ஜனநாயகச் சக்திகள் பலரும் மஹ்வா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டைக் கேட்டு அதிர்ந்ததில் ஆச்சரியமே இல்லை. இந்த ஐந்தாண்டுகளில் மிக துடிப்பான ஓர் எதிர்க்குரலாக பாஜகவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அவர் செயல்பட்டார். பெரும் சுழலுக்குள்தான் இப்போது அவர் சிக்கியிருக்கிறார்.
என்ன நடக்கிறது?
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் அனந்த் தெகத்ராய் 2023 அக்டோபர் 14 அன்று மத்தியப் புலனாய்வு அமைப்புக்கு (சிபிஐ) ஒரு புகார் அளித்தார். அதில் அவர் திரிணாமூல் காங்கிரஸின் மக்களவை உறுப்பினர் மஹ்வா மொய்த்ரா மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தார். அதன் நகலை மக்களவை அவைத் தலைவருக்கும், மக்களவை நெறிமுறைக் குழுவுக்கும் அனுப்பியிருந்தார்.
விஷயம் இதுதான். ‘அதானி குழுமம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்காக அதன் எதிர்க் குழுமமான மும்பையைச் சேர்ந்த ஹிரநந்தானி குழுமத்தின் தர்ஷன் ஹிரநந்தானியிடம் பணம் மற்றும் பலவிதமான உதவிகளைப் பெற்றார் மஹ்வா!’ என்பதே ஜெய் அனந்த் தெகத்ராய் அனுப்பிய புகாரின் உள்ளடக்கம்.
இந்த விவகாரத்தை அரசியல் தளத்தில் முன்னெடுத்துவரும் நிஷிகாந்த் துபே, பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்பதோடு, மஹ்வாவின் அரசியல் எதிரி என்றும் சொல்லலாம். நிஷிகாந்த் துபே முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு மஹ்வா சளைக்காமல் பதில் சொல்லிவந்தார். அதில் அவர் அளித்த முக்கியமான ஒரு விளக்கம், ‘வழக்கறிஞர் ஜெய் அனந்த் தெகத்ராய் என்னுடைய எக்ஸ். உறவு முறிவின் காரணமாக இதுபோன்ற புகார்களைச் சொல்கிறார்!’ இதையன்றி அவர் சொல்லும் விளக்கங்களுக்குப் போகும் முன் மஹ்வாவின் பின்னணியைக் கொஞ்சம் பார்த்துவிடலாம்.
யார் இந்த மஹ்வா மொய்த்ரா?
மஹ்வா (49) அஸாம் மாநிலத்தில் பிறந்தவர். வங்காள பிராமணர். அமெரிக்காவில் கணிதமும், பொருளாதாரமும் பயின்றவர். ஜே.பி.மார்கன் பன்னாட்டு நிதி நிறுவனத்தில் முதலீட்டுத் துறையில் பணிபுரிந்தவர்.
தன் பணியைத் துறந்து 2008இல் அரசியலில் ஈடுபட முடிவெடுத்து, மஹ்வா காலடி எடுத்து வைத்த இடம் இந்திய தேசியக் காங்கிரஸ். கட்சியின் இளைஞர் அணியில் அவர் இணைந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், காங்கிரஸிலிருந்து விலகி, திரிணாமூல் காங்கிரஸில் சேர்ந்தார். 2016இல், மேற்கு வங்க சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவருடைய பணிகளைப் பார்த்து, 2019இல் நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கினார் கட்சித் தலைவரான மம்தா பானர்ஜி.
2019 மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற பாஜக, நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் ஆட்சியமைத்தது. மக்களவையிம் முதல் முறையாக நுழைந்த மஹ்வா முதல் கூட்டத் தொடரில், தனது முதல் உரையிலேயே, ஆளும் பாஜகவைக் காட்டமாக விமரிசித்தார். ‘பாசிஸ ஆட்சிக்கான 7 அறிகுறிகள்’ என்னும் அந்த உரை அசத்தலான ஆரம்பமாக அமைந்தது. நாடு முழுக்க கவனத்தை ஈர்த்தார் மஹ்வா.
