கட்டுரை, அரசியல், கலாச்சாரம், சமஸ் கட்டுரை, ரீவைண்ட் 5 நிமிட வாசிப்பு

தமிழினத்தின் ஏழு மண்டேலாக்கள்

சமஸ்
04 Mar 2014, 5:00 am
1

ரு நாளைக்கு 10 பத்திரிகைகள் படிக்கலாம்; மணிக்கொரு முறை இணையத்தில் முக்கியச் செய்தித்தளங்களைச் சுற்றி வரலாம்; 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகளை ஓடவிட்டு வேலைக்கு நடுவே நிமிஷத்துக்கு நிமிஷம் எட்டிப் பார்க்கலாம்… தமிழ்ச் சமூகத்தின் சுவாரஸ்ய நகர்வுகளை அளிப்பதில் சுவரொட்டிகளுக்கு ஈடுஇணை இல்லை. தமிழ்நாட்டுக்கு ஏழு மண்டேலாக்கள் கிடைத்த செய்தியும் சுவரொட்டிகள் மூலம்தான் கிடைத்தது. சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தின் நீண்ட சுவர்களில் அவை ஒட்டப்பட்டிருந்தன.

யார் இந்த ஏழு மண்டேலாக்கள்?

வேறு யாராக இருக்க முடியும்? ராஜீவ் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, மரண தண்டனையிலிருந்து தப்பி, 23 வருஷ சிறைவாசத்திலிருந்து விடுபட ஏங்கிக்கொண்டிருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் ஃபயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய எழுவர்தான் அந்த ஏழு மண்டேலாக்கள்.

இவர்கள் எப்படி, எப்போது மண்டேலா ஆனார்கள் என்ற கேள்வி இங்கு பொருத்தமற்றது. ஏனென்றால், மண்டேலா மறைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம் என்ற பெயரில், ‘இன்விக்டஸ்’ படத்தில், மண்டேலாவாக நடித்த மார்கன் ஃப்ரீமேன் படத்தைப் போட்டு அஞ்சலி செலுத்திய வரலாறு நம்முடையது. எனினும், மனித மேரிகள், வாழும் வள்ளுவர்கள், சமகால ஃபிடல்கள் வரிசையில் ஏழு மண்டேலாக்களையும் சேர்க்க முடியுமா?

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

ராஜீவ் கொலை பெரிய தப்பு: அற்புதம் அம்மாள் பேட்டி

சமஸ் 22 Sep 2021

தேசியத் தொலைக்காட்சிகளில், அர்னப் கோஸ்வாமிகளும் ராஜ்தீப் சர்தேசாய்களும் தமிழர்களை இன வெறியர்களாகச் சித்தரித்துக் கத்தும்போது, வேகமும் கோபமும் கொப்பளித்துக்கொண்டுதான் வருகிறது. ஆனால், நம் ஆட்கள் சிலர் அடிக்கும் இத்தகைய கூத்துகளை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இதெல்லாம் எப்படிப் பொருள்படும்?

மனிதாபிமானமா, இன அரசியலா?

பஞ்சாபில் 1995இல் அன்றைய முதல்வர் பியாந்த் சிங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மாற்று மனித வெடிகுண்டாக வந்தவர் பல்வந்த் சிங் ரோஜனா. பாப்பர் கால்ஸா இயக்கத்தைச் சேர்ந்தவர். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் தானாக முன்வந்து வாக்குமூலம் அளித்தவர். 2007இல் சிபிஐ  நீதிமன்றம் ரோஜனாவுக்கு மரண தண்டனை விதித்தபோது மேல்முறையீட்டு வாய்ப்பை மறுத்தவர். ரோஜனாவுக்கு ஆதரவான சீக்கியர்களின் தொடர் போராட்டங்கள், பஞ்சாபின் செல்வாக்குமிக்க அமைப்பான சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு தாக்கல்செய்த கருணை மனு, முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் நேரடி முறையீடு ஆகியவற்றின் தொடர்ச்சியாக ரோஜனாவின் மரண தண்டனையை நிறுத்திவைத்திருக்கிறது அரசு.

