கவிதை, புத்தகங்கள் 12 நிமிட வாசிப்பு

காலத்தை எப்படிப் புரிந்துகொள்வது?

சுந்தர் சருக்கை
09 Jan 2022, 5:00 am
1

கிழ் ஆதனுக்கு இப்போது 9 வயது ஆகிறது. நான்கு வயதிலிருந்து இந்தக் குழந்தை சொல்லத் தொடங்கிய கவிதைகளை, அவனுடைய பெற்றோர் நோட்டுப் புத்தகத்தில் எழுதித் தொகுத்து வெளிக்கொண்டுவந்த ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ நூல் பெரும் வரவேற்பைப் பெற்றது. எஸ்.ராமகிருஷ்ணன் உள்பட பலர் அப்போது கொண்டாடி எழுதியிருந்தார்கள். இப்போது மகிழ் ஆதனுடைய அடுத்த நூலாக  ‘காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்’ வந்திருக்கிறது. காலம் தொடர்பான 51 கவிதைகளைக் கொண்டிருக்கும் இந்நூலுக்கு இந்தியாவின் முக்கியமான தத்துவியலாளர்களில் ஒருவரான சுந்தர் சருக்கை எழுதியிருக்கும் முன்னுரை மகிழ் ஆதன் போன்ற இளம் மேதைகளை நம் சமூகம் எப்படிப் பார்க்க வேண்டும் என்பதைச் சொல்வதோடு, கவிதைகளையுமே எப்படிப் பார்க்கலாம் என்பதற்கு இன்னொரு பரிமாணத்தை அளிப்பதாகவும் இருக்கிறது. ‘அருஞ்சொல்’ தன்னுடைய வாசகர்களுக்கு அதைத் தருகிறது.

காலம் என்பது தத்துவ அறிஞர்களையும் கவிஞர்களையும் அறிவியலர்களையும் எப்போதுமே பெரிதும் ஈர்த்துவந்திருக்கிறது. அவர்கள் ஒவ்வொருவரும் காலம் என்கிற கருத்தைத் தங்களுக்கே உரிய வழிகளில் புரிந்துகொள்ள முயன்றிருக்கிறார்கள்.

தத்துவத்தில் காலம் பற்றிய கோட்பாடுகள் அதனைப் பல்வேறு வழிகளில் விவரிக்கின்றன: காலம் ஒரு திசையில் மட்டும் பாய்ந்தோடுவது, உலகத்தைப் படைத்தது, உலகத்தை அழிப்பது, நம் வாழ்க்கையின் சூத்திரதாரி என்றெல்லாம். காலத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்களாகக் கவிஞர்கள்தான் இருந்துவருகிறார்கள்; கவிதைகளில் காலம் வெவ்வேறு வகைகளில் உருவகரீதியாக முன்வைக்கப்பட்டிருக்கிறது.

அறிவியலர்கள் காலத்தின் தன்மையை வெகு காலமாகப் புரிந்துகொள்ள முயன்றிருக்கிறார்கள்; ஏனெனில், அறிவியலின் முக்கியமான கருத்தாக்கங்களுள் இயக்கமும் ஒன்று. இயக்கம் என்பது அடிப்படையாகக் காலத்துடன் தொடர்புடையது. அறிவியலைப் பொறுத்தவரை, காலம் என்பது அளக்கப்படக் கூடியதாகவும் அதன் இயல்பில் அளவைத் தன்மையைக் கொண்டதாகவும் பெரிதும் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.

இத்தனை விதமான அணுகுமுறைகளுக்குக் காரணமாக இருக்கும் அளவுக்குக் காலம் என்ற கருத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? முதன்மையானதும் மிக முக்கியமானதுமான அம்சம், காலத்தின் புலப்படாத தன்மை.

