கட்டுரை, வாழ்வியல், பொருளாதாரம், சர்வதேசம் 4 நிமிட வாசிப்பு

அரசு வேலைக்கு அலை மோதும் சீனர்கள்

பிரடெரிக் கெல்டர்
25 Jan 2024, 5:00 am
0

ந்தியாவில் அரசுப் பணிகளுக்கான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்துவருவதைக் காண்கிறோம். இந்தியாவைப் போன்று பெரும் மக்கள்தொகையைக் கொண்ட சீனாவிலும் இப்போது அதே நிலை உருவாகியிருப்பதை ‘அல் ஜஸீரா’ வெளியிட்டுள்ளது. அண்டை நாடுகளின் சூழலை நம்முடைய இளையோர் அறிந்துகொள்ளும் வகையில் அந்தச் செய்திக் கட்டுரையை ‘அருஞ்சொல்’ வெளியிடுகிறது.

சீன அரசு ஆண்டுதோறும் நடத்தும் தேசிய பொதுத் தேர்வாணையத் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுவிட சீன இளைஞர்களிடையே போட்டி நிலவுகிறது. ஆண்டுதோறும் காலியாகும் ஆயிரக்கணக்கிலான அரசுப் பணியிடங்களை நிரப்ப, நல்ல மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியலிலிருந்து தேவைக்கேற்ப அரசு தேர்ந்தெடுத்து நியமிக்கிறது. இந்த வேலைவாய்ப்பிலும் குறிப்பிட்ட சதவீதம், உடனடியாக பட்டம் பெற்று வேலை தேடுவோருக்காக ஒதுக்கப்படுகிறது.

சமீபத்தில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற 22 வயது டூஷின் கடந்த டிசம்பரில் தேர்வெழுதினார். அந்தத் தேர்வுக்காக அவர் ஆறு மாதங்கள் பல்வேறு புத்தகங்களைப் படித்து, பயிற்சிகளை மேற்கொண்டார். பல இளைஞர்கள் இந்தத் தேர்வுக்காக சில பயிற்றுநர்களையும் அமர்த்திக்கொள்கின்றனர்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

அரசு வேலைக்கு வர தேர்வெழுதுவோரின் பொது அறிவும், பிரச்சினைகளைத் தீர்க்க அவர்களுடைய ஆய்வு மனப்பான்மை எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றும் தேர்வில் சோதிக்கப்படுகிறது. சமீப காலமாக, ‘சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அரசியல் சிந்தனைகள்’ தொடர்பான கேள்விகளும் கேட்கப்படுகின்றன. சீனத்தை வளப்படுத்த அவருடைய எதிர்காலத் திட்டமென்ன என்பது போன்ற கேள்விகள் அங்கு சகஜம்.

இந்தத் தேர்வுக்காக பல மாதங்கள் படித்து, மாதிரித் தேர்வுகள் எழுதி தயாராக இருந்தாலும் குறைந்த இடங்களுக்கு நிறையப் பேர் போட்டி போடுவதால் வடிகட்டல் அதிகம் இருக்கும் என்று டூஷினுக்குத் தெரியும். சீனத்தின் நூற்றுக்கணக்கான ஊர்களில் தேர்வெழுத அமர்ந்த லட்சக்கணக்கான யுவதிகளில் அவரும் ஒருவர்.

தேர்வெழுதுவோரில் 70 பேருக்கு ஒருவர்தான் தேர்ச்சி பெறுவார் என்பது அந்த ஆண்டு அவர் தேர்வெழுதியபோது இருந்த நிலை. இப்போது அது மேலும் தீவிரமாகி 77 பேருக்கு ஒருவர்தான் தேர்ச்சி பெறுகிறார். போட்டி அவ்வளவு கடுமையானது. அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டதாக முடிவு வந்தபோது மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றார் டூஷின்.

ஷிஜாசுவாங் நகர சீன கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அமைப்பாளராக வேலைக்கு சேர்ந்தார். (அங்கு கட்சி – ஆட்சி இரண்டுக்கும் வேறுபாடு கிடையாது.) இந்த ஆண்டு நவம்பர் இறுதியில் இந்தத் தேர்வெழுதியவர்கள் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டிவிட்டது.

