பேட்டி 10 நிமிட வாசிப்பு

சனாதனத்தை எப்படிப் பார்ப்பது? சமஸ் பேட்டி

நமது செய்தியாளர்
07 Sep 2023, 5:00 am
1

தமிழக அமைச்சரும் திமுக இளந்தலைவருமான உதயநிதி ஸ்டாலின் “அழிக்கப்பட வேண்டியது சனாதனம்” என்று ஒரு கூட்டத்தில் பேசியது நாடு தழுவிய சர்ச்சையாக பாஜகவால் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், “சனாதனம் என்றால் என்ன? இந்த விவகாரத்தை எப்படி அணுகுவது?” என்று ‘அருஞ்சொல்’ ஆசிரியர் சமஸிடம் சிறப்புப் பேட்டி கண்டது ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி. நேரலை வழியாகவும், பின்னர் காணொளி வழியாகவும் பல லட்சம் மக்களைச் சென்றடைந்த அந்தப் பேட்டியின் முக்கியத்துவம் கருதி, செழுமைப்படுத்தப்பட்ட அதன் எழுத்து வடிவத்தை நம் வாசகர்களுக்கு இங்கே தருகிறோம்.

சனாதனம் தொடர்பான அமைச்சர் உதயநிதியின் பேச்சை எப்படிப் பார்க்கிறீர்கள்?

எந்த ஒரு சொல்லும் காலத்துக்கு ஏற்ற அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது; சில சொற்கள் சமூகத்துக்கு சமூகம் வேறுபாடுகளைக் கொண்டிருக்கிறது. சனாதனம் எனும் சொல்லுக்கு இது மிகவும் பொருந்தும்.

அமைச்சர் உதயநிதி, “அழிக்கப்பட வேண்டியது சனாதனம்” என்று பேசிய கூட்டத்தில் ‘சமூக அநீதி – ஏற்றத்தாழ்வு - பாரபட்சம்’ எனும் அர்த்ததிலேயே அந்தச் சொல்லைப் பயன்படுத்தினார்; மறுநாள் இதை விரிவாக அவர் விளக்கவும் செய்தார். சொல்லப்போனால் “நான் எந்த மதத்துக்கும், வழிபாட்டுக்கும் எதிராகப் பேசவில்லை; இந்தியாவில் எல்லா மதங்களுக்குள்ளும் உள்ள தீண்டாமையை அடிப்படையாகக் கொண்ட  சாதியப் பாகுபாடுகளையே சனாதனம் என்று குறிப்பிட்டேன்” என்று விளக்கினார்.

பாஜக “சனாதனம் என்பது இந்து மதம்தான்; ஒட்டுமொத்த இந்துக்களையும் உதயநிதி அழிக்க அறைகூவல் விடுக்கிறார்” என்று இதை விவரித்தது. ராஜஸ்தானில் பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித் ஷா “சனாதனத்தை அழிக்க எதிர்க்கட்சிகள் உறுதி பூண்டிருக்கின்றன” என்றும் அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான அமித் மாளவியா “நாட்டின் 80% மக்களை இனப்படுகொலை செய்ய திமுக அறைகூவல் விடுத்திருக்கிறது” என்றும் பேசினர். அயோத்தியைச் சேர்ந்த இந்து அமைப்பு ஒன்றின் சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா, “உதயநிதி தலையைச் சீவி வருவோருக்கு ரூ.10 கோடி பரிசு தருவேன்” என்று அறிவித்தார். 

திட்டவட்டமாக இது அரசியல்ரீதியிலான திரிப்பு. அதேசமயம், ஒரு விஷயத்தை இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘சனாதனம்’ என்ற சொல்லை அர்த்தப்படுத்துவதில் வடக்கு – தெற்கு இடையே பெரும் பிளவு இருக்கிறது. அதேபோல, கோட்பாட்டுத் தளத்தில் இந்தச் சொல் என்னவாக அர்த்தப்படுத்தப்படுகிறது; வெகுஜன சமூகத்தில் இந்தச் சொல் என்னவாக அர்த்தப்படுத்தப்படுகிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

