கட்டுரை, கேள்வி நீங்கள் - பதில் சமஸ், சமஸ், ஆசிரியரிடமிருந்து... 5 நிமிட வாசிப்பு
பேரறிவாளன் விடுதலை கொண்டாடப்பட என்ன காரணம்?
கேள்வி - நீங்கள், பதில் - சமஸ் என்ற இந்தப் பகுதி வாசகர்கள் ‘அருஞ்சொல்’ ஆசிரியருடன் நேரடியாக உரையாடுவதற்கான பகுதி. ‘வாசகர்கள் எது தொடர்பாகவும் விரும்பிய கேள்விகளைக் கேட்கலாம்; சமஸுக்குத் தெரிந்த பதிலை அவர் தருவார்’ என்பதே இந்தப் பகுதியின் ஏற்பாடு. வாசகர்கள் தங்கள் கேள்விகளை aruncholeditor@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடலாம். வாசகர்கள் அவசியம் தங்கள் பெயருடன் ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள். இனி, கேள்வி - நீங்கள், பதில் - சமஸ்…
பேரறிவாளன் விடுதலை தொடர்பான ஆசிரியர் சமஸ் அவர்களின் முகநூல் பதிவுகளைக் கண்டேன். அதிர்ச்சியாக இருந்தது. மனிதாபிமான அடிப்படையில் மரண தண்டனையை எதிர்ப்பது சரி; ஆயுள் தண்டனையும் கூடாது என்றால், யாரையும் கொல்லலாம், என்னவும் செய்யலாம், சில வருட சிறைத் தண்டனையுடன் வெளியே வந்திடலாம் என்று ஆகிவிடாதா? இது எப்படி நியாயம் ஆகும்? மேலும், குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதாலேயே எப்படி குற்றமற்றவர்கள் ஆகிவிட முடியும்? பேரறிவாளன் விடுதலையைக் கண்டித்து காங்கிரஸ் அறிவித்திருக்கும் போராட்டத்துக்கு எதிரான உங்கள் பதிவு குற்றவாளிகளையும், குற்றத்தையும் கழுவிவிடும் தொனியில் இருக்கிறது. இது சரியா? பேரறிவாளன் விடுதலையான தருணம் தமிழகத்தில் உருவான கும்பல் மனநிலை சமஸிடமும் எதிரொலிக்கிறதா?
எஸ்.புருஷோத்தமன், சென்னை
மிக விரிவாகப் பதில் அளிக்க வேண்டிய கேள்வி. ஆனால், என்னைத் தொடர்ந்து வாசித்துவருபவர்களுக்கு இந்தக் கேள்வியின் நியாயமின்மை புரியும்.
பேரறிவாளன் விடுதலைக்கான என்னுடைய குரல் அவருக்கான தனித்த ஒன்று இல்லை. மரண தண்டனையை எப்போதும் நான் எதிர்த்திருக்கிறேன். பேரறிவாளன் போன்ற நல்ல பின்னணி உடையவர்களுக்காக மட்டும் அல்லாது, மும்பை தாக்குதலில் நேரடியாகப் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கஸாப் போன்றவர்களுக்கும்கூட மரண தண்டனை கூடாது என்று வாதிட்டிருக்கிறேன். நாடு முழுக்க “கஸாப்புக்கான மரண தண்டனை ஏன் தாமதமாகிறது?” என்ற வெறிக்கூச்சல் மிகுந்திருந்த நாட்களில் ‘ஆனந்த விகடன்’ போன்ற வெகுஜன இதழில் அதற்கு எதிராக எழுதினேன்.
மரண தண்டனை ஒரு நாகரிகச் சமூகத்தின் பண்பாட்டுக்கு முற்றிலும் விரோதமானது என்று எண்ணுகிறேன்.
