கட்டுரை, சட்டம் 3 நிமிட வாசிப்பு

குருமூர்த்தியார் மறந்துவிட வேண்டாம்

கே.சந்துரு
26 Aug 2022, 5:00 am
2

நான் ‘ஜுனியர் விகடன்’ இதழில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பாஸ்போர்ட் வழக்கில் கொடுத்த தீர்ப்பை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதில், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒரே தீர்ப்பிலேயே பாஜக தலைவர் அண்ணாமலையைப் பாராட்டியும், அவர் புகார் கூறியிருந்த காவல் துறை அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதத்தின் மீது குற்றம் ஏதும் இல்லை என்றும் எழுதியிருந்ததை விமர்சித்திருந்தேன் (7.8.2022).

இதற்கு எதிர்வினையாக ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி 24.8.2022 தேதியிட்ட இதழில் வி.சி.கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்தூர் என்பவர் கேட்டிருந்த கேள்விக்குப் பதில் சொல்லும் முகமாக என்னை விமர்சித்திருந்தார். அந்தக் கேள்வியும் பதிலும் இதுதான்: 

“ஜி.ஆர்.சுவாமிநாதனை மாணவராகப் பயிலும்போதே எனக்குத் தெரியும். அவர் உக்கிரமாக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை உள்வாங்கியவர் என்று நீதிபதி சந்துரு விமர்சனம் செய்தது சரியா?

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், உக்கிரமான ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை உள்வாங்கியவர் என்று முன்னாள் நீதிபதி சந்துரு கூறியதற்கு, நம் மீது சீனப் படையெடுப்பை ஆதரித்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை உள்வாங்கியவர் சந்துரு என்றும், இப்போது திமுகவின் அபிமானியாக இருப்பவர் என்றும் யாராவது கூறலாம். எனவேதான் விஷயமறிந்த நம் பெரியோர் ரிஷிமூலம், நதிமூலம் பார்க்கக் கூடாது என்று கூறினர். பதவியில் இருக்கும் நீதிபதிகளின் பின்னணி வெளிவந்தால், பலர் கோர்ட் பக்கமே போக மாட்டார்கள். நீதிபதியின் சொந்த கருத்து எதுவானாலும், அரசியல் சாசன விதிகள்தான் அவர்கள் முடிவுகளை நிர்ணயம் செய்யும். அவர்கள் மாறி முடிவு செய்தால், மேல் நீதிமன்றம் அவர்கள் முடிவுகளைத் திருத்தும். முன்னாள் நீதிபதி சந்துரு பேசியது சரியல்ல.” 

சோ எழுதிய குறிப்பு

இதற்கு எதிர்வினையாக என்னைப் பலரும் எழுதுமாறு கேட்டுக்கொண்டார்கள். எனக்கு அதில் விருப்பமும் இல்லை; ஒருவேளை அப்படி எழுதினால் குருமூர்த்தியார் அதை வெளியிடுவாரா என்பதில் தெளிவும் இல்லை. அதேசமயத்தில், ‘துக்ளக்’ இதழைத் துவங்கி அதன் ஆசிரியர் பொறுப்பில் இருந்த சோ நான் ஓய்வுபெற்ற சமயத்தில், அந்த இதழில் வெளியான கட்டுரையொன்றில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதை இங்கே பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றியது.

நான் உயர் நீதிமன்ற நீதிபதியாக 31.7.2006 அன்று பதவியேற்றுக்கொண்டு 8.3.2013 அன்று ஓய்வுபெற்றேன். அச்சமயம் என்னுடைய பணியைப் பாராட்டி பல நாளிதழ்கள், பருவ இதழ்கள் கட்டுரைகள் வெளியிட்டிருந்தன. ‘துக்ளக்’ இதழும் விதிவிலக்கு இல்லை; 6.3.2013 தேதியிட்ட இதழில் அது ‘பாராட்டுக்குரிய நீதிபதி’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த கட்டுரையிலிருந்து ஒரு பகுதி இது: 

“இன்றைய தரம் தாழ்ந்த சூழ்நிலையிலும், சில தனிப்பட்டவர்களின் நடவடிக்கை நமது நம்பிக்கையைத் துளிர்விடச் செய்கிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு மார்ச் மாதம் 8ஆம் தேதி பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். 