தெற்கில் – குறிப்பாக, தமிழ்நாட்டில் ‘சனாதனம்’ எனும் சொல்லை ‘பிராமணிய – வைதீக மரபு’ எனும் அர்த்தத்தில் அதன் விமர்சகர்கள் நீண்ட காலமாகக் குறிப்பிட்டுவருகிறார்கள். குறிப்பாக சமகால அரசியலில் விசிக தலைவர் திருமாவளவன் ‘பிராமணியம் - வைதீகம்’ எனும் சொற்களைத் தவிர்க்கும் வகையில் தொடர்ந்து இந்தச் சொல்லைப் பயன்படுத்திப் பரவலாக்கினார். ‘பிராமணிய – வைதீகச் செயல்பாடுகள்’ இன்று எல்லாச் சமூகங்கள் மத்தியிலும் பரவலாகி இருக்கின்றன; ஆகையால் ‘பிராமணியம்’ எனும் சொல்லாடல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் குறிப்பதாக ஆகிவிடக் கூடாது என்பதே காரணம். அதே அர்த்தத்தில்தான் உதயநிதியும் பேசியிருக்கிறார்; அதே அர்த்தத்தில் தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களும் அதைப் புரிந்துகொண்டிருக்கின்றனர். அதனால்தான், இங்கே பெரிய சலனங்கள் உருவாகவில்லை. 

வடக்கில் அப்படி இல்லை. ‘சனாதன தர்மம்’ என்பது இந்து மதத்தைக் குறிப்பதற்கான சொல்லாகவே பெரும்பாலும் அது குறிக்கப்படுகிறது. தவிர, தமிழ்நாட்டில் பெரியார் உருவாக்கிய விமர்சன மரபு ஒன்று அங்கு இல்லை. விளைவாகவே இது உணர்வுபூர்வமான விவகாரமாக வளர்த்தெடுக்கப்படுகிறது.

சனாதன தர்மம் என்றால் என்ன? அந்தச் சொல்லாடலை இன்றைய தேதியில் எப்படி அர்த்தப்படுத்திக்கொள்வது? 

சனாதன தர்மம் எனும் சொல்லாடலைப் பற்றிப் பேசுபவர்கள் பலரும் ‘பகவத் கீதை’யோடு அதைக் கொண்டுபோய் இணைப்பது வழக்கம். அதாவது, குறைந்தது இரண்டாயிரம் வருஷ வரலாறு பேசுவார்கள். அதன்படி ‘சனாதன தர்மம்’ எனும் சொல்லாடலுக்கு ‘நிலையான தர்மம்’ என்பதே அர்த்தம்.

சரி, நிலையான தர்மம் என்றால் என்ன? முதலில் தர்மம் என்றால் என்ன? நிலையான தர்மம் என்று ஒன்று இருக்க முடியுமா? இந்த கேள்விகள் முக்கியமானவை. உதாரணமாக, இப்போது நாம் பழங்குடியினர் வசிக்கும் வனப் பகுதிகளுக்குச் சென்றால், அங்கு யார் வீட்டில் காய்த்திருக்கும் காய்கறிகளையும் யார் வேண்டுமாலும் பறித்துக்கொள்ளலாம். அங்கு அதுதான் தர்மம். ‘உங்கள் வீட்டில் காய்கள் காய்த்திருக்கின்றனவே; அவற்றைப் பறித்துக்கொள்ளலாமா?’ என்று எவரேனும் கேட்டால், அது அந்த வனத்தில் இருக்கும் தர்மத்துக்கே எதிரானது. சரி, இப்போது நம் வாழும் நகரத்துக்கு வந்துவிடுவோம். உங்கள் வீட்டில் நீங்கள் வளர்த்திருக்கும் காய்கறிகளை நான் பறித்துக்கொண்டு போனால் என்ன செய்வீர்கள்? நான் திருடன் என்பீர்கள். நீங்கள் போலீஸாரிடம் புகார் செய்யும் அளவுக்குக்கூட போய்விடலாம். எதையும் கேட்டுப் பெற வேண்டும். இதுதான் இங்குள்ள தர்மம். ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன் நாமும் இன்றைய வன தர்மத்தைப் பின்பற்றி இருக்கக் கூடும், இல்லையா?

