கட்டுரை, தொடர், வாழ்வியல், வேலையும் வாழ்வும் 6 நிமிட வாசிப்பு

ரஜினியும் இளையராஜாவும் ஓய்வுபெற வேண்டுமா?

ஸ்ரீதர் சுப்ரமணியம்
13 Nov 2021, 5:30 am
2

வ்வொரு முறை புதிய ரஜினி படம் வெளியாகும்போதும், ‘அவர் நடிப்பதிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டியதுதானே?’ என்ற குரல்கள் ஒலிக்கத் துவங்குகின்றன. அடுத்து,  இளையராஜா இசை ஆல்பம் ஏதாவது வெளியாகும்போதெல்லாம், ‘அவர் ரிடையர் ஆகிவிட்டால் நல்லது!’ என்று பேசுவார்கள். நானேகூட இளையராஜா குறித்த ஒரு கட்டுரையில், ‘அவர் ஓய்வுபெற்றுக்கொண்டால் நல்லது’ என்று சில வருடங்கள் முன்பு எழுதியிருக்கிறேன்.

நமக்கெல்லாம் தெரியும், ஓய்வுபெறும் வயது இந்தியாவில் 58. இதுவும் தேசத்துக்கு தேசம் மாறுகிறது. உலகெங்கும் அரசுப் பணிகளில் பொதுவாக 55-60 வயதுக்குள் ஓய்வு கொடுத்துவிடுகிறார்கள். தனியார் நிறுவனங்களிலும் சட்டரீதியாக ஓய்வுபெறுவதற்கு விதிமுறைகள் இருக்கின்றன; எனினும் பல நிறுவனங்கள் சில முக்கிய ஊழியர்கள் ஓய்வுபெற்றாலும், ஒப்பந்த முறையில் தொடரச் செய்கிறார்கள். மாறாக, சிலர் 50 வயதிலேயே ஓய்வு கிடைத்துவிடாதா என்று ஆவலுடன் காத்திருக்க ஆரம்பிக்கிறார்கள்.

ஒரு முக்கியமான கேள்வியை நிறையப் பேர் கேட்டுக்கொள்வதில்லை; நாம் கேட்டுக்கொள்வோம், ‘கண்டிப்பாக 58 வயதில் ஓய்வு பெற்றேதான் ஆக வேண்டுமா? அதுவும் இந்த 55, 60 என்பதையெல்லாம் யார் எதை வைத்து நிர்ணயிக்கிறார்கள்?

பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்பு, இந்த ஓய்வு என்ற சிந்தனாவாதமே நம்மிடம் கிடையாது. அதற்குத் தேவையும் இருக்கவில்லை. உலகெங்கும் சராசரி ஆயுளே அப்போது 26 - 40 வயதுக்குள்தான் இருந்தது. அப்போது ஒருவர் ஐம்பதைத் தாண்டுவதே சாதனை என்று இருந்த காலகட்டம். அதன் பின்னர் நவீன மருத்துவமானது, மானுட ஆயுளைப் பத்திருபது வருடங்களுக்குக் கூட்டியது. கூடவே, தொழிற்புரட்சி மற்றும் அதையொட்டிய விழிப்புணர்வுகள், போராட்டங்கள் சார்ந்தே வார விடுமுறை, வேலை நேர வரையறை, வருடாந்திர விடுமுறைகள்  போன்றவை நம்மிடையே தோன்றின. அவற்றுடனேயே இந்த ஓய்வு என்ற விஷயமும் சேர்ந்து தோன்றிற்று.

இது இருபத்தியோராம் நூற்றாண்டு. நவீன மருத்துவம் மானுட ஆயுளை இரட்டிப்பாக்கி வைத்திருக்கிறது. தொழில்நுட்பம், இயந்திரங்கள் போன்ற பல்வேறு வகைகளில் கடின உழைப்பு என்பது பல்வேறு விதங்களில் குறைக்கப்பட்டுவருகிறது. அப்படியானால், கண்டிப்பாக ஓய்வு என்பதை அடைந்தே ஆக வேண்டுமா? என்று நாம் யோசிக்க வேண்டும். உதாரணத்துக்கு ரிக்ஷா ஓட்டுநர் கண்டிப்பாக 80 வயது வரை உழைக்க முடியாது. அப்படி அவர் உழைக்க வேண்டும் என்றும் நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், ஓர் எழுத்தாளர், ஓர் இசைக் கலைஞர், ஒரு கணினிப் பொறியாளர் ஆகியோருக்கு உடல் உழைப்பு பெரிதாக இல்லை. அவர்கள் ஏன் தொடர்ந்து உழைக்க முடியுமா என்பது பற்றி கவலைப்பட வேண்டும்? அதுவுமின்றி, யாராக இருப்பினும் உடல் உபாதைகள் எதுவும் இல்லை எனில் வேலையைத் தொடருவதை எது தடுக்கிறது?

