கட்டுரை, தொடர், வாழ்வியல் 5 நிமிட வாசிப்பு
ஒரே வேலையில் நீடிக்கிறீர்களா... ஆபத்து!
நான் முன்னர் இருந்த ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த அசோக்கின் கதை அலாதியானது. சுமார் 10 ஆண்டுகளாக அவர் அதே நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். ஒரே வேலையைச் செய்துவந்தது மட்டுமல்ல; ஒரே பதவியில் சுமார் 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து இருந்தார் அவர்.
இதில் என்ன ஆச்சரியம் என்ற கேள்வி எழலாம்.
தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் சேரும் இளைஞர், இளைஞிகள் தொடர்ந்து பதவி உயர்வை நாடுகிறார்கள். பதவி மற்றும் சம்பள உயர்வு நோக்கித் தங்கள் உழைப்பைச் செலுத்துகிறார்கள். பதவி, சம்பள உயர்வு இல்லாவிடிலும் தாங்கள் செய்யும் பணியிலாவது மாறுதல்கள், வித்தியாசங்கள் வேண்டும் என்று ஆவலுறுகிறார்கள். அப்படி எதற்கும் ஆசைப்படாமல், ‘இருக்கும் வேலையே போதும், அதற்கு வரும் சம்பளமே போதும்!’ என்று வாழ்வது இன்றைய சூழலில் ஒரு ஜென் மனநிலை. பெரிய ரிஸ்க் எதுவும் இல்லாமல் வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்ற பாதுகாப்பு மனநிலையும்கூட அது!
ஆனால், இதுதான் இன்று உள்ளதிலேயே மிகப் பெரிய ரிஸ்க் என்பதுதான் இங்கே நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.
அப்படி என்ன ரிஸ்க்?
முன்னெப்போதையும்விட காலமும் பணிச் சூழலும் வேகமாக இன்று மாறுகின்றன. ஒரே வேலையில் பத்து வருடங்களாக ஒருவர் பணிபுரிகிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்படித் தொடர்ந்து செய்துவருவதால் அவர் சம்பளம் பெரிய அளவு அதிகரிக்காது. ஆண்டாண்டு வெறும் 5% அதிகரித்துவருகிறது என்றே வைத்துக் கொண்டாலும், அவர் சம்பளம் 36 ஆயிரத்தை மட்டுமே தொட்டிருக்கும். ஆனால், அப்போது அதே வேலைக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டி இருப்பது குறித்து நிறுவன மேலாண்மை கவலையுற ஆரம்பித்திருக்கும்.
அடுத்த பத்தாண்டுகளில் ஒரு கணினி மென்பொருள் மூலமோ அல்லது வேறு ஏதாவது தானியங்கி வழிமுறை மூலமோ அவர் செய்து வந்த வேலையையே எந்த மனித உழைப்பும் இன்றி செய்துவிட வழிமுறைகள் தோன்றிவிடலாம். அப்போது சம்பந்தப்பட்டவர் வேலை இழக்க வேண்டி வரலாம். தவிர, ஒரே வேலையைப் பத்து ஆண்டுகள் தொடர்ந்து செய்துவருவது ஒருவித சிந்தனைக் களைப்பை உருவாக்கலாம். அது அந்த வேலையின் தரத்தையும் பாதிக்கக் கூடும்.
அதற்காக இரண்டு வருடத்துக்கு ஒரு முறை கம்பெனி மாற வேண்டுமா என்ற கேள்வி வரலாம். இங்கே நாம் பேசுவது செய்யும் வேலையில் மாறுதல்கள், புதிய சவால்கள், வேலையின் தரத்தை உயர்த்துதல் போன்றவை தொடர்பில்தான். அதற்கு கம்பெனி மாற வேண்டிய அவசியம் இருக்காது. இருக்கும் நிறுவனத்துக்கு உள்ளேயே வேறு சவால்களைத் தேடலாம் அல்லது நாம் செய்யும் வேலையை எப்படி சவாலாக்குவது என்று ஆராயலாம்.
அதனால் என்ன பிரயோசனம்? அப்படித் தேடுவதன் மூலம் நமது வாழ்வு சுவாரசியமாக ஆகும் என்பதுதான் முக்கிய பலன். அதைத் தாண்டியும் பல பலன்கள் உள்ளன. அலுவலகத்தில் உங்களைப் பற்றிய பிம்பம் உயரும். இவர் புதிய சவால்களுக்கு நிறுவனத்துடன் துணை நிற்கிறார் என்று எண்ணம் உண்டாகும். புதிய பொறுப்புடன் புதிய கற்றல்கள் கூடும். வேறு துறையில் வேறு சவாலான ஒரு தேவை எழுந்தால் அங்கே நமது பெயர் நினைவுக்கு வருமளவு புகழ் பரவும். இப்படி எல்லாம் நிறுவனத்துக்குப் பயனுள்ள அளவு இருப்பவருக்கு ஊதியமும் பன்மடங்கு உயரும் என்பதைத் தனியாக சொல்லவும் வேண்டுமா என்ன?
கொஞ்சம் சிந்தியுங்கள்
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்; நமக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான். மறு ஜென்மத்தைப் பற்றியெல்லாம் மதங்கள் பேசினாலும் அப்படியெல்லாம் ஒன்று இருக்கிறதா என்பதெல்லாம் நமக்குத் தெரியாத விஷயம். நமக்குத் தெரிந்த ஒன்று இப்போது நாம் வாழும் வாழ்வுதான். அதனை எத்தனை சுவாரசியமாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதைத்தானே நாம் யோசிக்க வேண்டும்?