அப்படியென்றால், தர்மம் என்பது சமூகத்துக்குச் சமூகம், இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம் மாறக் கூடியது என்றாகிறது. அப்படியென்றால்,  நிலையான தர்மம் என்று பெயர் சூட்டுவதாலேயே ‘நிலையான தர்மம்’ என்று ஒன்று இருக்க முடியுமா? பகவத் கீதையோ, வேத நூல்களோ ‘தர்மம்’ என்று குறிப்பிடுவதெல்லாமே அறம் சார்ந்த விஷயங்கள். நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் விவகாரத்துக்கும் அவற்றுக்கும் சம்பந்தம் இல்லை.

அப்படியென்றால், எப்போது இந்து மதம் என்ற அர்த்தப்பாட்டை ‘சனாதன தர்மம்’ எனும் சொல்லாடல் அடைகிறது? அதேபோல, தீண்டாமையை அடிப்படையாகக் கொண்ட சாதியப் பாகுபாட்டு அரசியலை ‘சனாதனம்’ எனும் சொல்லால் பின்னாளில் குறிப்பதற்கான வேர் எங்கிருந்து உருவாகிறது? இதற்கு ஒரு சின்ன வரலாறு இருக்கிறது. அதாவது, சமீபத்திய வரலாறு. அது எங்கு தொடங்குகிறது என்றால், ராஜஸ்தானின் மார்வார் பகுதியில், 18ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. உதயநிதியைக் கண்டிக்கும் பேச்சை ஏன் அமித் ஷா ராஜஸ்தான் மேடையில் பேசினார் எனும் பின்புலத்தை இந்த வரலாறு அறிந்தவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

அதாவது, மார்வார் பகுதியில் இருக்கக் கூடிய மார்வாரி சமூகத்தினர் 18ஆம் நூற்றாண்டில் தங்கள் சமூக நிலையை உயர்த்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். அப்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால்,  பிராமணர்களைப் போலவே சைவம் உள்ளிட்ட சில பழக்கவழக்கங்களைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பது, சில சமூகங்களைத் தங்களுடைய வட்டத்திலிருந்து வெளியே தள்ளுவது எனும் முறைகளைக் கையாளுவது எனும் முடிவுக்கு வருகிறார்கள். இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், அவர்கள் தீண்டாமை வட்டத்துக்குள் இப்படிக் கொண்டுவரும் இரு சமூகங்களில் ஒன்று தலித்துகள், மற்றொன்று முஸ்லிம்கள். அதாவது, முஸ்லிம்களையும் ஒரு சாதியாகக் கையாளுகிறார்கள்.

இந்த விஷயத்தை திவ்யா செரியன் எழுத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும்  ‘மெர்ச்சன்ட் ஆஃப் விர்ச்யூ’ புத்தகம் மிக விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் விவரிக்கிறது. நாம் பேசிக்கொண்டிருக்கும் ‘சனாதன தர்மம்’ எனும் விஷயத்தைப் பற்றிய புதிய பார்வையைக் கொடுக்கக் கூடிய புத்தகம் இது. மார்வாரி சமூகம் இப்படி உருவாக்கிய வழமைக்கும் ‘சனாதன தர்மம்’ எனும் சொல்லுக்கு அது உருவாக்கிய கூடுதல் அர்த்தத்துக்கும் இன்றைய இந்துத்துவ அரசியலுக்கும் மிக நெருங்கிய உறவு இருக்கிறது.

வட இந்தியாவில், ‘பிராமணிய – பனியா கட்சி’ என்று பாஜகவைக் கூறுவார்கள். அதற்கான காரணங்களில் ஒன்றாக இந்த வரலாற்றையும் பார்க்க வேண்டி இருக்கிறது.

நான் காந்தியின் அரசியலோடு இதை இணைத்துப் பார்க்கையில் எனக்குக் கூடுதல் புரிதல் கிடைக்கிறது. அந்த இடத்திலிருந்து பார்த்தால், சனாதன தர்மம் எனும் சொல்லாடலின் முழு அர்த்தம் அறிந்து, அதைத் துல்லியமாகக் கையாண்டவர் என்று காந்தியைத்தான் சொல்ல வேண்டும்.

