சமஸ் உரை, ஆளுமைகள் 6 நிமிட வாசிப்பு

திராவிட இயக்கம் முன்னெடுத்த மாபெரும் அறிவியக்கத்தின் தொடர்ச்சி கருணாநிதி

சமஸ் | Samas
22 Sep 2021, 5:00 am
1

நம் காலத்தின் மூத்த ஊடகரும் முதுபெரும் தலைவருமான கருணாநிதியின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள இப்படி ஒரு பெரிய மேடையில் ஊடகத் துறையில் இளையவனான எனக்கும் வாய்ப்பளித்த எதிர்க்கட்சித் தலைவர், தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி கூறி என் உரையைத் தொடங்குகிறேன். 

முரசொலியின் பொற்காலம் 

இந்த மேடையில், ‘கருத்துரிமை காத்த கலைஞர்’ என்கிற தலைப்பை ஒட்டிப் பேச முற்படும்போது என்னுடைய வாழ்விலிருந்து நேரடியான அனுபவங்களைக் கூற வேண்டும் என்று நினைக்கிறேன். முரசொலியின் 75 ஆண்டு காலப் பயணத்தின் கணிசமான பகுதியை நூலகத்தில் ஆவணமாகப் பார்த்தவன் என்ற முறையில் திராவிட இயக்க இதழ்கள் என்று சொல்லப்படும் கிட்டத்தட்ட 400 சொச்ச இதழ்களில் அதன் முக்கியமான பத்திரிகை ‘முரசொலி’  என்று சொல்ல முடியும். அதுவும் அதன் பொற்காலமான 1960கள், 1970களில் அது கொண்டிருந்த உள்ளடக்கம், கருத்துப் படங்கள், கையாண்ட உத்திகள் இவை எதுவும் வெகுஜன இதழியலுக்கு எந்த வகையிலும் சளைத்தவை இல்லையென்று சொல்ல முடியும். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையைக் கருத்துப் படங்களாக வெளியிட்டது, கட்சியின் வரலாற்றைப் படக்கதைகளாக வெளியிட்டது, கட்சியின் லட்சியங்களைச் சித்திரங்களாகச் சித்தரித்தது, சாமானிய மக்களிடையே பரமபத விளையாட்டு ஒரு பொழுதுபோக்காக இருந்த அந்நாட்களில் பரமபத ஆட்டக்களமாகவே ஒரு படத்தை வெளியிட்டு கட்சியின் கொள்கைகளை வெகுமக்களிடம் கொண்டுசென்ற வரலாறெல்லாம் ‘முரசொலி’க்கு உண்டு.

ஆனால், இவை எல்லாவற்றையும் வரலாறாகவே நான் அனுபவித்திருக்கிறேன். ஒரு பத்திரிகையாளராக அடக்குமுறைகளுக்கு எதிராக கருணாநிதி துடிப்போடு செயல்பட்ட நெருக்கடிநிலைக் காலகட்டத்தின்போது நான் பிறந்திருக்கக்கூடவில்லை. எனவே பின்னாளில் என்னுடைய நேரடி அனுபவத்திலிருந்து, எனக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து சில விஷயங்களை இங்கே பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். 

எது அயராது எழுத வைத்தது? 

கருணாநிதி அவர்களின் இதழியலைத் தமிழ்நாட்டுக்குத் திராவிட இயக்கம் கொடுத்த ஒரு மாபெரும் அறிவியக்கத்தின், ஒரு மாபெரும் ஜனநாயக இயக்கத்தின், ஒரு மாபெரும் மக்கள்மயப்படுத்தலின் ஒரு முக்கியமான பகுதி என்று சொல்லலாம். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தான் ஒரு பத்திரிகையாளன் என்று சொல்வதில் எல்லையற்ற உவகையடைந்தவர் கருணாநிதி. இந்திய அரசியல் வரலாற்றில் பல முக்கியமான தலைவர்கள் பத்திரிகையாளர்களாக இருந்தவர்கள். காந்தி, நேரு, அம்பேத்கர் என்று பத்திரிகைகளை நடத்திய, தொடர்ந்து எழுதிய பல தலைவர்கள் நம்மிடம் உண்டு. ஆனால், ஒரு ஆட்சியாளராக மாறிய பின்னரும், முதுமையைக் கடந்த பின்னரும் சளைக்காமல் எழுதிக்கொண்டிருந்தவர் கருணாநிதி. 

