வாழ்வியல், வேலையும் வாழ்வும் 9 நிமிட வாசிப்பு
இந்த வேலையும் சம்பளமும் நிச்சயம்தானா?
கரோனா பெருந்தொற்று இந்த உலகை விசித்திரமான வகைகளில் மாற்றியமைத்திருக்கிறது. அவற்றில் முக்கியமானது நாம் வேலை செய்யும் முறை. பரவ ஆரம்பித்த ஓரிரு வாரங்களிலேயே உலகம் முழுவதும் வியாபித்த கரோனா கிருமி, நம்மை எல்லாம் வீட்டிற்குள்ளேயே அடைத்துவிட்டது. இந்த எதிர்பாராத அதீத உலக மாற்றம் பலரின் சிந்தனையைப் புரட்டிப்போட்டது. நமது வாழ்வுபற்றி பல்வேறு விதமாக சிந்திக்கவும் வைத்தது. நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? வாழ்வின் அர்த்தம் என்ன? இப்படியெல்லாம் சிந்தனைகள் நம் மனதில் உதிக்கத் துவங்கிவிட்டன.
'தேடிச்சோறு நிதம் தின்று' என்ற பாரதி வரிகளைப் போல, இப்படி வேலை... உணவு... வேலை... உணவு... என்று வாழ்நாள் முழுக்கவும் வாழ வேண்டுமா என்று பல இளைஞர்கள் இளைஞிகள் யோசிக்கத் துவங்கியிருக்கிறார்கள். விளைவு: இந்தக் கேள்விகளால் உந்தப்பட்டு உலகம் முழுவதும் வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளின் நிறுவனங்களில் இருந்து பெருமளவில் இளைஞர், இளைஞிகள் ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
அமெரிக்காவில் கடந்த 2021ல் மட்டும் 3 கோடிக்கும் அதிகமானோர் வேலையை ராஜினாமா செய்திருக்கிறார்கள். பிரிட்டனில் சுமார் 25% ஊழியர்கள் ராஜினாமா செய்துவிட்டார்கள் அல்லது செய்யத் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று தெரிகிறது. இந்தியாவில் இருந்து தெளிவான எண்ணிக்கை கிடைக்கவில்லை எனினும் ஐடி, பிபிஓ, பயோடெக் போன்ற நவீன துறைகளில் பெரும் எண்ணிக்கையில் ராஜினாமாக்கள் நடந்திருக்கின்றன. இதனை 'மாபெரும் ராஜினாமா' என்று அழைக்கிறார்கள்.
இவர்களில் பலர் வேறு வேலை தேடிக்கொண்டாலும் அவை பெரும்பாலும் அதே துறையைச் சேர்ந்த வேலைகளில்லை. அதாவது இவர்கள் வழக்கமான முறையில் வேலை மாறவில்லை என்று தெரிகிறது. மேலும் சிலர், வேண்டுமென்றே தங்கள் துறையை மாற்றிக்கொள்ள முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். அதாவது ஒரு ஜாவா புரோகிராமர், இப்போது வேலை மாறி டிவி சீரியல்களுக்கு கதை எழுதுகிறார். ஒரு மனிதவளத் துறை அதிகாரி வேலையை விட்டுவிட்டு, வீட்டுத் தோட்டங்களை வடிவமைக்கும் தொழிலைத் தேர்ந்தெடுக்கிறார். இப்படி வேறு வேறு வேலைகளுக்கும் தொழில்களுக்கும் மாறுகிறார்கள். பலர் நீண்ட விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டில் வேலைசெய்வது, குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது அல்லது எதிர்கால திட்டம் குறித்து யோசிப்பது என்று முயற்சிக்கிறார்கள்.