இந்திய அரசியலில் ‘சனாதன தர்மம்’ எனும் சொல்லாடலை அதிகம் கையாண்ட தலைவர் காந்தி. தன்னை ‘சனாதன இந்து’ என்றே அறிவித்துக்கொண்டவர். ஆனால், இந்துத்துவத்துக்கு மிகப் பெரிய விலையாகத் தன்னுடைய உயிரைக் கொடுத்தவரும் காந்தி; ஆம் அவர்தான் தொடர்ந்து அவர்களால் குறிவைக்கப்பட்டார்; உயிரெடுக்கப்பட்டார். ஏன்? ஏனென்றால், ஒரு பனியாவான காந்தி ‘சனாதன தர்மம்’ எனும் பழைய சொல்லாடலுக்கு உருவாகியிருந்த புதிய அர்த்தத்தின் அபாயத்தை முழுமையாக உணர்ந்திருந்தார். அதனால்தான் தன்னுடைய அரசியல் பயணத்தின் முதல் இரு இலக்குகளாக இந்து – முஸ்லிம் ஒற்றுமையையும், தீண்டாமை ஒழிப்பின் வழி தலித்துகளை  உள்ளணைப்பதையும் சொன்னார். அதாவது, ‘சனாதன தர்மம்’ எனும் சொல்லாடலுக்கு வேறு ஒரு புதிய அர்த்தத்தை அவர் உருவாக்க முற்பட்டார்.

இந்துத்துவம்தான் மிகப் பெரிய அபாயம் என்பதை முழுமையாக உணர்ந்திருந்தார் காந்தி. அதனால்தான் இந்து எனும் சொல்லுக்கான அடிநாதமாக அஹிம்சை எனும் அர்த்தத்தை அவர் உருவாக்க முற்பட்டார். தான் மறைவதற்கு முந்தைய கால் நூற்றாண்டில் பல சமயங்களில் இதுகுறித்து அவர் திரும்பத் திரும்பப் பேசினார். மூன்று விஷயங்களை இங்கே சுட்டலாம் என்று எண்ணுகிறேன்.

சாத்திரங்கள் சம்பந்தமாக உங்களுக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்கும்போது, உங்களை ஏன் இந்து என்று அழைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? இப்படி ஒரு கேள்விக்கு காந்தி பதில் அளிக்கிறார், “வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், புனித சீர்திருத்தக்காரர்கள் விட்டுச்சென்றுள்ள நூல்கள் முதலியவற்றில் எனக்கு நம்பிக்கை உண்டு. அதனாலேயே என்னை ஒரு சனாதனி இந்து என்று நான் கூறிக்கொள்கிறேன். ஆயினும், இந்த நம்பிக்கையின் பொருட்டு இவை எல்லாமே ஆதாரபூர்வமானவை என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மூலாதாரமான தார்மிகக் கொள்கைகளுக்கு முரணாக இருப்பவற்றை எல்லாம் நான் நிராகரிக்கிறேன்.” (ஹரிஜன், 14.10.1926)

தான் காண விரும்பும் இந்து மதத்தை ஒரு சனாதன இந்து என்று கூறிக்கொண்ட காந்தி எப்படிப் பார்த்தார்? “இந்து மதத்துக்கு ஏராளமான சிறப்புகள் உண்டு… நான் இந்து மதத்தில் காணாத, அதேசமயம் மற்ற மதங்களில் காணும் சிறப்பான அம்சங்களை இந்து மதத்தில் இணைத்துக்கொள்ள விரும்புகிறேன். (ஹரிஜன், 12.8.1933)

காந்தி இந்து மதத்தின் மகத்துவமாக எதைப் பார்த்தார்? “இந்து மதத்தின் மகத்தான பெருமை அஹிம்சை என்பதே என் அபிப்ராயம் ஆகும்.” (8.12.1946) 

சரி, இந்து மதத்தின் தார்மிக அடிப்படையாக காந்தி எதைக் கண்டார்? சரியாகத் தன்னுடைய மரணத்துக்கு இரு மாதங்கள் முன்பு காந்தி கூறியது இது: “மதத்தின் ஆணிவேர் கருணை என்பதில்தான் இருக்கிறது. உடலில் உள்ள ஆசையே அகங்காரத்துக்கான ஆணிவேர். உடல் அழிவதாக இருந்தால்கூட கருணையைக் கைவிடக் கூடாது என்று துளசிதாசர் கூறுவதை நினைவுகூர்கிறேன்.” (ஹரிஜன், 30.11.1947)

