் கலந்துகொண்ட அதன் ஆசிரியர் குருமூர்த்தி வங்கி அதிகாரிகளுக்கு எதிராக அசிங்கமான வார்த்தைகளையும், தவறான தகவல்களையும் தெரிவித்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட ஒன்றிய நிதி அமைச்சர் அதற்குத் தலையாட்டிக்கொண்டிருந்தார். “இன்று வங்கித் துறையில் என்ன பிரச்சினை என்றால், திறமையான அதிகாரிகள் பொதுத் துறை வங்கிகளிலிருந்து ஓடிவிடுகிறார்கள். காரணம், இங்கு சம்பளம் குறைவு, சுதந்திரம் இல்லை. இப்போது கழிசடைகள் மட்டுமே இருக்கிறார்கள். பொதுத் துறை வங்கிகள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் அரசின் பங்கு 49% ஆகக் குறைக்கப்பட வேண்டும். அப்போது ஊடுருவல் இருக்காது. முன்பு 'டெலிபோன் பாங்கிங்' இருந்தது. டெல்லியிலிருந்து போனில் கடன் கொடுக்கச் சொல்வார்கள். அப்படி கொடுக்கப்பட்ட கடன்கள் வராக் கடன்களாகியது” என்றார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது தவறு என்று கண்டித்திருக்க வேண்டும். மாறாக, கோவிட் காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய வங்கி ஊழியர்களையும், வங்கி முகவர்களையும் பாராட்டுகிறேன் என்று மட்டும் சொன்னவர், இப்போது வராக்கடன்களை வசூலித்துவிட்டதால் வங்கிகள் லாபமீட்டுகின்றன என்று சொன்னார். குறைந்தபட்சம் வங்கி அதிகாரிகளைக் கழிசடைகள் எனச் சொன்னது தவறு என்றுகூட பேசவில்லை. கூட்டத்தில் இருந்த பாஜக பிரமுகர்கள் கை தட்டிக்கொண்டிருந்தார்கள்.
இந்நிகழ்ச்சியின் முழு உரையும் 'துக்ளக்' டிஜிட்டலில் ஒளிபரப்பப்பட்டது. கடுமையான எதிர்ப்பின் காரணமாக இப்போது கழிசடைகள் என்று பேசப்பட்ட பகுதியும், பொதுத் துறை வங்கிகளில் குறைந்த சம்பளம் என்று பேசப்பட்ட பகுதியும் வெட்டப்பட்டுள்ளன. ஆனால், வெட்டுவதற்கு முன்பே இது பரவலாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுவிட்டது. இதற்கு எதிரான முதல் குரல் மக்களிடமிருந்து வந்தது. இப்போது வங்கித் துறையிலுள்ள எல்லாத் தொழிற்சங்கங்களும் குருமூர்த்தி மன்னிப்பு கேட்க வேண்டும்; அவர் ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுவிலிருந்து விலக்கப்பட வேண்டும் அல்லது ராஜிநாமா செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை வைத்துள்ளன.
முதலில் குருமூர்த்தியின் கருத்துக்கள் சரிதானா என்று அலசுவோம்.
பொதுத் துறை வங்கிகளிலிருந்து திறமையானவர்கள் தனியார் வங்கிகளுக்கு செல்கிறார்களா?
இல்லை. இல்லவே இல்லை. ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் தனியார் வங்கிகளைவிட்டு பொதுத் துறை வங்கிகளில் அதிகாரிகளாக இணைகிறார்கள் என்பதே உண்மை. ‘எஸ் வங்கி’ திவாலானபோது அதைக் காப்பாற்ற பாரத ஸ்டேட் வங்கியின் துணை நிர்வாக இயக்குநராக இருந்த பிரசாந்த் குமார் இரவோடு இரவாக அனுப்பிவைக்கப்பட்டதை ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் ரஜினீஷ் குமார் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் துணை இயக்குநராக இருந்த ரமேஷ் பாபுவின் பதவி ஓய்வுக்குப் பிறகு, அவரைத் தனது நிர்வாக இயக்குநராக நியமித்துள்ளது கருர் வைஷ்யா வங்கி. அதேபோல, பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக இருந்த அருந்ததி பட்டாச்சார்யா பணி நிறைவுக்குப் பின் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இணைந்துள்ளார். எனவே, குருமூர்த்தி சொன்னது முழுக்க முழுக்க தவறு.
பொதுத் துறை வங்கிகளில் அரசின் பங்கை 49% ஆகக் குறைக்க வேண்டும்; ஆனால், அரசின் கட்டுப்பாட்டிலும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற குருமூர்த்தியின் பேச்சு சாத்தியமா?
இத்தனை ஆண்டு காலம், 1969 முதல் பொதுத் துறை வங்கிகள் அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. ஆனால், தனியார்மயமாக்கப்பட்ட பின் எப்படிக் கட்டுப்பாடு வைத்துக்கொள்ள முடியும்? வங்கிகள் முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் போய்விடும் என்பதே உண்மை. அரசு தன்னுடைய திட்டங்களை அமல்படுத்தகூட வங்கிகளைக் கெஞ்சும் நிலை உருவாகலாம் என்பது அடுத்த உண்மை. இப்போது 44 கோடி ‘ஜன்தன் கணக்கு’களில் 97% கணக்குகளைத் திறந்திருப்பது பொதுத் துறை வங்கிகள்தானே? அரசுத் திட்டங்களை அமல்படுத்துவது அவர்கள்தானே? அரசுக்கும், பொதுத் துறை நிறுவனங்களுக்கும் கடன் கொடுப்பதும் அவர்கள்தானே?
வங்கிகளில் சிபிஐ, சிவிசி கட்டுப்பாடுகள் கூடாது என்கிறார் குருமூர்த்தி. இது சரியா?
தவறு செய்பவர்கள்தானே சிபிஜ, சிவிசி பற்றி பயப்பட வேண்டும்? அப்படியிருக்க ஏன் கட்டுப்பாடுகளை நீக்கச் சொல்கிறார்? இந்தக் கட்டுப்பாடுகள் இருந்தும் சில தவறுகள் நடக்கின்றன; மொத்தமாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி தனியாருக்கு விட்டுவிட்டால் வங்கித் துறை முழுமையாக சீரழியும்.
குருமூர்த்தியின் உண்மையான நோக்கம்தான் என்ன?
இவர்கள் அனைவருமே இடஒதுக்கீடுக்கும், சமூக நீதிக்கும் எதிரானவர்கள். இவர்களுக்கு வங்கித் துறையில் இருக்கும் இடஒதுக்கீடு பிடிக்கவில்லை. எனவே, தனியார்மயமாக்கலை வரவேற்கிறார்கள். அதோடு இடஒதுக்கீடு முடிந்துவிடும் என்று நாம் கருத முடியும். இந்த எண்ணத்திலிருந்தே வருகிறது கழிசடைகள் எனும் பேச்சு.
டெலிபோன் பாங்கிங் என்பது என்ன?
பிரதமர் மோடியும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், ஆடிட்டர் குருமூர்த்தியும் ஒரு பொய்யைத் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் உண்மையாகிவிடும் என நினைக்கிறார்கள். நிதி அமைச்சர், குருமூர்த்தி சொன்னதை ஆமோதித்து டெலிபோன் மூலம் மாமனுக்கும், மச்சானுக்கும் கடன் கொடுக்கச் சொன்னது வராக்கடனுக்கு காரணமாகிவிட்டது என்கிறார். சரி, 8 வருடங்களாக ஆட்சியில் இருப்பவர்கள் யாருடைய மாமனுக்கும், மச்சானுக்கும் கடன் கொடுக்கப்பட்டது என்றும் தெரிவிக்கலாமே!
நிதி அமைச்சர் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகர் சொக்சியின் சொத்துக்களைக் கையகப்படுத்தி விற்பனை செய்ததனால் வங்கிகளுக்கு இப்போது ஆதாயம் என அதே கூட்டத்தில் சொன்னார்களே?
இவர்களின் சொத்துகளில் சிலவற்றை வங்கிகள் விற்றுள்ளன. கிடைத்தது மிகக் குறைவு. இன்னும் ஏராளம் பாக்கி உள்ளது. 8 ஆண்டுகளாகியும் விஜய் மல்லையாவை ஏன் இந்தியாவுக்கு கொண்டுவர முடியவில்லை? பல ஆண்டுகளுக்கு முன் ஓடிப்போனவர்களை இதுவரை ஏன் இந்தியாவுக்கு கொண்டுவர முடியவில்லை?
உண்மையில் கடந்த 8 ஆண்டுகளில் கடன்கள் ஏராளமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால், வசூலிக்கப்பட்டது குறைவு. இதை ஜெயந்த் சின்கா தலைமையிலான நிதித் துறைக்கான நிலைக்குழுவே தெரிவித்துள்ளது.
பொறுப்பேற்க வேண்டும்
நிதியமைச்சரையும் வைத்துக்கொண்டு இப்படியெல்லாம் உண்மைக்குப் புறம்பான விஷயங்களையும் அவதூறுகளையும் ஒரு பத்திரிகையாளர் என்ற பெயரில் குருமூர்த்தி பேசியது மோசம். தன் வார்த்தைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டிய கடமை அவருக்கு உண்டு. தன் பேச்சை நிரூபிக்க வேண்டும் அல்லது குருமூர்த்தி மன்னிப்பு கேட்க வேண்டும். ரிசர்வ் வங்கி பொறுப்பிலிருந்து குருமூர்த்தி பதவி விலக வேண்டும் அல்லது அவர் பதவி நீக்கப்பட வேண்டும்.