தொடர்ந்து பாஜக மீதான தனது விமர்சனங்களை, குறிப்பாக மோடி, அதானி மீதான விமர்சனங்களை மிகவும் கூர்மையாக்கிவந்தார் மஹ்வா. நாடாளுமன்ற உரைகளின்போது, தன்னை எதிர்த்துக் கூச்சலிடும் பாஜக உறுப்பினர்களைத் தாண்டி அவர் கர்ஜித்தார். நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் சமூக நிகழ்வுகளில் அவரது நிலைப்பாடுகள் மிகவும் முற்போக்காக இருந்தன. எடுத்துக்காட்டாக, இயக்குநர் லீனா மணிமேகலையின் ஆவணப்படம் ஒன்றில், புகைப்பிடித்துக்கொண்டிருக்கும் துர்காவின் படம் ஒன்று வெளியாகி பலத்த சர்ச்சைக்குள்ளானது. துர்கை வழிபாடுக்குப் பிரசித்தி பெற்ற வங்கத்தில் இருந்தபடியே லீனா மணிமேகலையின் கருத்துச் சுதந்திரத்தை மஹ்வா ஆதரித்தார். மது அருந்தும், மாமிசம் உண்ணும் கடவுளாக கடவுளைப் புனைந்துகொள்ள உரிமை உண்டு என அவர் வெளியிட்ட கருத்து, இந்துத்துவ அரசியல் தரப்பால் கடுமையாக விமரிசிக்கப்பட்டது. அவரது கட்சியான திரிணாமூல் காங்கிரஸே இந்த விவகாரத்தில், ‘மஹ்வா சொன்னது அவரது சொந்தக் கருத்து!’ என்று சொல்லிவிட்டு, அதைக் கண்டிக்க வேண்டியிருந்தது.
டெல்லியில் தனக்கென்று ஒரு தனியிடத்தை மிகக் குறுகிய காலத்தில் உருவாக்கிவிட்டார் மஹ்வா என்று பல கட்சிக்காரர்களும் பேசிவந்தனர்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
மஹ்வாவுக்கும் தெகத் ராய்க்கும் என்ன பிரச்சினை?
இப்படிப்பட்ட சூழலில்தான் மஹ்வாவைக் குறிவைத்துப் பெரும் சர்ச்சை வெடித்திருக்கிறது.
இந்த விவாகரத்தில், சிபிஐ வசம் புகார் செய்த தெகத்ராய், மஹ்வா மீது வைத்த குற்றச்சாட்டுகள் பின்வருமாறு:
- அதானி குழுமம் தொடர்பாக கேள்விகளை எழுப்ப, மஹ்வா, அதானியின் எதிர்க்குழுமான தர்ஷன் குழும அதிபரான ஹிரநந்தானியிடம் இருந்து 2 கோடி ரூபாய் பணம் பெற்றுக்கொண்டார். அது போக, தனது இல்லத்தை மறுசீரமைப்புச் செய்ய ஹிரநந்தானியிடம் இருந்து உதவி பெற்றார்.
- மஹ்வா நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகள், தொழிலதிபர் ஹிரநந்தானியின் அலுவலகத்தில் இருந்து தேசிய செய்தி நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. மஹ்வாவின் இணைப்பின் பயனாளர் கோட் மற்றும் பாஸ்வேர்ட் முதலியவற்றை ஹிரநந்தானியிடம் கொடுத்து வைத்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளின் பின்னணியில், பாஜகவின் நிஷிகாந்த் துபே, தேசிய செய்தி நிறுவனத்தின் இணையதளம் துபாய் போன்ற வெளிநாடுகளில் இருந்து திறக்கப்பட்டு, கேள்விகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இது நாட்டின் பாதுகாப்பைக் குலைக்கும் செயல் என விமர்சித்தார்.
இந்நிலையில், தர்ஷன் ஹிரநந்தானி, தெகத்ராயின் குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்னும் வகையில் ஒரு வாக்குமூலத்தை நாடாளுமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைக் குழுவுக்கு அனுப்பிவைத்தார். அதன் நகல்கள் சிபிஐக்கும், நிஷிகாந்த் துபேவுக்கும் அனுப்பப்பட்டன.
