கட்டுரை, உற்றுநோக்க ஒரு செய்தி 6 நிமிட வாசிப்பு

வடவர் ஆதிக்கத்தில் இந்திய ஆட்சிப் பணிகள்

டி.வி.பரத்வாஜ்
14 Dec 2021, 5:00 am
3

ந்திய ஆட்சிப்பணியில் வட இந்தியர்களின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கிறது. அதேபோல, வசதியுடைவர்கள் அதிகம் கோலோச்சும் சூழலும் அதிகரிக்கிறது. முன்னதாக இருந்த நிலைமையை சமீபத்திய போக்குகள் மேலும் தீவிரமாக்குவதைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பிராந்திய பிரதிநிதித்துவம்

இந்தியா குடியரசான எழுபது ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், வடக்கின் பிரதிநிதித்துவம் 20% எனும் நிலையிலிருந்து, 30.65% எனும் நிலை நோக்கி உயர்ந்திருக்கிறது. ஆனால், தெற்கின் பிரதிநிதித்துவம் 35% எனும் நிலையிலிருந்து 24.66% எனும் நிலை நோக்கி இறங்கியிருக்கிறது. இதேபோல, மேற்கின் பிரதிநிதித்துவம் 16% எனும் நிலையிலிருந்து, 8% எனும் நிலைக்கு இறங்கியிருக்கிறது. கிழக்கின் பிரதிநிதித்துவம் 10% எனும் நிலையிலிருந்து 13% எனும் நிலைக்கு உயர்ந்திருக்கிறது. மத்தியப் பிராந்தியம் 20% எனும் நிலையை அப்படியே ஒட்டிச்சென்றுகொண்டிருக்கிறது. வடகிழக்கின் பிரதிநிதித்துவம் 2.01% எனும் நிலையில் உறைந்திருக்கிறது.

பாலினப் பிரதிநிதித்துவம்

1951 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட 6,575 ஐஏஎஸ் அதிகாரிகளில் மகளிர் 18%. மிச்ச 72% பேர் ஆண்கள். உண்மையில் 1950-களில் பாலினச் சமத்துவம் படுமோசமான நிலையில் இருந்தது. அப்போது 2.7% பேர் மட்டுமே பெண்களாக இருந்தார்கள்; 97.3% பேர் ஆண்களாகவே இருந்தார்கள். இப்போது ஆண்களின் விகிதம் 68.9% ஆகக் குறைந்து, பெண்களின் விகிதம் 31.1% ஆக உயர்ந்திருக்கிறது.

வயது பிரதிநிதித்துவம்

இந்தியா குடியரசான 1950-களில் இந்திய ஆட்சிப் பணியில் சேருகிறவர்களின் வயது சராசரியாக 23 ஆக இருந்தது. சென்ற பத்தாண்டுகளில் இது 27 ஆக உயர்ந்திருக்கிறது.

கல்விப் பிரதிநிதித்துவம்

தேர்ந்தெடுக்கப்படும் படிப்புகளில் அறிவியல், கணிதம், தொழில்நுட்பம் ஆகியவற்றை சார்ந்து சொல்லப்படும் ‘ஸ்டெம்’ பிரிவு மாணவர்கள் கோலோச்சுவது அதிகரிக்கிறது. 1950-களில் இவர்களுடைய எண்ணிக்கை 15.4% ஆக இருந்தது; இப்போது கிட்டத்தட்ட 80% ஆக அதிகரித்திருக்கிறது.

தரவுகள் சொல்லும் மறைமுக செய்தி என்ன?

முதலாவது, இந்தியாவின் அரசியல் ஆட்சி மன்றத்தில் வட இந்தியாவின் ஆதிக்கமே அதிகம். மக்களவையை எடுத்துக்கொண்டால், 543 தொகுதிகளில் தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவம் வெறும் 23.9%. (தமிழ்நாடு&புதுவை -40, கர்நாடகம் 28, ஆந்திரம் 25, கேரளம் 20, தெலங்கானா 17).

ஆனால், இந்தி பெரும்பான்மை பேசும் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மட்டும் 42%. டெல்லி 7, உத்தர பிரதேசம் 80, உத்தராகண்ட் 5, ராஜஸ்தான் 25, பிஹார் 40, ஜார்கண்ட் 14, மத்திய பிரதேசம் 29, சத்தீஸ்கர் 11, இமாச்சல பிரதேசம் 4 என்று 225 தொகுதிகள். இவற்றை அன்றி மஹாராஷ்டிரம், குஜராத் போன்றவை இந்தி பெரும்பான்மை மாநிலங்கள் இல்லை என்றாலும், இந்தி பிராந்திய அரசியல் தாக்கத்திலிருந்து விலகாதவை என்பதை நாம் அறிவோம்.