7

2

1




பின்னூட்டம் (5)
Login / Create an account to add a comment / reply.
Satheesh Kumar 1 year ago
அருமை
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
J. A. Dominic Raj 1 year ago
குரு மூர்த்தியின் கருத்துகளுக்கு சிறந்த எதிர்வினை இந்த கட்டுரை. வாழ்த்துகள் பிராங்கோ சார்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Rajendra kumar 1 year ago
இந்த துக்ளக் பத்திரிக்கை நிகழ்ச்சி வருடா வருடம் சர்ச்சைகளையும் பொய்யையும் பரப்புவதே , நிறுவனர் சோ வின் காலம் தொட்டே வருவது... கெட்டிக்காரன் புளுகு பத்து நாள்... இவங்க பொழப்பும் அதுதான்...
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
SUNDARAN M 1 year ago
குருமூர்த்தியின் நீண்ட நெடிய "பொதுவாழ்வை", "பத்திரிகை தர்மத்தை" ,"ஸிந்தனை"யை அறிந்தவர்கள் அவரிடம் தரத்தை எதிர்நோக்கமாட்டார்கள்.
Reply 5 0
Login / Create an account to add a comment / reply.
VIJAYAKUMAR 1 year ago
தரவுகளுடனும் தர்க்கத்துடனும் எழுதப்பட்ட அற்புதமான கட்டுரை.
Reply 4 0
Login / Create an account to add a comment / reply.