டெல்லியில் 1993இல் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணீந்தர்ஜித் சிங் பிட்டா கொலை வழக்குக் குற்றவாளியான காலீஸ்தான் விடுதலைப் படையைச் சேர்ந்த புல்லரின் கதை ஒப்பீட்டளவில் இன்னும் நமக்கு நெருக்கமானது. 2001இல் மரண தண்டனை விதிக்கப்பட்ட புல்லரின் கருணை மனுவை 10 ஆண்டுகளுக்குப் பின் நிராகரித்தார் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல். சீக்கியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இப்போது புல்லருக்கு ஏற்பட்டிருக்கும் மனநல பாதிப்பு மற்றும் கருணை மனு, பரிசீலனைக் கால தாமதம் ஆகிய காரணங்களுக்காக புல்லரின் மரண தண்டனையை நிறுத்திவைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டியது சரி. மும்பைத் தாக்குதலின்போது பிடிபட்ட அஜ்மல் கசாப்பையே தூக்கிலிடக் கூடாது என்று எழுதியவன் நான். ஆனால், மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவதாலேயே ரோஜனாவும் புல்லரும் கசாப்பும் குற்றமற்றவர்கள் ஆகிவிடுவார்களா?

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

ஒரு தாயின் போராட்டம்

சமஸ் 22 Sep 2021

தனி சீக்கிய மாநிலம் கோரும் குழுக்கள், “சீக்கிய தேசத்தை நோக்கிய பயணத்தின் முதல் வெற்றி” என்று ரோஜனா, புல்லர் விவகாரங்களைக் கொண்டாடுகின்றன. இதற்கும் “எழுவர் விடுதலை, தமீழீழ விடுதலை நோக்கிய பயணத்தின் முதல் வெற்றி” என்ற கொண்டாட்டத்துக்கும் என்ன வேறுபாடு?

அப்பாவிகளா, போராளிகளா?

இந்தியாவின் மோசமான அரசியல் படுகொலைகளில் ஒன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை. ஈழ விடுதலைப் போராட்டத்தில் ராஜீவ் அணுகுமுறை மிக மோசமானது என்பதில் எனக்கு எப்படி தீர்க்கமான நிலைப்பாட்டைத் தமிழ்நாடு கொண்டிருக்கிறதோ, அது போன்ற தீர்க்கமான நிலைப்பாட்டையே, ராஜீவ் படுகொலை விடுதலைப் புலிகளின் மோசமான அணுகுமுறை என்பதிலும் தமிழ்நாடு கொண்டிருக்கிறது. என்னை தமிழ்நாட்டின் சாமானிய பிரதிநிதிகளில் ஒருவனாகவே நான் காண்கிறேன்.

ராஜீவ் கொலையில் நேரடிக் குற்றவாளிகள், அந்த முடிவுக்குப் பின் பிரதான பங்கு வகித்தவர்கள் கொல்லப்பட்டுவிட்ட நிலையில், சம்பவத்தின் உபரிக் குற்றவாளிகளைத் தொடர்ந்தும் வதைக்க வேண்டியது இல்லை. அவர்களும் தங்கள் இளமைக் காலத்தை முற்றிலும் தொலைத்திருக்கிறார்கள். எவ்வளவோ வதைகளைத் தண்டனைகளாக எதிர்கொண்டிருக்கிறார்கள். ஒரு ஜனநாயகச் சமூகம் இத்தகையோருக்கு மன்னிப்பும் மறுவாழ்வுக்கான வாய்ப்பும் வழங்குவது கடமை என்கிற அளவிலேயே தமிழ்நாடு இன்று எழுவர் விடுதலையின் பக்கம் திரண்டு நிற்கிறது. இந்தக் காருண்யம்தான் இங்கே தார்மிகம். 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

பேரறிவாளன் விடுதலை கொண்டாடப்பட என்ன காரணம்?

வாசகர் 19 May 2022

நீதிமன்றம் இதில் சம்பந்தப்பட்டவர்களை விடுவிக்கலாம் என்று பரிந்துரைத்திருப்பதும் தமிழக அரசு விடுவிக்க முடிவெடுத்திருப்பதும் மனிதாபிமான அடிப்படையில்தானே தவிர, அவர்கள் நடந்த குற்றத்தோடு துளியும் தொடர்பற்றவர்கள் என்கிற அடிப்படையில் அல்ல.

முரண்படும் குரல்கள்

இன்று தமிழ்நாட்டைச் சூழ்ந்திருக்கும் சில குரல்களை இணைந்துப் பாருங்கள்... உள்ளபடியாகவே நாம் மனிதாபிமான அடிப்படையில்தான் தண்டனை விடுவிப்புகளுக்குக் குரல் கொடுக்கிறோமா என்பது நமக்கே குழப்பம் தரும். 

இத்தனை நாட்களும் அப்பாவிகள் என்று கூறியே எழுவர் விடுதலையைக் கோரினோம். இப்போது தியாகிகள் என்கிறோம். எனில், அவர்களை யாரென்று அடையாளப்படுத்துகிறோம்?