ஆயுள் தண்டனை முழு ஆயுளுக்கும் தொடர்வதையும் நான் எதிர்க்கிறேன் என்றாலும், மரண தண்டனையைப் போல, எல்லோருக்குமான நிபந்தனையற்ற கோரிக்கையாக - குறிப்பிட்ட காலம் சிறையில் இருந்துவிட்டால் எவராக இருந்தாலிம் அவரைச் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று - அதை நான் முன்வைக்கவில்லை. சிறைக்கூடங்களானவை பழிக்குப் பழி தீர்க்கும் குரூரக் கூடாரங்களாக இருக்கக் கூடாது; அவை சீர்திருத்தத்திற்கான மையங்களாக இருக்க வேண்டும். அப்படி தன்னுடைய சிறை வாழ்வில் தன்னைச் சீர்திருத்திக்கொள்ளும் கைதிகளுக்கு குறிப்பிட்ட காலம் முடிந்ததும், அவர்கள் நன்னடத்தையைக் கணக்கில் கொண்டு விடுதலையை வழங்க வேண்டும். ஏனையோர் எஞ்சிய காலத்திலும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதே சரி என்பதே நான் நிலைப்பாடு.
ஆயுள் தண்டனையையும் ஒரு நாகரிகச் சமூகம் இப்படியே அணுக வேண்டும்; அதுதான் சீர்திருத்தத்துக்கு வழிவகுக்கும்.
இந்த வகையிலேயே பேரறிவாளனின் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துவந்திருக்கிறேன். சென்ற பத்தாண்டுகளில் பல முறை இதுகுறித்து நேரடியாகவும், தலையங்கங்கள் வாயிலாகவும் நான் பணியாற்றிய பத்திரிகைகளில் எழுதியிருக்கிறேன் என்பதோடு, பேரறிவாளன் வழக்கு பின்னடைவைச் சந்தித்த ஒவ்வொரு தருணத்திலும் அவர் தரப்பு நியாயத்தை முன்வைக்கும் கட்டுரைகளைப் பிரசுரித்தும் வந்திருக்கிறேன். இதன் பொருட்டு ஒருபோதும் ராஜீவ் படுகொலையைத் துளியளவும் மௌனமாகக் கடக்க முற்பட்டது இல்லை.
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் விடுதலைக்குப் பேசும் போக்கில் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று வாதாடுவதையும், ராஜீவோடு உயிரிழந்தவர்களின் வலியைப் புறந்தள்ளுபவர்களையும் எப்போதும் கண்டித்திருக்கிறேன். விடுதலைப் புலிகள் அமைப்பின் போக்கைக் கடுமையாக விமர்சிப்பவனாகவே எப்போதும் இருந்திருக்கிறேன். என்றைக்கும் இந்தப் பார்வையில் மாற்றம் இல்லை. எழுவர் மரண தண்டனைக்கு எதிராக ஜெயலலிதா அரசு முடிவெடுத்த தருணத்தில், அந்த ஏழு பேரையும் ‘தமிழினத்தின் ஏழு மண்டலேக்கள்’ என்று குறிப்பிட்டு குற்றமற்றவர்களாகவும், தியாகிகளாகவும் சித்திரித்துப் பேசப்பட்டதைக் கடுமையாக கண்டித்து ‘தி இந்து’ நாளிதழில் எழுதியிருக்கிறேன்.
இந்த விஷயத்தை இரு தரப்புகள் பார்வைகளிலிருந்தும் நான் அணுகுகிறேன் என்பதைச் சொல்லவே இவ்வளவு கதையையும் சொல்கிறேன்.
¶
என்னுடைய முகநூல் பதிவை விரித்து எழுத விரும்புகிறேன். ஏனென்றால், பலரும் உணர்ச்சிப் பெருக்கோடு கடக்கிற மாதிரி அற்புதம் அம்மாளின் போராட்டம் வெறும் தாய்மைப் போராட்டம் மட்டுமே இல்லை. சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே ஒரு சாமானிய குடிநபர் இந்த அரசையும், நம்முடைய பேரமைப்பின் மூர்க்கத்தையும் எதிர்த்து நடத்தியிருக்கும் மிக வலிய போராட்டம் இது.
இந்தப் போராட்டத்தில் அற்புதம் அம்மாள் அநேக விஷயங்களை மௌனமாகச் சாதித்திருக்கிறார்.
1. ஒரு முன்னாள் பிரதமரின் படுகொலை வழக்கைகூட நம்முடைய விசாரணை அமைப்புகள் எவ்வளவு மட்டியாகக் கையாண்டன; அவர்கள் கைக்குக் கிடைத்த ஆட்களை வைத்து அதற்கேற்ப கதை எழுதி வழக்கை எப்படி ஜோடித்து முடித்திருக்கிறார்கள் என்பதைத் தன் பிள்ளைக்கு இழைக்கப்பட்ட அநீதியின் ஊடாகவே வெளிக்கொண்டுவந்திருக்கிறார்.
