கட்டுரை, ஆளுமைகள், நிர்வாகம் 5 நிமிட வாசிப்பு
ராஜ் சுப்ரமணியம்களின் காலம் சொல்வது என்ன?
உலகின் முன்னணி கூரியர் நிறுவனங்களில் ஒன்று 'ஃபெட்எக்ஸ்' (FedEx). இன்று இணையத்தில் தகவல்களைத் தேடும் செயலுக்கு ‘இந்த விஷயத்தை கூகுள்செய்து பார்!’ என்று நாம் சொல்வதுபோல அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கூரியர் அனுப்புவதற்கு ‘இந்தப் பொருளை ஃபெட்எக்ஸ் செய்துவிடு!’ என்றே சொல்வார்கள். அந்த அளவுக்குப் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடையே புகழ் பெற்ற நிறுவனம் இது. அவர்களின் டெலிவரிக்காக மட்டுமே சொந்தமாக 700 விமானங்களை வைத்திருக்கிறார்கள். ஆண்டு வருமானம் 84 பில்லியன் டாலர் எனும் அளவுக்குக் கொழித்துக்கொண்டிருக்கும் நிறுவனம் இது.
தலைமைப் பொறுப்பில் இந்தியர்
ஃபெட்எக்ஸுக்கு இதுவரை அதன் நிறுவனர் ஃப்ரெட் ஸ்மித்தான் தலைமை நிர்வாக அதிகாரியாக, அதாவது சிஇஓவாக இருந்தார். அவர் சமீபத்தில் பதவி இறங்கியிருக்கிறார். புதிய சிஇஓவாக இந்திய அமெரிக்கர் ராஜ் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டிருக்கிறார். பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வரலாற்றில் அடுத்த அத்தியாயம் ராஜ் சுப்ரமணியத்தினுடயது.
ராஜ் சுப்ரமணியத்துடைய வாழ்க்கை வசதியான ஒன்றுதான். அவர் குடும்பம் இந்தியத் தரத்தில் பார்த்தால் உயர் மத்திய வர்க்கத்துடையது. அப்பா போலீஸ் அதிகாரி, அம்மா மருத்துவர். மகன் இந்தியாவில் ஐஐடியில் பொறியியல் படித்துவிட்டு அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் எம்பிஏ சேர்ந்தார். அதற்குப் பின் வேறெங்கும் வேலைக்குப் போகாமல் 1991இல் நேரடியாக ஃபெட்எக்ஸ்சில் சேர்ந்தார். அங்கேயே தொடர்ந்து 31 ஆண்டுகள் பணிபுரிந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலே உயர்ந்தவர் இப்போது தலைமைப் பதவியைக் கைப்பற்றியிருக்கிறார்.
கார்ப்பரேட் உலகத்தில் தொடர்ந்து நிகழ்ந்துவரும் இந்தியமயமாக்கல் தொடர்கிறது என்பதையே இது காட்டுகிறது. அமெரிக்காவின் 500 மாபெரும் நிறுவனங்களைத் தரவரிசைப்படுத்தி 'ஃபார்ச்சூன் 500' (Fortune 500) எனும் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. இந்தப் பட்டியலில் கிட்டத்தட்ட 150 நிறுவனங்களில் பல்வேறு தலைமைப் பொறுப்புகளில் இந்தியர்கள் பதவி வகிக்கிறார்கள். அடுத்ததாக எதாவது நிறுவனத்துக்கு தலைமைக்கு ஆள் தேட வேண்டி வந்தால் ‘கம்பெனியில இந்தியப் பெயர் கொண்ட ஊழியர்களோட லிஸ்ட் ரெடி பண்ணுங்கப்பா!’ என்று சொல்வார்கள்போல! அந்த அளவுக்கு இது போய்க்கொண்டிருக்கிறது. இது ஆச்சரியமான வளர்ச்சி. அமெரிக்க மக்கள்தொகையில் இந்தியர்களின் எண்ணிக்கை 1%கூட இல்லை. அதாவது மக்கள்தொகைக்கு மீறிய பிரதிநிதித்துவம் இந்திய ஊழியர்களுக்கு அங்கே கிடைக்கிறது.
கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் எண்ணிக்கைரீதியில்கூட இதில் பெரிய ஆச்சரியம் இருக்க வாய்ப்பு இல்லை. கோடிக்கணக்கான இளைஞர்களை நாம் தொடர்ந்து பயிற்றுவித்து சமூகத்துக்கு அனுப்புகிறோம். அப்போது அதில் மேலே உயர்ந்து உயர்ந்து சிலர் உச்சத்தை அடைகிறார்கள். இந்தியாவின் கல்விச் சூழல் அப்படிப்பட்ட பயிற்சியை நம் மாணவர்களுக்குத் தொடர்ந்து தந்துகொண்டிருக்கிறது.
இந்தியர்களும் உழைப்பும்
ஒரு சிறிய கருத்துப் பரிசோதனையைச் செய்து பார்ப்போம். ஒரு நிறுவனத்தில் வெற்றிகரமாக மேலாளர் பதவி வகிப்பவருக்கு என்னென்ன அம்சங்களில் திறமை இருக்க வேண்டும்.
- கடுமையான உழைப்பு
- தொடர் குழப்பங்களுக்கு இடையே தெளிவாகப் பணிபுரிதல்
- பல்வேறு வேலைகளை ஒரே நேரத்தில் செய்து முடித்தல்
- பிரச்சினைகளைக் கண்டு அயராமல் எதிர்கொண்டு தீர்க்க முனைதல்
- வேலைத் திறன்களை முழுமையாக உள்வாங்குதல்
- சொந்தப் பிரச்சினைகளைவிட வேலைக்கு முக்கியத்துவம் தருதல்
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இந்தியாவில் படித்து வளரும் ஓர் இளைஞன் அல்லது இளைஞிக்கு இதற்கான தொடர் அனுபவம் கிடைக்கிறது. நமது சமூகங்களில் இருக்கும் பிரச்சினைகளை இளம் வயதில் இருந்து எதிர்கொள்ள மாணவர்கள் தயார்படுத்தப்படுகிறார்கள். போலவே பள்ளிப் படிப்பு முதல் மேற்படிப்பு தொடர்ந்து மாணவர்களுக்கு கொடுக்கப்படும் சவால்கள் உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு இங்கே கடினமாக இருக்கின்றன. வெயிலோ, மழையோ குளிரோ, எந்த இயற்கைச் சீற்றம் இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும், செயல்பட்டுக்கொண்டிருக்க வேண்டும். மின்சார துண்டிப்போ அல்லது வெள்ளமோ, அவர்களுக்கு விடுப்பு கிடைப்பதில்லை.
அதேபோல இந்தியாவில் மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து பல தலைப்புகளில் பயிற்சிகள் திணிக்கப்படுகின்றன. விதிவிலக்கின்றி அனைத்து மத்திய, உயர் மத்திய தரக் குடும்பங்களிலும் வளரும் பிள்ளைகள் பல்வேறு வகுப்புகளுக்கு போக வேண்டி இருக்கிறது. கராத்தே, இசை, பாட்டு, பாரத நாட்டியம், ஸ்விம்மிங், கிரிக்கெட் என்று ஒருபுறம், நுழைவுத் தேர்வுக்கான தயாரிப்புகள் மறுபுறம் என பல்வேறு வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய தூண்டப்படுகிறார்கள். அனைத்திலும் அவர்கள் மிளிர வேண்டும் என்ற அழுத்தமும் அவர்களுக்கு தரப்படுகிறது.
அப்படிப்பட்ட கடும் உழைப்பு மற்றும் பிரச்சினைகளைக் கண்டு அயராமல் தொடர்ந்து செயல்படும் திறனை அவர்கள் சிறு வயது முதலேயே பெறுகிறார்கள். அந்த அஞ்சாநெஞ்சம் அவர்களுக்கு வேலையில் கைக் கொடுக்கிறது. ஒப்பீட்டளவில் இதர தேசத்து ஊழியர்கள் இந்த அளவுக்கு அசராமல் தொடர்ந்து முன்னேற முனைவதில்லை என்று தெரிகிறது.
