கேள்வி நீங்கள் - பதில் சமஸ், சமஸ் 5 நிமிட வாசிப்பு

பாவம் ராஜன் குறை, பேராசிரியர் என்பதை மறந்துவிட்டார்

சமஸ் | Samas
14 Nov 2021, 5:00 am
9

நாம் ‘அருஞ்சொல்’ தளத்தை ஆரம்பித்தபோது வாசகர்கள் ஆர்வத்தோடு கேட்ட பகுதி, ‘கேள்வி நீங்கள் - பதில் சமஸ்’. முன்னதாக, ‘தி இந்து’ தமிழ் நாளிதழால் வெற்றிகரமான அதன் வாசகர் திருவிழா நிகழ்ச்சிகளில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சி இது. ‘வாசகர்கள் கேள்வி கேட்பார்கள், சமஸ் பதில் அளிப்பார்’ என்கிற ஏற்பாட்டில் வாசகர்கள் எந்தக் கேள்வியையும் கேட்கவும், தெரிந்த பதிலை சமஸ் சொல்லவும் இரு தரப்புக்கும் வாய்ப்பு அளிக்கும் பகுதியாக இது இருந்தது. அப்படியான உரையாடல் பகுதியாகவே ‘அருஞ்சொல்’ தளத்திலும் இந்தப் பகுதி ஆரம்பிக்கப்பட்டது. நேரமின்மை காரணமாக இன்னும் வாரம் ஒரு நாள் என்பதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பதோடு, ‘அருஞ்சொல்’ தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிப்பதாக மட்டுமே இதுவரையிலான அத்தியாயங்கள் கழிகின்றன. இந்த அத்தியாயமும் விதிவிலக்கு இல்லை. ‘சாவர்க்கர் குறுந்தொடர்’ தொடர்பாக ‘அருஞ்சொல்’ மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்குப் பதில் அளிப்பதாக இந்த அத்தியாயம் வெளியாகிறது. - ஆசிரியர் குழு

சாவர்க்கர் தொடருக்கு இப்போது என்ன தேவை இருந்தது? ‘அருஞ்சொல்’ ஏன் அதை வெளியிட வேண்டும் என்று சிலர் கேட்கிறார்களே?

இப்படி ஒரு கேள்வியே அபத்தமானது. இப்படிக் கேட்பவர்கள் அன்றாடம் செய்தித்தாள்களை வாசிக்கிறார்களா, நாட்டின் போக்கை உணர்ந்துதான் பேசுகிறார்களா என்று தெரியவில்லை. 

சாவர்க்கர் வாழ்வைப் பேசும் - குறிப்பாக, விக்ரம் சம்பத் எழுதிய - புத்தகங்கள் சமீபத்தில் ஆங்கில ஊடகங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கின. வெகு சமீபத்தில், சாவர்க்கர் - காந்தி தொடர்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதும் சர்ச்சையானது. எனக்குத் தெரிய, இது தொடர்பில் குறைந்தது நூறு கட்டுரைகள் ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியாகியிருக்கும். இது ஒருபுறம் என்றால், மற்றொருபுறத்தில் சாவர்க்கர், கோல்வால்கர் வரலாறு என்ற பெயரில், கொஞ்சம் உண்மை + நிறையப் பொய் என்று கலந்து கிராமங்கள் வரைக்கும் சங்க பரிவாரங்கள் கொண்டுசென்றுகொண்டிருக்கிறார்கள். 

இப்படிப்பட்ட சூழலில் முழு உண்மையையும், வரலாற்றையும் விவாதிப்பது அவசியம் ஆகிறது. ஆங்கில ஊடகங்கள் இதைச் செய்கின்றன. அதுபோலவே தமிழிலும் மேற்கொள்ள வேண்டும் என்று எண்ணத்தில் இந்தத் தொடர் திட்டமிடப்பட்டது. 

இன்று ஹிட்லரைப் பற்றி ஒரு தொடர் வெளிவருமானால், ‘ஏன் இப்படி ஒரு தொடர்? இது ஹிட்லரை மக்களிடம் கொண்டுசெல்லும் முயற்சியா?’ என்று யாரும் கேட்க மாட்டார்கள். மோடியின் காலத்தில்தான் நாம் ஹிட்லரைப் பற்றி பேச வேண்டி இருக்கிறது. அப்படித்தான் சாவர்க்கர், கோல்வால்கர் இவர்களையெல்லாமும் பேச வேண்டியிருக்கிறது. இவர்களைப் புரிந்துகொள்ளாமல், சங்கப் பரிவாரம் செல்லும் திசையை நாம் புரிந்துகொள்ள முடியாது. இதுதான் நோக்கம்.

பேராசிரியர் ராஜன் குறை எழுதிய விமர்சனங்களுக்கு உங்களுடைய பதில் என்ன?

ராஜன் குறை நான் பெரிதும் மதிக்கும் பேராசிரியர். என் நண்பர். என் மீது அவருக்கும் மதிப்பு உண்டு. தொழில்நுட்பக் காரணங்களால், ‘அருஞ்சொல்’லுக்கு அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை வெளியிட முடியாமல்போனது துரதிருஷ்டம். ‘தமிழ்நாட்டில் ஒரு சாய்நாத்’ என்று அதில் குறிப்பிட்டு வாழ்த்தியிருந்தார் அவர்.  ‘யாருடைய எலிகள் நாம்?’ புத்தகத்துக்கு ராஜன் குறை 2014-ல் எழுதிய குறிப்பு அந்தப் புத்தகத்தில் இருக்கிறது. ‘நடுநிலை என்பது தார்மீகம்தான் என்பதை சமஸின் எழுத்துகள் நிரூபிக்கின்றன்’ என்று அதில் குறிப்பிட்டிருப்பார்.

இடைப்பட்ட காலத்தில் என்னுடைய கட்டுரைகளைப் பாராட்டியும் இருக்கிறார், விமர்சித்தும் இருக்கிறார். சில சந்தர்ப்பங்களில் அவர் சுட்டிக்காட்டியிருக்கிற விஷயங்கள் சரி என்று தோன்றியபோதெல்லாம் நான் திருத்திக்கொண்டிருக்கிறேன்; அப்படித் தோன்றாதவற்றை விட்டிருக்கிறேன். எதிர்வினை ஆற்றியதில்லை.

இவ்வளவையும் எதற்காகக் குறிப்பிடுகிறேன்? பரஸ்பர உறவில், மதிப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதன் நிமித்தம் எல்லாமே சரி என்று ஆகிவிடாது. இந்தத் தொடருக்கு முகநூலில் ராஜன் குறை ஆற்றிய எதிர்வினை மோசமானது. ஒரு பேராசிரியர் எனும் தன்னிலையையே இழந்து பேசுகிறாரே; மனிதர்களை சமூகவலைதளங்கள் இவ்வளவு கீழே தள்ளிவிடுமா என்ற வருத்தம்தான் மேலிட்டது.

நிறைய எழுத இருக்கிறது. சில விஷயங்களை மட்டும் சுட்டுகிறேன். ராஜன் குறையின் எதிர்வினை எப்படித் தொடங்குகிறது? “அன்புள்ள சமஸ், நீங்கள் நான் பிறந்த என் சமூகத்தை பார்ப்பனர்கள் என்று அழைக்கும் உரிமையை எனக்குத் தர மாட்டீர்கள். பிராமணர்கள் என்று இந்து தர்மப்படி மாற்றித்தான் வெளியிடுவீர்கள் என்பதால் என்னுடைய முகநூல் திரியிலேயே இந்த எதிர்வினையைப் பதிகிறேன்.”

