கட்டுரை, அரசியல், சட்டம் 10 நிமிட வாசிப்பு

தீவிரவாதத்துக்கான ஊக்குவிப்பா பேரறிவாளன் விடுதலை?

கே.சந்துரு
20 May 2022, 5:00 am
9

மிழ் மக்களால் 1971-க்குப் பிறகு முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு கோமாளித்தனமான வேலையில் ஈடுபட்டுள்ளது. பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுவித்த தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் வாயில் துணியைக் கட்டிக்கொண்டு ஒரு மணி நேரம் மௌன எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று அக்கட்சியால் வெளியிடப்பட்ட அறிவிப்பு அரசியல் அபத்தம்! இது தவிர, அவர்களது ‘செய்தித் தொடர்பாளர்’ என்ற பெயரில் இயங்கும்  அமெரிக்கை நாராயணன் உதிர்க்கும் முத்துகள் யாவும் காது கொடுக்க சகித்தாவை. இந்தத் தீர்ப்பை பயங்கரவாதத்திற்கும், பணநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி என்று கூறியதோடு, தமிழ் மக்கள் அடைந்திருக்கும் தோல்வி என்றும் குறிப்பிட்டுள்ளார் அவர். 

நீதிமன்றத்தின் முன்னின்ற கேள்வி

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஒரு தேசிய அரசியல் கட்சி எதிர்ப்புப் போராட்டம் நடத்துவது என்பது கேலிக்கூத்து. வேடிக்கையாகச் சொல்வார்கள், “அரசமைப்புச் சட்டத்தில் என்ன எழுதியிருந்தாலும் இறுதியில் நீதிபதிகள் சொல்வதே சட்டம்!” என்று. ஒரு கிரிமினல் வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவே இறுதியானது என்பதை ஒரு சட்ட மாணவன்கூட உறுதிப்படுத்திவிடுவான். ஆனால், இந்தச் சிற்றறிவுகூட இல்லாமல் பொறுப்பற்ற முறையில் ஏன் இப்படி காங்கிரஸ் செயல்படுகிறது? 

தற்போது நீதிமன்றத்தின் முன் எழுப்பப்பட்டிருந்த பிரச்சினையானது, ‘ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் குற்றவாளிகளா அல்லது நிரபராதிகளா?’ என்பதே இல்லை. அக்கொலையில் சம்பந்தப்பட்ட நேரடிக் குற்றவாளிகள் அனைவரும் சிறப்புப் புலனாய்வுக் குழு மேற்பார்வையில் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார்கள். பின்னர் தடா சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள் எவரும் இந்தக் கொலையில் நேரடிப் பங்கு வகித்தவர்கள் அல்லர். கொலைக்கும், கொலையை ஒட்டிய ரகசிய சதிக்கும் பல்வேறு வழிகளில் துணை சென்றவர்கள் என்ற முறையில்தான் அவர்களது பங்கு அவ்விசாரணையில் கொண்டுவரப்பட்டது.

தடா சட்டத்தின்படி வழக்கு விசாரணை ரகசியமாக நடத்தப்பட்டதுடன், காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் முன் அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களைச் சாட்சியங்களாக ஏற்றுக்கொள்வதற்கும் அச்சட்டத்தில் இடம் உண்டு. மேலும், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே செய்ய முடியும். இப்படிப்பட்ட ஒரு கடுமையான சட்டத்தின் கீழ்தான், பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆட்படுத்தப்பட்ட குற்றவாளிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

சிறப்பு நீதிமன்றம் 26 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்தது எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிரிமினல் வழக்குகளில் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஒவ்வொருவர் பங்கையும் தனித்தனியாக நிர்ணயித்து, அதன் அடிப்படையில் தண்டனை விதிப்பதுதான் உரிய முறை. ஆனால் அதையும் மீறி சிறப்பு நீதிமன்றம் அனைவருக்கும் மரண தண்டனை அளித்ததைப் பற்றி உச்ச நீதிமன்றத்தில் முறையிடும்போது, ‘இது நீதித் துறையே விளைவித்த கொலைக் குற்றம்’ என்று விமர்சிக்கப்பட்டது. பின்னர், இந்த மேல்முறையீட்டில் 22 பேர் மீதான கொலைத் தண்டனையை ரத்துசெய்து 4 பேருக்கு மட்டும் உறுதிசெய்தது உச்ச நீதிமன்றம்.