இப்படி எல்லாம் முன்னரும் செய்துகொண்டிருந்தார்கள். ஆனால், கொள்ளைநோய் ஒன்று வந்து உலகை அச்சுறுத்தியதில் பலருக்கும் வாழ்வின் நிச்சயமின்மை குறித்த தெளிவும் அவசரமும் வந்துவிட்டிருக்கிறது. ஏற்கெனவே பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த மாபெரும் ராஜினாமா இந்த நிறுவனங்களைப் பாதித்து இருக்கிறது. சாரிசாரியாக ஒரு நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் விலகினால் என்ன ஆகும்? அந்நிறுவனத்தின் சேவைகள் என்ன ஆகும்? அது வாடிக்கையாளர்களை எப்படிச் சமாளிக்கும்? கரோனாவைவிடக் கடுமையாக இந்தக் கேள்விகள் நிறுவனங்களை அச்சுறுத்தின. விளைவாக, இந்த மாபெரும் ராஜினாமாவை எதிர்கொள்ள நிறுவனங்கள் மாபெரும் ஆளெடுப்பை ஆரம்பித்து இருக்கின்றன.
இடையில் சுவாரசியமான இன்னொன்று நடந்துகொண்டிருந்தது. உலகளவிலான ஊரடங்கு (லாக் டவுன்) காரணமாக நவீன, தொழில்நுட்ப நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலைசெய்யும் முறைக்கு மாறின. இந்த வசதியைப் பயன்படுத்தி ஊழியர்கள் வீட்டில் இருந்து சகஜமாக வேலை செய்யத் துவங்கினார்கள். பலர் பெங்களூர், சென்னை போன்ற நகரங்களில் இருந்து தங்கள் ஊர்களுக்கு மறு குடியேறினார்கள். எப்படியும் பிள்ளைகளுக்கும் பள்ளி எல்லாம் ஆன்லைனில்தானே நடக்கிறது! எனவே எங்கே இருந்தால் என்ன என்று புலம்பெயர்ந்தார்கள். இப்படி எல்லோருமே வீட்டில் இருந்து வேலைசெய்வது பழகிப் போய்விடவே அதற்கேற்ப மீட்டிங்குகள், ப்ராஜக்ட் மேலாண்மை போன்றவை நிகழத் துவங்கின. அப்போது புதிதாக இணையும் ஊழியரும் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்தானே? அப்படியானால் அவர் இந்தியாவில் எங்கே இருந்தாலும் அவரை வேலைக்கு எடுக்கலாம்தானே?
விளைவு, வழக்கமாக தங்கள் நிறுவனம் இருக்கும் ஊரில் இருந்துதான் ஆளெடுக்க வேண்டும் அல்லது வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஆள் அந்த ஊருக்குக் குடிபுக வேண்டும் என்று முன்னர் இருந்த நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன. எங்கே இருந்தும் ஆட்களை எடுத்து அங்கிருந்தே அவர்களை வேலை செய்ய வைக்கலாம் என்று நிலை மாறியது. புதுச்சேரியில் இருக்கும் ஒருவர் தில்லியில் உள்ள நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து புதுச்சேரியில் இருந்தே பணிபுரியலாம்.
இந்த வசதி காரணமாக இந்தியாவெங்கும் வேலைக்கான சந்தை திறந்தது. 'மாபெரும் ராஜினாமா' காரணமாக நிறுவனங்களுக்கு ஆட்கள் அவசரமாக தேவைப்பட்டது. தவிர, வீட்டிலேயே வேலை செய்யும் வசதி காரணமாக இந்தியா முழுவதும் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆளெடுக்கலாம். இப்படியெல்லாம் மாறியது நியாயமாக நிறுவனங்களுக்குதான் சௌகரியமாக ஆகி இருந்திருக்க வேண்டும். ஆனால் மாறாக வேலை தேடும் தொழில்நுட்ப ஊழியர்கள்தான் அதிக பலன் அடைய ஆரம்பித்தார்கள்
ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்: செந்தில் திண்டுக்கல்லில் இருக்கிறார். மும்பையில் இருக்கும் ABC நிறுவனத்தில் நேர்காணலில் பங்கெடுத்து வேலை கிடைத்து விட்டது. 15 லட்ச ரூபாய் சம்பளம். அடுத்ததாக அவர் பெங்களூருவில் இருக்கும் XYZ நிறுவனத்தில் நேர்காணலில் பங்கெடுத்து வேலை பெற்று விடுகிறார். "எனக்கு ABCல் 15 லட்சம் பேசி இருக்கிறார்கள். நீங்கள் 18 கொடுத்தால் உங்களிடம் வருகிறேன்" என்கிறார். அதனை ஏற்றுக் கொண்டு XYZ நிறுவனம் அவருக்கு 18 லட்ச ரூபாய் கொடுக்கிறார்கள். அந்த சூட்டோடு அவர், PQR நிறுவனத்தில் இன்டர்வியூ பங்கெடுத்து பின்னர் பேரம் பேச ஆரம்பிக்கிறார்!