காலம் என்பது மெய்யானது என்று நமக்கெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது; ஆனால், அதைப் பற்றிய புலனுணர்வுகள் ஏதும் நமக்குக் கிடையாது. நம்மால் காலத்தைப் பார்க்க, தொட, கேட்டுணர அல்லது சுவைக்க முடியாது. இன்னொருபுறம், மெய்ம்மை குறித்த பொதுவான புரிதல் என்பது நமக்குக் குறைந்தபட்சம் ஒரு புலன் வழியாகவாவது உணரக் கிடைக்கும் பொருட்களைச் சார்ந்திருக்கும் ஒன்றாக இருக்கிறது.

ஆக, காலம் என்பது நமக்குப் புலனுணர்வு மூலம் கிடைக்காத ஆனால், மெய்யான ஒன்றாகவும், நம்மைச் சுற்றி எப்போதும் இருக்கும் ஒன்றாகவும் நாம் எல்லோரும் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் விஷயமொன்றுக்கான எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது.

பல மரபுகள் காலத்தைக் கடவுளுக்கு ஒப்பாகக் கருதிவருவதில் வியப்பொன்றும் இல்லை. ஆகவே, காலம் என்று சொல்லப்படும் இந்த ‘ஒன்று’ மெய்யாகவே மெய்தானா என்று யாராவது கேட்கத் தொடங்கினால் தத்துவம், அறிவியல், கவிதை ஆகியவற்றில் நாம் புதுப் புது சிந்தனைகளைப் பெறுகிறோம். காலத்தைத் ‘தொடுவது’ அல்லது உணர்ந்தறிவது எப்படி என்று அவர்கள் கற்பனைசெய்யத் தொடங்கும்போது அங்கு கவிதை இருக்கிறது.    

ஆகவே, காலத்தைப் பற்றிய இந்தக் கவிதைகளை நான் படித்தபோது இந்த விஷயத்தில் மற்றுமொரு கவிஞரும் எழுதியிருக்கிறார் என்று நான் வியப்பேதும் அடையவில்லை.

ஆயினும், இந்தக் கவிதைகளைப் படித்துக்கொண்டிருக்கும்போது இதில் உள்ள தனித்தன்மையில் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்: காலத்தைக் ‘கண்டடை’வதற்கான தொடர்ச்சியான ஆர்வம் மிக்க தேடல் – மெய்ம்மையாகவும் நாம் அதைப் பற்றிப் பேசும் மொழியிலும், எளிய, அன்றாட வாழ்க்கையிலும் காலத்தைக்  கண்டறிதல். இந்தக் கவிதைகளை நான் படிக்கும்போது அவற்றில் இடம்பெற்றிருக்கும் படிமங்களாலும், மிகவும் சிக்கலான, குழப்பமூட்டும் கருத்தாக்கம் ஒன்றைப் பற்றி இயல்பாகவும், சாதாரணமாகவும் பேசும் விதத்தாலும் ஆட்கொள்ளப்பட்டேன்.

காலமானது, மகிழ் ஆதனை அச்சுறுத்தவில்லை; மாறாக, அவன் அதற்கே உரித்தான குழம்பிய நிலையில் திளைக்கிறான். ஆனால், காலம் என்று அழைக்கப்படும் அந்தச் சிக்கலை எதிர்கொள்வதற்கு, எளிதாக இருத்தல், தான் விரும்பியதைத் தயக்கமோ கூச்சமோ இன்றிச் சொல்லுதல் ஆகிய சக்தி வாய்ந்த ஆயுதங்களை அவன் பயன்படுத்துகிறான். அதுதான் இந்தக் கவிதைகளின் பலமாகவும் இருக்கிறது; அவனது சிந்தனையின், கற்பனையின் பலமாகவும் இருக்கிறது.      

காலத்தைப் பற்றி எளிமையான ஒரு கேள்வியை மகிழ் ஆதன் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறான்: காலம் என்றால் என்ன?

