கட்டுரை, அரசியல், ஆசிரியரிடமிருந்து... 2 நிமிட வாசிப்பு

சனாதனம், ராஜாஜி, கலைஞர்: ஒரு நினைவூட்டலுக்கு!

ஆசிரியர்
08 Sep 2023, 5:00 am
0

நாட்டில் சூடான விவாதங்கள் நடக்கும்போது பரபர மொழியில் எதையாவது நாமும் சொல்லி வைக்க வேண்டும் என்று நண்பர்கள் எவரேனும் தலைப்படும்போது பத்திரிகையாளர்கள் கை கொள்ள வேண்டிய மொழிப் பொறுப்புணர்வை வலியுறுத்த இரண்டு உதாரணங்களைச் சொல்வேன். 

நானும் இது பிற்பாடு கொஞ்ச கொஞ்சமாகக் கற்றுக்கொண்டதுதான்; கற்றுக்கொண்டே இருப்பதுதான். 

ராஜாஜி ஒரு கட்டுரையை எழுதும்போது கார்பன் பேப்பர் வைத்து, அதை நான்கு பிரதிகள் ஆக்கிக்கொள்வாராம். பிரதமர் சாஸ்திரியை விமர்சிக்கும் கட்டுரை அதுவென்றால், அவர் கைப்பட எழுதிய மூலப் பிரதியை பிரதமருக்கே தபாலில் அனுப்பிவிடுவாராம். இரண்டாவது பிரதி 'ஸ்வராஜ்யா' ஆங்கிலப் பத்திரிகைக்கு; மூன்றாவது பிரதி 'கல்கி' தமிழ்ப் பத்திரிகைக்கு; நான்காவது பிரதி அவருடைய ஆவணக் கோப்புக்கு!

இதை வாசித்தபோது எனக்கு எழுந்த கேள்விகள் ஒருவரை விமர்சித்து எழுதும் கட்டுரையை நாம் யாருக்கான மொழியில் எழுதுகிறோம்? என்ன நோக்கில் எழுதுகிறோம்? 

உண்மையில் அரசிடம் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து எழுதுகிறோம் என்றால் சம்பந்தப்பட்ட பிரதமர் / முதல்வர் கவனத்தைக் கோருவதையும் நோக்கமாகக் கொண்டு அது எழுதப்பட வேண்டும். எனில், சாஸ்திரியை விமர்சிக்கும் ஒரு கட்டுரையை சாஸ்திரியே வாசிக்க வேண்டும் என்று எழுதினால் அதில் பயன்படுத்தப்படும் மொழி எத்தகையதாக இருக்கும்? 

இதை நண்பர்களிடம் சொல்வேன், "கவனத்தில் கொள்ளுங்கள். ஏனென்றால் வெளியே சமூக வலைதளங்களில் எழுதுபவர்களில் பெரும்பாலானவர்களின் மொழி தங்களின் சுய முனைப்புக்கானது தன்னைச் சுற்றியுள்ள கூட்டத்திடம் லைக்குகளைப் பெறுவதே அதன் முதன்மை நோக்கம். ஆட்சியாளர்கள் உள்பட பல ஆயிரம் பேர் வாசிக்கும் ஒரு பத்திரிக்கையாளரின் மொழி மிகுந்த பொறுப்புணர்வு மிக்கதாக வெளிப்பட வேண்டும். அதன் மூலநோக்கம் சமூக மாற்றம்தானே தவிர லைக்குகள் அல்ல!"

இப்படி பேச்சாளர்களிடமும் பகிர்ந்துகொள்ளும் ஒரு கதை உண்டு. கலைஞர் ஒருசமயம் சொன்ன உதாரணம் அது. சில விஷயங்களில் தங்களைப் போன்ற கடும் / தீவிர மொழியிலேயே அவரும் பேச வேண்டும் என்று சுற்றியுள்ள கட்சிகள் / சூழல் நிர்ப்பந்தத்தை உருவாக்குகையில், அதற்கு உடன்பட மறுத்த கலைஞரின் விளக்கம்: "கையில் வெறும் கரண்டியை வைத்திருப்பவர்கள் எப்படியும் சுத்தலாம்; நம் கரண்டியில் குழம்பு உள்ளது." 

ஆட்சி நிர்வாகம் என்பது பெரும் பொறுப்பு. திமுக இன்று தேசிய அளவில் முக்கியமான இடத்தை வகிக்கும் கட்சி. 2024 தேர்தல் என்பது இந்நாட்டின் எதிர்கால ஜனநாயகத்தைத் தீர்மானிக்கும் தருணம். 

ராகுலைவிடவும் இந்த அரசு பார்த்து அச்சப்படும் ஒரு தலைவர் இன்று இல்லை. ஆத்மார்த்தமான மதநல்லிணக்கரும்கூட அவர். ஆயினும், சென்ற ராஜஸ்தான் - மத்திய பிரதேச தேர்தல் சமயத்தில்தான் ராகுல் கோயில் கோயிலாக ஏறி இறங்கினார். காங்கிரஸ் பசுக் காப்பகங்கள் அமைப்போம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டது. ஏன்? இந்தி பெல்ட் மட்டும் இல்லை அது கௌ பெல்ட்டும்!

சமூகத் தளமும் அரசியல் தளமும் ஒன்றோடு ஒன்று பிணைந்தது. ஆர்.எஸ்.எஸ். சமூகத் தளத்தில் விதைப்பதை பாஜக அரசியல் தளத்தில் அறுவடை செய்கிறது. அவர்கள் எதை நம்புகிறார்களோ, எதைப் பேசுகிறார்களோ அதற்கு முழு விசுவாசமாக இருக்கிறார்கள். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உழைக்கிறார்கள். நீங்களும் உண்மையான மாற்றத்தை வேண்டுகிறோம் என்றால், செய்ய வேண்டிய காரியம் அதுதான். அதை விடுத்து வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபடுவது திரும்பத் தாக்கும் தீயாகவே அமையும்.

கும்மிடிப்பூண்டியைத் தாண்டாமல் வாள் சுற்றும் வெறும் கையர்கள், சோஷியல் மீடியா வீரர்கள் என்னவும் பேசலாம்; திமுகவின் கையில் இன்று இருப்பது குழம்புக் கரண்டி என்பதை அதன் தலைவர்கள் நினைவில் இருக்கட்டும்!

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

2

2

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

எஸ்.எம்.அப்துல் காதிர்டொடோமாமதிப்பு உருவாக்கல் (Value Creation)காளைகளுக்கான சண்டைகவச்நீதிநாயகம் கே.சந்துருஅரசியல் எழுச்சிஜின்னாஎருமைத் தோல்கலைக் கல்லூரிபொதுவுடைமைமுதுகெலும்புள்ளதாக மாற வேண்டும் இதழியல்பிஹாரிஆர்.காயத்ரி கட்டுரைபுரதம்தேசப் பாதுகாப்புசிங்களம்மிஸோக்களுடன் சில நாள்கள்…கன்னியாகுமரிகடவுளின் விரல்கலால் வரிஎஸ்.அப்துல் மஜீத் பேட்டிகிறிஸ்தவம்மிக்ஜாம்இன்றைய காந்திகள்தேர்ந்த அரசியலர்இந்தியத்தன்மை என்பது குடியுரிமை - சாதி அல்லஅருஞ்சொல் தமிழ்நாடு நவ் ப.சிதம்பரம் பேட்டிஅருஞ்சொல் வாசக அனுபவங்கள்சிங்கப்பூர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!