ஆகையால், தெற்கின் பிரதிநிதித்துவம் அதிகாரத்தில் கொஞ்சம் அதிகமாக இருந்தது ஏதோ ஒருவகையில், இந்தி பெரும்பான்மைவாதத்துக்கு ஈடு கொடுக்க வல்லதாக மறைமுகமாக இருந்தது. இப்போது அங்கும் பேரிழப்பு நடக்கிறது. வடக்கின் எண்ணங்களும், திட்டங்களும் மேலோங்க இது மேலும் உதவலாம்.

இரண்டாவது, தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் வயது அதிகரிப்பதானது, தேர்வுக்காகத் தயாராகும் காலகட்டம் அதிகரிப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அதாவது, படிப்புக்காகப் பல ஆண்டுகள் செலவிடும் ஆற்றல் கொண்டவர்கள் அதிகம் உள்ளே வருகிறார்கள். ஏழை மாணவர்களால் இவ்வளவு காலம் செலவிட்டு தேர்வுகளுக்குத் தயாராக முடியாது. ஆகையால், வசதி படைத்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று சொல்லலாம்.

மூன்றாவது, ஒரே நல்ல செய்தி இதுதான். பெண்களின் விகிதாச்சாரம் தொடர்ந்து அதிகரிக்கிறது. சமத்துவத்துக்கு இது போதுமான அளவு இல்லை என்றாலும், ஆரோக்கியமான போக்குதான் இது.

நான்காவது, படிப்புப் பிரிவுகளில் ஒரே மாதிரியான பிண்ணணி கொண்டவர்கள் கோலோச்சுவது நல்லது இல்லை. இலக்கியம், வரலாறு,  சமூகவியல் என்று பல துறைகளையும் சேர்ந்தவர்கள் – முக்கியமாக சமூக அறிவியல் துறைகளைச் சார்ந்தவர்களின் எண்ணிக்கையும் நிர்வாகத்தில் அதிகமாக இருப்பது நல்லது. இப்போதைய போக்கு சரியில்லை.

முடிவாக!

ஓர் அரசியலர் ஐந்தாண்டுகள் ஆட்சியில் இருக்கிறார்; பத்தாண்டுகள் தொடர்ந்து அதிகாரத்தில் அவர் நீடிப்பது பெரும் சவால். ஆனால், கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், நிர்வாகத்தை முன்னெடுப்பதிலும் சக கூட்டாளிகள்போலச் செயல்படும் அதிகாரிகள் 25-35 ஆண்டுகள் வரை அதிகாரத்தில் இருக்கும் சாத்தியம் கொண்டவர்கள். மறைமுகமாக இவர்களும் இந்தியாவை ஆள்கிறவர்கள். இந்த இடத்தில் சரியான பிரதிநிதித்தும் இருந்தால்தான் சமத்துவம் நிலவும். இன்றைய சூழல் அப்படி இல்லை. இது மாற வேண்டும்.

அரசியல் வர்க்கத்தில் வட இந்தியர்களின் எண்ணிக்கை எப்போதுமே அதிகம். இந்நிலையில், அதிகார வர்க்கத்தில் தென் இந்தியர்கள் கணிசமாக இருந்ததால் முடிவுகள் எடுக்கும் இடத்தில் பல தரப்பினரையும் பற்றி யோசிக்கும் சாத்தியம் முன்பு அதிகம் இருந்தது. இப்போது அது குறைகிறது. வடக்கின் எண்ணிக்கை அதிகம் ஆகிறது.

முந்தைய போக்கு

பெரும்பாலும் வயதில் இருபதுகளின் இறுதிப் பகுதியில் இருப்பவராகவும், ஆடவராகவும், (ஸ்டெம்) அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் படித்தவராகவும் இருப்பார். அதிலும் குறிப்பாக வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவராக இருப்பார்.