நாம் அதனை நேரடியாகப் பார்க்க முடியாததால், நிழல் இன்னொன்று இருப்பதைக் காட்டுவதுபோல் அநேகமாக மறைமுகமாகக் காலத்தைப் பார்க்க முடியலாம். நம்மால் உணர்ந்தறிய முடியாத ஒன்றின் மெய்மையை நாம் கண்டறிய இயலுவதற்கான மற்றுமொரு வழி அது நம்மிடம் ஏற்படுத்தும் விளைவுகள்தான். காலம் குறித்த மகிழ் ஆதனுடைய தேடல் இந்த இரண்டு வழிகளிலும் செல்கிறது. காலத்தை நம்மால் பார்க்க முடியவில்லை என்றால், ஒருவேளை அதன் தன்மைகளை நாம் உவமைகளைக் கொண்டு அறிந்துகொள்ளவாவது முயலலாம். இதைச் செய்வதற்கான ஒரு வழி, காலம் என்னவாக இருக்கும் என்ற பல்வேறு சாத்தியங்களைக் கற்பனைசெய்து பார்ப்பது ஆகும்.

மகிழ் ஆதன் காலத்தைக் கற்பனைசெய்யவும் கட்டமைக்கவும் தொடங்கும்போது இவற்றைத்தான் செய்கிறான். அவனுடைய பெரும்பாலான கவிதைகளில் காணப்படும் மிகவும் எளிமையான ஆனால் சக்திவாய்ந்த கூற்று என்னவாக இருக்கிறது என்றால் ‘நான்தான் காலத்தைப் படைக்கிறேன்’ என்பது போன்ற உறுதியான வெளிப்பாடாகும்.

படைத்தல் என்பது ‘தெய்விகம்’ சார்ந்த பொருளில் மட்டும் இருக்கவில்லை; மகிழ் ஆதனைப் பொறுத்தவரை காலத்தைப் படைத்தல் என்பது வரைவதாகவும், மற்றவர்கள் செய்யாத விதத்தில் கண்டறிவதாகவும் இருக்கிறது. காலம் என்னவாக இருக்கும் என்று காட்டுவதன் ஊடாக, காலத்தைத் தான் எப்படிப் படைத்தேன் என்றும் அவன் சொல்கிறான்: ‘நான் காலத்தை/ இல்லாமல் ஆக்கினேன்/ நான் காலத்தின் சிலையைக்/ கட்டினேன்/ நான் காலத்தைத்/ திருப்பி ஓடவைத்தேன்.’

இது இந்த உலகத்தின் மெய்ம்மை குறித்த மிகவும் ஆழமான தத்துவார்த்தக் கேள்விகளை எழுப்புகிறது: ஏற்கெனவே உள்ள மெய்ம்மையை நாம் புலன்களால் உணர்கிறோமா அல்லது நமது விவரிப்பால் ஒரு புதிய மெய்ம்மையை நாம் உருவாக்குகிறோமா? காலம் நமக்கு எந்தெந்த வழிகளிலெல்லாம் தோன்றுகிறதோ அதையெல்லாம் பற்றி மகிழ் ஆதன் ஏன் தொடர்ந்து பேசிக்கொண்டும், அதே நேரத்தில் காலம் நமது உருவாக்கம் என்று குறிப்பிடவும் செய்கிறான்?        

காலம் என்பது என்ன, அது எங்கே இருக்கிறது, அது எப்படித் தொடங்கியது என்பதைப் பற்றியெல்லாம் அவன் கேள்வி எழுப்பும்போது அவன் பெரிதும் பயன்படுத்தும் படிமங்களைச் சற்றே பாருங்கள். கிட்டத்தட்ட எல்லா கவிதைகளையும் அவன் காலத்தைக் கனவுகள், வானம், இடம், நிழல், பிரதிபலிப்பு, நினைவு போன்றவற்றோடு தொடர்புபடுத்துகிறான். இந்தச் சொற்கள் குறிக்கும் எல்லாமே நிலையற்றவை, என்றுமே மெய்யானவையாக இருப்பதில்லை. அவன் காலத்தைப் பௌதிக மெய்மையாகக் குறுக்கிவிடவில்லை – எனக்கு இந்தக் கவிதைகளில் மிகவும் வியப்பூட்டும் விஷயம் எதுவென்றால் காலத்தின் பௌதிக அடையாளமாகக் கருதப்படும் கைக்கடிகாரம், சுவர்க் கடிகாரம் ஆகியவை பற்றி எந்தக் கவிதையும் இல்லை (ஒரே ஒரு வரியைத் தவிர) என்பதுதான்!