இந்தியாவில் தீண்டாமையையும் சாதியத்தையும் ஒழிக்க விரும்பும் எவரும், தங்களுடைய சாதிக்கு விமர்சகர்களாவது அடிப்படைக் கடமை. ராஜன் குறை தன் சமூகத்தினரைக் குறிக்கப் பயன்படுத்தும், ‘பார்ப்பனர்’ என்ற சொல்லாடலை நான் புரிந்துகொள்கிறேன். இதேபோல, சமத்துவத்தை விரும்பும் ஒவ்வொருவரும் தன்னுடைய சமூகத்தையும், ஏனைய சமூகங்களையும் குறிக்கும் சொற்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு. ஒரு சமூகமாகவும் தங்களை வரையறுத்துக்கொள்ளும் உரிமை உண்டு.

ஓர் உதாரணமாக, அம்பேத்கராலேயே பட்டியலினத்தவர் என்று குறிப்பிடப்பட்ட சமூகத்தினர் இன்று பெருமளவில் ‘தலித்துகள்’ என்று பிரகடனப்படுத்திக்கொள்கிறார்கள். உண்மையான ஒரு முற்போக்காளரும்,  அரசியல் விழிப்புணர்வுடைய ஊடகமும் இந்தச் சொல்லாடலுக்குத்தான்  முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ‘நான் ஒரு காந்தியன்; பட்டியலினத்தைச் சேர்ந்தவன்; அதன் பொருட்டு என் சமூகத்தை உரிமையோடு அரிஜன்கள் என்று அழைப்பேன்’ என்று ஒருவர் எழுதுவாரேயானால், இந்தச் சொல்லாடலோடு முரண்பட ஒரு ஊடகத்துக்கு உரிமை உண்டு.

ஏனென்றால், பரந்துபட்ட சமூகத்திடம் அந்த எழுத்து செல்லும்போது, சம்பந்தப்பட்ட எழுத்தாளரின் வெளிப்பாடாக மட்டும் அது கருதப்படுவதில்லை. அதற்கு சம்பந்தப்பட்ட ஊடகமும் எங்கோ பொறுப்பேற்க  வேண்டி இருக்கிறது. இப்படியெல்லாம் எழுத்தாளருடைய எழுத்துக்கு சம்பந்தப்பட்ட ஊடகமும் பொறுப்பேற்க வேண்டி இருப்பதால்தான் இன்றைக்கு ‘சாவர்க்கர் தொடர்’ நிமித்தம் இப்படி ஒரு விளக்கத்தை எழுத வேண்டி இருக்கிறது.

எல்லா ஊடகங்களிலும் ‘ஸ்டைல்புக்’ என்று ஒன்று உண்டு. ‘தினத்தந்தி’யில் மாவட்ட கலெக்டர் என்று எழுதுவார்கள். ‘தினமலர்’ அதையே மாவட்ட ஆட்சித் தலைவர் என்று எழுதும். ‘தினமணி’யில் மாவட்ட ஆட்சியர் என்று எழுதுவார்கள். எது சரி; தவறு என்பது இங்கே இரண்டாவது பிரச்சினை. அது நாளடைவில் மாறிக்கொண்டேவருவது. ஒருகாலத்தில் பெரிய ஆஸ்பத்திரி என்று குறிப்பிட்டார் ஆதித்தனார். இன்று அரசு மருத்துவமனை என்று அதே ‘தினத்தந்தி’ குறிப்பிடுகிறது. விஷயம் என்னவென்றால், எழுத்தாளருக்கு எப்படி மொழிப் பிரயோகத்தில் உரிமை உண்டோ, அப்படி ஊடகத்துக்கும் உண்டு.

உரிமை என்ற அளவில் மட்டும் இதைக் குறிப்பிடவில்லை; கடமையாகவும் உணர்ந்து செயலாற்றும் பத்திரிகையாளர்கள் உண்டு. மொழியை மோசமாகப் பயன்படுத்தும் பத்திரிகையாளர்களைச் சாடுவதில் கொடுக்கப்படும் கவனத்தில் துளியளவும் பத்திரிகையாளர்கள் இப்படி ஆக்கபூர்வமாகச் செயல்படுவதை மதிப்பிடுவதற்கு இங்கே  அளிக்கப்படுவதில்லை. ‘தி இந்து’வில் இருக்கும்போது மட்டும் என்னுடைய நடுப்பக்க அணியினர் கொண்டுவந்த மாற்றங்களில் ஒரு துளி இந்தப் பட்டியல்.

conservative = மரபியர், statism = அரசியம், Supernova = பெருவிண்மீன் வெடிப்பு, Gravitational waves = ஈர்ப்பலைகள், Particle accelarator = துகள் முடுக்கி, Event horizon = நிகழ்வெல்லை, Rover = உலாவி, Binocular = இருநோக்கி, Simulation = நிகழ்போலி, Superposition = இருநிலை இருப்பு, Supercomputer = சூரக்கணினி, Space probe = விண்துழாவி…

வெகுஜன பத்திரிகையில் சமூக அறிவியல் / அறிவியல் சொற்களைத் துல்லியப்படுத்திக் கொண்டுசேர்ப்பது சாமானியமான விஷயம் இல்லை. ஜனநாயகத்துக்கும் குடியரசுக்கும் விளக்க வேறுபாடு தெரியாதவர்களைக் கோடிகளில் கொண்ட சமூகம் இது. அவர்களிடம் தீவிரமான விஷயங்களைக் கொண்டுசெல்ல வேண்டும்; அதேசமயம் அவர்களுக்குப் புரியத்தக்க வகையில் மொழிப் பயன்பாட்டில் எளிமையையும் கொண்டுவர வேண்டும் என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் சொற்பயன்பாட்டில் சீர்மையைக் கொண்டுவந்தோம்.

ஓர் உதாரணமாக, ‘இஸம்’, ‘இஸ்ட்’ ஆங்கிலப் பின்னொட்டுகளுக்கு ஈடாகப் பயன்படுத்தப்படும் ‘வாதம்’, ‘வாதி’; ‘இயம்’, ‘இயர்’ சொற்களுக்கு மாற்றாக ‘இயம், இயர்’ என்று பயன்படுத்தலானோம். உதாரணமாக, காந்தியவாதி = காந்தியர், பெண்ணியவாதி = பெண்ணியர், தேசியவாதி = தேசியர்.

கலைச்சொற்களைச் சுருக்கமாகவும் எளிமையாகவும் ஆக்கியிருக்கிறோம்: (எ.டு.) சூழலியலாளர் என்பதற்குப் பதிலாக சூழலியர், ஊடகவியலாளர் என்பதற்குப் பதிலாக ஊடகர்.

வாசகர்கள் துணையோடு புதுப்புதுச் சொற்களை உருவாக்கவும் செய்திருக்கிறோம். (எ.டு.): விரலி (Pen drive), செருகு நினைவகம் (External hard disk), குறுநினைவி (Memory card), நினைவுச்சில்லு (Memory chip), வேற்றிடச் சான்று (alibi), இன்னும் பிற…

உள்ளூர் வழக்கில் மட்டுமே புழக்கத்தில் இருக்கும், பத்திரிகைகளில் திட்டவட்டமாக இடம் மறுக்கப்படும், வட்டாரச் சொல் பயன்பாட்டை ஊக்குவித்திருக்கிறோம். (எ.டு.) தங்க. ஜெயராமன் கட்டுரைகள்.

