கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

பிடிஆர்களின் இடம் என்ன?

சமஸ் | Samas
23 May 2023, 5:00 am
1

மிழ்நாட்டில், ஓர் அமைச்சரவை மாற்றம் இதற்கு முன் இவ்வளவு பெரிய விவாதம் ஆகியிருக்குமா?

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நிதித் துறையிலிருந்து தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை உண்டாக்கியதில் நியாயம் உண்டு. இந்தியாவில் மன்மோகன் சிங்குக்குப் பிந்தைய காலகட்டத்தில், நிதி அமைச்சர் எனும் பொறுப்பு உருவாக்கியுள்ள தொழில்முறைக் கவனத்தைத் தமிழக அளவில் பூர்த்திசெய்பவராகப் பழனிவேல் தியாகராஜன் இருந்தார்.

மிக நெருக்கடியான காலகட்டத்தில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது. கரோனாவின் பாதிப்பு முதல் அலைவீச்சைவிட இரண்டாம் அலைவீச்சில் தமிழ்நாட்டில் தீவிர பாதிப்புகளை உண்டாக்கி இருந்தது. மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் தவித்துக்கொண்டிருந்தன. பொருளாதாரம் கடும் அழுத்தத்தில் இருந்தது.

ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை வாக்குறுதிகளாகக் கொடுத்து தேர்தலை வென்ற ஸ்டாலின், முதல்வரான முதல் நாளில் இருந்தே வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதிகொண்டிருந்தார். முந்தைய அரசு பெரும் கடனை விட்டுச் சென்றிருந்ததால் நிதிநிலை சார்ந்து பெரும் சவாலை எதிர்கொண்டிருந்தது புதிய அரசு.

வங்கித் துறையில் பணியாற்றியவரான பழனிவேல் தியாகராஜனை நிதி அமைச்சர் பொறுப்பில் ஸ்டாலின் அமர்த்தியது சாதுர்யமான முடிவு. கூடவே பொருளியல் நிபுணர் ஜெ.ஜெயரஞ்சன் தலைமையிலான மாநில வளர்ச்சிக் குழு, சர்வதேச அளவில் மதிக்கப்படும் பொருளியல் அறிஞர்கள் ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லோ, ஜீன் ட்ரெஸ், அரவிந்த் சுப்ரமணியம், எஸ்.நாராயணன் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழு என்று வலுவான நிதியாள்கைக் கட்டமைப்பை ஸ்டாலின் உருவாக்கினார்.

நடைமுறை நிதியாள்கைச் சவால்கள் தவிர, அரசியல்ரீதியாக வேறொரு முக்கியமான சவாலை ஸ்டாலின் கையில் எடுத்திருந்தார். அது, திமுக பேசும் கூட்டாட்சித்துவத்துக்கு உரிய ஒரு பொருளியல் முன்னுதாரணத்தை உருவாக்குவதாகும்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

திராவிட மாதிரிக்கு ஓர் உருவகம்

தமிழ்நாட்டுக்கு என்று முன்னதாக ஒரு பொருளாதார முன்மாதிரி உருவாகி இருந்தாலும், அது திட்டமிட்ட வரையறைகளோடு உருவாக்கப்பட்டது இல்லை. இம்முறை சிந்தாந்தரீதியாக ஒரு முன்மாதிரிக் கொள்கையை இந்த அரசு உருவாக்க முற்பட்டது. பிற்பாடு முதல்வர் ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட ‘திராவிட மாதிரி’ எனும் அரசியல் சொல்லாடலுக்கு, முக்கியமான அங்கமாக நிதித் துறையே இருந்தது. இந்தச் செயல்திட்டத்துக்கு உருவம் கொடுக்கும் பணியையும் தேசிய அளவில் இதை ஒரு கதையாடலாக முன்னெடுக்கும் பணியையும் கச்சிதமாகப் பழனிவேல் தியாகராஜன் செய்தார்.

சக்தி வாய்ந்த நிதித் துறையில் இளம் அமைச்சரான பழனிவேல் தியாகராஜன் அமர்த்தப்பட்டது திமுக மூத்தத் தலைவர்களிடையே திகைப்பையும் அதிருப்தியையும் ஆரம்பத்தில் உண்டாக்கினாலும், பழனிவேல் தியாகராஜனின் அநாயச செயல்பாடும், துடிப்பான ஓட்டமும் அதிருப்தியைக் குறைத்தன.