நம் வேலை என்பது நமது வாழ்வின் அதிமுக்கிய அங்கம். வாழ்வில் மூன்றில் ஒரு பங்கை நமது வேலையில்தான் செலவிடுகிறோம். நமது வாழ்வு சுவாரசியமாக அமைய வேண்டுமெனில் நமது வேலை சுவாரசியமாக அமைவது அவசியம்தானே? இங்கே சவால்கள் இன்றி சுவாரசியம் ஏது?
எனவே, உங்களுடைய தற்போதைய வேலையைத் தொடர்ந்து மீள் மதிப்பீடு செய்துகொண்டே இருங்கள். அப்படி செய்வதற்கு பின்வரும் கேள்விகளை நீங்களே கேட்டுக் கொண்டு அதற்கான பதில்களைத் தேட வேண்டியது அவசியம். இதுதான் உங்களைப் பாதுகாப்பாகவும் உணர வைக்கும்.
- இந்த வேலையை என்னைவிடத் திறன் குறைவான வேறு யாராவது சுலபமாகச் செய்துவிட முடியுமா?
- இந்த வேலையை என்னைவிட அனுபவம் அல்லது படிப்புக் குறைவான வேறு யாராவது சுலபமாகச் செய்து விட முடியுமா?
- இந்த வேலையை ஒரு கணினியோ அல்லது வேறு ஏதாவது தானியங்கி இயந்திரமோ நான் செய்வது போன்ற திறனுடன் முடித்துவிடுமா? அப்படி ஏதாவது மென்பொருள்கள் சந்தையில் கிடைக்கின்றனவா அல்லது ஆய்வில் இருக்கின்றனவா?
- இந்த வேலையைச் செய்ய நான் எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிடக் குறைவான நேரத்தில் செய்து முடிக்கும் வழிமுறைகள் ஏதேனும் உள்ளனவா? டெம்ப்ளேட்கள், மென்பொருட்கள், இத்யாதி...
- இந்த வேலைக்கான அவசியம் என் நிறுவனத்துக்கு எவ்வளவு காலம் நீடிக்கும்? இந்த வேலையே தேவைப்படாது என்ற நிலை வருங்காலத்தில் ஏற்படுமா? அப்போது எனக்கு சீட்டு கிழியுமா?
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு உங்களுக்குச் சில விடைகள் கிடைக்கக் கூடும். அது உங்களுடைய வேலையின் எதிர்காலம் குறித்து உங்களுக்கே ஒரு சித்திரத்தை வழங்கக் கூடும்.
இரு வாய்ப்புகள்
சந்தையில் கிடைக்கும் ஒரு மென்பொருள் அந்த வேலையைச் சரியாக செய்து கொடுக்கும் என்று தெரிய வரலாம். அப்போது என்ன செய்வீர்கள்? ‘கடவுளே, இந்த மென்பொருள் குறித்து என் மேனேஜருக்கு தெரிய வரவே கூடாது!’ என்று தினமும் சாமிக்கு வேண்டிக்கொள்வீர்களா? அல்லது நேரடியாக உங்கள் மேனேஜரிடம் போய் ‘மேடம், இப்படி ஒரு மென்பொருள் குறித்துப் படித்தேன். அதன் மூலம் நமது செலவைக் குறைக்க முடியும். அதனை நாம் நமது நிறுவனத்துக்கு பரீட்சித்துப்பார்க்கலாமா?’ என்று கேட்பீர்களா?
நான் இரண்டாவதைத்தான் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். முதலாவது வீணான செயல்; அதீத மன அழுத்தம் கொடுப்பதும்கூட. இரண்டாவது தன்னம்பிக்கை நிறைந்த செயல். அப்படி நீங்கள் பரிந்துரைத்து உங்கள் நிறுவனம் அந்த மென்பொருளை வாங்கி அதன் மூலம் உங்கள் வேலையைத் தானியங்கியாக மாற்றிவிட்டால் உங்களை வேலையை விட்டுத் தூக்கி விடுவார்களா? கண்டிப்பாக மாட்டார்கள். காரணம், அப்படி நிறுவனம் நிதியை சேமிக்க உதவியதே நீங்கள்தான் என்பதால் உங்களை வேறு டிபார்ட்மெண்ட்டுக்கு மாற்றி அங்கேயும் இது போன்ற தானியங்கி தீர்வுகளை கண்டுபிடித்துக் கொடு என்று கேட்பார்கள்.
அப்படி நீங்கள் செய்வதற்கு உங்களுக்கு சம்பளமும், பதவியும்கூட உயரலாம். சம்பளம் அதிகரிக்கும்போது உங்கள் சவால்கள் அதிகரிக்கும். வாழ்க்கை சுவாரசியமாக மாறும்.
வாழ்வில் சுவாரஸ்யம் கூடுவதற்கும், வெற்றி சேருவதற்கும் நமக்கு இருக்கும் தேர்வுகள் எளிமையானவை. வாழ்வதற்கும் சும்மா இருத்தலுக்கும் இடையில் சிறு வித்தியாசம்தான் இருக்கிறது. மேலே அறிமுகப்படுத்திய அசோக் வெறுமனே இருக்கிறார். இங்கே குறிப்பிட்ட உத்திகளைத் தொடர்ந்து முயல்பவர் வாழ முனைகிறார். அந்தச் சிறு வித்தியாசம் நமது சுய முனைப்பில்தான் பொதிந்து உள்ளது!
(பேசுவோம்)
1
3
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
சசிகுமார் சாமிக்கண் 3 years ago
பெரும்பாலும் மென்பொருள் படித்த முட்டாள்கள் இது போன்று தான் ஓடிக்கொண்டே இருப்பார்கள். ஸ்ரீதர் மட்டும் விதி விலக்கல்ல.... நம் பண தேவைக்கு தான் வேலை....
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.