அவனைப் பொறுத்தவரை காலம் என்பது மெய்யானதாக என்றுமே இருப்பதில்லை; சில நேரங்களில் மெய்யானதாகத்  தோன்றுவதில்லை, சில நேரங்களில் மெய்யானதாகத் தோன்றுகிறது. புலனுணர்விலும் சிந்தனையிலும் காணப்படும் இந்தத் தெளிவின்மையை, அல்லது மகிழ் ஆதனைப் பொறுத்தவரை இன்னும் பொருத்தமாக என் பாணியில் சொல்வதென்றால் புலனுணர்வு-சிந்தனையில் காணப்படும் இந்தத் தெளிவின்மையைக் கையாள்வதற்கு கவிதைதான் வழி.

புலனுணர்வு-சிந்தனை என்று சொல்வது ஏனென்றால் மகிழ் ஆதனின் கவிதைகள் முழுவதிலும் சிந்திக்கும் புலனுணர்வு, புலனுணர்வு பெறும் சிந்தனை ஆகியவற்றைப் பற்றிய சிந்தனைகள் நிறைந்திருப்பதால்தான். இந்த வரிகளைப் பாருங்கள்: “நான் காலத்தின் கனவை/ என் கண்ணால்/ யோசித்துப் பார்த்தேன்”. அதே கவிதையில் இப்படித் தொடர்கிறான்: “நான் காலத்தின் கனவை/ வானத்தில் தெரிய வைத்தேன்/ நான் வானத்தின் நிழலில்/ காலத்தைத் தெரிய வைத்தேன்”.

நாம் இதைத் ‘தெரிதல்’ என்று சொல்வதைவிட ‘பிரசன்னம்’ என்றும் அழைக்கலாம். காலம் என்பது காட்டப்படுவதும் சுட்டிக்காட்டப்படுவதும் மட்டுமே அல்ல, அது பிரசன்னமாக இருப்பது. மேலும், அவன் இந்தக் கவிதையை இப்படி முடிக்கிறான்: “காலத்தை யாரால் வரைய முடியும்/ என் கவிதையால்”! காலத்தைக் கைக்கொள்ள மொழி போதுமானதாக இல்லை; நமக்குத் தேவை கவிதை.  

ஆக, அவனது கவிதைகளில் காலம் ஒரு கனவாகிறது, காலத்தின் முடிவு வானத்தின் முடிவாகிறது, படைப்பதற்கான, உருவாக்குவதற்கான, அழிப்பதற்கான சக்தியைக் காலம் கொண்டிருக்கிறது, அது ஒரு பூ, அது ஒரு ஒலி, அது முதலில் பிற விஷயங்களை அடைவதன் மூலம் மட்டுமே அடையக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இந்தக் கடைசிக் கருத்தானது உபநிடத பாணியிலான சிந்தனையை நினைவுபடுத்தக்கூடிய, காலம் என்றால் என்ன என்று கேட்பது போன்ற ஒரு கவிதையில் அழகாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது:

“காலம் எங்கே போகிறது / கனவைத் தேடி

கனவு எங்கே போகிறது / நிறத்தைத் தேடி

நிறம் எங்கே போகிறது / பறவையைத் தேடி

பறவை எங்கே போகிறது / பாட்டைத் தேடி

பாட்டு எங்கே போகிறது / நினைவைத் தேடி

நினைவு எங்கே போகிறது / உலகத்தைத் தேடி

உலகம் எங்கே போகிறது / மனதைத் தேடி

மனது எங்கே போகிறது / ஒளியைத் தேடி

ஒளி எங்கே போகிறது / உணர்வைத் தேடி”