இந்தத் தீர்ப்பை எழுதிய நீதிபதி கே.டி.தாமஸ் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில், நான்கு பேருக்கு கொலைத் தண்டனையை உறுதிசெய்தது தவறு என்று கருத்து தெரிவித்தார். பேரறிவாளனிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்ற சிபிஐ கண்காணிப்பாளர் தியாகராஜன், தான் ஒப்புதல் வாக்குமூலத்தை எழுதும்போது அதில் முக்கியப் பகுதி ஒன்றைத் தவிர்த்துவிட்டதாக வருத்தம் தெரிவித்தார்.

அமைச்சரவையே பிரதானம்

கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 4 பேரும் ஆளுநரிடம் அரசமைப்புச் சட்டம் 161ஆவது பிரிவின்படி கருணை மனுவை அளித்தனர். அன்றைய ஆளுநர் பாத்திமா பீவி அப்பதவிக்கு வருவதற்கு முன் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றியவர். தமிழக அமைச்சரவையின் அறிவுரையைப் பெறாமலேயே 4 பேர் கருணை மனுக்களையும் அவர் தள்ளுபடி செய்தார். அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கில் அமைச்சரவையின் அறிவுரையின்றி ஆளுநர் கருணை மனுக்களைப் பரிசீலிக்க முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டதுடன், ஆளுநரின் தள்ளுபடி உத்தரவு ரத்து செய்யப்பட்டது. 

அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை அம்மனுக்களைப் பரிசீலித்தது. திமுக அரசு ஏற்கெனவே விடுதலைப் புலிகள் விவகாரத்தில் மென்போக்கோடு செயல்படுவதாக அப்போது குறிவைக்கப்பட்ட நிலையில், நளினிக்கு மட்டும் மரண தண்டனையைக் குறைப்பதற்கு ஆளுநருக்கு அரசு ஆலோசனை வழங்கியது; மற்ற மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.  இதை எதிர்த்து குடியரசுத் தலைவருக்கு மனுக்கள் அளிக்கப்பட்டன. அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணனும், அதற்குப் பின்னர் பதவிக்கு வந்த அப்துல் கலாமும் முடிவு எதுவும் எடுக்காமல் 11 ஆண்டுகள் கருணை மனுக்கள் கிடப்பில் போடப்பட்டன. அதற்குப் பின் குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்த பிரதீபா பாட்டீல் அம்மனுக்களைத் தள்ளுபடி செய்ததையொட்டி மரண தண்டனையை நிறைவேற்றும் நாள் நெருங்கியது. அச்சமயத்தில் தமிழக சட்டப்பேரவையில் குற்றவாளிகள் 7 பேருக்கும் மரண தண்டனையை ரத்துசெய்வதற்கு குடியரசுத் தலைவர் கருணை காட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது (2011).

சம்பந்தப்பட்டவர்கள் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அவ்வழக்கு விசாரணையில் இருக்கும்போதே அம்மனுக்கள் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. உச்ச நீதிமன்றம் இத்தனை ஆண்டுகளாக மரணக் கொட்டடியில் இருந்து வந்த அக்குற்றவாளிகளின் மரண தண்டனையை ரத்துசெய்து அதை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது (2014). இதற்குப் பின்தான் தமிழக அமைச்சரவை குற்றவாளிகள் 7 பேருக்கும் தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்யும்படி ஆளுநருக்கு அறிவுரை வழங்கியது.

இதையொட்டி உச்ச நீதிமன்றமும் அவர்கள் குறைந்தபட்ச தண்டனைக் காலத்தை அனுபவித்துவிட்டதனால் அவர்கள் தண்டனையைக் குறைப்பதற்கோ, மாற்றுவதற்கோ குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நிவாரணம் பெறலாம் என்று கூறியதன் அடிப்படையில் அவர்கள் மீண்டும் ஆளுநரிடம் மனு அளித்தனர். மறுபடியும் தமிழக அமைச்சரவை ஆளுநரிடம் தண்டனையைக் குறைக்கும்படி அறிவுரை வழங்கியது.