இதனை வேலை ஷாப்பிங் (Job Shopping) என்று அழைக்கிறார்கள். இப்படிப்பட்ட அணுகுமுறைகளை பலரும் செய்ய ஆரம்பிக்க இதன் விளைவாக சந்தையில் சம்பள நிலவரம் அதீதமாக உயர ஆரம்பித்து விட்டது. பாண்டெமிக்குக்கு முன்னர் 10-12 லட்சம் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த வேலைகளுக்கெல்லாம் இப்போது 20-22 லட்சம் என்று ஏறி விட்டிருக்கிறது. சில வேலைகள் அதிர்ச்சிகரமாக 30-35 லட்சம் என்று கூடப் போக ஆரம்பித்து விட்டது.
பாண்டெமிக்கினால் ஆபீஸ் வாடகை மிச்சம், மின்சாரம், மெயின்டெனன்ஸ் எல்லாம் மிச்சம் என்று மகிழ்ந்திருந்த நிறுவனங்கள் இப்போது செய்வதறியாது தவிக்கின்றன. இப்படி பெரிதாகிக் கொண்டே போகும் நீர்க்குமிழியை எப்படி கட்டுப்படுத்துவது என்று கவலையுறுகிறார்கள்.
ஆனால் ஒரு விஷயம். ஒரு நீர்க்குமிழி முடிவே இல்லாமல் பெருத்துக்கொண்டே போக முடியாது அல்லவா? ஏதோ ஒருகட்டத்தில் அது உடையவே செய்யும். அப்படித்தான் இதுவும் ஆகப் போகிறது. இன்னும் ஓரிரு வருடங்களில் சம்பளம் கொடுத்து கட்டுப்படியாகாத நிலைக்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனச் சம்பளங்கள் போகும். இப்போதே இந்திய நிறுவனங்கள் இங்கே ஆள் கிடைக்காமல் இலங்கை, பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து ஆளெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த முயற்சிகள் வெற்றிகரமாக ஆகிவிட்டால், இந்தியாவில் தொடர் வேலையிழப்பு நடக்கும்.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்து இந்தியா, சீனாவுக்கு வேலைகள் புலம்பெயர்ந்ததுபோல இந்தியாவில் இருந்து கிழக்காசிய நாடுகளுக்கு வேலைகள் புலம்பெயர ஆரம்பித்து இருக்கின்றன. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இந்த நாடுகளை முயற்சிசெய்ய ஆரம்பித்து இருக்கிறோம். நாம் முயற்சி செய்வதுபோல பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள நிறுவனங்கள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு தங்கள் வேலைகளை மாற்றிக்கொண்டிருக்கின்றன. கிழக்கு ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்கும் சம்பள அளவில் பெரிய வித்தியாசம் இருக்காது எனினும், கலாச்சாரரீதியாக அவர்கள் மேற்கு ஐரோப்பாவுக்கு நெருக்கமானவர்கள் என்பதால் எப்படியும் ஒரே செலவுதான் ஆகப் போகிறது. செய்கிற செலவை அங்கே பண்ணலாமே என்ற மனநிலை உருவாகிக்கொண்டிருக்கிறது.
இதில் ஊழியர்களாக நாம் செய்ய வேண்டியது என்ன? இந்த நீர்க்குமிழியில் நீங்கள் பலனடைந்திருக்கிறீர்கள் எனில் அதனை சந்தோஷமாக அனுபவியுங்கள். ஆனால், இது நிரந்தரமல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஓரிரு வருடங்கள்தான். ஒரு நிறுவனத்தின் மனித வள அதிகாரியாக நீங்கள் இருந்தால் சம்பள வரம்பை உயர்த்துவதுதான் இப்போதைக்கு இருக்கும் வழி. ஆனால் வேலையை வேறு பகுதிகளுக்கு மாற்றுவது குறித்தும், மாற்று வழிகள் குறித்தும் யோசிக்க வேண்டியது அவசியம்.