இதையும் வாசியுங்கள்... 63 நிமிட கவனம்

விரட்டுகிறார் முதல்வர்: பிடிஆர் பேட்டி

ஆசிரியர் 01 Apr 2022

மாநிலங்களின் பிரதிநிதி

பொதுச் சமூகத்தில் கவனம் ஈர்ப்பவராகப் பழனிவேல் தியாகராஜன் இருந்தார். குறிப்பாக, தேசிய ஊடகங்களில் கூட்டாட்சித்துவத்தை அவர் பேசிய விதம் தமிழ்நாட்டுக்கு ஆற்றல் மிக்க ஓர் இளம் தலைவர் கிடைத்திருக்கிறார் என்ற நம்பிக்கையைத் திமுக வட்டத்தைத் தாண்டியும் கொடுத்தது. ஒன்றிய அரசு அத்துமீறிப் பேசியபோதெல்லாம் தர்க்கரீதியாகப் பதிலடி கொடுப்பவராக அவர் இருந்தார். 

திமுகவுக்குள் இளம் தலைமுறையினர் மத்தியில் ஆக்கபூர்வமாகப் பார்க்கப்பட்டார் பழனிவேல் தியாகராஜன். கல்விப் பின்புலத்துடனும், செறிவான கருத்தோட்டத்துடனும் கட்சிக்குள் வரும் இளம் தலைமுறையினர் தங்களைப் பிரதிபலிப்பவராக அவரைக் கண்டனர்.

பழனிவேல் தியாகராஜனுக்குக் குடும்ப அரசியல் பின்னணி இருந்தபோதிலும், வழக்கமான கள அரசியல் பின்புலத்திலிருந்து மாறுபட்ட ஒருவராகவே அவரை உள்வாங்கினர். கட்சியில் பல மூத்தத் தலைவர்கள், மாவட்டச் செயலர்கள் கால் நூற்றாண்டுக்கும் மேல் வலுவாகத் தங்களுடைய இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கும் சூழலில், துடிப்பாகச் செயல்படும் இளம் தலைமுறையினருக்கும் ஓர் இடம் கிடைக்கும் எனும் நம்பிக்கையைப் பழனிவேல் தியாகராஜனுக்கு அளிக்கப்பட்ட பதவியும் முக்கியத்துவமும் கொடுத்தன. சொல்லப்போனால், கருணாநிதியிடமிருந்து ஒரு தலைமுறைத் தாவலைக் கட்சிக்குள் கொண்டுவந்திருப்பதை ஸ்டாலின் மறைமுக வெளிப்படுத்துவதாகவும் இந்த விஷயங்கள் இருந்தன.

அது நேரமோ, பணமோ...

அறிவுக்குச் செலவிட தயங்காதீர்கள்.
இது உங்கள் ஆளுமை, சமூகம் இரண்டின் வளர்ச்சிக்குமானது!

மாறிய காட்சிகள்

இரண்டாண்டுகளில் காட்சிகள் மாறின. கட்சி அளவில் பழனிவேல் தியாகராஜனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த தகவல் தொழில்நுட்ப அணிப் பொறுப்பு அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. அடுத்து, அவர் ஊடகங்களில் பேசுவது குறைந்தது. கட்சித் தலைமைக்கும் அவருக்கும் இடையே அதிருப்தி நிலவுவதாகத் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதற்கெல்லாம் உச்சம்போல ஒரு செல்பேசி உரையாடல் பதிவு வெளியானது.  முதல்வர் குடும்பத்தினர் ஊழலில் ஈடுபடுவதாகச் சொல்லும் அந்தப் பதிவானது, நேரடியாகவே முதல்வரின் மகனும் திமுகவின் எதிர்காலத் தலைவருமான உதயநிதி, முதல்வரின் பின்புலமாகச் செயல்படும் அவருடைய மருமகன் சபரீசன் இருவர் மீதும் குற்றஞ்சாட்டியது. பழனிவேல் தியாகராஜன் பேசியது என்ற பெயரில் வெளியிடப்பட்ட ‘இந்தப் பதிவு போலியானது; என்னுடையதல்ல’ என்று அவர் அறிவித்தார். அமைச்சர் பதில் சொல்லிவிட்ட நிலையில், இத்தகைய மலின அரசியலுக்குத் தான் பதில் சொல்லப்போவதில்லை என்று ஸ்டாலினும் அறிவித்தார்.

அடுத்த ஓரிரு வாரங்களில் அமைச்சரவை மாற்றம் நடந்தது.

மோசமான முடிவு இது... ஏன்?