அதற்குப் பிறகு ஆளுநர் இதுகுறித்து முடிவு எதுவும் எடுக்காததனால் மீண்டும் ஒருமுறை சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினர். ஆனால், சென்னை உயர் நீதிமன்றமோ ஆளுநரின் இந்த சிறப்பு அதிகாரத்தில் தலையிட முடியாது என்று ஒதுங்கிக்கொண்டது. மறுபடியும் வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. 2018ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை மீண்டும் ஒருமுறை குற்றவாளிகளின் தண்டனையைக் குறைப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றியது (9.9.2018). அதே தேதியில் தமிழக அமைச்சரவை ஆளுநரிடம் குற்றவாளிகள் 7 பேருக்கும் தண்டனையை ரத்துசெய்வதற்கு ஆலோசனை வழங்கியது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைச்சரவையின் ஆலோசனையைப் புறக்கணித்து ஆளுநர் முடிவு எதுவும் எடுக்காமல் காலம் தள்ளி வந்ததைத்தான் தற்போது உச்ச நீதிமன்றம் குறை கூறியுள்ளது. ஆளுநர் சார்பாக வாதாடிய ஒன்றிய அரசின் வாதத்தை நிராகரித்ததுடன், அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 161இன் கீழ் கருணை காட்டும் அதிகாரத்தை ஆளுநர் தன்னிச்சையாக பயன்படுத்த முடியாது என்றும், அமைச்சரவையின் ஆலோசனை அவரைக் கட்டுப்படுத்தும் என்றும் மீண்டும் ஒருமுறை வலிறுத்தப்பட்டுள்ளது.

சீர்திருத்துவதே தண்டனையின் நோக்கம்

சுமார் இரண்டாரை ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்த கருணை மனுக்களின் மீது மீண்டும் முடிவெடுப்பதற்காக ஆளுநரிடம் திருப்பி அனுப்பாமல், அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்யும் உத்தரவை உச்ச நீதிமன்றமே பிறப்பித்துள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்கது. இதைக் கண்டித்துதான் காங்கிரஸார் குரலெழுப்பிவருகிறார்கள்.

தீவிரவாதத்துக்கு ஆதரவானது என்று கருத்து கூறியுள்ள அமெரிக்கை நாராயணன் இந்தத் தீர்ப்பில் தீவிரவாதத்திற்கு ஆதரவாக ஏதேனும் ஒரு பகுதியைச் சுட்டிக்காட்ட முடியுமா? பணநாயகம் வென்றது அவர் கூறியுள்ளது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பாகும். தமிழக மக்களுக்குத் தோல்வி என்றும் அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்பது தெரியவில்லை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீவிரவாத சட்டப் பிரிவுகளைச் சேர்ப்பதற்கு இடம் இல்லை என்று 1999ஆம் வருடத்திய மேல்முறையீட்டிலேயே உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிவிட்டது. இருப்பினும் இவ்வழக்கு சம்பந்தமான பிரச்சினை எழும்போதெல்லாம் குற்றவாளிகள் தீவிரவாதத்தை ஆதரிப்பவரகள் என்று தொடர்ச்சியான பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிடுவது சட்ட விரோதமானது மட்டுமல்லாமல், கீழ்த்தரமான அரசியல் பிரச்சாரமாகும்.

நம் நாட்டு குற்றவியல் தண்டனையின் அடிப்படை பழிவாங்குதல் அல்லது மாறு கை / மாறு கால் வாங்குவது அல்ல. மாறாக, தண்டனை விதிக்கப்பட்ட நபர்களைச் சீர்திருத்தி மைய நீரோட்டத்தில் கொண்டுசேர்ப்பதுதான். காந்திகூட ‘கண்ணுக்குக் கண் என்ற நோக்கம் தேசத்தையே குருடாக்கிவிடும்!’ என்று கூறினார். உச்ச நீதிமன்றமும் பல தீர்ப்புகளில் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளது.