எது அவரை இப்படி எழுத வைத்தது? மூன்று முறை அவரைப் பேட்டி கண்டிருக்கிறேன். ஒரு சந்தர்ப்பத்தில் கேட்டேன், ‘எது உங்களை அயராது எழுத வைக்கிறது? அப்புறம் அன்றாடம் எழுதுவதற்கு உங்களுக்கென மூட் எதுவும் தேவையில்லையா?’ அவர் சொன்னார், “திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுத தனிமை நாடிச் சென்றிருக்கிறேன். ‘நெஞ்சுக்கு நீதி’ சுயசரிதை எழுத தனித்த இடங்கள் தேடிச் சென்றிருக்கிறேன். பட்ஜெட் உரையைத் தயாரிக்கக்கூட தனிமை தேடிச் சென்றிருக்கிறேன். ஆனால், ‘முரசொலி’யில் என் தொண்டர்களுக்கு எழுத நான் காலம், இடம் தேடியதே இல்லை. ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் என்னுடைய வார்த்தைகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். காலையில் அவர்கள் என் எழுத்தை எதிர்நோக்கியே பத்திரிகையைப் பிரிப்பார்கள். அவர்களை அடுத்தத் தளம் நோக்கி அழைத்துச்செல்ல வேண்டும். அதற்காக எழுதினேன். மேலும், ஒவ்வொரு நாளும் என்னைப் பற்றிய, இந்த இயக்கத்தைப் பற்றிய கட்டுக்கதைகள் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருந்தன. அவற்றுக்குப் பதிலளிக்க எழுதினேன்.”

எதை எழுதினார்கள் இவர்கள்? 

இந்த இடம் மிக முக்கியமானது என்று நினைக்கிறேன். நண்பர்களே, நாம் கருத்துரிமை என்று சொல்லும்போது அடக்குமுறைக்கு எதிரான, ஏதேச்சதிகாரத்துக்கு எதிரான, சர்வாதிகாரத்துக்கு எதிரான குரலாக மட்டுமே பார்க்கிறோம். இருட்டிப்புக்கு எதிரான, புறக்கணிப்புக்கு எதிரான, நிராகரிப்புக்கு எதிரான, கட் டுக் கதைகளுக்கு எதிரான குரலும் கருத்துரிமைக்கான குரல்தான்!

கருணாநிதியின் குரல் இருட்டடிப்புக்கு எதிரான கருத்துரிமையின் குரலும்கூட. கருணாநிதி இறந்து பத்து நாட்கள் ஆன பிறகும்கூட நவீன இலக்கியர்கள் பலர் ஒரு அஞ்சலிக் குறிப்பைக்கூட எழுதாதது சமூக வலைதளங்களிலே விவாதமானது. நான் யோசித்துப்பார்க்கிறேன். கருணாநிதிக்கு என்றில்லை, கடந்த ஐம்பதாண்டு தமிழக வரலாற்றில் எவையெல்லாம் இங்கே எழுதப்பட்டிருக்கின்றன, எவையெல்லாம் இங்கே அர்த்தப்படுத்தப்பட்டிருக்கின்றன? 

நவீன தமிழின் இரு முகங்கள் பாரதியும், பெரியாரும். நவீனத்தின் முகம் பாரதி என்றால், நவீனத்துவத்தின் முகம் பெரியார். வங்காளிகளுக்கு ஒரு தாகூர் எப்படியோ அப்படி தமிழுக்கு இவர்கள் இருவரும். அப்படி ஒப்பிட்டு எத்தனை நூல்கள் இங்கே எழுதப்பட்டிருக்கின்றன? 