எப்படிப் பார்த்தாலும் இதுவொரு மோசமான முடிவு. ஏனென்றால், சர்ச்சைக்குரிய குரல் பதிவை வெளியிட்டவர் எதிர்க்கட்சியான பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை. முதல்வர் குடும்பத்தினர் ஊழலில் ஈடுப்பட்டிருப்பதாகச் சொல்லித்தான் இந்தப் பதிவை அவர் வெளியிட்டார். எந்தக் காரணத்தின் அடிப்படையில் அமைச்சரவை மாற்றம் நடந்திருந்தாலும், அது இந்த விவகாரத்துடனேயே இணைத்துப் பார்க்கப்படும் என்பது வெளிப்படை.

எதிர்க்கட்சிகள் முன்னகர்வுக்கு இந்த முடிவு ஓர் இடத்தை உருவாக்கிவிட்டது. இதற்கான விலையை அரசியல் தளத்தில் எதிர்க்கட்சிகள் இடையே திமுக கொடுக்க வேண்டி இருக்கும்.

நிதியாள்கையை ஒரு கூட்டாட்சிக் கதையாடலாகத் தமிழகம் பேசிவந்த சூழலை இந்த மாற்றம் உருவாக்கும் என்பது தேசியத் தளத்தில் ஏற்படும் பாதிப்பு. தவிர, அண்டை மாநிலங்களுடன் கடும் போட்டியை எதிர்கொள்வதும், மாநிலத்தின் வளர்ச்சியோடு வெகுவாகப் பிணைந்ததுமான தொழில் துறையைச் சிறப்பாக நிர்வகித்துவந்த தங்கம் தென்னரசுவை இந்த மாற்றத்தின்போது நிதித் துறைக்கு நகர்த்தியது இன்னொரு பாதிப்பு; புதிதாகத் தொழில் துறை அளிக்கப்பட்டிருக்கும் டி.ஆர்.பி.ராஜாவும் நம்பிக்கைக்குரியவர்தான் என்றாலும்கூட.

மௌனமாகப் பெரும் மாற்றங்களைத் தொழில் துறையில் கொண்டுவந்துகொண்டிருந்தார் தங்கம் தென்னரசு. சென்னையையும் கோவையையும் மையப்படுத்திச் செயல்பட்ட தொழில் துறையை மாநிலத்தின் பிற்படுத்தப்பட்ட பிராந்தியங்களை நோக்கி நகர்த்துவதில் அவர் காட்டிய முனைப்பு முக்கியமானது.

இந்த இரு பாதிப்புகளைத் தாண்டி ஒரு பிரச்சினை இருக்கிறது; அது பழனிவேல் தியாகராஜன் போன்றவர்கள் திமுகவைப் போன்ற ஒரு கட்சியை எதிர்கொள்வதிலும், திமுக போன்ற ஒரு கட்சியானது, பழனிவேல் தியாகராஜன் போன்றவர்களை எதிர்கொள்ளுவதுமான பிரச்சினை.

இதை ஒரு தனிநபர், ஒரு கட்சி என்கிற எல்லைகளைத் தாண்டி நாம் சிந்திக்க வேண்டும். புதிய தலைமுறை அரசியலர்களுக்கும்  பாரம்பரியமான கட்சிகளும் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் எப்படி அனுசரிப்பது என்பதில் உள்ள சிக்கலாக இதைக் காணலாம். 

செல்பேசி உரையாடல் பதிவு வெளியாகும் முன்னரே பழனிவேல் தியாகராஜன் தொடர் பின்னடைவுகளைக் கட்சிக்குள் சந்தித்துவந்தார். எனில், அவர் மீது கட்சிக்கு ஏற்பட்ட அதிருப்தி என்ன; கட்சி மீது அவருக்கு ஏற்பட்ட அதிருப்தி என்ன?