இங்கே நமக்கு ஒரு கேள்வி எழும். எப்படி இந்த மனிதர் இப்படிப் பேசுகிறார்? இதே மனிதர்தானே மதத்தின் பெயராலும், தீண்டாமையின் பெயராலும் இதையெல்லாம் பேசிய அதே காலகட்டத்தில் அவ்வளவு கடும் விமர்சனங்களை முன்வைத்ததோடு, இந்த வெறுப்புக்கு எதிராகக் களப் பணியிலும் தன்னை ஒப்பளித்துக்கொண்டார்? ஆம். அவரேதான். ஆனால், இங்கே பேசும் காந்தி இந்து மதத்துக்கு வேறு ஓர் உள்ளடக்கம் கொடுக்க, மறுவரையறை கொடுக்க தலைப்படும் காந்தி. ‘பகவத் கீதை’யின் புகழைப் பேசிக்கொண்டே இருப்பார் காந்தி. ஆனால், கீதையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியபோது, அது மனிதனின் அகத்துக்குள் நடக்கும் நன்மை – தீமை இரண்டுக்குமான  போராட்டமாகவே நான் பார்க்கிறேன் என்றார். இதுதான் மறுவரையறுப்பது. ஆனால், நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், இவையெல்லாம் சித்தாந்தரீதியான, கோட்பாட்டுரீதியான விஷயங்கள். 

சரி, இவையெல்லாம் மக்களுக்குப் புரியுமா? இன்று இந்தியாவின் பெரும்பான்மை எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ எனும் கூட்டணியை அமைத்திருக்கின்றன. இந்த விவகாரம் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வுகளைப் பார்த்தால், அந்தக் கூட்டணியில் சலனம் ஏதும் ஏற்படுமோ என்று கேட்கத் தோன்றுகிறது. ‘இது போன்ற மக்களுடைய நம்பிக்கை சம்பந்தப்பட்ட விவகாரங்களை ஜாக்கிரதையாக அணுக வேண்டும்’ என்று எதிர்க்கட்சிக் கூட்டணித் தலைவர்களில் ஒருவரான மம்தா கூறியிருக்கிறார். நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? 

இந்த விவகாரத்தால் எதிர்க்கட்சியினரின் இந்தியா கூட்டணிக்குள் பெரிய சலனங்கள் ஏதும் ஏற்படும் என்று நான் நம்பவில்லை. ‘நான் சனாதன தர்மத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறேன்’ என்றும்கூட மம்தா கூறியிருக்கிறார். இதற்காக அவரைக் குறைத்து மதிப்பிட முடியாது. இன்றைக்கு இந்தியாவில் மத நல்லிணக்கம், கூட்டாட்சிக்கான உறுதியான குரல்களில் ஒன்று மம்தா. நான் இந்த விஷயத்தில் அவரைக் காந்திய அணுகுமுறையின் தொடர்ச்சியாகத்தான் காண்கிறேன். ஆனால், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இது சங்கடத்தை ஏற்படுத்தும். அமித் ஷா ராஜஸ்தானில் பேசும்போது நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம், ராஜஸ்தானில் விரைவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதேபோல, மத்திய பிரதேசத்திலும் விரைவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன், மத்திய பிரதேசத்தில் நடந்த சென்ற சட்டமன்றத் தேர்தலின்போது, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த முக்கியமான விஷயங்களில் ஒன்று, ‘பசுக்களைப் பாதுகாத்து பராமரிக்க கோசாலைகள் அமைக்கப்படும்!’ என்ற அறிவிப்பு. ஏனென்றால், அங்கே அந்தச் சமூகம் அந்த நிலையில் இருக்கிறது. இப்படிப்பட்ட சமூகங்களில் உதயநிதியின் பேச்சு என்னவாகப் புரிந்துகொள்ளப்படும்? இந்தச் சங்கடம் வடக்கைச் சேர்ந்த கட்சிகளுக்கு இருக்கிறது. எந்த ஒரு வெகுஜன கட்சியும் எல்லாத் தரப்பினரையும் அனுசரித்துத்தானே செல்ல முடியும்! 