பெண்களின் எண்ணிக்கை தொடக்க காலத்தில் மிக மிகக் குறைவாகவே இருந்தது, கடந்த பத்தாண்டுகளில் நிலைமை மேம்பட்டிருக்கிறது. 2010 தொடங்கி 2019-க்குள் அவர்களுடைய எண்ணிக்கை 27 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

சதவீதம்

‘ஸ்டெம்’ கல்வி பின்புலம் இல்லாதவர்கள் 72 சதவீதம். 2010-ல் இது 33 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

1.  சராசரி வயது: 1951 முதல் 2020 வரையில் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றவர்களின் சராசரி வயது 22-ல் தொடங்கி 2007-ல் 28.2 ஆக உச்சம் பெற்று, 2020-ல் 27.4 ஆகக் குறைந்தது.

2.  பிராந்திய ஆதிக்கம்: ஒவ்வொரு பத்தாண்டிலும் பிரதேசவாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை வரைபடம் காட்டுகிறது. 1950, 2000 ஆண்டுகளில் மட்டும் தெற்கு கோலோச்சியது. மற்ற ஆண்டுகளில் வட மாநிலத்தவர்கள்தான் ஆதிக்கம். 2010 மற்றும் 2019-க்கு இடையில் வடக்கு, தெற்கு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 55 சதவீதத்துக்கும் மேல். 1960 முதல் வட-கிழக்கு, மேற்கு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெறுவது 10 சதவீதத்துக்கும் குறைவு.

3.  குறையும் பாலின இடைவெளி: நேர்முகமாகவும் வழக்கமாகவும் ஐஏஎஸ் பணிக்குத் தேர்வு செய்யப்படுவோரில் ஆண், பெண் பாலின வேறுபாடு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை எப்படி இருந்தது என்பதைக் காட்டுகிறது வரைபடம். 1950-களில் பெண்களின் எண்ணிக்கை 2.7 சதவீதமாகவும் ஆடவர் 97.3 சதவீதமாகவும் இருந்தது. அந்த இடைவெளி குறைந்து வந்தாலும் மகளிரின் பங்களிப்பு ஆடவர் எண்ணிக்கை, விகிதங்களைவிடக் குறைவாகவே தொடர்கிறது.

4.  ‘ஸ்டெம்’ பின்னணி அதிகரிப்பு: அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் படித்தவர்கள் எண்ணிக்கை 1951 முதல் 2020 வரையில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. 1954-ல் ‘ஸ்டெம்’ பின்னணியில் வந்தவர்கள் 15.4 சதவீதம். 2020-ல் அவர்கள் எண்ணிக்கை 80 சதவீதம். எம்பிபிஎஸ் படித்தவர்கள் கூட ‘ஸ்டெம்’ பிரிவில்தான் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தரவுகளுக்கு மூலம்: அரசியல் தரவுகளுக்கான திரிவேணி மையம். 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
டி.வி.பரத்வாஜ்

டி.வி.பரத்வாஜ், சுயாதீன பத்திரிகையாளர். வட இந்தியாவை மையக் களமாகக் கொண்டு எழுதுபவர்.