வேலை என்பதை நாம் ஒரு தொந்தரவாகப் பார்ப்பதால் உருவாகும் பிரச்சினை இது. நமது வேலையும் வாழ்க்கையும் வேறு வேறாகப் பார்க்கும்போது இப்படி ஒரு சமன்பாடு நமது மனதில் உருவாகிறது: வாழ்க்கை = மகிழ்ச்சிக்கானது; வேலை = சுமையானது / சுகமற்றது.

இப்படிப்பட்ட சமன்பாட்டை நாம் வைத்துப் பார்க்கும்போது நிறைய விஷயங்களை நமக்கு நாமே உருவாக்கிக்கொள்கிறோம். திங்கள் காலை கடுப்பேற்றும் நேரம்; சனி மாலை மகிழ்வான நேரம். பண்டிகை விடுமுறைகள் அல்லது இதர விடுமுறைகளை இப்படித்தாம் எதிர்நோக்கி இருக்கிறோம். இந்தச் சிந்தனையின் நீட்சிதான் ஓய்வு எனும் ஒன்றை எதிர்நோக்கி வாழ்வதும்!

இப்படி வாழ்வதில் என்ன பிரச்சினை என்று கேட்கலாம். யோசித்துப்பாருங்கள், ஒரு வருடத்துக்கு 52 ஞாயிறுகள். பண்டிகைகள் 10-15. சுயமாக எடுத்துக்கொள்ளத்தக்க விடுமுறை நாட்கள் 10-15. எல்லாம் சேர்த்தால் 82 நாட்கள் மகிழ்வானவை; வாழ்க்கைக்காக நாம் உருவாக்கியவை. ஆனால், வருடத்தின் மீதி 274 நாட்கள்? அது எவ்வளவு பெரிய சுமையுடன் நமக்குக் கழிகிறது என்று யோசித்துப்பாருங்கள். வருடத்தின் 80% நாட்களைக் கசப்புடன், வெறுப்புடன், சுமையுடன் கழிப்பதுதான் நமக்குக் கிடைத்த வாழ்க்கையா?

ஒரு பழமொழி உண்டு, ‘நீங்கள் எதைக் காதலிக்கிறீர்களோ, அதனை வேலையாகத்  தேர்ந்தெடுங்கள். அதுவே உங்களைக் கொல்லட்டும்!’ இதற்கு அர்த்தம், 'உங்களுக்குப் பிடித்த ஒரு விஷயமே உங்கள் வேலையாகவும் ஆகிவிட்டால் அதனை ஆரத்தழுவிக் கொள்வீர்கள். சாகும் வரை அது நமக்குக் கூடவே வரும்' என்பது.

அப்துல் கலாமுக்கு மிகவும் பிடித்த விஷயம் மாணவர்களுடன் பேசுவது; அவர்களுக்கு அறிவுரைகள் வழங்குவது. அவர்களை ஊக்குவிப்பது. அப்படி ஒரு மாணவர் கூட்டத்திடம் பேசிக்கொண்டிருருக்கும்போதுதான் அவர் மேடையிலேயே விழுந்து இறந்துபோனார். அப்படியான மரணத்தை அவரும் விரும்பியிருக்கக்கூடும்!

அதனால்தான் இளையராஜா, ரஜினி போன்றவர்களுக்கு ஓய்வு என்ற ஒன்றைப் பற்றிய யோசனையே வருவதில்லை என்று தோன்றுகிறது. காரணம், அவர்கள் தாங்கள் மிகவும் விரும்புவதைத்தான் தங்களது வேலையாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் செய்வதை ‘வேலை’யாகவே பார்க்க மாட்டேன் என்கிறார்கள். அவர்கள் செய்வதுதான் அவர்கள் வாழ்க்கை. அதனால்தான் இத்தனை வருடங்கள் கழித்தும், எழுபது வயதைத் தாண்டியும் காலை ஆறு மணிக்கு டான் என்று இளையராஜாவால் ஸ்டுடியோவில் நுழைய முடிகிறது. ரஜினியால் ஓய்வு என்பதைப் பற்றிக் கவலைப்படாமலேயே தொடர்ந்து நடிக்க முடிகிறது!