உதயநிதியின் பேச்சை வெறுப்புப் பேச்சு என்று குற்றஞ்சாட்டி நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதை வெறுப்புப் பேச்சு என்று சொல்லலாமா? மொத்தத்தில் இந்த விவகாரத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?  

இதை வெறுப்புப் பேச்சாக நாம் பார்க்க முடியாது. ஏனென்றால், முந்தைய நாள் பேசியதற்கு மறுநாள் விளக்கம் கொடுத்தபோது தான் சொல்ல வந்தது என்ன என்று அவர் தெளிவாகவே விளக்கியிருக்கிறார். எனில், அதை சாதியப் பாகுபாட்டை அழிக்க வேண்டும் என்று அவர் கூறிய விமர்சனமாகவே நாம் பார்க்க வேண்டும். நீங்கள் சட்டத்தைப் பற்றி கேள்வி கேட்கிறீர்கள். நாம் அரசமைப்புச் சட்டத்தின் தந்தை என்று அழைக்கக்கூடிய அம்பேத்கர் இந்து மதத்தின் மீது வைக்காத விமர்சனமா, சனாதனத்தின் மீது வைக்காத விமர்சனமா? 

நாம் கவனம் அளிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தேர்தல் வரப்போகிறது, பாஜகவைப் பொருத்தவரை இது அவர்களுக்கு ஓர் அறுவடைக் கருவி. நிச்சயமாக இது ராஜஸ்தானிலும் மத்திய பிரதேசத்தில் அவர்களுக்கு ஒரு முன்னகர்வை ஏற்படுத்தலாம்; அதற்கேற்பதான் அவர்கள் காய்களை நகர்த்துகிறார்கள்.

உதயநிதி தொடர்பில் நான் கருத்து சொல்ல வேண்டும் என்றால், இந்திய அளவில் இன்று கவனிக்கக்கூடிய ஓர் இடத்தில் இருப்பவர் அவர். அப்படி இருக்கும்போது இது போன்ற விஷயங்களில் பேசுகையில், இந்தியா முழுமைக்கும் இது என்னவாகப் புரிந்துகொள்ளப்படும் என்ற பின்னணியை எல்லாம் முன்யோசித்துப் பேசினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்!

 

பேட்டியாளர்: வேதவல்லி, புதிய தலைமுறைச் செய்தியாளர்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

1






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

செல்வம்   8 months ago

அங்குள்ளவர்களை விடுங்கள். இங்கேயே உள்ள, நாளும் இறைவன் பெயரை ஓயாது உச்சரிக்கும் தொழில் மேற்கொண்டுள்ள ஒரு நபர் 'இந்துக்களை இனப்படுகொலை செய்யச்சொன்னார்' என்று எவ்விதக் கூச்சமும் இன்றி திரித்து எழுதுகிறார். அதற்குப் பின்புலமாக அறிவுத்தளத்தில் அதிகாரத் தரகு செய்யும் ஜென்டில்மேன் சாதிவெறியர்கள் இருக்கிறார்கள்.

Reply 3 1

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

வடக்கு அயர்லாந்துகுடியுரிமைஊடகர்கள்ரத்த அழுத்தம்செந்தில் முருகன்தொழில் மற்றும் சுகாதாரம்14 ஊடகர்களைப் புறக்கணிப்பது ஏன்?சோழர் காலச் சுவடுகள்1984 நாவல்உடை அரசியல்கிறிஸ்துவர்கள்நிர்வாகிஉயர் நீதிமன்ற தீர்ப்புதேசியப் பொதுமுடக்கம்எழுத்துத் தேர்வுமொழித் திணிப்புஜாதிய படிநிலைஇந்தியாகல்வி மற்றும் சுகாதாரம்பிரேசில்கல்யாணராமன் கட்டுரைஅம்பேத்கர் பேசுகிறார்!மூலநோய்343வது பிரிவுதாழ்வுணர்ச்சி கொண்டதா தமிழ்ச் சமூகம்?ராகுல்: கண்ணுக்குப் புலப்படாத நான்காவது குதிரைமலையாளிகள்இந்து ராஷ்டிரம்நாக சைதன்யாகுறுவை சாகுபடி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!