தமிழ்நாட்டு அரசியலையே புரட்டிப்போட்டவர் அண்ணா. என்னைப் பொறுத்த அளவில் சுதந்திர இந்தியாவின் சிற்பிகள் என்று சொல்லத்தக்க நேரு, அம்பேத்கர் வரிசையில் வைக்கத்தக்க தேசிய ஆளுமை அண்ணா. இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவத்துக்கான பிதாமகன். அவரை அந்த இடத்தில் பொருத்தி எத்தனை கட்டுரைகள் இங்கே எழுதப்பட்டிருக்கின்றன? 

தமிழ்நாட்டின் கருத்துலகம் திராவிட இயக்கத்தைச் சார்ந்த யாரைப் பற்றி, எதைப் பற்றி ஆக்கபூர்வமாக மதிப்பிட்டு எழுதியிருக்கிறது? எம்.ஜி.ஆர். பற்றி என்ன எழுதியிருக்கிறார்கள்? ஜெயலலிதா பற்றி என்ன எழுதியிருக்கிறார்கள்? கருணாநிதி பற்றி என்ன எழுதியிருக்கிறார்கள்? சமூகத் தளத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த எந்தத் திட்டம் இங்கு நுண்ணரசியல் தளத்தில், இலக்கியத் தளத்தில் ஆக்கபூர்வமாக அணுகப்பட்டிருக்கிறது? உலகமே வியக்கும் சத்துணவுத் திட்டம் பற்றி விரிவான நூல்கள் உண்டா? ஆணுக்கு இணையாக பெண்ணுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு - அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற புரட்சிகரமான சட்டங்கள் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் உண்டா? மலிவு விலை உணவகம், விவசாயிகளுக்குக் கால்நடைகள் திட்டம் வளர்ச்சித் திட்டங்களாகப் பார்க்கப்பட்டதுண்டா? 

உருவாக்கப்பட்ட அரசியல் தீண்டாமை 

கடந்த 50 ஆண்டு தமிழ்நாட்டின் வரலாறு, 50 ஆண்டு ஆட்சியாளர்கள் வரலாறு தமிழ்க் கருத்துலகின் இருட்டு பக்கங்களிலேயே இருந்தது. அரசியலர்களை இழிவானவர்களாகச் சித்திரிக்கும் போக்குக்குப் பின் திட்டமிட்ட ஒரு அரசியல் தீண்டாமைச் செயல்திட்டம் இருந்தது. ஒரு அரசியலுணர்வற்றத் தன்மை, அரசியலற்ற கலாச்சாரம் இங்கே திட்டமிட்டு நிறுவப்பட்டிருக்கிறது. 

என்னுடைய சமீபத்திய கட்டுரை ஒன்றில், இந்திய அரசியலில் கருணாநிதி ஒரு தலித் என்று குறிப்பிட்டிருந்தேன். பலர் இதுகுறித்து விளக்கம் கேட்டார்கள். இங்கே சொல்கிறேன். கருணாநிதியின் அறுபதாண்டு சட்டமன்றப் பணி, திராவிடக் கட்சிகளின் ஐம்பதாண்டு ஆட்சி, திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு ஆகிய முத்தருணங்களை ஒட்டி, ‘இந்து தமிழ்’ பத்திரிகையின் சார்பில் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூலைக் கொண்டுவந்தபோது இந்திய அளவிலே இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் முக்கியமான வரலாற்று ஆசிரியர்கள், தேசிய அளவில் ஊடக உலகில் பெரிய ஜாம்பவான்கள் என்று தங்களைக் கருதிக்கொள்பவர்கள் எல்லோரிடமும் நாங்கள் கட்டுரை கேட்டோம். 

கருணாநிதி என்ற பெயரைக் கேட்டதுமே பலரும் மறுத்தார்கள். சரி, கருணாநிதியைப் பற்றி வேண்டாம், ஐம்பதாண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சியைப் பற்றி அல்லது நூறாண்டு திராவிட இயக்கத்தின் வரலாற்றைப் பற்றி சும்மா ஒரு பக்க அளவிலேனும் எழுதிக்கொடுங்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, நீங்கள் எந்த அளவுக்கு அறிந்திருக்கிறீர்களோ எழுதித் தாருங்கள் என்று கேட்டோம். மறுத்தார்கள். பலர் எங்களுக்கு திராவிடக் கட்சிகள், கருணாநிதி பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாது என்றார்கள். முரண்பாடு என்னவென்றால் இவர்கள் எல்லாம் அகில இந்திய ஆளுமைகள்! 