1978இல் திருத்தப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 433-A கீழ் மரண தண்டனை பெற்ற குற்றவாளி 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்துவிட்டால் தண்டனைக் குறைப்பு பற்றி அரசு பரிசீலிக்கலாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையைக் கழித்துவிட்ட 7 குற்றவாளிகளின் தண்டனையையும் ஏன் மாநில அரசு குறைக்கக் கூடாது என்கிற கேள்விதான் மேலோங்கி நிற்கும்.

ஆளுநரின் ஆதிகார வரையறை?

கிரிமினல் சட்டத்தில் குற்றமிழைத்தவர்கள் மீது உரிய தண்டனை வழங்கிய பின் அவர்களுக்கு சட்டத்திலுள்ள சலுகைகள் வழங்குவதை அரசியலாக்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். கடந்த 30 வருடங்களாக ஒன்றிய அரசில் பதவி வகித்த காங்கிரஸ் கட்சியும், பாஜக கட்சியும் இப்பிரச்சனையில் ஒரே நிலைப்பாட்டைக் கடைப்பிடித்துவருவது அவர்களைத் தமிழக அரசியலிலிருந்து மேலும் வெளித்தள்ளிக்கொள்ளவே வழிவகுக்கும். குற்றங்களுக்கான தண்டனை தொடர்பில் சட்டங்கள் தெளிவாக இருக்கும்போது, அதையும் மீறி இத்துணைக்கண்டத்தின் அரசியலை முன்வைத்து தண்டனைகளை நிறைவேற்ற முயல்வது கிரிமினல் சட்ட முறைக்கே விரோதமானது.

கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் அனைவரும் சட்டத்திலுள்ள குறைந்தபட்ச சிறைத் தண்டனைக்கு மீறி மேலும் ஒரு பங்கு சட்டப் போராட்ட காலத்தில் சிறையிலேயே கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்மையிலேயே ஒரு கேவலமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி நாகேஸ்வரராவ் ஜெயலலிதா அரசு சிறப்பு வக்கீலாக பல பொடா வழக்குகளில் மறு ஆய்வுக் குழு முன்னால் ஆஜராகி வாதிட்டவர். தமிழ்நாட்டில் தேசிய அமைப்புகளைச் சேர்ந்த நெடுமாறன், வைகோ போன்ற தலைவர்களைப் பொடா சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்குகள் நியாயம் என்று வாதாடியவர். அவருக்கு இந்த மாநிலத்தின் அரசியல் பின்னணி அத்துப்படி. இருப்பினும், சட்ட நியாயங்கள் கருதி சிறப்பான தீர்ப்பொன்றை அவர் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஆளுநரின் அதிகார வரையறை என்ன என்பதையும், அவர் அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர் என்பதையும் வலியுறுத்திய அவரது தீர்ப்பு இன்றைய ஒன்றிய அரசுக்கும், இங்குள்ள பாஜகவினருக்கும் வேப்பங்காயாக இருக்கலாம். ஆனால், அதுதான் அரசமைப்புச் சட்டத்தின் உண்மையான நோக்கம் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

அது மட்டுமின்றி, மற்ற 6 குற்றவாளிகளுக்கும் மனத்தடையை அகற்றி சட்ட வரையறையுடன் செயல்பட்டு மன்னிப்பு அதிகாரத்தின் மூலம் தண்டனையை ரத்துசெய்தால் அவர்களை ‘திருந்திய மனிதர்கள்’ என்று கருத இடம் உண்டு. மீறினால் மீண்டும் குட்டு வைப்பதற்கு இருக்கவே இருக்கிறது உச்ச நீதிமன்றம்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கே.சந்துரு

கே.சந்துரு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி; சமூக விமர்சனங்களை முன்வைப்பதோடு நீதித் துறையின் சீர்திருத்தங்களுக்கான சிந்தனைகளையும் தொடர்ந்து முன்வைப்பவர். ‘ஆர்டர்.. ஆர்டர்!’, ‘நீதிமாரே, நம்பினோமே!’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.