இந்த வாக்குமூலம் வெறும் வெள்ளைத் தாளில் அச்சிடப்பட்டு, தர்ஷனின் கையெழுத்து இடப்பட்டுள்ளது. இது தர்ஷனை மிரட்டி வாங்கப்பட்டிருக்கலாம் என மஹ்வா சந்தேகத்தை எழுப்பினார். தர்ஷன் தனது வாக்குமூலத்தை துபாயில் இருக்கும் இந்தியத் தூதரகத்திற்கு நேரில் சென்று நோட்டரைஸ்ட் செய்து அனுப்பினார்.
இதையடுத்து, ‘டைம்ஸ்’ தொலைக்காட்சியின் நாவிகா குமாருக்கு அளித்த நேர்காணலில், தர்ஷன் ஹிரநந்தானி, நாவிகாவின் கேள்விகளுக்கு அதிகம் பதிலளிக்காமல், தான் அனுப்பிய வாக்குமூலம் உண்மையென்றும், தான் எந்த வகையிலும் மிரட்டப்படவில்லை என்றும் சொன்னார்.
மஹ்வாவின் வாதம்
தன் மேல் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக 27ஆம் தேதி ‘இந்தியா டுடே’யின் ராஜ்தீப் சர்தேசாயிடம் உரையாடிய மஹ்வா, கீழ்க்கண்ட விஷயங்களைத் தெரிவித்தார்.
- தர்ஷன் ஹிரநந்தானி எனது நெருங்கிய நண்பர்.
- எனது வீட்டின் உள் அமைப்பு மிக மோசமாக இருந்ததால், அதை மாற்றியமைக்கும் வடிவமைப்பை தர்ஷனின் வடிவமைப்பாளர் மூலமாகப் பெற்றேன். இது ஒரு நண்பராக அவர் எனக்குச் செய்த உதவி.
- என் வீட்டை மத்திய பொதுப்பணித் துறைதான் மாற்றிக்கொடுத்தது. அதற்கான ஒப்பந்தங்கள் முதலியன பொதுப்பணித் துறையினரால் செய்யப்பட்டன. இதற்கும் தர்ஷனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
- தர்ஷன் துபாயின் ட்யூட்டி ஃப்ரீ கடைகளில் இருந்து எனக்கு லிப்ஸ்டிக் போன்ற சிறு சிறு அலங்காரப் பொருட்களை வாங்கிவந்துள்ளார்.
- நான் மும்பை செல்லும்போதெல்லாம், அவரது அலுவலக கார் என்னை விமான நிலையத்தில் இருந்து நான் தங்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லும். பின்னர் திரும்பும்போது, என்னை விமான நிலையம் கொண்டுவந்துவிடும். இது நண்பராக நான் அவரிடம் பெற்ற உதவி.
- ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, எனது கேள்விகளை டைப் செய்ய தர்ஷனின் அலுவலக உதவியாளர்களின் உதவியைப் பெற்றிருக்கிறேன். எனது பயனாளர் கோட் அவர்களிடம் இருந்தாலும், அதை இறுதியில் பதிவேற்றுவதற்குத் தேவையான ஒன் டைம் பின் (ஓடிபி) எனது மொபைல் எண்ணுக்குத்தான் வரும். அதை நான் அவர்களிடம் கொடுக்காமல் கேள்விகளை அவர்கள் பதிவேற்ற முடியாது. எனவே, கேள்விகள் அனைத்தும் என் மூலமே பதிவேற்றப்பட்டன. அதை அவர்கள் உதவியாகச் செய்தார்கள். நாடாளுமன்றத்தில் எல்லா உறுப்பினர்களின் பயனாளர் கோட்களும், அவர்களின் உதவியாளர்களிடம்தான் உள்ளன. அனைவருமே, கேள்விகளை உதவியாளர்களின் வழியேதான் பதிவேற்றேகிறார்கள். எனவே, இது ஒரு உதவிதானே தவிர வேறில்லை. இதில் எந்த விதிகளும் மீறப்படவில்லை.