அரசில் காலியாகும் வேலையிடங்கள் குறைந்துகொண்டே வருகிறது, தேர்வெழுதுவோர் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால் தேர்வில் கடும் போட்டி நிலவுகிறது. தேர்ச்சி பெறுவது கடினம் என்றாலும் ஏன் இத்தனை லட்சம் பேர் போட்டி போடுகின்றனர் என்று டூஷின் விளக்குகிறார்.

அரசு வேலைவாய்ப்புதான் இப்போது நிலையாக இருக்கிறது. சீன அரசு வேலைவாய்ப்பை அந்நாட்டு மக்கள் ‘இரும்புக் கலயத்தில் வைக்கப்பட்ட சோறு’ என்கின்றனர். அதாவது அந்தக் கலயத்தைப் போலவே, வேலையும் உறுதியானது என்று பொருள்.

டூஷின் கூறுகிறார், “பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவுடன் அடுத்து என்ன என்று தீர்மானிக்க முடியாமல் தவித்தேன். நிரந்தரமான வேலை வேண்டும். அத்துடன் என்னுடைய பொழுதுபோக்கு கலைகளைத் தொடர, போதிய ஓய்வு நேரமும் தினமும் கிடைக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு அரசு வேலைவாய்ப்புதான் சரி என்று தீர்மானித்தேன். தனியார் துறையைவிட அரசுத் துறையில் ஊதியம் அவ்வளவு அதிகமில்லை, ஆனால், ஓய்வூதியம் உள்ளிட்ட வேறு பயன்கள் அதிகம். சிறப்பாக வேலை செய்தால் கூடுதலாக ஊதியம் (போனஸ்) பெறலாம். ஓய்வுபெறும் வயதை எட்டும் வரையில் தொடர்ந்து வேலை பார்க்க முடியும் என்ற நிரந்தரத் தன்மை உள்ளது. அது மட்டுமல்லாமல் அரசு ஊழியர் என்றாலே தனி மரியாதைதான்!”

நிரந்தர வேலை, சமூகத்தில் மதிப்பு என்பதுடன் லட்சக்கணக்கானவர்கள் எழுதும் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தங்கள் பிள்ளையின் அறிவுக் கூர்மையை அரசே தேர்வு மூலம் அங்கீகரித்துவிட்டது என்றும் பெற்றோர் பெருமைப்படுகின்றனர். அரசு வேலையிலேயே மிகவும் முக்கியமானது வேலை நேரம்தான் என்கிறார் டூஷின்.

அரசு அலுவலக ஊழியர்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, வாரத்தில் ஐந்து நாள்கள் வேலை பார்த்தால் போதும். தனியார் நிறுவனங்களில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையில் வாரத்துக்கு ஆறு நாள்கள் வேலை செய்தாக வேண்டும். என் மனதுக்குப் பிடித்த பொழுதுபோக்கு வேலைகளைச் செய்ய நிறைய நேரம் கிடைக்கிறது என்கிறார் டூஷின்.

பொக்கிஷம் இந்த நூல்

- தினத்தந்தி

சோழர்கள் இன்று

வீட்டிலிருந்தபடி ரூ.500 ஜிபே செய்து, முகவரியை அனுப்பி, கூரியர் வழியே நூலை வாங்க வாட்ஸப் செய்யுங்கள் 👇

75500 09565

நிபுணரின் கருத்து

சீன அரசின் தேர்வாணையத் தேர்வுகளில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானவர்கள் தேர்வெழுதுவதில் வியப்பேதும் இல்லை என்கிறார் யாங் ஜியாங். இவர் சீன அரசின் பொருளாதாரக் கொள்கைகளை ஆராய்ந்துவருகிறவர். சர்வதேச ஆய்வுகளுக்கான டென்மார்க் நாட்டு அமைப்பில் இப்போது பணிபுரிகிறார். கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருப்பதால் பட்டம் பெற்றவுடன் தேர்வு எழுத வருவோரின் எண்ணிக்கையும் அதே அளவுக்கு நேர்விகிதத்தில் இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார்.

2023இல் மட்டும் 1.16 கோடி இளைஞர்கள் படித்து பட்டம் பெற்றுள்ளனர். இதுதான் சீன வரலாற்றில் அதிகபட்சம். ஆனால் அரசு வேலைக்கு அதிகம் பேர் விண்ணப்பிக்க இது மட்டும் காரணமில்லை; சீன நாட்டின் பொருளாதார நிலையும் ஒரு காரணம்; சீனாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் இப்போது நிச்சயமற்ற நிலையில் ஊசலாடுகிறது” என்கிறார்.