சொற்களின் பயன்பாட்டில் துல்லியத்தன்மையை இவை எந்த அளவுக்குப்  பிரதிபலிக்கின்றன என்பது அடுத்த விஷயம். முதலில் வாசகர்களுக்குப் புரிய வேண்டும்; அதுவே தலையாய நோக்கம். ஆதித்தனாரின் பெரிய ஆஸ்பத்திரி - அரசு மருத்துவமனை சொல்லாடல்தான் இதற்கான சிறந்த உதாரணம்.

என்னுடைய ஆரம்பக் காலங்களில் ‘பார்ப்பனர்’ என்ற சொல்லாடலையே நான் பயன்படுத்தினேன். ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கு வந்த பிறகு, நாங்கள் உருவாக்கிய ஸ்டைல்புக்கிலும், ‘பார்ப்பனர்’ என்றே இருந்தது. ஒருநாள் பிராமணியத்தை விமர்சிக்கும் என்னுடைய கட்டுரை ஒன்றை வாசித்துவிட்டு சாரு நிவேதிதா செல்பேசியில் அழைத்தார். “கட்டுரை நல்லா வந்திருக்கு சமஸ். பிராமினிஸத்தை விமர்சிச்சிருக்கீங்க. ஆனா, என்னோட பிராமின் ஃப்ரெண்ட்ஸே ரெண்டு மூணு பேர் காலையில இதுபத்தி நாம யோசிக்க வேண்டியிருக்குன்னு பேசினாங்க. அடிப்படையில் நீங்க எல்லோரோடும் உரையாடணும்னு நெனைக்கிறீங்க. உங்க மொழி அப்படியானது. கூடுதலா சில வார்த்தைகளைப் பயன்படுத்துறதுலேயும் கவனம் காட்டினா நல்லா இருக்கும்னு நெனைக்கிறேன். பிராமின் சமூகம் இன்னைக்கு ‘பார்ப்பனர்’னு அழைக்கிறதை வசையாப் பார்க்கிறாங்க. அப்படின்னா நாம அதை மறுபரிசீலிக்கலாம்தானே!” என்று கேட்டார்.

எனக்கு அது சரி என்று தோன்றியது. 

இன்றைக்கு எழுதுகிறேன், என்னுடைய ஒட்டுமொத்த வாழ்வும் பிராமணியத்துடனான  மோதலாகத்தான் இருக்கப்போகிறது.

பிராமணியம் என்பது ஒரு கருத்தாக்கம். மனிதர்களை அதிலிருந்து அகற்ற முடியும் என்று நான் நம்புகிறேன். அப்படி நம்புவதுதான் காந்தியம். அதற்கு காந்தி காட்டும் வழிமுறை உரையாடல்தான். அப்படியானால், மறைந்த பத்திரிகையாளர் ஜவஹர் சொன்னதுபோல, “எடுத்த எடுப்பில் ஒருவர் முகத்தில் குத்திவிட்டு, பின்னர் அவரோடு உரையாட உட்காருவதில் எந்த அர்த்தமும் இல்லை” என்று உறுதிபட நினைக்கிறேன். ஆகையால், 'பார்ப்பனர்' என்ற சொல்லாடலைத் தவிர்க்கலானேன். பிற்பாடு, காந்தியை இன்னும் ஆழமாக உள்வாங்கலானபோது, தத்துவார்த்தரீதியாகவும் இது சரியான முடிவு என்பது உறுதிப்பட்டது.

பிராமணர் என்ற சொல்லாடலை ஏற்றுக்கொண்டால், கூடவே சத்ரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் எனும் படிநிலைகளையும் ஏற்றுக்கொண்டதாகிவிடும்; ஆகவே தமிழ்ச் சொல்லான பார்ப்பனர் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்ற ஒரு கருத்து இங்கே உண்டு. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை; 'பார்ப்பனர்' என்ற சொல் பழந்தமிழ்ச் சொல் என்றால், அந்தச் சொல்லால் அச்சமூகம் விளிக்கப்பட்ட காலத்திலும் இங்கே தீண்டாமையும், சாதியப் படிநிலையும் நீடிக்கத்தானே செய்தன? ஆயிரமாண்டு சாதிய வரலாறு இருக்கிறது உண்மையானால், 'பார்ப்பனர்' என்ற சொல்லையும் அது உள்ளடக்கியதுதானே?

மேலும், ஒரு காந்தியனாக இந்த வரலாற்றுச் சுமைகள் எல்லாவற்றையும் நான் உதறித்தள்ள விரும்புகிறேன். எப்படி அம்பேத்கரியர்கள் ‘தலித்’ எனும் ஒரு புதிய சுயவரையறையின் வழியே, வரலாற்றைத் தூக்கி எறிகிறார்களோ அப்படி நானும் தூக்கி எறிய விரும்புகிறேன். என் அடையாளத்தை சாதி - மதத்துக்கு வெளியே தள்ள விரும்புகிறேன். இந்த இடத்தில்தான் எனக்கு அண்ணா உதவுகிறார். ‘நீ யார் என்று கேட்டால் சுருக்கமாக தமிழன் என்று சொல்!’ 

நான் வரித்துக்கொள்ளும் தமிழ் அடையாளம் குறுகியப் பார்வை கொண்டது இல்லை. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் தமிழரின் வையக மரபை ஆன்மாவாகக் கொண்டது அது.   

விசிக தலைவர் திருமாவளவன் ‘பார்ப்பனீயம்’ எனும் சொல்லுக்கு மாற்றாக ‘சனாதனம்’ எனும் சொல்லைக் கையாளுகிறார். அப்படியென்றால், அவர் இந்து தர்மப்படி பேசுகிறார் என்று அர்த்தமா? இதன் பொருட்டு சாதியம் - பிராமணியத்துக்கு எதிரான திருமாவளவன் செயல்பாட்டை எவரேனும் குறைத்து மதிப்பிட முடியுமா?

இப்படி ஒவ்வொருவரின் மொழிச் சொல்லாடலுக்கும் ஓர் அர்த்தப்பாடு இருக்கலாம் என்பதை எது ராஜன் குறை கண்களிலிருந்து மறைக்கிறது அல்லது தமிழ்ச் சொல்லாடலுக்கான ஒட்டுமொத்த உரிமையும் தன்னிடம் இருப்பதாக ராஜன் குறையை எது  நினைக்கவைக்கிறது? 

ராஜன் குறையின் மொத்த எதிர்வினைகளின் மையம், ‘சாவர்க்கர் முற்றொதுக்கப்பட வேண்டியவர்; அவரைப் பற்றி யாரும்  கட்டுரைகள் எழுதக் கூடாது; வெளியிடக் கூடாது!’

மிகுந்த வருத்ததுடனேயே இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேன்.  இப்படி ஒரு பேராசிரியர் பேசுவது அசிங்கம். அரசியலில் அது  சாவர்க்கரோ, கோல்வால்கரோ, ஹிட்லரோ முற்றொதுக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், இந்த முடிவுக்கு ஒருவரைப் பற்றித் தெரிந்துகொள்ளாமலேயே எப்படி ஒரு சமூகம் வர முடியும்?

நான் இன்றைக்கு சாவர்க்கரை நிராகரிக்கிறேன். எப்படி என்று என்னைப் பார்த்து ஒருவர் கேட்டால், ‘நான் அவரது வாழ்க்கையை வாசித்திருக்கிறேன்; எனக்கு சாவர்க்கரைத் தெரியும்; சாவர்க்கரின் வழிதோன்றல்களின் செயல்பாடுகளைத் தெரியும்; ஆகையால் நிராகரிக்கிறேன்’ என்று சொல்வேன். மாறாக, ‘ராஜன் குறை சொல்கிறார்; அதனால் நிராகரிக்கிறேன். ராஜன் குறை படித்திருக்கிறார்; அதனால் நான் நிராகரிக்கிறேன்’ என்று ஒருவன் சொல்ல முடியுமா?