ஒரு வரலாற்றாசிரியர், பத்திரிகையாளர் எல்லாவற்றையும் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டுமா, அவர்களுக்கு மறுக்க உரிமை இல்லையா என்று கேட்டால் நிச்சயம் அந்த உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால், இன்னும் ஐந்தாண்டு ஆட்சியை முடித்திராத அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மாதம் ஐந்து கட்டுரைகள் கேட்டாலும் எழுதித் தரும் வல்லமையோடு இருக்கிறவர்களுக்கு நாட்டின் ஒரு பெரும் பகுதி மக்கள் திரளை ஐம்பதாண்டுகளாக கட்டியாண்டு கொண்டிருக்கும் தலைவர்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று கூற முடிகிறது என்றால், இந்த விலகலுக்கு, இந்த நிராகரிப்புக்குப் பெயர்தான் கருத்தியல் தீண்டாமை என்று சொல்கிறேன். 

மூத்த ஆசிரியர் 

இந்த இடத்தில்தான் இருட்டடிப்புக்கு எதிரான, புறக்கணிப்புக்கு எதிரான, நிராகரிப்புக்கு எதிரான, கட்டுக்கதைகளுக்கு எதிரான கருணாநிதியின் குரலின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்ட விழைகிறேன். திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் முன்னெடுத்த ஒரு மாபெரும் அறிவியக்கத்தின் தொடர்ச்சி அவர். நம் காலத்தின் மூத்த பத்திரிகையாளர் மட்டும் அல்ல அவர்; மூத்த ஆசிரியர். தனக்குத் தெரிந்ததையெல்லாம் தொண்டர்களுக்குப் பகிர்ந்து கொண்டு விட வேண்டும் என்று காலமெல்லாம் அவர் செயல்பட்டார். எழுத்தின் மீது, புத்தகங்கள் மீது, வாசிப்பின் மீது, அறிவின் மீது தனக்கிருந்த தணியாத தாகத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்ததன் வாயிலாக ஒரு சாமானியக் கூட்டத்திடம் வாசிப்பு மீதான மதிப்பை, அறிவின் மீதான காதலை அவர் உண்டாக்கினார். அவருடைய மறைவு தமிழ்ச் சமூகத்தின் பேரிழப்பு. ஆனால், அதற்காக நாம் கண்ணீர் உகுக்க வேண்டியதில்லை. ஏனென்றால் எழுத்தில் வாழ்பவர்க்கு ஒருபோதும் மரணமில்லை!

(கலைஞர் மு.கருணாநிதியின் மறைவையொட்டி, திருச்சியில் திமுக சார்பில் நடத்தப்பட்ட ‘கருத்துரிமை காத்த  கலைஞர்’ நிகழ்ச்சியில் சமஸ் ஆற்றிய உரை. முரசொலி இதழில் இது வெளியானது.)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


1

2

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Rajendra kumar   2 years ago

இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

புரதப் பவுடர்கள்இளைஞர் அணியூட்யூப் சேனல்இயக்குநர்உடல்மொழிகலால் வரிமீண்டும் சோழர்கள் காலச் செழுமைக்குக் கொண்டுசெல்ல மஇன்று மும்பைகவனம் ஈர்த்த அதிகாரிகலைராகம்போலி அறிவியல்ஜெயமோகன் கருணாநிதி ஸ்டாலின்தலையங்கம்எடிட்டிங்மது அருந்துவோர்விளிம்புலலிதா ராம் கட்டுரைதொழிற்சாலைநீங்கள் சாப்பிடுவது சரியா?மத்தியதர வர்க்கம்சிவ சேனாநீதிபதிகள் நியமனம்சாவர்க்கர் அந்தமான் சிறைஅதீத உழைப்புபுள்ளிவிவரம்ஆளுநர் முதல்வர் மோதல்பழங்குடியினர்ஹர்ஷ் மரிவாலாசுந்தர ராமசாமி: தந்தை கூற்றுக் கவிதை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!