அரவணைக்கும் அணுகுமுறை வேண்டும்

செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவரான பழனிவேல் தியாகராஜன் நேர்மையாளராகவும் துடிப்பானவராகவும் செயல்பட்டாலும், ஓர் அதிகாரிக்கு உரிய முறுக்கோடு கட்சியினரிடத்தில் நடந்துகொண்டதாகக் கூறுகிறார்கள். “மேட்டிமை மனோபாவம் அவரிடமிருந்து செல்ல வேண்டும்; குடும்பப் பெருமை அல்லது தன்னுடைய முந்தைய வேலைப் பின்னணியின் பெருமையை இன்னமும் அவர் பேசுவதையே இங்கே சுட்டிக்காட்டலாம். திட்டங்களை அணுகுவதிலும், அவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதிலும் தணிக்கையாளர்போல நடந்துகொண்டார். ஓர் அரசுக்கு நிதிச் சிக்கனம் முக்கியம்தான். ஆனால், அது திட்டங்களைச் செயலாக்குவதில் ஒரு முட்டுக்கடையாக ஆகிவிடக் கூடாது. அப்படி ஆனபோது பல மூத்த அமைச்சர்கள் தாங்கள் சிறுமைப்படுத்தப்படுவதாக உணர்ந்தனர்” என்று சொன்னார் ஒரு தலைவர். “எந்த ஒரு வெகுஜன கட்சியும் தன்னை முழுமையாக ஏனைய கட்சிகளின் போக்குகளிலிருந்து முற்றிலுமாகத் துண்டித்துக்கொள்ள முடியாது. திமுக எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை சர்வ பலத்துடன் எதிரே நிற்கும் பாஜகவும் அதிமுகவும் சேர்ந்தே தீர்மானிக்கின்றன. அரசியலில் உடனடி மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது” என்றார் இன்னொருவர்.

அன்றாட அரசியல் அதிருப்திகளை வெளிப்படையாகப் பேசிவிடுவதும் பழனிவேல் தியாகராஜனுடைய  பலவீனங்களில் ஒன்றாகச் சுட்டப்படுகிறது. “அரசியலில் நீங்கள் எங்கு பேசுவது என்பதைவிடவும் எங்கெல்லாம் பேசக் கூடாது என்பதைக் கற்றுக்கொள்வது முக்கியம்!”

பழனிவேல் தியாகராஜன் தரப்பு தவறுகளாக இவற்றைச் சுட்டிக்காட்டுபவர்களிடமும்கூட அவருடைய அமைச்சகச் செயல்பாடுகள் பெரும் மதிப்பைத் தோற்றுவித்திருப்பதைக் கவனிக்க முடிகிறது. ஒரு தனிநபர் பிரச்சினை என்பதைத் தாண்டி, புதிய தலைமுறை அரசியலர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களாக இவற்றை அர்த்தப்படுத்தலாம். எனில், கூடுதலான புரிதல், நிதானம், நெகிழ்வுத்தன்மை, கூட்டுணர்வோடு இத்தகையோர் தம்மைத் தகவமைத்துக்கொள்ள கட்சி எனும் அமைப்பு எதிர்பார்க்கிறது என்று இதைச் சொல்லலாம்.

கட்சியும் இதேபோலச் சில தகவமைப்பு மாற்றங்களுக்குத் தயாராக வேண்டியிருக்கிறது. குடும்பத்தில் பெற்றவர்கள், பெரியவர்களை அணுகுவதில் எப்படி ஒரு புதிய தாவல் இன்று நிகழ்ந்திருக்கிறதோ அதுபோலவே பொதுவெளியிலும் பணிக் கலாச்சாரத்திலும் ஒரு தாவல் நிகழ்ந்திருக்கிறது.

கருணாநிதியின் கடைசி ஆட்சிக் காலத்தில், ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டதை முணுமுணுப்போடு பார்த்த மூத்தத் தலைவர்கள் திமுகவில் இருந்தார்கள்; இத்தனைக்கும் நாற்பது ஆண்டு கால அனுபவத்தை அரசியலில் கடந்திருந்தார் ஸ்டாலின். ஆனால், முதல் முறை ஸ்டாலினுடைய ஆட்சிக் காலத்திலேயே உதயநிதியைத் துணை முதல்வராக்கக் கோரும் குரல்கள் இன்று திமுகவில் ஒலிப்பதை இயல்பாகக் காண்கிறோம். கால மாற்றத்தின் வெளிப்பாடும் இது.

மாறும் சூழல்களுக்கு ஏற்ப ஓர் அமைப்பு தன்னைத் தயார்படுத்திக்கொள்வது முக்கியம். படைப்பூக்கமும் செயலாற்றாலும் மிக்கவர்கள் அவர்களுக்கே உரிய பலங்களுடனும் பலவீனங்களுடமும்தான் வருவார்கள். அவர்களுடைய பலவீனங்களை அனுசரித்து ஆற்றலைப் பயன்படுத்துவற்கு ஓர் இயக்கம் தன்னைத் தொடர்ந்து தகவமைத்துக்கொள்ள வேண்டும்.

இது எல்லாக் காலங்களுக்கும் பொருந்தும் என்றாலும், மாறிவரும் புது யுகத்துக்குக் கூடுதல் பொருத்தமானது. வீரபாண்டி ஆறுமுகத்தை கருணாநிதி எப்படி அனுசரித்தார் என்பதை நினைவில் கொள்ளலாம். அன்றைக்கு ஒரு வீரபாண்டி ஆறுமுகம்; இன்றைக்குப் பல பழனிவேல் தியாகராஜன்கள். எப்படியும் திமுக போன்ற ஒரு கட்சியோ, தமிழ்நாடு போன்ற ஒரு பெரும் மாநிலமோ ஒருபோதும் இழந்துவிட முடியாத ஆற்றல் இவர்கள்.  