  இப்படியாக, மனிதர்களுக்கே உரித்தான தன்மையான உணர்வுகளில் காலம் என்ற கருத்தாக்கத்தை இனம்காண்பதன் மூலம் கவிதையை முடிக்கிறான். இந்த நிலைப்பாடு மெய்ம்மையானதும் அல்ல, முழுமுற்றிலும் நம் கற்பனையின் விளைபொருளும் அல்ல. கருத்தாக்கங்கள் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் தன்மையையே இது காட்டுகிறது – மாபெரும் பௌத்தத் தத்துவவாதி நாகார்ஜுனரை எனக்கு நினைவுபடுத்தும் சிந்தனை முறை இது.  

காலத்தைப் பற்றிய இதுபோன்ற பல்வேறு உருவகங்களைப் பல கவிதைகள் உருவாக்குகின்றன என்று நாம் கூறலாம். ஆனால், இந்தக் கவிதைகளின் சிறப்புத்தன்மை என்னவென்றால் இவையெல்லாம் ஒரு குழந்தையின் மிகவும் எளிய, அன்றாட வாழ்க்கை அனுபவங்களில் காணப்படுபவையாக இருக்கின்றன, அந்த அனுபவங்களிலிருந்தே இந்தக் கவிதைகள் எழுகின்றன. மேலும் இதன் தனித்தன்மை என்னவெனில் இது குழந்தையின் அனுபவங்களைப் பேசும் பெரியவர்களின் குரல் அல்ல, அல்லது தனது குழந்தைப் பருவ அனுபவங்களை நினைத்துப் பார்க்கும் பெரியவர்களின் குரலும் அல்ல. இது ஒரு குழந்தையின் அனுபவம், அலங்கரித்துக்கொள்ளாத புலனுணர்வு-சிந்தனையாக வரும் கவிதையின் வழியே வெளிப்படும் குழந்தையின் அனுபவம்.    

இந்தக் கவிதைகளின் சக்தி எதுவெனில் காலத்தை அன்றாட வாழ்க்கையின் மிகவும் சாதாரண அம்சங்களிலிருந்து கண்டறிய முயல்வதுதான்: அவனது குட்டித் தம்பிக்கு அவனது தாய் உணவு ஊட்டுவதைப் பார்ப்பது, சுவரில் ஒரு எறும்பு ஏறுவதைப் பார்ப்பது, ஜன்னலுக்கு வெளியே ஒரு பறவையின் ஒலியைக் கேட்பது, வானத்தை நோக்குவது, ஆர்வத்துடன் ஒரு கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருப்பது அல்லது அமைதியாகத் தன்னையே உற்றுநோக்கிக்கொண்டிருப்பது.

ஆக, மகிழின் காலத்தை பலாப் பழங்களில் (ஒரு கவிதையில் நினைவில் நிற்கும்படி இப்படி எழுதியிருப்பான்: “பலாச் சுளையின் இனிப்பு/ என்னை நேற்றைக்குக் கொண்டுபோனது” என்றும் “அந்தப் பலாச் சுளையின் இனிப்பு/ என்னை நேரத்துக்குள்/ அடைத்தது” என்றும்), அவனுடைய தம்பியின் சிரிப்பொலிகளில் காண முடியும்.    