சிலருக்கு வேறு பல காரணங்களால் ஓய்வு தேவைப்படலாம். ஓய்வுடன் பெரிய சிக்கல் இல்லாத தினசரி இருத்தலைத் தேர்ந்தெடுக்கலாம். அது அவர்கள் தனிப்பட்ட விருப்பம் அல்லது கட்டாயம். ஆனால், மீதிப் பேருக்கு அப்படி வைத்துக்கொள்வது அத்தனை அவசியமில்லை.

வாழ்வும் வேலையும் தனித்தனியான விஷயங்கள் அல்ல. ஒன்றுடன் ஒன்று பிணைந்தவை. நாம் வாழ்வின் பெரும்பாலான காலத்தை வேலையில் கழிக்கிறோம்; அப்போது அதனை நமது வாழ்வுடன் பிணைத்துக்கொள்வது நமது வாழ்வை மேம்படுத்தும்; மகிழ்வாக ஆக்கும்.

கிளிண்ட் ஈஸ்ட்வுட் பழம்பெரும் நடிகர் என்பது நமக்கெல்லாம் தெரியும். ஹீரோவாக நடிப்பதை அவர் நிறுத்தி இயக்குநராகி மாமாங்கங்கள் ஆகின்றன. அவர் இயக்கிய பல படங்கள் ஆஸ்கர் விருதுகளைக் குவித்திருக்கின்றன. இப்போது அவருக்கு 91 வயது. இன்று வரை படங்களை இயக்கிக்கொண்டிருக்கிறார். இந்த வருடம்கூட அவரது ஒரு படம் வெளியாகவிருக்கிறது. கலைஞர் தொண்ணூறு வயதைத் தாண்டியும் எழுதிக்கொண்டிருந்தார். இவர்களைத்தான் நாம் வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் என்று போற்றுகிறோம். காரணம் அவர்கள் வாழ்வையும் வேலையையும் பிரிக்கவில்லை!

வேலையும் வாழ்வும் ஒன்றுதான். விபத்தோ வியாதியோ எப்படியோ சாவு வரத்தான் போகிறது. அதற்கு பதிலாக நாம் காதலிப்பதே நம்மைக் கொல்வதைப் போன்ற சுகம் வேறு ஏதாவது இருக்கிறதா என்ன?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.








பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Majestic_flounder_44   3 years ago

The problem with continuing work is mental cognitive ability decline. No problem you can continue work until it tastes good for the people. However, if it doesnt, people will mock you. Accepting and delivering the trend/peoples mind is what needed if you want to be in the race. No one has rights to say someone to retire, but they have to realize and self analyze "do i satisfy people by delivering this project?

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Padma   3 years ago

True. Following our passion and doing what we like is the essence of happiness. At the same time we shouldn’t hesitate to accept and incorporate changes as time goes by. Good article.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

டிஎன்டிகூகுள் பே: சுரண்டும் அட்டை மோசடிமெய்திபிட்ரோடாநீதிபதி ரஞ்சன் பி.கோகோய்நெருக்கடியில் பாஜக முதல்வர்பார்வையிழப்புநோன்பு காலம்மகளிர்தேசிய அரசியல் கட்சிகுஜராத்தியர்களின் பெருமிதம்விவசாயக் குடும்பங்கள்பண்டைத் தமிழ்நாடுஹெய்ல் செலாசிமேம்படுத்தப்பட்ட செயலிகள்பெண்கள் கவனம்!காந்தியின் வர்ணாசிரம தர்மம்யூனியன் பிரதேசங்கள்பொதுத் தேர்தல்பொன்முடியின் வீழ்ச்சி மட்டுமா இது?மேகநாத் சாஹாசோனியா காந்தி கட்டுரைபாரத் ராஷ்டிர சமிதிப.சிதம்பரம் கட்டுரைஏர் இந்தியாஷிவ் சஹாய் சிங் கட்டுரைமாறிவரும் உணவுமுறைh.v.handeதடுப்பணைகள்நான் ஒரு ஹெடேனிஸ்ட்: சாரு பேட்டி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!