இந்த வழக்கு விசாரணையின் திருப்புமுனை அம்சங்களில் ஒன்று, தான் பேட்டரி வாங்கிக்கொண்டுவந்து கொடுத்தது எதற்காக என்று தனக்குத் தெரியாது என்று பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தைப் பதியாமல்விட்ட விசாரணை அதிகாரி தியாகராஜன் தன்னுடைய மனசாட்சியின் உறுத்தலால் பல ஆண்டுகளுக்குப் பின் தன்னுடைய தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தது ஆகும். இதுவும் நம்முடைய விசாரணை அமைப்பின் அவல முகம். உச்ச நீதிமன்றத்தில் மரண தண்டனையை உறுதிசெய்த நீதிபதி கே.டி.தாமஸ் தன்னுடைய தீர்ப்பு தவறு என்று பின்னாளில் சொன்னார். புற அழுத்தங்களுக்காக எப்படியான முடிவை நோக்கி நீதிமன்றங்கள் செல்கின்றன என்பதற்கு இது ஒரு சான்று.
நான் இந்த விஷயங்களுக்குள் ஓரளவுக்கு மேல் செல்வதை விரும்பவில்லை. காரணம், அது ஏதோ ஒரு விதத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இவர்களுக்கும் ராஜீவ் படுகொலைக்கும் சம்பந்தமில்லாதது போன்ற தொனியை உருவாக்கிவிடும் என்று அஞ்சுகிறேன். ராஜீவ் படுகொலையில் பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகளின் குற்றம் பட்டவர்த்தனமானது. இந்தப் படுகொலையில் கீழே அகப்பட்டவர்களோடு வழக்கை ஊற்றி முடித்ததானது விசாரணை அமைப்புகளின் தோல்வி. இதை இந்த வழக்கு விசாரணைகளின் ஊடாக அற்புதம் அம்மாள் வெளியே கொண்டுவந்திருக்கிறார்.
2. நீதித் துறையை நடுவில் வைத்துக்கொண்டு, ஒன்றிய அரசும் மாநில அரசும்; குடியரசுத் தலைவரும் ஆளுநரும் என்று மாற்றி மாற்றி கால் நூற்றாண்டு காலம் ஒரு வழக்கைப் பந்தாடினார்கள். உச்ச நீதிமன்றம் உள்பட பல சந்தர்ப்பங்களில் நீதித் துறை ஸ்தம்பித்து நின்றது. இந்திய நீதித் துறையின் சகல பலவவீனங்களையும் வெளிப்படுத்தும் ஒரு வழக்காக இது இருந்தது. மிக முக்கியமாக அரசுக்கும் மக்களுக்கும் இடையே நடக்கும் சட்டப் போராட்டத்தில் மையமான இடத்தில் இருக்கும் ஒரு பாவனையிலேயே நீதிமன்றங்கள் செயல்பட்டாலும், உள்ளபடி அரசின் கண்ணசைவுக்கு ஏற்பவே முக்கியமான வழக்குகளில் அவை செயல்படுகின்றன என்பதை இந்த வழக்கு மூலமாக அம்பலமானது. இதையெல்லாம் தாண்டியும் இந்திய நீதியமைப்பின் மீது ஒரு சாமானியரின் நம்பிக்கையை மீட்டெடுத்திருக்கிறார் அற்புதம் அம்மாள்.
3. தமிழ் மக்களின் அக்கறை இந்த வழக்கின் மீது குவிந்தபோது தமிழக முதல்வர்கள் இந்த வழக்கில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது தமிழக அரசின் நிலைப்பாடும் ஒன்றிய அரசின் நிலைப்பாடும் மாறலானது. இந்த முரண்பாடுகளுக்கான வெளிப்பாட்டுக் கருவியாக ஆளுநரானவர் உருவெடுத்தார். மறைமுகமாக மாநில அரசு அதிகாரமும் உரிமையும் இறையாண்மையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. இப்போது பேரறிவாளன் விடுதலைத் தீர்ப்பானது மாநிலங்களின் அதிகாரத்துக்கும் கூட்டாட்சிக்கும் வலு சேர்த்திருக்கிறது. ஆளுநரின் இடத்தை அவருக்குச் சுட்டுகிறது.