இப்படி மகிழ் ஆதன் அன்றாட வாழ்க்கைத்தன்மையைக் கொண்டே காலத்தின் மிகவும் சிக்கலான அம்சத்தை – அதாவது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்றையும் எப்படியோ ஒன்றிணைப்பதாகத்  தோன்றும் அதன் மூன்றுமுகம் கொண்ட தன்மையைப் பற்றி எழுதுகிறான். மகிழ் ஆதனின் கவிதைகளில் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் கவித்துவக் கற்பனையின் பகுதிகளாகின்றன: “பறவைகள் எதிர்காலத்தின்/ கதவைத் திறந்து பறந்தன” அல்லது “நான் காலத்தில்/ எதிர்காலம்/ நிகழ்காலம்/ கடந்த காலத்தை அடைத்து வைத்தேன்”. அல்லது தூக்கத்தில் தனது குட்டித் தம்பி சிரிப்பதைப் பற்றி இப்படிச் சொல்கிறான்:

“நீரன் தூக்கத்தில் சிரிக்கும் சிரிப்பு / எதிர்காலம் வழியாக எட்டிப்பார்த்தது

 தூக்கத்தில் நீரன் சிரிக்கும்போது / சிரிப்பு சிறகடித்தது

 அந்தச் சிறகடிக்கும் காற்றால் / காலம் நின்றது

 தூக்கத்தில் சிரிக்கும்போது / நீரனுக்கு என்ன கிடைக்கும்

 காலம் பிறக்கும் படம் / கிடைக்கும்”

காலத்தின் முப்பகுப்பு தொடர்பான மிக ஆழமான சிந்தனைகளுள் ஒன்றில் மகிழ் ஆதன் வெகுளியாகக் கேட்கிறான்: “நேற்றில் எத்தனை நாள் இருக்கும்” உண்மையில், நேற்றில் எத்தனை நாள்கள் இருக்கின்றன? ஒரு நாள் மட்டும்தானா? பல நாட்களா? இந்தக் கேள்வியைக்  கேட்பதில் என்னதான் அர்த்தம் இருக்கிறது?

இங்கேதான் இறுதியாக நாம் படைப்பாளியைக் கவிதைகளுக்குள் கொண்டுவர வேண்டியுள்ளது. இந்தக் கவிதைகளின் ஆசிரியர் யார் என்று  கேட்டுக்கொள்ளாமல் இந்தக் கவிதைகளை நாம் படிக்கலாம். ஒரு வகையில், அதை நாம் ஏன்தான் பொருட்படுத்த வேண்டும்? இந்தச் சொற்களை யார் எழுதியிருந்தால்தான் என்ன? ஆனால், ஒரு குழந்தை, 9 வயதுச் சிறுவன்தான் அதை எழுதினான் என்று நாம் அறிய நேரிடும்போது சொற்கள் வேறுபட்ட அர்த்தத்தைப் பெறுகின்றனவா? அவை ஆழம் குறைந்தவையாக அல்லது ஒரு சின்னப் பையன் இந்தச் சொற்களை எழுதியிருக்கிறானே என்று மிகவும் வியப்படைய வைப்பவையாக மாறிவிடுமா? நாம் படிக்கும் முறையை இந்த வியப்பு மாற்றிவிடுமா?

இந்தக் கேள்விகளெல்லாம், ஒன்றைப் படிப்பது என்றால் என்ன என்பதன் மையத்தை நோக்கிச் செல்பவையாக இருக்கும் அதே வேளையில், ஆசிரியரின் பிரசன்னம் இந்தக் கவிதைகளில் வேறு வகையில் காணப்படுகிறது என்பதை மட்டும் நான் சுட்டிக்காட்டுவேன் – வயதின் அடிப்படையில் அல்ல, ஏனெனில் காலத்தைப் புரிந்துகொள்வதற்கு அது ஒன்றே வழியாக இருக்கிறது, இப்படியான காலத்தில் மகிழ் ஆதன் சற்றும் ஆர்வம் காட்டுவதில்லை.