பேரறிவாளன் தூக்குக் கயிற்றின் முன் நின்றபோது, கூக்குரலிட்டோம். அப்சல் குருவின் குரல்வளை நெரிபடும்போதோ, வாய் மூடி. முகம் திருப்பி நின்றோம். ஏன்?

அரித்ரா “என் தாய் - தந்தை கையால் சாப்பிடக் காத்திருக்கிறேன்” என்று தன் தாய் நளினிக்காக ஏங்கும் குரல் நமக்கு வலிக்கிறது. “என் தந்தையை இழந்தேன். இனி, அவர் திரும்பிவரப்போவதில்லை. ஒரு முன்னாள் பிரதமரான என் தந்தைக்கே நீதி கிடைக்கவில்லை என்றால், இந்நாட்டின் சாமானியனுக்கு எப்படி நீதி கிடைக்கும்?” என்கிற ராகுல் குரலின் வலி கேலிக்குரியதாகிறது என்றால், நாம் யார்?

நேற்று வரை யாரும் மரண தண்டனையின் பெயரால் கொல்லப்பட்டுவிடக் கூடாது என்று இங்கு கூட்டங்கள் நடந்தன. அதுவே அஹிம்சை என்றோம். இன்றைக்கு, ராஜீவ் கொல்லப்பட்டிருக்கக் கூடாது என்று அவருடைய கட்சியினர் கூட்டங்கள் நடத்தும்போது, அவர்களை நோக்கிக் கல் வீசப்படுகிறது; ராஜீவ் சிலைகளின் முகம் சிதைக்கப்பட்டு, தலை தகர்க்கப்படுகிறது. எனில், நாம் தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள சமூகத்துக்குச் சொல்ல விழைவதுதான் என்ன?

‘தி இந்து’, மார்ச் 2014

 

தொடர்புடைய கட்டுரைகள்

ராஜீவ் கொலை பெரிய தப்பு: அற்புதம் அம்மாள் பேட்டி
ஒரு தாயின் போராட்டம்
பேரறிவாளன் விடுதலை கொண்டாடப்பட என்ன காரணம்?
தீவிரவாதத்துக்கான ஊக்குவிப்பா பேரறிவாளன் விடுதலை?
தமிழகத்தின் கும்பல் மனநிலைக்கு சில கேள்விகள்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ்

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


3






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Sivakumar   1 year ago

எழுவர் விடுதலை மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட்டது என்பது நம்பும்படியாக இல்லை. அது உண்மை என்றால் சிறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இதுக்கும் மற்ற கைதிகளையும் விடுவிக்க தமிழக சட்டமன்றம் பரிந்துரை செய்ய வேண்டும். தமிழக அரசியல் கட்சிகள் தமிழின அரசியலுக்கு தங்களை அறியாமலே கொடுத்த விலை. யார் தமிழின அரசியலில் சிறந்தவர் என நிரூபிக்க நடந்த போட்டியின் விளைவு. அன்று ஊடகங்களில் பேசிய அணைத்து திமுக வினரும் இந்த விடுதலையை கவர்னருக்கு எதிரான அரசின் வெற்றியாகவே பறை சாற்றிகொண்டார்கள். இதை விடக்கொடுமை விடுதலையான வர்களின் பேட்டியும், அவர்கள் விருப்ப நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும்... கடைசியில் நாட்டாற்றில் விடப்பட்டது ஓரு நல்ல தலைவனை இழந்த நாடும், கட்சியும், குடும்பமும் தான்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஷெர்மன் சட்டம்பிஜு ஜனதா தளம்நெடில்கூட்டத்தொடர்கி.ரா. பேட்டிமகேஸ் பொய்யாமொழிலே உச்ச அமைப்புமனம்தஞ்சை பெரிய கோயில்பழங்குடிக் குழுக்கள்அமுல் நிறுவனத்தின் சவால்கள்கிராமம்ஜெயமோகன் கட்டுரைதாய்லாந்துபத்திரிகையாளர் கலைஞர்மக்கள் நலத் திட்டங்கள்சாதியைத் தவிர்ப்பது எப்போது சாத்தியமாகும்?நிதீஷ் குமார்பிங்க் சிட்டிபரிவர்த்தனைமணிப்பூர் கலவரம்பண்பாட்டு வரலாறுஅறந்தை அபுதாகிர்தனுஷ்காமாயக் குடமுருட்டி: ஒளிதான் முதல் நினைவுஊடக ஆசிரியர்கள்ஜெயமோகன் பேச்சு: எது விவாதப் பொருள்?இயற்கை விவசாயம் முனைப்பு பெறுமா?நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்திமுகவுக்கு உதயநிதி செய்ய வேண்டியது என்ன?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!