இப்போதைக்கு நிலைமையை சமாளிக்க சில யுக்திகளை நிறுவனங்கள் கடைபிடிக்கிறார்கள். வேலைக்கான 'அப்பாயின்ட்மென்ட்' கொடுத்த உடனேயே வேலையில் சேருவதற்கான 'போனஸ்' என்று அறிவிக்கிறார்கள். குறிப்பிட்ட தேதியில் வேலைக்கு சேர்ந்துவிட்டால் அந்த போனஸை உடனே கொடுக்கிறார்கள். போலவே, வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் 12 லட்சம் சம்பளம் கேட்டால், பேரம் பேசுவதற்கு பதிலாக 14 லட்சம் கொடுப்பதாக ஒப்புக் கொள்கிறார்கள். கேட்டதற்கு மேலேயே சம்பளம் கிடைத்த நபர் மகிழ்ச்சியாகி விடுகிறார். அந்த மகிழ்வில் இந்த 'ஜாப் ஷாப்பிங்' (Job Shopping) எனப்படும் கடை கடையாக ஏறி இறங்கும் வேலையைத் தவிர்த்துவிடுவார் என்பது நம்பிக்கை.
இப்படியாகப் பல யுக்திகளை நிறுவனங்கள் இப்போதைக்கு முயன்றுகொண்டிருக்கின்றன. கொள்ளைநோய் தொடரும் வரை இந்த மாபெரும் ராஜினாமாவும் மாபெரும் ஆளெடுப்பும் தொடரும். அதற்குப் பிறகு ஓராண்டில் நீர்க்குமிழி உடையும். அப்படி உடைந்த நேரத்தில் இந்தியாவின் முக்கிய தொழில்நுட்ப சேவைகள் கிழக்காசியா அல்லது கிழக்கு ஐரோப்பா என்று புலம் பெயர்ந்திருக்கும். அதற்குப் பின் இந்திய தொழில்நுட்ப சேவைத் துறை மற்றும் நவீன ஐடி சார்ந்த துறைகள் என்னவாகும் என்பதுதான் நாம் முன் நிற்கும் கேள்விக்குறி.
2
1
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
செல்வம் 3 years ago
வேறு சிலர் இன்னொரு கதையைச் சொல்கிறார்கள். பெருந்தொற்றைக் காரணம் காட்டி இன்றியமையாதவர்கள் இல்லை என்று கருதப்பட்டோர் பெருமளவில் கழற்றிவிடப்பட்டனர். எஞ்சியவர்களுக்கு சம்பளக் குறைப்பு, வருடாந்தர ஊதிய உயர்வு நிறுத்தம் போன்றவை நடந்தன. குறிப்பாக நிறுவனத்தின் செயல்பாட்டையும் தனிநபரின் செயல்பாட்டையும் பொறுத்து ஆண்டுதோறும் மாறுபடும் ஊதியப் பங்கு குறைக்கப்பட்டது. இதுவே ஊதியத்தில் கணிசமான அளவுக்கு இருக்கும். பெருந்தொற்று இருந்தொற்றாக மாறிவிட்டதாகவே தற்சமயம் கருதப்படுகிறது. தொழில் வளர்ச்சி மீண்டுவரும் நிலையில் ஆள் தேவை இருக்கிறது. இன்றியமையாதவர்கள் என்று கருதப்படும் சிலர் போட்டியாளர்களால் கைப்பற்றப்பட்டுவிடாமல் இருக்க மிகையான ஊதியம் தந்து காபந்து செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு வேண்டுமானால் குமிழி உடையலாம். ஆனால் அவர்களில் பலர் சிற்றெறும்பின் சிறுநீரில் இருந்தும் வெண்ணெய் எடுக்கத் தெரிந்தவர்கள். ஆடியோ பாடியோ கறந்துகொள்வார்கள்.
Reply 9 0
Login / Create an account to add a comment / reply.