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு உதயநிதி செய்ய வேண்டியது என்ன?

சமஸ் | Samas 27 Dec 2022

ஒவ்வொரு தலைவருக்குமான இடம்

திமுகவின் இளம் தலைவர் உதயநிதி சில நல்ல பண்புகளைப் பெற்றிருக்கிறார். பொதுவாக ஏற்கப்பட்டிருக்கும் வாரிசுரிமை, எளிமையான பேச்சு, பணிவான அணுகுமுறை, தமிழ்நாடு தழுவிய பிரபல்யம்… இவையெல்லாம் திமுகவில் இன்று அவருக்கு உள்ள அனுகூலங்கள். எனில், அவருக்குக் கட்சிக்குள் போட்டி யாரும் இல்லை.

அடுத்து வரும் காலத்துக்குத் திமுகவை வழிநடத்திச் செல்லும் கனவோடு இருப்பவர் தன்னைச் சுற்றி நட்பார்ந்த சகாக்கள் அல்லது பணிவான விசுவவாசிகள் மட்டுமே இருக்க முடியும் எனும் சூழலுக்கு மாறாக, சங்கடம் தரும் ஆளுமைகளுக்கும் சரியான இடம் தர முற்பட வேண்டும்.

பழனிவேல் ராஜன் போன்றவர்களை அனுசரிப்பது உதயநிதியின் தலைமைப் பண்புக்கான உரைகல்லாகவும் பார்க்கப்படும். இந்த அமைச்சரவை மாற்றத்தைத் தவிர்க்க உதயநிதி முற்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், அவர் காலத்துக்குப் பழனிவேல் தியாகராஜன் இன்னும் கட்சிக்குப் பயன்படக் கூடும்.

இந்த அமைச்சரவை மாற்றமானது, பழனிவேல் தியாகராஜன்; திமுகவின் தலைமை; இரு தரப்பின் சிக்கல்களையுமே வெளிக்காட்டுகிறது. தனிநபர் பிரச்சினையாக இந்த விவகாரத்தை அணுகுவதற்கு அப்பாற்பட்டு, இரு தரப்பும் எப்படி கட்சியின் எதிர்காலம் சார்ந்து இத்தகைய விவகாரங்களை அனுசரிப்பது என்று யோசிப்பதன் வழியாகவே கட்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியும்!

- ‘குமுதம்’, மே, 2023

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

அப்பாவின் தாக்கம் அதிகம்: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
விரட்டுகிறார் முதல்வர்: பிடிஆர் பேட்டி
தமிழ்நாட்டை முன்மாதிரியாகப் பார்க்கிறார் மன்மோகன் சிங்: பிடிஆர்
ஆளுநரின் செயல்பாடு அரச பயங்கரவாதம்: பிடிஆர்
திமுகவுக்கு உதயநிதி செய்ய வேண்டியது என்ன?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


2

3

1




பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

அ.பி   1 year ago

உண்மையில் வென்றது பா ஜ க.. DMK killed ptr's personality.. இனி அவர் அரசியலில் இருந்து சற்று விலகி இருப்பது சால சிறந்தது.....

Reply 2 1

Login / Create an account to add a comment / reply.

பல்ராஜ தர்மம்: குஜராத்தும் மணிப்பூரும்பத்து காரணங்கள்மகாத்மாகணேசன் வருமுன் காக்கமாணவர் கிளர்ச்சிஏபிபி - சி வோட்டர்இம்ரான் கான்இளையராஜாவும் இசையும்தாமஸ் பெய்ன்கர்நாடக அரசுஜெருசலேம்பூணூல்யோசாவாக்காளர்மும்பைவேளாண்மைக்கு வருபவர்களை ‘டிஸ்கரேஜ்’ செய்வேன்: பாமயமுத்தவல்லிஇந்துத்துவாஜி.என்.தேவி கட்டுரைகடவுள் நியாயமாக நடக்காது 2024 தேர்தல்!ராதிகா மெர்ச்சன்ட்புலம்பெயர்ந்தோர்இரைப்பை ஏப்பம்Psychological Offensiveமன்னை ப.நாராயணசாமிகாந்தஹார் விமான நிலையம்பேரழிவுசைபர் சாத்தான்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!