தன்னுடைய எதிர்வினையில் சாவர்க்கர் எழுதிய ‘எரிமலை’ புத்தகத்தை ராஜன் குறை உதாரணம் காட்டுகிறார். அதாவது, பி.ஏ.கிருஷ்ணனைப் போலவே ராஜன் குறையும் ‘எரிமலை’யை  வாசித்திருக்கிறார்.

சாவர்க்கரின் வரலாற்றையே ஏனையோர் வாசிக்கக் கூடாது என்று சொல்லும் ராஜன் குறை பின்னர் ஏன் சாவர்க்கர் எழுதிய  ‘எரிமலை’ உள்ளிட்ட நூல்களை எல்லாம் படித்தார்? சாவர்க்கர் தொடருக்கு இவ்வளவு விரிவாகப் பதில் எழுதுகிறாரே, இதையெல்லாம் சாவர்க்கரைப் பற்றி வாசிக்காமலேயே ‘ஞான திருஷ்டி’யின் வழியாகத்தான் எழுதுகிறாரா?

என்னய்யா இவர்கள் நியாயம்?

தங்களுக்கு எல்லாத் தரப்பு விஷயங்களையும் படித்து, பகுத்தறிந்து முடிவெடுக்கும் வல்லமை உண்டு; ஆனால், ஏனையோருக்கு அந்த வல்லமை கிடையாது; வாசித்தாலே வழுக்கி விழுந்துவிடுவார்கள் என்றால், தாங்களாகப் படித்து முடிவெடுக்கும் தகுதி அவர்களுக்குக் கிடையாது என்று கருதுவதுதான் இவர்கள்  நியாயம் என்றால், 'மன்னியுங்கள் ராஜன் குறை, இந்த மனநிலைக்குப் பெயர்தான் பிராமணியம் - சனாதானம் - உங்கள் சொல்லாடலில் பார்ப்பனீயம்!' என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. ‘இந்தப் பத்திரிகை இதை வெளியிடக் கூடாது. இப்படியான வெளியீடே கண்டனத்துக்குரியது’ என்று கூறும் சட்டாம்பிள்ளைத்தனத்துக்கு வேறு என்ன பெயரிட்டு அழைப்பது? 

ராஜன் குறையின் எழுத்து நடையிலேயே இந்த தொனி இருக்கிறது. ஒரு மேடையில் அமர்ந்துகொண்டு மடாதிபதிபோல அருள்பாலிக்கும் தொனி... நீங்கள் அவரோடு உரையாடச் சென்றால், அவர் உங்களுக்கு வகுப்பு எடுக்க ஆரம்பிப்பார்! 

பி.ஏ.கிருஷ்ணன் சங்கப் பரிவாரத்தைச் சேர்ந்தவர் இல்லை; அவர் ஒரு நேருவியர். ஒரு பேச்சுக்கு அவர் அப்படி இந்துத்துவர் என்றே வைத்துக்கொள்வோம். அவரும் ஒரு தரப்பு இல்லையா? அவருக்கும் பேசுவதற்கான உரிமை, வாய்ப்பு இருக்க வேண்டும் இல்லையா? அப்படி இல்லை என்று சொல்லி மறுப்பது பாசிஸம் இல்லையா? சங்கப் பரிவாரங்கள் இப்படிச் செயல்படுவதால்தானே எதிர்க்கிறோம்; அதே செயல்பாட்டை அதை எதிர்க்கும் நாமும் எப்படி வெளிப்படுத்த முடியும்?

போகட்டும், சாவர்க்கரைப் பற்றி இதே விக்ரம் சம்பத் நூல்களுக்கு, ‘அவுட்லுக்’ இதழுக்கு பி.ஏ.கிருஷ்ணன் எழுதியிருக்கிறார். பிரதமர் மோடியின் கட்டுரையை ‘தி இந்து’ வெளியிட்டிருக்கிறது. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் எல்லாக் காலங்களிலும் ஆளும் தரப்பிலிருந்தும் கட்டுரைகள் வெளியாகின்றன. இதற்காக இந்தப் பத்திரிகைகளை எல்லாம் வலதுசாரியாகவோ, பொறுப்பற்றவையாகவோ சித்திரிக்க முடியுமா அல்லது இப்படியான வெளியீடுகள் தவறு என்றால், இவற்றில் எந்த ஆங்கிலப் பத்திரிகைக்கேனும் ராஜன் குறை இதுவரை கண்டனம் எழுதியிருக்கிறாரா? இல்லையென்றால் ஏன் இல்லை?

அப்படியென்றால், ஆங்கிலம் தெரிந்தவர்கள் பெரிய புத்திசாலிகள். பல தரப்பு வாதங்களையும் படித்து முடிவெடுக்கும் வல்லமை அவர்களுக்கு உண்டு. ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு எல்லாவற்றையும் வெளியிடும் உரிமை உண்டு. தமிழ் வாசகன் பாமரன். தமிழ்ப் பத்திரிகைகளும் இந்த வரையறைக்கு உட்பட்டு இயங்க வேண்டும், அப்படித்தானே ஆகிறது! இன்னார் இதை வெளியிடலாம்; இன்னார் இதை வெளியிடக் கூடாது என்று  உரிமம் வழங்கும் உரிமையை யார் இவர்களுக்கு வழங்கியது? இந்த மேட்டிமைத்தனம் எங்கிருந்து வருகிறது?

இந்துத்துவம் ஓர் அரசியல் வடிவமாக உருவெடுத்த இந்த ஒரு நூற்றாண்டில் முற்றிலுமாக அந்தச் சக்திகளை வெளியே நிறுத்தி, என்ன செய்தாலும் திருப்பியடித்து, அவர்களைப் பைத்திய நிலைக்குத் தள்ளியிருக்கும் பிராந்தியம் தமிழ்நாடு. தமிழர்களுக்கு எதையும் அறிந்துகொள்ளும் உரிமையும் உண்டு; எல்லாவற்றையும் அறிந்து, தகாதவற்றைத் தூர வீசும் வல்லமையும் உண்டு.

சாவர்க்கர் தொடரை ஆரம்பித்தபோது, பேஸ்புக்கில் ஒரு அறிவிப்பை நான் வெளியிட்டேன். “இந்தத் தொடர் தொடர்பாக வரக்கூடிய எல்லா விமர்சனங்களையும், கிருஷ்ணனின் தொடர் பூர்த்திசெய்யவில்லை என்று எழுதப்படும் எல்லா விஷயங்களையும் ‘அருஞ்சொல்’ வெளியிடும்.”

ஆசிரியர் குழுவினர் நாங்கள் திட்டமிட்டது என்னவென்றால், சாவர்க்கர் தொடர் ஒரு வாரம் வரட்டும்; அடுத்த வாரத்தில் சாவர்க்கரை ஏனையோருடன், சமகாலச் சூழலோடும் ஒப்பிடும்  விமர்சனங்கள் வரட்டும்; அதற்கடுத்த வாரத்தில் நேரு பிறந்த நாளை ஒட்டி ஒரு வாரம் நேருவைப் பற்றிய கட்டுரைகளை வெளியிடுவோம். சாவர்க்கர் உருவாக்க எண்ணிய இந்தியா எப்படிப்பட்டது, நேரு உருவாக்கிய இந்தியா எப்படிப்பட்டது என்பதை இது விளக்கும். இதற்கெனவே நேருவின் பங்களிப்புகளைப் பட்டியலிடுவதுடன், நேரு மீதான விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் வகையிலான - சுஷீல் ஆரோன் தொடங்கி ராமச்சந்திர குஹா வரை - கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருந்தோம்.