1

2

பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

VELMURUGAN   3 years ago

இக்கட்டுரையில் இரண்டு முக்கியமான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. 1. பிராந்திய பிரதிநிதித்துவம் குறைதல். 2. ஸ்டெம் பிரிவு மாணவர்கள் அதிகரித்தல். முதலாவது கருத்தின் அடிப்படையில் நான் கட்டுரையாலருடன் முழுவதுமாக உடன்படுகிறேன். ஒன்றிய அரசின் மையப்படுத்தப்பட்ட மற்றும் பெரும்பான்மைவாதம் அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில் தென்னிந்திய மாணவர்கள் பிரதிநிதித்துவம் குறைவது கவலைக்குரிய விஷயமே. யுபிஎஸ்சி முதல் எஸ்எஸ்சி உட்பட அனைத்து ஒன்றிய அரசின் தேர்வுகளிலும் மொழியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுகிறது. இதுவே தென்னிந்திய மாணவர்களின் பிரதிநிதித்துவம் குறைவதற்கு முக்கிய காரணமாகும். இந்நிலை தொடர்வது எப்படி பல வட இந்திய மொழிகளை ஹிந்தி விழுங்கி உள்ளதோ அதேபோல் தென்னிந்திய மொழி அடையாளங்களின் அழிவிற்கு காரணமாக அமையலாம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே சிறுபான்மையினர் என்று மொழி மற்றும் மதத்தின் அடிப்படையில் கருதப்படும் பிரிவினருக்கு சிறப்பு சலுகைகள் அளித்து அவர்களின் தனித்துவம் காக்கப்படவேண்டும் என்றே உள்ளது ஆனால் அதற்கு மாறாக பாகுபாடே காட்டப்படுகிறது. உச்சநீதிமன்றமே ஒரு வழக்கில் பிராந்திய மொழிகளில் ஏன் தேர்வு நடைபெறவில்லை என்ற கேள்விக்கு ஒன்றிய அரசு மொழிபெயர்த்தல் கடினமாக உள்ளது என்று பதிலளித்தது அதற்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்தது. தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் சமீபத்தில் மக்களவையில் முதல்நிலைத் தேர்வில் இழைக்கப்படும் அநீதி குறித்து பதிவு செய்துள்ளார். இதற்காக முதலில் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி பற்றிய விவாதங்களில் தமிழ்நாடுஅரசு என்றுமே முதலில் கேள்வி எழுப்பி வருகிறது. அனைத்து பிராந்திய மொழி கொண்ட மாநில அரசின் பிரதிநிதிகளும் குரல் எழுப்ப முன்வர வேண்டும். இரண்டாவது ஸ்டெம் பிரிவு மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் 80% அதிகரிப்பது பற்றிய கருத்தில் கட்டுரையாளரிடமிருந்து வேறுபடுகின்றேன. ஸ்டெம் பிரிவு மாணவர்கள் யூபிஎஸ்சிக்கு தயாராகும் போது பெரும்பாலும் அவர்களின் கல்வி பின்புலத்தில் இருந்து வெளியே வந்து விடுகிறார்கள்‌.‌ யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற 80% ஸ்டெம் பிரிவு மாணவர்களில் பெரும்பாலானோர் விருப்பப் பாடமாக அவர்களது பாடத்தை பின்பற்றாமல் இலக்கியம், பப்ஆட், பிஎஸ்ஐஆர் மற்றும் சோசியாலஜி போன்ற பாடப்பிரிவுகளையே தேர்ந்தெடுக்கின்றனர். இதன் பாடத்திட்டங்கள் அந்தப் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றதற்கு சமமாக இருக்கும். மேலும் முதன்மைத் தேர்வு தாள் ஐந்தில் அறவியல் பாடப் பிரிவும் உள்ளது. ஆகையால் ஸ்டெம் பிரிவு மாணவர்கள் அவர்களின் பாடப் பிரிவைத் தாண்டி பரந்துபட்ட பார்வையை கொண்டவர்களாகவே வருகின்றனர். எனவே ஸ்டெம் பிரிவு மாணவர்கள் அதிகரிப்பு தவறானதாக கருதிவிட முடியாது.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   3 years ago

NEET முழுக்க முழுக்க பணக்காரர்களுக்கு சாதகமானது. ஏழைகளுக்கு எதிராக செயல்படுவது வலதுசாரிகளின் இரத்தத்தில் ஊறிப்போன விசயம். போராடினால் மட்டுமே நல்லது நடக்கும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Amaipaidhiralvom   3 years ago

It's a notable article for Especially Tamilnadu Government

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

உதயநிதிஉள்ளாட்சி மன்றங்கள்இந்திய வேளாண்மைஇந்தியத் தொகுதிகள் சீரமைப்புக்கு சரியான தீர்வாகுமாமதவெறிநடுத்தர வகுப்புக்கு தவறான வழிகாட்டல்சத்யஜித் ரே அருஞ்சொல்பாமினி சுல்தான்பிற்போக்குத்தனமான ஏற்பாடுகள்கும்ப்ளேகுழந்தையின்மைப் பிரச்சினைமதநல்லிணக்கம்தொன்மம்விவசாயிகள் கோரிக்கைதனியார் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம்அதிகாரத்தின் ஆட்சி – அவலமான காட்சிநரேந்திர மோடிஇந்தியப் பிரதமர்கள்வடக்குக்குப் பரிசும் பாராட்டும்!ஆரியம்இந்து தமிழ்பள்ளிக்கூடம்பேரிசிடினிப்மணிப்பூர்: அமைதியின்மை தொடர யார் பொறுப்பு?அமர்வு குக்கீமனித உணர்வுகள்இரண்டாம் கட்டம்சாதி அழிந்துவிடுமா?நோன்பு காலம்மாபெரும் தமிழ்க் கனவு ஆ.சிவசுப்பிரமணியன் பேட்டி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!