மஹ்வாவுக்கு என்ன இழப்பு?
நாடாளுமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைக் குழு இதற்கான விளக்கங்களைக் கேட்டு, நவம்பர் 2ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு மஹ்வாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன் பின்னர் என்ன நிகழப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்போதைக்கு, அவரது கட்சியான திரினாமூல் காங்கிரஸ் மஹ்வாவின் பிரச்சினையில் மௌனம் காக்கிறது. மஹ்வாவைப் பொதுவெளியில் தற்காத்து ஆடினால், திரிணாமூல் கட்சிக்கு அரசியல் நஷ்டம் ஏற்படலாம் என்பதால் இந்த மௌனம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
சுழலுக்குள் மஹ்வா
விசாரணையின் முடிவுகள் என்னவாக இருந்தாலும், தார்மிக அடிப்படையில் ஏற்கெனவே மஹ்வா கீழே சறுக்கிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
ஆளும் பாஜக மீதும், அதானி மீதும் புள்ளி விவரங்களை அடுக்கி, பாஜக அரசு வழியே அதானி பலன் பெற்றதாகக் குற்றச்சாட்டுகளை வைக்கும் மஹ்வாவுக்கு, ரியல் எஸ்டேட் தொழிலில் பெரும்புள்ளியாக இருக்கும் தர்ஷனுடான நட்பும், அவர் பெற்றுக்கொண்ட உதவிகளும் இதுபோலவே அணுகப்படும் என்பது எப்படித் தெரியாமல் போனது?
தனது வீட்டை வடிவமைக்கப் பெறும் உதவிக்கும் ஒரு பொருளியல் மதிப்பு இருப்பது மஹ்வாவுக்குத் தெரியாதா? மிக முக்கியமாக, மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருப்பதுபோலவே, இவருக்கும் உதவியாளர்கள் இருந்திருந்தால், அவர்கள் வழியே கேள்விகளை பதிவேற்றாமல், ஏன் ஹிரநந்தானி குழும அலுவலகத்தின் உதவிகளை நாடினார்?
மிக ஆரம்ப நிலை அரசியலர்கள்கூட ஜாக்கிரதையாகச் செயல்படும் காலத்தில், நாட்டின் பிரதமர் மீதும், உலகின் மிகச் செல்வாக்கான தொழிலதிபர் மீதும் குற்றச்சாட்டுகளை வைத்து தன் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கும் மஹ்வாவுக்கு, இதுபோன்ற நட்புகளும், உதவியும் பெரும் பாரமாக முடியும் என்பதுகூடத் தெரியாதவரா?
இப்போதைக்கு மஹ்வாவின் செயல்களின் பின்னால் தனிப்பட்ட ஆதாயம் பெறும் நோக்கங்கள் இருப்பதாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில், தனது உக்கிரமான பேச்சுகள் வழி உருவாக்கிக்கொண்ட அரசியல் முதலீட்டை இழந்திருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.
டெல்லி அரசியல் தளங்களில், அமெரிக்கா போன்ற நாடுகளில் கல்வி பெற்று, நல்ல ஆங்கிலம் பேசக்கூடிய உயர் வர்க்க அரசியலர்களை, பாஜக அரசியல் தரப்பு, ‘கான் மார்க்கெட் குழு’ எனக் கேலி பேசும். துரதிருஷ்டவசமாக மஹ்வா இந்த வரையறைக்குள் சிக்கும் அரசியலராகவே வெளிப்பட்டிருக்கிறார்.
பேசும் சித்தாந்தம், விழுமியங்களைத் தாண்டி சுய ஒழுக்கமும் சேர்ந்தே நிலைத்த ஆற்றலை அரசியலில் வழங்கும். மஹ்வாவின் வீழ்ச்சி ஒருவகையில் வங்கத்தில் எதிர்பாராத ஒரு துருப்புச் சீட்டை பாஜகவுக்கு அளித்திருக்கிறது!
5
1
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Harish karuppan 1 year ago
சுய ஒழக்கம் என்ற சொல், இந்த கட்டுரையில் இடம் பெற காரணம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்
Reply 5 0
Login / Create an account to add a comment / reply.