சாவர்க்கர் தொடர் முடிந்த அன்றைய தினம் இடதுசாரி தொழிற்சங்கச் செயல்பட்டாளரும் தீவிரமான வாசகருமான பட்டாபிராமன் பேசினார். “பி.ஏ.கிருஷ்ணன் இந்தத் தொடரில் தொட்டிருக்கும் விஷயங்களுக்கு இணையாக விட்டிருக்கும் விஷயங்களும் இருக்கின்றன. யார் எழுதினாலும் அப்படித்தான் இருக்கும். ஐந்து நாட்களில் ஐயாயிரம் வார்த்தைகளுக்குள் ஒருவரின் முழு வரலாற்றையும் பேசிவிட முடியாது. கிருஷ்ணன் மீதான விமர்சனம் நியாயமற்றது. சாவர்க்கரின் சிறை வாழ்க்கை மீது அவருக்குப் பரிவு இருக்கிறது. ஆனால், சாவர்க்கர் ஒரு வெறுப்பு சக்தி என்பதை எல்லா அத்தியாயங்களிலும் அவர் நினைவூட்டிக்கொண்டேவருகிறார்.”

நான் சொன்னேன். “தோழர், கிருஷ்ணன் விட்ட இடங்களை நீங்கள் எழுதுங்கள். இன்னும் ராஜன் குறை போன்றவர்களெல்லாமும் எழுதினால், இது முழுமை பெறும்."

நான் மனதார இதை விரும்பினேன். ‘நவீன அரசு தொடர்பான சாவர்க்கரின் பார்வை என்ன, காந்தியின் பார்வை என்ன;  இந்தியா என்கிற கருத்தை காங்கிரஸ் எப்படிப் பார்த்தது, இந்துத்துவம் எப்படிப் பார்த்தது; சாவர்க்கரின் சாதிய எதிர்ப்பெல்லாம் காந்தியைப் போல சமத்துவத்தின் மீதான கரிசனமா அல்லது இந்து மதம் பிளவுபட்டுவிடும் என்ற அச்சத்தின் வெளிப்பாடான பாவனையா?’ 

தமிழ்நாட்டில் இப்படியெல்லாம் எழுதத் தகுதியுடைய மிகச் சிலரில் ஒருவர் ராஜன் குறை. அவர் நேரடியாக ‘அருஞ்சொல்’லுக்கு அனுப்பிய ‘சாவர்க்கர்: தனிமனிதர்களும் வரலாறும்’ கட்டுரை அந்தப் பாதையிலானது. அதேசமயம், பி.ஏ.கிருஷ்ணன் கட்டுரைத் தொடர் புதிய வெளிச்சம் எதையும் பாய்ச்சவில்லை என்று சொல்லும் ராஜன் குறை தன்னுடைய இந்த எதிர்வினைகளின் வழியே என்ன புதிய வெளிச்சத்தைக் காட்டியிருக்கிறார்; என்ன இதுவரை யாரும் சொல்லாவதற்றைச் சொல்லியிருக்கிறார் என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.

இருபது ஆண்டுகளுக்கு முன் அஷிஸ் நந்தி எழுதிய கட்டுரை ஒன்றை சமீபத்தில் வாசித்தது நினைவுக்குவருகிறது (A disowned father of the nation in India: Vinayak Damodar Savarkar and the demonic and the seductive in Indian nationalism). இன்றைக்கும் சாவர்க்கரைப் பற்றி அப்படி எழுதப்பட்ட ஒரு கட்டுரையை வாசிக்க முடியவில்லை. எவ்வளவோ சூழல் மாறிவிட்டிருக்கிறது. தமிழில் அந்த இடத்துக்கெல்லாம் என்றைக்கு நாம் போவோம் என்று தெரியவில்லை. ராஜன் குறை போன்றவர்களால் அந்த இடத்தை நோக்கி அடியெடுத்து வைக்க முடியும் என்று நம்புபவன் நான். சுருக்கமாகவேனும் இப்படியான  எதிர்வினையைத்தான் அவரிடமிருந்து எதிர்பார்த்தேன். 

நடந்தது மோசம்! ஃபேஸ்புக் குத்தாட்டக் குழுக்களில் முஷ்டி முறுக்கும் வாதங்களுக்குள் ராஜன் குறை சென்றுவிட்டார். இல்லாவிட்டால் எப்படி ஒரு தரப்பை வாசிக்கும் சூழலே இங்கு வேண்டியது இல்லை என்று பேசும் பாசிஸ நிலைப்பாட்டுக்கு அறிவுத் துறையைச் சார்ந்த ஒருவர் போவார்? அதுவும் ஒரு பேராசிரியர். சரி, ஒரு கட்சிப் பத்திரிகையில் தன்னுடைய கட்டுரை வெளியாவதே தன்னுடைய வாழ்நாளின் பேறு என்று எண்ணும் அளவுக்கு ஒரு பேராசியர் இறங்கிவிட்டால், நாம் என்ன செய்ய முடியும்?

துரதிருஷ்டம்! ‘நாம் யாருடன் அதிகமாக மோதுகிறோமோ அவர்களுடைய பண்பை நாமும் பெறுவது இயல்பானது; பிரக்ஞையோடு அனுதினமும் இதைப் பரிசீலிக்க வேண்டும்’ என்று சொல்வார் என்னுடைய தாத்தா. டெல்லி சகவாசம்தான் அவரை இப்படி மாற்றிவிட்டதோ என்றுகூட நான் சமயங்களில் எண்ணுவதுண்டு.

ராஜன் குறையின் மீது இன்னும் அன்பும் மதிப்பும் இருக்கிறது. அதே நட்புடன் வேண்டுகோளாகவே இதை முன்வைக்கிறேன். நீங்கள் பேராசிரியர்; தயவுசெய்து இதை மறந்துவிடாதீர்கள். அது மொழியோ, அரசியலோ; உங்களைப் போலவே சமத்துவத்தின் மீது அக்கறை கொண்ட பல துறையினரும் கையாள ஆளுக்கொரு வழிமுறையை முயற்சிக்கலாம்; தயவுசெய்து வழிவிடுங்கள்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


2


பின்னூட்டம் (9)

Login / Create an account to add a comment / reply.