வரவிருக்கும் காலத்தில் மனித உரிமைகளிலிருந்து மாநில உரிமைகள் வரை பல நூறு வழக்குகளுக்கு முன்னுதாரணம் ஆக இருக்கும் பேரறிவாளன் விடுதலை.
¶
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்தைத் தங்களுடைய வெற்று எதிர்ப்பின் வழிக் கொச்சைப்படுத்துகிறது காங்கிரஸ்.
ராஜீவ் கொலையானது காங்கிரஸாரிடத்தில் உண்டாக்கிய காயத்தையோ, அவர்களுடைய வேதனையையோ முற்றொதுக்கி இதை நான் எழுதவில்லை. நீங்கள் அரசியலர் என்றால், மன முதிர்ச்சியை அரசியல் எதிர்பார்க்கிறது. அரசியலர்களுக்கான கடப்பாடுகளில் பெருந்தன்மை முக்கியமானது.
ராஜீவ் குடும்பத்திடமிருந்தேனும் இதை காங்கிரஸார் கற்க வேண்டும். காங்கிரஸார் இப்போது வாயை மூடிக்கொண்டிருந்தாலே சோனியா, ராகுல், பிரியங்காவின் பெரிய மனமும் இன்று மக்களால் நினைவுகூரப்படும் - அவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தால் இந்த வழக்கில் இத்தகைய முன்னேற்றங்கள் எதுவும் சாத்தியம் இல்லை. தங்களுடைய சுயநல அரசியலுக்காக ராஜீவ் குடும்பத்தின் பெருந்தன்மையையும் சேர்த்து காங்கிரஸார் நாசமாக்குகிறார்கள்; ஒட்டுமொத்த மனித உரிமைச் செயல்பாட்டையும் தங்களது வாய்ச்சவடால் வழி பின்னுக்கு இழுக்கிறார்கள்.
ஒரு தனிநபருக்குத் தனி நியாயத்தையும், சமூகத்துக்குத் தனி நியாயத்தையும் ஓர் அரசியல் இயக்கம் கொண்டிருக்க முடியாது. இந்தியாவில் இன்று தாராளர்களுக்கான இடத்தில் அமர்ந்திருக்கும் கட்சி காங்கிரஸ். ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் மரண தண்டனைக்கும், ஆயுள் முழுவதும் சிறையில் இருப்பதற்கும் விதிக்கப்பட்டவர்கள் எனும் பார்வையின் வழி மனித உரிமைகள் தொடர்பான தன்னுடைய பார்வையையே கால் நூற்றாண்டுக்கும் மேலாக அது மூடிக்கொண்டிருக்கிறது. இது அபத்தம். அது சுட்டிக்காட்டப்படுவது அவசியம்!
தொடர்புடைய சில பதிவுகள்
4
4
1
பின்னூட்டம் (4)
Login / Create an account to add a comment / reply.
S.Elangovan 2 years ago
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் போராட்ட அறிவிப்பினை வெளியிட்டதும் சோனியாவும், ராகுலும் கண்டித்திருக்கவேண்டும். கண்டிக்காததால் அவர்களும் இதை ஆதரிப்பதாகவே புரிந்து கொள்ள முடியும். அ. இ. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரின் கருத்து அதை உறுதிப்படுத்துகிறது. எனவே அவர்கள் மன்னித்து விட்டதாக கூறியது மனமாரச் சொல்லியதல்ல என்றே நினைக்கிறேன்.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
Gandharajan s 2 years ago
அண்ணே உங்களுடைய 'சஞ்சைதத்களும் சல்மான்கான்களும் பேரறிவாளன்களும்' அந்த கட்டுரையும் பதிவிடுங்கள் .
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
அ.பி 2 years ago
உச்ச நீதிமன்றம் இவ்வளவு காலம் வழக்கை இழுத்து அடித்தது மிக பெரிய தவறு.
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
Mohanraj. G 2 years ago
31 வருடங்கள் சிறை தண்டனை என்பது மரணதண்டனையை விட கொடுமையானது. ஆகவே பேரறிவாளன் அவர்களை விடுதலை செய்தது தான் மிக சரியான தீர்ப்பு. மேலும் மாநில அமைச்சரவையின் அதிகாரம் இந்த தீர்ப்பின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
Reply 3 1
Login / Create an account to add a comment / reply.