13

3

1
1

பின்னூட்டம் (9)

Login / Create an account to add a comment / reply.

J. Jayakumar   2 years ago

Excellent article from a different perspective!. By the way why Mr. Gnanapraksan needlessly brings in the caste of "Americai Narayanan"? Editor should have edited such needless chauvinistic comment!

Reply 1 1

Login / Create an account to add a comment / reply.

இ.பு.ஞானப்பிரகாசன்   2 years ago

என் முந்தைய கருத்துரையில் சொல்ல மறந்த ஒன்றைப் பதிவு செய்ய விழைகிறேன்! பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பை அமெரிக்கை நாராயணன் "பணநாயகத்தால் கிடைத்த தீர்ப்பு" எனக் கூறியிருப்பது வெளிப்படையான நீதிமன்ற அவமதிப்பு என நீதியரசரே கூறியுள்ளார். எனில் அமெரிக்கை நாராயணன் மீது தமிழ் அமைப்புகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும். பார்ப்பனர்கள் இந்த நாட்டில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என ஆகி விட்டது. அதற்கு முடிவு கட்டப்பட வேண்டும்!

Reply 6 0

Login / Create an account to add a comment / reply.

இ.பு.ஞானப்பிரகாசன்   2 years ago

இந்த வழக்கின் மொத்த வரலாற்றையே மிகச் சுருக்கமாக வழங்கி விட்டார் நீதியரசர் அவர்கள். நன்றி! குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் அவருக்குரிய தண்டனையை முழுவதும் பெற்ற பின்னும் அவர் காலமெல்லாம் சிறையில்தான் இருக்க வேண்டும் என வற்புறுத்துபவர்கள் எப்பேர்ப்பட்ட கொடுமனக்காரர்களாக இருப்பார்கள்? அவர்கள் இத்தகைய விளக்கங்களைப் படித்துத் திருந்தி விடுவார்களா? ஒருபொழுதும் இல்லை. ஆனாலும் ஐயா ஏன் இதை எழுதியிருக்கிறார், அருஞ்சொல் ஏன் இப்படி ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது என்றால் காங்கிரசாரின் இந்த நச்சுப் பரப்புரையை நம்பும் அளவுக்கும் சில மதிகெட்டவர்கள் இந்த நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு உண்மையை எடுத்துரைக்க இந்தக் கட்டுரை கட்டாயம் பயன்படும். எதிர்காலத்திலும் யாராவது இது தொடர்பாகக் கேள்வி எழுப்பினால் உடனே விளக்கமளிக்க இந்தக் கட்டுரையை அவர்களுக்குக் காட்டலாம். அந்த அளவுக்கு ஒரு முழுமையான, செம்மையான கட்டுரையாக இது அமைந்திருக்கிறது. நீதியரசர் சந்துரு அவர்களுக்கும் அருஞ்சொல்லுக்கும் நன்றி!

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

kALIDAS   2 years ago

நீதிபதி சந்துரு அவர்களின் கட்டுரையில் எழுதியிருப்பது அனைத்தும் அறிந்தவர்கள்தான்....காங்கிரஸ் தொடர்பாளர்கள் ...... ஆனால் ராஜீவ் காந்தி குடும்பத்திற்காக வாதாடுவதாக நினைத்து நீதிமன்ற தீர்ப்பையும் அரசியலமைப்பையும் அரசியல்வாதிகளையும் கொச்சைபடுத்துகிறார்கள். பழியுணர்வு தவிர்க்க வேண்டியது உணர்வார்களா..... நீலனூர் கே.கே.தாஸ் திருவாருர்

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Periasamy   2 years ago

இப்படி பேரறிவாளனை போல் ஆயிரக்கணக்கானோர் மனம் திருந்தி சிறைகளில் இருப்பார்களே...அவர்களுக்கும் விடுதலை வேண்டுமா..?? இதில் அரசின் நிலை என்ன?? அந்த முகம் தெரியாத கைதிகளுக்காக யாரும் பேச முன்வரவில்லை..ஒருவேளை அரசியல், மத படுகொலைகளை செய்தவர்கள் அல்லது அதில் உதவியவர்களுக்கு மட்டும் தான் நீங்கள் பேசுகிற அத்தனை விழுமியங்களும் பொருந்துமா??