V NEELAKANDAN   2 years ago

"ஒரு கட்சிப் பத்திரிகையில் தன்னுடைய கட்டுரை வெளியாவதே தன்னுடைய வாழ்நாளின் பேறு" என்று எழுதி இருக்கிறீர்கள். இது பேராசியர் குறித்த விமர்சனமா அல்லது கட்சிப் பத்திரிக்கை குறித்த விமர்சனமா? கட்சிப் பத்திரிக்கையில் வெளிவருவன “நடுநிலை முத்திரை” குத்திக் கொண்ட பத்திரிக்கைகளைவிட ஒரு மாற்று குறைவானது என்ற மனநிலையா? (நான் மேட்டிமைத்தனமா எனக் கேட்க விரும்பவில்லை)

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Seyed Bukhari   3 years ago

ஒரு பத்திரிக்கைக்கும் அதன் ஆசிரியருக்கும் ஆசிரிய குழுவிற்கும் உள்ள அதிகார சுதந்திரத்தை மறுக்க முடியாது.எல்லோரையும் வாசிக்க வேண்டும்.அதுதான் புறக்கணிக்கவும் பயனளிக்கும்.புறக்கணிப்பிற்கும் நீதி செய்யும் என்ற கருத்து வலுவானது.ஆயினும் பிராமணர் பார்ப்பனர் என்ற சொல்லாடல் சற்று கவலை தருகிறது.திருடன் என்ற திருட்டு ஒழிந்தபாடில்லை என்பதற்காக புதிய வார்த்தை தேடுதல் அறிவுடைமையா?கட்டுரை பதிலளிக்காமல் கடந்து செல்கிறது.யாரோடு பேச அமர்கிறோம் என்பதை பொறுத்து தான் உரையாடல் துவங்கும்.சமுகத்தில் புரையோடிப் போன நம்பிக்கைகளை கொண்டிருப்போர் அதை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.விமர்சிப்பதை தாக்குதலாக தான் கருதுவார்கள்.இவர்கள் போன்றோர்கள் உரையாடலுக்கு ஆயத்தமாகி அவைக்கு வரும் முன் தங்கள் முகங்களிலும் அடையாளங்களிலும் அறையப்பட்டதாக வருந்தி தான் வருகிறார்கள்.பின் அவர்களிடம் பேச முகத்தில் அறைதல் கூடாது என்பது சமுக சீர்திருத்திற்கு பயன்படாது.காந்தியத்தை எதிர்க்கும் பலரின் குற்றச்சாட்டில் முதன்மையானதே காந்தியம் பழைமையோடு சமரசம் செய்து கொள்ள விரும்பும் இயற்கைக்கு முரணான போராட்ட மரபாகும்.பிராமணர் என்ற சொல் அதை தொடர்ந்த சூத்திர பஞ்சம சொல்லையும் துணைக்கழைக்காமல் பயணிப்பதில்லை.பிராமணர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்பதற்காக பார்ப்பனர் என்ற சொல்லை கைவிடுதல் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக குறுக்குசால் ஓட்டும் அநீதம் இல்லையா!பிராமணியம் என்பது மேட்டுமைத்தனம் என்றால் அதை கொச்சைப்படுத்தும் எதிர்சொல் பார்ப்பனியம் என்பது பொய்யான இயற்கைக்கு முரணான மேட்டுமைத்தனத்திற்கு எதிரான பாதுகாப்பாக கருத வாய்ப்பில்லையா!ஆதலால் சொன்னார்கள் மாற்றிக் கொண்டேன் என்பதே போராட்டத்திற்கு முரணான முடக்குவாதமாகும். நொண்டிக்குதிரைக்கு சறுக்கியதை போன்ற சமாதானமாகும்.ஆதலால் சமஸிடம் வைக்கும் வேண்டுகோள் : ஆலோசியுங்கள்!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

ராஜ கைலாசம்   3 years ago

சரியான எதிர்வினை. பேராசிரியர் அவர்களைத் தரம் இறக்காமல், தன் தரப்பு வாதத்தை நயம்பட முன்வைத்துள்ளார் சமஸ் அவர்கள். 1. ஒன்றரை மாதங்கள் ஆகிறது. எல்லா விஷயங்களையும் மக்கள் தரப்பிலிருந்தே அருஞ்சொல் அணுகுகிறது. காலையில் எழுந்தவுடனேயே கைப்பேசியை எடுத்து நம் தளத்தை வாசிக்கிறேன். தினமும் எதாவது புதிதாக ஒன்றை எனக்குத் தருகிறது என்பதே இதற்குக் காரணம். எல்லாக் கருத்துகளுக்கும் இடம் அளிக்கிறது. 2. சாவர்க்கர் தொடர் நன்றாகவே வந்தது. தெரியாத பல செய்திகளைக் கூறியது. சாவர்க்கரின் மதவெறியை வாசகர்களுக்கு சரியாகவும் உணர்த்தியது. பேராசிரியர் ராஜன் குறை அவர்கள் பி.ஏ.கிருஷ்ணன் அவர்களின் கருத்துகளில் உள்ள போதாமைகளை வரிசைப்படுத்தி தன் எதிர்வினையைக் கூறியிருக்கலாம். அதற்குப் பதிலாக இந்தத் தொடரே கண்டிக்கத்தக்கது என்று கூறியது முறை இல்லை. சமஸ் அவர்கள் பார்ப்பனர் - பிராமணர் பயன்பாடு குறித்து கூறுவதையும் பேராசிரியர் புரிந்துகொள்கிறாரா என்று தெரியவில்லை. இங்கு பதிவிட்டிருக்கும் வாசகர்களிடமுமே குழப்பத்தைக் காண முடிகிறது. வரலாற்றுரீதியான பிராமணர் என்ற சொல்லை ஏற்கவில்லை என்று சமஸ் அவர்கள் எழுதியிருக்கிறார் என்றூ நான் புரிந்துகொள்கிறேன். நவீன பாஷையில் வெற்றுப் பெயர்ச் சொல்லாக அதைக் கையாளுகிறேன் என்கிறார். இது முறையானதே. காந்தியையும் தாகூரையும் வாசித்தவர்களுக்கு இது நல்லபடி புரியும். பிராமணர்களுடன் விவாதிக்க விரும்புகிறேன், எனக்கு அவர்களுடன்தான் விவாதம் என்று முடிவு எடுத்த பின்னர் அவர்களை முகம் உடைக்காமல் பேசுகிறேன் என்று சமஸ் சொல்வதில் மிக்க பொருள் உண்டு. 3. ஆங்கில ஊடகங்கள் எங்கோ சென்றுகொண்டிருக்கின்றன. தமிழில் இப்படி இருக்கிறோமே என்ற ஆற்றாமை சமஸ் அவகளிடம் வெளிப்படுகிறது. ‘அருஞ்சொல்’ இந்தக் குறையைத் தீர்க்கட்டும்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Muhilan S   3 years ago

நான்கு வர்ணக் கோட்பாடே பிராமணன் என்கிற சொல்லுக்காக அதிகாரத்துக்காக அடையாளத்துக்காக பிறந்தது தானே?? அந்த நான்கில் ஒன்றுதானே?? தொடர்பே இல்லாத தன்னந்தனியானதா?? அவர்களை அப்படி அழைப்பீர்கள் எனில் என்னை சூத்திரன் என்று அழைப்பீர்களா?? பட்டியலினத்தோரை பஞ்சமர் என்று அழைப்பீர்களா?? மறுக்காதீர்கள்‌. பிராமணர் என்று அழைப்பதை ஏற்றுக் கொண்டால் பஞ்சமர் சூத்திரர் அடையாளங்களையும் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றுதானே பொருள். விலங்குகளில் ஒரு பிரிவை முதுகெலும்பிகள் என்று வகைப்படுத்தினால் முதுகெலும்பற்றவையும் கூடவே நினைவிலாவது வரும் தானே?? வராதா?? பிராமணர் என்ற வகைப்படுத்துதலை ஏற்றுக்கொண்டால் மேற்கண்ட வகைப்படுத்துதல்கள் உள்ளடங்கி இருப்பது எனக்கு மிகத் தெளிவாகவும் கொடிதாகவும் பெரிதாகவும் தெரிகிறதே. இதைப் புரியவைக்க முடியாதவர்கள் ஏன் உரையாட முயலுகிறீர்கள்?? இதைக்கூடப் புரிந்து கொள்ள முடியாதவர்களோடு என்ன உரையாடப் போகிறீர்கள்?? அப்படி என்ன பிரம்மனின் புதல்வர்கள் என்று தம்மை எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு பிடிவாதம்?? அப்படி ஒரு பிடிவாதம் இல்லை என்றால் ஏன் அந்தப் பெயரைப்பிடித்துத் தொங்கவேண்டும்?? 'பிராமணர்களு'க்கு பதிலியான சொற்கள் 'பார்ப்பனர்களை'த் தவிர வேறு இல்லையா?? அந்தணர்கள்?? ஐயர் ஐயங்கார்கள்?? இவை எதுவும் இல்லை எனில் புதிய சொற்களை கண்டடைய முயலுங்கள்?? அதெப்படி பிரம்ம வாடையோடு கூடிய மனுவாடையோடு கூடிய பெயர்தான் வேண்டும் என அடம் பிடிக்கலாம்?? அந்த பிடிவாதத்தை எவ்விதம் நல்ல கோரலாகக் கருதலாம்??