ஆசிரியரின் பிரசன்னமானது இந்த உலகத்தைப் பார்ப்பதில் ஒரு தன்னம்பிக்கை, ஒரு வெகுளித்தன்மை, ஒரு புத்துணர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் அணுகப்பட வேண்டியது. ஒருவேளை, குழந்தையாக இருப்பது என்பது மொழியைப் பற்றியோ, சொல்லப்படும்  விஷயம் சரிதானா என்ற அதன் ‘சரித்தன்மை’ பற்றியோ, சொல்லப்படும் விஷயத்தின் ஆழத்தைப் பற்றியோ ரொம்பவும் கவலைப்படாமல் தான் சொல்ல விரும்புவதைச் சொல்வதாக இருக்கலாம். இந்தக் குழந்தைத்தன்மை ஏறிய - அனுபவத்தின் - காலம் பற்றிய ஒரு அனுபவத்தின் குரல்தான் உண்மையில் இந்தக்  கவிதைகளில் மிகவும் அற்புதமாக மகிழ் ஆதனால் கைக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த வெகுளித்தனமும்தான் புத்துணர்ச்சியும்தான் மகிழ் ஆதனிடம் காலத்தின் பிரசன்னத்தைக் குறிக்கின்றனவே தவிர அவனது பௌதிக வயது அல்ல.

காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்

(காலம் குறித்த 51 கவிதைகள்)

மகிழ் ஆதன்,

கோட்டோவியங்கள்: வெ.சந்திரமோகன்,

விலை ரூ. 160

ஜனவரி-2022

எதிர் வெளியீடு, பொள்ளாச்சி – 642002

தொடர்புக்கு: 9942511302

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சுந்தர் சருக்கை

சுந்தர் சருக்கை, பேராசிரியர். தத்துவவியலாளர். தமிழில், ‘இரண்டு தந்தையர்’, ‘சிறுவர்களுக்கான தத்துவம்’, ‘விரிசல் கண்ணாடி’ ஆகிய சருக்கையின் நூல்கள் மொழிபெயர்ப்பாக வெளியாகியிருக்கின்றன.



3





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Umamaheswari   3 years ago

மகிழ் ஆதனை நாம் கொண்டாடியே ஆக வேண்டும் .ஒரு அரசுப் பள்ளி மாணவன் என்பதையும் எண்ணும் போது மிக மகிழ்வாக உள்ளது. படைப்பாற்றல் திறனை வளர்க்கும் குழலை உருவாக்கித் தந்த அவனது பெற்றோரையும் வாழ்த்திப் பாராட்டுகிறேன். அவனது முதல் கவிதைத் தொகுப்பை வாசித்து நான் உலக அளவிலான தமிழர்கள் இணைந்துள்ள அமைப்பில் இணைய வழியில் புத்தக அறிமுகம் செய்ததை இங்கு பதிவு செய்கிறேன். அருஞ்சொல்லுக்கு நன்றி .

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

சுரங்கப் பாதைகள்ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்உடல் எடைக் குறைப்புஒரு பள்ளி வாழ்க்கைகொழுப்புக் கல்லீரல்தசைநார் வலிக்குத் தீர்வு என்ன?இந்திரா என்ன நினைத்தார்?writersamasபொதுத் துறை வங்கிகள்ஜெயமோகன் ராஜன்குறை கிருஷ்ணன்மதிப்பெண்களை வாரி வழங்குகின்றனவா மாநிலக் கல்வி வாரஅருஞ்சொல் தொடர்2015 வெள்ளம்மராத்தாக்கள்மார்க்சிஸ்ட் கட்சிசமஸ் கட்டுரைக்கு எதிர்வினைசண்முநாதன் சமஸ்பைப்பர் கெர்மன்பாஜக நிராகரிப்புசர்க்காரியா கமிஷன்விஜயகாந்த் கதைமேலாண்மைஅசோக்வர்த்தன் ஷெட்டி பேட்டிஇந்திய அறத்தின் இரு முகங்கள்திசு ஆய்வுப் பரிசோதனைசமஸ் அருஞ்சொல் தமிழ்நாடு பிரிவினைமாட்டிறைச்சிஎம்.எஸ்.ஸ்வாமிநாதன்நீதி நிர்வாக முறைமை மீது அச்சுறுத்தல் வேண்டாம்ஒற்றைச் சாளரமுறை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!