அடுத்ததாக, இந்தியர்களுக்கு வேலையைவிட வேறு எதுவும் முக்கியமல்ல என்று இளம் வயது முதல் சொல்லித் தரப்படுகிறது. 'செய்யும் தொழிலே தெய்வம்' போன்ற பழமொழிகள் இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் காணப்படுகின்றன. பிரதமர் மோடி விடுப்பே இல்லாமல் உழைக்கிறார் என்ற செய்தி ஊடகங்களினால் பெருமையாக பேசப்படுகிறது. ‘வீட்டில் மனைவி இறந்துபோன மூன்றாம் நாளே வேலைக்கு வந்துவிட்டார்’ என்று ஒரு அதிகாரியைப் பற்றி சிலாகித்துப் பேசிய ஓர் உரையை சமீபத்தில் கேட்டேன்.
மேற்கு நாடுகளில் இப்படி ஒருவர் மனைவி இறந்த மூன்றாம் நாளே வேலைக்கு வந்தால் அவருக்கு ஏதோ உளவியல் பிரச்சினை என்று கவுன்சிலிங்குக்கு அனுப்புவார்கள். இந்தியாவில் அவர்களுக்கு பாராட்டுரை வழங்குகிறோம். இந்தக் கலாச்சாரம் நம்மில் ஊடுருவி உலகில் எல்லாவற்றையும்விட வேலை முக்கியம் என்று நம்மிடம் ஊறிவிட்ட குணம் பணியிடங்களில் வெளிப்படுகிறது. இவை இங்கே சகஜம் என்பதால் நாம் குறிப்பிட்டுப் பேசுவதில்லை. ஆனால், மேற்கு நாடுகளில் இவற்றைப் பார்க்கும் அந்நிய தேசத்து மேனேஜர்கள் ஆச்சரியப்பட்டுப்போகிறார்கள்.
இப்படிப் பல தனித்துவ குணாதிசயங்கள் இந்திய ஊழியர்களுக்கு மேற்கு நாடுகளில் உதவிகரமாக இருக்கின்றன. படிக்கவும் உழைக்கவும் நமது இளைஞ, இளைஞிகளுக்கு தரப்படும் இப்படிப்பட்ட சமூக அழுத்தங்கள் பலரை அழுத்தி நாசமும் செய்கிறது என்பதும் உண்மைதான். ‘அழுத்தங்கள்தான் வைரங்களை உருவாக்குகின்றன,’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது; கடும் அழுத்தம் வைரம் ஆக்குகிறது என்று அதைப் பொருள் கொள்ளலாம் (Pressure makes diamonds). அழுத்தங்களால் பலர் நசுங்கி நொறுங்கி விடுகிறார்கள். அப்படி நொறுங்காமல் தாக்குப்பிடிப்பவர்கள் வைரங்களாக மிளிர்கிறார்கள். கடுமையாக அழுத்தப்படும் கோடிக்கணக்கான கரித்துண்டுகளில் இருந்து ஓரிரு டஜன் வைரங்கள் கிடைப்பதில் ஆச்சரியம் இல்லைதானே?
3
1
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
udhaya kumar 2 years ago
நம் மாணவர்கள் வெளிநாடுகளில் மிளிர்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சியே. இருந்தும் ஐஐடி போன்ற அரசு நிறுவனங்களில் நம் வரிப்பணத்தி்ல் படிப்பவர்களின் 90சதவித்த்தினரின் திறன் வெளிநாட்டுக்கே பயன்படுமெனில் அதில் மகிழ்வதில் அர்த்தமென்ன ஒருமுறை சுப்ரமணிய சாமி இவ்வாறு கூறினார். “ஐஐடியில் படித்தவர்கள் இந்தியாவில் முதல் ஐந்தாண்டுகள் கட்டாயம் வேலை செய்ய வேண்டுமென்று”. சரிதானே.
Reply 1 0
Ganeshram Palanisamy 2 years ago
வெளிநாடு செல்பவர்கள் கட்டாய நன்கொடை அளிக்கவேண்டும் என்று வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் அவர்கள் திறமைக்கு ஏற்ற வேலை கிடைக்க வாய்ப்புகள் குறைவு.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.