Reply 14 1

Login / Create an account to add a comment / reply.

Periasamy   2 years ago

ஒரு தண்டனை கைதி நன்னடத்தை கருதி விடுவிக்கப்பட்டு இருக்கிறார்...ஆனால் அவரின் விடுதலையை பலரும் ஏதோ தமிழினத்தின் விடுதலையாக கொண்டாடுவது தான் எதிர்வினைகளை கொண்டு வருகிறது..இந்த கொண்டாட்ட மனநிலையின் அபத்ததை போகிற போக்கில் சுட்டி காட்டிவிட்டு தான் போவீர்கலே தவிர அந்த அபத்தத்தை விவரித்து யாரும் கட்டுரை எழுதப்போவதில்லை🤔🤔

Reply 5 0

Login / Create an account to add a comment / reply.

Prabhu   2 years ago

பல விடயங்களை தெளிவு படுத்தும் கட்டுரை. பயங்கரவாதத்தை பற்றியதே இல்லை இந்த வழக்கு. அரசியல் சட்டத்தின் கீழ் யாருக்கு என்ன அதிகாரம் உள்ளது, அதை சம்பந்தப்பட்டவர்கள் சட்டப்படி பிரயோகம் செய்தார்களா என்பது பற்றியது. Justice Chandru has put things in perspective. He hits the bull's eye.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

செல்வம்   2 years ago

காங்கிரசாரின் இச்செயல் மாண்புகள், விழுமியங்கள், நீதி உணர்வின் அடிப்படையில் அமைந்ததல்ல. அக்கட்சியில் எஞ்சியிருப்பவர்கள் தலைமைக்குத் தமது விசுவாசத்தைக் காட்டிக்கொள்ள கிடைத்த வாய்ப்பாகவே இதைக் கருதுகின்றனர் என்று தோன்றுகிறது. இப்போராட்டம் மாநில மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதல்ல. இப்போராட்டத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்துக்கு காரணம் கூட்டணி மாற்றம் ஏதாவது நிகழப்போகிறதா என்ற குறுகுறுப்பே.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Sathyanarayanan   2 years ago

ஒருபுறத்தில் பேரறிவாளன் அவர்களை விடுவித்தது சரியாக இருந்தாலும்கூட, தமிழக மக்கள் அவரது விடுதலையை ஒரு தியாகியின் விடுதலை போல கருதி கொண்டாடுவது சரியான செயலா? இராஜீவ் காந்தி உட்பட அத்தாக்குதலில் உயிரிழந்த 15 பேரின் குடும்பங்களுக்கும் இந்த கொண்டாட்டங்களின் மூலம் நாம் தெரிவிக்கும் செய்தி என்ன? ஏனெனில் இத்தாக்குதலில் உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் தானே? நம்முடைய இந்த செயல்கள் அவர்களுடைய குற்றத்தை ஞாயப்படுத்துவது போல் ஆகாதா? இது சரியா?

Reply 11 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

இசைக் கச்சேரிசூப்பர் ஸ்டார்தார்மீகம்பாலு மகேந்திராஎஸ்.அப்துல் மஜீத் கட்டுரைகேரிங்கோவைடிஸ்ட்டோப்பியாஜீவாமத்திய பணியுசிசிஇந்திய தேசிய ராணுவம்மாயக்கோட்டையின் கடவுள்மாநகர போக்குவரத்துநீரிழிவு நோய்பாரசீக மொழிஅவை பாதுகாப்புமது வகைகள்ஜார்ஜ் ஆர்வெல்முகப்பருகருத்தாளர்சரத் பவார்வீட்டுச் சிறைநான்கு சாதிகளின் உண்மை நிலைதான் என்ன?என்டிடிவிநகரம்irshad hussainராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்சமூகப் பொருளாதாரச் சிந்தனைமிகைல் கொர்பசெவ்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!