ஓய்வுபெற்ற பின் தனக்கு ஏதேனும் ஓர் உயர் பதவியை மாநில அல்லது மத்திய அரசு வழங்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், தான் பதவியில் இருக்கும்போது அரசுகளுக்கும், அரசின் ஆதரவு பெற்றவர்களுக்கும் சாதகமாக தீர்ப்புகளை வழங்குவது பல நீதிபதிகளுக்கும் கைவந்த கலை. அப்படி எதுவும் செய்யாமல், தரமான, நேர்மையான தீர்ப்புகளை வழங்கி, தனது ஓய்வு காலத்தி்ல் நிறைய படிப்பேன், எழுதுவேன் என்று சந்துரு கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

இதுபோன்ற உயரிய நேர்மைக் குணமும், செயலாற்றலும், துணிவும் உள்ள ஒரு நீதிபதியைப் பற்றி நான் பாராட்டி எழுதியுள்ளதை நம் இளைஞர்கள் படித்து, பிற்காலத்தில் நீதிபதிகளாக, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாகப் பதவி ஏற்பவர்கள் இவரைப் போல் உயர்வாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அது நடந்தால் நிர்வாகம் சீர்படும். வாழ்க நீதிபதி சந்துருவின் புகழ்!”

மேற்படி கட்டுரையானது ‘துக்ளக்’ வாசகர்களுக்கு நினைவில் இருக்கலாம். ஆனால், வசதியாக இவற்றை மறந்துவிட்ட குருமூர்த்தியார் இதைப் படிப்பது நல்லது.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கே.சந்துரு

கே.சந்துரு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி; சமூக விமர்சனங்களை முன்வைப்பதோடு நீதித் துறையின் சீர்திருத்தங்களுக்கான சிந்தனைகளையும் தொடர்ந்து முன்வைப்பவர். ‘ஆர்டர்.. ஆர்டர்!’, ‘நீதிமாரே, நம்பினோமே!’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.


3

5

1




பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Narayanamoorthy. C   2 years ago

பத்திரிகை தர்மம் என்றால் என்ன என்றே தெரியாத சாதி வெறிபிடித்த குருமூர்த்திக்கு மதிப்பிற்குரிய நீதிபதி பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Seyed Bukhari   2 years ago

குருமூர்த்தி அவர்கள் பழைய துக்ளக்கையேனும் வாசித்து விட்டு பதில் சொல்லியிருக்கலாம். அவசரத்தில் பதிலுரைத்து விட்டார்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

வி.டி.சாவர்க்கர்பாடத் திட்டம்சட்டம் தடுமாறலாம்மரபியர்பத்திரிகாதிபர் மனுஷ்எலும்பு வலிமை இழப்புகறியாணம்தான்சானியாவின் முக்கிய நகரங்கள்தி அதர் சைட் ஆஃப் சைலன்ஸ்இந்தியாவுக்கான திராவிடத் தருணம்குஜராத் 2002ஜூன் 29ராஜமன்னார் குழுசொப்புச் சாமான்கள்இலவசமா? நலத் திட்டமா?புதிய நிர்வாகிகள்தாதாஷமக்கான்தியாகு நூலகம்துறைமுகம்வெள்ளப் பேரிடர்வல்லரசு நாடுஎம்.ஐ.டி.எஸ்.வசுந்தரா ராஜ சிந்தியா - அருஞ்சொல்மூன்று களங்கள்மிசோரம்பாரத் ராஷ்டிர சமிதிஃபருக்காபாத்பள்ளிக்கல்வியில் தேர்தலும் ஜனநாயகப் பாடமும்குஜராத்தியர்களின் பெருமிதம்நாலாவது கட்டம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!