Reply 6 0

Login / Create an account to add a comment / reply.

Saran Viveka   3 years ago

உங்களுடைய எதிர்வினை பல்வேறு விஷயங்களை தொட்டு செல்கிறது. சிலவைகளில் ஏற்பும் சிலவைகளில் மாற்று கருத்தும் உண்டு. 1. ராஜன் பேசுவது சுயசாதி விமர்சனம் என்றால், எந்த ஒரு சுயசாதி விமர்சனங்களும், என்நிலையில் இருந்தாலும், அது வரவேற்க்கப்படவே வேண்டும், அவர்களுக்கு இல்லாத அந்த உரிமை வேறுயாருக்கும் கிடையாது. 2. //சமத்துவத்தை விரும்பும் ஒவ்வொருவரும் தன்னுடைய சமூகத்தையும், ஏனைய சமூகங்களையும் குறிக்கும் சொற்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு. ஒரு சமூகமாகவும் தங்களை வரையறுத்துக்கொள்ளும் உரிமை உண்டு// . இதில பிரட்சனை உண்டு . /சமத்துவத்தை விரும்பும் ஒவ்வொருவரும்/ என்று சொல்கிறீர்கள். பிரமணர் என்பது சமத்துவமல்லாத படிநிலையை சுட்டுகிறது... “பிரம்மனிலிருந்து வந்தவர்கள்” என்றாகும் போது, அது சூத்திரர்கள் காலில் இருந்து வந்தவர்கள் என்ற படினிலையையும் சுட்டுகிறது, அதில் சமத்துவம் இல்லை என்ப்துதான் அவர்கள் வாதம். வர்ணத்தை நாம் ஏற்கவில்லை எனும்போது அவர்கள் பிரமத்தில் இருந்து வந்தவர்கள் என்று அவர்களை பிறப்பால் மேல்நிலையில் வைக்கும் சொல்லை நாம் ஏன் ஏற்க வேண்டும் என்று கேட்கிறார்கள்?. அப்படி ஏற்றால் சூத்திரர்கள் பிறப்பால் படிநிலையில் குறைந்தவர்கள் என்பதையும் மறைமுகமாக் ஏற்கிரோம், அது கூடாது என்கிறார்கள். பிராமணர் என்பது வருணம் சார்ந்த சொல். ஆதலால் ஒருவர் பிராமணர் என்றால் அதன் தொடர்ச்சியான சூத்திர, பஞ்சம சொற்களின் இருத்தலையும் அங்கிகரிக்கிரோம், மறைமுகமாக அந்த படினிலை கருத்தை நினைவில் நிறுத்துகிறோம் என்கிறார்கள். 3. இன்னொறு ஜாதி தம்மை “ஆண்ட பரம்பரை” என்று வரையறுத்துக்கொள்ள விரும்பினால் அது அவர்கள் உரிமை என்று நாமும் அவர்களை அப்படி அழைக்க வேண்டுமா என்ன? அப்படி ஏகபோக உரிமையை எந்த ஜாதியர்களுக்கும் சமத்துவத்தை விரும்பும் யாரும் கொடுத்துவிட முடியாது. எப்படி தம்மை அழைக்கிறார்கள்/ இன்னொருவரை எப்படி அழைக்கிறார்கள் என்பது அந்த வார்த்தை எதை சுட்டுகிறது என்பதை பொறுத்தது. /ஏனைய சமூகங்களையும் குறிக்கும் சொற்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு/ என்று சொன்னால் இன்னொரு குழுவை சூத்திரன் என்று அழைக்கும் உரிமையும் இருக்கிறதா என்ன? ஒரு ஆரோக்கிய சமூகத்தில் வார்த்தைகளை அவை சுட்டும் பொருளுக்காக தொடர்ந்து மறுவரையறை செய்துகொண்டே இருக்கிறோம், உடல் ஊனமுற்றவரை அதைவிட மோசமான சொல்லில் அழைப்பதில் இருந்து விடுவித்து பின் அதையும் மாற்றுதிறனாளி என்று ஆக்கினோம், திருநங்கை, திருநர் எல்லாம் அப்படி வளர்ச்சியடைந்ததுதானே? “பார்ப்பனர்”’னு அழைக்கிறதை வசையாப் பார்க்கிறாங்க. அப்படின்னா நாம அதை மறுபரிசீலிக்கலாம்தானே என்று நீங்கள் சொன்னால், பிராமணர் என்பது மேட்டிமைதனம் என்று பார்க்கப்படுவதால் அதையும் மறுபரிசீலனை செய்யலாம்தானே? முக்கியமாக அந்த சாதியை சேர்ந்தவரே அதை சுய சாதி விமர்சனமாக கொள்ளும்போது???... அந்தணர் என்ற சொல் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. அதில் அவர்களுக்கும் ஏற்பு உண்டு. இதை தவிர்த்து ஊடகங்களின் ‘ஸ்டைல்புக்’ , “எடிட்டோரியல் பாலிசி” என்பதன் கூட எல்லாம் ஒப்புதல் உண்டு. அது இருவரது உரிமையும், நியாயங்களும் கூட. எழுத்தாளருக்கு எப்படி மொழிப் பிரயோகத்தில் உரிமை உண்டோ, அப்படி ஊடகத்துக்கும் உண்டு என்பதால் அது பதிப்பாளருக்கும் படைப்பாளருக்கும் இடையேயான திரைக்கு பின்னான உரையாடல் என்பதாகவே என் புரிதல். சாவர்கர் பேசப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அருஞ்சொல் போன்ற ஒரு பத்திரிக்கையில் இது போல் இருதரப்பும் பேசபடும் சூழ்னிலை இல்லை எனில் வேறு எந்த பத்திரிக்கையிலும் இருக்காது. துக்ளக்குக்கு எப்படி “சோ” தான் அதன் எடிடோரியல் பாலிசியே என்று இருந்ததுபோல் இருக்கும் ஒரு பத்திரிக்கையில்தான் ஒற்றைப்படையான ஒரு கொள்கையை கொள்ள முடியும். அருஞ்சொல் அப்படி ஒன்று அல்ல என்பதே என்புரிதல். எனவே இதில் சாவர்கரை பேசுவது சரியானதே.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Narayanasami V   3 years ago