கடந்த ஜூனில், படித்து வேலை தேடும் இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை அளவு 21.3% ஆக இருக்கிறது. இது கவலையளிக்கும் விதத்தில் இருப்பதால் அரசு இந்தத் தரவுகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டது. தனியார் துறையிலும் வேலைவாய்ப்புகள் சரிந்துவருகிறது என்பதை ஜியாங் சுட்டிக்காட்டுகிறார்.

எங்களை மறைக்க முடியாது

சீனத்தின் எல்லா நகரங்களிலும் இப்படி ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்கள் வேலை கிடைக்காமல் அவதிப்படுவது நாட்டின் சமூக – அரசியல் சூழலுக்கே நல்லதில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் பலரும் அஞ்சுகின்றனர். படித்து வேலை கிடைக்காத இளைஞர்களை கிராமப்பகுதிகளின் வளர்ச்சி திட்டங்களில் ஈடுபடுத்த வேண்டும் என்று குவாங்சௌ மாநில கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு ஒரு திட்டத்தையும் கடந்த மார்ச் மாதம் அரசுக்கு அனுப்பியிருக்கிறது.

இது பழைய தலைமுறையினருக்கு சீனத்தின் ஈடு இணையற்ற தலைவராக மாசேதுங் இருந்தபோது அறிமுகப்படுத்திய ‘கலாச்சாரப் புரட்சியை’ நினைவூட்டுகிறது. 1960-1970களில் அரசியல் – சமூக கொந்தளிப்புகள் ஏற்பட்டபோது, நகர்ப்புற இளைஞர்களை கிராமப்புறப் பகுதிகளின் வளர்ச்சித் திட்டத்தில் ஈடுபடுத்த அரசு கட்டாயப்படுத்தி அனுப்பியது. அப்போது என்ன நடந்தது என்பதை அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காவிட்டாலும் அரசின் திட்டத்தை ஏற்காத அல்லது எதிர்த்தவர்களில் இருபது லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தன. இப்போதும் அப்படியாகிவிடுமோ என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

சீனத்தின் கிராமப்புறங்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்ட படித்த இளைஞர்களை கிராமங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று அதிபர் ஜி ஜின்பிங் கடந்த ஜனவரியில் பேசினார். நவீன காலத்தில் இப்படிப்பட்ட திட்டங்களால் பெரிய பயன் இருக்காது என்கிறார் லியோ. “வேலை கிடைக்காத இளைஞர்கள் லட்சகக்கணக்கில் இருக்கிறோம், ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை வளர்ந்துகொண்டே இருக்கிறது. ஏதாவது திட்டத்தை சொல்லி எங்களை மற்றவர்களின் பார்வையிலிருந்து மறைத்துவிட முடியாது என்கிறார் லியோ.

உலகம் எங்குமே அரசுப் பணிகளுக்கான மவுசு அதிகரித்தபடிதான் இருக்கிறது!

© அல் ஜஸீரா  

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

மக்கள்தொகை: எந்த இடத்தில் நிற்கிறது இந்தியா?
சீனா எப்படிக் கண்காணிப்புக்குப் பழகியிருக்கிறது?

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி

4






நிராகரிப்புராஜன் குறை கேள்விக்குப் பதில்தனிப் பயிற்சிவிவசாயத் தொழிலாளர்கள்ஜனரஞ்சகப் பத்திரிகைதொடர்ந்து மறுக்குது அரசாங்கம்மரபு மீறல்கள்அணையின் ஆயுள்தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர்காட்டுக்கோழிதுக்ளக் இதழ்7 கற்பிதங்கள்தொழில்நுட்ப அறிவுதசைகள்மார்ட்டென் மெல்டால்தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்பழமைவாதம்நாடாளுமன்றம்கலைக் கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்விமாபெரும் கார்ப்பரேட் மோசடிமாதிரிகள்சமஸ் நயன்தாரா குஹாஇந்திய வம்சாவழிபொருளாதாரக் குறியீடுஉயர் பதவிதெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வாய்ப்பு அதிகரிபஆணாதிக்கத்தின் சின்னம்மீன் வளம்பொதுச் சமூகம்மாயக்குடமுருட்டி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!