சாவர்க்கர் தொடர் குறித்து சில கருத்துகள். சாவர்க்கர் வரலாறு தொடர்பாக சிறிதேனும் தெரிந்துகொள்ள இந்தத் தொடர் உதவுகிறது. அருஞ்சொல்லுக்கும், பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி. இஸ்லாமியர்கள் தொடர்பான அவரது ஆரம்பகாலப் பார்வை, பின்னாளில் வேறுமாதிரியாக மாறிவிட்டது ஆச்சரியமளிக்கிறது. அந்தமான் சிறையில் முஸ்லிம் வார்டன்களால் உண்டான சிறைத்துன்பங்கள் அதற்கு ஒரு சிறிய காரணியாக இருந்திருக்கலாம். ஆனால், இந்து முஸ்லீம் ஒற்றுமையை ஆரம்பத்தில் நேசித்த சாவர்க்கர் போன்ற ஒரு ஆளுமைக்கு, இவை மட்டுமே அவரது ஒட்டுமொத்தப் பார்வையை மாற்றப் போதுமானதா என்ற கேள்வி எழுகிறது. ஒரு வேளை, பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள் குறிப்பிட்ட அந்தப் புத்தகங்களில் இதற்கான விடை இருக்கலாம். இவற்றை விரிவாக எழுதுவது, சாவர்க்கர் மேல் ஒரு பரிவுணர்ச்சியை (Soft corner) உண்டாக்கிவிடும் என்றெல்லாம் எண்ணத் தேவையில்லை. எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. சமுதாயத்தில், நேர்மையின் சிகரமான சில மனிதர்களின் சில குறுகிய பிளவுக் கொள்கைப்பாடுகள், நாளடைவில் சமுதாயத்தில் எத்தகைய எதிர்மறை விளைவுகளை வளர்த்தெடுக்கும் என்பதற்கு சாவர்க்கர் ஒரு உதாரணம் என எண்ணத் தோன்றுகிறது. ஒரு நிலப்பரப்பின் அனைத்து ஹோமோ சேப்பியன்களையும் மைய அரசியல் நீரோட்டத்துக்கு இழுத்துச் செல்லும் காந்தியின் அரசியல் கொள்கை ஒருபுறம். இன அல்லது மத அடிப்படையில், சிலரை, அவர்களது பரம்பரைகள் உட்பட, காலத்துக்கும் விலக்கிவைக்கும் பிளவுக்கொள்கை ஒருபுறம். இன்றும் கூட தமிழ்நாட்டில், யார் தமிழர், யார் தமிழரல்லாதோர், யார் வாழலாம், யார் ஆளலாம் என்பது போன்ற விளக்க வரையறைகள் வகுக்கப்படுகின்றன. காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவை எத்தகைய காரணங்களாயினும், அவை பிளவுக் கோட்பாடுகளே. இவை எத்தகைய எதிர்மறை விளைவுகளை சமுதாயத்தில் வருங்காலத்தில் ஏற்படுத்தக்கூடும் என்று சிந்திப்பதற்கு, சாவர்க்கரின் வாழ்க்கை மற்றும் கொள்கை மாற்றங்கள் கூறித்த விரிவான பார்வை பயன்படக் கூடும். இன்னொன்று. பி.ஏ.கிருஷ்ணன் அவர்களின் ஐந்து நாள் தொடர் ஒரு பார்வையை அளித்தாலும், அதன் பின்பான விவாதங்கள் (ராஜன் குறை, அரவிந்தன் கண்ணையன், பி.ஏ.கிருஷ்ணன், சமஸ்), இன்னும் ஆழமான பார்வையை வாசகர்களுக்கு அளிக்கின்றன என்று தோன்றுகிறது. விவாதங்கள், மறுபக்கப் பார்வைகள் உரையாடல்கள் தொடரட்டும். அருஞ்சொல் வளர்க.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Prabhu   3 years ago

வெறும் vocabulary குறித்த வகுப்பெடுக்கிறார். "பெரிய ஆஸ்பத்திரி" என்ற தொடர் தேர்வுக்குப் பின்னால் இருந்தது சொல்லாடல் பற்றிய decision அல்ல. முதல் தலைமுறையில் துவக்கப் பள்ளிக்கு வந்தவன் புரிந்து கொள்ள வேண்டும் என்ற கரிசனம். சமஸின் "பிராமணர்" என்ற பதத் தேர்வில் இருப்பது ஒரு தீர்மானமான linguistic and social selection. ராஜன் குறையின் மொழியில் ஒரு மேட்டிமைத் தனம் இருப்பதாக சொல்கிறார் சமஸ். சமஸின் எழுத்துக்களில் வாசிப்பில் வளர்ந்து கொண்டு வரும் ஒரு மாணவனின் adventurism மட்டுமே தெரிவதை அவர் உணர்ந்துள்ளாரா? எல்லாம் இலுப்பைபூ கதைதான். சொல் தேர்வு உணர்ச்சிகரமானது. அதனால்தான், நினைவஞ்சலி கூட்டத்தில் பிரச்சினையானது. அப்புறம் இன்னொன்று. தமிழ் அச்சு ஊடகம் content selection and analysis and presentation என்ற விடயங்களில் பொதுவான ஆங்கில அச்சு ஊடக தரத்திற்கு அருகில் கூட இல்லை. இதை கடந்த 45 வருடங்களாக இரண்டு மொழி ஊடகத்தையும் வாசித்துக் கொண்டு வருபவன் என்ற நிலையில் சொல்கிறேன். தமிழ் இலக்கிய சஞ்சிகைகளுமே ஆங்கில இலக்கிய இதழ்களுடன் ஒப்பிடும் போது, இன்னும் வெகு தொலைவு போக வேண்டியுள்ளது. தமிழில் எல்லாம் உண்டு என்று அடித்து விடுவதில் எந்தப் பொருளும் இல்லை.

Reply 4 1

Login / Create an account to add a comment / reply.

Padmanabhan Sahasranamam   3 years ago

தான் மட்டுமே வாசித்து விட்டுக் கருத்துச் சொன்னால் போதுமானது என்கிற ராஜன் குறையின் பார்வையில் ஒளிந்திருக்கும் பிராம்மணியத்தை அகழ்தெடுத்தது அருமை. மிகச் சிறப்பாக பதிலாக அமைந்த கட்டுரை .

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Sekar Abraham   3 years ago

Scheduled என்பதை தாழ்த்தப்பட்ட என்று தமிழ் 'படுத்திய' சமூகம் பார்ப்பனர் என்பதை இழிசொல்லாக கருதுவதை என்னவென்று சொல்வது. முதலில் 'அட்டவணை' என்ற சொல்லாடலுக்கு மாறுங்கள். காலங்காலமாய் தாழ்த்தப்பட்ட என்று குத்திக்கொண்டே இருக்கும் நிலைக்கு எதிர்ப்பாவது தெரிவியுங்கள்.

Reply 4 1

Login / Create an account to add a comment / reply.

மில்மாஅமுல் நிறுவனத்தின் சவால்கள்கல்வியும் வாழ்வியலும்பிட்காயின்பூஸான்சாரு நிவேதிதா கட்டுரைதமிழ் சைவ மன்னன்மதமும் மொழியும் ஒன்றா?ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்தி கேரளா ஸ்டோரிஎரிபொருள்மஹாராஷ்டிரம்சிறுநீர்ப் பாதையில் கல்மன்னார்குடி அன்வர் கடை புரோட்டாசாத்தானிக் வெர்சஸ்ராகுல் காந்திபாரம்பரியம்சிறுபான்மையினர்உபி தேர்தல்இது சாதி ஒதுக்கீடு!குலாம் நபி ஆசாத்கட்டுரை எழுதுவது எப்படி?நாடகசாலைத் தெருகுடிமைப்பணித் தேர்வுகள்மணி சங்கர் ஐயர்நீராருங் கடலுடுத்தவனத் துறைவிமர்சனத்தை மதிக்கும் இயக்கம் திமுக: இமையம் பேட்டிசண்முகநாதன் கலைஞர் பேட்டிதேசிய பால் துறை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!